சும்மா கிடைத்ததா சுதந்திரம்?

This entry is part 27 of 30 in the series 17 பிப்ரவரி 2013

barathida

 

மங்கையைப் பாடுவோருண்டு
மழலையைப் பாடுவோருண்டு
காதலைப் பாடுவோருண்டு
கருணையைப்  பாடுவோருண்டு
அன்னையைப் பாடுவோருண்டு
அரசினைப் பாடுவோருண்டு
கைராட்டினத்தைப் பாடுவாருண்டோ?
கதரினைப் பாடுவாருண்டோ?

என வியக்கலாம்.  கவிஞர்களின் கற்பனையில் உதிக்கும் கவிதைகளின் பாடு பொருட்களுக்கும், பாட்டுடைத் தலைவர்களுக்கும் வரம்பில்லை என்பதைத் தெளிவாக்குகிறார் பாரதிதாசன்.

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில், இருபது பக்கமேயுள்ள கவிதை நூல் ஒன்றினை “கதர் இராட்டினப்பாட்டு” என்ற தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார் பாரதிதாசன்.  அக்கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் போற்றுவது கதரையும் கைராட்டினத்தையும். புதுவை நகரின் கலாநிதி அச்சகம் 1930 இல் வெளியிட்ட இந்த நூலின் அன்றைய விலை ஒன்றேகால் அணா. இந்த நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சியால் மின்நூல் வடிவம் கொடுக்கப்பட்டு, தமிழர்கள் அனைவரும் பயன் பெரும் வகையில் அவர்களது மின்நூல்கள் சேகரிப்பில் இடம் பெற்றுள்ளது.  தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த முயற்சி போற்றுதலுக்குரியது.

கவிதை நூல் பிறந்த வரலாறு:
இந்த நூலினை அறிமுகப் படுத்தும் மாலன் அவர்களின் முன்னுரையின் மூலம் கவிதை நூல் பிறந்த உணர்ச்சி பூர்வமான கதையும் நமக்குத் தெரிய வருகிறது.

1920ம் வருடம் ஆகஸ்ட் 2ம் தேதி, வாழ்நாள் முழுவதும் கதர் அணியப் போவதாக உறுதி எடுத்துக் கொண்ட அண்ணல் காந்தி, 1921 முதல் அது தொடர்பான பிரசாரத்தைத் துவக்கினார். பாரதத்தில் ஒத்துழையாமை இயக்கம் பிறந்து வளர்ந்தது. மக்களுக்குச் சுதந்திர தாகமும் வளர்ந்தது. ஒத்துழையாமைப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகும், அது வளர்த்துவிட்ட மக்கள் எழுச்சியை சுதந்திரப் போராட்டத்திற்கு வழியமைத்துக் கொடுக்க காந்தியால் கதர் இயக்கம் தொடங்கப் பட்டது. தமிழகத்தில் அந்த காதர் இயக்கத்தின் தாக்கத்தில் பாரதிதாசன் படைத்திட்ட நூல் இந்த கதர் ராட்டினப் பாட்டு கவிதை நூல். சுருங்கச் சொல்லின், இது அன்றைய தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட பிரச்சார பீரங்கிகளில் ஒன்று.
கவிதைகள் வடித்ததுடன் தானும் முற்றிலும் காதர் ஆடை அணியும் வழக்கத்திற்கு மாறினார் கவிஞர்.  தானே தனது கையினால் நூற்ற நூலில் கதர் சேலையை நெய்யச் செய்து தீபாவளிப் பரிசாகத் தனது மனைவிக்கு வழங்கியிருக்கிறார். அது போன்றே தன் கையால் நூற்ற நூலைத் திரித்து தனது குழந்தைக்கு அரைநாண் கயிறும் அணிவித்திருக்கிறார்.  அத்துடன் நில்லாது, கடன் கொடுக்கும் அடிப்படையில் கதர் துணி விற்பனையையும் செய்து மக்கள் கதராடை அணிய  ஊக்கப் படுத்தியிருக்கிறார் கவிஞர்.  அவரிடம் கடனுக்குத் துணி வாங்கிய புதுவை ஜெகநாதம் என்பவரின் குறிப்புகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

பாரதிதாசன் அவர்கள் இந்த கதர் ராட்டினப் பாட்டு நூலை வெளியிட்டதும் தனது சொந்த செலவில்தான். தனது மனைவியின் பத்துச் சவரன் தங்கச் சங்கிலியை விற்று அந்தப் பணத்தில் அவர் கதர் ராட்டினப் பாட்டு நூலை வெளியிட்டதாகவும், அந்த நூலை குடும்பத்தினரே தைத்து ஒட்டி விற்பனைக்கு அனுப்பி வைத்ததாகவும் பாரதிதாசரின் மூத்த மகள் சரஸ்வதி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஃபிரெஞ்சு காவல் துறையினரால் இந்த நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் கைகளுக்கு கிடைக்கா வண்ணம் பதுக்கப் பட்ட பிரதிகள் சில பின்நாளில் நாடு சுதந்திரம் அடைந்த பின்பு வெளியாகின. அவற்றில் ஒரு பிரதி 1990களில் பாரதிதாசனின் மகன், கவிஞர் மன்னர் மன்னனால் மாலன் அவர்களுக்குப் பரிசளிக்கப் பட்டு அவர் மூலம், நூலும், நூலின் வரலாறும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்நூல் சேகரிப்பிற்குக் கிடைக்கப் பட்டுள்ளது.

கதர் இராட்டினப் பாட்டு:
(1) பாரததேவி, (2) ஜன்ம பூமியின் சிறப்பு, (3) காந்தியடிகளும் கதரும்/பறை முழக்கம், (4) சுதந்தரதேவியும் கதரும், (5) தேசத்தாரின் பிரதான வேலை, (6) இராட்டினச் சிறப்பு, (7) அன்னைக்கு ஆடை வளர்க, (8) பாரததேவி வாழ்த்து ஆகிய எட்டு சுவை மிகு நாட்டுப் பற்றினை மையமாகக் கொண்ட கவிதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

“பாரததேவி”
விண்கொள் இமயமா வெற்பே திருமுடியாய்ப்
பண்கொள் குமரி பணிதாளாய் – மண்கொள்
வளமேதன் மேனியாய் வாய்ந்ததாய் வீரர்
உளமேதன் மேனிக் குவப்பு

என்று பாரத தேவியை வாழ்த்தும் முதல் வெண்பாவுடன் வாழ்த்துப் பாடலுடன் கவிதைகள் தொடர்கின்றன.  சிலபாடல்களுக்கு அவற்றைப் பாட வேண்டிய மெட்டுகளும் குறிப்பிடப் பட்டுள்ளது.  தேசத்தாரின் பிரதான வேலை என்ற கவிதையை குறத்திப் பாட்டு மெட்டில் பாட பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.   காந்தியடிகளும் கதரும் அல்லது பறை முழக்கம் என்ற பாடலுக்கு சுருதிபெட்டியின் ஸ்வரமும் கொடுக்கப் பட்டுள்ளது.  அந்தப் பாடலும் அதைப் பட விரும்புவோருக்கு கவதை நூல் வழங்கிய ஸ்வரமும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

“பறை முழக்கம்”
அன்னியர் நூலைத் தொடோம் என்றசேதி
அறைந்திடடா புவி முற்றும் – எங்கள்
அறுபதுகோடித் தடக்கைகள் ராட்டினம்
சுற்றும்-சுற்றும்-சுற்றும்

