நம்பிக்கை ஒளி! – 1

This entry is part 25 of 36 in the series 30 செப்டம்பர் 2012

 

”அம்மா.. அம்மா. தூங்குறயா நீனு.. இந்த பாப்பா பொம்மையைப் பாறேன். திடீர்னு கண்ணே திறக்க மாட்டீங்குது.. அச்சச்சோ, பாப்பா மாரியே நீயும் கண்ணே தொறக்க மாட்டீங்கறே.. ஐய.. பாப்பா மாதிரி நீனும் வெள்ளாடறியா… அம்மா.. அம்மா…”

 

“அக்கா, அம்மா தூங்கறாங்க பாரு. தொந்திரவு பன்னாத. அம்மா நேத்தே காச்சல்னு சொல்லிச்சுதானே. நல்லா தூங்கட்டும். அப்பதான் சீக்கிரமா காச்சல் சரியாவும்.”

 

“இல்லை, மாலு எனக்கு வயிறு பசிக்குதே. அம்மா இன்னும் சோறு செய்யவே இல்லியே.. அம்மா எழுப்பச் சொல்லிச்சுதானே.. “

 

“அப்பிடியா.. சரி எனக்குந்தான் பசிக்குது . சரி வா இரண்டு பேரும் சேந்து எழுப்பலாம். அப்பதான் அம்மா சீக்கிரமா எந்திரிக்கும்.. இல்லியா.. அப்பா வந்தா வேற திட்டுமில்ல. அம்மா ஏன் சோறாகலன்னு.. சீக்கிரமா எழுப்பலாம்..”

 

மூன்று வயது மாலுக்குட்டியும், நாலரை வயது சாரு அக்காவும், அம்மாவை உலுக்கி எழுப்ப முயன்றும் அம்மா அசையாமல் கிடக்க, இரு குழந்தைகளும் சலித்துப் போய், ”அம்மா ஏம்மா..ஏந்திருக்க மாட்டீன்ற.. ஏந்திரும்மா.. ஏந்திரு. வயிறு பசிக்குதுல்ல…”

என்று சத்தம் போட, அதற்குள் மாலுக்குட்டி, அம்மா .. அம்மா. என சத்தம் போட்டு அழ ஆரம்பிக்க, அந்த லைன் வீட்டின் மூன்றாவது வீட்டு பார்வதிக்கா வெளியே குப்பை கொட்ட வந்தவள் குழந்தைகள் சத்தம் போடுவதைப்பார்த்து திறந்திருந்த கதவின் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தாள். பட்டாசாலையில் பாயில் படுத்துக்கிடந்த மங்கையர்கரசி என்கிற மங்கையைப் பார்த்தவுடன் என்ன்வோ கறுக்கென்று பட்டது மனதில் கிட்ட நெருங்கிப்போய் பார்ப்பதற்குள் கால்கள் தள்ளாடி அந்தப் பத்து அடியைக் கடப்பதற்கு பத்து மணிநேரம் ஆனது போல இருந்தது.

 

அவள் பயந்தது சரிதான். உடல் அசைவற்றுக் கிடந்தது. உயிர் இருக்குதா இல்லையான்னு தெரியலியே.. கண்கள் தட்டாமாலை சுற்ற பரபரப்பான சூழலில் ஒரு நொடி திணறியவள், குழந்தைகளை சமாளித்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். வீட்டில் சலமனற்று இருந்தது, முத்துச்சாமி இல்லாததை உணர்த்தியது. மில் வேலைக்குச் செல்பவன், காலை ஷிப்டுக்கு நேரமாகவே கிளம்பியிருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு, யோசிக்காமல் நேரே மேசை மீது இருக்கும் போனை எடுத்து 108க்கு அவசர உதவி ஆம்புலன்சுக்கு போன் செய்துவிட்டு, முத்துச்சாமியின் நம்பரையும் தேடி செய்தியைச் சொன்னவள், குழந்தைகளை அணைத்துக்கொண்டு பொங்கிவரும் கண்ணீரை அடக்க மாட்டாமல் ஆறுதல் சொல்ல முற்பட்டாள்.

 

விதியின் போக்கை ஒருவராலும் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. அதற்கு குழந்தைகள், பெரியவர்கள், ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது போலும்! எந்த நியாயம், எந்த தர்மத்தின் அடிப்படையில் ஒரு காரியம் செய்கிறது என்ற அளவுகோலும் தெரிவதில்லை. அதுதான் விதி! மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட மங்கை 24 மணி நேரத்திலேயே பிணமாக வீடு வந்து சேர்ந்தாள். சோதனை செய்யாமல் போட்ட பென்சிலின் ஊசி ஏற்படுத்திய ஒவ்வாமை, உயிரைக் குடித்துவிட்டதாம். அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் இதையெல்லாம் என்ன கண்டது.. தாயைக் காணாமல் தவித்து ஏங்கி அழுது, புரண்டு, வாடி வதங்கிவிட்டனர். மூத்தவன் முத்தழகன் ஆறரை வயது பாலகன் ஓரளவிற்கு விசயம் புரிந்திருந்தாலும், செய்வதறியாது மாலை மாலையாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான்.

 

ஐந்து நாட்களில் சடங்குகள் அனைத்தையும் அவசரமாக முடித்துவிட்டு சொந்தங்கள் அனைத்தும் காக்காய் கூட்டம் போல பறந்து விலகிச் சென்றன. வேலைக்குச் செல்லும் நேரத்தில் குழந்தைகளுக்கு அவசரமாக உணவு சமைத்துக் கொடுக்க முடிந்தாலும், அவர்களின் மற்ற தேவைகளை பூர்த்தி செய்யவும், வீட்டில் உடன் இருந்து கவனித்துக்கொள்ளவும் , இரண்டாம் திருமணமே தீர்வாகிப்போவது இயற்கைதானே.. ஏழ்மையின் பிடியிலிருந்து வில்கி ஓடினால் போதும் என்ற சூழலில், 25 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயாக குடுமப பாரத்தை சுமக்க ஒப்புக் கொண்ட அந்த கமலாவின் நிலை பரிதாபகரமானது. இரவு, பகல் பாராமல் தறி நெய்து காப்புக்காய்த்த அந்தக் கைகளுக்கு இது குபேர வாழ்க்கையாக தெரிந்ததில் ஆச்சரியமில்லைதான். ஆனால் எல்லாம் சொற்ப காலங்களே. ஏழ்மையில் அலுத்துப்போன வாழ்க்கையை கொஞ்சம் அனுபவித்து வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று ஆசையும் வந்துவிட்டது. அதற்கு முதல் பலிகெடா அந்தக் குழந்தைகள்தானே..

 

ஒரு படுக்கையறை, சிறு ச்மையலறை, சின்ன பட்டாசாலை என லைன் வீடாக இருந்தாலும் அந்த வீட்டிற்கு தான்தானே மகாராணி என்ற மகிழ்ச்சி கமலாவின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தெரிந்தது. தொலைக்காட்சி சீரியலில் மூழ்கிக்கிடந்தவளுக்கு குழந்தைகளின் இடையூறு எரிச்சலைக்கிளப்பியது.

 

“அம்மா.. அம்மா.. எனக்கு தலை சீவி உடுறியா.. பாரு எப்டி கலஞ்சு போயி இருக்கு..?” மாலு நாலாவது முறையாக கேட்டுக் கொண்டிருப்பது அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. அதற்குள் மூத்தவன், “அம்மா.. பசிக்குது, சாப்பாடு போடறியா” என்று கேட்கவும், கோபம் தலைக்கேற

 

“அதுக்குள்ள என்ன சாப்பாடு, மணி 7.30 தானே ஆவுது. உங்கப்பா வரட்டும், போ.. போ” என்று விரட்டியவளைப் பார்த்த அந்த சிறுவனின் முகம் அப்படியே கறுத்துவிட்டது.

 

வீட்டிற்குள் நுழையும் போதே இதையெல்லாம் பார்த்துக்கொண்டே நுழைந்த முத்துசாமி, இதை சற்றும் எதிர்பார்க்காதவனாக,

 

“ஏய், கமலா, என்ன பண்றெ நீ.. குழந்தைங்க கேட்டுக்கிட்டு இருக்குதுங்க.. நீபாட்டுக்கு டீவி பாத்துகிட்டு இருக்கே.. காது செவுடா உனக்கு?”

 

“ஆமா அது ஒன்னுத்தான் பாக்கி.. போங்க, உங்க புள்ளைகளுக்கு வேற என்ன வேலை, எப்பப்பார்த்தாலும், நச்சு, நச்சுன்னு எதனாச்சும் கேட்டுக்கிட்டே இருக்குதுங்க.. செத்த நேரம் நிம்மதியா உக்கார உடமாட்டீங்கிதுங்க.. நல்லா பெத்துப்போட்டுட்டுப் போனா மவராசி.. என் உசிரையில்ல எடுக்குதுங்க… சே… “

 

அவள் போட்ட சத்தத்தில் குழந்தைகள் நடுங்கிப்போய சுவரோரமாக ஒடுங்கி நின்று கொண்டிருந்தார்கள். போகப்போக கமலாவின் சுயரூபம் மெல்ல மெல்ல வெளிப்பட்டது.

கஸ்தூரிபாய் நினைவு இல்லத்தில் அன்று +2 வகுப்பு முடித்து பள்ளியை விட்டு வெளியே செல்பவர்களுக்கான பிரிவு உபச்சார விழா. ஆதரவற்ற குழந்தைகளுக்கான அந்த இல்லத்திலிருந்து வெளியே செல்ல வேண்டிய நேரம். சாருவும், மாலுவும் இந்த ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்த அந்த நாள் நெஞ்சை விட்டு அகலாத சோக நினைவுகள்.!

 

தாய் இறந்து ஒரு வருடமே ஆன நிலையில் அந்தப் பிஞ்சு உள்ளங்கள் தந்தையையும் இழக்க வேண்டி வந்ததுதான் வேதனையின் உச்சம். டெங்கு காய்ச்சல் என்று ஏதோ பெயர் சொன்னதைக்கூட புரிந்து கொள்ள முடியாத வயதில் 7 1/2 வயது அண்ணன் கொள்ளி போட, நெய் பந்தம் பிடித்துக்கொண்டு நிற்கும் அந்த பச்சிளங்குழந்தைகளைப் பார்த்து வானமே அழுதது போன்று மழையாய்க் கொட்டிக்கொண்டிருந்தது. ஏழ்மையின் பிடியிலிருந்து தப்பி வந்ததாக நினைத்து, சுனாமிப்புயலில் சிக்கிக் கொண்டது போல கமலாவின் நிலை ஆனது. மூன்று குழந்தைகளை வளர்க்க வழி தெரியாமல், அவள்  சுவற்றில் அடித்த பந்தாக திரும்ப தன் தாய் வீடே கதி என ஓட்டம் பிடித்தாள். சித்தப்பா என்று குழந்தைகள், தந்தையின் உடன் பிறந்த சகோதரனின் முகம் பார்த்து நிற்க, சூழ்நிலைகளே மனிதர்களின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துகிறது. காசு, பணம் வசதி இருந்தால் சொந்தம் எல்லாம் சுவர்கமாகத் தெரியும். தங்கள் பூர்வீக கிராமத்தில் இருக்கும் ஒரு பழைய ஓட்டுவீடு மட்டுமே அண்ணன்  தம்பி இருவருக்கும் சேர்ந்த சொத்து. அண்ணன் மனைவி ஓரளவிற்கு வசதியான குடும்பத்திலிருந்து வந்ததால், ஒரு ஜவுளிக்கடை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தார், மரியாதையாக. இந்த நிலையில் மூன்று குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள ஒப்புக்கொள்வது தேவையற்ற தலைவலியாகப்பட்டது.

 

”சித்தப்பா, அப்பா திரும்பி வரவே மாட்டாங்களா… அம்மாகிட்டயே போயிடுச்சா அப்பாவும்…. “

 

“ஆமாம்மா, மாலுக்குட்டி இனி சமத்தா இருக்கணும், அவங்க இரண்டு பேரும் சாமியா இருந்து உங்களையெல்லாம் கவனிச்சுகுவாங்க சரியா..”

 

“சரி, அப்ப ஏன் எங்க மூனு பேரையும் இங்கயே உட்டுட்டு ரெண்டு பேரும் சாமிக்கிட்ட போனாங்க. எங்களையும் கூட்டிக்கிட்டே போலாமில்ல?”

 

“அப்டீல்லாம் சொல்லக்கூடாது. சித்தப்பா உன்னை ஒரு நல்ல இடத்துல சேத்து விடறேன். அவுக உன்னைய அப்பா, அம்மா மாதிரியே பாத்துப்பாங்க சரியா…..”

 

“அப்ப நீங்களும் எங்களை உட்டுட்டு போயிடுவீங்களா சித்தப்பா, சித்திகூட இருக்கட்டுமா..?”

 

பால்மணம் கொண்ட இந்த பிஞ்சு மொழியில் கல்லும் கரைந்துதான் போகும். ஆனால் மனித மனம் அப்படி இல்லையே. உறவுகள் எதுவும் அடுத்தவர் பாரத்தைச் சுமக்க தயாராக இல்லை. அதுவும் பெண் குழந்தைகள் என்றால் பொறுப்பும், சுமையும் கூடுதலாகும் என்று எவரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

 

அப்பாவை பறிகொடுத்த 10ம் நாள் காரியங்கள் முடிந்த கையோடு, மளமளவென அடுத்த காரியங்களை நிறைவேற்ற தயாராகிவிட்ட சித்தப்பாவின் போக்கு, மூத்தவன் முத்தழகிற்கு ஓரளவு புரிந்தாலும், எதிர்த்துப் பேசவோ, மாற்று வழி தேடவோ வயதும், பக்குவமும் போதாதே. சித்தப்பா சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு கேட்பதைத்தவிர வேறு வழியில்லை. அவர் செய்த முதல் காரியம், மாலுவையும், சாருவையும் அனாதை ஆசிரமத்தில் கொண்டு சேர்த்ததுதான். அன்று அந்தக்குழந்தைகளை அனுப்பியவர்தான், அதற்குப்பிற்கு இந்த 12 ஆண்டுகளில் ஒரு முறைகூட சென்று பார்த்ததில்லை. முத்தழகனை மட்டும் சில நெருங்கிய உறவுகள் தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ள சம்மதித்தனர். ஏதோ ஒரு வேலை செய்துகொண்டு படித்துக்கொள்ளட்டும் என்று பேசினர். ஆனால் சித்தப்பாவிற்கு அதுவும் பிடிக்கவில்லை. தேவையில்லாமல் அதனால் தனக்கு கெட்ட பெயர் வரலாம் என்று யோசித்த மனிதர் முத்தழகனையும் ஆந்திரா பக்கம் உள்ள ஒரு ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு அது பற்றிய தகவலையும் எவருக்கும் கொடுக்காமல் மறைத்துவிட்டார். மூன்று குழந்தைகளையும் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விட்டதாக மன நிறைவுடன் தன் குடுமபம் , தன் குழந்தைகள் என வாழ ஆரம்பித்தவர் அண்ணன் குழந்தைகள் பற்றிய நினைவை மூட்டை கட்டி தூர எறிந்தே விட்டார்.

 

இன்று மாலு +2 முடித்து வெளியே வந்தவள், பள்ளியில் முதல் மாணவியாகத் தேறியதோடு, தான் நன்கு படித்து அக்காவை நல்லபடியாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற கனவோடு வெளியே வந்தாள். சரியாக படிப்பு வராத காரணத்தினால் 10ம் வகுப்பிலேயே பெயில் ஆனதால், மேற்கொண்டு படிக்கவும் விரும்பாதலால் சாரு பள்ளியில் இருந்து வெளியில் வரவேண்டியதாகி விட்டது. அவளை வீட்டில் வைத்துக் கொள்ள விரும்பாத சூழலில் அவள் சித்தப்பா தூரத்து உறவில், ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் ஒரு பையனுக்கு உடனடியாக மணமுடித்துக் கொடுத்துவிட்டார்கள். 15 வயது முடிந்த அந்த இளம் பெண்ணிற்கு தாய் கொடுத்துவிட்டுப் போன கோதுமை நிறமும், அழகும் அவளை சீர், செனத்தி என்று எதுவும் எதிர்பாராமல் பெண்ணை கட்டிக்கொண்டு போக வழிவகுத்தது. .

 

மாலு அன்று பள்ளியில் பிரிவு உபச்சார விழா முடிந்தவுடன், தன்னுடைய  மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு, தலைமை ஆசிரியர் கொடுத்த ஊக்கத்தினால், மிக உற்சாகமாக, தானும் வாழ்க்கையில் சாதிக்கப்போகிறோம் என்ற கனவுடன் சித்தப்பா வ்ந்து அழைத்துப்போக வருவார் என்று காத்திருந்தாள். பள்ளி தலைமை ஆசிரியையிடம் வருடா வருடம் ஒருமுறை பேசுவாராம். அப்படி இந்த முறை பேசும்போது தலைமை ஆசிரியை மாலுவின் பள்ளிப் படிப்பு முடிவடைவதைப்பற்றி கூறி, கல்லூரிப் படிப்பைத் தொடர வழிவகுக்க வேண்டினாராம். அவரும் நேரில் வந்து மாலுவை கூட்டிச் செல்வதாகச் சொன்னதாக தலைமை ஆசிரியை சொன்னதை நம்பி மிக ஆவலாகக் காத்திருந்தாள் மாலு. காலம் போனதுதான் மிச்சம். சித்தப்பா வருவதாக இல்லை. பள்ளியே காலியாகிவிட்டது. வேறு வழியில்லாமல் சித்தப்பாவின் முகவரியை வாங்கிக் கொண்டு, (முகவரி குறித்துக் கொள்ளும் வயது கூட இல்லை அவள் இந்த ஆசிரமத்திற்கு வந்த போது) தலைமை ஆசிரியர் வழிச்செலவிற்காகக் கொடுத்த சொற்ப பணத்துடன் பேருந்து ஏறினாள் மாலு என்கிற மாலதி! எதிர்காலம் பற்றிய பல கனவுகளும், கற்பனைகளும் உடன்வர மணித்துளிகள் நிமிடங்களாக சுருங்கிப்போய, சித்தப்பா இருக்கும் திருப்பூர் நகரை வந்து சேர்ந்து விட்டது பேருந்து.

 

இந்த 10 ஆண்டுகளில் ஊரே சுத்தமாக மாறித்தான் போயிருந்தது. இடையில் இரண்டு முறை சின்னம்மா வீட்டிற்கு கூட்டிவந்தார்கள். மகன் திருமணத்தின் போது தன் அக்கா மகள்களாவது உடன் இருக்க வேண்டும் என்று நினைத்து ஆசிரமத்திலிருந்து கூட்டி வந்து 4 நாட்கள் வைத்து அனுப்பியது லேசாக நினைவில் இருந்தது..

 

சித்தப்பா வீடு இன்று மாடி வீடாக மாறியிருந்தது. ஓட்டு வீடாக இருந்தது இன்று  தார்சு கட்டிடமாக உயர்ந்து நின்று கொண்டிருந்தது. வாசலில் போய் மணியை அமுக்கியவள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியதாகியது. சித்தப்பாவையும், அண்ணன்கள் இரண்டு பேரையும் பார்க்கப் போகிறோம் என்று மனதிற்குள் பட்டாம்பூச்சியாய் ஒரு படபடப்பு. உடன் இருந்த ஒரே சொந்தமான அக்காவும் மணம் முடித்து போனவுடன், ஆசிரமத்தில் உடன் இருந்த தோழிகளும், ஆசிரியைகளுமே உறவாகிப் போனாலும், இன்று இரத்த சம்பந்த உறவுகளை பார்க்கப் போகிறோம் என்ற உணர்வே உற்சாகத்தைக் கொடுத்தது. ஆனால் நடந்தது என்னவோ வேறு.

 

கதவை திறந்து வெளியே வந்தவர் சித்தப்பாதான் என்பதை பார்த்தவுடன் புரிந்து கொண்டாள். வருடம் பல கடந்தாலும், அந்த முறுக்கு மீசையும், பரந்த நெற்றியின் குங்குமக்கீற்றும், முன் மண்டையின் வழுக்கையும் அப்படியே மாறாமல் இருந்ததால் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. பார்த்தவுடன், இத்தனை வருடம் தன்னைக் கண்டுகொள்ளவே இல்லையே என்ற கோபம் கூட மறந்து போனவளாக, தேக்கி வைத்திருந்த அத்துனை பாசத்தையும் ஒருசேர ஒன்று கூட்டி, “சித்தப்பா.. எப்படியிருக்கீங்க…” என்ற நடுங்கும் குரலில் கேட்டாள். கண்களில்  தளும்பிய கண்ணீரால் பார்வையும் மங்கியது. தன்னைவிட்டுப் பிரிந்த தாய் தந்தையரைப் பார்ப்பது போன்று ஒரு பரவசம்.

 

ஆனால் சித்தப்பாவிடம் எந்த சலனமும் இல்லாமல்.. “ம்ம்ம். எப்ப வந்தே” என்ற பதில் அதிர்ச்சியாக இருந்தாலும், தன்னைப் பார்த்து ரொம்ப வருஷம் ஆனதாலே ஒரு வேளை அடையாளம் தெரியாமல், வேற யாரோன்னு நினைச்சிருப்பாரோ என்ற சந்தேகத்தில்

 

“சித்தப்பா, என்னைத் தெரியலியா. நான் மாலு. பார்த்து ரொம்ப நாள் ஆனதால அடையாளம் தெரியலியா.. ?”

 

“ம்ம்..ம்ம்.. எல்லாம் தெரியுது. அதுக்கென்ன இப்ப. இங்க எதுக்கு வந்தே..?”

 

என்று கேட்டவுடன் நொடியில் கனவுக்கோட்டை இடிந்து தரைமட்டமானது. தலை சுற்றி கண்ணைக்கட்டிக் கொண்டு வந்தது. ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனவள், மறு நொடி சமாளித்துக் கொண்டு கேட்டை அப்படியே பிடித்துக்கொண்டாள். உள்ளே செல்ல தோதாக கையில் எடுத்து வைத்திருந்த பழைய ஹோல்டால் பையை அப்படியே கீழே வைத்துவிட்டு செய்வதறியாது, சித்தப்பா முகத்தையே பாவமாகப் பார்த்தாள். ஆனால் இருதயத்திற்குப் பதிலாக கல்லை வைத்து படைத்திருப்பானோ இரக்கமற்ற அந்த ஆண்டவன் என்று எண்ணுமளவிற்கு இறுகிய அந்த முகத்தில் இரக்கமே மருந்திற்கும் இல்லை. பாசத்தில் உருகி கண் மண் தெரியாமல் வந்தவளுக்கு, இப்போது நிலைமை தெளிவானது. சட்டென்று சமாளித்துக்கொள்ளும் வல்லமையைத்தான் பட்டபாடுகள் பரிசாகக் கொடுத்திருக்கின்றனவே. ஒன்றும் பேசாமல் அந்த கல்லுளி மங்கனின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். உள்ளே வாம்மா என்று ஒரு வார்த்தைக் கூப்பிட்டால்கூட எல்லோரையும் பார்த்துவிட்டு வந்தவழியே திருப்பிப்போய் விடலாம் என்று ஏங்கியது அந்த பேதை மனது. ஆனால் துளியும் இரக்கமின்றி,

 

”உனக்கு உங்க சின்னம்மா வீடு தெரியுமா…?”

 

“இல்லை சித்தப்பா மறந்து போச்சி.நம்ம வீட்டு… இல்லையில்லை (நாக்கைக் கடித்துக் கொண்டு) உங்கவீட்டு அட்ரசே மறந்து போய் மேடம்கிட்டதான் வாங்கிட்டு வந்தேன். இப்ப ஊரெல்லாம் நிறைய மாறிப்போச்சா.. அடையாளமே தெரியல.” என்றாள்.

 

”சரி ஒரு பத்து நிமிஷம் இங்கேயே நில்லு, நான் போய் டிரஸ் பண்ணிக்கிட்டு வந்து உனக்கு காட்டறேன். “ என்று சொன்னவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் விடுவிடுவென உள்ளே சென்றான்

 

வாசலிலேயே கூனிக் குறுகி நின்றவளுக்கு ஏனோ அப்பா, அம்மாவின் நினைவு வந்து அழுகை பொத்துக்கொண்டு வந்தது. விதியை நொந்து கொள்வதைத்தவிர வேறு ஏதும் செய்ய முடியாத நிலையில் வந்த அழுகையை அடக்கிக்கொண்டு வருவதை எதிர்கொள்ளத் தயாரானாள். சற்று நேரத்தில் வந்த சித்தப்பா என்ற அந்த மனிதப்பதர் அவளை “இங்க வா, வந்து வண்டீலே ஏறு. உன்னோட சின்னம்மா வீட்டைக் காட்டறேன். அங்கதான் உனக்கு சரிப்பட்டுவரும்.”

 

பதில் ஏதும் பேச நா எழாத நிலையில் மௌனமாக அனைத்தையும் முழுங்கிவிட்டு நித்சலமான மனதுடன் ஏறி பைக்கின் பின்புறம் அமர்ந்தாள். கண்ணைக்கட்டி யாரோ ஒரு காட்டிற்குள் கொண்டு செல்வதுபோல இருந்தது. ’நடப்பது நடக்கட்டும், எல்லாம் நன்மைக்கே’ என்று ஆசிரமத்தில் சுவரில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் வசனம் நினைவிற்குவர அமைதியாக இருந்தாள்.

 

வாழ்க்கையில் எளிதாகக் கிடைப்பது எதுவும் நிலைத்து நிற்காது. திடீரென்று பைக் ஒரு பிள்ளையார் கோவில் முன்பாக நின்றது. பார்த்த மாதிரிதான் இருந்தது. புதிதாக புணரமைக்கப்பட்டிருந்ததால் நினைவில் வர மறுக்கிறது.

 

“இறங்குமமா கீழே. அதோ அந்த தெருக்கோடீல தெரியுது பாரு, ஒரு ரோஸ் கலர் பெயிண்ட் அடிச்ச வீடு, அதுதான் உங்க சின்னம்மா வீடு. கிட்ட போனாக்கா அடையாளம் தெரிஞ்சிடும். அவிங்க உன்னை நல்லா பாத்துப்பாங்க. கவலைப் படாம போ.” என்று சொல்லிவிட்டு சட்டைப்பையில் இருந்து ஒரு நூறு ரூபாய் தாள் எடுத்து அவள் கையில் திணித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டான்.

 

நேராக பிள்ளையார் கோவிலினுள் சென்றவள், அமைதியாக தரிசனம் முடித்து, சற்று நேரம் தியானத்தில் அமர்ந்தவுடன் உள்ளம் தெளிவானது. அன்று பூத்த மலராக, நம்பிக்கையுடன் எழுந்து மளமளவென நடக்க ஆரம்பித்தாள். மனதில் இருந்த நம்பிக்கை ஒளி சின்னம்மாவின் வீட்டுடன் சேர்த்து தம் எதிர்காலத்திற்கும் வழி காட்டத்துவங்கியது.

 

தொடரும்.

Series Navigationகரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?நினைவுகளின் சுவட்டில் (101)
author

பவள சங்கரி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *