கற்பனை என்றொரு மாளிகை : நிலா ரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’

This entry is part 2 of 32 in the series 3 பிப்ரவரி 2013

 

புதுமை என்பது கவிதையின் அழகுகளில் ஒன்று. புத்தம்புதிதாக பூக்கள் பூத்துக்கொண்டே இருப்பதைப்போல காலந்தோறும் கவிதைகளில் புதுமையும் சுடர்விட்டபடி இருக்கிறது. சமீப காலத்தில் புதுமை அழகோடு கவிதைகள் படைக்கும் படைப்பாளிகளின் வரிசையில் நிலாரசிகன் கவனிக்கத்தக்க விதத்தில் இயங்கிவருகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த ‘வெயில் தின்ற மழை’ தொகுப்பைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருக்கும் இரண்டாவது தொகுப்பு ‘மீன்கள் துள்ளும் நிசி’.

காற்றிலாடிய இரண்டு கயிற்றுத்துண்டுகளை முன்வைத்து பாரதியார் படைத்த காட்சிச்சித்திரம் ஒரு தொடக்கம். கற்பனையும் புதுமையும் சரியான விகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட சித்திரம் அது. பாரதியாரைத் தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு கவிஞர் அப்படிப்பட்ட சித்திரங்களைத் தீட்டியபடியே வந்திருக்கிறார்கள். கவிதை அழகுகளில் அது முக்கியமானதாக இருப்பதால்தான், ஒரு மரபுபோல அந்தப் புதுமை தொடர்ந்தபடி இருக்கிறது. இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதவந்த கவிஞர்களில் கவிதைகளில் இந்த அழகை மெய்மறந்து செதுக்கும் சிற்பியாக விளங்குகிறார் நிலாரசிகன்.

ஓர் ஆங்கிலச்சிறுகதை. ஒருவனுடைய மனைவியைச் சந்திக்கவந்த பார்வையில்லாத நண்பனுக்கும் அவளுடைய கணவனுக்கும் நிகழும் உரையாடலோடு அச்சிறுகதை தொடங்குகிறது. முதலில் அக்கணவனுக்கு பார்வையில்லாத அந்த இளைஞனோடு பேசுவதற்கே விருப்பமில்லை. பிறகு எப்படியோ, உரையாடலின் தொடர்ச்சியில் ஏதோ ஒரு கட்டத்தில் சுவாரஸ்யம் உருவாகிவிடுகிறது. ஒரு தேவாலயத்தின் கட்டமைப்பு எப்படி இருக்கும் என்றொரு எளிய கேள்வியை அந்தப் பார்வையில்லாத இளைஞன் கேட்கிறான். உடனே கணவன்  தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்கும் என்று உற்சாகத்தோடு வர்ணிக்கத் தொடங்குகிறான். ஆனால் மேலும்மேலும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அவன் மனம் நிறைவடையும்வகையில் பதில் சொல்ல கணவனால் இயலவில்லை.  அவனுடைய சொற்களால் பார்வையில்லாதவனின் நெஞ்சில் ஒரு சித்திரத்தை உருவாக்க முடியவில்லை. சட்டென்று தன் மனத்தில் உதித்த யோசனையின் தூண்டுதலால் பார்வையில்லாதவனின் கைகளைப் பற்றி உயர்த்தியும் அகட்டியும்  குறுக்கியும் தேவாலயத்தின் தோற்றத்தை உணர்த்த முயற்சி செய்கிறான். பிறகு, அவனும் கண்களை மூடிக்கொண்டு தற்காலிகமாக தன்னையும் ஒரு பார்வையில்லாதவனாக மாற்றிக்கொள்கிறான். தன் மனத்தில் உள்ள தேவாலயத்தின் வடிவத்தை கைகளால் உருவாக்க முயற்சி செய்கிறான். அவர் கைகளோடு கோர்க்கப்பட்ட பார்வையில்லாதவனின் கைகள், கூடவே அசைந்து அசைந்து,  தேவாலயத்தின் கட்டமைப்பு வடிவத்தை உள்வாங்கிக்கொள்கின்றன. வெளியே உண்மையான தேவாலயம். கைகளின் அசைவுகளால் உருவாகும் மற்றொரு தேவாலயம். கணவனின் மனத்துக்குள் ஒரு தேவாலயம். பார்வையில்லாதவனின் மனத்துக்குள் ஒரு தேவாலயம்.  ஒவ்வொருவரும் தமக்குரிய தேவாலயத்தை தமக்கே உரிய வகையில் கண்டடைந்துகொள்கிறார்கள். நிலாரசிகனின் கவிதைகளைப் படித்து முடித்த தருணத்தில் தற்செயலாக இந்தச் சிறுகதை நினைவுக்கு வந்தது. ஒரு கவிதையின் கற்பனை மலரைத் தொட்டுணர, தரையில் நின்றபடி கைநீட்டும் ஒரு வாசகனால் ஒருபோதும் முடியாது. அது மலர்ந்திருக்கும் உயரத்துக்கு அல்லது அதற்கும் அப்பால் அவன் கற்பனை விரிவடையும்போது மட்டுமே அதைத் தீண்டமுடியும். அப்படிப்பட்ட கற்பனைவிரிவு நமக்குள் நிகழும்போதுதான் நிலாரசிகனின் கவிதைகளை நாம் நம் கவிதைகளாக உணர்முடியும்.

நிலாரசிகனின் கவிதைகளை வாசிக்கும் அனுபவம் என்பது, நிலாரசிகன் கட்டியெழுப்பும் கற்பனைச்சித்திரங்கள் உணர்த்தும் அனுபவம் எத்தகையது என்பதைக் கண்டறியும் பயணமல்ல. மாறாக, அக்கற்பனையை கற்பனையாகவே உள்வாங்கி அசைபோடுதல் என்பதாகும். அது உருவாக்கும் காட்சிகளாலும் எண்ணங்களாலும் நம் நெஞ்சை நிரப்பிக்கொள்வதாகும்.

ஒருமை சிதையாத கற்பனைக்காட்சிகளாக எடுத்துக்காட்ட இத்தொகுப்பில் எண்ணற்ற கவிதைகள் உள்ளன. உடுதவளை என்றொரு கவிதை. கலங்கிய நீர் நிறைந்திருக்கும் ஒரு கிணற்றில் வசிக்கிறது ஒரு தவளை. தலையை உயர்த்தி வானில் மிதக்கும் நட்சத்திரங்களை ஒவ்வொன்றாக இழுத்து இழுத்து ஒளித்துவைக்கிறது. தொலைந்துபோன நட்சத்திரங்களை இப்போது இரண்டு காகங்கள் தேடத்தொடங்குகின்றன. கிணற்றுக்குள் இருப்பதை அறிந்துகொண்ட அக்காகங்கள் சிறுசிறு கற்களைக் கொண்டுவந்து போட்டு கிணற்றை நிரப்புகின்றன. மெல்ல மேலெழும்பும் நீரில் நட்சத்திரக்குழந்தைகள் வெளியேறுகின்றார்கள். வெளியே செல்பவர்கள் குறும்பு மிக்கவர்கள். முதிர்ந்த தவளைகளைக் கைகளுக்குள் மறைத்துவைத்து எடுத்துச் செல்கிறார்கள். ஒரு குழந்தை சொல்லும் விளையாட்டுக் கதைபோல கற்பனைச் செறிவு மிகுந்ததாக இருக்கிறது கவிதை. தவளை ஒரு புள்ளி. நட்சத்திரம் இன்னொரு புள்ளி. காகம் இடைப்புள்ளி. நட்சத்திரத்தைத் தேடிவந்த காகத்தைப்போல, தவளையைத் தேடி இன்னொரு காகம் நட்சத்திரத்தைநோக்கிச் செல்லக்கூடும். தேடுவதும் கண்டடைவதுமான ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நிகழ்கிறது. காரண அறிவு வளராத குழந்தையைப்போல கற்பனைவளம்  ஓர் அதிசயம் உலகம். நாகரிக வளர்ச்சியடைந்த மனிதன் பல்வேறு காரணங்களால் தொலைத்துவிட்ட அக்கற்பனையை கவிதைகள்மட்டுமே மீண்டும்மீண்டும் முன்வைத்தபடி இருக்கின்றன.

ஒரு நாட்டுப்புறக்கதையின் தன்மையைக் கொண்டதுபோன்ற தோற்றம் கொண்டது உடலின் ஆயிரம் இறக்கைகள் என்னும் கவிதை. கனவுகள் வழிந்துகொண்டிருக்கின்றன. குழாயில் தண்ணீர் சொட்டுவதுபோல. அதை ஒவ்வொரு கனவாக பீங்கான் கோப்பைகளில் பிடித்து கட்டிலின் அடியில் ஒளித்துவைக்கிறான். கனவுகள் தமக்குள் உரையாடிக்கொள்கின்றன. எல்லாமே உறங்குபவனைப்பற்றிய குறிப்புகள். இவன் காதலைக் கொன்றவன் என்கிறது ஒரு கனவு. காமத்தின் விஷக்கண்களில் வீழ்ந்தெழுந்தவன் என்கிற்து இன்னொரு கனவு. இப்படியே ஏராளமான குறிப்புகள். ஒவ்வொரு குறிப்பும் ஒவ்வொரு இறக்கையாக உருமாறுகிறது. தூக்கத்தில் புரண்டுபடுப்பவனின் உடல்முழுதும் ஆயிரம் இறக்கைகள்.

சோலஸ் கவிதையும் நாட்டுப்புறக்கதையின் சாயலைக் கொண்டிருக்கிறது. கடலுக்கு நடுவில் ஒரு அரசகுடும்பத்தினர் வசிக்கிறார்கள். அவர்களுக்கு சோலஸ் என்றொரு மகள் இருக்கிறாள். அலைக்குதிரையில் ஒலிவேகத்தில் வந்தவன் அவளைக் கவர்ந்து செல்கிறான். அந்த அரசன் அவர்களைத் தேடிச் செல்கிறான். எட்டுத் திசைகளில் தேடியும் அவனால் கண்டடைய முடிவதில்லை. சோர்ந்தவன் கண்களில் வழியும் உப்புக்கண்ணீரால் கடலின் சுவையே மாறிப் போய்விடுகிறது. ஆண்டுக்கணக்காக, யுகக்கணக்காக, அந்த அரசன் காதலனோடு புறப்பட்டுப் போன தன் மகளைத் தேடியபடியே இருக்கிறான். மறுபக்கத்தில், காலம்காலமாக, எங்கோ தொலைதூரத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக நீந்தியபடியே இருக்கிறார்கள்.

இரவின் ரகசியப்பொழுதுகள் கவிதையில் உள்ள குழந்தைக்குறும்புடன் கூடிய கற்பனைச்சித்திரம் மிகமுக்கியமான ஒன்று. சிறுமியொருத்தி தன் மார்போடு அணைத்தபடி உறங்கும் கரடிப்பொம்மை, அவள் பிடியிலிருந்து நழுவி படுக்கையிலிருந்து எழுந்து அறையிலிருந்து வெளியே வருகிறது. கூடத்துக்கு வந்து தொலைக்காட்சி பார்க்கிறது. பழம் சாப்பிடுகிறது. தற்செயலாக தண்ணீர் அருந்துவதற்காக சமையலறைக்கு வந்த அம்மா, அந்தக் கரடியைப் பார்த்து அச்சத்தில் அலறி நடுங்கிவிடுகிறாள். சத்தம் கேட்டு எழுந்துவந்த சிறுமி கரடியை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றுவிடுகிறது. சிறுமி தொட்டதுமே கரடி மீண்டும் பொம்மையாகிவிடுகிறது. பயந்துபோன அம்மாவை அணைத்து முத்தம் கொடுத்து, ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்துகிறார் அப்பா. அம்மா அம்மாக்கரடியாக மாறிவிடுகிறாள். அப்பா, அப்பாக்கரடியாக மாறிவிடுகிறது. கற்பனை, உயிர் உள்ளவர்களைப் பொம்மையாக்கிப் பார்க்கிறது. பொம்மையை உயிர் உள்ளதாக மாற்றிப் பார்க்கிறது. தர்க்கம் குறையாத அக்கதையின் சரடு மனத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிடுகிறது.

61 கவிதைகள் உள்ள இத்தொகுப்பு நிலாரசிகனின் கற்பனைஅழகுக்கு ஒரு சாட்சி. நிலாரசிகன் ஒருபக்கம். அவர் கற்பனைமனத்துக்கு இணையான கற்பனை மனத்தோடு நெருங்கும் வாசகன் இன்னொரு பக்கம். இருவரும் விழிமூடி கற்பனையில் மிதந்தபடி விரல்கோர்த்துக்கொள்ளும்போது வாசக அனுபவத்தில் பொங்கும் கற்பனை அழகில் இன்னொரு தொகுதிக்கான கவிதைகள் கண்டடையப்படக்கூடும்.

(மீன்கள் துள்ளும் நிசி. கவிதைகள். நிலாரசிகன். புது எழுத்து வெளியீடு. காவேரிப்பட்டினம்)

Series Navigationமணலும் (வாலிகையும்) நுரையும் (10)சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு -2
author

பாவண்ணன்

Similar Posts

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *