நிழல்

This entry is part 8 of 23 in the series 14 அக்டோபர் 2012

வீட்டில் இருப்பது, களத்தில் இருப்பது, அலுவலில் முனைவது, அலுவலகம் செல்வது இவை யாவுமே வெவ்வேறானவை. கவனம் மட்டுமே தொடர்ச்சி உள்ளது. இதையேல்லாம் பழகிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் குறைவாக இருக்கும் போது வெற்றிக்கான இடைவெளி குறைகிறது.

குழந்தையின் அறை, மற்றொரு படுக்கை அறை, ஹால் கிட்டத்தட்ட எல்லா இடத்திலும் துணிகள், நோட்டுப் புத்தகம் அல்லது புத்தகம், ஸ்பூன், உதிரியான உணவுத் துணுக்குகள் என விதம் விதமான குப்பைகளாய், பார்க்க சகிக்க இயலாது இருந்தது. ரவிக்கு இவற்றைப் புறக்கணித்து கைவசமுள்ள வேலையை கவனித்து மேற் செல்லும் கலை பழகி இருந்தது.

காரை ‘சர்வீஸு’க்கு விட்டிருந்த ‘காரேஜ்” திறந்து அவர்கள் பதில் சொல்ல குறைந்த பட்சம் பதினோரு மணியாவது ஆகும். இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது. காலப் பொழுதில் பொதுவாக புதிய வாடிக்கையாளர், புதிய முயற்சி, புதிய திட்டம் அனேகமாக அவன் எடுப்பதில்லை. கார் இல்லாமற் போகும் ஒரிரு நாட்களுக்கு ஏற்ற வேலை தான் கைவசம் இருந்தது.

மொபைலைக் கையில் எடுத்த பின் அதைத் திரும்பக் கீழே வைத்து விட்டு தான் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லும் “லேப் டாப்” வைக்கும் பையைச் சோதனை செய்தான். பிறகு தனது பர்ஸை எடுத்து, ஆராய்ந்து ஒரு துண்டு சீட்டை எடுத்தான். சண்முகம் அய்ர்ன் என்று ஒரு ‘மொபைல்’ எண் குறித்து வைக்கப் பட்டிருந்தது. உணவு மேஜை மீது அதை வைத்து எண்ணைத் தொடர்பு கொள்வதற்குள் அது பறந்தது.

எங்கே பறந்து போனது என்றே தெரியவில்லை. இங்கும் அங்கும் பார்வையால் அலசினான். மேஜை, ஃப்ரிட்ஜ் இவற்றின் கீழே குனிந்தும் பார்த்தான். எங்கேயும் காணவில்லை. ஏற்கனவே வீட்டில் சின்னச் சின்னக் குப்பைகள் இருந்தன. கவனக் குறைவாக இருப்பது என்பது ரவி அனேகமாய்த் தவிர்த்து விடுவது. எவ்வளவு திறமை இருந்தாலும் கவனக் குறைவு அவை எல்லாவற்றையும் நீர்க்க அடித்து விடும். இப்போது அந்த சீட்டைத் தேடி, காலைப் பொழுது உற்சாகத்தை வீணடித்துக் கொள்ள விரும்பவில்லை.

வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே இறங்கி குடியிருப்பின் கீழ்த்தளத்தில் தன் கார் நிறுத்தும் இடத்தை அடைந்தான். அப்போது தான் காரை ‘காரேஜில்’ விட்டிருப்பது நினைவுக்கு வந்தது. இரண்டு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்து வர மறந்தது அடுத்த சறுக்கல். லிஃப்ட்டை நோக்கி நடந்தான். ‘பவர் கட் ஸார்’ செக்யூரிட்டி நினைவு படுத்தினார். மூன்று மாடி ஏறுவதற்குள் மூச்சு வாங்கியது மட்டுமல்ல, கடுமையாக வேர்த்து விட்டது. வீட்டில் ‘இன்வர்ட்டர்’ போட்டிருந்ததால் மின் விசிறி இயங்கியது. ஒரு நிமிடம் காற்று வாங்கி ஆசுவாசப் படுத்திக் கொண்டான். சாவிகள் மாட்டும் கொக்கி வரவேற்பறையின் மூலையில் இருந்த புத்தக அலமாரியின் பக்க வாட்டில் இருந்தது. ஆனால் சாவி அங்கே இல்லை.

இரண்டு சக்கர வாகன சாவியைத் தேடும் படி தான் ஆகி விடுகிறது. கார் வாங்கச் சொல்லி ரகுதான் பரிந்துரைத்தான். முதலில் மலைப்பாக இருந்தது. ஆனால் இப்போது இரண்டு சக்கர வாகனம் ஒரு தொல்லை என்னும் அளவு அதைத் தவிர்த்தே பழகி விட்டது. ஒரு கிலோ மீட்டர் அல்லது இரண்டு என்னும் அளவில் போகும் போது எப்போதாவது எடுக்கும் வழக்கம் வந்து விட்டது. ரகு கூறியது போல் காரில் சென்றபடி பிஸினஸ் பேசுவது, லேப் டாப் உபயோகிப்பது, கஸ்டமரைப் பார்க்கும் போது வேர்த்து வழிந்து போய் நிற்காமல் பந்தாவாக சென்று பேசுவது எல்லாவற்றிற்குமே மிகவும் உகந்தது கார். போட்ட காசுக்கு மேலேயே திரும்பி வரும் என்றான் ரகு. அது நிரூபணமானது.

படுக்கையறையில் அலங்கார மேஜையின் இழுப்பறையில் தேடினான். இல்லை. “டெஸ்க் டாப்” க்ம்ப்யூட்டர் அருகே தேடினான். இல்லை. புத்தக அலமாரியின் மூலைகளில் தேடினான். இல்லை. ‘ஃப்ரிட்ஜை’த் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தான். தோளில் ‘லாப் டாப்’ பையை மாட்டிய படி கிளம்பினான்.

தனது குடியிருப்புக்கு வெளியே வந்து நின்ற போது தெருவில் கார்கள் மட்டுமே ஊர்ந்து கொண்டிருந்தன. ஆட்டோ எதுவும் தென்படவில்லை. பிரதான சாலையை நோக்கி நடையைக் கட்டினான். குளிர் வசதி உள்ள காரில் சென்று பழக்கம். வெய்யிலில் நடப்பது மிகவும் தண்டனையாயிருந்தது. சட்டைக்குள்ளே ஊசியாய் குத்தியது வெப்பம். பிரதான சாலையை அடையும் போது சட்டை தொப்பலாக நனைந்து விட்டது. அந்த சாலையைக் கடந்து எதிர்ப்பக்கத்தில் ஆட்டோ பிடிக்க வேண்டும். ‘பவர் கட்’ டால் ‘சிக்னல்’ இயங்கவில்லை. பாதசாரியாக சாலயைக் கடந்து பழக்கம் இல்லாததால் மற்றவர் அளவு துணிந்து புகுந்து புறப்பட இயல்வில்லை. புகையும் தூசியும் இரைச்சலுமாய் சாலையைக் கடப்பதற்குள் எரிச்சல் மிகவும் அதிகரித்தது. 108 ஆம்புலன்ஸ் ஒன்று ஸைரனுடன் விரைய வாகனங்கள் சற்றே நிதானித்தன. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சாலையைக் கடந்தான்.

ஆட்டோ ‘ஷேர்’ ஆட்டோ எதுவுமே காலியாயில்லை. ஒரு கார் தேவைக்கு மேல் ஹாரன் அடித்து சற்றே தள்ளிப் போய் ஓரமாய் நின்றது. ரவி ஆட்டோவை நோக்குவதில் கவனமாயிருந்தான். மொபைல் ஒலி கவனத்தைக் கலைத்தது. ரகுதான். “பாஸ்… என்ன ரோட்ல நின்னுக்கிட்டிருக்கே?” ரவி எதிர்பக்கம் பார்த்த படி “வேர் ஆர் யூ?” என்றான். “ஸீ டு யுவர் லெஃப்ட்” என்றான் ரகு. தள்ளி நின்ற கார் அதுதான். “புது காரா?” என்றான் ரவி உள்ளே ஏறியபடி. ‘யா. என் ஒயிஃப்காக வாங்கினது” என்றான் ரகு. ” உன் ‘இன்வர்ட்டர் பிஸினஸ்’ எப்படிப் போயிட்டிருக்கு?” என்ற ரவியின் கேள்விக்கு ” எக்ஸல்லென்ட். மெட்ராஸுக்கும் டூ அவர்ஸ் பவர் கட் வந்ததிலேயிருந்து நல்லாவே பிக் அப் ஆயிடுச்சு” என்றான்.

பேச்சுக்கு இடையிலேயும் ரவி தன் இடம் வருவதில் கவனமாக இருந்தான். அடுத்த ஸிக்னலில் ரகுவும் வாகன நெரிசலில் கவனம் செலுத்திப் பேச்சை நிறுத்தினான். தென் சென்னையில் மிகவும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடம் அது தான். அந்த நாற்சந்தி கடந்த உடன் ரவி நன்றி கூறி இறங்கிக் கொண்டான்.

ரவி இறங்கிய இடத்தின் இடது பக்கமாகப் பல சந்துகள் பிரிந்தன. அவற்றில் வணிக வளாகங்கள் கிடையாது. நிறைய குடியிருப்புகள் இருந்தன. பல இரு சக்கர வாகனங்கள் நெரிசல் மிகுந்த நாற்சந்தியின் அனைத்து பிரதான சாலைகளையும் தவிர்க்க இந்தச் சந்துகள் வழியே நெருக்கி அடித்து சுருக்கு வழி கண்டார்கள். இந்த நகரும் மக்கட் தொகையை உத்தேசித்தே ரவி ஸிக்னலுக்கு மிகவும் நெருங்கிய முதல் சந்தின் முனையில் இருந்த ‘அயர்ன்’ கடையைத் தேர்ந்தெடுத்து ஒரு வாரம் முன்பு தனது காப்பீட்டு நிறுவன நீண்ட விளம்பரப் பதாகையை ‘அயர்ன் வண்டியில் மாட்டச் சொல்லிக் கொடுத்திருந்தான். மாட்டியவுடன் முதல் மாதம் 600 ரூபாய் அடுத்த மாதம் முதல் 750 ஆறு மாதம் ஆனால் ஆயிரம் என்று ஒப்பந்தம் வேறு செய்திருந்தான். இன்னும் மாட்டவில்லை. அன்றே ஒரு தச்சருடன் வர எண்ணி இருந்தான். ஆள் கிடைக்கவில்லை. ஆனால் நான்கு ஆணி அடிக்கும் அந்த வேலையை அந்த அய்ர்ன் காரரே செய்ய இயலும். ஏன் மாட்டவில்லை என்பது புரியவில்லை. 1000 ரூபாய் விரைவில் என்பதை நினைவு படுத்த வேண்டும்.

‘அயர்ன்’ காரரைக் காணவில்லை. அந்தச் சாலையிலேயே நிழல் உண்டென்றால் அது அந்த அயர்ன் வண்டியின் மேலே வேய்ந்திருந்த கீற்றுக் கூரை தான். வண்டிக்கு உள்ளேயும் வண்டிக்கு அருகில் இருந்த ஒரு பிளாஸ்டிக் நாற்காலியிலும் பல பாலிதீன் பைகள், கட்டையைக் கைப்பிடியாகக் கொண்ட ரெக்ஸின் பைகளில் துணிகள் இருந்தன. இஸ்திரிப் பெட்டி திறந்து கிடந்தது. அதன் வெண்கல அடிப்பகுதி பளபளத்தது. சற்று நேரம் கடை அருகே வெய்யிலில் நின்றான். பிறகு பிளாஸ்டிக் நாற்காலிகளில் இருந்த துணிப் பைகளை எடுத்து வண்டிக்குள் வைத்து ‘மொபைலை’ எடுத்து ‘ஈமெயில்’ புதிதாக வந்திருக்கிறதா என்று பார்த்தான். மனம் மலரும் வண்ணம் அவன் ஒரு மாதமாகப் பின் தொடர்ந்த புதிய வாடிக்கையாளர் பெரிய தொகைக்கு பாலிஸி எடுக்க ஒப்பி இருந்தார். வேறு சிலருக்கு நினவூட்டும் விதமாக மெயில் அனுப்பினான். ‘மியூச்சுவல் ஃபண்ட்’ டில் ஒருவர் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி இருந்தார். அவரது மொபைல் எண் அவரது முதல் மெயிலில் இருந்தது. அவருக்கு டெலிபோன் அழைப்பு செய்த போது காலை நேரத்திலும் ஆர்வமாக நிதானமாகப் பேசினார். உற்சாகமாகப் பேச்சைத் தொடர்ந்த போது “யாருயா… எந்திரி…” என்று தோளில் தட்டியவரை எரிச்சலுடன் நிமிர்ந்து பார்த்தான். “இன்னா லுக் உடறே..” என்று அதட்டியதும் எழுந்து நகர்ந்து சென்று உரையாடலை முடித்து விட்டு வந்தான். ‘ஒரு போர்டைக் கொடுத்து உங்க வண்டியிலே மாட்டச் சொல்லி இருந்தேன்…” என்று இழுத்தான். ” இன்னா போர்டு… கரியே கெடக்கலே… அலைஞ்சிட்டு வந்தா லார்டு மாதிரி குந்திக்கினு…” ”இன்ஸூரன்ஸ் கம்பெனி போர்டுங்க….” என்றான் ரவி.. வண்டிக்கிக் கீழே குனிந்த அயர்ன் காரர் “இத்தா…எடுத்துக்கினு போ… இத்தை நீ கொடுத்த நாள்ளேயிருந்து ஒரே பேஜாரு.. இன்னிக்கிக் கரியே கெடக்கல… சாவுக் கிராக்கி..” என்றார். ரவி மெளனமாக அதை வாங்கிக் கொண்டு நடந்தான். சாலையைக் கடக்கக் காத்திருந்த போது அதைத் தலைக்குமேல் பிடித்துக் கொள்ள நிழலாயிருந்தது.

—-

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -6இடைவெளிகள் – 12: மண்ணும் மனிதர்களும் இடைவெளிகளும்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *