தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
yandamoori@hotmail.com
தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
தன் தாயின் இரண்டாவது கணவனுடைய இரண்டாவது மனைவியின் வீட்டிலிருந்து அவமானத்துடன் திரும்பி வந்த பிறகு சாஹிதி தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டு விட்டாள்.
தாங்க முடியாத அவமானம் என்ற புயலில் சிக்குண்டு அலைந்தது அவள் மனம். எவ்வளவுதான் மறக்க வேண்டும் என்று நினைத்தாலும், ராஜலக்ஷ்மியின் வார்த்தைகளே செவியில் சுழன்று வந்து கொண்டிருந்தன. மம்மிக்கு இந்த விஷயம் தெரிந்தால் எவ்வளவு வேதனைப் படுவாள்? அவள் பரமஹம்சாவை ஆழமாய் நேசிக்கிறாள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட அவமானத்தைத் தான்கிக்கொள்வாளா?
“சாஹிதி! கதவைத் திறம்மா. என்ன நடந்தது என்று சொல்லு.” நிர்மலா வெளியே நின்றபடி கெஞ்சினாள்.
“ஒன்றும் இல்லை அம்மா. அங்கிள் மாலையில் வருகிறேன் என்று சொன்னார். அப்போது பேசிக்கொள்ளலாம்” என்றாள்.
மாலை இல்லை. அன்று பிற்பகல் நேரத்தில் வந்துவிட்டான் பரமஹம்சா. சாஹிதி அவனைப் பார்த்தும் கூட மௌனமாய் இருந்தாள்.
நிர்மலா மட்டும் “நீங்க வர மாட்டீங்களோ, என்மீது கோபம் வந்து விட்டதோ என்று நினைத்தேன்” என்றாள் கண்ணீர் மல்க.
“எனக்குக் கோபமா?” சிரித்தான் அவன். “தெய்வத்திற்கு பக்தர்கள் மீது கோபம் வராது. அவ்வப்பொழுது பாடம் கற்றுத் தரணும் என்று எண்ணி சின்னச் சின்ன தண்டனைகளைக் கொடுப்பார். அவ்வளவுதான். நான் வரும்வரையிலும் நீ சாப்பிட மாட்டாய் என்று எனக்குத் தெரியும். எங்கே, மகளையும் கூப்பிடு. எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்.”
நிர்மலா சந்தோஷமாகப் போய் சாஹிதியைக் கூப்பிட்டாள்.
“எனக்கு வேண்டாம் மம்மி. பசிக்கவில்லை. நீங்க சாப்பிடுங்கள்” என்றாள் சாஹிதி.
“மகளுக்கு என்மீது கோபம் இன்னும் தணியவில்லை போலிருக்கு. பைத்தியக்காரி! நீ சாப்பிடாவிட்டால் நான் பச்சைத் தண்ணீரைக் கூட குடிக்க மாட்டேன். நான் சாப்பிட வில்லை என்றால் உங்க மம்மி எவ்வளவு நாளானாலும் பட்டினி கிடப்பாள். என் காரணமாக உங்க அம்மாவைக் கஷ்டப்படுத்துவது நியாயம்தானா சாஹிதி?”
நிர்மலாவின் பிடிவாதம் பற்றி சாஹிதி நன்றாக அறிவாள். அந்த விஷயம் தெரிந்துதான் அவன் அதுபோல் பயமுறுத்துகிறான் என்று புரிந்தது.
நிர்மலாவுக்கு மட்டும் ‘நீ சாப்பிடாவிட்டால் நான் பச்சைத் தண்ணீரைக் கூட குடிக்க மாட்டேன்’ என்ற வார்த்தைகளே செவிகளில் சுழன்று வந்து கொண்டிருந்தன.
“பார்த்தாயா சாஹிதி! அங்கிள் ரொம்ப வருத்தப்படுகிறார். உனக்காகக் பட்டினி கிடக்கிறார். உன்மீது எவ்வளவு அன்பு பார்த்துக்கொள். எழுந்து வா.”
சாஹிதி வேறு வழியில்லாமல் எழுந்து கொண்டாள். அவள் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்து கொள்ளப் போன பொழுது ‘கொஞ்ச நேரம் உட்கார் சாஹிதி. உன்னிடம் பேசணும்” என்றான் பரமஹம்சா.
