மலர்மன்னன்

This entry is part 24 of 31 in the series 10 பெப்ருவரி 2013

கோவிந்த் கருப்
ரொம்ப ரசனையான பெயர். எங்கோ சில போஸ்டர்களில் பார்த்ததாக ஞாபகம்.
அதற்குப் பின் திண்ணை.காம் தளத்தில் அவரது எழுத்துக்கள் & பின்னோட்டம் படித்திருக்கிறேன்..
தமிழக அரசியலின் முக்கிய மையப்புள்ளிகளின் வாழ்வு மற்றும் செயல்பாடுகளின் ஒரு சாட்சியாக இருந்தவர்.
ஆனால், பொய்சாட்சியாக மாறி பொன் பொருள் ஈட்டாமல், உள்ளதை சொல்லி வாழ்ந்தவர்.
கலைஞரின் அரசியலில் கோபங்கள் இருந்தாலும், கலைஞரின் அன்னையை ”தனது வணக்கத்துக்குறிய மகா பெண்மணி” என்று மனதார சொல்லியிருக்கிறார்.
படித்திருந்தால், கலைஞர் மனதை நிச்சயம் அவ்வரிகள் மயிலிறகால் வருடியிருக்கும்.
அண்ணா, பெரியார், எம்ஜிஆர் என யாராயிருப்பினும் பட்டவர்த்தனமாக உள்ளதை உள்ளபடி சொல்லிச், 73 வயதிலும் உறங்காத நல்ல உள்ளமாக எழுதிக்கொண்டிருந்தார்.
பிறப்பின் நிலையாலோ இல்லை உள்நிலையாய் ஏதோ ஒன்று உந்தியதாலோ அவர் ஆன்மீக சிந்தனையாளராய் வாழ்ந்தார்.
சித்தரைப் போல் வாழ்ந்தார் என்று அவர்தம் வீட்டார் சொன்னார்கள்.
அது உண்மையோ எனச் சொல்லும் விதமாக, அவரது மறைவின் செய்தி கேள்விபட்டு வீடுசென்ற போது, ( மறைவின் மறுநாள் ), இவங்க அவரின் மனைவி, இவங்க அவரின் பெண் – பெங்களூரில் இருந்து வந்துள்ளார், நானும் அதோ அவர்களும் வளர்ப்பு மகள்கள் என்றபடி ஒரு பெண்மணி முன்வந்து சொன்னார்.
இணையத்தில் எழுத்துக்களால் நடராசனாய் நாட்டியம் ஆடிய மலர்மன்னன் ஒரு சுவரோர சொம்பில் சாம்பலாய்… அருகே ஒரு விளக்குடன்.
“காதறுந்த ஊசி….” பாடல் தான் ஞாபகம் வந்தது.
வாடகை வீடு – ஆனால் வசிப்பதற்கு அந்தக் கூட்டில் பலர். அது அவரது மனதைச் சொன்னது.
அந்த வளர்ப்பு மகள் , தான் மஞ்சரி தி.ஜ.ர மகளென்றோ பேத்தியென்றோ சொன்னார் ( எனக்கு ஞாபகமறதி அதிகமாயிருச்சு..).
மஞ்சரி தெரியுமல்லவா என்றார். நானோ, “ஆமாம்.. தடியா இருக்கும். இரண்டு முறை வாங்கினேன்.. படிக்க முடியவில்லை…” என்றேன்.
சினமேதும் கொள்ளாமல், அந்த காலத்தில அதை ”டைஜஸ்ட்” என்று சொல்வார்கள் என்றார்.
தனது வாழ்வில் சில சம்பவங்களினால் நிர்க்கதியற்று நின்ற போது, “ ஆண்களை நம்புவதற்கு இயலா இந்த காலத்தில், தந்தையாய் எம்மை வளர்த்தார்” என்று நன்றியுடன் அவர் கண்மூடி ஒரு பாடலை பாடினார்.
ஆம், மலர்மன்னன் சித்தர் தான், அவர் நம்பிக்கை ஒன்றும் தவறில்லை எனத் தோன்றியது.
அப் பெண் இப்போது ஸ்கைப் மூலம் பாட்டு வகுப்புகளும் நடத்துகிறாராம்.
மேலும் அவர்கள் பேசிய போது,
“உரிமையுடன் மும்பை புதிய மாதவி… ஃபோன் செய்து, அப்பா அப்பா என்று விவாதிப்பார்…”
திருமதி. சீதா லஷ்மி அம்மாள் வாஞ்சையாய் தம்பி என்றழைத்து பேசுவார்.
முருக பக்தரான திருமதி சீதா லஷ்மி அம்மாள், மலர்மன்னன் என்றும் மம என்று திண்ணைப் பக்கங்களில் அழைக்கப்பட்டவருடன்  “அம்பாள்’ தரிசனம் பற்றி பேசுவார் என்றார்.
காவ்யா, புனைப்பெயரில் இருவரும் பற்றி நிறைய சொல்வாராம்.
வெ.சா விற்கு ஃபோன் அடித்து ஸ்விட்ச்டு  ஆபாக இருந்ததால் அவரின் வீட்டு நம்பருக்கு முயற்சித்து அவரிடம் இந்த தகவல்களைச் சொல்ல முடியவில்லை என்றனர்.
திணமணி பத்திரிக்கையிலிருந்து வந்து பார்த்துச் சென்றனராம்.
கிழக்கு பத்ரிக்கு தகவல் சொல்லியாச்சு என்றனர்.
, நான் கேட்ட அவரின் ஒரு புகைப்படம் தர எனது ஈமெயில் என்னவென்று கேட்டனர் …” – govind.karup என்றவடன், சற்றே உணர்வாகி, “அப்பா உங்களத் தான் பார்க்கனும்.. பார்க்கனும் என்றார்கள்” என்றனர்…
ஆம், பல முறை மெயிலிலும் ஃபோனிலும் அளவளாவியதுண்டு. ஒரு மாதம் முன்பு, திராவிட இயக்கங்களின் புனைவும் உண்மையும் “ நான் படித்துள்ளேன் என்று எழுதியது கண்டு, ஃபோனில் அழைத்தார்.
“என்ன இது , பக்கத்தில இரண்டு தெரு தள்ளியிருக்கீங்க.. பார்க்கலாமே.. எனக்கு உடம்பு நல்லாயிருந்தால் வந்திடுவேன்… நீங்க வாங்க..” என்றார்.
நான் ஏதோ சொல்லி, போகாமலிருந்தேன்..
முன்பொருமுறை , ”ஏதாவது உதவி வேண்டுமா..?” என்று கேட்ட போது அவர் மறுதலித்தது ஒரு காரணமாக இருக்கலாம்..
பின்னொன்று, நான் யாரையும் சந்திப்பதில்லை..  போகும் வழியே வந்தால் மட்டுமே..
எண்ணங்களும் செயல்களும் யார் யாருடன் ஒத்திருக்கிறதோ அதுவரை, அவர்கள் எல்லாம் நம்மில் சேர்த்தி என நினைப்பவன் அதனால் அவரை போய் பார்க்கத் தோணவில்லை.
அவர் சந்திக்கனும் என்றார் ஆனால் அவரை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன் என்று நம்பியவன்.
ஒரு முறை அவர் வீடு இருக்கும் தெருவில் உள்ள பாம்பன் சுவாமி கோவிலில் உள் சுற்றி வந்து பின் அந்த ஜனத்திரளில் தூண் ஒன்றில் சாய்ந்திருந்த ஒருவரிடம் , “நீங்கள், மலர் மன்னன் தானே..” என்றேன்… அந்த மனிதர் இல்லையென்றார்.
ஆனால் , அது அவராய் இருக்கும் என்ற தீர்மானத்துடன் இருந்ததால் ஏனோ சந்திக்கப் போகத் தோன்றவில்லை..
ஆனால், டோண்டு ராகவனின் மரணம் பற்றித் தெரியவந்த போது அதற்கு பதிலாய் ஒரு மெயில் அனுப்பியிருந்தார்,


 


மலர்மன்னனின் மெயில்: (டோண்டு ராகவன் மரண செய்தி கேட்டு ) “சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நான் சந்தித்ததோ பழகியதோ இல்லை. ஆனாலும் அவரை அறியும் வாய்ப்பினைப் பெற்றேன். மிகவும் துணிவுடன் களத்தில் நின்று சளைக்காமல் தமது கருத்தை நிறுவப் போராடியவர். அது இணைய தளமாகத்தான் இருக்கட்டுமே! அதற்கும் துணிச்சல் வேண்டித்தானே இருக்கிறது! எத்தனை கேலி கிண்டல் இழிவுகளையும் துடைத்துப் போட்டு நிற்பவர் என்று அறிவேன்.
மகர நெடுங்குழைக் காதர் அவரைப் பார்த்துக்கொள்வார்.
நான் ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தபோதே என்னுடைய தீவிர வாசகர்களீல் ஒருவராக இருந்தவரை இழந்துவிட்டேன். பிறந்துவிட்ட எவரும் ஒரு சந்தர்ப்பத்தில் மரணம் அடைந்தே தீர வேண்டும். அது சாசுவதமானது.  தமது பணியைச் சரியாகச் செய்து முடித்த பிறகே நம்மிடமிருந்து விடை பெற்றிருக்கிறார். நாமும் அவருக்கு நல்லமுறையில் விடைகொடுப்போம்.
ஸ்ரீ கோவிந்த கருப், திருமலை ராஜன் இருவரையுமே நேரில் பழகாவிடினும் அறிந்துள்ளேன். அவர்கள்
வாயிலாகவே இத்தகவல் தெரிய வந்தது.
அன்புடன்,
மலர்மன்னன்


இந்த மெயிலுக்கு பின் அவரை சந்திக்கலாமா என்று தோன்றியது.
மேலும், அவரின் அனுபவங்களை அவர் பேச பதிவு செய்யலாம் என்றும் தோன்றியது. செய்யவில்லை.
அதனால், நான் அனைவருக்கு சொல்வது, வாழ்ந்து வந்தவன் உதிரும் நிலையில் இருப்பதாகச் சொன்னாலோ, உணர்ந்தாலோ, அந்த அனுபவங்களை பதிவு செய்யுங்கள். பின் தர்க்கம் செய்யுங்கள்.
எப்படியோ..
அவரது பெண் அவரின் புகைப்படம் தந்தார், மெயில் மூலமாக…
..ஹூம்… இவரிடம் தான் நான் பாம்பன் சுவாமி கோவிலில், “நீங்கள் மலர்மன்னனா..?” என்று கேட்டது.
சொன்னேன்
அவர்தம் மகள்கள்,  “இல்லை, அப்பா யாரிடமும் தனனை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை..” என்றும், மேலும், “பக்கத்தில் இருப்பவர் எல்லாம் சாமி சாமி என்று வருவார்கள்…” என்றும் சொன்னார்கள்.
கொஞ்ச நாட்களாய் தனக்கு அம்பாளிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது என்றும் , அதனால் தான் மியாட்டில் நெஞ்சுவலிக்காய் அட்மிட் ஆன போது, தான் போகப் போவதாகவும் , தனது கால அன்பர்கள் சிலருக்கு தகவல் தரச் சொல்லியதாகவும் சொன்னார்கள்.
மேலும் தனது காலில் வந்த தொந்தரவு சரியாகும் போது விடை பெறுவதாகவும் சொன்னாராம். சில வாரம் முன் தான் கால் சரியானதாம்.
அம்பாளை வழிபட்டு அவரின் தரிசனம் பெற்றதாகவும்,அவருடன் போய் ஐக்கியம் ஆகும் நேரம் வந்து விட்டதாகவும் சொன்னாராம். உடம்பெனும் சட்டை கழட்டி அடுத்த நிலை செல்வதாகவும் சொன்னாராம்.
நிறைந்த தை அமாவாசை 9 எண்கள் பலவரும் நிலை அம்பாளின் விசேஷ நாள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
அது போல், அம்பாளின் குழந்தை, அன்று பாத கமலம் சேர்ந்தார்.
நன்றய்யா..
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

Sri.Malar Mannan
attained the lotus feet of Goddess Ambal

*

18-12-1939              09-02-2013

With Prayers – Govind Karup

a  reader of his articles

M M Family @  97899 62333

ஏனென்று சொல்லத் தெரியவில்லை. மேலுள்ள ஒரு தகவல் தி ஹிந்து நாளிதழில் 11 பிப்ரவரி 2013 அன்று வெளியிட அனுப்பினேன்.
அவரின் வீட்டாருடன் பேச விழைபவர்கள் : (+ 91 )   97899 62333 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.
மகள்களின் மின்னஞ்சல்: satya.mannan@gmail.com  &  pooraniarvind@gmail.com
பி.கு:  அவரின் படைப்பு ஒவ்வொரு முறையும் திண்ணை.காம் தளத்தில் வரும் போதெல்லாம், அதை தனக்கு கிடைத்த கௌரமாக சொல்வாராம்.  இது மாதிரி பாராட்டு தாண்டி ஒரு இணைய பத்திரிக்கைக்கு என்ன வேண்டும்.?

Series Navigationடோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!மலர்மன்னன் – மறைவு 9.2.2013
author

கோவிந்த் கோச்சா

Similar Posts

Comments

  1. Avatar
    கோவிந்த் கருப் says:

    கார்கில் ஜெய்::: இன்னொரு பின்னூட்டத்தில் சொன்னது::: இஸ்லாமிய வெறியர்களின் ஆசிட் வீச்சால் இவர் கால் வெந்த பொது, சற்றும் துவளாமல் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் நலப்பணி செய்ய ஆரம்பித்தவர்.. >>> ஜெய், இந்த பாதிப்பு பற்றி அவரின் வளர்ப்பு மகள் சொன்னது “ ”அப்பா காலின் பிரச்சனை அதிகமாக அவருக்கு வலியைத் தந்தது. வலியோடு வாழப் பழகிவிட்டேன் என்பாராம். அவரது மகள் பெங்களூர் அழைத்துச் சென்று அதற்கு வைத்தியம் பார்த்து அனுப்பினாராம். அந்த கால் சரியாகும் போது உலகை விட்டுச் சென்று விடுவேன் என்றும் சொன்னாராம்.” ஆனால், அந்த கால் சேதம் பின்னிருக்கும் விடயம் அறியாதது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *