பிரசித்தி பெற்ற “எமராலாட் என்க்ளேவ் ” வின் வீதியை எவர் கடந்தாலும் ரங்கநாதனின் பங்களாவை பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் பொறாமை எட்டிப் பார்க்காமல் போகாது.. ரங்கநாதனுக்கு ஆசை ஆசையாக அவரது மூத்த மகன் கணேஷ் கட்டிக் கொடுத்த அலங்கார பங்களா வீட்டில் அவரும், அவரது மனைவி மைதிலியும் கூடவே வேலைக்குப் போக வேண்டிய நிர்பந்தம் இல்லாவிட்டாலும் பிடிவாதமாக “விப்ரோ”வில் வேலை பார்க்கும் சுயமரியாதைப் பெண்மணியாக மகள் துளசி…மட்டும். கூடவே இவர்களுக்கு சமையல் வேலைகள் செய்ய வேதாமாமி.. இந்த நான்கு பேர்களுக்காக இவ்வளவு பெரிய பங்களாவா…! என்று வாய் பிளப்பவர்களும் உண்டு. தன பிள்ளை கணேஷ் பிஸினசில் கொடிகட்டிப் பறப்பதற்க்கான ஒரே அத்தாட்சி இந்த வீடு தான்.இதில் மைதிலிக்கு மனசு கொள்ளாத பெருமை.
தோட்டத்தில் மருதாணிச் செடி நட்சத்திரக் குவியலாகக் கொத்துக் கொத்தாகப் பூத்து காற்றோடு விளையாடிக் கொண்டிருந்தது. அதன் மென்மையான இனிய மணம் வீட்டிற்குள் நுழைந்து ஒவ்வொரு அறைக்குள்ளும் சென்று கைகுலுக்கிச் சிரித்தது . படுக்கையறை ஜன்னலில் இளம் பச்சை நிறத் திரைச்சீலை “என்னை விடேன்..” என்று ஜன்னலின் பிடியில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு ஓட “பட பட” வென்று காற்றோடு தகராறு செய்து கொண்டிருந்தது. காலை இதமான வெய்யில் பால்கனி வழியே நுழைந்து நன்றாக உறக்கத்திலிருந்த துளசியின் நெற்றியில் முத்தமிட்டுச் சூடேற்றியது. இதற்கெல்லாம் எதற்கும் அசையாத துளசி கனவுலகில் சஞ்சரித்தவளாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
பெரிய ஹாலில் அலங்காரமாய் இருந்த ஊஞ்சலில் ரங்கநாதன் அமர்ந்ததும் அது ஆடியபடியே கிரீஸ் போடாததை நினைவு படுத்தி …”கிரீச்……..கிரீச்…..
சமையலறையிலிருந்து “ப்ரீத்தி மிக்ஸி “தான் பதிலாக உறுமியது. மைதிலிக்கு இன்னைக்கு சமயலறையில் தான் காலை டூட்டி. மதிய விருந்துக்காக ரங்கநாதன் தன் பால்ய நண்பன் சுந்தரத்தை சாப்பிட கூப்பிட்டிருந்தார். ஒரு வழியா மைதிலியை சம்மதிக்க வைத்து சமைக்க வைப்பதற்குள் ஏண்டா…சாப்பிடக் கூப்பிட்டோம்னு மனசுக்குள் இருந்தது இவருக்கு..
நேற்று தற்செயலா “நீல்கிரீஸுக்கு ” சாமான் வாங்கப் போனபோது பில்லிங் கவுன்டர் அருகில் நின்றிருந்த சுந்தரத்தைப் பார்த்து ஆச்சரியத்தில் திகைத்துப் போன வைத்தியநாதன்…நீங்க….நீ..நீ
ஹாய் ….ரங்கா..நீயா? நான் சுந்தரம்டா….என்னை மறந்துட்டியான்னு கவுன்டரை விட்டு ஓடி வந்து கட்டிக் கொண்டவனின் மலர்ந்த முகத்தில் இளமை முகத்தையும் கூடவே ஒரு தயக்கத்தையும், பயத்தையும் காண முடிந்தது இவரால்.
“நான் தான் இங்க ஃப்ளோர் மேனஜர்” ஆமா…..நீ எங்க இங்க…இத்தனை வருஷம் கழிச்சு தர்ம தரிசனம்…? நம்பவே முடியலை…உன்னை இங்கே சந்திப்பேன்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை… என்று ஆச்சரிய மிகுதியில் தத்தளித்த சுந்தரத்திடம்.
துளசி….இங்க தான் “விப்ரோ”வில் வேலை பார்க்கறா….அதான் நாங்களும் இங்கயே வீடு கட்டிண்டு வந்தாச்சு..”எமரால்ட் என்க்ளேவில்” தான் இருக்கோம்..நம்ம கதையை இங்க வெச்சு பேசண்டாம்…ஒண்ணு செய்….நாளைக்கு லஞ்சுக்கு குடும்பத்தோட ஆத்துக்கு வந்துடு என்ன….இந்தா என் ஃபோன் நம்பர்…அப்பறமா ரிலாக்ஸ்டா கால் பண்ணு… உன்னப் பார்த்தது ரொம்ப சந்தோஷம் என்றவர் பிரிந்த உறவு சேர்ந்த மகிழ்வில் வீட்டுக்குள் நுழைந்ததும், மைதிலி…ஒரு குட் நியூஸ் என்று சந்தோஷத்தை பங்கிட்டார்.
உனக்கு சுந்தரத்தை ஞாபகம் இருக்கோ…? என்று கேட்டதும்..
அதெப்படி மறக்க முடியும்? நீங்க தான் அப்பப்போ அவரைப் பத்திப் பேசிண்டே இருப்பேளே…..ஆமா அவருக்கென்ன ?.
இப்போ கடையில் வெச்சு சுந்தரத்தைப் பார்த்தேனாக்கும். என்னமா மாறிப் போயிட்டான் தெரியுமா? ஆனாலும் அவனை என்னால அடையாளம் கண்டு பிடிக்க முடிஞ்சுதுன்னாப் பார்த்துக்கோயேன்…எங்க மனசை. அவனும் அப்படித்தான்…ஓடி வந்து கட்டிண்டான்..நாளைக்கு அவனை கல்யாணி குழந்தைகளோட ஆத்துக்கு லஞ்சுக்கு வர சொல்லி கூப்பிட்டேன்….. வருவான் என்று நிறுத்தி ஆசவாசப் படுத்திக் கொண்டார்.
நாளைக்கா..? சாப்பிடக் கூப்பிட்டேள்..அட …நாறாயணா…! நாளைக்கு சண்டே ஆச்சே…வேதாமாமி சமைக்க வரமாட்டாள்னு தெரியாதா உங்களுக்கு..?
அதனால என்ன கல்யாணி…உன் கையால சமையேன் …அவனைப் பார்த்ததும் எனக்கு நீயே ஞாபகத்துக்கு வரலை….அதுக்கப்பறம் தான் வேதாமாமி… சண்டே…இதெல்லாம். என்றார் இவர்.
நன்னாருக்குப் போங்கோ…நேக்கு சமையலெல்லாம் மறந்தே போச்சு. எப்பவோ விட்டாச்சு. உங்களைத்தான் சக்கரை வண்டி ஏத்தி வெச்சுண்டு எதையும் திங்க விடாம வாயைக் கட்டிப் போட்ருக்கே…? எனக்கும் முன்ன மாதிரி விருந்து உபசாரமெல்லாம் பண்ண முடியாது. ஏதோ உபாயமான்னா செய்யலாம். கையும் காலும் முன்ன மாதிரி காத்திரமா இருந்தாச் சரி. நமக்கே நித்தியபடிக்கி ஓட்ஸ் கஞ்சியும், புல்கா ரொட்டியும் மட்டும் பண்ணிக்க முடியாமத் தானே சமையலுக்கு ஆளை போட்டுருக்கோம். இந்த லட்சணத்தில் விருந்து சமைக்க யாரால முடியும்? நானே ஞாயித்துக் கிழமையானா ஏதோ ஒரு ரசத்தை வெச்சு ஒப்பேத்திண்டு இருக்கேன். என்னால நாளைக்கு ஒண்ணும் முடியாது என்று மக்கர் செய்தவள், வேணும்னா அவரைத் திங்கட்கிழமை வரச் சொல்லுங்கோளேன் என்றாள் . அவள் கவலை அவளுக்கு.
புரியறது மைதிலி….முடிஞ்சா… செய் இல்லாட்டா விட்டுடு.. அவன் இங்க வக்கணையாச் சாப்பிடவா வரான். இருக்கவே இருக்கு சாப்பாடு. என்றவரைப் பார்க்க மைதிலிக்கு பாவமாக இருந்ததோ என்னவோ சரின்னா, அவர் வரபடிக்கு வரட்டும். ரொம்ப வருஷமாச்சு அவாளையெல்லாம் நேராப் பார்த்து நம்ம மனுஷா தானே. ஒரு காலத்தில் நீங்க அவாத்தில் தானே பழியாக் கெடந்திருக்கேள், உங்கம்மா கதை கதையாச் சொல்லியிருக்கா..என்றவள் “நாளைக்கே லஞ்சுக்கு வரட்டும்…” என்று சம்மதித்தாள்.
ரொம்ப சிரமப்படாமல் சாதாரணமா எப்பவும் போல சமையல் பண்ணு போதும். எக்ஸ்ட்ராவா ஒரு பால் பாயசம்….வடை மட்டும்… என்று மெனுவை பெட்டிஷன் போட்டார்.
“இதிலெல்லாம் சர்க்கரை ஜாஸ்தி…. ஐயாவுக்கும் வேணுமாக்கும் பால்பாயசம்…” என்று மைதிலி கேலி செய்து சிரித்துக் கொண்டாள்.
இதன் பிறகு ரங்கநாதன் நாற்பது வருடங்களுக்கு முன்னால் தன் ஞாபகக் குதிரையை விரட்டி ஒட விட, அது நொடியில் நாற்பது வருடங்களைக் பின்னோக்கிக் கடந்து சென்று நின்றது.
நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுலேர்ந்து சேர்ந்து படிச்சோம்..சுந்தரம் ரொம்ப நன்னாப் படிப்பான். அந்தக் காலத்துல காலேஜுல அவன் தான் கோல்ட் மெடலிஸ்ட். ரொம்ப புத்திசாலி. மூளைக்காரன்னு நான் அவனைக் கேலி பண்ணுவேன். என் அம்மா அவனை அடிக்கடி புகழ்ந்து தள்ளுவாள். எனக்குத் தான் பொறாமையா இருக்கும். எனக்கும் முன்னால அவனுக்குத் தான் நல்ல வேலையும் கிடைத்தது. கை நிறைய சம்பாத்தியம். அப்பவே ஆயிரம் ருபாய் சம்பளம் அவனுக்கு. ஆனா, அவனுக்கும் முன்னால நேக்குத்தான் கல்யாணம் ஆச்சு. நம்ம கல்யாணத்துக்கு அவன் தான் நின்னு எல்லாரையும் கவனித்தான் தெரியுமா..? அவாத்தில் தான் நமக்கு முதல் விருந்து…ஞாபகமிருக்கோன்னோ…
ம்ம்..ம்ம்….லேசா ஞாபகத்துக்கு வரது. அப்போ நேக்கு இருபது வயது தான்….இப்போ வயது அறுபதாகப் போறது.பாதிக்கு மேலே மறந்தே போச்சு… நாற்பது வருஷம் ஒரு கனவு மாதிரி இருக்குன்னா. நம்ம கணேஷை முதன் முதலா ஸ்கூல்ல கொண்டு போய் சேர்த்தது அவர் தானே…? நான் அப்போ ரெண்டாவதா துளசியை பிரசவிச்சுக் கிடந்த நேரம். அவர் மனைவி கல்யாணி தான் கூட இருந்து பார்த்துண்டாள் . இப்போ எப்படி இருக்காளாம் ..? அவாள எல்லாம் பார்த்து முப்பது வருஷத்துக்கும் மேல ஆயாச்சு…? எப்படியோ தொடர்பு விட்டுப் போயி வருஷ காலமாச்சு..இல்லையா? இப்ப எங்கேர்ந்து கண்டு பிடிச்சேள் ..? என்று ஆச்சரியமானாள் மைதிலி.
அவனும் இதே ஊரில் இருப்பது தான் நேக்கு ஒரே ஆச்சரியம். இப்போ நம்ம கணேஷ் சொந்தமா ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி வெச்சு நடத்தறான்னு சொன்னா சுந்தரம் எவ்வளவு சந்தோஷப் படுவான் இல்லையா..?
ஏனோ தானோன்னு இருந்த என்னை ஒரு வழி படுத்தி வாழக் கத்துக் கொடுத்தவனே சுந்தரம் தான். அன்னிக்கு நாம இருந்த நிலைமைல வீட்டுக்கு அட்வான்ஸ், வாடகை ,.கணேசுக்கு கான்வென்ட்ல சேர்க்க ஸ்கூல் ஃபீஸு, உனக்கு டெலிவரி செலவுன்னு எல்லாமாச் சேர்ந்து என் மென்னியைப் பிடிச்சப்போ….நான் பணத்துக்கு என்ன பண்றதுன்னு திகைச்சு போயிட்டேன், அப்போ எல்லாத்துக்கும் அவன் தான் பணம் கொடுத்து உதவினான். எப்பக் கேட்டாலும் முகம் கோணாமல், இல்லைன்னு ஒரு நாள் கூட சொல்லாமல் பணத்தைப் பணம்னு பார்க்காமல் தருவான். அவனுக்கு நான் நிறைய நன்றிக் கடன் பட்டிருக்கேண்டி.. அதான் அவனைப் பார்த்ததும் விட்டுப் போன தொடர்பு கிடைச்ச சந்தோஷம்….நாளைக்கு கண்டிப்பா லஞ்சுக்கு வந்துடுன்னு சொல்லிட்டு வந்தேன்
சமயத்துல உங்க மூளையும் சும்மாச் சொல்லக் கூடாது….. நன்னாவே வேலை செய்யறது. நல்ல வேளையா வரச் சொன்னேள். நேக்கு முடியறதோ முடியலையோ …..முடிஞ்சதை சமைக்கறேன். சுந்தரமண்ணாப் எல்லாம் பொறுத்துப்பார்….என்று புன்னகைத்தவாறு சொன்னாள். முன்பிருந்த “ஆற்றாமை ” அவளை விட்டுப் போயிருந்தது. அதனால் தான் இன்று காலையிலேயே மிக்ஸியோடு போராடிக் கொண்டிருந்தாள் மைதிலி. கரண்ட் இருக்கும்போதே அரைக்க வேண்டியதை அரைச்சு வெச்சுக்கறேன்…என்ற அவள் சொன்னதில் நியாயம் இருந்தது. அப்புறம் கரண்ட் நின்னு போச்சுன்னா சமையலும் நின்னு போயிடுமே !
எழுந்து செல்ல மனமில்லாமல் வைத்தியநாதன் காப்பியை காஷாயம் குடிப்பது போல ஒரே மடக்கில் முழுங்கி விட்டு டம்ப்ளரை “டண்” ன்று டபராவுக்குள் வைத்தார். விறு விறுப்பாக ஒரு செய்தியும் இல்லாத எரிச்சலில்….எப்பப் பாரு..காலங்கார்த்தால.நியூஸ் பேப்பரைத் திறந்தால் போதும்…..கொலை, கொள்ளை, விபத்து..வெடின்னு ன்னு இது மட்டும் தான் பிரதானமா…? டி வி யைப் போட்டாலும் அதிலும் இதே தான் ஒலியும் ஒளியுமாக..!. கலி முத்திடுத்து…குருவாயூரப்பா..
நேற்று சுந்தரத்தைப் பார்த்து விட்டு வந்ததிலிருந்து ரங்கநாதனின் கைபேசி அடிக்கடி பிஸியா இருந்தது. அவருக்கும் திடீரென தனக்கு நாற்பது வயது குறைந்தது போல உணர்ந்தார். எல்லாம் நண்பன் செய்த மாயம்.
கையில் செகண்ட் டோஸ் காப்பியோடு வந்த மைதிலி “என்னன்னா ரொம்ப சந்தோஷமா இருக்கேள் போலருக்கே…பழைய பாக்கி கைக்கு வந்த சந்தோஷமா…? என்று நக்கலாகக் கேட்டுக்கொண்டே ஊஞ்சலில் டங்கென்று அமர.அது…குய்யோ முறையோ என்று ஆடியது. மைதிலி…எத்தனை தடவை சொல்றேன்…பார்த்து..உட்காருன்
என்னன்னா நீங்க?….இங்க என்ன காய்கறியா விக்கறேள். கிலோ கிலோவா பேசிண்டு…..வஞ்சனை இல்லாட்டா உடம்பும் வளருமாம்….அதான்.,….மனசில் எந்த வஞ்சனையும் இல்லாத நல்லதையே நெனச்சுண்டு இருக்கேன்….சந்தோஷமான மனசே உடம்பைப் பார்த்துக்கும்.
அதுக்குன்னு உன்னோட சந்தோஷம் உன் உடம்ப ரொம்ப நன்னாப் பார்த்துக்கறதுடி மைதிலி..அதுக்கு நீ தான் தேங்க்ஸ் சொல்லணம் என்றவரைப் பார்த்து முறைத்துக் கொண்டே….நானும் டயட் இருக்கணும்னு எப்பல்லாம் நினைக்கறேனோ அப்போப் பார்த்து தான் ஏதோ ஒரு பண்டிகை வந்து வாசல் கதவைத் தட்டும்.அப்பறம் சமைச்சது வீணாக்கப் படாதுன்னு பாழாபோனதெல்லாம் பசு மாட்டு வயித்திலன்னு…சாப்ட்டு சாப்ட்டுத் தான் இப்படி. நாளையிலேர்ந்து நான் டயட் தான்…என்று தீர்மானமாக அறிவித்துவிட்டு காப்பியை ரசித்துக் குடித்தாள்.
இத்தோட ஆயிரம் தடவை இந்த அறிவிப்பைக் கேட்டு நேக்கு அலுத்துப் போயாச்சு. கொஞ்சம் மாத்தி யோசி…புண்ணியமாப் போகும் என்று சொன்னவரைப் பார்த்து மைதிலி “உங்களுக்கு இன்னைக்கு ஏக குஷி ” போலிருக்கு… போகட்டும்…..சாப்பிட்டதும் எல்லாப் பாத்திரத்தையும் டிஷ் வாஷர்ல போட்டுடுங்கோ….அதான் உங்க வேலை….என்று சிரித்தாள்.
கொஞ்சம் துளசியை எழுப்பேன் அவளும் நோக்கு கூடமாட கிச்சனில் உதவி செய்வாளே….என்றார்.
வேண்டாம்…வேண்டாம்….குழந்தை ராத்திரில்லாம் வேலை பண்ணிட்டு வந்து தூங்கறா…தூங்கட்டும். நிதானமா எழுப்பலாம் போதும், எல்லாம் நானே செய்துப்பேன் என்றவள் ஊஞ்சலை விட்டு இறங்கி சமையலறை நோக்கி நடக்கிறாள். பாரம் குறைந்த நிம்மதியில் ஊஞ்சல் ஜோராக ஆடியது.
அங்கு ஓரமாக ரோஸ் வுட் டேபிள் மேல் வைத்திருந்த திருவள்ளுவரின் வெண்கலச் சிலை அதன் காலடியில் ஒரு ரோஜாப்பூ. ரங்கா நாதன் மனதுக்குள் சொல்லிக் கொண்டார்..இந்த சிலை இந்தாத்துக்கு வந்து நாற்பது வருஷமாறது. இந்தச் சிலையை அம்மா அடிக்கடி தடவிப் பார்த்துவிட்டு சொல்வாள் சுந்தரத்தை நீ என்னிக்கும் மறக்கக் கூடாதுன்னு.
கல்லூரி நாட்களில் இலக்கில்லாமல் திரிந்து கொண்டிருந்த எனக்கு திருவள்ளுவர், பாரதி, தாகூர், ஷேக்ஸ்பியர், ஷெல்லி என்று அவன் படித்ததை எல்லாம் எனக்கு அறிமுகம் செய்து வைத்தவன் சுந்தரம். அவன் கொடுத்த புத்தகங்கள் தான் இன்னும் என்னோட சொத்துக்களாக அலமாரியில் இருக்கு. பல வருடங்கள் முன் சென்ற மனதை சமையலறையிலிருந்து கம கமவென்று வந்த வாசனை நிஜத்துக்கு இழுத்து வந்து நிறுத்தியது. மைதிலியின் கைமணம் அப்படி.. வீட்டைச் சுத்தமாக அழகாக வைப்பதிலும் அவளது கைவண்ணம் தனி தான்.
கைபேசியில் சுந்தரம் கிளம்பிவிட்டேன் என்று சொன்னது தான் தாமதம்…ரங்கநாதன் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு வாசலுக்கும் உள்ளுக்குமாக நடக்கிறார். அடிக்கடி வந்த அழைப்பில் வழி சொல்லியப்படியே..தன் நண்பனின் வரவை எதிர்பாத்து வாசல் கேட்டுக்கு வெளியே நின்றபடி ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்.
ஜம்மென்று சுந்தரம் புதுக் காரில் வந்து இறங்குவான் என்று எதிர்பார்த்த ரங்கநாதனுக்கு சுந்தரம் பழைய ஸ்கூட்டரில் “டக டக ” என்ற சத்தத்தோடு வந்து நின்றபோது அதிர்ச்சியாக இருந்தது.
அத்தனை பெரிய பங்களாவைப் பார்த்ததும் தனக்குள்ளே கூனிக் குறுகிப் போகிறார் சுந்தரம். நம்ம ரங்கனோட வீடா இது..!இல்லையில்லை….மாளிகை…
வா…வா….என்று ஆசையோடு தோள் மீது கை போட்டபடியே உள்ளே அழைத்துச் சென்று “உட்காரு…எப்படி இருக்கே…ஏன் கல்யாணி குழந்தைகள் யாரும் வரலை..? அவாளையும் அழைசிண்டு வந்திருக்கலாமே…என்று கேள்வி மேல கேள்வி கேட்க, சுந்தரம் திக்கு முக்காடிப் போகிறார்.
