எம். ஏ. சுசீலாவின் தேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.

This entry is part 5 of 26 in the series 24 பிப்ரவரி 2013

அம்மாவை விமர்சிக்கலாமா.. உள்ளும் புறமும் அறிந்த அம்மாவாய் இருப்பின் விமர்சிக்கலாம் என்றே தோன்றுகிறது. பிடித்தது பிடிக்காதது எல்லாம் அவர்களுக்குத் தெரிந்தாலும் மகளாய் இங்கே ரசனைப் பார்வை மட்டுமே மிச்சமிருக்கிறது.. அம்மாக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தேவதைகள் என்பது இன்னொரு முறை நிரூபணமாகி இருக்கிறது.

இலக்கிய உலகில் செங்கோல் ஏந்திய தேவதைகளில் என் தமிழன்னை சுசீலாம்மா ஒரு முக்கிய தேவதை. தன்னைத் தேடித் தேடிக் காணும் பெண்களில் எல்லாம் கண்டடைந்து எழுத்தாய் விவரிக்கும் நேயம் அவருக்கே வாய்த்தது. சமயத்தில் ருத்ர ரூபிண்யையும் கூட.

நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை என பாரதியின் புதுமைப் பெண்ணுக்கே உரிய அம்சங்களை எங்களுள் புகுத்தியவர், எங்கள் பார்வைகளை மாற்றியவர் என்ற பெருமை அவருக்கு மட்டுமே உரித்தானது. கிட்டத்தட்ட அவர் ஆய்வுக்காக வாங்கிய அநேக புத்தகங்களை (சுமார் 300 வரை என்னிடம் கொடுக்கப்பட்டிருக்கலாம். ) படித்து என் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டேன் எனலாம்.

மொழி என்னும் தேவதையின் கைபிடித்து உலவக் கூட்டிச் சென்றவர் அவர், தாய் சேய்க்கு நடை பழக்குவதைப்போல. அந்த சரஸ்வதியே இன்னும் எழுதிப் பழகும் முயற்சியில் இருப்பதாக முன்னுரையில் கூறி இருக்கிறார். நாமெல்லாம் எம்மாத்திரம்..

செத்தும் கொடுக்கும் கஸ்தூரி, வைகை பெருகிவர.. எந்தச் சூழலிலும் தன்னுடைய வீட்டை நேசிக்கும் பெண்ணாக முத்தம்மா, கசக்க வைத்த கல்யாணியின் கன்னிமை , உயிர்த்தெழலில் அனுவின் ரௌத்திரம், விட்டு விடுதலையாகும் சுதந்திரம் இன்றும் கூட வேண்டும் அலமு எல்லாமே பெண் ஆண்கள் சார்ந்த சமூக அமைப்பில் அவர்கள் கட்டளைக்கு அல்லது குடும்பத்தின் , இயற்கையின், தேவையின் கட்டளைக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டிய கட்டாயத்தைச் சொன்ன கதைகள்.

ப்ரியாவினுள் ஒரு ராஜியையும் ராஜியினுள் ஒரு பிரியாவையும் பதிய வைத்த நட்பு, விஜி பாருவின் சந்திப்பு,    நட்புக்கான கவிதைகள். நட்பெனும் கூடு பெண்களுக்கு  மட்டும் அங்கேயே கலைந்து விட ஆண்கள் மட்டும் நட்பு வானில் சிறகடிக்க முடிந்திருக்கிறது. எத்தனை ஆண்டுகள் ஆயிற்று இந்தக் கதைகள் எல்லாம் வந்தும். இன்றும் இதே தொடர்கிறது.

செருப்பைப் தவறவிடும் உமா, முகங்களற்ற பயங்களோடு இருக்கும் அம்மா, குழந்தைகள் காப்பகத்தில் கைக்குழந்தையை விட்டு விட்டுத் தவிப்போடு வேலைக்குச் செல்லும் பானு, என மத்தியதர வர்க்கத்து மங்கையரின் பிரச்சனைகளே பெரும்பாலும் கதைக்களனாக இருக்கின்றன.

நான் பேச நினைப்பதெல்லாம் , இப்போது பேசுவதற்குக்கூட நேரமில்லாமல் பொறுமையில்லாமல் போய்விட்ட குடும்பச் சூழல்களை வரைகிறது. ஒரு ஆசிரியையாக தன்னிடம் தன்னை நெருங்கும் காதல் பற்றி யோசனை கேட்ட மாணவிக்கு சரியான நேரத்தில் வழிகாட்டி உதவமுடியாமல் போன மன வருத்தம் சோகம் உண்டாக்கியது. சரியான சமயத்தில் சரியான உரையாடல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என உணர வைத்த கதைகள்.

கண் திறந்திட வேண்டும் மிக சிறப்பான கதை. பெண் கல்வியை வலியுறுத்தும் கரு சிறப்பு. கல்வி மறுக்கப்படும் மகேசுகளும் மகேசுவரிகளும் இரு வேறு உலகத்தின் பெண்களைப் படம் பிடித்தது. ஆசிரியப் பணியிலிருந்து கட்டாய ஒய்வு பெறச் சொல்லும் கணவன், தேவை ஏற்படும் போது சந்தர்ப்பவாதியாவது வெறுப்பை உண்டாக்கியது. பொம்பளை வண்டி குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த கதை.

ஒரு சில கதைகள் ஆண்களை முன்னிலைப்படுத்தியும் இருக்கிறது. ”சாருடைய வேர்கள் ஆழமானவை” என சுப்பையா பெருமிதமாய் எண்ணும் நிர்வாகத்தின் நேர்மையற்றதன்மைக்குப் பணியாத கம்பீரமான கந்தசாமி சார் பற்றிய கதை ஒரு சான்று. பொன்னை விரும்பும் பூமியிலே ஊனமுற்ற மனைவியையும் சுமந்து செல்லும் உலகைக் காட்டும் கணவன் இன்னொரு சான்று.

டாக்டருக்காகக் காத்திருந்து சலிக்கும் கதையும் முடிவும் கூட ரொம்ப யதார்த்தமானதுதான். மைனஸ் பத்து மதிப்பெண் பேப்பர் திருத்தல்களில் ஏற்பட்ட குளறுபடியால் தன் மேற்படிப்பை இழந்து குடும்பத்தின் அன்றைய சூழ்நிலைக்காய் வேலைக்குச் செல்லும் மாணவனின் ஆதங்கம் வருத்தமானது.

மானுடம் வென்றதம்மாவும், சங்கமமும்  மனித நேயத்தின் சிறப்பான வெளிப்பாடு.  ரோஜாப்பூக்களும் வியர்வை உப்புக்களும் உழைப்பின் சிறப்பைச் சொன்ன கதைகள்

அரசியல் கட்சிகளுக்காய் தீக்குளிக்கும் தொண்டனின் கதை அவர்களைத் திருத்த இயலாத இயலாமையை வெளிப்படுத்தியது. மனிதனைத் தேடுகிறேன் சிந்திக்க வைத்த கதை. தரிசனமும் , ஆத்தாவும்.  இழிவரல் உண்டாக்கிய கதைகள். சாத்திரம் அன்று சதி…யில் ரானனும் சந்தர்ப்பவாதியாக தன்னையே வெறுக்கும் இடம் சரியாக அமைக்கப்பட்டிருந்தது.

தான் சின்னப்பிள்ளையில் சரியாக கவனித்து ஊக்கமளிக்காத மகனிடமே சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்கும் நேரமில்லை கதை நச் முடிவு. ஆற்றில் போட்டாலும் அளந்து போடும் நாம் ஆன்மீகம் என்றால்  அளவில்லாமல் போடுகிறோம் என உணர்த்திய கதை “காசு”

மானிடவெர்க்கென்று பேச்சுப்படில். “ உன் அற்புதத்தை நானே அற்பமாக்கிவிட்டேனம்மா” எனப் பெரியாழ்வார் நெகிழும் இடம், புதிய பிரவேசங்களில் ராமனின் மனதில் புதிய பிரவேசத்தைத் துவக்கி வைக்கும் சீதை, சங்கிலி பெண்ணை இன்னொரு விடுதலைக்கு இட்டுச் செல்லும் கதை, இவற்றுள் இருவேருலகம் இதுவென்றால் ..மிகவும் நெகிழ்த்திய கதை. கண்ணோரங்களைக் கசிய வைத்தவை இக்கதைகள்.

தேவந்தி இவற்றுள் சிகரம். தன்னைத் தெய்வமாக எண்ணக் கற்பிக்கப்பட்ட ஒருவன் இல்லறத்தில் இயல்பாய் ஈடுபடாமல் மனைவியையும் உணர்வுள்ள பெண்ணாய் எண்ணாமல் நடத்தும் கதை. துறவறம் என்பது ஞானியர்க்கே வாய்க்கக் கூடும். ஆனால் உயிரும் ரத்தமும் சதையுமான வாழும் ஆசையுள்ள ஒரு பெண்ணை மணந்து அவளை கட்டாயத் துறவுத் தன்மைக்கு இட்டுச் செல்வது என்ன நியாயம். இது மட்டுமல்ல. இதில் மனம் பிளந்து தேவந்தி கண்ணகியிடம் கேட்கும் கேள்விகள் மிகவும் நியாயமானவை. இருவருமே பிரிவெனும் ஆற்றாமையில் ஆழ்ந்திருந்தாலும் வணிக குல மங்கைக்கு வாழ்வென்பதன் ருசிகள் பிடிபட்டிருக்கவாவது செய்திருந்தது. ஆனால் அவள் தோழிக்கோ வாழ்வென்பது என்ன அதன் ருசிகள், தேவைகள் என்ன என்பது தெரியாமலே ஒரு உலகம் மூடப்பட்டிருப்பதான சோகம்., அதை விட்டு வெளியேற முடியாபடியான கண்ணுக்குத் தெரியாத சமூக வலைகள், நெஞ்சைப் பிழிந்தது.

எல்லாவற்றையும் தாண்டு என்றும் தடை ஓட்டங்கள் தொடர்ந்து ஓடு என்றும்தான் சொல்கின்றதம்மா.. பெரிதினும் பெரிதுகேள் என்கிறது மனம். ஒத்திகை ஓட்டங்களில் ஓடி ஓடியே களைத்து விடும் வாழ்வில் நிஜமான போட்டியில் ஜெயிப்பது குறித்தான சிந்தனைகளே மேலோங்குகிறது. நாமும் கலந்து கொண்டோம் என்று திருப்திப்படுவதா. அது மட்டுமே போதுமா.. இப்போதைக்குப் போதும். ஆனால் முழுமையாகப் போதாது.. முயன்றுகொண்டே இருந்தால் இன்னும் சாதிப்போம் என்று காத்திருக்கச் சொல்கிறது கொஞ்சம் பக்குவப்பட்ட மனம்.

அடர் இருளில் கீற்று வெளிச்சமாக வந்த மொழியென்னும் தேவதையே, என் கரம் பிடித்து  பிரகாசமான ஒளிஉலகுக்கு அழைத்துச் சென்றவளே.. வாழ்க பல்லாண்டு.. எம் எல்லோரின் நலனுக்காகவும் வாழ்க வளமுடன்.

குறிப்பு :- சுசீலாம்மாவின் பிறந்த தினம் ஃபிப் , 27,. எனவே இந்த ரசிகப் பார்வை அவர்களுக்கான வாழ்த்து. மொழியை உண்பவர்கள் வேறென்ன தந்து விடப் போகிறோம், மொழியைத் துணைக்கழைப்பதையும் பரிசளிப்பதையும் தவிர.. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா, வாழ்க வளமுடன், நலமுடன்.

நூல் :- தேவந்தி
ஆசிரியர் :- எம். ஏ. சுசீலா
பதிப்பகம் :- வடக்கு வாசல்
விலை – ரூ. 225.

Series Navigation‘விஸ்வரூபம்’ நாவல் நூல் வெளியீட்டு விழா மார்ச்2 சனிக்கிழமை சென்னையில்பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வீக யுகத்தில் நிலவை முடுக்கி ஓட்டியது உள்ளிருந்த மின்காந்த உந்துசக்தியே
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *