ஒரு தாயின் கலக்கம்

This entry is part 12 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

ஜாசின் ஏ.தேவராஜன்

” அம்மா!” என்னவோ சொல்ல வந்த மேனகா சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள்.

“என்னது? என்னவோ சொல்ல வந்து,பட்டுனு நிறுத்திட்டே? விசயத்தச் சொல்லு…” தங்கம்மா அன்பு ததும்பக் கேட்டாள்.

” ஒன்னுல்லம்மா… நீங்க தனியா சிரமப்படுறீங்களே…நான் கொஞ்ச நாளைக்கு எங்கேயாவது வேலைக்குப் போகலாம்னு நினைக்கிறேன்.போனா…உங்களுக்கும் ஒத்தாசையா இருக்குமே…!” சொன்னால் தன் அம்மா ஒத்துகொள்ள மாட்டாளென்று மேனகாவுக்குத் தெரியும்.இருந்தும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.

தங்கம்மா அவள் முகத்தைப் பார்த்தாள்.`ஏம்மா…இப்படியொரு முடிவுக்கு வந்தே?’என்ற கேள்வி அங்கே தொக்கி நின்றாலும்,அவள் வாய்விட்டுக் கேட்கவில்லை.

மேனகா இப்படியொரு முடிவை எடுப்பதற்குக் காரணமிருந்தது. அதுவும் பல்கலைக்கழகத்திற்கு

எழுதிப் போட்டு இடங்கிடைத்த நேரத்திலா அந்தத் துயரச் சம்பவம் நடக்க வேண்டும்?

வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த முனியாண்டி, டிரெய்லர் மோதி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே அகால மரணமுற்றார்.

செய்தியறிந்த தங்கம்மா, அதிர்ச்சியில் உறைந்து போனார்.ஒரு கணம் இந்த உலகமே இருண்டது போல் தோன்றியது .மேனகாவின் அந்த எதிர்பார்ப்புகள்… இலட்சியக் கனவு கலைந்து போய்விடுமோ என்பதான ஐயம் வேறு!

தோட்டத்தை விட்டு வெளியேற்றியபோது தடுமாறிப்போன அந்தக் குடும்பம்,முனியாண்டிக்குத் தொழிற்சாலையில் பாதுகாவலர் வேலை கிடைத்தபோதுதான் கொஞ்சம் தெம்பும் தைரியமும் ஏற்பட்டது.

புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் நூற்றிருபது வெள்ளிக்கு வாடகையில் ஒரு வீடும்,முனியாண்டிக்கு அவசரத்தில் ஒரு வேலையும் கிடைத்ததில் ஓரளவு வாழ்க்கைப் படகை ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கை வேர்விட்டிருந்தது. அப்படிப்பட்ட நேரத்திலா இந்தத் துயரச் சம்பவம்…?வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாயிற்று!

” தங்கம்மா… இப்படி நடந்ததையே நினைச்சிப் புலம்பிக்கிட்டிருந்தா… இனி நடக்க வேண்டிய காரியங்கள யாருதான் கவனிக்கிறது…? மூனு பேரு இருந்த வீட்டுல… இப்ப ரெண்டு பேராயிட்டீங்க. உங்க வீட்டுக்காரர் எதிர்பார்த்த மாதிரி,மேனகாவுக்கு யூனிவஸிட்டில இடம் கிடைச்சிருக்கு.அவள் யூனிவஸிட்டிக்குப் போற கண்கொள்ளாக் காட்சியப் பார்க்கிற பாக்கியம் உம்வீட்டுக்காரருக்குத்தான் கெடைக்கலே! நீயாவது பார்த்து நிம்மதியடையக் கூடாதா?”

பக்கத்து வீட்டுப் பாத்திமா பீவி ஆறுதலாய்ப் பேசினாள்.

ஒரு மாத காலம் கவலையிலும் வேதனையிலும் நொந்து நூலாகிக்கிடந்த தங்கம்மா,அன்றுதான் சீனன் தோட்டத்தில் உரம் போட்டுவிட்டுச் சோர்வாய் வந்து படுத்திருந்தாள்.

” அம்மா! யாரோ உங்கள பார்க்க வந்திருக்காங்க” என்றாள் மேனகா.

தங்கம்மா எழுந்து வருவதற்குள், அந்தப் பெண்மணியே பெருத்த உடலை தூக்கிக் கொண்டு வீட்டு முற்றத்தில் வந்து ஜம்மென்று அமர்ந்து கொண்டாள்.

” அம்மா … நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா? இதுக்கு முன்ன நான் உங்கள

பார்த்ததில்லையே! உங்களுக்கு என்ன வேணும்?”

தங்கம்மாதான் குழப்பத்துடன் கேட்டாள்.

” நான் யாருன்னு சொன்னாதான் மேடம் பேசுவீங்களோ! உம் புருசனுக்கு என்னை

நல்லாவே தெரியும். இப்ப தெரிஞ்சி என்ன கிடக்கு ?” வந்தவள் ஒரேயடியாய்

அங்கலாய்த்துக் கொண்டாள்.

” என்னம்மா சொல்லுறீங்க?”

” உம் புருசன் இருக்கான்ல புருசன்,எங்கிட்ட கடன் வாங்கிருக்கான்னு சொல்ல

வரேன்,ஆமா!”

” அவருதான் காலமாகி…”

” அதெல்லாம் தெரியும்.அதை யாரு கேட்டா? அவன் எடுத்த இன்சூரன்ஸ் பாலிஸிதான்

இருக்கே! அதிலிருந்துதான் காசு வரப்போவுதே!”

” இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” ‎‎‎‎‎‎‎‎‎

” அம்மாவுக்கு அவசியம் தெரிஞ்சாகனுமோ? மூனு நாளைக்கு முன்னாடி உங்கிட்ட ·பார்ம்லே கையெழுத்து வாங்க வந்தாளே ஒரு பொம்பள ஏஜண்ட்.அவதான் எல்லாத்தையும் சொன்னான்.அவளும் எங்கிட்ட கடந்தான் வாங்கியிருக்கா.எல்லாரும்

பத்து இருவதினாயிரத்துக்குப் பாலிஸி எடுப்பாங்க. ஆனா…உம்புருசன் போயும் போயும்

பிச்சைக்காரத்தனமா மூவாயிரத்துக்கு எடுத்திருக்கான்.எங்கிட்ட வாங்கின கடனே

மூவாயிரத்திச் சொச்சம் இருக்கு”.

“எம்புருசனா கட‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ன் வாங்கியிருக்காரு ? எங்கிட்ட இதுபத்தி சொல்லவேயில்லையே”

“நல்லா இருக்கு போ… எந்தப் புருசனாவது வீட்டுலயே புள்ளப்பூச்சியாட்டம் கெடக்குற

பொம்பளக்கிட்ட , வெளியே செய்யுற காரியத்தச் சொல்லுவானா? நல்ல பொம்பள போ!”

” எம்புருசனுக்கு அவ்வளவு பணம் தேவைப்பட்டிருக்காதே!”

” என்ன காட்டுப் பூச்சி மாதிரி பேசுறே!நீங்க எஸ்டேட்ட விட்டு பொட்டிப் படுக்கையோடு

வந்தப்போ வேலை வெட்டியில்லாம ஒரு வேளை கஞ்சிக்குக் கூட

கஷ்டப்பட்டீங்களே…அப்போ யாரு பணம் கொடுத்தா? வீட்டுக்கு வாடகைப் பணம்

கட்டினது…,சாமான் செட்டு வாங்கினது…, போட்டுக்க துணிமணிங்க வாங்கினது…

மோட்டார் சைக்கிள் வாங்கினது எல்லாம் யாரு… ஒங்கப்பனா கொடுத்தான்?தோ பாரு!

கன்னா பின்னான்னு கேள்வி கேட்காம, காசு வந்தோன மொதல்ல என்னோட கடன

அடைச்சிடு சொல்லிப்புட்டேன்.”

வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகக் கறாராகப் போய்விட்டாள் அந்த அம்மா.

முனியாண்டி இறந்துவிட்டாலும் நல்ல காரியம் ஒன்றைச் செய்துவிட்டுப் போயிருக்கிறாரே என்று ஓரளவு நிம்மதி அடைந்து கொண்டிருந்த வேளையில்,அந்த அம்மா வந்து தெளிந்த குளத்தில் கல்லெறிந்து விட்டாற்போல ஆக்கிவிட்டாள்.

அந்தக் காப்புறுதிப் பணம் கூட எப்பொழுது கைக்கு வரும் என்று சொல்ல முடியாது.இந்த நிலையில் அதை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பதில் எவ்விதப் பயனுமில்லை என்றாகிவிட்டது.

” அம்மா! எங்கூட ஒன்னா படிச்ச கூட்டாளி யூனிவஸிட்டியில மொத வருசம்

படிச்சிக்கிட்டு இருக்கா… இப்ப லீவுல வந்திருக்கிறதா மலாக்காவிலிருந்து ·போன்

பண்ணுனா.எனக்கும் இடங்கெடைச்சிருக்குன்னு சொன்னேன்.ரொம்ப

சந்தோசப்பட்டா..வீட்டுக்கு வந்தா, யூனிவஸிட்டியில நான் என்னென்ன செய்யணுங்கிறத

சொல்லித் தர ரெடியா இருக்கா..அம்மா…ம்மா… நான் போய்ட்டு வரட்டுமா?”

மனத்தில் தேக்கி வைத்த ஆசையைக் கெஞ்சலுடன் கேட்டாள் மேனகா.

தங்கம்மாவுக்குச் சட்டென ஞாபகத்திற்கு வந்தது பக்கத்து வீட்டுப் பாத்திமா பீவிதான்.கைமாற்றாக ஐம்பது ரிங்கிட் வாங்கிக் கொடுத்தனுப்பும்போது

” நாளாக்காம சீக்கிரமா வந்து அடுத்து ஆக வேண்டிய வேலைய கவனி,தெரியுதா!”

என்று ஒன்றுக்கு இரண்டு தரம் நினைவூட்டிய பின்பே அனுப்பி வைத்தாள்.

” கவலைப் படாதீங்கம்மா. அடுத்தவாரம் நான் யூனிவஸிட்டியில இருக்கணுங்கிறத நான்

எப்படிம்மா மறப்பேன்?”

அம்மாவை இறுக அணைத்துக் கொண்டாள் மேனகா.

பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதென்பது சாதாரண காரியமா? எத்தனையோ ஏழைகளின் எட்டாக் கனியாயிற்றே!அதற்காக அவள் விவரங்கள் சேகரிக்க அலைந்த அலைச்சல் எனக்கல்லவா தெரியும்? மலாக்காவிலிருந்து திரும்பி வந்ததும் பணத்தை எதிர்பார்ப்பாளே! அவ்வளவு பெரிய பணத்துக்கு நான் எங்கே போவது? பாத்திமாவிடம் திரும்பத் திரும்ப எதிர்பார்ப்பதா?கடன் கேட்க இனி யார் வீட்டு வாசலில் போய் நிற்பது?

அவள் மனத்தில் சட்டென்று பொறி தட்டினாற்போல் `கப்பலா’ ஆ மெங் நினைவுக்கு வந்தான்.முன்பு அவர்களோடு தோட்டத்தில் ஒன்றாய் வேலை செய்தவன்.அவனைத் தற்செயலாய்ப் பட்டணத்தில் சந்தித்தபோது,” ஏய் ஆச்சி!நல்லா இருக்கியா?” என்று குசலம் விசாரித்ததும் நினைவில் உரசிச் சென்றது.

`கப்பலா’ ஆ மெங் இப்போது `ஆலோங்’ ஆகிவிட்டதாகவும் கேள்விப்பட்டிருக்கிறாள்;பழக்கமானவன் வேறு.ஆனால் கடன் கேட்டால் கொடுப்பானா?

தங்கம்மா அவ்னது வீட்டைத் தேடிக் கொண்டு போனாள். அவனது வீட்டைப் பார்த்ததும் அவளுக்குப் பிரமிப்பும் மலைப்பும் ஏற்பட்டன. அடேயப்பா! எவ்வளவு பெரிய வீடு.பங்களாவா! மாளிகையா! தோட்டத்துத் துரைமார்களின் வீடு கூட இவன் வீட்டுக்கு முன் நிற்க முடியாது.

வீட்டைச் சுற்றிப் பாதுகாப்புச் சுவர்கள். கண்களைப் பறிக்கின்ற அளவுக்குப் பளபளவென்று மின்னும் இரும்பால் செய்யப்பட்ட உக்கடை.

தங்கம்மா உக்கடை அருகில் சென்று நின்றாள்.ஆள் நடமாட்டம் தெரிந்ததும்,கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த முரட்டு நாய் உறுமியது.ஆ மெங் எட்டிப் பார்த்தான்.

” ஏய்! ஆச்சி நீயா?”

அவன் கேட்டுக் கொண்டிருந்தபோதே, கேட் திறந்து கொண்டது. ஆட்டோ கேட் போலிருக்கிறது.

” சரி, உள்ளே வா!”

முற்றத்தில் விலையுயர்ந்த மெத்திருக்கைச் செட்டுகள்.ஆனால்,தூசுகள் படிந்தாற்போல் காணப்பட்டன.ஆ மெங் துணியால் அவற்றைத் தட்டிவிட்டு அமர்ந்தான்.தங்கம்மாவும் ஓர் ஒற்றை இருக்கையில் சற்றுத் தள்ளியே அமர்ந்து கொண்டாள்.

” ஆச்சி… நான் எல்லாம் கேள்விப்பட்டேன். ரொம்ப நல்ல உழைப்பாளி. ஹ்ம்ம்!”

அவனது வார்த்தையில் அனுதாபம் மிகுந்திருந்தது. பழைய நட்பை இன்னும் மறக்கவில்லை போலும்.

” போனத நினைச்சி கவலைப் பட்டு ஒன்னும் ஆகப் போறதில்ல. இருக்கிறவங்களப் பத்திதான் நினைக்கணும்.என்ன நான் சொல்றது! ஆமாம்… இப்போ என்னைத் தேடி வந்ததுக்குக் காரணம்?”

” எம்மக யூனிவஸிட்டிக்கு மேல்படிப்பு படிக்கப் போறா.அவளக் கொண்டு சேர்க்கிறதுக்குப் பணம் கொஞ்சம் தேவைப்படுது. அதான் கைமாத்தா ஒரு ரெண்டாயிரம் வெள்ளி…”

வார்த்தைகளை மென்று விழுங்கினாள் தங்கம்மா. ஆ மெங் சப்தமின்றி புன்னகைத்தான்.

” ·ப்பூ! இவ்வளவுதானா? ஆச்சி… பணம் எனக்கு ஒரு பிரச்சனையே இல்ல. அது லட்ச லட்சமா இருக்கு.ஆனா… பணம் இருக்கிற அளவுக்கு நான் நிம்மதியாயில்லே! உனக்குத்தான் தெரியுமே,நான் எஸ்டேட்டுல இருந்தப்பவே எம்பெண்டாட்டி கீழ விழுந்து முடங்கிப் போயிட்டா! இங்க டவுனுக்கு வந்து எல்லா டாக்டரப் பார்த்தேன்.நாட்டு வைத்தியத்தையும் பார்த்தேன். இன்னும் குணமாகலே.குணமாகும்கிற நம்பிக்கையும் இப்போ அரவேயில்லே!வயசான அம்மாதான் பார்த்துகிறாங்க.ஹ்ம்ம்! எல்லாம் இருந்தும் நிம்மதியில்லையே!”

`ஆமாம்… இதையெல்லாம் யேன் எங்கிட்ட சொல்லுறான்? குடும்பம்னா சிக்கல் இருக்கத்தான் செய்யும்.எந்தக் குடும்பத்தில்தான் சிக்கல் இல்லை?’

” ஆச்சி, இதுல மறைச்சிப் பேச ஒன்னுமில்ல.நா…நான்… இன்பத்த… …அன்பை இழந்து ரொம்ப நாளாச்சு! இப்ப நான் வெறுமையா ஏங்கிக்கிட்டிருக்கேன்.அதை…உன்னால கொடுக்க முடியும்னா…நா…நான் எவ்வளவு பணம் வேணும்னாலும் கொடுக்கத் தயாராயிருக்கேன்.கடனாயில்லே…!

அடப் பாவி! தெரிஞ்சவனாச்சேன்னு கடன் கேட்க வந்தா,என் பெண்மைய பேரம் பேசுறானே! உருப்படுவானா?

மனத்தில் மூண்டிருந்த சினத்தை அடக்கிக் கொண்டாள்.ஆயிரம்தான் இருந்தாலும் அவன் பணக்காரன்.அவனைப் பகைத்துக் கொள்வதில் பயனில்லை.தங்கம்மா இடத்தைவிட்டு எழுந்தாள்.

” என்ன ஆச்சி,எழுந்திட்டே? உம்புள்ளைக்குப் பணம் கேட்டியே, வேணாமா?”

தங்கம்மா எந்த மறுமொழியும் கூறாமல் அவ்விடத்தைவிட்டுக் காலி செய்தாள்.

” ஆச்சி! நீ எப்ப வேணும்னாலும் வரலாம்!”

****************************************************

மலாக்காவிற்குச் சென்றிருந்த மேனகா திரும்பி வந்ததும் கேட்ட முதல் கேள்வி “ஏம்மா,ரொம்ப சோர்வாயிருக்கீங்க?இதுக்கு முன்ன இப்படி இருந்ததில்லையே!” என்பதுதான்.

தங்கம்மாவுக்குத் தொண்டைக் குழியில் செறுமல் ஏற்பட்டது.பேசத் தடுமாறினாள்.

“ம்..ம்..அப்படியொன்னும் இல்லையே! எப்பவும் போலதானே இருக்கேன்?உரம் போடுற வேலை…பழக்கமில்லாததலே ரொம்ப சோர்வா இருக்கிற மாதிரி தெரியுது போலுக்கு.அது போகட்டும். என்னோட கஷ்டம் என்னோடேயே இருக்கட்டும்.அதவிடும்மா…நாளைக்கு நீ கோலாலம்பூருக்குப் போகிறதுக்கு டாக்ஸிய ஏற்பாடு பண்ணிட்டேன்.சரியா ஒரு மணிக்கு வந்துடும்.ரெடியாயிரு… தெரியுதா?” உள்ளே சென்ற தங்கம்மா,ஒரு பொட்டலத்தோடு வெளியே வந்தாள்.

” இந்தாம்மா, உனக்குத் தேவையான ரெண்டாயிரம் வெள்ளி இதுல இருக்கு.”

அம்மாவையும் அந்தப் பொட்டலத்தையும் மாறி மாறி பார்த்தாள் மேனகா.ஒரு வாரத்திற்குள் எப்படி இவ்வளவு பெரிய தொகையை அம்மாவுக்கு!

அந்தப் பொட்டலத்தைப் பெற்றுக் கொள்வதில் உள்ளபடியே மிகவும் தயங்கினாள்.வலுக்கட்டாயமாக் அதை அவளது கையில் திணித்துவிட்டு அவளை ஏறெடுத்துக் கூட பார்க்காமல் மள மளவென அறைக்குள் விரைந்தாள் தங்கம்மா.

சீனப் பத்திரிகையில்தான் `அந்தப் பணம்’ மடித்து வைக்கப்பட்டிருந்தது!இரண்டு கத்தை ஐம்பது வெள்ளி…அத்தனையும் புத்தம் புது நோட்டுகள்!

” அம்மா! இவ்வளவு பணம்… எப்படிம்மா… உங்களுக்கு?”

மேனகாவின் குரலில் சந்தேகத் தொனி சற்றுக் கூடியிருந்தது.

” எல்லாம்… உம் படிப்புக்குத்தான்”

” அம்மா…நான் அதைக் கேட்கலே! இவ்வளவு பெரிய பணத்த எங்கே,யாருக்கிட்ட இருந்து வாங்கினே?”

“அதைப் பத்தி உனக்கென்ன கவல. அம்மா உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் தெரியுமா? உம் படிப்புக்குத் தேவையான பணம் இதுல இருக்குல்லே?”

மேனகா கேட்ட கேள்விக்கு அவள் பதில் சொல்ல விரும்பவில்லை.மேனகாவின் அடி மனத்தில் என்னவோ உருள ஆரம்பித்தது.இதில் நிச்சயமாய் ஏதோ ஒரு மர்மம் மறைந்திருக்கிறது. இல்லையென்றால் அம்மா ஏன்…..?

காலையில் எழுந்ததும் தோழிகளிடம் தான் பயணப்படுவதைச் சொல்லிக் கொண்டு வரப் புறப்பட்டாள்.

” கூட்டாளியப் பார்க்கிறேன்னு நேரத்தைக் கடத்திடாதே. டாக்ஸி சொன்ன நேரத்துக்கு வந்துடும்”.

“தெரியும்மா…சீக்கிரம் வந்துடுறேன்.”

சுரத்து இல்லாமல் சொல்லிச் சென்றவள் நண்பகல் ஆகியும் வீடு திரும்பவில்லை.தங்கம்மாவுக்குப் பதட்டமாக இருந்தது.ஏதோ தானே பல்கலைக்கழகத்திற்குப் படிக்கப் போவது போன்ற தவிப்பு அவளிடம்!

மேனகாவுக்கு வேண்டிய துணிமணிகளைப் பெட்டியில் எடுத்துவைத்துவிட்டுக் காத்திருந்தாள்.மணி இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது.எந்தப் படபடப்பும் இன்றிச் சாவகாசமாய் அவள் வீட்டிற்கு வருவதற்கும், வீட்டின் முன் டாக்ஸி வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

” என்ன மேனகா…படிச்சிப் படிச்சிச் சொல்லியும் இவ்வளவு லேட்டா வர்றீயே.உனக்கே நல்லாயிருக்கா?”

என்று அரக்கப் பரக்க உள்ளே ஓடிய தங்கம்மா,அப்படியே ஓர் உறையைக் கொண்டு வந்து,

” இந்தா! படிப்புச் சம்பந்தமா கடிதம் வந்திருக்கு போலுக்கு.என்னான்னு பாரு !”,

என்று அவளிடம் கொடுத்தாள்.

மேனகா கடிதத்தை வாங்கி முகவரியைப் பார்த்துவிட்டு,

” இதுவொன்னும் எனக்கு வந்ததில்லே!” எனப் பகடியாய்ப் பார்த்தாள்.

” அப்படின்னா! எனக்கு வந்ததுன்னு சொல்றீயா? எனக்கு யாரும்மா எழுதப் போறா?”

” யேன்…! எழுத ஆளிருக்காதா? இப்பதான் எல்லா ரகசியத்தையும் மறைக்க ஆரம்பிச்சிட்டீங்களே! அதுல… இதுவும் ஒன்னா… இருக்கலாமில்லே…?”

மேனகா எதையோ மனத்தில் வைத்துகொண்டு பூடகமாய்ப் பேசுவது தெரிந்தது. அந்த இரண்டாயிரம் வெள்ளி புத்தம் புது நோட்டுகள் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கிறதோ!

“சரி.. சரி.. சீக்கிரம்! அதுல என்ன எழுதியிருக்குதுன்னு படி!”

மேனகா, கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.

மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய தங்கம்மா அவர்களுக்கு,

கோடானு கோடி வணக்கங்கள்!

நீங்கள் செய்த உதவியை எங்கள் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டோம். அம்மா! நீங்கள் மட்டும் தக்க சமயத்தில் உதவி செய்யாமலிருந்தால்,நான் இந்நேரம் என் அன்புக் கணவரை இழந்திருப்பேன்.நீங்கள் தானம் செய்த சிறுநீரகந்தான் என் கணவரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது.

அம்மா! முதலில் எங்களை மன்னித்துவிடுங்கள்.என் கணவரின் உயிரைக் காப்பாற்றிய உங்களுக்கு நாங்கள் கொடுத்தது வெறும் இரண்டாயிரம்.நாங்கள்தானம்மா அற்பமாகிவிட்டோம்!

இப்பொழுது நாங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்.

நீங்கள் உங்கள் மகளின் மேற்படிப்பைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். பல்கலைக்கழக செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறார் என் கணவர்.உங்கள் மகளைப் படிக்க வைக்க வேண்டிய பொறுப்பு இனி எங்களுடையது.

என்றும் உங்களுக்குக் கடமைப் பட்டிருக்கும்,

திருமதி இளங்கோவன்.

மேனகா அந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே,அவள் விழிகளில் ஊற்றெடுத்த கண்ணீர்த் துளிகள் நேரே எழுத்துகளின் மீது உதிர்ந்து நனைந்தன.

இதழ்கள் நடுங்க மேனகா தாயை ஏறிட்டுப் பார்த்தாள். அவளின் ஈகத்துக்கு முன்னே,தான் துரும்பைவிட இன்னும் சிறிதாகிப் போய்விட்டது தெரிந்தது.

” அ…ம்..மா… அ…ம்…மா… என்…னை என்..னை… ம…ம..மன்னிச்சிடுங்கம்மா!!!”

அதற்கு மேலும்,மேனகாவால் ஒரு வார்த்தையையும் சொல்லமுடியாதபடி உணர்வுகள் மட்டும் உள்ளத்தை ஓங்கியோங்கி அறைந்துகொண்டிருந்தது.

சுவரில் மாட்டப்பட்டிருந்த கணவரின் படத்தைப் பார்த்தவாறு தங்கம்மா கலங்கி நிற்க,மேனகா அவளை ஆரத் தழுவிக் கொண்டாள்.

முற்றும்

Series Navigationஇறப்பின் விளிம்பில். .ஆனந்த் ராகவ் வின் இரண்டு நாடகங்கள்
author

ஜாசின் ஏ.தேவராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *