1939 ஜனவரி 31 வெகுதான்ய தை 18 செவ்வாய்க்கிழமை
கோஷி வக்கீலை விட ரொட்டிக்கடைக் காரன் கோஷி சுறுசுறுப்பான மனுஷர். கடைக்காரன் கொஞ்சமும் கேரள வாசனை இல்லாத, எருமைப் பால் காப்பி சாப்பிடுகிற, தமிழ் டாக்கி நட்சத்திரங்களை அதுவும் வடிவான ராஜகுமாரியையும், லக்ஸ் பத்மாவையும் மாராப்பு பற்றி கவலைப்படாமல் பக்கவாட்டில் நிற்கச் சொல்லிப் பிடித்த படங்களை ரொட்டிக்கடை சுவரில் மாட்டி, தீப தூபம் காட்டாத குறையாக கும்பிட்டு குழைந்து சந்தோஷப்படுகிறவன். லக்ஸ் பத்மா வந்தால் கேக்கை கடைக் கண்ணாடி பீரோவில் இருந்து எடுத்து ஊட்டி விடக்கூடச் செய்வார் என்று ஏனோ நடேசனுக்குத் தோன்றியது. அந்தப் பெயரே அவருக்கு பிடித்து விட்டது. நேற்று சாயந்திரம் வந்ததில் இருந்து இன்று விடிந்து பத்து மணி ஆகிற வரை அந்த அழகியைப் பற்றியும் அவள் உபயோகிக்கிற சோப்பு பற்றியும் கோஷி வக்கீல் வாய்மொழியாக நடேசன் தெரிந்து கொண்டது அதிகம்.
கோஷிக்கும் பெண்டாட்டி இறந்து எட்டு வருஷமாகிறது. நடேசனுக்கு அஞ்சு வருஷம். வக்கீலுக்கும் பிள்ளை குட்டி கிடையாது. நினைச்ச போது நினைச்ச இடத்தில் சஞ்சரித்து, நினைத்ததைச் சாப்பிட்டு நினைக்கிற நேரம் நித்திரை போய். இதுவும் நடேசன் மாதிரிதான். வயசில் கொஞ்சம் இளசு. ஐம்பது திகைய இன்னும் ஒரு ஓணம் போகணுமாம். நடேசனை அவருக்கு இஷ்டமாகி விட்டது நடேசனின் பூர்வ ஜென்மப் புண்ணியம். நாலு நாளோ ரெண்டு நாளோ கோர்ட் கச்சேரி காரியம் முடிகிற வரை அந்த சிநேகிதம் நிலைத்தால் போதுமானது.
நீர் இங்கேயே ஒரு மாசம் தங்கி இந்தக் கடையைப் பார்த்துக்கொண்டு கேஸ் வியாஜ்யம் வம்பு வழக்கிலும் ஒத்தாசை செய்து கொண்டிருந்தால் பத்மாவை நேரில் கூட்டிப் போய்க் காட்டுவேன். நீரும் தனிக்கட்டை. அந்தப் பெண்பிள்ளையும் அப்படித்தான்.
ரொம்ப சுவாதீனமாக கோஷி வக்கீல் லக்ஸ் பத்மாவைக் காட்டி, அதுவும் பப்புக் கை வைத்த ரவிக்கையும் வாய் நிறையச் சிரிப்புமாக ஒரு போட்டோவாகக் காட்டி ரொட்டிக்கடையில் கோதுமை மாவு பிசைய உட்கார்த்தி வைக்க நினைக்கிறாரே. என்ன காரணம் கிருஷ்ணா? அவன் பதிலே சொல்லவில்லை. அவனுக்கும் லக்ஸ் பத்மா இஷ்டம் போல.
அட தீவட்டி, பத்மாவோ வழுதணங்காயோ வெண்டைக்காயோ நடேசனோ இந்தக் கோஷியோ எல்லோரும் எனக்கு ஒருபோல தானடா. உனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்?
காசு ஒண்ணுதான் கிருஷ்ணா. அப்புறம் லக்ஸ் பத்மா படம் மாட்டின ரொட்டிக்கடை.
நீயும் இன்னிக்கு எஸ்பிளனேட் பிளாட்பாரத்துலே ஒரு படம் வாங்கு. கடையை உனக்கு நான் வச்சுத் தரேன்.
கிருஷ்ணனுக்கு என்ன, யோசனை சொல்லி விட்ட திருப்தியில் சிரம பரிகாரம் செய்து கொள்ள பால் பாயசம் குடித்தபடி அம்பலத்தில் நின்று விட்டான். இனி அப்பு மாராரின் சோபான சங்கீதம் கூட அவனை சிரமப்படுத்தாது.
ஓய் அடுத்த முறை வரும்போது பாயசம் கொண்டாருமய்யா. உம்மோட முதலாளி அதை விட்டுட்டு மீதி எல்லாம் கொடுத்தயச்சிருக்கான்.
கிருஷ்ணா பாயசக் குடியன்மார் மதராசியிலும் அதிகம் போல. இதுக்கு இந்து, கிறிஸ்தியானின்னு ஒரு வேறுபாடும் இல்லியோ?
கிருஷ்ணன் தலைப்பாகையைத் தலையில் வைத்துக்கொண்டு கோர்ட்டுக்குக் கிளம்பி விட்டான்.
ஓய் வாரும், ஒரு வள்ளாளகண்டன். உம்மை டோக்குமெண்ட் தேடி வரச்சொல்லி அனுப்பினானே, அது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுகிற, பூனைக்கு மயிர் பிடுங்கி ஷவரம் பன்ணுகிற வியக்தமான காரியம்கறது அவனுக்கும் தெரிஞ்சு தான் இருக்கும்.
கோஷி வக்கீலுடைய ரொட்டிக் கடை வியாபாரம் சூடு பிடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு கோர்ட் கச்சேரி என்று நேரத்தை பாழடிக்க இஷ்டமே இல்லை. ஆனாலும் சிநேகிதன் ஒப்படைச்ச காரியமாச்சே. இந்த மனுஷனையும் காரியமாக அனுப்பி வைத்திருக்கிறான்.
நடேசன் கொண்டு வந்த பையில் இருந்து சலவை செய்த கதர்ச் சட்டையை எடுத்துப் போட ஆரம்பித்து வேணாம் என்று திரும்ப மடித்து வைத்தார். சர்க்கார் வேலை நடத்துகிற இடத்தில் காந்திக் கட்சி சட்டையோடு போனால் நடக்க வேண்டியதும் நடக்காமல் போகலாம்.
மஞ்சள் நிறக் குப்பாயத்தைத் தலை வழியாகக் தோளில் வழியக் கவிழ்த்துக் கொண்டிருந்தபோது ஒரு கருத்த தமிழன் படியேறி வந்தான்.
வாய்யா, நாயுடு. இன்னிக்கு கொறச்சுத்தான் கொடுத்தாளா பாக்கியலட்சுமி?
வக்கீல் புஞ்சிரியோடு விசாரித்தார். கள்ளப் புன்னகை அது.
வந்தவனும் சிரித்துக் கொண்டே கல்லாவில் போய் உட்கார்ந்து, இருக்கிற பணத்தை எண்ண ஆரம்பித்தான்.
கோஷி வக்கீல் ஏற்கனவே எண்ணி க்ளிப் போட்டு தொகை குறித்து வைத்திருந்ததோடு அது பொருந்தி வந்ததில் திருப்தி ஏற்பட்டவனாக அவன் வக்கீலைப் பார்த்துச் சிரித்தான்.
வக்கீல் சார், ஒரு அஞ்சு மணிக்கு வந்துடுங்க. சரியா? போய் சீக்கிரம் உறங்கணும். விடிகாலையிலே டியூட்டி இருக்கு.
ஆமாய்யா. நீ போகாட்ட டிராம் கம்பெனி அடைச்சுப் பூட்டி நாளைக்கு மெட்றாஸிலேயே டிராம் வண்டி ஓடாதே. சீக்கிரம் போய் சீக்கிரம் உறங்கு.. ராஜகுமாரி, பசுபலோடி கண்ணாம்பா, பெரியநாயகி, வசந்தகோகிலம், ராஜகாந்தம்னு நினைச்சுக்கிட்டுப் படு. சீக்கிரம் எழும்பிடலாம். என்ன சொல்லு, நம்ம லக்ஸ் பாப்பா மாதிரி ஆகுமா?
அந்தக் கருத்த தமிழன் உதட்டைப் பிதுக்கினான்.
நம்ம பாக்கியலட்சுமி கூட அந்தப் பொண்ணை விட கொள்ளை அழகு வக்கீல் சார். இல்லேன்னு சொல்லாம ஆழாக்கு பால் வேறே தருவா கள்ளிச் சொட்டு மாதிரி.
நடேசன் இவர்களுக்குள் என்ன மாதிரி உறவு இருக்கும் என்று தெரியாமல் குழப்பமாக நின்றார். பாக்கியலட்சுமி என்ற ஸ்திரியை அதுவும் முலையூட்டுகிற ஒருத்தியை ரெண்டு பேரும் இச்சிக்கிறார்கள். எக்கேடும் கெட்டுப் போகட்டும். விவஸ்தையே இல்லாத ஊராக்கும் மதராஸ்.
போகலாமா நடேசன்? நாயுடு கடையைக் கவனிச்சுப்பான். இன்னிக்கு அவன் டிராம்லே ஓட வேண்டாமாக்கும்.
வாசலுக்கு வந்த கோஷி வக்கீல் திரும்பக் கடைப் பக்கம் பார்த்தார்.
போட்டோ படத்தைப் பார்த்துக்கிட்டு வியாபாரத்தை கோட்டை விட்டுடாதே நாயுடு நான் இந்த மனுஷரோடு ஹைகோர்ட் போயிட்டு வந்து காசு தரேன்.
கோஷி வக்கீல் செருப்பில் கால் நுழைத்தபோது நடேசனிடம் சொன்னார் –
நீர் ஒரு கொல்லம் முந்தி வந்திருந்தா, இந்தக் காரியம் இன்னும் எளுப்பமா நடந்திருக்கும்.
ஒரு கொல்லம் முந்தி என்றால், பாக்கியலட்சுமி கோஷி வக்கீலுடைய சிரத்தையில் படாமல் இருந்திருப்பாளோ என்னமோ. அவரும் முழு கவனத்தையும் வக்கீல் தொழிலிலும் ரொட்டிக் கடையிலும் வைத்து இன்னும் சுறுசுறுப்பாக இருந்திருப்பார். அப்படித்தானே?
வாயைத் திறந்தே கேட்டு விட்டார் நடேசன். வாசல் வரைக்கும் அவர் கூட நடந்த வக்கீல் பெருஞ்சிரிப்போடு திரும்பி வந்து நாயுடு பையன் கேட்க வாசல் கதவை ஒட்டி நின்று நடேசன் சொன்னதை அட்சரம் பிசகாமல் சொன்னார்.
கொல்லம்னா ஊரு இல்லே. வருஷம்ப்பா.
டிராம் கம்பெனி ஊழியன் நாயுடு புரிந்துகொள்ள விளக்கமும் சொன்னார்.
நாயரே, நம்ம பாக்கியலட்சுமி வக்கீலுக்குத் தொடுப்பு எல்லாம் இல்லை. வூட்டுத் தோட்டத்துலே கட்டி வச்சுக் கறக்கற எருமை மாடு. கோஷி வீட்டு டீக்கு வேண்டிய பால்.
கோஷி வக்கீல் பொழுது போகாத காலங்களில் மட்டுமே கோர்ட் பக்கம் போவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அவருக்கு ரொட்டி தின்னுகிற மிஸ்ஸியம்மாக்களும், பாக்கியலட்சுமியும் தான் அதிகமாக பழக்கம்.
நாயுடு தகவல் அறிவித்தான்.
மலையாளக் கரையில் இருந்து இங்கே ஹைகோர்ட்டில் சகலமானதும் சுடக்குப் போட்ட மாத்திரத்தில் கை வசப்படும் என்று நம்பி மனுஷர்கள் வருகிறார்களே என்று ஆச்சரியம் நாயுடுவுக்கு நடேசனைப் பார்த்ததும் தெரிந்தது. அதுவும் இந்த ஆள் சேர சோழ மகாராஜா காலத்தில் எழுதின டாக்குமெண்டை தேடி வந்திருக்காராம்.
நாயுடு கூடத்தான் நாயினா சொல்லி நொங்கம்பாக்கம் அய்யருக்கு ஒரு கடிதாசை கொண்டு கொடுத்து வந்திருக்கிறான். அந்த அய்யர் நாய்னா பிருஷ்டத்தை தாங்காமல் இருந்தால் நாய்னாவாகப் பட்டவர் இழுத்துப் பறித்துக் கொண்டு கிடந்து விட்டு போய்ச் சேராமல் ஒரேயடியாக வைகுண்டப் பதவி கிடைத்து அங்கே பஞ்சப்படியும் அலவன்சும் வாங்கிக் கொண்டிருப்பார் இந்நேரம்.
வக்கீலும் நடேசனும் தெருத் திரும்பினார்கள்.
ஒரு கொல்லம் முந்தி வந்திருக்கணும்னு சொன்னீரே வக்கீலே.
நடேசன் நினைவு படுத்தினார்.
அதுவா? இந்த நாயுடுவோட அச்சன் ஹைகோர்ட்டிலேயே ஹெட் குமஸ்தனாகப் பணி எடுத்தவர். உமக்கு எதாவது ரூபத்திலே உதவி செஞ்சிருப்பார்.
இப்போ பார்க்க முடியாதா?
அடுத்த தனு மாசம் தான். பித்ருவா வருவாராம். பார்க்கலாம்.
போய்ச் சேர்ந்த ஹைகோர்ட் ஹெட் குமஸ்தன் நாயுடுவும் உதவி செய்யத்தான் செய்தார். கோஷி வக்கீல் அவருடைய ஆப்த சிநேகிதர் என்று சொல்லி ஹைகோர்ட்டு ரிகார்டு ஆபீசுக்கு நடேசனையும் இட்டுப் போனார். நாயுடுவைப் பற்றிப் பேச, அவருடைய நல்ல குணங்களை சிலாகிக்க, தாசியாட்டம் பார்ப்பதில், டாக்கிக்குப் போவதில் அவருடைய பிரியத்தை சிலாகிக்க, அவருடைய வாய்க்கு ருசியாகச் சாப்பிடும், பெண்பிள்ளை விஷயத்தில் சாங்கோபாங்கமாகப் பேசும் புத்திசாலித்தனத்தை எல்லாம் ரசிக்க இன்னும் அங்கே உத்தியோகஸ்தர்கள் இருந்தார்கள். எல்லோரும் ரிடையர் ஆகிற வயசுக்காரர்கள்.
ஆலப்புழையிலே இருந்து வந்த டாக்குமெண்டா? வந்திருக்கலாம். லண்டன்லே சக்கரவர்த்தி ஒப்பு இட்டு மூத்திர வரி போடச் சொல்லி அனுப்பின தாக்கீது கூட இருந்ததாக் கேள்வி.
ஒரு வயசர் கோஷி வக்கீலுக்கு ஏற்கனவே பழக்கமானவர் போல் வெகு இஷ்டமாகப் பேசினார். நாயுடு ரிடையரான தினத்தில் நாலைந்து டாக்குமெண்டை மலையாளப் பெண்டு வாடை பிடிக்க வீட்டுக்கு எடுத்துப் போனதாக இன்னொருத்தர் சொல்ல எல்லோரும் நாயுடு நினைவில் சிரித்தார்கள்.
அது ஏதோ ஈயச் செம்பு இல்லியோ? கோஷி வக்கீல் விசாரித்தார்.
சின்ன நாயுடு அவன் நாய்னா சாகிற தருணத்தில் பிருஷ்டம் தாங்கின யாரோ நுங்கம்பாக்கத்து பட்டருக்கு அதை வெகுமதியாகக் கொடுத்து விட்டு வந்ததாக கோஷி வக்கீலுக்கு நினைவு. அந்தப் பிள்ளை வேறே ஏதோ கதைக்கும்போது சொல்லியிருக்கிறான்.
ஆலப்புழையிலே ஸ்திரிகள் கச்சேரி ஜோலிக்கு வருவதுண்டோ?
வயசன் விசாரிக்க நடேசன் இன்னும் இல்லை என்றார். அவர்கள் வந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை.
எதுக்கும் ஒரு விசை இங்கே இருக்கப்பட்ட குப்பையில் பார்த்தால் என்ன? இந்த நடேசன் இங்கேயே ஒரு நாள் ரெண்டு நாள் உட்கார்ந்து எல்லா பேப்பரையும் விடாமல் குடைந்து பார்க்கட்டும். மலையாள பாஷையில் ஏதாவது பேப்பர் இருந்தால், அது குண்டி துடைத்துப் போடுகிற விஷயமாகக் கலாசாலை பண்டிதர் எழுதின லிகிதம் என்றாலும் சரிதான், இவருக்கு ஏதாவது விதத்தில் உபயோகப்படும்.
கோஷி வக்கீல் நப்பாசையோடு கேட்டார். ஹெட் கிளார்க் ஒரு நிமிடம் வெற்றிலை நிறைந்த வாயோடு சிரித்தார். நாயுடு மீது ப்ரீதி உள்ள மனுஷன். அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறவர்களுக்கு இத்தணூண்டு உபகாரமாவது செய்தால் நாயுடு அவருக்கும் வைகுண்டத்தில் மூக்குப்பொடி அப்பிய கைக்குட்டை போட்டு வைப்பார்.
அவர் அழைத்துப் போய்த் திறந்த ரிக்கார்ட் ரூம் முழுக்க பைண்ட் செய்த தீர்ப்பு நகல், அலுவலக ஃபைல், கோர்ட்டில் வீசி பழுதடைந்து ஓரமாக விட்ட பங்கா, ஜட்ஜ் உட்கார்ந்து கால் ஒடிந்த நாற்காலி, யாரையும் அழைக்கமுடியாமல் மௌனமான அழைப்பு மணி இப்படியான சமாசாரங்கள். ஓரமாக வெளியூர் கோர்ட் தஸ்தாவேஜ் என்று ஒரு அலமாரி.
இதெல்லாம் தெலுங்கு, இந்தி.செஷன்சுக்கு கமிட் ஆகி வர்ற கேசுகள்லே எடுத்த பேப்பர். மலையாளம் இருக்கறதா தெரியலே. தேடி வேணா பாருங்க. இருந்தா ராஜாவா எடுத்துட்டுப் போங்க.
ரெண்டு நாள் கழித்து வேட்டியில் அப்பிய தூசியும், நிறைந்த ஜலதோஷமும், கையில் ஏதோ பூச்சி கடித்த ரணமுமாக நடேசன் இனிமேலும் முடியாது என்று நிச்சயித்தபோது கிருஷ்ணன் கேட்டான்.
ஹோட்டல்கார அய்யருக்குத் தகப்பனார் யார் கிட்டே வாங்கினாரோ அவர் கிட்டேயே கேட்டுப் பார்க்க வேண்டியதுதானே?
நடேசன் நிமிர்ந்து பார்த்தார். சொன்னது யார்? கோஷி வக்கீலா கிருஷ்ணனா?
கோஷி வக்கீல் வியர்வையைத் துடைத்துக்கொண்டு வெளியே போனார்.
நியாயம் தான் கிருஷ்ணா. ஆனா அந்த அய்யன் பிருஷ்டம் அசைய நடந்து வேலை செய்ய சோம்பல் உள்ள மனுஷனாச்சே. ஓட்டலை விட்டுட்டு ஒரு பொழுது கூட அடியெடுத்து வைக்க மாட்டார். என்ன கருமாந்திர டோக்குமெண்டோ?
எல்லா கருமத்துக்கும் கடைசியிலே கருமாந்திரம். நான் தான் அது. நீ கிளம்பு.
கோஷி வக்கீல் ஊருக்குப் போக டிக்கெட் எடுத்துக் கொடுத்தார். முடிந்தால் திரும்பி வந்து ரொட்டிக்கடையைப் பார்த்துக் கொண்டு இங்கேயே இருக்கச் சொன்னார்.
உமக்கு இஷ்டமானால் நல்ல தெலுங்கச்சியாகக் கட்டி வைக்கிறேன்.
நடேசனுக்கு இத்தனை வயசுக்கு மேல் தெலுங்கில் போகம் பண்ண சோம்பலாக இருந்தது. அவர் என்ன கிருஷ்ணனா? நினைச்சால் யோகம், நினைச்சால் போகம் என்று சாட.
அவன் அத்தாழ பூஜை கழிந்து தூங்கப் போனதாக பாசாங்கு செய்ய ரயில் ஏறி உட்கார்ந்தார் நடேசன். பாக்கியலட்சுமிகளின் பாலில் விடியும் பட்டணத்துக்கே திரும்பி விடலாமா? சொல்லேன் கிருஷ்ணா.
சல்யப்படுத்தாதேடா நடேசா.
கிருஷ்ணன் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
ரயில் கிளம்பி வேகம் பிடித்தது.
(தொடரும்)
- அதிகார நந்தீசர் – புத்தக வெளியீட்டு விழா
- தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது 2012 ஆம் ஆண்டு பெறுபவர் அம்ஷன் குமார்
- ஆகமங்கள், அர்ச்சகர்கள், இரண்டுங் கெட்டானில் அவசரச் சட்டம்
- வேதனை – கலீல் கிப்ரான்
- வாழ்வியல் வரலாற்றின் சிலபக்கங்கள் –24
- நினைவுகளின் சுவட்டில் (96)
- கான் அப்துல் கஃபார் கான் மற்றும் இஸ்லாமிய சான்றோர்கள்
- முள்வெளி அத்தியாயம் -20
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 37
- எஸ்ராவின் உறுபசி – தீராத மோகம்
- இறப்பின் விளிம்பில். .
- ஒரு தாயின் கலக்கம்
- ஆனந்த் ராகவ் வின் இரண்டு நாடகங்கள்
- அமேசான் கதை – 2 வாழ்வு தரும் மரம்
- குந்துமணியும் கறுப்புப் புள்ளியும்
- தார் சாலை மனசு
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -6
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 31) காதலின் மனக்காட்சி
- சாகித்திய அகாடமி நடத்திய க.நா.சு. நூற்றாண்டு விழா.
- ம.தவசியின் ‘சேவல் கட்டும்’ வெற்றிமாறனின் ‘ஆடுகளமும் ‘
- உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்பு
- “ இவர்கள் சாகக்கூடாதவர்கள் ”
- அவளின் கண்கள்……
- ’ செம்போத்து’
- மலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறை
- சுஜாதாவின் மத்யமர் புத்தக விமர்சனம்
- வானவில்லின்……வர்ணக் கோலங்கள்..!
- மாத்தி யோசி…!
- ரமளானில் ஸகாத் சுட்டெரித்தலும் – வளர்ச்சியும்
- தொலைந்த காலணி..
- மஹாளயத்தில் பொன்னம்மா யார்?
- பா. சத்தியமோகன் கவிதைகள்
- 2013 ஆண்டில் செந்நிறக்கோள் நோக்கி இந்தியா திட்டமிடும் விண்ணுளவி
- பாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்
- தாகூரின் கீதப் பாமாலை – 25 ஆத்ம நாடகம்.
- பஞ்சதந்திரம் தொடர் 55
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்று ஒன்று