ஒவ்வொரு இடமாக நோட்டம் விட்ட சுந்தரத்திற்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. “ரங்கநாதன் நோட்டுக் கீட்டு அடிக்கிறானா என்ன”..? சாமான்யமான விஷயமாத் தோனலையே….இதெல்லாம் எப்படி சாத்தியம்? அவரது மனசுக்குள் இன்னொரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.அது நட்பைக் கடந்து யதார்த்த மனிதனை அவருக்கு நினைவு படுத்தியது. சே …! நீயும் இருக்கியே..யூஸ்லெஸ்..! ஒரு ஒட்டு வீடு கூட உனக்கு இப்போ சொந்தம் .கிடையாது..என்று குத்திக் காண்பித்தது..
உள்ளத்தின் குமுறல் முகத்தில் பிரதிபலித்து விடுமோ என்று பயந்த படியே சுந்தரம் சுதாரித்துக் கொண்டிருந்தார்.
அந்தக் காலத்தில் நான் தான் இந்த அளவுக்கு வருவேன்னு நினைச்சேன் . ரங்கன் கஷ்டப் படுவான்னு தப்புக் கணக்குப் போட்டேன்…இப்போ…காலம் பதில் சொல்கிறது .
நினைக்க நினைக்க நெஞ்சுக்குள் பக பக வென்று ஏதோ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது, இனியும் இங்கு இருப்பது ஆபத்து….தன முகமோ…வார்த்தையோ உள்ளத்தைக் காட்டிக் கொடுத்து விடும்….! பேசும் எந்த வார்த்தையிலும் பொய் ஒளிந்திருக்கும். எல்லாம் நடிப்பாகத் தான் இருக்கும்.
தான் ரங்கநாதன் நன்னா இருக்கணும்னு வேண்டிண்டு இருந்திருக்கேன். ஆனால் அவனோட அதீத வளர்ச்சியைப் பார்க்கும் மனப் பக்குவம் இன்று என்னிடம் இல்லையே…
என்று குமைந்தது உள்ளத்தின் குரல்.
மைதிலி ஆவி பறக்க காப்பியைக் கொண்டு வந்து …”அண்ணா, இந்தாங்கோ காப்பி எடுத்துக்கோங்கோ ….எப்படி இருக்கேள்…? ரொம்ப வருஷம் கழிச்சுப் பார்க்கறோம்….கல்யாணி எங்கே காணோம்…? எல்லாரும் சௌக்கியமா? உங்களை மறுபடியும் இங்கே பார்ப்போம்னு நாங்க நினைச்சே பார்க்கலை….இது தான் சங்கல்பம்ங்கறது…என்று முகம் மலர வரவேற்க, சுந்தரம் மகிழ்ச்சியில், தர்மசங்கடத்தில் நெளிந்தார் .
ரங்கநாதனின் பிரம்மாண்டமான வீடும் , ஹாலில் பெரிய பெரிய வெண்கலச் சிலைகள், தேக்கு மரத்தில் வேலைப்பாடுகளோட இருந்த சோபா செட்டுக்கள், டைனிங் டேபிள், ஆளுரயக் கண்ணாடி அலமாரி, அங்கங்கே இன் டோர் ப்ளாண்ட்ஸ், ஜன்னல் வழியாக வெளியே ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த போன்சாய் மரங்கள், சுவரில் பெரிய பெரிய தஞ்சாவூர் ஓவியங்கள் என்று பார்த்த இடத்திலெல்லாம் பணத்தின் செழுமை தண்டோராப் போட்டது. சுந்தரம்….ஆச்சரியத்தில் வாய் பிளந்து வீடு ரொம்பப் பிரமாதமா இருக்கு.. என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டார்.அவரது கண்கள் மின்னியது.
ரங்கநாதன் வைத்த கண் வாங்காமல் சுந்தரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனதில் மேலோங்கிய சந்தோஷம்….நீண்டகால ஆவல் நிறைவேறிய திருப்தி தெரிந்தது.
கடைசியா நாம எப்போ சந்திச்சோம்? என்று சுந்தரம் கேட்க..
நேற்றுத் தான்….நீல்கிரீஸ்ல…..! என்று சொல்லிச் சிரித்த ரங்கனைப் பார்த்து.
உங்கிட்ட இந்த குறும்பு மட்டும் போகவே இல்ல….”டா…”என்று சொல்லத் தயங்கியது மனது.
நான் ஒண்ணு சொல்லவா.? எனக்கு என்னமோ கண்ணனை வந்து ஏழைக் குசேலன் பார்த்தது தான் இப்போ ஞாபகத்துக்கு வரது..என்று நா தழுதழுக்கச் சொன்ன சுந்தரத்தைப் பார்த்து…
சிரித்துக் கொண்டே…உன் மனசு புரியறதுடா..அந்தக் காலத்துல நம்ம ரெண்டு பேருக்குமே ஓட்டு வீடு தான். ஒண்டுக் குடித்தனம் தான். என்னை நீ இந்த நிலையில் பார்த்தால், அப்படித் தான் தெரியும். ஆனாலும் இதில் எல்லாம் உனக்கும் பங்கு இருக்கு தெரியுமா?
ரங்கா….என்னென்னமோ பேசணும்னு நினைச்சுண்டு தான் வந்தேன்….வீட்டுக்குள்ளே வந்ததும்…எல்லாம் மறந்து போச்சு…தெரியுமா?பேச வார்த்தையே வரலை.நீ…வா…போ….டா…ன்னு ஒருமையில் பேசக் கூடத் தயக்கமா இருக்குங்கறேன். நான் நேத்துலேர்ந்து போனில் கூட எப்படி உரிமையோடு பேசினேன்…ஆனா இப்போ….துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்ன சுந்தரத்தின் தோளைத் தட்டி சமாதானப் படுத்திய ரங்கநாதன்….”கூல்…கூல்” என்கிறார்.
ஆனாலும் நீ அப்படியே தாண்டா இருக்கே….ரங்கா…!ஆமா..கணேஷ் எங்கே? இந்தப் படம் துளசி…தானே ?இப்போ என்ன பண்றா…..? ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயாச்சா?
கணேஷ், ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி சொந்தமா வெச்சு நடத்தறான் பெங்களூருல. அவனுகுக் கல்யாணம் கழிஞ்சு ஒரு பொண் குழந்தை இருக்கா. துளசிக்கும் கல்யாணம் ஆச்சு…ஆனால்..என்னமோ அவளுக்கு சரிபட்டு வரலைன்னு திரும்ப வந்துட்டா. அது அவ இஷ்டம்..அவ.முடிவு..நாம என்ன சொல்லி அவள் வாழ்க்கையில் தலையிட முடியும்? இப்போ விப்ரோவில் வேலை பார்க்கிறாள். ராவில்லை பகலில்லைன்னு ஓட்டம் தான் அவளுக்கும்… பாவம்.
எனக்குத் தான் சக்கரை வந்து படுத்தறது. நீ தான் பார்த்தியே மைதிலி….பகவான் புண்ணியத்தில் நன்னா இருக்கோம்.
வாங்கோ …நேரமாச்சு சாப்பிடுண்டே பேசலாமே ….என்று மைதிலி சாப்பிட அழைக்கிறாள்.
எழுந்தவருக்கு திருவள்ளுவரின் சிலை கண்ணில் படுகிறது.இது ஞாபகம் இருக்கோ? என்று ரங்கநாதன் கேட்க..
ம்ம்ம்…..உன்னோட கல்யாணத்துக்கு என்னோட பரிசு…! இன்னும் இதை நீ பத்திரமா வெச்சுருக்கியே…சந்தோஷமா இருக்கு ரங்கா.
என் உள்ளத்துல உன்னோட நினைவில்லாமல் எந்தக் காரியமும் ஆரம்பமானதே இல்ல தெரியுமா? என் அம்மா உன்னைப் புகழும் போதெல்லாம் நான் பொறாமைப் படுவேன். நீ கூட சொல்லுவியே….பொறாமையா இருந்தா அதைப் பெருமையா மாத்திக்கோடான்னு… அதெல்லாம் அறியாத பருவம். இல்லையா? நீ சொல்லித் தந்த எத்தனையோ விஷயங்கள் என் வாழ்க்கைக்கு உபயோகமா ஆகியிருக்கு. அப்போல்லாம் நான் உனக்குத் தான் மானசீகமா நன்றி சொல்வேன். எதற்கும் ஆசைப்படாத மனதை என்னுள் விதைத்தவனே நீ தான். கல்யாணம்..குழந்தைகள் …குடும்பம் இதெல்லாம் தான் நம்மை இத்தனை தூரம் பிரித்து வெச்சது.
சாப்பிட அமர்ந்ததும், சொல்லு சுந்தரம்..]நீ எப்படி இருக்கே…? உன் வாழ்க்கை எப்படி ?
நாம நினைப்பது போல எலாம் வாழ்க்கை அமைஞ்சுடறதில்லை …மூத்த பெண் வித்யாவைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு இன்னும் நிமிரவே… முடியலை எனக்கு. நித்ய கண்டம் பூரண ஆயுசுன்னு தான் அவ வாழ்க்கை ஓடிண்டு இருக்கு. கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்தால் தான் அவளோட வாழ்க்கை வண்டி ஓடும். பணம் தான் அங்கே அச்சாணி. நானும் கொடுத்துக் கொடுத்து போண்டியாயிட்டேன். இதே கவலைல கல்யாணிக்கு டிப்ரஷன். அதுக்குத் தான் இப்போ ட்ரீட்மெண்ட் பண்றேன். யார் எதைப் பேசினாலும் எரிஞ்சு விழுவா…நீ பார்த்த கல்யாணி எல்லாம் இல்லை. இப்போ அவ…காட்டேரி ! என்ன பண்ண..மன நோய்.. என் மாமியார் தான் கூட இருந்து கவனிச்சுகறா பாவம்.
வயசான காலத்தில் அவாளுக்கும் சிரமம் தான். கவலை தான் என்ன செய்ய ? டாக்டர் சரியாகும்னு சொல்லியிருக்கார். பாப்போம். பகவான் விட்ட வழி.
என்னண்ணா சொல்றேள் …கல்யாணிக்கா இந்த நிலை….? மைதிலி பரிமாறிக் கொண்டே ஆதங்கத்தோடு கேட்க.
ஆமாம்….அவள் பையன் அருண் மேல நிறைய அன்பும் நம்பிக்கையும் வெச்சிருந்தா…அவன் காதல்..ஊதல்.ன்னு ஜாதி விட்டு ஜாதில கல்யாணம் பண்ணீண்டு கடைசில அதுவும் சரியில்லாமல் கோர்ட்டு வரை வந்து இப்போ அவன் தனியா நிக்கறான். ஒழுங்கா வேலையும் இல்லை. முப்பது வயசுல அருண் ஒண்ணுமில்லாம நிக்கறானேன்னு வேற கவலை அவளுக்கு. எதைச் சொல்ல? எதை விட.?..நாற்பது வருஷக் கதை. இப்போ ஆத்தில் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு பக்கமாத் திரும்பிண்டு நிக்கறது. ஏதும் சரியில்லை. நான் வி.ஆர்.எஸ். வாங்கிண்டு வந்த பணம் எல்லாம் போச்சு. வீட்டை வித்தேன். அதுவும் போச்சு. குழந்தைகளால நிம்மதி போச்சு. அதான் நீல்கிரீஸ்ல வேலை கெடைச்சதும் அக்கடான்னு அங்க போயிண்டு வந்துண்டு இருக்கேன். கஷ்ட ஜீவனம் தான். ஆனாலும் வாழணுமே… சொல்லிக் கொண்டே சாப்பிடுகிறார். கண்களில் நீர் துளிர்க்குது.
கைகூப்பிய துளசியை பார்த்து, அப்படியே சின்ன வயசில் பார்த்த மைதிலி மாதிரியேன்னா இருக்கா….என்று ஆச்சரியப் பட்டு போய் சாப்பிட்டு முடித்துவிட்டு துளசியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
துளசிக்கு அவர் பேசப் பேச அவரோட அறிவுத் திறமையைக் கண்டு வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மாடி…பார்க்க எப்படியோ இருந்தாலும் எத்தனை விஷயங்கள் தெரிஞ்சு வெச்சுருக்கார் என்று அவள் மனம் மகிழ்ந்தது.
சிறிது நேரத்தில் அப்போ நான் கிளம்பறேன் ரங்கா…..என்று மைதிலியைக் கூப்பிடு..சொல்லிண்டு கிளம்பறேன்.
இன்னும் கொஞ்ச நேரம் இரேண்டா…அவ்வளவு சீக்கிரமா ஆத்துக்கு போய் என்ன பண்ணப் போறே…?
சின்ன வயசில் அடிக்கடி சுந்தரம் ரங்கநாதனைப் பார்த்து சொன்ன அதே வார்த்தை…தான் ஆனால் இங்கு சொன்னது ரங்கநாதன்.
இருவரும் சேர்ந்து சிரித்துக் கொண்டே…வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு…ம்ம்..நேக்கு சந்தோஷமாருக்குடா..நீ அமோகமாயிருக்கே…என்று வாய்விட்டு சொல்லி மகிழ்ந்தார் சுந்தரம்.
அம்மா அவரோடப் பார்வையே சரியில்லை….நம்மாத்தை பார்த்துப் பொறாமை…அவரோட கண்ணுலேயே கொப்பளிக்கறது….பார்த்தியா? உனக்குத் தெரியலையா ..? ஏன்…உள்ளெல்லாம் அழைச்சுண்டு போய் இந்தப்பாக்கு கொஞ்சம் கூட…என்று அலுத்துக் கொள்ளும் துளசியைப் பார்த்து..
ஆமா…ஆமாம்….நானும் தான் கவனிச்சேன். நீ பேசாம இரு கொஞ்ச நேரம். அப்பா காதில் விழுந்து வைக்கப் போறது. அப்பறம் அப்பா வருத்தப்படுவார்.நாமெல்லாம் வரதுக்கு முன்னாடியே உங்கப்பாவுக்கு அவர் தான் சிநேகம்.அவராலத் தான் நாம இந்த அளவுக்கு முன்னேறி வந்திருக்கோம். நீ பிறந்ததும் அப்பாவுக்கு அடுத்த படியா உன்னைத் தூக்கி உன் கழுத்தில் தங்கச் சங்கிலி போட்டு..துளசின்னு பேர் வைங்கோன்னு சொன்னவர் இவர் தான். அப்பாவோட இந்த அமோக வளர்ச்சியை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். அதான் ..மற்றபடி தங்கமான மனிதர் தான்…! நன்னாப் பாரு அவர் கண்ணில் பாசத்தைத் தவிர வேற தெரியாது என்று மகளை அடக்கினாள்.
துளசி தனது தவறை உணர்ந்தவளாக….சாரிம்மா….! என்றாள்.
திடீரென ரங்கநாதன் ஒரு கவரை எடுத்து …இந்தா இதை வேண்டாம்னு சொல்லாதே வெச்சுக்கோ…இனி உன் கவலை எல்லாம் தீர்ந்ததுன்னு நெனைச்சுக்கோ. நான் இருக்கேன் உனக்கு. என்று சுந்தரத்தின் கையில் திணிக்கிறார்.
என்ன…இது .பணமா..? இதைக் கொடுத்து நம் நட்பை முறிக்காதேடா..பணமோ, கடனோ..அன்பைக் கெடுக்கும் அப்பறம் நீ எவ்வளவு தந்தாலும் என் தேவை கூடீண்டே தான் போகும்…மனசால நாம ரெண்டு பேருமே இப்போ ஒரே நிலைமையில் தான் இருக்கோம். நம்ம சிநேகிதத்துக்கு அடையாளமே நாம ரெண்டு பேரும் உள்ளத்தில் சமமா இருக்கணும்ங்கறது தான்.
வருஷம் எத்தனை போனால் என்ன….? இந்த வாழ்க்கைல நமக்கு உறவு இந்த சிநேகம் தானேடா சுந்தரம்…அன்னிக்கு நீ நன்னா இருந்தே….எனக்கு செஞ்சே…இப்போ நீ நன்னா இருக்கணும்னு நான் செய்யறேன். வேண்டாம்னு சொல்லாதே….வாங்கிக்கோ…என்று மீண்டும் அவரது பாக்கெட்டில் வைத்துத் திணிக்கும் ரங்கநாதனைத் தடுத்து வேண்டாண்டா…உன்கிட்டயே ..இருக்கட்டும்..என்று கௌரவமாக ஏற்க மறுக்கிறார் சுந்தரம். அதிலும் அவருக்குப் பெருமை இருந்தது.
பட்டம் உயர உயரப் பறக்கலாம் ஆனால் கண்ணுக்கே தெரியாமல் நூலிழை ஒரு கையில் இருக்குமே அது போலத் தாண்டா இதுவும்…பாசம்… புரிஞ்சுக்கோ…என்று ரங்கநாதன் சொல்லியப்படியே சுந்தரத்தின் தோளைத் தட்டிக் கொடுக்கிறார்.
என் மனசுக்குள்ள இயலாமை நுழைஞ்சதாலத்தான் என் வாழ்க்கையில இல்லாமை வேகமா நுழைஞ்சுடுத்து. ஆனால் மனசுக்குள்ள என்னைக்குமே பொறாமை நுழைஞ்சதில்லைடா என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டார். உள் மனசு பொய்..பொய்…என்று கத்தியது.
உன்னை நேக்குத் தெரியாதா? என் முன்னால நீ ஏன் உன்னை ஏழைக் குசேலனாப் பார்த்துக்கறே? கர்ணனோட கவசகுண்டலமாப் பாரேன். அது தானே கர்ணனுக்கு கௌரவம்…! என்று சொல்லி மீண்டும்…இதை மட்டும் வாங்கிக்கோடா….வேண்டாம்னு சொல்லாதே…என்று கையில் திணித்தார்… ரங்கநாதன்.
மேலும் வேண்டாம் என்று சொல்லாமல்….அந்தக் கவரை வாங்கிக் கொண்டு பத்திரப் படுத்தியபடியே நன்றியோடு பார்க்கிறார் சுந்தரம்.
ஏழைக் குசேலனாக தன்னை எண்ணிக் கொண்டு அந்த பிரம்மாண்டமான வீட்டுக்குள் நுழைந்த சுந்தரம் விடை பெற்றுத் திரும்புகையில் கவசகுண்டலங்கள் அணிந்த கர்ணனைப் போல கம்பீரமாக நடந்து வந்து அவனது இரும்புக் குதிரைக்கு அருகில் வருகிறார். துருப் பிடித்த குதிரை…அந்த வீட்டின் திருஷ்டி பரிகாரமாகத் தெரிந்தது அவருக்கு.
சுந்தரத்தின் உள்ளத்தில் இத்தனை ஆணடுகளாக நுழைந்து ஆட்டிப் படைத்த “இயலாமை…முயலாமை…இல்லாமை…
சுந்தரத்தையே பார்த்துக் கொண்டிருந்த ரங்கநாதன்….உன்னோட உள்ளத்து ஆமை ஒடுங்கிடுத்து….இப்போ என்னோட உள்ளத்தில் “செய்நன்றி மறவாமை” நுழைஞ்சுடுத்து…என் குடும்பத்துக்கு நீ சமயத்தில் எவ்வளவு உதவி செஞ்சுருக்கே…..அதை நான் மறந்தால் மனுஷனே இல்லை. என்னோட இந்த பிறவிக்கும் அர்த்தமே இல்லை…என்று தன கண்களில் துளிர்த்து வழிந்த கண்ணீரை விரலால் தட்டினார் ரங்கநாதன்.
நானே…..வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டப் படறேனே…..பாவம் ரங்கநாதன் எங்கே..? எப்படி..? கஷ்டப்படறானோ….அவன் நன்னா இருக்கணும்னு இத்தனை வருஷமாப் நான் பண்ணின பிரார்த்தனை எதுவும் வீணாகலை. அவனையாவது பகவான் சௌக்கியமா வெச்சுருக்கானே…இப்படி அவனைப் பார்த்ததும் தான் என் மனசுக்கு புதுத் தெம்பே வந்தது….நினைத்தபடியே தன் ஓட்டு வீட்டை நோக்கி சந்தோஷமாக நிம்மதியோடு புறப்பட்டார் சுந்தரம்.
பொறாமை நுழைந்த உள்ளத்தோடு பங்களாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர், ரங்கநாதனின் பரிவையும் பாசத்தையும் முழுமையாகப் பெற்றுத் திரும்புகையில் தனக்குள் நுழைந்த பொறாமையையும் அங்கேயே கழட்டிப் போட்டு விட்டு நிம்மதியாக தன் ஸ்கூட்டரில் ஏறினார் சுந்தரம்..
==============================
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 7. சுந்தரராமசாமி – ஒரு புளியமரத்தின் கதை.
- இலக்கு
- தமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….
- மரண தண்டனை- நீதியின் கருநிழல்
- தாகூரின் கீதப் பாமாலை – 42 அணைந்து போனது என் விளக்கு … !
- பழமொழிகளில் விருப்பமும் விருப்பமின்மையும்
- நாம்…நமது…
- மரண தண்டனை, மனசாட்சி, புரட்சியாளர்கள், அறிவு ஜீவிகள்
- நீ நதி போல ஓடிக் கொண்டிரு (ஆசிரியர் :- பாரதி பாஸ்கர்).. ஒரு பார்வை.
- தளபதி .. ! என் தளபதி ..!
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -38
- நினைவுகளின் சுவட்டில்(104)
- நதியும் நானும்
- விருப்பும் வெறுப்பும்
- நம்பிக்கை ஒளி! (9)
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 47) ஓர் உடன்படிக்கை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -5
- அக்னிப்பிரவேசம்-12
- கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா
- ஸ்கைப் வாயிலாக கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங்கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு!
- அடங்கி விடுதல்
- ஆமைகள் புகாத உள்ளம் …!
- நம்பிக்கை என்னும் ஆணிவேர்
- சன் ஆப் சர்தார் ( இந்தி )
- கவிஞர் சிற்பியின் சில படைப்புகள்
- குரு
- என்னைப் போல் ஒருவன்
- பிஞ்சு மனம் சாட்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்பு
- நன்னயம் – பின்னூட்டம்
- மரபும் நவீனமும் – வளவ.துரையனின் ‘ஒரு சிறு தூறல்’