சாஹிதி திரும்பவும் உட்கார்ந்து கொண்டாள்.
‘இப்பொழுதெல்லாம் உனக்குக் கோபம அதிகரிக்கத் தொடங்கி விட்டது. என்ன பண்ணுகிறாய் என்றும், என்ன பேசுகிறோம் என்றும் உனக்கே தெரியவில்லை. தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அதிகமாக யோசிக்கிறாய், இல்லையா?”
சாஹிதி பதில் பேசவில்லை. “என்ன பண்ணினாள்?” நிர்மலா பயந்துபோய் கேட்டாள்.
“அனாவசியமாக ராஜலக்ஷ்மியின் மீது கோபம் கொண்டு திரும்பி வந்துவிட்டாள். ராஜலக்ஷ்மி காலை முதல் ஒரே அழுகை. ஒன்றுமே சாப்பிடாமல் அழுதுகொண்டே உட்கார்ந்து இருக்கிறாள்.”
.”நிஜமாகவா? எவ்வளவு கேட்டும் பதிலே சொல்லவில்லை. அவ்வளவு கோபம் வருவானேன்?” நிர்மலா சாப்பிடுவதை விட்டுவிட்டுக் கேட்டாள்.
“நான் ஒன்றுமே சொல்லவில்லை. எல்லாம் அவளேதான் சொன்னாள். கேட்கச் சகிக்க முடியாத வார்த்தைகளைச் சொன்னதால் தாங்க முடியாமல் வந்துவிட்டேன்” என்றாள் சாஹிதி.
“ராஜலக்ஷ்மி ஒன்றுமே சொல்லவில்லையாம். உட்காரவைத்துக் கொஞ்ச நேரம் படிப்பைப் பற்றி கேட்போம் என்று நினைத்தாளாம். முதல் முறையாய் வந்திருக்கிறாள். பூரித்துப் போய்விட்டேன். வீட்டில் புதுப் புடைவை கூட இல்லை. வெறும் கையேடு எப்படி அனுப்புவது? என்று அவள் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போது சாஹிதி கோபித்துக் கொண்டு சொல்லாமல் வந்து விட்டாள். அவள் மனசுக்கு எவ்வளவு கஷ்டம் ஏற்பட்டு இருக்கும்?”
“பொ …ய்..” கத்தப் போனாள் சாஹிதி. வாயிலிருந்து வார்த்தை வெளியில் வரவில்லை.
‘சாஹிதி! நீ… நீ இப்படி நடந்து கொண்டாயா?” நிர்மலா அழுது கொண்டே பாதி சாப்பாட்டில் தட்டிலேயே கையை அலம்பிவிட்டாள்.
“பார்த்தாயா, உங்க மம்மியை எவ்வளவு வருத்தப் படுத்துகிறாய் பார். ரொம்ப தவறு செய்கிறாய் சாஹிதி” என்றான் பரமஹம்சா.
“இல்லை அங்கிள். அந்த ஆண்டீ மம்மியைப் பற்றி ரொம்ப அசிங்கமாய் பேசினாள். இதுதான் உண்மை.” சாஹிதிக்கு துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது.
‘இல்லையம்மா. நீ தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறாய். உடனே போன் பண்ணி சொன்னாள். உனக்குப் போன் பண்ணுவதாய் சொன்ன போது நான்தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நீ அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளணும்.”
“நான் என்ன தவறு செய்துவிட்டேன்? எதற்காக மன்னிப்பு கேட்கணும்?”
“பண்ணியது தவறுதான். அனாவசியமாய் இத்தனை பேரைக் கஷ்டப்படுத்துவது சரியில்லை. என்னுடன் வா . நீ வந்தால் தவிர ராஜலக்ஷ்மி சாப்பிட மாட்டாள்.”
“இந்தச் “சாப்பிடாமல் இருப்பது” என்ற சுழற்சி எப்பொழுது முடிவடையுமோ சாஹிதிக்குப் புரியவில்லை.
“கண்டிப்பாக வருவாள். அவள் அந்த காரியத்தைப் பண்ணாமல் என் மனம் நிம்மதி அடையாது. ப்ளீஸ் சாஹிதி! போய் வா எனக்காக.”
தலை குனிந்த சாஹிதி பரமஹம்சாவுடன் போய் லட்சுமியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். தன்னைப் பார்த்தும் அவள் கண்ணீருடன் வந்து கட்டிக் கொண்டதைப் பார்த்து சந்தேகம் வந்தது.
உண்மையிலேயே அவள் சைகிக் ஆகிவிட்டாளா?
தேவையில்லாமல் தவறாகப் புரிந்து கொள்கிறாளா? அன்றிரவு யோசனைகளால் அலைக்கழிக்கப்பட்டு உறக்கம் வராததால் சாஹிதி தூக்க மாத்திரையைப் போட்டுக்கொண்டாள்.
*****
மறுநாள் அவள் தாமதமாக எழுந்து கொண்டாள். மனம் முழுவதும் உல்லாசமாய் புத்துணர்ச்சியுடன் இருந்தாற்போல் தோன்றியது. நன்றாக தூங்கியதால் வந்த புத்துணர்ச்சி அது.
அன்றைக்கு கல்லூரியில் ஒரு சிநேகிதி சாஹிதியிடம் கேட்டாள். “கொஞ்சம் களைப்பாக தென்பட்டாலும் ரொம்ப புத்துணர்ச்சியுடன் இருக்கிறாயே? என்ன விஷயம்?” என்று கண்ணைச் சிமிட்டிவிட்டு சிரித்தாள்.” ஓஹோ! அதுதானா விஷயம்” என்றாள்.
‘என்ன விஷயம்?” வியப்புடன் கேட்டாள் சாஹிதி.
“தெரியாது போல் பாசாங்கு பண்ணாதே.”
“உண்மையிலேயே தெரியாது. சொல்லு.”
“கஞ்சாதானே?”
“கஞ்சாவா? அப்படி என்றால்?”
“கஞ்சா சாப்பிட்டு இருக்கிறாய். அப்படிதானே?”
‘அப்படி என்றால் என்னவென்று எனக்குத் தெரியாதே?”
அப்பொழுது அவள் சொன்னாள். கல்லூரிக்குக் கொஞ்சம் தொலைவில் மிகச் சாதாரணமாய் தென்படும் சிறிய பெட்டிக்கடையில்ம் ரகசியமாக கஞ்சா கிடைக்கிறது. சிகரெட்டைப் போல் செய்து, அதை புகைத்தால் மனம் எங்கேயோ பறந்து போகும். கல்லூரியில் சில பேருக்கு அந்தப் பழக்கம் இருக்கிறது. மேலும் சிலரை அது மெல்ல மெல்லக் கவர்ந்து கொண்டிருக்கிறது.
சாஹிதிக்கு வியப்புடன், பயமும் ஏற்பட்டது. போதைப் போருட்களைப் பற்றிப் படித்திருக்கிறாள். மாபியா என்றும், இருட்டுலகத்தில் கிடைக்கக் கூடியது என்றும், ரௌடிகளும், கள்ளக்கடத்தல்காரர்களும் தான் அதைப் பயன்படுத்துவார்கள் என்றும் இதுவரை நினைத்திருந்தாள். தன் பெஞ்சியில் உட்காரும் பக்கத்து மாணவ மாணவிகள் கூட இந்தச் சிகரெட்டைப் புகைக்கிரார்கள் என்றால் நம்பவே முடியவில்லை.
“என்ன? புகைத்துப் பார்க்கிறாயா?”
“ஐயோ! வேண்டாம்.”
“முதலில் பயமாக இருக்கும். ஒருமுறை பழக்கம் ஆகிவிட்டால்…”
“ப்ளீஸ்! என்னை விட்டுவிடு. எனக்க இந்த மாதிரி எல்லாம் பிடிக்காது’ என்று சாஹிதி அங்கிருந்து வந்து விட்டாள். வீட்டிற்குத் திரும்பி வந்த போது தாய் மாமாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவள் அந்த உரையாடலை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. “பையன் ரொம்ப நல்ல மாதிரி” என்று காதில் விழுந்ததும் அது தன்னைப் பற்றிய பேச்சுத்தான் என்று தெரிந்து விட்டது.
மற்ற பெண்களைப் போல் “இந்த சின்ன வயதில் எனக்குக் கல்யாணமா?” “சீ… நான் கல்யாணமே பண்ணிக்கொள்ள மாட்டேன். “அம்மாவை விட்டுவிட்டு என்னால் இருக்க முடியாது” என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை.
எப்பொழுது மெடிசினில் சேர முடியாமல் போய் விட்டதோ, அப்பொழுது முதல் அவள் மனதில் விரக்தி குடிகொண்டு விட்டது. பரமஹம்சா மேடிசினில் சேர வேண்டாம் என்று சொன்ன போது, அந்த வாதம் நன்றாக இருப்பது போல் தோன்றினாலும், பி.எஸ்.ஸி.யில் சேர்ந்த பிறகு, தன் பழைய கிளாஸ்மேட்டுகள், தன்னைவிட படிப்பில் பின் தங்கியிருந்தவர்கள் கூட மெடிசினில் சேர்ந்து படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த போது தான் செய்த தவறு நினைவுக்கு வரும்.
பரமஹம்சாவின் மீது கோபம் வரவில்லை. தன்மீதே தனக்குக் கோபம். தான் ஒரு முடிவை எடுத்துக் கொள்வது, பிறகு அது சரி .இல்லை என்று வருத்தப்படுவது. ஏன் எப்போதும் இதுபோலவே நடக்கிறது?
அவளுடைய தவறா அல்லது சுற்றிலும் உள்ள சூழ்நிலையின் தவறா என்று அவளுக்கே புரியவில்லை.
“வரதட்சணை கேட்டதைக் கொடுத்து விடலாம். பையன் நல்லவனாய் இருந்தாள் போதும்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள் தாய்.
சாஹிதிக்கு வரதட்சணை பற்றி தெளிவான கருத்து இருக்கவில்லை. அவளுக்கு இருக்கும் சொத்துக்கு அது ஒரு பிரச்சனையே இல்லை. இருப்பது ஒரே மகள் என்பதால் அதைப் பேச்சே வரப் போவதில்லை.
அடுத்த இரண்டு நாட்களில் திருமணத்தைப் பற்றிய உரையாடல் மேலும் சூடு பிடித்தது. பையன் இன்ஜினியர். கொஞ்சம் ஏழைக் குடும்பம் என்றாலும் நல்ல குடும்பம். பையனுக்கு ஒரு தங்கையும் அண்ணனும் இருந்தார்கள். யூனிவர்சிட்டி ஃபஸ்ட் ஸ்காலர்ஷிப் கிடைத்ததாம்.
சாஹிதி போட்டோவைப் பார்த்தாள். அவளுக்கு தனிப்பட்ட முறையில் எந்த உணர்வும் ஏற்படவில்லை. பையன் நன்றாகத்தான் இருக்கிறான் என்று நினைத்தாள். அதைவிட அவன் யூனிவர்சிட்டி ஃபஸ்ட் வந்தது பிடித்திருந்தது. ஒரு காலத்தில் அவள் அதற்காகக் கனவு கண்டிருகிறாள்.
மறுநாள் பரமஹம்சா வந்தபோது நிர்மலா அந்த விஷயத்தைச் சொன்னாள். ‘சாஹிதிக்கு அதற்குள் கல்யாணமா?” என்றான்.
“உங்களுக்கு அவள் சின்ன பெண்ணாய் தோன்றலாம்.”
“படிப்பு கூட முடியவில்லையே?” என்று ஏதோ சொல்லப் போனான்.
அவன் வார்த்தை முடிவதற்கு முன்பே “நல்ல வரனை பார்த்து வைத்துக் கொண்டால் பரீட்சை முடிந்த பிறகே பண்ணிவிடலாம்” என்றாள் நிர்மலா கெஞ்சுவது போல்.
பிரமஹம்சா மௌனமாய் இருந்துவிட்டு, “சரி ஆகட்டும். பையனை வரவழைத்துப் பார்த்த பிறகு முடிவு செய்கிறேன்” என்றான்.
பக்கத்து அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சாஹிதிக்கு இந்த வார்த்தை ஏதோ போல் ஒலித்தது. ‘பையனை வரவ்ழைப்பதாவது’ என்றெண்ணிக் கொண்டாள்.
அதற்குப் பிறகு தாயும் மாமாவும் பெசிகொண்டதைக் கேட்க நேர்ந்தது. “அவர் ஒரு முறை பையனைப் பார்க்க விரும்புகிறார். வரச்சொல்லி எழுது அண்ணா” என்றாள் தாய்.
“அதற்கென்ன வந்தது? பெண்ணைப் பார்ப்பதற்கு எப்படியும் வருவான் இல்லையா?”
“அது இல்லை. பெண்ணைப் பார்ப்பதற்கு முன்னால் அவர் ஒருமுறை பையனைப் பார்க்கணுமாம். நம் வீட்டில் தேவையில்லை. அவர் இருக்கும் வீட்டில் போய்ப் பார்த்தாலே போதும்.”
மாமா சங்கடத்துடன் “அவர்கள் அதற்கு சம்மதிப்பார்களோ இல்லையோ” என்றார்.
“நல்லது கேட்டது எல்லாவற்றையும் பார்த்து முடிவு செய்வது அவர்தானே அண்ணா! ஒரே பார்வையில் ஆளை எடைபோட்டு விடுவார். அவருக்கு அந்தச் சக்தி இருக்கிறது. அவ்வளவு பணத்தை செலவு செய்து கல்யாணம் பண்ணும் போது பையனை நமக்குப் பிடிக்காவிட்டால் பின்னால் தொல்லையாகி விடாதா?”
“பெண்வீட்டுக்காரங்க, நாம் போய் கேட்கிறதுதான் நியாயம். அதை விட்டுவிட்டு பையனை இங்கே வரச் சொல்லுவது அவ்வளவு நன்றாக இருக்காது நிர்மலா. நீ யோசித்துப் பார்” என்றார் அவர்.
“இவர் எவ்வளவு பிசி என்று உனக்குத்தான் தெரியுமே அண்ணா! எவ்வளவோ பேர் வந்து அவரை தரிசனம் செய்து கொண்டு போகிறார்கள். அப்படி இருக்கும்போது மாப்பிள்ளையைப் பார்க்க இவர் போவது என்றால்….” சாட்சாத் சாயிபாபாவையே போகச் சொல்கிறாயே என்பது போல் பேசினாள் அவள்.
“அவர் எழுந்துகொண்டு ‘சரிம்மா, கேட்டுப் பார்க்கிறேன்” என்றார்.
(தொடரும்)
- பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் விளக்கு விருது பெறுகிறார்
- தொல்காப்பிய அகம் புறம் சார்ந்த இணையப் பதிவுகள்- ஒரு மதிப்பீடு
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….13 கி. ராஜநாராயணன்- ‘கரிசல் காட்டுக் கடுதாசி’
- பேசாமொழி – வீடு சிறப்பிதழ்..
- நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும். . .
- பிசாவும் தலாஷ் 2டும்
- மணலும் (வாலிகையும்) நுரையும் – கலீல் ஜிப்ரான் – 8
- எலி
- ஒரு ஆன்மாவின் அழுகுரல்..
- சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 4
- பொம்மலாட்டம்
- கிளைகளின் கதை
- ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 1
- என் அருமைச் சகோதரியே ரிசானா..!
- தமிழ்த் திரைப் பாலைவனத்தில் துளிர்த்த ஒரு தளிர் – பாலு மகேந்திராவின் ’வீடு’
- நூல்கள் வெளியீட்டு விழா
- திருப்பூர் அரிமா விருதுகள் 2013
- கலித்தொகையில் தொழில்களும் தொழிலாளரும்
- அசர வைக்காத பொய் மெய் – மேடை நாடகம்
- புதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக
- இரு கவரிமான்கள் – 6
- வாசித்த சில.. புத்தகங்கள்…மலர்மன்னன், Padma Seshadr & Padma Malini , மாலன், டாக்டர் தி.சே.சௌ.ராஜன்
- அக்னிப்பிரவேசம்-19
- திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -2
- வால்ட் விட்மன் வசன கவிதை – 7 அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் (I Hear America Singing)
- தாகூரின் கீதப் பாமாலை – 49 பிரிவுத் துயர்
- சொல்லித் தீராத சங்கிலி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஈர்ப்பு விசை என்பது ஒருவித மாயையாய் இருக்கலாம் !
- சாரல் விருது