கலித்தொகையில் தொழில்களும் தொழிலாளரும்

This entry is part 18 of 30 in the series 20 ஜனவரி 2013

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

தொடக்ககால மனிதன் இயற்கையாகக் கிடைத்த உணவினை உண்டு வாழ்ந்தான். இயற்கை உணவினை மட்டுமல்லாது தானே உணவினை உற்பத்தி செய்யும் முறையினையும் மேற்கொண்டான். கால ஓட்டத்தில் தேவைக்கேற்ப பொன் அணிகலன்கள், தங்கும் வீடுகள், ஆடைகள் இவற்றின் மதிப்பு அதிகரித்தது. இவற்றைச் செய்தற்குரிய தொழில் நுட்பங்களை அறிந்தவர்கள் இவற்றைத் தொழிலாகக் கொண்டனர். ஆநிரைகளை மேய்த்தவர்கள் அதில் கிடைக்கும் பால், வெண்ணெய், மோர் இவற்றை விற்றனர். இவ்வாறு  பழங்காலத்தில் பல்வேறு தொழில்கள் வளர்ந்தன. செவ்விலக்கியங்களுள் ஒன்றான கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை பல்வேறு தொழில்களையும் தொழிலாளர்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்துள்ளது. இக்கருத்துக்கள் அத்தொழிலாளர்களின் வாழ்க்கைநிலையினையும், தொழிலாளர்களின் தொழில் திறமையினையும் சித்திரித்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.

கட்டடத் தொழில்

பழங்காலத்தில் குகைகளிலும், மரப்பொந்துகளிலும் வாழ்ந்த மனிதன் தனக்கென இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான். அதன் வளர்ச்சியே அரண்மனைகளும், வீடுகளுமாக உருவாயின. கலித்தொகையில்,

‘‘நிலன் நாவில் திரிதரூஉம் நீள்மாடக் கூடலார்” (கலி.35:17)

என்ற வரியில் நீண்ட மாடங்கள் பற்றிய செய்தி குறிக்கப்படுகின்றது. அம்மாட மாளிகையில்,

‘‘ஆய்சுதை மாடத்து அணிநிலா முற்றத்துள்” (கலி. 96:19)

என அழகுடைய சாந்து பூசப்பட்ட மாடமும் அழகுடைய நிலா முற்றமும் இருந்தது. காற்று வீட்டினுள் வருவதற்கேற்ப காலதற் (சன்னல் – சாளரம்)  அமைக்கப்பட்டு இரட்டைக் கதவுகள் பொருத்தப்பட்டிருந்ததை,

‘‘சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர்சீர்த்தி” (கல்.83-13)

‘‘பெருந்திரு நிலைஇய வீய்கு சோற்று அகல்மனை

பொருந்தி நோன்கதவ ஒற்றிப் புலம்பியாம் உலமா” (கலி.83:1-2)

என்ற கலித்தொகை வரிகள் குறிப்பிடுகின்றன. காற்று வருவதற்கு ஏற்ப சாளரம் அமைக்கப்பட்டு, இரட்டைக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ள வீடுகள் பண்டைத் தமிழகத்தில் இருந்தமையை இக்கலித்தொகை தெளிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வரிகள் தொழிலாளர்களின் தொழில்நுட்பத்தை புலப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

அணிகலன்கள்

உலோகத்தால் செய்யப்பட்ட அணிகலன்களை மக்கள் அணிந்திருந்தனர். ஆண் சுறாமீன் வடிவத்தில் உள்ள மோதிரம்  பற்றியும், ஒளியை உடைய அணிகலன்கள் பற்றியும், பொன்னால் செய்த கனமான காதணி பற்றியும், கிழே தொங்கும் தன்மையுடைய புல்லிகை என்ற அணி பற்றியும், மணிகள் சேர்க்கப்பட்ட மாலை பற்றியும் அறிய முடிகிறது. மேலும், கைக்கவசம், தொடி, பொலன், கோதை, முத்தாரம், கழுத்தணி, வயந்தகம் போன்ற அணிகள் பற்றியும் அதில் செய்யப்பட்ட நுட்ப வேலைப்பாடுகள் பற்றியும் கலித்தொகை குறிப்பிடுகின்றது. இவ்வணிகலன்களை,

‘‘அளிமாற பொழுதின் இவ்ஆயிழை கவினே (கலி-25)

நறா இதழ் கண்டன்ன செவ்விரற்கு ஏற்ப”

‘‘சுறா ஏறுஎழுதிய மோதிரம் தொட்டாள்”

‘‘புனை இழை நோக்கியும்” (கலி.76)

‘‘மாணிழை ஆறாகச் சாறு” (கலி.102)

‘‘கடியவே கனங்குழாஅய் காடுஎன்றார்” (கலி-11)

‘‘ஞால்இயல் மென்காதின் புல்லிகைச் சாமரை” (கலி-96)

‘‘கிண்கிணித் தாரொடு ஒலித்து ஆர்ப்பு ஒண்தொடிப்” (கலி-74)

என அமைந்த கலித்தொகை வரிகள் தெளிவுறுத்துகின்றன. நுட்பமான அணிகலன்களைச் செய்யும் தொழிலாளர்கள் இருந்தமை கலித்தொகை வரிகளால் புலப்படுவது குறிப்பிடத்தக்கது.

குவளை மலர் விற்றல்

மலர்களை மங்கையர்கள் விரும்பித் தலையில் சூடிக் கொள்வர். மங்கையர்கள் சூடும் மலர்களைக் கொய்து விற்பனை செய்யும் தொழிலை மக்கள் செய்து வந்ததை,

‘‘வீங்குநீர் அவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட” (கலி.11)

என கலித்தொகை கூறுகின்றது.

சலவைத்தொழில்

ஆடைகளை சலவைசெய்து கொடுக்கும் தொழிலையும், அத்தொழில் செய்யும் தொழிலாளர்களைப் பற்றியும்,

‘‘சலவைத் தொழிலில் சங்ககால மக்கள் ஈடுபட்டுள்ளதை,

……………………………………………………………ஊரவர்

ஆடை கொண்டு ஒலிக்கும்நின் புலைத்தி’’

என கலித்தொகை  காட்டுகின்றது.

வள்ளிக்கிழங்கெடுத்தல், தேனெடுத்தல்

குறிஞ்சிநில மக்கள் வள்ளிக்கிழங்கினைத் தோண்டியெடுத்தும், தேனெடுத்தும் வாழ்ந்து வந்தனர். இது பற்றிய குறிப்பினைக் கலித்தொகை,

‘‘வள்ளி கீழ்வீழா, வரைமிசைத் தேன்தொடா” (கலி.39)

என்று கூறுகின்றது.

ஆநீரை மேய்த்தல்

முல்லைநில மக்கள் ஆடு, மாடுகளையும் அவற்றைக் காத்து வைத்திருத்தலையும் முக்கியச் செயலாகக் கொண்டு வாழ்ந்தனர் என்பதனை முல்லைக்கலிப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

‘‘தத்தம் இனநிரை

பொழுதோடு தோன்றிய கார்நனை வியனிட புலத்தார்” (கலி-106)

‘‘மேயும் நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோர் (கலி-108)

‘‘பாங்கரும் பாட்டாய்கால் கன்றோடு செவ்வோம்யாம்” (கலி-116)

என்பதன் மூலம் கோவலர்கள் மனைக்கு அருகில் உள்ள புல்வெளிகளுக்குக் கன்றோடு பசுவினையும் சேர்த்து மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர். மேலும் அதனைக் காப்பதற்காக கோவலர்கள் கோலூன்றி நின்றனர் என்பதையும் கலித்தொகை தெளிவுறுத்துகின்றது.

மோர் விற்றல்

முல்லை நில மகளிர் பசுக்களில் இருந்து பெற்ற பாலை மோராக மாற்றி விற்கும் தொழிலில்  ஈடுபட்டனர். ஆயர்குலப் பெண்கள் அருகில் உள்ள சிற்றூரில் மோர் விற்றுத் திரும்பியதை,

‘‘அகலாங்கண் அளைமாறி அலமந்து பெயருங்கால்

அளைமாறிப் பெயர் தருவாய்” (கலி-108)

என்ற வரிகள் காட்சிப்படுத்துகின்றது.

வெண்ணெய் விற்றல்

முல்லை நிலத்துப் பெண்கள் மோரில் இருந்து வெண்ணெய் எடுத்து அதனையும் விற்றனர் எனபதை,

‘‘வெண்ணெய்க்கும் அன்னள்எனக் கொண்டாய் ஒண்ணுதல்”

                                                                          (கலி-110)

‘‘வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே” (கலி-115)

பனங்குருத்தால் பெட்டி முடைதல்

பனை ஓலை, தென்னை ஓலைகளைக் கொண்டு அன்றாடத் தேவைகளுக்குரிய பொருட்களைச் செய்தனர். ஓலைகளைப் பயன்படுத்தி பலவிதமான கூடைகள் செய்தனர். அத்தகைய கூடைகள் ‘புட்பில்’ எனப்பட்டன. இதனை,

‘‘போழின் புனைந்த வலிப்புட்டில்” (கலி-117)

‘‘வரிகூழ வட்டி தழீஇ” (கலி-109)

என்ற முல்லைக்கலி  வரிகள் எடுத்துரைக்கின்றன. முல்லை நில மக்கள் பனைஓலைகளிலும் தென்னை ஓலைகளிலும் செய்யப்பட்ட பெட்டிகளில் நெல்லினைக் கொண்டு சென்றதனையும் கலித்தொகை வரிகளால் அறிய முடிகின்றது.

தினைப் புனங்காத்தல்

குறிஞ்சி நில மக்கள் தினைவிதைத்து அதனைக் காத்தனர். விளைந்த தினைக்கதிரைப் பறவைகள் வந்து உண்டுவிடாமல் இருக்க தினைப்புனங் காக்கின்ற தொழிலை தலைவியும் தோழியும் செய்ததை,

‘‘ஒளிதிகழ் ஞெகிழார் கவணையார் வில்லர்

களிறுஎன ஆ‘ப்பவர் ஏனல் காவலேரே” (கலி-52)

‘‘படிகிளி பாயும் பசுங்குரல் ஏனல்” (கலி-50)

என்று கலித்தொகை காட்டுகின்றது. தினைப்புனங் காக்கும் மகளிர் கவனையும், வில்லையும் கொண்டு களிற்றினை விரட்டி ஆரவாரம் செய்தமையும் தினைப்புனத்திற்கு வருகின்ற கிளிகளைக் கவன் கொண்டு ஓட்டியமையும் இப்பாடல் வரிகளால் நாம் அறிந்து கொள்ளமுடிகின்றது.

வேட்டையாடுதல்

செவ்விலக்கிய காலங்களில் வேட்டைத்தொழில் சிறப்பாக நடந்தது. வேட்டைக்குச் செல்வோர் அதற்குத் தேவையான கருவிகளுடன் சென்று காட்டில் எல்லாத் திசைகளிலும் அலைந்து வேட்டையாடுவதற்குரிய விலங்குகள் உள்ள இடத்தை அறிந்து அவற்றைத் தாக்கினர். வெள்ளை யானை, மான் போன்றவற்றை மக்கள் வேட்டையாடியதை,

‘‘இலங்கொளி மருப்பின் கைம்மா உளம்புநர்

புலங்கொடி கவனையின் பூஞ்சினை உதிர்க்கும்

கொலைவெம் கொள்கையோடு நாயஅகப் படுப்ப

வலைவர்க்கு அமர்ந்தே மடமான்”

என்ற பாலைக்கலி வரிகளின் மூலம் அறியலாம். அம்பெய்து விலங்குகளை வேட்டையாடியவர்கள் எயினர் என்ற பெயரால் வழங்கப்பட்டனர். (எயினர் – அம்பை எய்வதில் வல்லவர்)

ஆறலைக்கள்வர்

பழங்காலத்தில் ஆறலைத்தலும் தொழிலாக இருந்து வந்துள்ளதை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. பாலை நிலம் வழியாகச் செல்லும் வழிப்போக்கர்களிடம் அவர்தம் உடைமைகளைப் பறித்துச் செல்லும் ஆற்றலைக் கள்வர்கள் பற்றிய குறிப்பானது,

‘‘அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர்தாம்

கொள்ளுப் பொருள் இலர்ஆயினும் வம்பலர்

துள்ளுநர்க் கண்மார் தொடர்ந்து உயிர் வெளவலின்” (கலி.4)

எனக் கலித்தொகையில் இடம் பெறுகின்றது.

தோற்பைகள் செய்தல்

கொல்லன் பட்டறையில் பயன்படுத்தப்பட்ட ஊதுலைக் கருவி தோலால் செய்யப்பட்டது. இது மெல்லிய தோலால் செய்யப்பட்டது. இத்தோற்பையை, ‘துருத்தி’ என்று குறிப்பிடுகின்றனர். ஊதுலைக் கருவியைப் போன்று தேவையான அளவிற்குத் தோற்பையைச் செய்து மக்கள் பயன்படுத்தினர். இதனை,

‘‘கழுவொரு சுடுபடை சுருக்கிய தோற்கண்” (கலி.106)

என்ற கலித்தொகையால் அறியலாம். ஆநிரைகள் மேய்க்கச் செல்லும் போது முல்லை நிலக் கோவலர் கழுவோடு சூட்டுக் கோலையும் தோற்பையில் இட்டுச் சுருக்கிக் கட்டிக்கொள்வர் என்பதை இப்பாடல்வரிகள் புலப்படுத்துகின்றது.

தச்சுத் தொழில்

சங்க காலத்தில் மரத்தினைக்கொண்டு கட்டில்களையும் பொம்மைகளையும் செய்யும் தச்சர்கள் வாழ்ந்தனர். அவர்கள் நுடபமாக கட்டில்களையும், பொம்மைகளையும் செய்தனர் என்பதை,

‘‘படைஅமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ

இணைபட நிவந்த நீலமென் சேக்கையுள்” (கலி: 72)

புரிபுனை பூங்காற்றில் பையல வாங்கி (கலி: 80)

கமயரணம் பாயாநின் கைபுனை வேழம் (கல்: 86)

என்ற கலித்தொகைப் பாடல்வரிகள் எடுத்துரைக்கின்றன.

ஆண்களோடு இணைந்து பெண்கள் தாம் அறிந்த தொழிலைச் செய்து தம்குடும்ப பொருளாதார வளர்ச்சியில் பங்கு கொண்டனர். தோல், நூல், பொன், மரம் உள்ளிட்ட பொருட்களால் செய்யப்பட்ட பொருள்களை பண்டைக்காலத் தமிழக மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பது கலித்தொகையால் நமக்குப் புலனாகின்றது. இங்ஙனம் கலித்தொகையானது பழந்தமிழரின் பல்வேறுவிதமான தொழில்களையும், அத்தொழில் செய்த தொழிலாளர்களையும் எடுத்துரைத்து, பழந்தமிழர் பண்பாட்டைக் காட்சிப்படுத்தும் ஆவணமாகத் திகழ்கின்றது.

 

————————————-

Series Navigationதிருப்பூர் அரிமா விருதுகள் 2013அசர வைக்காத பொய் மெய் – மேடை நாடகம்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *