சதாசிவம் மதன் “உயிரோவியம்” கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

author
0 minutes, 3 seconds Read
This entry is part 19 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012
வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com)
கிழக்கு மாகாணம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் கவிஞர் சதாசிவம் மதன் தனது கன்னிப் படைப்பாக உயிரோவியம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். கவிஞன் என்ற காலாண்டுச் சஞ்சிகையின் ஆசிரியரே இந்த நூலாசிரியராவார். அழகான அட்டைப் படத்துடன் 61 பக்கங்களில் அன்னை வெளியீட்டகத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்தக் கவிதைத் தொகுதியானது பொதுவானவை, இயற்கை, பாவம், காதல், நட்பு, கற்பனை ஆகிய ஆறு தலைப்புக்களில் 47 கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. யுத்தத்தில் உறவிழந்த உறவுகளுக்கே சதாசிவம் மதன் தனது இந்த நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார்.
இந்த நூலுக்கான அணிந்துரையை கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த செ. யோகராசாவும், ஆசியுரையை அன்புறு சிந்தையன் சிவயோகச் செல்வன் த. சாம்பசிவம் அவர்களும் வழங்கியுள்ளார்கள். செ. யோகராசா அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
ஷஷஇத்தொகுதிக்கு அணிந்துரை ஏழுத முற்படுகின்ற போது வித்தியாசமானதொரு மனத்திருப்தி எனக்குள் பிறப்பெடுக்கின்றது. புதியதொரு பிரதேசத்திலிருந்து புதியதொரு கவிஞன் முதன்முதலாகப் பிறப்பெடுக்கின்றான் என்பதனால் ஏற்படும் திருப்தியே அது. மேலும் தெளிவாகக் கூறுவதாயின் மட்டக்களப்புப் பிரதேச நவீன இலக்கிய வளர்ச்சி பற்றி உன்னிப்பாக அவதானிக்கின்ற போது மண்டூர், ஆரையம்பதி, ஏறாவூர், ஓட்டமாவடி, காத்தான்குடி என்றவாறு ஊர் சார்ந்த இலக்கிய வளர்ச்சியொன்று உருவாகி வந்திருப்பதைக் கண்டுகொள்ள முடியும். அவ்வழி இத்தொகுதியூடாக மட்டக்களப்பு நவீன கவிதை வளர்ச்சி ஓட்டத்துடன் புதுக்குடியிருப்பு என்ற புதியதொரு பிரதேசம் சங்கமமாகின்றமை முக்கிய கவனிப்புக்குள்ளாகின்றது. ஏலவே வானொலி முதலானவற்றினூடாக தேவராசன் முதலான இரண்டொரு புதுக்குடியிருப்புக் கவிஞர்களின் குரல்கள் ஓரளவு ஒலித்திருப்பினும் தொகுதி வடிவில் வருகின்ற முதற்தொகுப்பு இதுவென்பதில் தவறில்லை|| என்று குறிப்பிடுகின்றார்.
இனி இந்தக் கவிஞரது கவிதைகள் சிலதை நாமும் ரசித்துப் பார்ப்போம்.
புதியதோர் உலகம் செய்வோம் என்ற கவிதையில் (பக்கம் 03) பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
புதியதோர் உலகம் செய்வோம்.
அதில் புதுமையே பூக்கச் செய்வோம்.
மகிழுடை மாந்தர் செய்வோம்.
நல்ல மனமுடை தேகம் செய்வோம்.
நனி எழில் நகரம் செய்வோம்.
அதை நானிலம் போற்றச் செய்வோம்.
புதியதோர் உலகம் என்பது புதுமைகளால் நிறந்திருக்க வேண்டும், மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். தூய உள்ளம் கொண்டவர்களாக அனைவரும் திகழ வேண்டும். ஆக மொத்தத்தில் உலகம் போற்றக்கூடிய வகையில் வாழ்க்கை அமைய வேண்டும் என்றிருக்கிறார் கவிஞர்.
இளைஞரே வாரீர் என்ற கவிதை (பக்கம் 05) இளைஞர்களுக்கு மட்டும் உரியதல்ல. அனைத்து தரப்பினருக்கும் பொருந்தக்கூடிய அழகான கவிதை இது. பாமரர்களைப் பார்த்து படித்தவர்கள் கொள்ளும் இழிவான எண்ணங்களை தகர்த்தெறிகிறார் நூலாசிரியர். மற்றவன் படிக்கவில்லை என்று மட்டந்தட்டுவதைவிட படிப்பதற்கு உதவி புரிவது எத்தகைய மேன்மை பொருந்திய செயல்? செய்யம் தொழிலே தெய்வம் என்றொரு கூற்றுண்டு. அடுத்தவர்களுக்கு ஆபத்தையோ, அடுத்தவர் மனம் நோகும்படியான தொழில்களையோ இந்தக் கூற்று குறிப்பிடவில்லை. அது தவிர்ந்த அனைத்து தொழிலும் செய்யத் தகுந்தவையே. எனவே தொழிலில்லை என்று வருந்துபவர்களுக்கம் தனது கவிதையினூடாக ஆறுதல் சொல்லியிருக்கிறார கவிஞர் மதன்.
வானம் தூரமில்லை தாண்டலாம் வாரீர்.
மண்ணும் தாழ்வில்லை வாழலாம் வாரீர்.
கல்வி அற்றவனை கல்வி கற்றவர் நாம்
எள்ளி நகையாடாமல் கல் என்று
கல்வி புகட்டுவோம் வாரீர்.
இழிவென்று ஒரு தொழில்
இனி இங்கு இல்லையென
இடியெனவே கூறிடுவோம்.
இன்றே நீ எழுந்து வாரீர்.
மனித ஜாதிதனை
புனிதமாக்கிடவே
சாதிமத பேதமின்றி
சரித்திரம் படைக்க வாரீர்..
சின்னஞ்சிறார்களாய் நாம் மகிழ்ந்து தரிந்த காலங்களை எம்மில் ஒருவரும் மறந்துவிட முடியாது. அத்தனை பசுமை நிறைந்தவை அவை. அம்மா அப்பாவின் கைப்பிடித்து நடை பழகிய காலங்கள், அழுதுகொண்டே பாடசாலை செல்லும் காலங்கள்… என பட்டியலிட்டுச் சொல்லலாம். மறக்க முடியவில்லை என்ற கவிதையில் (பக்கம் 23) மறக்க முடியாத அந்தக் காலங்களைப் பின்வருமாறு மீட்டிப் பார்க்கிறார்.
வயல்களின் வசந்தமும் மரநிழல் மாருதமும் மறக்க முடியவில்லை. கடலோடு கதை பேசும் கரையோர மணற்கோட்டை கட்டிய காலங்களும் மறக்க முடியவில்லை. மணல்வீட்டு மாளிகையில் சிரட்டைக் கறிச்சட்டி, படிப்பறியாக் காலங்களில் படிதாண்டும் பரீட்சைகள், தவணை விடுமுறையில் தலைதெறிக்க விளையாட்டு, விடுமுறை விடைகேட்கும் விரைவாக எனத்தோன்றும் பள்ளிக் காலங்களும் மறக்க முடியவில்லை.
ஒரு தந்தையின் வரிகளாக மலர்ந்திருக்கிறது எனக்காக ஒருமுறை என்ற கவிதை (பக்கம் 42)
சிந்திய உன் சிரிப்பில் சிகரமே சிதையுமடி. சிக்கிய என் மனது சிலையாகப் போகுமடி. உன் புன்னகை எனை இழுக்கிறது. பல தடைகளைத் தாண்டி புரியாத உன் மொழிகூட புதுக் கவிதை புனைகிறது.
தாய்க்கு அடுத்தபடியாக ஒரு குழந்தைக்கு எல்லாமே தந்தைததான். ஒரு தந்தை தனது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி எப்போதுமே கனவுகளுடன் வாழ்பவர். அந்தக் கனவை நனவாக்குவதற்காக பாடுபடுபவர். குழந்தையின் சிரிப்பிலும் மகிழ்வார். குழந்தை தன் பிஞ்சுக்கால் நீட்டி உதைக்கையிலும் மகிழ்வார். அந்த உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவைதான் மேலுள்ள வரிகள்.
வாழ்க்கை, உழைப்பின் மதிப்பு, இளமைக் காலங்கள், அன்னை, தந்தையின் பெருமை, காதல், நட்பு ஆகிய பல்வேறு கருப் பொருட்களும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. காத்திரமான பல கவிதைகளைத் தந்த நூலாசிரியர் சதாசிவம் மதனுக்கு எனது வாழ்த்துக்கள்!!!
நூலின் பெயர்; – உயிரோவியம்
நூலின் வகை – கவிதைத் தொகுதி
நூலாசிரியர் – சதாசிவம் மதன்
வெளியீடு – அன்னை வெளியீடு
தொலைபேசி – 0653650153, 0773620328
விலை – 120 ரூபாய்
வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com)

 

Series Navigationஅரவான்அவர் நாண நன்னயம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *