ஆங்கிலப் படம். பலரும் அருமை என்று கூறக் கேட்ட என் கணவர், எங்களையும் அதைப் பார்க்கச் செய்ய வேண்டும் என்று துடித்தார். ஞாயிறன்று மாலைக் காட்சி பார்க்க வேண்டும் என்று தயாரான போதும், மதியத் தூக்கத்தின் காரணமாகப் போக முடியாததால், நல்ல இனிய காற்றினை சுவாசிக்க நடைபயிலச் சென்ற போது, திடீரென முடிவு செய்து இரவு 10 மணி ஆட்டத்திற்குச் சென்றோம். மிகச் சிலரே அரங்கில் இருந்தோம்.
படம் ஆரம்பிக்கும் முன்பே சென்று விட்டதால், குழந்தைகள் சற்றே பொறுமையற்று இருந்தனர். படம் போட்டதும், அனைவருக்கும் ஒரு ஆச்சரியம். பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் இனிய தமிழ்ப் பாடல். ஒரு மரத்தடிப் பிள்ளையார் என்று படம் ஆரம்பம் ஆனது. 1970களின் பாண்டிச்சேரியும், கதையின் நாயகனின் பள்ளி வாழ்க்கையும், உலகம் முழுதும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் படத்தில் வருவது, சற்றே பெருமிதம் கொள்ள வைத்தது.
லைஃப் ஆப் பை, பையின் வாழ்க்கை என்ற படம், கதை நாயகனான பை மூலமாக கடலில் கவிழ்ந்த கப்பல் விபத்திலிருந்து தப்பித்ததைக் கதையாகச் சொல்லப்படும் படம். ஆசியாவின் ஒரே ஆஸ்கர் இயக்குநரான அங் லீ, தைவானில் பிறந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்து, பல அருமையான படங்களை செய்த பின், யான் மார்டல் 2001ல் எழுதிய இந்தக் கதையை படமாக்க எண்ணி, வேலையைத் தொடங்கியது ஜனவரி 2011. இந்தியாவில் விண்ணப்பித்திருந்த 3000 பேர்களில், முத்தான கதாநாயகனாக சூரஜ் சர்மாவைத் தேர்ந்தெடுத்தார். பல்வேறு பருவத்திற்கு பல்வேறு ஆட்களைக் காட்டுவதால் பையாக மட்டுமே நால்வர்.
கனடா நாட்டில் வாழ்ந்து வரும் பை ஒரு கதாசிரியருக்குத் தன் கதையைச் சொல்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. கடவுள் மேல் நம்பிக்கை கொள்ள அவனது கதை உதவும் என்று பையின் மாமா கூறியதால் கதாசிரியர் பையைக் காண வருகிறார். உணவை பரிமாறி, உண்டு கொண்டே கதை சொல்லப்படுகிறது.
பாண்டிச்சேரியில் வாழும் மிருகக்காட்சி சாலை வைத்திருப்பவரின் மகனாக வாழும் பை, தான் கடவுளைப் பற்றி எப்படி தெரிந்து கொண்டான் என்பதை விளக்குவது அருமை. முதலில் இந்துக் கடவுளான கிருஷ்ணர், பிறகு ஏசு, பின் அல்லாவை அவன் எப்படி அறிந்து கொண்டான் என்பதை விளக்குகிறான். குழந்தையாக அனைத்து மதத்தையும் விரும்பும் அவனுக்கு, அவன் தந்தை எடுத்துக் கூறும் விளக்கம், புலியை அருகில் காண விரும்பிய மகன் செய்த தீரமான செயலை, தவறென உணர்த்த கற்பிக்கும் பாடம், அனைத்தும் மகனுக்கு தந்தை எப்படி அறிவுரையால் புரிய வைக்க முடியும் என்று விளக்குகிறது.
கப்பல் மூழ்கிய பின் தப்பிக்கும் பை தன்னுடன் இருக்கும் வரிக்குதிரை, மனிதக்குரங்கு, கழுதைப் புலி, வங்காளப் புலி ஆகியவற்றுடன் செய்யும் சாகசங்கள் தான் கதையின் முக்கியம்சம். முப்பரிமாணத்தில் படத்தைக் காணும் போது, நாமே கடலில் சிக்கி, சாகசங்கள் செய்வது போன்ற உணர்வு. சில விஷயங்கள் சற்றே மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும், வரைகலை அருமையிலும் அருமை.
இந்தப் படம் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கத் தக்க வகையில் உள்ளது. குழந்தைகளுக்கு விலங்குகளுடன் பையின் அனுபவங்கள் பிடிக்கும். பெரியவர்கள் கடவுள் நம்பிக்கைப் பற்றிக் கூறும் செய்திகள் அசை போட வைக்கும்.
சிறுவன் பை, நீச்சலை விரும்பும் மாமாவிற்குப் பிடித்த பிரான்சில் இருக்கும் நீச்சல் குளத்தின் பெயரான பிசின் மாலிடர் படேல் என்று பெயர் பெறுகிறான். புpசின் என்று சொல்லை சிறுநீர் கழிப்பதுடன் ஒப்பிட்டு, மற்ற மாணவர்கள் கேலி செய்வதைத் தவிர்க்க, சிறுவன் கணிதத்தில் வரும் பை என்ற எழுத்துதான் தன் பெயர் என்று பள்ளியில் தன் பெயருக்கு அர்த்தம் காட்டுகிறான். மிருகக்காட்சி சாலை வைத்திருக்கும் தந்தை, மகன், தனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துக் கடவுளையும் விரும்பி, கடவுள் நம்பிக்கை கொண்டு செயல்படுவதைக் கண்டு அறிவுரை கூறுகிறார். பூங்காவில் இருக்கும் புலியைப் பக்கத்தில் காண விரும்பும் சிறுவன் பை, அதற்கு மாமிசத்தை தன் கைகளால் தர முயல்கிறான். கடைசி நேரத்தில் அதைத் தடுத்து, புலியின் குணத்தை விளக்க, ஒரு ஆட்டை கதவருகே கட்டி, அதை புலி எப்படி அடித்துத் தின்கிறது என்று காட்டுகிறார்.
பாண்டிச்சேரியில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதும், மிருகக்காட்சி சாலையை மேலும் நடத்த முடியாது என்பதை உணர்ந்து, அதிலிருக்கும் விலங்குகளை ஐரோப்பிய நாடுகளுக்கு விற்க கப்பலில் புறப்படுகின்றார்கள். அப்போது, கடலில் வரும் புயல் காரணமாக, கப்பல் கவிழ நேர்கிறது. புயல் சத்தத்தைக் கேட்டு, வெளியில் அதைக் காண, எதேட்சையாக வெளியே வரும் பை, ஆச்சரியகரமாக அந்த விபத்திலிருந்து தப்பிக்கிறான். படகில் ஏறிய போது, வரிக்குதிரை அதில் விழுகிறது. கழுதைபுலியும் புலியும் படகில் இருக்கின்றன. சற்றே புயல் தணியும் போது, மனிதக்குரங்கு வாழைப்பழத் தார் மூட்டையின் உதவியுடன் தப்பித்து படகருகே வருகிறது. பை அதைக் காப்பாற்றுகிறான்.
விலங்குகளின் குணங்களை அறிந்து பை, படகின் ஒரு நுனியில் தொங்கிக் கொண்டே தன் உயிரை காப்பாற்றிக் கொள்கிறான். கழுதைப்புலி பசி வந்ததும், வரிக்குதிரையை அடிக்கிறது. பிறகு மனிதக்குரங்கையும் கொல்கிறது. கோபம் கொண்ட பை, கழுதைப்புலியைக் கொல்கிறான். இறுதியில் புலியும் அவனும் படகில். புலியிடமிருந்து தப்பிக்கும் அதே தருணத்தில், அதையும் கவனித்தும் கொள்கிறான். படகின் நுனியில் கயிற்றைக் கொண்டு, சிறு தோனியைச் செய்து கொண்டு மிதக்கிறான். மழை நீரைக் குடித்தும், சைவமாக இருக்கும் அவன், மீன்களை உண்டு பழகுகிறான். புலிக்கும் மீன்களை உணவாகக் கொடுத்து அதன் உயிரைக் காக்கிறான். தன் அனுபவங்களை எழுதிக் கொண்டே நாட்களைக் கழிக்கிறான். கடந்த நாட்களை கோடு போட்டு எண்ணிக் கொண்டே கழிக்கிறான்.
மறுபடியும் புயல் வர, முயன்று தப்பிக்கிறான். கடைசியில் ஒரு தீவிற்கு வந்து சேர்கிறான். காலையில் அருமையாக இருக்கும் தீவு, இரவில் இரசாயன மாற்றத்தால் உயிர்கள் கொல்லப்படுவதை அறிந்ததும், அந்த இடத்தை விட்டு அகல்கிறான். அந்தத் தீவை வெகு தொலைவிலிருந்து பார்க்கும் போது பார்க்கடலில் படுத்திருக்கும் விஷ்ணுவைக் போன்று ஒரு நொடி காட்டி, கடவுள் அவனைக் காப்பாற்றுகிறார் என்று காட்டுகிறார் இயக்குநர். ஒரு கப்பல் தூரமாகத் தெரிந்ததும், தான் இருப்பதை உணர்த்த பல உத்திகளை செய்து பார்க்கிறான். பயன் அளிக்காது, சோர்வுறுகிறான். இறுதியில் 227 நாட்கள் கடல் வாழ்க்கைக்குப் பிறகு, மெக்சிகோ கரையோரம் ஒதுங்குகிறான்.
உயிர் பிழைத்த புலி காட்டைப் பார்த்ததும் சென்று மறைகிறது. அதன் பிரிவைத் தாங்காமல் அழுகிறான். பை தப்பிதத்தைக் கேள்விப்பட்டு, கப்பல் எப்படி கவிழ்ந்தது, பை எப்படி தப்பினான் என்று கேட்க நேரில் வந்து சந்திக்கின்றனர் ஜப்பானியக் கப்பல் நிர்வாகத்தார். இந்தக் கதையை அவர்கள் நம்ப மறுக்கின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கும் பை, விலங்குகளை, வரிக்குதிரையை சைவ உணவை உண்ணும் புத்த மத நண்பனாகவும், கழுதைப்புலியை சமையல்காரனாகவும், மனிதக்குரங்கை தாயாகவும், புலியைத் தானாகவும் உருவகப்படுத்திக் கதை சொல்கிறான். அதையும் அவர்கள் முழுமையாக நம்பவில்லை என்பதையும் கூறுகிறான்.
கதையைக் கேட்கும் கதாசிரியர், பையின் குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு அதைக் கதையாக எழுதச் செல்கிறார் என்று கதை முடிகிறது.
பன்னிரண்டு மணியான போதும் ஒருவர் முகத்திலும் தூக்கக் கலக்கம் இல்லாதது பட இயக்கத்தின் தன்மையை விளக்கும்.
முழுமையான முப்பரிமாணத்தில் இந்தப் படத்தைப் பார்த்த பின் கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வி ஆள் மனத்தில் நிச்சயம் ஒரு கேள்வியை எழுப்பும்.
——————
- சீனாவின் மறக்கப்பட்ட குழந்தைகள்
- தலைநகரக் குற்றம்
- திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- இரு கவரிமான்கள் – 2
- குழந்தை நட்சத்திரம் … ! .
- சிறுவர் சிறுகதை: “ ஊனமே ஓடிடு ”
- சாஹித்ய அகாதமியில் கிடைத்த ஒரு நட்பு (2)
- எழுத்துலக வேந்தர் இளம்பாரதி
- நெத்திலி மீன்களும் சுறாக்களும்
- தாகூரின் கீதப் பாமாலை – 45 கானம் பாட வேண்டும்
- Dialogue titled “Martyr Devasahayam Pillai – Myth or Reality” at Nagerkoil
- நிலவொளியில் தன்மீது சித்திரங்களை எழுதிப் பார்க்கும் கவிதை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -8
- கோசின்ரா கவிதைகள்
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து… 9. இந்திராபார்த்தசாரதி – ஆதவன் சிறுகதைகள்
- காதலின் அருமை தெரியாத காட்டுமிருகாண்டிகள்
- சீக்கிரமே போயிருவேன்
- கணித மேதை ராமானுஜன் (1887-1920)
- குயூரியோஸ் அஸ்வினின் ‘ இன்பாக்ஸ் ‘
- அறுவடை
- வால்ட் விட்மன் வசன கவிதை -3 வரலாற்று ஆசான் ஒருவனுக்கு (To a Historian) (1819-1892) (புல்லின்இலைகள் -1)
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -40
- தாயுமானவன்
- அக்னிப்பிரவேசம் – 15
- வாழ்க்கை பற்றிய படம்
- டெல்லி கூட்டு கற்பழிப்பை எதிர்த்த மக்கள் போராட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் எதிர்கொண்டது எப்படி?
- அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீடு.