இந்த வார நூலகம் – வணிக இலக்கியமும் புனைக்கதைகளும்

This entry is part 19 of 41 in the series 23 செப்டம்பர் 2012

 

சிறகு இரவிச்சந்திரன்.

போரூர் நூலகத்தில், நாளிதழ்களுக்குத்தான் கூட்டம் அலைமோதுகிறது. இதழ்களைக், குறிப்பாக இலக்கிய இதழ்களைச், சீந்துவாரில்லை. வேலை தேடும் வசதியில்லாத இளைஞர்கள், கிடைக்கிற பேருந்துப் பயணச்சீட்டுகளில், குறிப்பெடுத்துக் கொள்கிறார்கள். அதுவும் கிடைக்காதவர்கள், வார, மாத இதழ்களின் வெள்ளை மார்ஜின்களை லாவகமாகக் கிழித்துப் பயன்படுத்துகிறார்கள். நான் பார்த்த வரை, யுவதிகள் கண்ணில் படக்காணோம். ஒரு வேளை அந்த வேலையை, அவர்களுக்காக, அவர்களின் தந்தைமார்கள் செய்து கொண்டிருக்கலாம். இந்தச் சூழலில், குறிப்பேட்டுடன் போன என்னை விநோதமாகப் பார்த்தவர்கள் உண்டு.

திலகவதியின் ‘ அம்ருதா ‘

செப். 2012 இதழில், மூத்த படைப்பாளி மா. அரங்கநாதனுடன் நேர்க்காணல். நகலச்சு இல்லாத காலத்தில், சக்தி இதழில் வெளிவந்த லா.ச.ரா.வின் சிறுகதையைப், பிரதி எடுத்த தகவலை சிலாகிக்கிறார் அவர். லா.ச.ரா. ஆங்க்¢லத்திலும் எழுதினார் என்றொரு தகவலும் உண்டு. தகவல்கள் சுவரஸ்யமென்றாலும், கேள்விகள் பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்து போல ஒரே பாட்டையில் போவது அயற்சியைத் தருகிறது.

ம. தவசியின் “ புளிமுடிச்சு “ அமானுஷ்ய ரகம். பேரன் கதை சொல்லியாகப் பயணப்படும், பாட்டியின் கதை. நாற்பது வருடங்களுக்கு முன் காணாமல் போன, எப்பொழுதும் உடலெங்கும் வேப்பெண்ணை தடவி, பசுமாட்டுடன் திரிந்து கொண்டிருந்த கங்கம்மா கிழவி, தனக்கும் மாட்டுக்குமாய் காட்டில் குழி வெட்டி, அதில் புதையல் பானை கிடைத்ததால் காணாமல் போனதாக ஊரெங்கும் புரளி. வெட்டிய குழியில் தங்க ஒட்டியாணம் கிடந்ததாகப் கூடுதல் பலம் பெறுகிறது புரளி நாளடைவில். நகர வாழ்க்கையில் அல்லல்படும் பேரன் வீட்டின் முன் தரிசனம் தருகிறாள் கிழவி. “ அப்பனைக் கூட்டிக்கிட்டு காட்டுக்கு வா! ஒன் கஷ்டமெல்லாம் தீரும்!” என்கிறாள். கிழவி சிண்ட்ரெல்லா போல தங்கம் இழைக்கக் காட்சி தருகிறாள். கிழவி காணாமல் போனதும் அப்பன் வீடு தானாய் இடிந்து விழுந்ததும், ஆத்தா இறந்து போனதும் கிளைக்கதை.
முன்னொரு பெண் உருவமும் பின்னொரு பெண் உருவமும் வர, காட்டுக்குள் போகும் அப்பனும் மகனும், காட்டிய இடத்தில் குழி வெட்ட, கலயம் கையில். மூன்றாம் சாமம் முடியும் நேரம், கலயக்கைகளோடு தலையில் தாக்கப்பட்டு விழுகிறான் கதைசொல்லி. விழிக்கும்போது விடிந்திருக்கிறது. ஆனால் கலயமும் இல்லை. அப்பனும் இல்லை. வீடு வந்தால் அப்பன் குரல் கேட்கிறது. “ அம்மாவாசைக்கு வா.. அப்ப என்னை நீ பாக்கலாம் “. பெரிய பயமுறுத்தல்கள் இல்லையென்றாலும், கதை நெடுக கமுதி காட்டுப்பகுதியை தவசி விவரிக்கும் விதம் தமிழுக்கு புதுசு. வித்தியாசமான கதை.

மனுஷ்யபுத்திரனின் “ உயிர்மை “

இமையத்தின் நெடுங்கதை “ பெத்தவன் “ பழனியின் மகள் பாக்கியம். மேல்சாதி பாக்கியத்தைக், கீழ்சாதி பெரியசாமி காதலிக்கிறான். இருவரும் சேர்ந்து இரண்டு மூன்று முறை ஓடிக்கூட போய்விட்டார்கள். ஆனால் ஊரால் பிடிக்கப்பட்டு, திரும்ப கொண்டு வரப்படுகிறார்கள். அதனால் பெரியசாமிக்கும், அவன் பெற்றோருக்கும் அடி, உதை, வீடு எரிப்பு இத்யாதி. பாக்கியம், செய்த திருமண ஏற்பாடுகளையெல்லாம் உடைக்கிறாள். தற்கொலைக்கும் உடன்படவில்லை. கடைசியில் ஊரார், பழனியே அவளைக் கொல்ல நிர்பந்திக்கிறார்கள். பழனி, பாக்கியத்தை பெரியசாமியிடம் ஒப்படைத்து, தற்கொலை செய்து கொள்ளும் காட்சியுடன் முடிகிறது கதை.

கதை மேற்சொன்னதுபோல் நறுக்கென்று முடிவதில்லை. இமையத்திற்கு சினிமா ஆசைகள் உண்டென்று தோன்றுகிறது. கதை முழுக்க வசனங்கள் தான். அநியாயத்திற்கு எல்லோரும் பத்தி பத்தியாகப் பேசுகிறார்கள். ஆனால் கதை ஒன்றும் நகரக் காணோம். குறும்படக்கதையை நெடுங்கதையாக ஆக்கியதில் ஏற்பட்ட சங்கடம் இது.

உத்தமச்சோழனின் “ கிழக்கு வாசல் உதயம் “

உத்தமசோழனின் ஒரு தொடர், தூத்துக்குடியில் பணிபுரியும் அபிமானியின் கதை என விரிகிறது இதழ். ‘ இரவில் ஒளிரும் சூரியன் ‘ குமுதம் பாணிக் கதை. படிப்பறிவில்லாத மனைவி. கணவன் பிரதான எதிர் கட்சியின் உறுப்பினன். முதல் முறை ஓட்டுப் போடப் போகும் மனைவி, சரியாகத்தான் முத்திரை குத்தினேன் என்பதைக் கணவனிடம் காட்ட, வாக்கு சீட்டையே வெளியே கொண்டு வந்து விடுகிறாள். காலங்கள் மாறி, மின்னணு இயந்திரம் வந்த பிறகு, வேட்பாளரிடம் கணிசமான ஒரு தொகை வாங்கிவிட்ட கணவன், தன் பகுதி ஓட்டு அத்தனையும், அந்த வேட்பாளருக்கே விழப் பிரச்சாரம் செய்கிறான். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஓட்டுப் போடப்போகும் மனைவி, சின்னம் எது என்று கூடத் தெரியாமல் தவறான பொத்தானை அழுத்துவதுடன் கதை முடிகிறது. மக்களின் அறியாமையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது ஜனநாயகம்.

இதழ்களைப் படித்த போது ஒன்று புரிகிறது. வணிகப் பிரதிநிதிகளுக்கு இருப்பது போல மாதாமாதம் வணிக இலக்கிய இதழ்களுக்கும் ஒரு டார்கெட் இருக்கிறது. அதனால், எதையாவது ரொப்பி இதழினைக் கொண்டு வர முயல்கிறார்கள். சிற்றிதழ்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கனம், தரம் என்பதெல்லாம் செல்லப்பா காலத்தோடு போயிற்று.

0

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -29ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 38) என் கலைக் குரு
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    kavignar ara says:

    ரவிச்சந்திரன் அவர்களே ரொப்பி என்று எழுத வேண்டாம்.நிரம்ப, அல்லது (நிரப்பி இது நீருக்கு மட்டும்).உங்கள் ஆளுமையான கடிதங்கள் இம் மாதிரியான வார்த்தைகளில் குறைபடக்கூடாது.போரூர் நூலகம் முன் இருந்ததை விட பரவாயில்லை.அண்ணா நூலகம் கோட்டுர் சென்று படியுங்கள்-மிக மிக நன்று.உங்கள் மதிப்புரைகள் நன்று.வணிக உலகில் இத்தகைய
    விஷ்யங்கள் தவிர்க்க முடியாதுதான்.நாம் எதிர்பார்ப்பது அவர்கள் போட வேண்டுமா என்ன? அவர்கள் வருவதில் தெளிவு செய்து போடுகிறார்கள் .வேறென்ன..நாம் மட்டுமென்ன பிடித்த பத்திகளை படிக்கிறோம் மற்றவை பிறருக்கு பிடிக்கலாம் இல்லையா ? ஆரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *