கு.அழகர்சாமி
மனிதரின் இன்னொரு விரல் போன்று செல்பேசி(Mobile phone) ஆகி விட்டது. சிலர் மிட்டாய்கள் போல் ஒன்றுக்கு மேலும் செல்பேசிகள் வைத்திருப்பர். குடும்பத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு செல்பேசி. செல்பேசியின் தாக்கமோ இடம், காலம், சூழல் கடந்ததாயுள்ளது. சிலர் சாலையில் நடந்து போகும் போது கூட ஒரு பைத்தியம் பேசுவது போல பேசிக் கொண்டே போவர். கழிவறையில் சிறு நீர் கழிக்கும் போது கூடப் பேசிக் கொண்டே சிறுநீர் கழிப்பவர்களைக் காண்கிறோம். சிலர் உண்ணும் போது கூட பேசாமல் நிம்மதியாய் உண்ணுவதில்லை. சாமி முன் மந்திரம் முணுமுணுக்கும் குருக்களுக்கும் செல்பேசி முணுமுணுப்பதில் ஒரு கண் தான். பேசிப் பேசியே இருந்து விட்டு பேசாமல் ஒரு கணம் இருக்க முடியாது என்பது போல உளவியல் சிக்கலும் சிலருக்கு ஏற்பட்டு விட்டதோ என்று தோன்றுகிறது. காலை நடைக்குத் தான் வருவார்கள். அவர்களில் சிலர், அப்போதும் செல்பேசியைச் செவியில் சேர்த்துப் பேச்சளந்து கொண்டே நடப்பார்கள். சிலர் செல்பேசியில் ஏதாவது செயல்பாடுகளை வெறுமனே செய்து கொண்டிருப்பார்கள். இளங்காதலர்கள் கடற்கரை மணலில் கைகளைத் துழாவிக் காதலைப் பரிமாறிக் கொள்வதெல்லாம் பழைய கதை. இப்போதெல்லாம் செல்பேசிகளை வைத்துக் கொண்டு என்ன தான் காதலில் ஆராய்வார்களோ? பேருந்துப் பயணத்தில் ஓட்டுநர் செல்பேசியில் பேசிக் கொண்டே ஓட்டினால், அவர் எமனிடம் பேசிக் கொண்டிருக்கிறாரா என்று உயிரைக் கையில் பிடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
முன்பெல்லாம் பேருந்துப் பயணங்களில் வெட்ட வெளிக் காட்சிகளைக் கண்டு மனம் இலேசாகி இரசிக்கும் அனுபவங்களாக அமையும். காலம் போவது பிரச்சினையல்ல. ஆனால், இப்போதோ பலருக்கு செல்பேசிகளில் பாட்டுகளைக் கேட்டுக் கொண்டே தான் பயணம். அல்லது செல் பேசியில் பந்தயங்கள் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். விரைந்து செல்லும் பேருந்தோடு இன்னும் விரைந்து செல்லவில்லை காலம் என்பது போல தவிக்கும் அவர்களின் மனம் வெட்ட வெளிக் காட்சிகளில் இலயிப்பதில்லை. ’சும்மா’ இனி எப்படி இருப்பது? கிராமத்துச் சாவடிகளில் தூங்காமல் தூங்கும் சுகம் இனி கிராமங்களில் கூட நீடிக்குமா? குறுஞ் செய்தியை எடுத்துக் கொண்டால், கண்ட வணிகக் குறுஞ்செய்திகள் செல்பேசிகள் வழியாக குவிகின்றன.(இவற்றையும் தடுக்க செயல்பாடுகள் உள்ளன)) ஒரு பக்கம் அவை எரிச்சலாக இருக்கின்றன. மறுபக்கம் குறுஞ்செய்தி சப்திப்பு வந்ததும் ‘என்ன குறுஞ் செய்தியோ’ என்ற நமைச்சலும் இருக்கிறது. உப்பு சப்பில்லாத அல்லது எரிச்சலான குறுஞ்செய்தி தான் வந்திருக்கும் என்று அனுமானித்தாலும், அந்தக் குறுஞ்செய்தியை வாசித்து முடித்தாலொழிய நமைச்சல் தீராது. முன்கூறியவெல்லாம் ஒரு அவநம்பிக்கையிலோ அல்லது ஒரு ‘நொட்டம்’ (cynical) சொல்லும் அணுகுமுறையிலல்ல. எப்படி நம்மை அறியாமலேயே , ஒரு தகவல் தொழில் நுட்பம் வாழ்வியல் மற்றும் உளவியல் ரீதியில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதை என்பதை நினைவுறுத்திக் கொள்வதற்கே.
மார்க்ஸ் (Marx) விலை பொருட்களின் வழிபாட்டைப்( Fetishism of commodities) பற்றிப் பேசுவார். எப்படி மனித உழைப்பின் சமூகப் பண்புகள் விலைபொருட்களின் உள்ளார்ந்த பண்புகளாய் பொருண்மைப்படுவதில் (objectified) விலைபொருட்களின் மாயம்( mysteriousness of commodities) அடங்கியுள்ளதையும், அடிப்படையில் மனிதர்களுக்கிடையே (முதலாளித்துவவாதிகளுக்கும், தொழிலாளர்களுக்கும்) இருக்கும் சமூக உறவுகள் ஆச்சரியப்படும் வகையில் விலைபொருட்களுக்கிடையேயான உறவுகளாய் மறைபடுவதையும்(masking) விவரிப்பார். இந்த வழிபாடு முதலாளித்துவக் கட்டமைப்பில் ஒரு பொருள் தனது பயன்பாட்டு மதிப்பிலிருந்து(use value) விலைபொருளுக்கான பரிமாற்ற மதிப்பு(exchange value) என்று மாறும் போது நிகழ்கிறது. செல்பேசிகளைப் பொறுத்த மட்டில் இன்னொரு விதமான வழிபாடு(fetishism) நிகழ்கிறதோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது. அது ஒரு விலை பொருளின் பயன்பாட்டுக்கும், பயன்படுத்தும் மனிதருக்குமான உறவினைப் பற்றியாதாயுள்ளது. செல்பேசி என்ற விலைபொருள் பயன்பாட்டில் அதன் பயன்பாட்டு மதிப்பு என்பதோடு நில்லாமல் மனிதர்களின் எதையாவது எண்ணி எண்ணிக் கொண்டிருக்கும் அதிமன நிலைக்கு (psychic state) ஏதுவாகப் பேசிப்பேசித் தீராத தினவுக்கு, எங்கிருந்தும் 24*7 என்ற கால அளவில் எந்த சமயத்திலும் தொடர்பு கொள்ளும் சாத்தியத்தை அமைத்துக் கொடுப்பதில் மனிதர்கள் தம்மில் பிறரோடு தாம் உறவுகளைச் சாத்தியப்படுத்துகிறோம் என்பது மறைவாகி, செல்பேசிகள் உறவுகளை அமைத்துக் கொடுக்கின்றன என்ற பொருண்மைப்படுத்தல்(objectfication) தோற்றம் கொள்கிறது. இதனால் மனிதர்கள் தம் வயமிழந்து விடுவது மட்டுமல்லாமல், தனிமையில் தான் தானோடு உறவாடும் அனுபவத்தையும் இழந்து செல்பேசி என்ற பொருளின் மேல் கவர்ச்சிப்பட்டு விட்டது போல் மேலும் மேலும் சார்ந்திருக்க வேண்டிய பண்பு விளக்கம் பெறுகிறது. இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால், உயிர்ப்புள்ள மனிதருக்கும் உயிர்ப்பில்லா செல்பேசி என்ற ஒரு பொருளுக்கும் இருக்கும் உறவு மறைவாகி, செல் பேசி என்ற உயிர்ப்பில்லா ஒரு பொருளில் தம் சமூக உறவுகள் உயிர்ப்பாகியதாகிய மாயத்தில், செல்பேசிகளின் மேலான கவர்ச்சியும், பிடிப்பும், பிரேமையும் அடங்குகிறது. இது நமக்கே நாம் விழிப்பாயில்லாமல் நிகழும் ஒரு அதிமன நிகழ்வு.
செல்பேசிகளுக்கும் தனிமனிதருக்குமான உறவின் மேற்சொன்ன தர்க்கங்களை விட்டு விட்டு, மனிதர்களுக்கு இடையேயான தொடர்பு சாதனம் என்ற நிலையில், ’தான் தனியில்லை, சமூகத்தோடு எவ்வளவு பின்னிப் பிணைந்திருக்கிறோம்’ என்ற கருத்தாக்கத்தின் அடையாளமாய் செல்பேசி சேவையைக் கண்டு கொள்ள முடியும். செல் பேசிகளின் செயல் வலை (cellular network) கூடக்கூட , இந்த சமூகத் தொடர்பின் சாத்தியமும், செயல்வலையின் மதிப்பும்(Network value) கூடும். உண்மையில் சொல்ல வேண்டுமானால் செயல்வலையின் மதிப்பை அளவிட்டும் கூறலாம். எடுத்துக் காட்டாய், ஐந்து செல்பேசிகள்/தொலைபேசிகள் இருந்தால், ஒவ்வொரு செல்/தொலை பேசியிலிருந்தும், ஏனைய நான்கு செல்/தொலை பேசிகளோடு தொடர்பு கொள்ளும் சாத்தியங்கள் இருக்கின்றன. ஆக, மொத்தத்தில் 5*(5-1)= 20 தொடர்பு கொள்ளும் சாத்தியங்கள் இருக்கின்றன. இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமானால், ஐந்து செல்/தொலை பேசி செயல் வலையின் மதிப்பு 20 சாத்தியத் தொடர்புகள். இந்த கணக்கீட்டைப் (formula) பொதுவாக விரிவுபடுத்திக் கொள்ளலாம். செயல்வலையின் எண்ணிக்கை n என்று இருப்பின், செயல்வலையின் மதிப்பு n*(n-1). n மிகப் பெரிதான எண்ணாகும் போது, n*(n-1) என்ற கணக்கீட்டை, n*n= n2 என்று சுருக்கிக் கொள்ளலாம். செயல்வலையின் மதிப்பை அளவிடும் இந்தக் கணக்கீட்டை மெஃட் கால்ஃபி(Metcalfe’s Law-) விதி என்று சொல்வார்கள். செயல்வலையின் மதிப்பு கூடும் போது சமூகத் தொடர்பின் சாத்தியங்களும் கூடுவதால், தகவல் தொழில் நுட்பம் ஏனை தொழில் நுட்பங்களைக் காட்டிலும் சமூகத்தின் எல்லா தளங்களையும் தொடுகிறது. வர்க்க, ஜாதி பேதம் கடந்து தகவல் தொழில் நுட்பம் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதன் சமூக அடையாளமாய் செல்பேசி வளர்ச்சி அமைந்துள்ளது. ஒரு வெட்டியானும் செல் பேசி வைத்துக் கொள்ள முடியும். ஒரு செருப்பு தைப்பவனும் செல்பேசியில் சொல்லாட முடியும். ஒரு பூக்காரியும் செல்பேசியில் பேசிக் கொள்ள முடியும். கடலுக்குச் செல்வோர் கடலின் புயல் நிலைமையையும், மீன் பிடிப்பின் அளவையும் கரையில் இருப்போரிடம் முன் கூட்டியே சொல்ல முடியும். கொடைக்கானல் மலை கிராமங்களில் சாவுச் செய்தியை டமாரம் அடித்து மற்ற கிராமங்களுக்கு சொல்லும் நிலைமை இருந்ததாம். இப்போது செல் பேசியில் செய்திகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. செல் பேசியின் செயல் வலை விரிவாகும் வேகத்தைப் பார்த்தால், உலகில் ஒவ்வொரு மனிதனும் செல்பேசி/தொலை பேசி வைத்திருக்கும் நிலை வரும். அப்போது உலகில் ஒவ்வொரு மனிதனும், உலகில் எங்கேயோ இன்னொரு மனிதனால் நினைக்கப்படுகிறான் என்பதன் அடுத்த கட்டமாய் உலகில் ஒவ்வொரு மனிதனும், உலகில் எங்கேயோ இன்னொரு மனிதனால் தொடர்பு கொள்ளப்படுவான் என்ற சாத்தியத்தில் உலகே பின்னப்பட்டிருக்கும். அப்போது மனிதப் பிரக்ஞை உலகளாவியதாக அமையும் அடையாளம் இன்னும் வெளிப்படையாக இருக்கும்.
செல் பேசிகள் தொலைவை மட்டும் தகர்த்தது என்பதில்லை. அமைதியாய் சமூகப் பொருளாதார உறவின் தளங்களையும், குறிப்பாக கிராமப்புறங்களில், நகர்த்துகின்றன. வங்காள தேசத்தின்( Bangala Desh) கிராமப் புறங்களில் தரப்படும் செல் பேசி சேவை இதற்கு எடுத்துக்காட்டு. அங்கு கிராமின் ஃபோன் (Grameen phone) என்ற தேசிய அளவிலான செல் பேசி சேவை நிறுவனத்திடமிருந்து , கிராமின் டெலிகாம்( Grameen Telecom) என்ற லாப நோக்கற்ற அமைப்பு மொத்தமாக அலைநேரத்தை( air time–) குறைந்த விலையில் பெற்று, அதனை கிராமத்து பொது தொலைபேசி உரிமத்தாருக்கு செல்பேசி சேவை தர உதவுகிறது. இந்த கிராமின் டெலிகாம், கிராமின் வங்கி( Grameen Bank) என்ற வங்கிக் குழுமத்தின் பங்குதாரர். அதனால், கிராமின் வங்கிக் கிளைகள் பொது தொலைபேசி உரிமத்தாருக்கு செல்பேசி வாங்கவும் மற்றும் சேவை தர ஏதுவான கட்டமைப்புக்கும் சிறு நிதிக் கடன்கள் (micro financing) அளிக்கின்றன. பொது தொலை பேசி உரிமத்தார் பொது அழைப்புகளிலிருந்து( public calls) கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியைத் தவணை முறையில் கடனை அடைக்கின்றனர். இந்த புதுமையான வணிக முறையில்( business model) முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், பொது தொலை பேசி உரிமத்தார் எல்லோருமே பொருளாதார நிலையில் கீழ்த்தட்டில் இருக்கும் மகளிர். இந்த பொது செல்பேசி சேவையில், பொது தொலைபேசி உரிமமுடைய தனிநபர் ஆண்டு வருமானம் , வங்காள தேசத்தின் சராசரி ஆண்டு வருமானத்தை விட அதிகம் என்று சொல்லப்படுகிறது. நுகர்வோர் உபரி(consumer surplus) ஒரு குடும்ப மாத வருமானத்தில் சுமார் பத்து விழுக்காடு வரை மதிப்பிடப்படுகிறது. இதனால் மகளிரின் நிதி ஆதாரம் மட்டுமல்ல, சமூக மதிப்பீட்டில் அவர்களின் நிலையும் உயர்ந்துள்ளது முக்கியமானது. எப்படி தொழில் நுட்பமும், சிறுநிதிக் கடன்களும், புதுமையான வணிக உத்தியும் சேர்ந்து , சம்பந்தப்பட்ட கிராம சமுதாயத்தோடு சேர்ந்து செயல்பட்டால் , வறுமைக் குறைப்பு மட்டுமல்ல பெண்ணுரிமையும் வலுப்படும் என்பதற்கு வங்காள தேசத்தின் ’கிராமின் மாதிரி ’( Grameen Model) ஒரு உதாரணம். இந்த கிராமின் மாதிரியைத் திட்டமிட்டு நடைமுறைப் படுத்திய முகம்மது யூனஸ் என்ற வங்காளப் பொருளியல் அறிஞர் நோபல் பரிசு பெற்றவர் என்பதை நினைவு கொள்வது நன்று.
இந்தியாவிலும் இ-செளபல் (e-choupal), என்-லாக் (n-logue) போன்ற உதாரணங்கள் இல்லாமல் இல்லை. இ-செளபல் ஐ.டி.சி (ITC) குழுமத்தினரின் செயல்திட்டம். கிராமப் புறங்களில் கணிணிகளை அமைத்து இணையவலை(internet) மூலம் விவசாயிகளுக்கு அப்போதைக்கு அப்போதைய சந்தை விலை மற்றும் விவசாயப் பொருட்களின் விவரங்களைத் தர வகை செய்கிறது. என்-லாக் செயல்திட்டத்தில், இணைய வலைக் குழுக்கள்(internet kiosks) கிராமப்புறங்களில் நிறுவப்பட்டு, தொலைக் கல்வி(Tele-education), தொலை மருத்துவம்(Tele-medicine), இ-மெயில்(e-mail) போன்ற சேவைகள் தரப்படுகின்றன. ஆனாலும் கிராமப் புறங்களில் அகண்ட அலைக்கற்றை இணைய வலை சேவைகள் விரிவாக்கம் ஆவதற்குப் பல இடர்ப்பாடுகள் உள்ளன. கணிணி, உள்ளூர் மக்களுக்குத் தேவையான மென்பொருள்கள், மின்சாரம் போன்றவை கிராமப்புறங்களில் பேரளவில் போதாமையாய் இருக்கின்றன. கணிணி அடிப்படையிலான உள்ளூர் மொழி மென்பொருள் அளிப்புகள்( local software applications ) நிலைப்படும் வரை. செல்பேசிகளில் பேச்சு அடிப்படையிலான (voice based) சேவைகளைத் தர முடியும். உதாரணமாக மொபைல் வங்கி(mobile banking) சேவையைச் சொல்லலாம். பணப் பட்டுவாடா போன்ற நிதிசார் சேவைகளுக்கு( financial services) செல்பேசிகளைப் பயன்படுத்த முடியும். இந்த மாதிரியான சேவைகள் சில வளரும் நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் ரிசர்வ் வங்கி( Reserve bank) மொபைல் வங்கி சேவைக்கான விதி முறைகளை வெளியிட்டுள்ளது. மொபைல் வங்கிச் சேவை கிராமப் புற மக்களையும் உள்ளடக்கிய நிதி உள்ளடக்கத்திற்குப்(financial inclusion ) பெரிதும் உதவும். இந்தியாவில் 2.2 மில்லியன்களுக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் உள்ளன. செல்பேசி அடிப்படையிலான செயல் திட்டங்கள் இந்த சுய உதவிக்குழு சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரிதும் பங்காற்ற முடியும்.
தனிமனித அளவிலும், சமூக அளவிலும் செல்பேசிகளின் தாக்கங்கள் முன்னை விட இப்போது மேலும் கவனிக்கப்பட வேண்டியவை. அப்போது தான் செல்பேசித் தொழில் நுட்பத்தை சரியான கோணத்திலும், அளவிலும் தனிமனித மற்றும் சமூக முன்னேற்றத்திக்கு சாத்தியமாக்கிக் கொள்ள முடியும்.
- பொன் குமரனின் “ சாருலதா “
- பயண விநோதம்
- தங்கம்மூர்த்தி கவிதை
- விடுதலையை வரைதல்
- கேட்பினும் பெரிது கேள்! – புன்னகை சிற்றிதழும் கதிர்பாரதி சிறப்பிதழும்..
- ரீடெயில் தொழிலில் பன்னாட்டு நிறுவனங்கள் …
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -44 (முற்றும்)
- மொழிவது சுகம் 22:. இருவேறு மனிதர்கள் இருவேறு உலகம்
- இரட்டுற மொழிதல்
- தமயந்தி நூல்கள் அறிமுகம்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -3
- சினேகிதனொருவன்
- பாவலர்கள் (கதையே கவிதையாய்)
- ஆகாயத்தாமரை!
- ஜெய் பீம் காம்ரேட் – திரையிடல் (தமிழில்)
- அ.குணசேகரனின் ‘இல்லாமல் இருத்தல்’-ஓர் அழகிய மக்கள் இலக்கியப் படைப்பு
- வெள்ளம்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -29
- இந்த வார நூலகம் – வணிக இலக்கியமும் புனைக்கதைகளும்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 38) என் கலைக் குரு
- தாகூரின் கீதப் பாமாலை – 32 என் வாழ்வின் கழுத்தாரம் !
- பழமொழிகளில் கனவும் நினைத்தலும்
- உலக சகோதரத்துவ விழா (190-வது வள்ளலார் அவதரித்த திருநாள்)
- சுபாவம்
- 7வது மதுரை புத்தகத் திருவிழாவும் மதுரைத்தமிழும்
- கவிதை
- விசரி
- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதை நூலின் மீது ஒரு மதிப்பீடு
- குரல்
- தலைமுறைக் கடன்
- செல்பேசிகளின் பன்முகத் தாக்கங்கள்
- அவர்கள்……
- அடுத்தவரை நோக்கி இலக்கியத்தினூடாகத் திறக்கும் சாளரமும், சுதாராஜின் கதை சொல்லும் கலையும்
- நாள்தோறும் நல்லன செய்வோம்.
- சுறாக்கள்
- ஜென்ம சாபல்யம்….!!!
- அக்னிப்பிரவேசம் 2 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
- பூதக்கோள் வியாழனின் வளையத்தைச் சிதைத்த வால்மீன் முறிவு
- முன்குரானிய சமயப்பிரதிகளில் ஏகம்
- பஞ்சதந்திரம் தொடர் 57
- அசிங்கம்..