இன்னும் செல்லாது பிறர்செய்யும் சூழ்ச்சிகள்
என்று சொல்லிப் புயம் தட்டு – அட
யானையின்மேல் வள்ளுவா சென்று நீபறை
கொட்டு-கொட்டு-கொட்டு

இதன்மெட்டு:
ஹார்மோனிய ஸ்வரம்

ஸரி க க / கா க க / கா க க / கா மா கா
அன்னியர் / நூலைத்தொ / டோமென்ற / சேதிய

ரீ கா ரீ / ரிக மா மா / மா மா ,, / கம பா
றைந்திட / டாஅபுவி / முற்றும்,, / எங்கள்

ஸ்ஸ் ஸ்¡ ஸா / ஸ்நி நீநீ / தா தா நீ* / பா மா கா
அறுபது / /கோஒடித / டக்கைகள் / ராட்டினம்

கா கா , / கா கா , / கா பம பா ,,
சுற்றும் / சுற்றும் / சுற்றும் ,,

ஸ்¡ ஸ்¡ நீ / ஸ்¡ ஸ் ஸ் ஸ்¡ ஸ் ஸ் / ஸ்¡ ஸ்¡ ரீ
இன்னும்சொல் / லாதுபி / றர்செய்யும் / சூழ்ச்சிகள்

ஸ்¡ ஸ்¡ நீ / தா தா தா / தா தா ,, / தப
என்றுசொல் / லிப்புயம் / தட்டு ,, / அட

பா ஸ்¡ ஸ்¡ / ஸ நி நீ நீ / தா தா நீ* / பா மா கா
யானையின் / மேல்வள்ளு / வாசென்று / நீபறை

கா கா / கா கா / காம மபா
கொட்டு / கொட்டு / கொட்டு

(* இக்குறி கருப்புக்கட்டை)

கருத்தைக் கவரும் மற்றொரு கவிதை சுதந்தரதேவியும் கதரும்.  பாடலின் தொடக்க வரிகள் ஒரு பெண்ணின் அழகை வர்ணிக்கிறது.  அந்த அழகியை நீ யாரென கவிஞர் வினவ அவள் தன்னை ‘சுதந்திர மங்கை’ என அடையாளம் சொல்லுகிறாள்.  ஆளை மயக்கிடும் மாதொருத்தி எனத் துவங்கும் அப்பாடலில் அவள் யாரென அறியும் வரை அது ஒரு நாட்டுப் பற்றினைக் குறிக்கும் பாடல் என்ற எண்ணம் வராது.  தொடர்ந்து வரும் வரிகளில் அந்த சுதந்திர மங்கை அவளை அடையும் வழியையும் உரைக்கிறாள். அந்நியர் துணிகளை வாங்காதே, நீயே நூல் நூற்று ஆடை நெய்து கதராடை உடுத்து. அந்நியர்களின் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் அவர்கள் வணிகம் வீழ்ச்சி அடையும்.  அந்நியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த காரணத்தை கேள்விக்குரியாக்குவதன் மூலம் அவர்களை வெளியேற்றி இந்தியா சுதந்திரம் அடையலாம்.  எனவே சுதந்திரம் அடைய இராட்டினம் சுழட்று என்று சுதந்திர மங்கை அறிவுரை கூறுவதாக பாரதிதாசன் அறிவுரை வழங்குகிறார்.  அப்பாடலின் சில வரிகளும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

“சுதந்தரதேவியும் கதரும்”
ஆளை மயக்கிடும் மாதொருத்தி – உடல்
அத்தனையும் பொன்னை ஒத்திருந்தாள் – அவள்
பாளை பிளந்த சிரிப்பினிலே – என்னைப்
பார்த்துரைத்தாள் எந்தநாளையிலே – உன்றன்
தோளைத் தழுவிடக் கூடும் என்றே – அடி!
சுந்தரி உன்பெயர் ஊர் எதேன்றேன் – அவள்
காளியனுப்பிய கன்னியென்றாள் – என்றன்
காதற் சுதந்தர மங்கையன்றோ அவள் (ஆளை)
.
.
.
கன்னியுரைத்தது கேட்டிடுவீர் – உள்ளக்
காதல் இருப்பது மெய் எனிலோ – அட
சின்ன இராட்டின நூலிழைப்பாய் – அதில்
தீட்டின்றி நெய்த உடை உடுப்பாய் – வரும்
அன்னியர் நூலைத் தலைகவிழ்ப்பாய் – அதற்
கப்புறம் என்னைக் கலந்திடுவாய் – என்று
கன்னியுரைத்து மறைந்துவிட்டாள் – அவள்
கட்டளைதன்னை மறப்பதுண்டோ – அந்த (ஆளை)

இந்தக் கவிதைத் தொகுப்பில் கருத்தைக் கவரும் மற்றொரு கவிதை சிறந்த உவமைக் கவிதையாக விளங்குகிறது.  அடிமை இந்தியாவின் சூழ்நிலை இங்கே மகாபாரதத்துடன் ஒப்பிடப்படுகிறது. கெளரவர் சபையில் துகிலுரிந்து மானபங்கம் செய்யப்பட்ட பாஞ்சாலியாகக் கவிஞருக்குத் தென்படுகிறாள் அந்நியர் வசம் அல்லலுறும் பாரதத்தாய். கண்ணா என் மானத்தைக் காப்பாற்று என்று பாஞ்சாலி கதறியபோது கண்ணன் ஆடை வழங்கி அவளது துயர் தீர்த்தான். இதனைக் கவிஞர் சுதந்திரப் போராட்டத்துடன் ஒப்பிடும் பொழுது அவர் கற்பனையின் வளம் நம் கருத்தைக் கவர்வதாக உள்ளது. கதறும் பாஞ்சாலியின் துயர் தீர்க்க வந்த கண்ணனுடன் காந்தியை ஒப்பிடுகிறார் பாரதிதாசன். பாரதத் தாயின் துயர் தீர்க்க கதர் இயக்கம் மூலம் ஆடையை வளரச் செய்து அந்நியர்களின் எண்ணம் நிறைவேறா வண்ணம் பாரதத் தாயின்  துயர் நீக்குகிறாராம் காந்தி.  அப்பாடலின் இடம் பெற்ற வரிகளைக் கீழே காண்க.

“அன்னைக்கு ஆடை வளர்க”
“தீயார் துகிற் பறித்துத்
தீர்க்கின்றார் எனமானம்
மாயாமலர்க்கண்ணா
வந்துதுயர் தீர்த்திடுவாய்”

என்று பாஞ்சாலி
இசைக்க அது கேட்டுச்
சென்று மலர்க் கண்ணன்
சித்திரஞ் சேர் ஆடை
வளர்ந்திடுக என்றான்
அறம் வளர்க்க வந்தோன்

“தீயர் துகில் பறித்துத்
தீர்கின்றார் என்மானம்
மாயாமலர்க்கண்ணா
வந்து துயர் தீர்த்திடுவாய்”

என்று ரைத்திட்டாள்
இதனைச் செவியுற்றுச்
சென்று கண்ணக் காந்தி
சித்திரஞ் சேர் ஆடை
வளர்ந்திடுக என்றான்
அறம் வளர்க்க வந்தோன்

கைராட்டினத்தையும் போற்றிப்பாடும் ஒரு கவிதை நூலா என்று முதலில் எழுந்த எண்ணம்; கவிதைகள் பிறந்த காலப் பின்னணியையும், நாட்டுப்பற்றுடன் தனது சொந்த செலவில், மனைவியின் நகையை விற்று, கவிஞரின் குடும்பமே கவிதை நூலைத் தயாரித்த தகவல்களாலும், அதற்கு பிரெஞ்சு அரசாங்கம் ஏற்படுத்திய தடைகளை எண்ணும் பொழுதும், கவிஞரின் கவிதை வரிகளின் உவமை அழகிலும், கருத்துச் செறிவிலும் மனம் ஆழ்ந்து வந்தே மாதரம் என்று பாரதத் தாய்க்கும், சுதந்திர தாகம் கொண்ட அவளது அருமை மகனுக்கும் ஒருசேர தலை வணங்கும் வகையில் மாறிவிடுகிறது.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூல் தருவது நாட்டுப் பற்றையும், கவிதை அழகையும் ஒருங்கே அளிக்கும் சுவை விருந்து.

நன்றி:
தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation): http://www.tamilheritage.org/old/text/ebook/b_dasan/intro.html

படங்கள்:
பாரதிதாசனின் ‘கதர் இராட்டினப்பாட்டு’,  சுரதாவின் ‘பாரதிதாசன் பரம்பரை’ (பொதுவுடைமையா க்காப்பட்ட நூல்) நூல்களிலிருந்து

Series Navigationபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8கவிதை
author

தேமொழி

Similar Posts

23 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    தேமொழி சிறப்பாக பாரதிதாசனின் தேசப் பற்றைப் பற்றியும், தேசப் பிதா காந்திஜியின் கதராடை இயக்கம் பற்றியும் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்கு முதலில் எனது இனிய பாராட்டுகள்.

    ஆனால் அந்த தேசீய வரிகள் பாதிக் கதைதான்; அவரது பிற்கால மீதிக் கதை முரணானது.

    பாரதியாருடன் வாழ்ந்த வாலிப நாட்களில் கதராடை அணிந்த தேசீயக் கவிஞர் பாரதிதாசன் நாடு விடுதலை அடைந்த பிறகு, சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து, கதராடையை நீக்கிக் கருப்பாடையை அணிந்து கொண்டு திராவிடக் கவிஞராக மாறினார்.

    அப்போது அவர் கடவுள் மறுப்பாளராய் மாறி

    “சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும்
    பீரங்கி கொண்டு பிளப்பதும் எக்காளம் ?”

    என்றெல்லாம் எழுதினார்.

    கூண்டுக் கிளி கவிதையில்
    “அக்கா அக்கா என்றாய்
    அக்கா வந்து கொடுக்க
    சுக்கா, மிளகா
    சுதந்திரம் கிளியே”
    என்று சுதந்திர தாகத்தைக் கேலி செய்தார்.
    பாரதியார் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே
    ஆனந்த சுதந்திரம் அடைந்ததாகப் பாடிச் சென்றார்.
    ஆனால் நாடு விடுதலை பெற்ற பிறகு பாரதிதாசன் அந்த மகத்தான சாதனையைப் பாராட்டி ஒரு வரிப் பாடல் கூட ஏனோ எழுதவில்லை.
    தேசப் பிதா காந்திஜி சுடப்பட்டு மரணம் அடைந்ததற்கு ஒரு வரி இரங்கல் பா கூட ஏனோ எழுதவில்லை.

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      தேமொழி says:

      கட்டுரையைப் பாராட்டியதற்கு நன்றி ஐயா. உங்களது கருத்துரை மிக்க மகிழ்ச்சி தருகிறது.

      கவிஞரின் கடவுள் மறுப்புக் கொள்கை பற்றி ஆராய்ந்தால் அவரும் பிற கவிஞர்களைப் போல காலப் போக்கில் உணர்ச்சிபூர்வமாக மாறியிருப்பது தெரிகிறது. கடவுள் மறுப்பு சொன்ன கண்ணதாசன் பிறகு அர்த்தமுள்ள இந்து மதம் எழுதி, பிறகு அதனையும் தாண்டி ஏசு காவியமும் எழுதினார். பாரதிதாசனும் அவர் போலவேதான் குணம் கொண்டவராக இருந்திருக்க வேண்டும்.
      எங்கெங்கு காணினும் சக்தியடா;-தம்பி
      ஏழு கடல் அவள் வண்ணமடா!
      என்று பாடியவர்தானே பாரதிதாசன்.

      நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அவர் பார்வை சமுதாயச் சீர்திருத்தம் பக்கம் சென்றது நாம் அறிந்ததே.
      “பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு
      மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே”
      … என்றார், மேலும்
      “ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
      ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!”
      … எனப் பொதுவுடைமை பேசினார்.

      காலப் போக்கில் அவரது போராட்ட நோக்கத்தில் மாறுபாடு ஏற்படிருந்தாலும், அவர் சுதந்திரத்திற்காக அளித்த பங்கு வரலாற்றில் இடம் பெற வேண்டிய பதிவு அல்லவா?

      மேலும், இக்கட்டுரையின் நோக்கம் அவர் கவிதை நூல் ஒன்றின் இலக்கிய நயம் பாராட்டுவது. பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், கொள்கைகளையும் ஆராய்வதைக் கட்டுரையின் நோக்கமாக நான் கொள்ளவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      அன்புடன்
      ….. தேமொழி

    2. Avatar
      Bala says:

      [“அக்கா அக்கா என்றாய்
      அக்கா வந்து கொடுக்க
      சுக்கா, மிளகா
      சுதந்திரம் கிளியே”
      என்று சுதந்திர தாகத்தைக் கேலி செய்தார்.]

      இது மிகவும் தவறான ஒரு விளக்கம். இந்தக் கவிதையில் பாரதிதாசன் சுதந்திர தாகத்தைக் கேலி செய்யவில்லை. அது எளிதில் அடையமுடியாத ஒன்று என்று சிறப்பித்துத்தான் கூறுகிறார்.

      தமிழ்நாட்டின் விடுதலையை நாடியவர்கள் இந்திய விடுதலையை ஒரு துக்க நிகழ்வாகப் பார்த்தனர் என்பது வரலாறு. எனவே பாரதிதாசன் அதைப் பற்றிப் பாடாததில் எந்த வியப்பும் இல்லை.

    3. Avatar
      சோழன் says:

      //“சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும்
      பீரங்கி கொண்டு பிளப்பதும் எக்காளம் ?”
      என்றெல்லாம் எழுதினார்.
      //

      நானறிந்தவரை அவர் இப்படி எழுதியதாக சொல்வது ஒரு புரளி மட்டுமே. மஹாசயர் ஜயபாரதன் ஆதாரம் காட்டவும். இல்லாவிட்டால் பாரதிதாசனைப்பற்றி அவதூறு எழுதியதாம்.

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ///தமிழ்நாட்டின் விடுதலையை நாடியவர்கள் இந்திய விடுதலையை ஒரு துக்க நிகழ்வாகப் பார்த்தனர் என்பது வரலாறு. எனவே பாரதிதாசன் அதைப் பற்றிப் பாடாததில் எந்த வியப்பும் இல்லை.///

    பாரதிதாசன் என்னும் பெயரில் புகழைத் தேடிக் கொண்டு, பாரதியாரின் நிழல் என்று காட்டிக் கொண்டு தேசீயக் கவிஞர் சுப்புரத்னம் ஏனிப்படி வேடம் போட்டார் என்று தெரியவில்லை.

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      Bala says:

      சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே என்னும் பாடலை நீங்கள் தவறாகப் பொருளுணர்ந்துகொண்டீர்கள் என்று நான் கூறிய விளக்கத்திற்கோ அல்லது இந்திய விடுதலையைப் பாடவில்லை என்ற உங்கள் குற்றச்சாட்டிலும் பொருளில்லை என்ற விளக்கத்திற்கோ உங்களிடமிருந்து ஒரு பதிலுமில்லை.

      ஆனால் பாரதிதாசன் மீது ஒரு புதுப் பழியைப் போடுகிறீர்கள், நேர்மையில்லாதவர் என! (உங்கள் நேர்மை எங்கே?)

      {பாரதிதாசன் என்னும் பெயரில் புகழைத் தேடிக் கொண்டு, பாரதியாரின் நிழல் என்று காட்டிக் கொண்டு தேசீயக் கவிஞர் சுப்புரத்னம் ஏனிப்படி வேடம் போட்டார் என்று தெரியவில்லை.}

      பாரதிதாசன் தேசியக் கவிதான். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல இந்தியத் தேசியக் கவியல்ல. எம் தமிழ்த் தேசக் கவி. பாரதிதாசன் பரம்பரை என்று பல நூறு கவிஞர்கள் உருவாகக் காரணமாகவிருந்த புரட்சிக்கவி.

      இதில் அவர் எங்கே என்ன வேடம் போட்டார்? பாரதியின் பெயரை வைத்துக்கொண்டதால்தான் இவருக்குப் புகழ் வந்ததே தவிர தன் கவித்திறத்தால் இவர் புகழடையவில்லை என்று கூறுவது எந்த வகை அறிவியல்? கண்ணன் பெயரைச் சூட்டிக்கொண்டிருக்காவிட்டால் கருப்பையா (கண்ணதாசன்) காணாமல் போயிருப்பாரா?

      பாரதிதாசன் பாரதியின் பங்கை இருட்டடிப்பு செய்ததில்லை. (சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனி என்றெல்லாம் புகழ்ந்தார்)

    2. Avatar
      சோழன் says:

      // பாரதிதாசன் என்னும் பெயரில் புகழைத் தேடிக் கொண்டு, பாரதியாரின் நிழல் என்று காட்டிக் கொண்டு தேசீயக் கவிஞர் சுப்புரத்னம் ஏனிப்படி வேடம் போட்டார் என்று தெரியவில்லை.//

      பாரதியாரின் கவித்திறனுக்கும் அவரின் சிலபல நற்குணங்களுக்கும்தான் பாரதியின் தாசனானாரே தவிர அவரின் வருணாஷ்ரத்தையும் வைதீக இந்துமதப்பழக்கவழக்க ஆதரிப்பையும் ஏற்றுக்கொண்டதாக பொருளெடுக்கக்கூடாது.
      மறைந்த மலர்மன்ன்னும் அண்ணாவின் சிடராகவும் அண்ணாவைப்பற்றி நல்லவிதமாக தன் கடைசிநாட்கள் வரை எழுதியும்தான் வந்தார். அதற்காக அண்ணாவின் நாத்திகத்தையும் பார்ப்ப்ன எதிர்ப்பையும் ஏற்றார் எனச்சொல்லிவிடமுடியுமா? .

    3. Avatar
      Bala says:

      சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே என்னும் பாடலை நீங்கள் தவறாகப் பொருளுணர்ந்துகொண்டீர்கள் என்று நான் கூறிய விளக்கத்திற்கோ அல்லது இந்திய விடுதலையைப் பாடவில்லை என்ற உங்கள் குற்றச்சாட்டிலும் பொருளில்லை என்ற விளக்கத்திற்கோ உங்களிடமிருந்து ஒரு பதிலுமில்லை.

      ஆனால் பாரதிதாசன் மீது ஒரு புதுப் பழியைப் போடுகிறீர்கள், நேர்மையில்லாதவர் என! (உங்கள் நேர்மை எங்கே?)

      {பாரதிதாசன் என்னும் பெயரில் புகழைத் தேடிக் கொண்டு, பாரதியாரின் நிழல் என்று காட்டிக் கொண்டு தேசீயக் கவிஞர் சுப்புரத்னம் ஏனிப்படி வேடம் போட்டார் என்று தெரியவில்லை.}

      பாரதிதாசன் தேசியக் கவிதான். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல இந்தியத் தேசியக் கவியல்ல. எம் தமிழ்த் தேசக் கவி. பாரதிதாசன் பரம்பரை என்று பல நூறு கவிஞர்கள் உருவாகக் காரணமாகவிருந்த புரட்சிக்கவி.

      இதில் அவர் எங்கே என்ன வேடம் போட்டார்? பாரதியின் பெயரை வைத்துக்கொண்டதால்தான் இவருக்குப் புகழ் வந்ததே தவிர தன் கவித்திறத்தால் இவர் புகழடையவில்லை என்று கூறுவது எந்த வகை அறிவியல்? கண்ணன் பெயரைச் சூட்டிக்கொண்டிருக்காவிட்டால் முத்தையா (கண்ணதாசன்) காணாமல் போயிருப்பாரா?

      பாரதிதாசன் பாரதியின் பங்கை இருட்டடிப்பு செய்ததில்லை. (சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனி என்றெல்லாம் புகழ்ந்தார்)

  3. Avatar
    G SUBRAMANIAM says:

    bharathiyin pukalai parapiyadil bharathidasanukku pankundu. bharathiyarai patri cinema edukkatry seidu thotru ponar.Thomozhi avargalin karuthu miga sariyathu.Pirkalathil mariyathal bharathi dasanukku freedom struggle lil panku illaya enna?

  4. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    தேசீயக் கவிஞர் பாரதியாரின் தாசர் நாடு விடுதலை அடைந்த போது, ஏன் அந்த உன்னத சாதனைப் போராட்டத்தைப் பற்றி ஒருவரி கூடப் பாடவில்லை ?

    காந்திஜியின் கதராடை அணிந்த கவிஞர் சுப்புரத்தனம் ஏன் காந்திஜி கொலை செய்யப்பட்ட போது, ஒருவரி இரங்கற்பா கூட எழுதவில்லை ?

    ஆத்திகராவும், நாத்திகராவும் இரட்டை வேடம் போட்டுப் புகழ் ஈட்டிய பாரதிதாசன் மெய்யாக நாத்திகரா அல்லது ஆத்திகரா ? கவிஞர் பாரதிதாசனின் எந்த வேடம் மெய்யானது ? எந்த வேடம் மெய்யானது ?

    சி. ஜெயபாரதன்.

  5. Avatar
    Bala says:

    திரு ஜெயபாரதன்,
    {ஒரு காலத்தில் பாரதிதாசனுக்கு மீசையில்லை. பிறகு மீசை வைத்துக்கொண்டார். இது இரட்டை வேடம் இல்லையா? இப்படி ஏமாற்றலாமா?} என்ற இந்தக் கேள்வியும் நிச்சயம் உங்கள் பட்டியலில் இருக்கும் என்று நம்புகிறேன்.

    இளம்பருவத்தில் பாரதிதாசன் ஆத்திகராக இருந்தது உண்மை. ஆனால் விரைவில் அவர் நாத்திகராக மாறினார். இறுதிவரை நாத்திகராகவே வாழ்ந்தார். இதில் என்ன இரட்டை வேடம் என்பதைச் சான்றுகளுடன் விளக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
    (சுக்கா மிளகா கவிதைக்கு உங்களிடமிருந்து இன்னும் பதில் இல்லை)

  6. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    சஹோதரி ஸ்ரீமதி தேமொழி அம்மையின் அருமையான வ்யாசத்திற்கு நன்றிகள் பல.

    தேசத்தின் ஒரு மூலையில் இருக்கும் என்னிடம் குழல் உண்டு ஹார்மோனியம் இல்லை. ஹார்மோனியக் கட்டைகளை நினிவு கொண்டு ஸ்வரங்களை நினைவு கொள்ளல் ச்ரமமாக உள்ளது.

    இயன்றால் பாடலின் ராகம் பகிரவும்.

    புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்று போற்றப்படும் பெருந்தகை நாஸ்திகராக இருந்தால் என்ன ஆஸ்திகராக இருந்தால் என்ன?

    அவருடைய சொல்லாற்றல் அவர் யாருக்கு தாசனாய் தன்னை முன்னிறுத்திக்கொண்டாரோ அவருடைய சொல்லாளுகையை நினைவுறுத்துகிறதே. மஹாகவி ஸ்ரீ சுப்ரமண்ய பாரதியார் போன்றே சொற்கள் ஸ்ரீ பாரதிதாசனார் முன்பும் வந்து என்னைக் கையாளுங்களேன் என்று கேழ்ப்பது போல் இருக்கிறது அழகான விருத்தத்தில் அமைந்து இங்கு பகிரப்பட்ட அவர் கவிதைகளை வாசிக்கையில்.

    ஆஸ்திகராக இருந்து நாஸ்திகராய் அவர் மாறிவிட்டால் ஆஸ்திகராய் இருந்த காலத்தில் அவர் எழுதிய பக்தி பொங்கும் கவிதைகள் பின்னாட்களில் நாஸ்திகரான அவர் மட்டிலும் பொய்யாக ஆகியிருக்கலாமேயன்றி இன்றைய தினத்தில் வாசிக்கும் ஆஸ்திகர்களை மகிழ்விக்கத்தானே செய்யும்.

    எழுதியது யாராக இருந்தால் என்ன? அவர் எப்படி ஆயிருந்தால் என்ன? இறைவன் திருநாமம் உய்விக்கவே செய்யும்.

    அப்படித்தான் சாஸ்த்ரங்கள் பகருகின்றன.

    இதே போன்ற ஒரு மாற்று நிலை புகழ் பெற்ற உர்தூ கவியான ஜெனாப் மொஹம்மத் இக்பால் அவர்கள் வாழ்விலும் நிகழ்ந்தது என் நினைவில் வருகிறது. பகிர்ந்து கொள்கிறேன்.

    ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்தோசிதா ஹமாரா என்ற புகழ்பெற்ற தரானே-இ-ஹிந்தி (ஹிந்துஸ்தான மக்களின் கீதம்) என்ற உர்தூ கவிதையை எழுதியவர் புகழ்பெற்ற அமரகவியான ஜெனாப் மொஹம்மத் இக்பால். 16-08-1904 அன்று லாஹோர் நகரத்து ‘இத்தேஹாத்’ என்ற உர்தூ சஞ்சிகையில் இக்கவிதை முதன்முறையாகப் பதிப்பிக்கப்பெற்றது. அடுத்த வருஷம் லாஹோரின் சர்க்காரி கல்லூரியில் இவர் இந்தப் பாடலைப் பாடியபின் இந்தப்பாடல் மிகப்புகழ் பெற்றது. கராச்சி முதல் டிப்ரூகர் வரை கன்யாகுமாரி முதல் கில்கித் வரை மிகப்ரபலமானது இந்த தேசபக்திப்பாடல்.

    பாடலின் மிக அருமையான இரு வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன இந்த அமர கவியின் தேச பக்தியையும் மதசார்பற்று அனைத்து மதங்களையும் அரவணைக்கும் இவர் அன்புப் பாங்கையும் வெளிப்படுத்துமாறு.

    மஜ்ஹப் நஹீன் சிகாதா ஆபஸ் மே(ந்) பைர் ரக்னா
    मज़हब नहीं सिखाता आपस मे बैर रखना
    mazhab nahin sikAtA Apas main bair rakhnA
    மதங்கள் மனுஷ்யரிடையே பரஸ்பர விரோதங்கள் பேண போதிப்பதில்லை

    ஹிந்தி ஹை ஹம் வதன் ஹை ஹிந்தோஸிதா ஹமாரா
    हिन्दी है हम वतन है हिन्दोस्तान हमारा
    hindi hai hum vatan hai hindOsitA hamArA
    நாம் அனைவரும் ஹிந்தி (ஹிந்துஸ்தானி) நம் தேசம் ஹிந்துஸ்தான்

    என்று அருமையான பாடல். இன்றும் கூட தேசமுழுதும் தேசிய கீதத்திற்கு அடுத்தபடி மிகவும் ப்ரபலமான பாடல்.

    ஆனால்!!!!!!!!!!!!!!!!

    பின்னாட்களில் (1930 ல் இலாஹாபாதில் (Allahabad) இவர் தரானே-இ-மில்லி என்ற பாடல் எழுதினார். அதில் பாடுகிறார் பாருங்கள்.

    சீன்-ஓ-அரப் ஹமாரா ஹிந்தோஸ்தான் ஹமாரா
    चीन-ओ-अरब हमारा हिन्दोस्तान हमारा
    chIn-O-arab hamArA hindOsthAn hamArA
    சீனமும் அராபியாவும் நமது ஹிந்துஸ்தானமும் நமது

    முஸ்லிம் ஹை ஹம் வதன் ஹை ஸாரா ஜஹான் ஹமாரா
    मुस्लिम है हम वतन है सारा जहान हमारा
    muslim hai ham vatan hai sArA jahAn hamArA
    நாமெல்லாரும் முஸல்மான் கள் பூரா உலகமும் நமதே

    எவ்வளவு பெரிய மாறுபாடு பாருங்கள். முதலில் மத வேறுபாடுகள் பாராட்டாத ஒரு ஹிந்துஸ்தானத்து தேசபக்தர். ஆனால் பின்னாட்களில் முஃபக்கிர்-ஏ-பாகிஸ்தான் (mufakkir-e-pakistan) (பாகிஸ்தானிய சிந்தனையாளர்) என்று புகழ்பெற்ற பின் தன்னை ஒரு முஸல்மானாக மட்டும் முன்னிறுத்தித் தன் கவிதைகளைப் பொழிந்த ஒரு அன்பர்.

    பின்னும் மறுக்க இயலா இரண்டு விஷயங்கள்.

    1. தரானே-இ-ஹிந்தி ஆகட்டும் அல்லது தரானே-இ-மில்லி ஆகட்டும். கவிதையின் சுவை மாறவில்லை.பின்னாட்களில் இவர் புதியதாக உருவான் பாகிஸ்தானத்திற்கு குடியேறிவிட்டார்.

    2. ஆனாலும் கூட இன்றும் ஹிந்துஸ்தானமுழுதும் தேசிய கீதத்திற்கு அடுத்தபடி மிக அதிகமாய்ப் புகழ் பெற்ற பாடல்
    ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்தோசிதா ஹமாரா என்பதை மறுக்கவும் முடியுமோ.

    பெருங்காயம் காலி ஆகி விட்டாலும் என்ன டப்பாவில் மணம் பின்னும் வீசுகிறதே!

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      பிரிந்த இஸ்லாமிய நாட்டுக்குப் “பாகிஸ்தான்” என்ற பெயரை முதன்முதல் ஆக்கியவரே கவிஞர் இக்பால். ஹிந்துஸ்தான் தேசப்பாடல் பாடியவர் இஸ்லாமியராகத் தன்னைக் காட்டிக் கொண்டார். பிறகு இந்தியக் கொடியை வணங்காது தன்னைப் பாகிஸ்தானியாக வெளிப்படுத்திக் கொண்டார். ஆகவே அவர் முதலில் பாடிய “ஹிந்துஸ்தான் ஹமாரா” தேசியப் பாடல் பொருளற்றுப் போனது.

      ஆங்கிலேயர் இந்தியாவுக்குள் நுழையாது போயிருந்தால் இந்தியா தன்னிலை இழந்து முழுவதும் “பாகிஸ்தானாய்” ஆகியிருக்கும்.

      கவிஞர் இக்பால் வரலாற்று நியாயம்தான் பாரதிதாசனுக்கும்.

      பாரதியாரைப் போல் பாரதிதாசன் தேசீயக் கவிஞர் அல்லர். கதராடைக் காந்தி சீடரும் அல்லர். ஆத்மீகக் கவிஞரும் அல்லர். இந்திய விடுதலைக் கவிஞரும் அல்லர்.

      பாரதிதாசனின் உன்னத தமிழ்க் கவித்திறம் பற்றி இங்கே தர்க்க மில்லை.

      சி. ஜெயபாரதன்.

  7. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \தேசீயக் கவிஞர் பாரதியாரின் தாசர் நாடு விடுதலை அடைந்த போது, ஏன் அந்த உன்னத சாதனைப் போராட்டத்தைப் பற்றி ஒருவரி கூடப் பாடவில்லை ?\

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன், இந்தக் கேழ்விக்கு ஸ்ரீ பாலா அவர்கள் முன்னமேயே பதிலிறுத்து விட்டார்.

    ஒரு வித்யாசத்தையும் கூடவே பதிவு செய்கிறேன்.

    ஸ்ரீ பாலா அவர்கள், “எம் தேசம் தமிழ்த் தேசம்” அதுவே ஸ்ரீ பாரதிதாசனாரின் தேசம் என்ற படிக்கு மொழிந்துள்ளார்.

    எமது தேசம் அந்தத் தமிழ் தேசத்தையும் உள்ளடக்கிய அகண்ட ஹிந்துஸ்தானம். என் தேசத்தில் ஒரு ப்ரதேசத்தின் மீது ஆராக் காதல் கொண்ட அன்பரின் கவிதை வரிகள் என்னையும் தான் சொக்க வைக்கின்றன. தனியான தமிழ் தேசம் என்ற கருத்தின் மீது மட்டிலும் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு நல்லது என்று பட்டதைப் போற்றி அல்லது என்று பட்டதைப் புறக்கணிக்கிறேன். புரட்சிக்கவிஞர் ஸ்ரீ பாரதிதாசனாரின் கவிதைச் சுவை அவர் எத்தைப் பாடினார் அல்லது எத்தைப் பாடவில்லை என்பதனால் ஏன் குறைவு படும்?

    \காந்திஜியின் கதராடை அணிந்த கவிஞர் சுப்புரத்தனம் ஏன் காந்திஜி கொலை செய்யப்பட்ட போது, ஒருவரி இரங்கற்பா கூட எழுதவில்லை ?\

    அட கஷ்ட காலமே.

    பின்னாட்களில் அவர் காந்தியடிகளை ஒத்துக்கொள்ளாமல் போயிருக்கலாம். அல்லது அவர் எப்படி மஹாகவி ஸ்ரீ சுப்ரமண்ய பாரதியாரை தன் கடைசீக் காலம் வரை போற்றியே வந்தாரோ அதே போல் காந்தியடிகளையும் போற்றியே வந்திருக்கலாம். காந்தியடிகள் இறந்த பின் அவர் மீது இரங்கற் பா எழுதினால் தான் அவர் காந்தியடிகளைப் போற்றியவர் என ஒரு அலகீடு எதற்காக வைக்க வேணும் என எனக்குப் புரிபடவில்லை. ஒப்பாரியின் ஓலம் தான் பற்றுதலுக்கு அலகீடாகுமோ?

    மஹாகவி ஸ்ரீ சுப்ரமண்ய பாரதியார் பெண்விடுதலையைப் பற்றிப் பாடினார் என்று கதைக்கின்றார்களே அவர் ஏன் ஸ்ரீமதி முத்து லக்ஷ்மி ரெட்டி அம்மையார் வாழ்க்கையில் உயர்ந்ததைப் பற்றி கவிதையோ அல்லது வ்யாசமோ எழுதவில்லை என்றும் குற்றஞ்சாட்டுபவர்கள் இருக்கிறார்கள். அவர் வீர பாண்டிய கட்டபொம்மன் பற்றிப் பாடவில்லை என குற்றஞ்சாட்டுபவர் இருக்கிறார்கள்.

    மிகப்பெரிய ஆலவ்ருக்ஷத்தில் ஏன் துக்குளியூண்டு பழம் காணப்படுகிறது. வலுவற்ற லதையில் எத்துணை பெரிய பூஷணிக்காய் காய்க்கிறது எனக்கூட குற்றஞ்சாட்டலாமே? இதற்கெல்லாம் பதிலுண்டு?

    \ஆத்திகராவும், நாத்திகராவும் இரட்டை வேடம் போட்டுப் புகழ் ஈட்டிய பாரதிதாசன் மெய்யாக நாத்திகரா அல்லது ஆத்திகரா ? கவிஞர் பாரதிதாசனின் எந்த வேடம் மெய்யானது ? எந்த வேடம் மெய்யானது ?\

    அன்பர் ஸ்ரீ ஜெயபாரதன் அவர்களிடம் ஒரு பெரிய கஷ்டம் சொந்தக் கதைகளை உண்மை போல் புனைவு செய்து முன்வைப்பது.

    ஸ்ரீ பாரதி தாசனார் ஒரு காலத்தில் ஆஸ்திகராக இருந்தார் என்பதும் பின்னாட்களில் நாஸ்திகரானார் என்பதும் உலகமறிந்த செய்தி.

    அந்தந்தக் காலத்தில் அவர் இருந்த நிலை வேடம் என்று சொல்ல அன்பர் அவர்கள் ஆதாரம் என்ற ஒன்றையும் கூடவே முன் வைத்தால் அன்பர் அவர்கள் முன் வைக்கும் கருத்து வாஸ்தவிகமானதா அல்லது அன்பர் அவர்கள் அழகு தமிழில் எழுதும் பல புனைவுகளில் மற்றொன்றா என அறியலாமே?

  8. Avatar
    Bala says:

    திரு ஜெயபாரதன்,
    {ஆங்கிலேயர் இந்தியாவுக்குள் நுழையாது போயிருந்தால் இந்தியா தன்னிலை இழந்து முழுவதும் “பாகிஸ்தானாய்” ஆகியிருக்கும்.}
    ஆங்கிலேயர்கள் வராமல் போயிருந்தால் இந்தியா என்ற நாடே முதலில் ஏற்பட்டிருக்காது.
    {பாரதியாரைப் போல் பாரதிதாசன் தேசீயக் கவிஞர் அல்லர். கதராடைக் காந்தி சீடரும் அல்லர். ஆத்மீகக் கவிஞரும் அல்லர். இந்திய விடுதலைக் கவிஞரும் அல்லர்.}
    ஷேக்ஸ்பியர் மீதும் இந்தக் குற்றச்சாட்டுகளை வைக்கலாம்!
    (சுக்கா மிளகா …..?)

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      சுமார் 2500 ஆண்டுகட்கு முன்னே குரு அரிஸ்டாட்டில் இந்தியா என்ற தேசத்துக்கு பட வழிகாட்டி அவரது சீடர் மகா அலெக்ஸாண்டர் படையுடன் வருகை தந்து புருசோத்தமன் மன்னவனோடு போரிட்டு மீண்டது புளுடார்க் எழுதிய கிரேக்க வரலாற்று ஏடுகளில் உள்ளன.

      இந்தியா வென்று பிரிட்டன் பாரத உப கண்டத்துக்குப் பெயர் வைத்தாக வரலாறு எதுவும் இல்லை. ஆதாரமும் இல்லை.

      http://en.wikipedia.org/wiki/India

      http://en.wikipedia.org/wiki/Alexander_the_Great

      Invasion of the Indian subcontinent
      The phalanx attacking the centre in the battle of the Hydaspes by Andre Castaigne (1898–1899)After the death of Spitamenes and his marriage to Roxana (Roshanak in Bactrian) to cement relations with his new satrapies, Alexander turned to the Indian subcontinent. He invited the chieftains of the former satrapy of Gandhara, in the north of what is now Pakistan, to come to him and submit to his authority. Omphis, ruler of Taxila, whose kingdom extended from the Indus to the Hydaspes, complied, but the chieftains of some hill clans, including the Aspasioi and Assakenoi sections of the Kambojas (known in Indian texts also as Ashvayanas and Ashvakayanas), refused to submit.[110]

      சி. ஜெயபாரதன்.

  9. Avatar
    Bala says:

    நீங்கள் கொடுத்துள்ள இணைப்புகளிலும், நீங்கள் எடுத்துக்காட்டியுள்ள மேற்கோளிலும் இந்தியத் துணைக்கண்டம் என்னும் சொல்லாட்சிதான் உள்ளது. இந்திய நாடு என்னும் சொல் 2500 ஆண்டுகளாகப் பழக்கத்தில் உள்ளதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. (முதல் இணைப்பில் 1947ல் தான் ‘இந்திய நாடு’ தோன்றியது என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது)

    நீங்கள் வெளிநாட்டவரின் குறிப்புகளைத் தேடி அலையவேண்டிய தேவை இல்லை. 2500 ஆண்டுகளாகத் தமிழகம் ‘இந்திய’நாட்டின் கீழ் இ்ருந்த்தாக ஒரே ஒரு தமிழ்ச்சான்றைக் காட்டுங்கள் பார்ப்போம்.
    (சுக்கா மிளகா……?)

  10. Avatar
    Bala says:

    பாரதிதாசனைப் பற்றி நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளைத் தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்க வேண்டும் அல்லது தவறுதலாகக் கூறிவிட்டேன் என்று ஒரு வரியாவது எழுதவேண்டும். இரண்டுமே இல்லாமல் வேறு ஏதோ ஒரு புதுச் சால் ஓட்டுவது ஏன்? இது என்ன நேர்மை?

  11. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ஆங்கிலேயர்கள் வராமல் போயிருந்தால் இந்தியா என்ற நாடே முதலில் ஏற்பட்டிருக்காது.\

    சரித்ரம் பற்றிய தவறான புரிதல். பரங்கிக் கும்பினியர் வருவதற்கு பல்லாயிரம் வருஷமுன்பே பாரதம் (அகண்ட பாரதம்) இருந்திருக்கிறது. ஹிந்துஸ்தானம், இந்தியா இத்யாதிகள் பின்னர் வந்த பெயர். பாரதம் என்று இந்த மிகப்பரந்த தேசம் எனக்குத்தெரிந்து மிகப்பழைய சம்ஸ்க்ருத இலக்கியங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    \சுமார் 2500 ஆண்டுகட்கு முன்னே குரு அரிஸ்டாட்டில் இந்தியா என்ற தேசத்துக்கு பட வழிகாட்டி அவரது சீடர் மகா அலெக்ஸாண்டர் படையுடன் வருகை தந்து புருசோத்தமன் மன்னவனோடு போரிட்டு மீண்டது புளுடார்க் எழுதிய கிரேக்க வரலாற்று ஏடுகளில் உள்ளன. இந்தியா வென்று பிரிட்டன் பாரத உப கண்டத்துக்குப் பெயர் வைத்தாக வரலாறு எதுவும் இல்லை. ஆதாரமும் இல்லை.\

    சான்றாதாரம் சார்ந்த அருங்கருத்து. பணிவார்ந்த வணக்கங்கள். ஜெய் ஹிந்த்.

    \ஆகவே அவர் முதலில் பாடிய “ஹிந்துஸ்தான் ஹமாரா” தேசியப் பாடல் பொருளற்றுப் போனது.\

    பாடலில் பொதிந்துள்ள ஆழமான தேசபக்தி மற்றும் மத ஒற்றுமை என்ற கருத்து என்றும் பொய்க்காதே? ஜெனாப் இக்பாலின் தரானே-இ-மில்லியும் அவரின் பின்னாள் கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அவரது தரானே-இ-ஹிந்த் மற்றும் அவரது முன்னாள் ஆதர்சமான வாழ்வு இன்றும் எனது போற்றலுக்கும், ஹிந்துஸ்தான மக்கள் அனைவருடைய போற்றலுக்கும் உரியது. எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு அவரது பின்னாள் நிலைப்பாடுகளை நான் ஹிந்துஸ்தான மக்களுக்கு சுட்டிக்காட்டுவேன்.

    இன்றும் கூட ஹிந்துஸ்தானத்தின் பல பகுதிகளில் தேசபக்திப்பாடல் என ஏதேனும் பாடப்படவேண்டுமானால் முதன்மையாகக் கையாளப்படுவது இந்தப்பாடலே.

    பாடல் அனைவருக்கும் பொருளற்றுப் போகவில்லை. பாடியவருக்கும் அவரது பின்னாளைய கொள்கைகளுக்கு உடன்படுபவர்களுக்கும் மட்டிலும் பின்னாட்களில் அப்பாடல் பொருளற்றதாகி விட்டது.

    \ஆங்கிலேயர் இந்தியாவுக்குள் நுழையாது போயிருந்தால் இந்தியா தன்னிலை இழந்து முழுவதும் “பாகிஸ்தானாய்” ஆகியிருக்கும்.\

    thats hypothetical

    வெறுப்பில் உருவான பாகிஸ்தான் Baqi sthan ஆகத் தேய்ந்தது சரித்ரம்.

    பரங்கிக் கும்பினியர் ஹிந்துஸ்தானத்தில் வராது இருந்திருந்தால் இன்றைக்கு இருக்கும் நிலப்பரப்பை விட மிகப்பரந்ததான ஹிந்துஸ்தானம் மிகுந்த செல்வச் செழிப்புடன் இருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் சொல்லலாம். counter hypothesis.

    \பாரதியாரைப் போல் பாரதிதாசன் தேசீயக் கவிஞர் அல்லர். கதராடைக் காந்தி சீடரும் அல்லர். ஆத்மீகக் கவிஞரும் அல்லர். இந்திய விடுதலைக் கவிஞரும் அல்லர்.\

    பாதி உண்மையான கருத்து. தங்களுடைய மீதி உண்மையான கருத்து கீழே.

    \தேமொழி சிறப்பாக பாரதிதாசனின் தேசப் பற்றைப் பற்றியும், தேசப் பிதா காந்திஜியின் கதராடை இயக்கம் பற்றியும் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்கு முதலில் எனது இனிய பாராட்டுகள்.ஆனால் அந்த தேசீய வரிகள் பாதிக் கதைதான்; அவரது பிற்கால மீதிக் கதை முரணானது.பாரதியாருடன் வாழ்ந்த வாலிப நாட்களில் கதராடை அணிந்த தேசீயக் கவிஞர் பாரதிதாசன் நாடு விடுதலை அடைந்த பிறகு, சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து, கதராடையை நீக்கிக் கருப்பாடையை அணிந்து கொண்டு திராவிடக் கவிஞராக மாறினார்.\

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன், இதுவும் உங்களது கருத்தே.

  12. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \பாரதிதாசனின் உன்னத தமிழ்க் கவித்திறம் பற்றி இங்கே தர்க்க மில்லை.\

    I totally agree with you. I was not logical in discussing about poetical beauty in the poems of Sri Bharathidasan.

    Sir, as an exception, you made a logical point :-(

  13. Avatar
    புனைபெயரில் says:

    விக்கிப்பீடியாவை சரித்திர சான்றாக காட்டுவதை பார்த்தால் நகைப்புத் தான் வருகிறது…

  14. Avatar
    தேமொழி says:

    அன்பு சகோதரர் திரு. க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு நன்றி. கட்டுரை உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். பாடலின் ராகம் தெரியவில்லையே, அந்நூலில் அத்தகவல் இடம் பெறவில்லை. மேலும் பாடல் முழுமையையும், அதன் சுட்டியையும் கீழே காண்க.
    பறை முழக்கம் >>> http://www.tamilheritage.org/old/text/ebook/b_dasan/b_dasan.html

    ஹார்மோனியக் கட்டைகளை நினைவு கொண்டு வர கீழே உள்ள சுட்டியில் உள்ள படம் உதவக்கூடும்.
    http://xa.yimg.com/kq/groups/1197562/sn/1285681090/name/n_a

    அன்புடன்
    ….. தேமொழி

    _____________________________________

    காந்தியடிகளும் கதரும்
    பறை முழக்கம்

    சுவை : வீரம்

    இதன்மெட்டு, கடைசிப்பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும்
    ஸ்வரத்தால் அறிக

    அன்னியர் நூலைத் தொடோம் என்றசேதி
    அறைந்திடடா புவி முற்றும் – எங்கள்
    அறுபதுகோடித் தடக்கைகள் ராட்டினம்

    சுற்றும்-சுற்றும்-சுற்றும்
    இன்னும் செல்லாது பிறர்செய்யும் சூழ்ச்சிகள்
    என்று சொல்லிப் புயம் தட்டு – அட
    யானையின்மேல் வள்ளுவா சென்று நீபறை

    கொட்டு-கொட்டு-கொட்டு
    இன்னல் செய்தார்க்கும் இடர்செய்திடாமல்
    இராட்டினம் சுற்றென்று சொல்லும் – எங்கள்
    ஏதமில்காந்தியடிகள் அறச்செயல்

    வெல்லும்-வெல்லும்-வெல்லும்
    கன்னலடா எங்கள் காந்தியடிகள் சொல்
    கழற்றுகின்றேன் அதைக் கேளே – நீவிர்
    கதரணிவீர் உங்கள் பகைவரின் வேரங்குத்

    தூளே-தூளே-தூளே
    பால்நுரை போலப் பருத்தியுண்டு சொந்தப்
    பாரத தேசத்தில் எங்கும் – எனில்
    பண்டைமுதல் இழை நூற்பதிலே யாம்

    சிங்கம்-சிங்கம்-சிங்கம்
    வானம் புனல் சுடர் நாணும்படி உடை
    வர்ன(ண)மும் சொர்ன(ண)மும் கொண்டு – பெரும்
    வையம் களித்திட நெய்யும் திறம்எமக்

    குண்டு-உண்டு-உண்டு
    ஆனஇந்நாட்டினைச் சந்தையென் றாக்கிய
    அந்நியர் போக்கையும் கண்டோம் – எனில்
    ஆக்கந் தருவது சக்கரம் ஆம் எனக்

    கொண்டோம்-கொண்டோம்-கொண்டோம்
    பானல் விழியுடயாளெங்கள் தாயிந்தப்
    பாரினை யாள்பவள் என்றே – நெஞ்சில்
    பாயும் எழுச்சிக் கனல் சொன்னதாகச்சொல்

    நன்றே-நன்றே-நன்றே
    தடக்கைகள் – நீண்டகைகள் ; இன்னல் – துன்பம் ;
    ஏதமில் காந்தியடிகள் – குற்றமில்லாத காந்தியடிகள்
    கன்னல் – கரும்பு ; பண்டைமுதல் – ஆதிமுதல்
    சுடர் – சூரியன் ; பானல்விழி – பானல் பூப்போன்ற கண்
    எழுச்சிக்கனல் – ஆவேசத்தீ)
    _____________________________________

    கடைசிப்பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும்
    ஹார்மோனிய ஸ்வரம்

    ஸரி க க / கா க க / கா க க / கா மா கா

    அன்னியர் / நூலைத்தொ / டோமென்ற / சேதிய

    ரீ கா ரீ / ரிக மா மா / மா மா ,, / கம பா

    றைந்திட / டாஅபுவி / முற்றும்,, / எங்கள்

    ஸ்ஸ் ஸ்¡ ஸா / ஸ்நி நீநீ / தா தா நீ* / பா மா கா

    அறுபது / /கோஒடித / டக்கைகள் / ராட்டினம்

    கா கா , / கா கா , / கா பம பா ,,

    சுற்றும் / சுற்றும் / சுற்றும் ,,

    ஸ்¡ ஸ்¡ நீ / ஸ்¡ ஸ் ஸ் ஸ்¡ ஸ் ஸ் / ஸ்¡ ஸ்¡ ரீ

    இன்னும்சொல் / லாதுபி / றர்செய்யும் / சூழ்ச்சிகள்

    ஸ்¡ ஸ்¡ நீ / தா தா தா / தா தா ,, / தப

    என்றுசொல் / லிப்புயம் / தட்டு ,, / அட

    பா ஸ்¡ ஸ்¡ / ஸ நி நீ நீ / தா தா நீ* / பா மா கா

    யானையின் / மேல்வள்ளு / வாசென்று / நீபறை

    கா கா / கா கா / காம மபா

    கொட்டு / கொட்டு / கொட்டு

    (* இக்குறி கருப்புக்கட்டை)
    _____________________________________

  15. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \பாரதிதாசனைப் பற்றி நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளைத் தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்க வேண்டும் அல்லது தவறுதலாகக் கூறிவிட்டேன் என்று ஒரு வரியாவது எழுதவேண்டும். இரண்டுமே இல்லாமல் வேறு ஏதோ ஒரு புதுச் சால் ஓட்டுவது ஏன்? இது என்ன நேர்மை?\

    I am sorry to say this. This sort of hit and run statements of Sriman Jeyabharathan are the rule and are not exception. In another thread, I am again so sorry to say that with the help of information shared by respected Sriman Jeyabharathan himself, I have reminded him that the hate based conclusions he shared in this forum are wrong.

    Again, this is not for the purpose of scoring points. To praise someone not worthy of it may still be ignored. But to cast bad aspersions on a soul simply on the basis of hate is gross injustice, whoever that soul may be, whatever his mother tongue, whichever his religion and whatever his race.

    Why could not we agree or disagree on what is being written rather than who has written it and at what state of mind.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *