தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

பழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு

அரிமளம் சு.பத்மநாபன்

Spread the love

இசையரங்குகளில்  அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் இசைக் கருவிகளுள் ஒன்று   மோர்சிங் ஆகும்.  தாள இசைக்கருவியான இது  முகர்சிங் என்றும் அழைக்கப்படும்.  கையடக்கமான இக்கருவியை வாயினால் கவ்விக்கொண்டு தாளச் சொற்கட்டுகளை (ததிகிடதோம் – தகதோம் ) நாவால் இசைத்து, இடையில் அமைந்த இரும்பாலான கம்பியின் முனையில் இரு விரல்களால் தட்டி இசை எழுப்புவர். இசை, நாட்டியம், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் இது பெரும்பாலும் இசைக்கப்படுகின்றது. முன்னணிக்கலைஞர்களின் இசைநிகழ்வுகளில் இக்கருவியிசை இடம்பெறும்.

இக் கருவி உலகின் பழங்குடி இன மக்களிடமிருந்து தோன்றியிருக்கக் கூடும். மிகவும் பழமையான பறை, தவில் போன்ற கருவிகள் கூட நாகரிக வளர்ச்சி காரணமாக நவீனத்துவம் பெற்றுவிட்ட நிலையில் மோர்சிங் மட்டும் இன்று வரை எவ்விதமான மாற்றத்தையும் பெறவில்லை. மிகவும் மலிவானதாகவும்  எளிமையானதாகவும் விளங்குவதால் இக்கருவி அடித்தட்டு மக்களிடமிருந்தே தோன்றியிருக்க வேண்டும். மிகவும் பழமையான, வடிவத்தில் இதனையொத்த கருவிக்கு ஆங்கிலத்தில் Jaws Harp என்று பெயர் (பார்க்க. Prof.P.Sambamurthy, A Dictinary of South Indian Music and Musicians, Vol. III).   இதற்குத் தாடைப் பகுதியில் வைத்து இசைக்கப்படும் கருவி என்று பொருள்.

இச்சொல்லுக்குரிய மொழி மூலத்தையோ வேர்ச்சொல்லையோ அறிய இயலவில்லை. மோர்சிங் என்ற இக்கருவியை அறிஞர்கள் சிலர் தமிழில் முகச்சங்கு என்று  குறிப்பிடுகின்றனர். சங்கு என்பது தாளக்கருவி அன்று. அது பண்ணை  இசைக்கும் ஒரு காற்றுக்கருவி என்பதற்கு சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன. எனவே மோர்சிங் என்பதை முகச்சங்கு, மோர்சங்கு என்று அழைப்பது பொருத்தமாகத் தெரியவில்லை.

தொல்காப்பியர் தாள முழக்குக்கருவிகளுக்குப் பறை என்ற பொதுப்பெயரைப் பயன்படுத்துகின்றார். சங்க இலக்கியத்தில் முழவு என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. மோர்சிங்கில் முழக்கப்படும் கம்பிக்குப் பெயர் நாக்கு. எனவே கலைஞரின் நாவால் கருவியின் நா வழியாக தாளச்சொற்கட்டுகள் முழக்கப்படுவதால் இதனை நாமுழவு என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

மோர்சிங் ஓர் இரும்புக்கருவி; முழவுக்கருவிகள் தோலால் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று சிலர் கருதலாம். முழக்கப்படுவது முழவு என்று இசைத்தமிழறிஞர் வீ.ப.கா.சுந்தரம் குறிப்பிடுகின்றார் (ஒப்பு நோக்குக: மண்ணார் முழவு –  சங்க இலக்கியம்). இது கஞ்சக் கருவிகளுள் ஒன்றாகும்.

முடிவாக தமிழ் மரபுவழி நின்று மோர்சிங் என்பதை நாமுழவு என்று அழைத்தல் சாலப் பொருந்தும்.

 

 

கலைமாமணி முனைவர் அரிமளம் சு.பத்மநாபன், எம்..,எம்.எட்., பி.எச்.டி

(முன்னை ஆய்வறிஞர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,சென்னை)

14, மூன்றாம் குறுக்கு தெரு, இராமன் நகர் (குறிஞ்சி நகர்), லாஸ்பேட், புதுச்சேரி – 605 008

) 0413 – 2252342 செல். 94423 96550 E- Mail.  arimalam.padmanabhan@ gmail.com

 

Series Navigationஇருள் குவியும் நிழல் முற்றம்பெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..

Leave a Comment

Archives