கற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்

This entry is part 7 of 28 in the series 27 ஜனவரி 2013

 

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

சங்க இலக்கியங்கள் அனைத்தும் மக்களின் வாழ்வியலைக் கூறும் இலக்கியங்களாக மட்டுமல்லாது அறநெறி புகட்டும் அறவிலக்கியங்களாகவும் திகழ்கின்றன. அதனால்தான் அவை இன்றும் வாழுகின்ற இலக்கியங்களாக மிளிர்கின்றன. இச்சங்க இலக்கியங்களுள் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்று கலித்தொகை அனைவராலும் போற்றப்படுகின்றது. இக்கலித்தொகை அக இலக்கியமாக இருந்தாலும் இதில் மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் அறங்கள் புலவர்களால் மொழியப்பட்டுள்ளன. மனித வாழ்வில் முரண்பாடுகள் தோன்றியபோது வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் அறக்கருத்துக்களைப் புலவர்கள் எடுத்துக்கூறினர். அகத்துறைப் பாடல்கள் வழி வாழ்வியல் அறக்கருத்துக்களை வழங்கி வாழ்வியல் அறம்கூறும் அறவிலக்கியமாகக் கலித்தொகை அமைந்திலங்குகின்றது.

கலித்தொகையில் வாழ்வியல் அறங்கள்

தமிழர் காதலையும் வீரத்தையும் தம்மிரு கண்களாகப் போற்றினர். காதல் உணர்வை அகம் என்றனர். வீரத்தைப் புறம் என்றனர். அகவாழ்விலும் புறவாழ்விலும் அறநெறியில் தமது வாழ்க்கையை நடத்தினர். அறத்தினை அக அறம், புற அறம் என்றும் புற அறத்தினைப் போரறம், சமுதாய அறம் என்றும் பிரிப்பர்.

ஆணும் பெண்ணும் காதல் உணர்வு கொண்டு இன்புற்று வாழும் வாழ்வு ‘‘அகம்” எனப்பட்டது. அறிஞர் இதை அகத்திணை என்று கூறுவர். அகத்திணை மாந்தர்களான தலைவன், தலைவி, தோழி, செவிலி, தந்தை, தமையன் ஆகியோர் அறஒழுக்கம் கொண்டு ஒழுகினர். கலித்தொகைப் பாடல்களில் வரும் தலைமகன், தலைமகள், தோழி என்போர் புலவர்களாற் படைத்துக் கொள்ளப் பெற்றோரே எனினும் அக்காலத்து நன்மக்களின் இயல்புகளும் வாழ்க்கைக் கூறுகளுமே அவர்கள் மேல் வைத்து விளக்கப்படுகின்றன. ஆகவே கலித்தொகை இன்பச் சுவையை கொடுப்பதுடன் அனைத்துத் தரப்புமக்களும் அறிந்து கொள்ளவேண்டிய நன்னெறிகளை எடுத்தியம்புகிறது.

அன்பு வாழ்க்கை

கணவன் மனைவி இருவரும் அகவாழ்வில் அறத்தோடு பொருந்திய இல்லற வாழ்வினை மேற்கொண்டனர். ஓர் ஆடையைப் பகுத்து உடுத்து வாழும் வறுமை நிலையிலும் மனம் ஒன்றி வாழும் ஒத்த அன்பு வாழ்க்கையே சிறந்த இல்லறம்  ஆகும். எந்நிலையிலும் கணவன், மனைவி இருவரும் ஒத்த கருத்துடன் வாழ்க்கை நடத்துதல் வேண்டும். அவ்வாறு நடத்தினால் அவ்வில்லறம் நல்லறமாகத் திகழும். இத்தகைய அன்பு வாழ்க்கையை இல்லறத்திலிருப்போர் கைக்கொண்டு வாழ வேண்டும் என்பதை,

‘‘ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” (9.23-24)

என்ற கலித்தொகை வரிகள் விளக்குகின்றன.

அரசியல் அறம்

மக்கள் நல்வாழ்வுக்கு அரசு இன்றியமையாததால் அறத்தின் வழியே ஆட்சிபுரிந்து அரசின் தலையாய கடமையாகும். மன்னன் அறவழியில் ஆட்சி செய்ய வேண்டும் என்றும், மன்னன் மட்டுமின்றி மன்னன் பயன்படுத்தும் செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறம் செய்பவையாக அமைகின்றன. அரசனது வெண்கொற்றக் குடை அறம் செய்யும் என்பதை,

‘‘அறன்நிழல் எனக்கொண்டா ஆய்குடை அக்குடை” (99.8)

என்ற கலித்தொகை வரி தெளிவுறுத்துகின்றது. மன்னன் மக்களைக் காப்பவனாயின் அவனது கையில் உள்ள செங்கோல் நடுநிலைமை தப்பாது உலகம் புகழும்படி விளங்கும் என்பதை,

‘‘பொய்யாமை நுவலுகின் செங்கோலச் செங்கோலின்”

என்னும் வரி விளக்குகிறது.

முரசானது மக்களின் பாதுகாப்பிற்குரிய அரணாக அமைகிறது. எனவே வேந்தனது செம்மையால் மாரி சுரக்கும். வெண்கொற்றக்குடை அறனிழலாகும், செங்கோல் பொய்யாமை நுவலும் முரசம் பாதுகாப்பை ஒலிக்கும் எனக் கலித்தொகையானது அகநூலாக இருப்பினும் அரசர்கள் பின்பற்ற வேண்டி அரச நெறிகளை மொழிவது குறிப்பிடத்தக்கது.

சமுதாய வாழ்வியலறங்கள்

சமுதாயத்தில் பின்பற்ற வேண்டிய ஈகை, இன்னா செய்யாமை, நிலையாமை ஆகிய வாழ்வியலறங்களை கலித்தொகை எடுத்தியம்புகின்றது. இவ்வறங்கள் சமுதாயத்திற்கு ஒளிகாட்டும் விளக்கொளியாக விளங்குகின்றன. ஈதலின் சிறப்பாக ”இரந்தோர்க்கு இல்லையென்னாது ஈதலும், பயன் கருதாது ஒருவருக்கு ஒரே பொருளைக் கொடுத்தலே ஈகையறமாகும். இதனை,

‘‘ஆற்றுதல் என்பது அலர்ந்தவர்க்கு உதவுதல்” (133.6)

என்று நெய்தற் கலிப்பாடல் மூலம் அறியமுடிகிறது. ஈகை செய்து இல்லறம் நிகழ்த்தும் தீவினை இல்லாதவனுடைய செல்வம் பெருகும் என்பதை,

‘‘ஈதலின் குறைகாட்டாது அறனறிந்து ஒழுகிய

தீதிலான் செல்வம் போல்” (27.2)

என்ற வரிகள் அறிவுறுத்துகின்றன.

நிலையாமை

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் உணர வேண்டிய நிலையாமை அறத்தை ஒவ்வொருவரும் நெஞ்சில் நிறுத்தி வாழ வேண்டும். அப்போதுதான் வாழ்கை நிலைபேறுடையதாக அமையும். வாழ்நாள், அழகு, இளமை, பொருள், காமம், ஆகியன நிலையில்லாத தன்மை உடையவை ஆகும். இதனை,

‘‘வளியினும் வரைநில்லாதது வாழுநாள் ஆகவே,

கடைநாள் இதுவென்று அறிந்தாரில்லை” (கலி. 20.9)

என கலித்தொகை இயம்புகின்றது.  மேலும்,

‘‘ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பெனப் படுவது தன்கிளை செறா அமை

அறிவெனப்படுவது பேதையர் சொல்நோன்றல்

செறிவெனப் படுவது மறைபிற ரறியாமை

முறையெனப் படுவது கண்ணோட்டா துயிர்வெளவல்

பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்”, (133-14)

எனக் கலித்தொகையானது பிறர்க்கு உதவுவதையும், பண்பாட்டு நெறியுடன் நடந்து கொள்வதையும், அன்புடன் வாழ்வதையும், அறிவுடைமையுடன் வாழ்வதையும், நடுவுநிலையில் நிற்றலையும், பொறையுடைன் இருப்பதையும் வலியுறுத்தி தனிமனிதன் வாழ்வாங்கு வாழ வழிகோலுகின்றது. மேலும்,

‘‘ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான், கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணான் பொருளேபோல் தமியவே தேயும்”

என்று கலித்தொகையில் அறிவுரைக்கு அறவுரையே உவமையாகக்  கூறப்பட்டுள்ளது. சிறப்பிற்கு உரியது. இக்கருத்து,

‘‘அழுக்கா றுடையான்கண் ஆக்கம் போன்றில்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு” (குறள்.35)

என்ற திருக்குறளை நினைவுறுத்துவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதி இலக்கியங்களில் காணப்படும் கருத்துச் செறிவைப் போலவே கலித்தொகையிலும் அறக்கருத்துக்கள் மிகுந்துள்ளதை அறியமுடிகின்றது. சமுதாயத்தில் உள்ளோரும், அரசனம், தனிமனிதனும் இல்லறத்தாரும் கடைபிடிக்க வேண்டிய அறநெறிகளைக் கலித்தொகை எடுத்துரைத்து அனைவரும் ஏத்தும் கலித்தொகையாக விளங்குகின்றது. கலித்தொகை கூறும் அறங்கள் எக்காலத்திற்கும் பொருந்தும் வாழ்வியலறங்களாக ஒளிர்கின்றன.

 

———————-

Series Navigationஇந்து முசுலிம் அடிப்படைவாதிகளால் பந்தாடப்படும் கமல்சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *