என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை

This entry is part 3 of 46 in the series 19 ஜூன் 2011

தமிழ் வாசகனொருவனுக்கு ‘என்பெயர் சிவப்பு’ ஒரு மொழிபெயர்ப்பு நாவலென்றவகையில் இருவகை வாசிப்பு சாத்தியங்களை ஏற்படுத்தி தருகிறது: ஒரான் பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு’ என்பதான வாசிப்பு சாத்தியமென்பதொன்று, அதனை தமிழில் மொழிபெயர்த்த ஜி.குப்புசாமியின் ‘என் பெயர் சிவப்பு’ என்பது மற்றொன்று..

நல்லதொருவாசகன் அவனது விருப்பு வெறுப்புகளை இனங்காணமுடிந்தால் சிறந்த விமர்சகனாக வரமுடியும். ஒரு படைப்பாளி நல்லதொரு வாசகனாக இருக்கமுடியும் ஆனால் சிறந்ததொரு விமர்சகனாக இருக்கமுடியுமென்ற கட்டாயமில்லை. வழக்கறிஞனே நீதிபதி ஆசனத்தில் அமர்ந்து தீர்ப்பு சொல்லமுனைவதற்கு ஒப்பானது. படைப்பாளியால் காழ்ப்பற்ற விமர்சனத்தை எழுதமுடியாது. தராசிலிருக்கும் எடைக்கற்கள் அவனது சொந்தத் தயாரிப்பு, தன்னைக்கொண்டு மற்றவர்களை அளக்கிறான். இதிலுள்ள பிரச்சினை தான்மட்டும் உயரமென்று நினைப்பது. ‘இதயத்தை வழி நடத்த நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன, ஆனால் அதனை நியாயம்  அறிவதில்லை’, என்பதுதான் பிரெஞ்சு தத்துவவாதி பஸ்க்கால் சொல்வதுபோல பொதுவில் பலருக்குமுள்ள பிரச்சினை. ‘உணர்ச்சியின் வழிகாட்டுதலைத் தவிர்த்து பாரபட்சமற்ற விமர்சனத்தை முன்வைக்க மனத்திட்பம் வேண்டும். மேலைநாடுகளில் இருவகையான விமர்சனங்கள் உண்டு. படைப்பின் கட்டமைப்பை மையமாகக்கொண்டு,  படைப்பிலக்கிய ஆர்வலர்கள், வாசகர்களை குறிவைத்த பத்திரிகையாளர்கள், இதழியலாளர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் என்பதொருவகை; மொழிஅறிவு, மொழிநடை, இலக்கண இலக்கிய பண்பாடு, சமூகநடைமுறை என்பதன் அடிப்படையில் மொழியியல் வல்லுனர்களின் பகுப்பாய்வுகள் என்பது மற்றொரு வகை. தமிழ்ச்சூழலில் இரண்டாம்வகை விமர்சனத்தை வாசித்த அனுபவமில்லை, இந்நிலையில் ஒருபடைப்பாளி என்றில்லாது வாசகனாவே தொடக்கத்தில் குறிப்பிட்ட எனது இருவகை வாசிப்பு அனுபவங்களை அதாவது ‘என் பெயர் சிவப்பு’ நாவலின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கிறேன்.

 

ஓரான் பாமுக்கை பொறுத்தவரை, இலக்கியமென்பது அவருக்கு வாழ்க்கை. எழுத்து, பிரதி, அச்சு, பதிப்பு,நூல் வடிவம் என அனைத்தையும் கடந்ததொரு வாழ்க்கை படிமம்-இருகரைகளை இணைக்கும் பாலம். “எனது வாழ்க்கை இஸ்டான்புல் நகரில் கழிந்தது -இஸ்டான்புல் நகரம் ஒருகரையில் ஐரோப்பா மறுகரையில் ஆசியா என்றிருக்கும் வீடு. நீரின் ஒருகரையில் இருந்தபடி எதிர்க்கரையிலிருக்கும் மற்ற கண்டத்தை அவதானிப்பதனூடாக இவ்வுலகில் எனக்கான இடத்தை தொடர்ந்து நினைவூட்டி மகிழ்வேன். பிறகொருநாள் பாஸ்பரின் இருகரைகளையும் இணைக்கின்ற வகையில் பாலமொன்றை உருவாக்கினார்கள். அப்பாலத்திலேறி இருகரைகளிலும் கண்ணிற்படுகின்ற காட்சிகளை ரசிப்பது எனக்குக் கூடுதலாக சந்தோஷத்தை அளிக்கிறதென்பதைப் புரிந்துகொண்டேன். அதுமட்டுமல்ல பாலத்துக்குள்ள கூடுதல் முக்கியத்துவமும் அதுமுதல் எனக்குப் புரியவந்தது. அன்றிலிருந்து இருகரைகளிடமும் பாரபட்சமின்றி தொடர்ந்து உரையாடிவந்ததோடு இருகரைகளின் எழிலையும் பிறருக்கு விளக்கிவந்திருக்கிறேன், ” இது ஓரான் பாமுக் தம்மைப் பற்றி அளித்த ஒப்புதல் வாக்குமூலம். என் பெயர் சிவப்பினைக் கூர்ந்து வாசித்தவர்கள் ஒரான் பாமுக்கின் அழகியல் அனுபவத்தினை பகிர்ந்துகொண்டிருக்க முடியும்.

 

மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமியின் சாட்சியம் சொல்லவருவது: “ஒரு மாபெரும் நுண்ணோவியப் பெருஞ்சுவடி. அதன் ஒவ்வொரு பக்கத்திலும் நுட்பமாக, வெகு நுட்பமாக வரையப்பட்ட்டிருக்கும் மகத்தான சித்திரங்கள். உற்றுப்பார்க்க பார்க்க சித்திரங்களுக்குள் மேலும் மேலும் விரிந்துகொண்டே சென்று கொண்டிருக்கும் பற்பல சித்திரங்கள். ஒவ்வொரு சித்திரமும் ஒவ்வொரு குரலில் ஒவ்வொரு கதையைச் சொல்லிக்கொண்டிருக்கின்றது: இப்படிப்பட்ட ஒரு மாயச்சித்திர சுவடியைப் பார்க்கும் அனுபவம்தான் My name is Red நாவலை வாசிக்கும்போது ஏற்பட்டது, ” என்கிறார். ஆக இந்நாவல்  மூல ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்ற இருகரைகளுக்கும் ஒரு பாலமாக அமைந்து வாசகர்களுக்கு மனிதமனங்களின் அவ்வளவு நற்குணங்களையும் துர்க்குணங்களையும், மேட்டையும் பள்ளத்தையும், அடர்த்தியும் செழுமையுமிக்க கானகத்தையும் வறண்ட பாலையையும் கொண்டுவந்து சேர்க்கிறது.

‘என் பெயர் சிவப்பு’ நாவலின் பெருமையை சிலாகிக்கும் அவசியம் நமக்கில்லை. பல்லாயிரம் மைல்களைக்கடந்து தமிழ்நாடுவரை வந்திருப்பதற்குரிய காரணத்தையும் மேன்மையும் உறுதிப்படுத்துகிற வலுவான சாட்சியங்கள் நாவலில் தெளிவாக இருக்கின்றன. நாவலாசிரியர் நோபெல் பரிசுபெற்றிருக்கிறார் என்பது வணிக அடிப்படையில் காலச்சுவடு பதிப்பகத்திற்கு தொலைநோக்கு செயல்பாடாக இருக்கலாம், ஆனால் பதிப்பகத்தின் இலக்கிய தடத்தில் பயணித்தவர்களுக்கு அதுமட்டுமே பிரதான காரணமாக இருக்கமுடியாதென்பதை நூலை வாசிக்கத்தொடங்கிய ஒரு சில கணங்களிலேயே உணரத்தொடங்கிவிடுவார்கள். ஒரு புறம் புதிய முயற்சிகள், மறுபுறம் மரபுக்கேயுரிய தடுமாற்றமும் அச்சமும். இவ்விரண்டுவகை சூழல்களையும் பகிர்ந்துகொண்ட பதினாறாம் நூற்றாண்டின் இஸ்டான்புல் நகரம். இத்தகைய பின்னணியில் ஒரான் பாமுக் காதல் – கொலையென்ற இரண்டின் துணையுடன் நுண்ணோவிய கலைஞர்களின் உலகத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறார். அவர்களில் ஒருவன் புத்தக ஓவிய அலங்காரங்களில் தேர்ந்தவன், உயிரோட்டமான உருவகைகளோடு விளிம்புகளில் வண்ணம் தீட்டுபவன், கொலைசெய்யப்படுகிறான். கொலை செய்தவனும் ஒரு நுண்ணோவியன். அவன் “என் வார்த்தை தேர்வுகளையும், வண்ணங்களையும் வைத்து நான் யாரென்பதை கண்டுபிடிக்க முயலுங்கள்”, என சவால் வீடுகிறான். நாவலின் முதல் அத்தியாயம் கிணற்றுக்குள்ளிருந்து கொலையுண்டவனின் குரலுடன் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் குரலுக்குடையவர்கள் மாறுகிறார்கள். வரிசையாக ஒற்றைக்குரல்கள் 59 அத்தியாயங்களுக்கு சோர்வின்றி உணர்வின் சொரூபங்களை வழிநடத்திச்செல்கின்றன. முதல் குரலுக்குரியவன் கொலையிலும் அடுத்துச் சந்திக்கிற கொலையிலும் பொதிந்துள்ள புதிரை இங்கே விடுவிப்பது நூலை வாசித்தவர்களுக்கு மாத்திரமல்ல நூலைவாசிக்காதவர்களுக்கும் உபயோகமாக இருக்கமுடியாது, எனது நோக்கமும் அதுவல்ல.

நல்ல மொழிபெயர்ப்பென்பது, மொழித்துறையாளனொருவனின் பகுப்பாய்வு அறிவோடு தொடர்புடையது. ஒரு படைப்பென்று சொன்னால் புனைவு, கதைமாந்தர்கள், புனைவினை முன்நகர்த்தும் திறன் அதற்காக தேர்ந்தெடுக்கிற சொற்கள், வாக்கிய அமைப்பு அவற்றின் தொடக்கம், முடிவு, தொனி, உவமை உவமேயங்கள், உருவகம், குறியீடுகளென பல வாசனாதிதிரவியங்களைக்கொண்டு படைப்பாளியின் கைப்பக்குவத்தால் உருவாவது. ஓரான் பாமுக்கும் அந்த ரஸவாதக்கலையில் தேர்ந்தவர், மிகச்சரியாகவே உபயோகித்திருக்கிறார். ஆக இவற்றையெல்லாம் மொழிபெயர்ப்பில் கொண்டுவரவேண்டிய கடமை, நேர்மை மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கிறது. நாவலின் முதல்வாக்கியம் ‘நான் இப்போது ஒரு பிரேதம்மட்டுந்தான்’ என தொடங்குகிறது. முதல் வரியே எளிமையாகவும், பூடகமாகவும் கதையின் அரூபத்தை நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது. ஓரான் பாமுக்கின் நோக்கத்தை முதல் வரியிலேயே மொழிபெயர்ப்பாளர் நிறைவேற்றிவிடுகிறார்.

அடுத்து ஒருமொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு படைப்பினைக் கொண்டுசெல்கிறபோது அப்படைப்பு  இருவரின் படைப்பு என்றாகிறது -ஒருவர் மூல ஆசிரியர் மற்றொருவர் மொழிபெயர்ப்பாளர், அல்லது புதியமொழியின் Ghost writer. யார் யாருக்கு Ghost writer என்ற குழப்பம் நீடிக்கிறதா, மொழிபெயர்ப்பு வெற்றி பெற்றிருக்கிறதென்று பொருள். நல்லதொரு மொழிபெயர்ப்பென்பது நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்கிற இருவர் கலந்து கொள்ளும் பந்தயம், எல்லைக்கோட்டைத் தொடும்வரை ஒருவரையொருவர் முந்தாமல் ஓடி இருவருமே  ஜெயிக்கவேண்டும். இதைத்தவிர வேறு இலக்கணங்கள் ஏதும் இருக்கமுடியாது. மூல ஆசிரியர் தொள்ளாயிரத்து தொண்ணூற்றைந்து வரிகள் எழுதியிருக்கிறார், எனவே தொள்ளாயிரத்து தொண்ணூற்றைந்து வரிகளில் மொழிபெயர்த்தாகவேண்டுமென்ற நிர்ப்பந்த மூட்டையை முதுகில் சுமந்துகொண்டெல்லாம் மொழிபெயர்க்கமுடியாது. மேற்கத்திய மொழிகளில் வாக்கிய அமைப்பு வேறு நமது  வாக்கிய அமைப்பு வேறு. ஒரு படைப்பாளியின் வாக்கியங்கள், அல்லது சொல்ல வரும் செய்தி புரியவில்லையா, கண்ணை மூடிக்கொண்டு, என் எழுத்தை புரிந்துகொள்ள உனக்குப் போதாதென்று கூறி வாசகனைக் கடந்து சென்றுவிடலாம், ஆனால் மொழிபெயர்ப்பாளன் நிலமை வேறு. குழப்புகின்ற வாக்கியத்தைகூட புரியும்படி மொழிபெயர்க்கவேண்டும். இல்லையென்றால் வேறுவகை விமர்சனங்கள் காத்திருக்கின்றன.

எந்தவொரு படைப்பாளியும் எனது படைப்பு உலகமயமாக்கப்படவிருக்கிறது, 135 மொழிகளில் வரவிருக்கிறது, பிரபஞ்சத்திற்காக எழுதுகிறேனென மெனக்கிட்டு எழுதுவதில்லை.. ஒருவித சூன்யத்தை முன்னிலைப்படுத்தியே எழுதுகிறார்கள் அல்லது முகம் தெரியா வாசகனுக்காக எழுதுகிறார்கள் என்றெல்லாம் கதைக்கவும் கேட்டிருக்கிறோம். ஆனாலும் சூன்யத்திரையை விலக்கினால் முதல்வாசக முகமாக அவனுடைய -படைப்பாளியின்- முகமிருக்கும் பிறகு அடுத்தடுத்த முகங்களாக நண்பர்கள், சக எழுத்தாளர்கள், பதிப்பாளர், வாகர்களென்கிற அவரது இனம் அமர்ந்திருக்கும். அந்தவரிசையில் மொழிபெயர்க்கப்படுகிறபொழுது அவ்விடத்தை மொழிபெயர்ப்பாளரின் இனம் நிரப்புகிறது. ஆக மொழிபெயர்ப்பு மூலமொழியின் மொழிப்பண்பிலிருந்து, தன்னை முழுமையாக விலக்கிக்கொண்டு கதையாடலை நிகழ்த்த கடமை பட்டுள்ளது. இங்கே ஓரான் பாமுக் குப்புசாமியாக அவதாரம் எடுக்கிறார், எடுக்கிற அவதாரத்திற்கு நேர்மையாகவும் நடந்துகொண்டிருக்கிறார்.

ஒரான் பாமுக்கிற்குச் சொந்தமான இடத்தில் குடிபோகிறபோது, ‘எனக்குப்பிடித்த நிறத்தை சுவருக்கு அடிக்கிறேன், காலண்டர் மாட்ட இரண்டு ஆணி அடிக்கிறேன்’,  என்றில்லாமல் இங்கே மொழிபெயர்ப்பாளர் வீட்டுக்குடையவரின் மணங்கோணாமல் குடியிருக்கிறார். மொழியாக்கமென்பது அரியதொரு கலை: சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு, சொற்றொடர்முறை மொழிபெயர்ப்பு, பொருள்வழி மொழிபெயர்ப்பு, ஓர் இனத்தின் பண்பாட்டினை உள்வாங்கிக்கொண்டு மொழிப்பெயர்த்தலென பல்வகை மொழிபெயர்ப்பு அணுகு முறைகளுள்ளன. ஒர் படைப்பிலக்கியத்தை மொழிபெயர்க்கிறபோது இறுதியில் குறிப்பிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பண்பாடென்றால் இஸ்டான்புல்லை நாகர்கோவிலென்றோ, ஓரான் பாமுக்கை ஊரன் அடிகளென்றோ மாற்றுவதல்ல(இதற்கென்றே தமிழ் பேராசிரியர்கள் இருக்கிறார்கள்) நாவலின் கதையாசிரியரும், கதைக்களனும் வேற்றுமண்ணுக்கும், வேற்றுமொழிக்கும் சொந்தக்காரர்களென்ற அடிப்படை உண்மையை மறந்து மொழிபெயர்ப்பாளர் செயல்படமுடியாது.அவ்வாறே ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு கொண்டுவருகிறபோது மூலநூல் வரிசைப்படி சொற்களைப்போட்டோ, வாக்கியத்தை அமைத்தோ மொழிபெயர்ப்பதென்பது கோட்பாட்டளவில் சாத்தியமில்லை. அவ்வாறு செய்கிறோமென்றால் மூலநூலுக்கு துரோகம் செய்கிறோம் என்று பொருள், நூலாரிசியரின் சொற்களும் வாக்கியமும் முக்கியமாஅல்லது சொல்லப்படும் செய்தியும், உணர்வும் முக்கியமாவெனில் பின்னவைதான் முக்கியமென புத்திசாலியான மொழிபெயர்ப்பாளன் எடுக்கும் முடிவு. இங்கே மொழிபெயர்ப்பாளர் அந்த முடிவில் இறுதிவரை தீர்மானமாக இருந்திருக்கிறார்.

‘என்பெயர் சிவப்பு’  நாவல் வழக்காமான தொரு நாவலல்ல. மொழி பெயர்ப்பாளருக்கு வேறு இருதுறைகளைப்பற்றிய ஞானம் கூடுதலாக தேவைப்படுகின்றது. மொழி அடிப்படையில் ஒரான் பாமுக்கினை நண்பர் ஜீ.குப்புசாமி எவ்வாறு உள்வாங்கிக்கொண்டிருக்கிறார் என்றறிவதற்கு முன்பாக, இவ்விரு துறைகளை பற்றியும் பகுப்பாய்வு செய்வது அவசியம்: ஒன்று ஓவியம், மற்றொன்று இஸ்லாம். ஓவியத்தினைக்குறித்து குறிப்பாக நுண்ணோவியம் பற்றி இவ்வளவு ஆழமாகவும், அடர்த்தியுடனும், கலைச்செழுமையுடனும் வேறொருநாவலை வாசித்ததில்லை. ஓவியனின் அடையாளம், ஓவியத்தின் காலம், ஓவியம் பற்றிய பார்வையில் குருட்டுத்தன்மை, நினைவாற்றல் ஆகியவற்றினைக்கொண்டு நுண்ணோவியக் கலைஞர்கள், நூலாசியர், மொழிபெயர்ப்பாளர் என்கிற மூவரின் இருப்பையும் குறையின்றி மிகச்சரியாகவே உணரமுடிகின்றது. பூரண ஓவியத்திற்கான குறியீடுகள், விதிமுறைகள் என்ன என்பது ஒருபுறமிருக்க அவ்விதிமுறைகளை மீறும் கலைஞர்களுக்கு நேரும் முடிவுகளும் கருத்திற்கொள்ளப்படவேண்டியவை, அச்சமூட்டுபவை.

“எங்கே உண்மையான கலையும் களங்கமின்மையும் இருக்கிறதோ அங்கே ஒரு கலைஞன் தனது அடையாளத்தின் சிறிய சுவடைக்கூட விட்டுச்செல்லாமல் ஓர் ஒப்பிடவியலா மகத்தான படைப்பைத் தீட்டமுடியும் (பக்.34).

 

கருப்பின் மாமா சொல்வதாக வருகிற,”வெனீசிய ஓவிய மேதைகளின் ஓவியங்களில் இருப்பதைப்போலவே இருக்கவேண்டுமென சித்தம் கொண்டிருக்கிறேன். ஆனால் வெனிசீயர்கள் போலன்றி எனது படைப்பு வெறும் ஜடப்பொருட்க¨ளை மட்டும் சித்தரிப்பதாக அமையாது” (பக்கம்- 45)

“ஒவ்வொரு ஓவியமும் ஒரு கதையைச் சொல்லப்பயன்படுகிறது” என்றேன். நாம் வாசிக்கும் பிரதியினை அழகூட்டுவதற்காகமிக முக்கியமான காட்சிகளை நுண்ணோவியன் தீட்டுகிறான்: முதன் முறையாக காதலர்கள் ஒருவரையொருவர் வைத்தகண் வாங்காமல் பார்ப்பது; ஒரு ராட்சத அரக்கனின் தலையை ருஸ்தம் வெட்டியெறிவது; தான் கொல்ல நேர்ந்த அந்நியன் தன் மகன்தான் என்றறிந்து ருஸ்தம் படும் துயரம்; காதலில் பேதலித்த மஜ்னு, தனியாக ஒரு காட்டில் சிங்கங்கள், புலிகள், மான்கள், நரிகளுக்கு மத்தியில் அலைவது….. இதுபோன்ற கதைகளை வாசித்து அயற்சியுற்ற நமது கண்கள் இச்சித்திரங்களின் மீது பதிந்து இளைப்பாறுகின்றன. வாசிக்கப்படும்பிரதியின் உள்ளே பொதிந்திருக்கும் ஏதோவொன்று நம் அறிவுக்கும் கற்பனைக்கும் சிக்காமல் மனக்கண்ணில் புலப்படாமல் இருக்குமானால், இச்சித்திரங்கள் உடனடியாக உதவிக்கு வருகின்றன. இந்த பிம்பங்கள் என்பவை வண்ணங்களில் மலர்கின்ற கதைகள்தாம். ஆனால் இணைந்து வரும் கதையில்லாமல் ஓவியம் வரைவது அசாத்தியமானது -(பக்.-46)”

 

“ஓர் ஓவியம் அதன் அழகின் மூலமாக நம்மை வாழ்க்கையின்  முழுமையை நோக்கி பரிவுணர்வை நோக்கி, இறைவன் உருவாக்கிய ஆட்சியிலுள்ள பல்வேறு நிறங்கள்மீது மதிப்பை நோக்கி, பிரதிபலிப்பையும் நம்பிக்கையையும் நோக்கி நம்மை செலுத்துவதுதான் முக்கியம். வரைந்த நுண்ணோவியத்தின் அடையாளம் முக்கியமல்ல.(பக்.98)”

“ஓவியக் கலைக்கு முன்பு இருண்மைதான் இருந்தது. அதற்குப்பின்பும் இருண்மைதானிருக்கும். நம்முடைய நிறங்கள், சாயங்கள், கலை, காதல் முதலியவற்றின்மூலம் அல்லாஹ் நம்மை”காண்பதற்கு” கட்டளையிட்டிருக்கிறார். அறிவதென்பது நீங்கள் பார்த்ததை நினைவுகொள்வது. பார்ப்பது என்பது நினைவுகொள்ளாமல் அறிந்துகொள்வது. எனவே ஓவியம் என்பது இருண்மையை நினைவுகொள்வது.”(பக்.126)

இறுதியாக பக்கம் 449ல் அலி·ப்-லாம்-மிம் என்பதற்கு கொலைகார ஓவியன் அளிக்கும் விளக்கம் உச்சம் -முழுமையானதொரு விளக்கம்.

“அலி·ப் : மனம் எதைக் காண்கிறதோ, ஓவியம் அதற்கு உயிர்கொடுத்து கண்களுக்கு  விருந்தாக்குகிறதெனலாம்: கண்கள் உலகத்தில் எதைக்காண்கிறதோ அது மனதில் பதிகின்ற அளவுக்கு ஓவியத்தில் பதிவாகிறது. ஆகையால் மனது ஏற்கனவே அறிந்திருப்பதை கண்கள் நமது உலகத்தில் கண்டுபிடிப்பதே அழகு எனப்படுகிறது. ”

பக்தி இலக்கியத்தைப்பேசுகிறபொழுது எப்படி சைவத்தையும் வைணவத்தையும் கடந்துசென்று இலக்கியம்பேசமுடியாதோ அவ்வாறே என்பெயர் சிவப்பு நுண்ணோவியங்கள் இஸ்லாமியத்திடமிருந்து பிரிக்கமுடியாமல் இயங்குகின்றன. பனுவலெங்கும் இஸ்லாமியம் குரல்கொடுக்கிறது, சில நேரங்களில் தெருபிரச்சார தொனியுடன் சொல்ல்படுவதை காதுகொடுத்து கேட்கவேண்டியுள்ளது.

“விலைவாசி ஏற்றத்திற்க்கும் ப்ளேக்கிற்கும் நமது இராணுவ தோல்விகளுக்கு ஒரே காரணம் நம்முடைய இறைதூதரின் காலத்து இஸ்லாமை மறந்து போலி விஷயங்களின் பக்கம் நாம் சாய ஆரம்பித்து விட்டதுதுதான். இறைதூதரின் பிறப்புக்காவியம் வாசிக்கப்பட்டதா? இறந்தவர்களை கௌரவிக்கும் முகமாக ஹல்வா, பொரி, மாவுருண்டை போன்ற இனிப்புகள் அப்போது நாற்பதாவது நாள் சடங்கின்போது வழங்கப்பட்டதா? முகம்மது வாழ்ந்தபோது புனித குர் ஆன் ஒரு பாடலைப்போல இசைக்கப்பட்டதா?”, கேட்பது ஒரு விலங்கு. நாவலெங்கும் நூலாசிரியர் இஸ்லாத்துக்கும், புனித நூலிற்கும், நபிகள் குறித்த போற்றிபாடல்களுக்கும் நிறைய பக்கங்களை ஒதுக்கியிருக்கிறார். பக்கம்-25, பக்கம் -37, பக்கம்-77, பக்கம்113, பக்கம் 133. என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டுபோகலாம். மொழிபெயர்ப்பாளர் இஸ்லாமியராக இருப்பாரோ என்ற ஐயங்கூட எழுந்தது. மொழி பெயர்ப்பாளர் குறிப்பில் அதற்கான விடைகிடைத்தது. “குர் ஆனின் பல்வேறு தமிழ் பதிப்புக்களைத் தந்து, அவ்வப்போது என் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்து உதவிய திரு களந்தை பீர் முகம்மதுக்கு நன்றி” என்கிறார் மொழி பெயர்ப்பாளர்.  உண்மையான மொழிபெயர்ப்பாளர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறை.

நாவலில் மொழிபெயர்ப்பு என்ற அளவில் வேறு சில கூறுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. நோஸ்டால்ஜியாக்கள், செய்திகள் தகவல்கள் என்ற வகைமை முதாலாவது; வர்ணனைகாளாக சொல்லப்படுபவை என்பது இரண்டாவது; சார்பற்ற விவாதங்களை முன்வைத்து அல்லது நடைமுறை உண்மைகளை முன்வைத்து எழுப்பும் கருத்துகள் மூன்றாம் வகை. முதலிரண்டிலும் மொழிபெயர்ப்பாளர் இடரலாம், தடுக்கியும் விழலாம் பிரச்சினைகளில்லை. ஆனால் மூன்றாம் வகைமையில் மொழிபெயர்ப்பாளர் மூல ஆசிரியனுக்கு நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும். முதலாவதிலும், இரண்டாவதிலும் மொழிபெயர்ப்பாளருடைய மொழிஆளுமையையும் இருமொழிகளிலும் அவருக்குள்ள இலக்கண இலக்கிய ஆற்றலைவெளிப்படுத்துவதற்கான ஆற்றலுக்கு வாய்ப்பளிப்பதெனில் பின்னதோ மூலநூலின் ஊதுகுழலாக பிசிரின்றி ஒலிக்கவேண்டிய நிர்ப்பந்தம் மொழிபெயர்ப்பாளருக்குள்ளது.

“வண்ணங்களை கலப்பதிலும் ஓரங்கள் வரைந்து நுணுக்கமாக ஒப்பனை செய்வதிலும் பக்கங்களை அமைப்பதிலும் பொருட்களை தேர்ந்தெடுப்பதிலும் முகங்களை வரைவதிலும் ஆரவரமான போர் மற்றும் வேட்டைக்காட்சிகளை ஏற்பாடு செய்வதிலும், மிருகங்கள், சுல்தான்கள், கப்பல்கள், புரவிகள், போர்வீரர்கள், காதலர்களை சித்தரிப்பதிலும் அவர்களில் எவரும் என்னை விஞ்சமுடியாது”.-(பக். 31) ஓர் உதாரணம். நாவல் நெடுக வரும் தனிமனிதர் உரைகளில் எதையாவது எவற்றையாவது வாசகர்களுக்கு தெரிவிப்பதென்கிற நோக்கம் அழுத்தமாக உள்ளது. பக்கம் 18, பக்கம் 74, பக்கம் 93 பக்கம் 335. எனக்கூறிகொண்டுபோகலாம். தற்போக்காக நிகழும் உரையாடல்களை ஆரோக்கியமாக முன் நகர்த்துவதில் ஓரான் பாமுக் சாதனைபடைத்திருக்கிறார், மொழிபெயர்ப்பும் தமிழில் அதனை சரியாகவே கொண்டுவந்திருக்கிறது.. நுட்பமான விவரணைகளும், நேர்த்தியான வர்ணனைகளும் ஒரு தேர்ந்த கைவினையாளனின் இலாவகத்துடன் கையாளப்பட்டிருக்கிறது.

“நுட்பமாக ஒப்பனை செய்யப்பட்ட சுவர், சன்னல், அதன் சட்டங்களின் அலங்காரங்கள், சிவப்புக் கம்பளியின் வளைவும் வட்டமுமான பூவேலைப்பாடுகள், நெரிக்கப்பட்ட உங்கள் தொண்டையிலிருந்து வெளிவரும் மௌனமான ஓலம், இரக்கமேயின்றி உங்களைக் கொன்றுகொண்டிருக்கும் அக்கொலைகாரன் தனது வெற்றுக்காலைத்தூக்கி, பிடிப்பிற்காக ஊன்றியிருந்த அம்மகத்தான மெத்தை, அதில் நுணுக்கமான பின்னப்பட்டிருந்த மஞ்சள், ஊதா நிறப் பூத்தையல் வேலைப்பாடுகள் இவ்வோவியத்திலிருக்கும் இவ்வெல்லா அம்சங்களுமே ஒரே உத்தேசத்தில்தானிருக்கின்றன; ஓவியத்தின் அழகை மேலும் செறிவூட்டும்போது, நீங்கள் விட்டுச்செல்லும் இந்த அறையும் இந்த உலகமும் எவ்வளவு எழிலார்ந்ததாக இருக்கிறதென்பதை உங்களுக்கு நினைவூட்டுகின்றன.”(பக்கம்-34) “இந்த எண்ணங்கள் என்னைக் கடந்து கொண்டிருக்கும்போதே அந்தச் சன்னலின் உறைபனி அப்பிய கதவுகள் பெரும் ஓசையோடு வெடித்ததுபோல திறந்தன. பனிரெண்டு வருடங்கள் கழித்து என் அன்பிற்குரியவளின் பிரமிக்கும் வைக்கும் முகத்தை பனிகோர்த்த மரக்கிளைகளின் ஊடாக, அச்சன்னலின் உறைபனி செதிள்கள் வழிந்து வெயிலில் பிரகாசமாக பளபளக்கும் நிலைச்சட்டத்தின் நடுவே பார்த்தேன்.”(பக்கம்-60), இதுபோன்ற அவதானிப்புகளுக்கு பக்கம் 90, பக்கம் 237, பக்கம் 367, பக்கம் 431 ஆகியவற்றை எடுத்துக்காட்டாக நிறுவ முடியும்.

சார்பற்ற விவாதாங்களை எழுப்பி இறுதியில் தன் தரப்பிலுள்ள நியாயத்தை உறுதிப்படுத்துவதென்கிற மூன்றாவது வகைமைக்கு உதாரணம்.::

“நீங்கள் நேசிக்கும் ஒரு நகரத்தில் கால்நடையாகவே அடிக்கடி சுற்றி ஆராய்ந்து வந்தவராக இருந்தால் உங்கள் ஆன்மாவைவிட உங்கள் கால்களுக்கு அந்தத் தெருக்கள் மிக அதிகமாக பரிச்சயமாகி நிரந்தர சோகமாக ஒரு லேசான பனிபொழிவில் துயரம் கவிய உங்கள் கால்கள் அதனுடைய சொந்த இசைவில் உங்கள் அபிமான நிலத்துருத்துகளொன்றை நோக்கி இட்டுச்சென்றுவிடுகின்றதென்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”(பக்கம் 20).

“கடவுளின்     அருளால் வாழ்க்கையில் போதிய அளவுக்கு அனுபவபட்டிருந்ததால் இத்தகைய இனிய தருணங்களை வெகுநேரம் நீடித்திருப்பதில்லை என்பதை அறிந்திருந்தேன் (பக்கம் 239).

ஒருநாவலின் தனித்தன்மையைக் கட்டிக்காக்கவல்ல சொற்பதங்களையும் வாக்கியங்களையும் பிரத்தியேகமாக சில நாவலாசிரியர்கள் உபயோகித்திருப்பார்கள், ஒரான் பாமுக்கின் வெற்றிக்கு அவைகளுங்கூட ஒரு காரணமென்பேன்:

“அவன் மூச்சில் ஒரு சிங்கத்தின் வாயில் அடிப்பதைப்போன்ற முடைநாற்றம்”, “இஸ்தான்புல் ஒரு கெட்டிலென்றால் எஸ்தராகிய நான் ஒரு கரண்டி என்பதாக, என் கால்படாத தெருவே இந்நகரில் இருக்காது.”  “தாகத்தில் துவளுபவன் போலவும், நான் குளிர்ந்த புளிப்பு-செர்ரி சர்பத் போலவும் அவன் என்னை வேட்கையோடு பார்ப்பதுகூட எனக்குப் பிடித்திருந்தது” போன்றவைகளை உதாரணமாகக் காட்டமுடியும்.

தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோன்று, மரபையும் புதுமையையும், ஐரோப்பாவையும் ஆசியாவையும், ஓட்டாமன் பாஷாவையும் வெனீசிய டோஜேவையும் இணைத்து ஓரான் பாமூக் இன்று உலகறிந்த நாவலாசிரியராக அறியப்பட்டமைக்கு இப்படி நிறையக் காரணங்களைஅடுக்க முடியும், மொழிபெயர்ப்பாளரும் அவரது பெருமைக்கு தமிழின் மூலம் மேலும் ஒளியூட்டிருக்கிறாரென்றே சொல்லவேண்டும்.

“ஒரு கடிதமென்பது  வார்த்தைகளால் மட்டும் வெளிப்படுத்தப்படுவதல்ல. ஒரு புத்தகத்தைப்போலவே ஒரு கடிதத்தையும் முகர்ந்து பார்த்து, அதைத்தொட்டுப்பார்த்து, தடவிப்பார்த்து படிக்க முடியும். அதனால்தான் புத்திசாலிகள், “சரி, அந்தக் கடிதம் உன்னிடம் என்ன சொல்கிறதென்பதைப் படி என்பார்கள், மந்த புத்தியாளர்களோ, “சரி அவன் என்ன எழுதியிருக்கிறான் படி!” என்பார்களென நாவலில் ஒர் அத்தியாயத்தில் குறிப்பிட்டுருப்பதைப்போல தொட்டும், தடவியும், முகர்ந்தும் வாசிக்கப்ப்படவேண்டிய நாவல் ‘என் பெயர் சிவப்பு’.

——–

‘என் பெயர் சிவப்பு’

ஓரான் பாமுக் தமிழில் ஜீ.குப்புசாமி

காலச்சுவடு பதிப்பகம்

669-கே.பி.சாலை

நாகர்கோவில்-629001 -தமிழ்நாடு

இந்தியா

 

Series Navigationசாம்பல்வெளிப் பறவைகள்நாதம்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *