சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 3

This entry is part 12 of 32 in the series 13 ஜனவரி 2013

இளவரசர் சித்தார்த்தனின் அரண்மனை வளாகத்தின் விருந்தினர் மாளிகைகள் கலகலப்பாக இருந்தன. யயோசதராவின் தாய் தந்தையரான கோலிய நாட்டு மகாராஜா சுப்பபுத்தாவும், மகாராணி பமீதாவும் நூற்றுக்கும் மேற்பட்ட அவர்களது உறவு மற்றும் பணியாளர்களால் மாளிகை களை கட்டி இருந்தது. மகாராணி பஜாபதி கோதமியின் பூஜை அறையிலிருந்து புறப்பட்ட மன்னர் சுத்தோதனர் நேரே விருந்தினர் மாளிகக்குச் சென்றார். ராணி பமீதா அவரை ” வாருங்கள் அண்ணா” என்று வரவேற்றார் “மன்னர் உறங்குகிறார். உங்கள் வம்ச வாரிசும் பேரனுமான ராகுலனின் வரவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்”. தங்கையின் வரவேற்புக்கு அண்ணன் சுத்தோதனர் புன்னகையை மட்டுமே பதிலாக்கினார். “தங்களுடன் மருமகன் சித்தார்த்தனும் வருவார் என்று எதிர்பார்த்தேன் அண்ணா” என்றார் தங்கை. “நலமாக இருக்கிறாயா என் அன்புத் தங்கை பமீதா’ என்று அவரை அணைத்துக் கொண்ட சுத்தோதனர் ” சித்தார்த்தன் வேட்டைக்குப் போயிருக்கிறான் அம்மா. வனவாசிகள் வெகு நாட்களாக அவனை அழைத்தபடி இருக்கிறார்கள்”

“இந்த மழைக்காலத்தில் இளவரசர் ஏன் வேட்டைக்குச் செல்லும் முடிவை எடுத்தார்?”

“சரியாகச் சொன்னாய் பமீதா. என் அனுமதி கிடைக்காது என்று தானே கிளம்பி விட்டான். தூதுவர்களை அனுப்பி இருக்கிறேன். வந்துவிடுவான்”

“தந்தையான மகிழ்ச்சியில் உற்சாகமாகக் கிளம்பி இருப்பார்” என்ற தங்கை அண்ணன் அமர்ந்தவுடன் பக்கத்து இருக்கையில் அமர்ந்தார்.

“மாமன்னர் சுப்பபுத்தா வருகை தந்தது கபிலவாஸ்துவின் பாக்கியம். அவரை வாழ்த்த எண்ணியே வந்தேன்”

“மன்னர் பயணக் களைப்பால் ஓய்விலுள்ளார் அண்ணா. ”

“நீண்ட தூரம் பயணம் செய்து வந்திருக்கிறீர்கள். மன்னர் ஓய்வெடுக்கட்டும். நீங்கள் இருவரும் அவசியம் என்னுடன் பகல் உணவு அருந்துங்கள்”

“தங்கள் ஆணைப் படியே’ என்றார் ராணி பமீதா. “அண்ணா… தாங்கள் அதிகாலையிலேயே ராஜாங்க உடைகளில் இருக்கிறீர்களே. பலநாட்டு மன்னர்கள் வந்திருக்கிறார்களா?”

“ஆம் சகோதரி. ஒவ்வொருவராய் வந்த வண்ணம் இருக்கிறார்கள். மல்லர் தேசத்து சிற்றரசர் பலரும் வந்து போனார்கள். இன்று காலையில் ஒரு மந்திராலோசனை இருந்தது. அதுதான் சீக்கிரமாகவே தயாராகி விட்டேன். மாமன்னர் சுப்பபுத்தா தனது பேரன் தம் ஜாடையிலேயே இருப்பது கண்டு மகிழ்ந்திருப்பாரே?”

“மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். ஆனால் தங்கள் கூற்றுப் படி ராகுலன் எங்கள் மன்னர் ஜாடை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இப்போது அவன் முகத்தோற்றம் சித்தார்த்தனைப் போலவே இருக்கிறது. சாக்கிய வம்சத்து வீரமும் பராக்கிரமும் மிகுந்த ஷத்திரியனாக அவன் வளர்ந்து நிற்பான் ”

“கோதமியும் தங்களை விருந்துக்கு அழைப்பாள். அவசியம் அரண்மனைக்கு வாருங்கள்” என்றபடி மகாராஜா எழுந்திருக்க சேவகர்கள் அங்கங்கே விரைப்பாக நின்றனர்.

“மகாராஜாவும் நானும் தங்களுடன் உணவருந்தும் பெருமைக்காக நன்றி கூறுகிறோம் அண்ணா” என்று இரு கைகூப்பி வணங்கினார் ராணி பமீதா.
******
அகன்றும் நீண்டுமிருந்த இரண்டு வாதா மர இலைகளை இள மூங்கிலிலிருந்து எடுத்த வலிமையான நாரைக் கொண்டு ஒரு வனவாசிப் பெண் கோர்த்துக் கொண்டிருந்தாள்.

வனவாசிகளின் தலைவன் சிம்ஹரூப் “வைராகி மகாராஜா! தாங்கள் இதே போல ஒரு வட்டிலை உருவாக்கக் கற்பதற்கு என்றே இதை எம் குலப் பெண் ஒருத்தி செய்து காட்டுகிறாள்” என்றான்.

சித்தார்த்தனுக்கு அவர்கள் விருந்தோம்பல் மனதை நெகிழ்வித்தது. அவர்கள் உண்ணக் கொடுத்தவற்றில் அபூர்வமான இனிப்பும் புளிப்புமான கனி கிழங்கு வகைகள் இருந்தன. அவர்கள் செய்த மாமிசம் சரியாக வேகவில்லை. மிளகின் காரம் அதிகமாயிருந்தது. சித்தார்த்தனுக்குப் புறைக்கேறி முகம் சிவந்தது. ஒரு குடுவையிலிருந்து தண்ணீர் கொடுத்த படியே “தாங்கள் மன்னர் குலத்தவரா?” என்று வினவினான் சிம்ஹரூப்.சித்தார்த்தன் பதில் ஏதும் சொல்லவில்லை.

“உங்கள் கால்கள் கொப்பளித்துப் புண்ணாகி இருக்கின்றன. நேற்று நீங்கள் உறங்கும் போது பச்சிலையை எங்கள் மருத்துவன் தடவியது கூட தங்களுக்குத் தெரியவில்லை. ஒரு மன்னர் வம்ச விருந்தாளியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் எந்த நாட்டு இளவரசர்?”

“நான் வைராகியாக விழைகிறேன். வனம்,வயல், நகரம், நாடுகள் என நிலமும் அந்தணன, ஷத்திரயன், வைசியன் என மக்களும் பிரிந்து நிற்கிறார்கள். மரணமும், முதுமையும் ஏனோ நம் எல்லோருக்குமே பொதுவாகத்தான் இருக்கின்றன. உங்கள் உணவை உண்ட பின் உங்கள் அன்புக்குக் கட்டுப்பட்டவனாகிறேன். என்றாலும் என் தேடலை நான் தொடர்ந்து நான் செல்ல வேண்டும்.”

“உங்கள் காலில் உள்ள கொப்புளங்கள் ஆறட்டும். தாங்கள் எந்த நாட்டு இளவரசர் என்பதைக் கூறத் தயங்குவது தங்களது பெருங்குலத்துக்கு அழகா? நாளை உங்கள் ஒற்றரும் படைவீரரும் எங்கள் எல்லைக்குள் அத்துமீற அது ஏதுவாகும். ராஜாங்க விஷயங்கள் அறிந்த உங்களுக்கு ஒரு வனவாசியான நான் இதைக் கூறவும் வேண்டுமா? சொல்லுங்கள் தயவு செய்து. தாங்கள் எந்த நாட்டு இளவரசர்?”

“சிம்ஹரூப் … நான் கபிலவாஸ்து இளவரசன் சித்தார்த்தனாக இருந்தேன். இரண்டு நாட்களுக்கும் முன் திடமான முடிவில் வைராகியாக வேடம் தரித்தேன். என் முடிவில் மாற்றமில்லை. அதே சமயம் உங்கள் குலத்தவருக்கு என்னால் தொல்லையேதும் விளைவதை நான் விரும்பவில்லை. உங்கள் விருப்பப்படியே நான் ஓரிரு நாட்கள் இங்கே தங்குகிறேன். மழை நீர் புகாத ஒரு குகையில் நான் ஒரு ஓவியத்தை வரைகிறேன். அது உங்களுக்கு தொல்லை ஏற்படும் பட்சத்தில் உதவும்”

“தங்களுக்கு ஓவியம் வரையத் தெரியுமா இளவரசர் சித்தார்த்தரே?”

“சிம்ஹரூப்.. நான் இருபத்து ஒன்பது வருடங்களாக இசை, நடனம், ஓவியம் என்று கலைகளில் மூழ்கிய வாழ்வில் திளைத்தேன். மறுபக்கம், வில்வித்தை, மற்போர், வாள் சுழற்றும் லாகவம் என ஷத்திரியனாக இருந்தேன். உலகின் நிழலும் உருவும் அசலும் நகலும் உண்மையும் மாயையும் என்ன என்னும் கேள்விகள் என்னுள் எழாத வண்ணம் என்னைக் கட்டிப் போட்டிருந்தார்கள். விடுதலைக்கான முதல் அடியை இப்போதுதான் எடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் அது எத்தனை தூரம எவ்வளவு காலம் எத்தனை போராட்டத்திற்குப் பிறகு எனக்கு லபிக்கும் என்பது தெரியாது. எங்கும் நிறைந்த பரம் பொருளின் திருவுள்ளம் அறிய நான் ஏலாதவனே”

“இளவரசே! நாளை காலை தங்களை குகைக்கு அழைத்துச் செல்கிறேன். தாங்கள் சற்று ஓய்வு எடுங்கள்”

மறுநாள் காலை மரக்குப்பிகளில் பச்சிலைகள், பூக்கள், விதைகள் இவற்றைக் கொண்டு மஞ்சள், நீலம், சிவப்பு, கருப்பு ஆகிய வண்ணங்கள் குழைக்கப் பட்டிருந்தன. சுண்ணாம்பு பற்றி வனவாசிகளுக்குத் தெரியவில்லை. மாக்கல் மட்டுமே வெண்மைக்குப் பயன்படத் தோதாக சித்தார்த்தனிடம் தரப்பட்டது.

ஒரு பெரிய கரித்துண்டால் அன்னை மாயாவின் முகம் கழுத்து கைகளின் வெளிப்புறக் கோடுகளை முதலில் சித்தார்த்தன் வரைந்தான். பின்னர் ஈரக்கையால் பிசிறான இடங்களை அழித்து கோட்டோவியத்தை வடிவமைத்தான். மூங்கிற்குச்சி நுனியில் கட்டிய தளிர் இலைகளைக் குச்சங்களாய்ப் பயன்படுத்தி ஒவ்வொரு வண்ணமாக எடுத்து ஓவியம் உருப்பெற்ற போது வனவாசிகள் வியப்பில் ஆழ்ந்தனர். அன்னையின் முழு வடிவம் தெரிந்ததும் சித்தார்த்தனால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

குகையில் சாரிசாரியாக வனவாசிகள் அழகிய ஓவியத்தைக் கண்டு ரசித்த போது சிம்ஹரூப் தனியே பாறையின் மீது அமர்ந்திருந்த சித்தார்த்தனின் கால்டியில் அமர்ந்து ” சீலரே! உம் அபூர்வத் திறன்களை நான் வணங்குகிறேன். உங்கள், அன்னை, மனைவி, ஒரு வாரமே ஆன கைக்குழந்தை இவர்களை விட்டு விட்டு நீங்கள் வந்தது தகுமா ? என் வனத்தின் மாமன்னராய் இங்கே இருங்கள். உங்கள் மனம் மாறும் போது தாம் தம் நாட்டுக்குத் திரும்புங்கள் ஷத்திரிய குலத் தோன்றலே” என்றான்.

சித்தார்த்தன் சிம்ஹரூப்பின் கண்களை ஊடுருவியபடி “பட்டுத் துணிகளை தான் படுக்கும் மண்ணில் போட்டுத் தலையணையாக்கிக் காவி உடையே மேல் என்று காட்டிய வைராகியை சமீபத்தில் தான் கண்டேன். வீரம் உடல் வலிமை, படைவலிமை என்பது எளிமையான கருத்து சிம்ஹரூப். உண்மையைத் தேட அந்தத் தேடலில் நிலைக்க ஒரு மனத் திண்மை வேண்டும். மாயையை எதிர்த்துப் போராடும் அசலான வீரம் அது. பின் வாங்கும் வாய்ப்பே இல்லை” என்று எழுந்தான்.

கங்கை வரையிலான அடர்ந்த வனப் பகுதியில் சிம்ஹரூப்பும் அவனது படைவீரர்களும் உடன் வந்தனர். ஒரு இடத்தில் பெரிய பாறைகளின் இடைப்பட்டு கங்கையின் குறுகிய ஆனால் சீறிப்பாயும் நீர்வீழ்ச்சி இருந்தது. அந்தப் பாறைகளின் மேல் ஒரு மூங்கிற்பாலம் அமைத்து சித்தார்த்தனை மறுகரை சேர்த்தனர். “இதைத் தாண்டி நாங்கள் வருவதில்லை. எங்கள் ராஜ்ஜிய எல்லை கங்கை நதி” என்றான் சிம்ஹரூப். அவனை நெஞ்சுடன் அணைத்து விடைபெற்றான் சித்தார்த்தன். கையில் அவர்கள் பரிசாகக் கொடுத்த கப்பரையும் பிரிவில் மனமும் கனத்தன.
******
ராகுலன் பட்டு மெத்தையில் தங்கத் தகடுகள் பதித்த மரத் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தான்.

உப்பரிகையில் நின்றபடி சித்தார்த்தன் வரும் வழி நோக்கியபடி நின்றாள் யசோதரா. நான்கு நாட்கள் ஆகிவிட்டனவே. ராகுலன் என்று பெயர் வைத்து எவ்வளவு கொஞ்சி மகிழ்ந்தார். திடீரென வனம் புகுமளவு என்ன மனமாற்றம்? நான்கு நாட்கள் அவரை இதுவரை பிரிந்திருந்ததாக நினைவே இல்லை.

விழிகளில் நீர் திரண்டது. அம்மா எடுத்துக் கூறியது போல தமக்கே வாரிசு வந்ததும் அவருக்குத் தாம் மன்னரானால் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நினைவுக்கு வந்தனவோ? வனவாசிகள் நல்லுறவு பேண என்று போனாரோ? நான்கு நாட்களுக்கு மேலா அதற்குத் தேவைப்படும்?

சாரதி காந்தகன் கண்ணிலேயே ஏன் தென்படவில்லை? மன்னர் அவன் மீது சினந்தார் என்று கேள்விப்பட்டிருந்தாள். மன்னர் எப்படியும் வீரர்களை அனுப்பி சித்தார்த்தனை கொணருவேன் என்றாரே?

“இளவரசி..ராகுலன் பசியில் அழுகிறான்” என்னும் பணிப்பெண்ணின் குரல் கேட்டு உள்ளே விரைந்தாள் யசோதரா.

Series Navigationமுகம்ராம்சரண் ( தெலுங்கு மொழி மாற்றப் படம் )

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *