‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 19. அ.முத்துலிங்கம் – ‘மகாராஜாவின் ரயில் வண்டி’.

This entry is part 9 of 28 in the series 10 மார்ச் 2013

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 19.
அ.முத்துலிங்கம் – ‘மகாராஜாவின் ரயில் வண்டி’.
வே.சபாநாயகம்.

கீத் மில்லர் சொல்கிறார், “உண்மையான கதைகளை எழுத வேண்டாம். யாரும் நம்பமாட்டார்கள். உண்மைத் தன்மையான கதைகளை எழுதுங்கள்”.
அப்படித்தான் இந்தக் கதைகளும். எல்லாமே உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் கணிசமான அளவு கற்பனை வாசகம் கலக்கப்பட்டவைதான். கீத்மில்லர் சொன்னதுபோல் உண்மைச் சம்பவங்களை எழுதினால் யார் நம்பப்போகிறார்கள்?
நாலு வருடங்களாக எழுதிச் சேர்த்தவை இவை. ஆப்பிரிக்கா, கனடா, பொஸ்னியா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை என்ற உலக நாடுகளின் பின்னணியில் எழுதப்பட்டவை.
வார்த்தைகளே என் கதைகளுக்கு ஆரம்பம். நடுநிசியில் அபூர்வமாக ஒரு வார்த்தை வந்து என்னைக் குழப்பிவிடும். அது என்னை வசீகரிக்கும்; சிந்திக்க வைக்கும்; பிறகு ஆட்கொள்ளும் அப்படித்தான் தொடக்கம்.
ஜீன் ஜெனே என்ற பிரபல பிரஞ்சு எழுத்தாளர் சொலகிறார்: ‘வார்த்தை என்ற ஒன்று இருந்தால் அது உபயோகப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் அது கண்டுபிடிக்கப்பட்டிருக்கக் கூடாது; ஒரு வார்த்தை அரைகுறை வயதாக அழிய நேரிடுவது சோகமானது; உயர்ந்த கலைஞனின் பங்கு எந்த வார்த்தைக்கும் அதன் மதிப்பை உயர்த்துவதுதான்’.
சிலர் வேறு மாதிரி. எனக்குத் தெரிந்த ஒருவர் வித்தியாச மானவர். மை படாத ஆறு தாட்களை எடுத்துக்கொண்டுபோய் மேசையில் குந்துவார். அப்படியே நிறுத்தாமல் எழுதிக்கொண்டு போவார். பேப்பர் முடியும் போது கதையும் முடிந்து விடும். ‘இது எப்படி?’ என்று கேட்டால் ‘கதையை அது தொடங்கும்போது ஆரம்பித்து, அது முடியும்போது முடித்துவிட வேண்டும்’ என்பார். நானும் புரிந்ததுபோல தலையை ஆட்டுவேன்.
சிறுகதை படைப்பது அவ்வளவு இலகுவான காரியமா?
என் நண்பர் ஒருவர் பிற மொழி எழுத்தாளர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் படைத்த மிகச் சிறந்த கதைகளைத தமிழில் மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டிருந்தார். அந்த முயற்சிக்கு உதவுவதற்காக நான் ஒரு 200 வெளிநாட்டுக் கதைகளைப் படிக்க வேண்டி வந்தது. இந்தக் கதைகள் உலகத்துச் சிறந்த எழுத்தாளர்களால் படைக்கப்பட்டு வாசகர்களாலும், விமர்சகர்களாலும் உன்னதமானவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவை. அந்த அற்புதமான குவியலில் இருந்து இருபது கதைகளை மாத்திரம் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு.
அந்தத் தொகுப்பில் கதாசிரியர்கள் பற்றிய குறிப்புகளையும், கதைகளின் பின்னணி பற்றி ஆசிரியர்களது உரைகளையும் பின்னிணைப்பாகக் கொடுத்திருந்தார்கள்.
அவற்றிலிருந்து இரண்டு உண்மைகள் எனக்குப் புலப்பட்டன. ஒன்று அந்தக் கதைகளை எழுதிய ஆசிரியர்களில் பெரும்பான்மை யானவர்கள் சிருஷ்டி இலக்கியத்தைப் பாடமாக எடுத்தவர்கள், அதைக் கற்பித்தவர்கள், பட்டறைகளில் பங்கேற்றவர்கள். இரண்டு எல்லோருமே அந்தக் கதைகளைப் பல மாதங்கள் செலவழித்து உருவாக்கி இருக்கிறார்கள். ஒருவராவது ஒரே அமர்வில் எழுதி முடிக்கவில்லை. ஜூம்பா லாகிரி என்ற இளம் எழுத்தாளர், புலிட்ஸர் பரிசு பெற்றவர், தான் அந்தக் கதையைத் திட்டமிடுவதற்காகப் பல மணி நேரங்களை நூலகத்தில் செலவழித்ததாகச் சொல்கிறார். அதை முடிக்க அவருக்கு ஆறு மாத காலம் பிடித்ததாம். இன்னொரு எழுத்தாளர் ஹாஜின், 1999ஆம் ஆண்டின் National Book Award பெற்றவர், தனக்குக் குறிப்பிட்ட கதையை எழுதுவதற்கு ஒரு வருட காலம் எடுத்ததாகக் கூறுகிறார்.
இவற்றைப் படித்தபோது எனக்கு மிகுந்த ஆசுவாசம் ஏற்பட்டது. இந்தத் தொகுப்பில் இருக்கும் ஒரு கதையாவது ஒரு மாதத்திற்கும் குறைவான நேரத்தில் எழுதப்படவில்லை. நாலு வருடத்து உழைப்பு இவ்வளவு சொற்பமாக இருப்பதன் காரணம் ஆமை வேகத்தில் செயல்பட்ட என் படைப்பு முயற்சிகள்தான். வேகதில் என்ன சாதனை? தரம்தான் முக்கியம். அதை வாசகர்கள் தீர்மானிக்க வேண்டும்.

பிரியமுடன்,
அ.முத்துலிங்கம்.
19 நவம்பர் 2001.

Series Navigationமீள் உயிர்ப்பு…!லங்காட் நதிக்கரையில்…
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *