தொல்காப்பியம் ஆந்திரசப்தசிந்தாமணி கூறும் எழுத்தியல் கோட்பாடு

author
0 minutes, 3 seconds Read
This entry is part 11 of 29 in the series 24 மார்ச் 2013

 

பி.லெனின்

முனைவர்பட்ட ஆய்வாளர்

இந்திய மொழிகள் பள்ளி

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்- 613010

தோற்றம்

மொழியின் கூறுகளை விளக்குவதில் இலக்கணம இன்றியமையாத இடம் வகிக்கின்றது. ஒரு மொழியின் கூறுகளைக் காத்து அமைப்பு வழியில் நெறிப்படுத்துவதில் இலக்கணத்தின் பங்கு மிகப் பெரிது, ஒவ்வொரு மொழிக்கும் அடிப்டபடையாய் இருப்பவை ஒலிகள், ஒலி இன்றி மொழிகள் இல்லை. ஓலிகள் எழுத்து என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இவ்வெழுத்து பொதுவாக ஒலி வடிவத்தையும் வரி வடிவத்தையும் குறிப்பதாக அமைகிறது, அவ்வெழுத்து எழுத்தியல் சிந்தனையென்று இலக்கண அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது. திராவிடமொழிக் குடும்பத்தைச் சார்ந்த தமிழ், தெலுங்கு மொழியின் முதல் இலக்கண நூல்களான முறையே தொல்காப்பியம் மற்றும் ஆந்திரசப்தசிந்தாமணி எனும் இவ்விரு நூல்களிலும் இடம்பெற்றுள்ள எழுத்தியல்  கோட்பாட்டுச் சிந்தனையில்  முதலெழுத்தினை ஒப்பிடுவதாக இக்கட்டுரை அமையப் பெறுகின்றது.

எழுத்து-பொருள் விளக்கம்

எழுத்து என்னும் சொல்லுக்கு கழகத் தமிழ் அகராதி கீழ்காணும் பொருள் விளக்கம் அளிக்கின்றது. “ இலக்கண நூல், இலக்கிய நூல், கல்வி, கடிதம், மந்திரம், எழுதப்பட்ட தாள், மொழி, மொழி முதற்காரணமாகிய அனுத்திரள் “ என்பன அவை. ஒரு மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள வரி வடிவம் எழுத்து எனப்படும். ஒரு மொழிக்கு அடிப்படையாக அமைவது பல எழுத்துக்களின் தொகுதியாகும், அவ்வெழுத்துக்கள் தனித்து இயங்கக் கூடியவை அத்தன்மையற்றவை எனப் பொருண்மை அடிப்படையில் பாகுபடுத்தலாம்.

எழுத்துக்களின் வகை

மொழிக்கு முதன்மையாக அமையும் எழுத்துக்கள் முதலெழுத்துக்கள். ஆவை சார்பெழுத்துக்கள் பிறப்பதற்கு காரணமாகவும் அமைகிறது.

முதலெழுத்துக்கள்

சார்பெழுத்துக்கள்

தமிழ் இலக்கண நூல்கள் எழுத்துக்களை முதலெழுத்துக்கள், சார்பெழுத்துக்கள் என்று இரண்டாகப் பாகுபடுத்துகின்றன.

திராவிடமொழிகளில் உள்ள இலக்கண நூல்களிலும் இவ்வகையான பாகுபாடுகள் காணப்படுகின்றன.

தொல்காப்பிய எழுத்தியல்

மொழி தோன்றுவதற்கு காரணமாகும் எழுத்துக்கள் முதலெழுத்துக்களாகும். அவை உயிர், மெய் என இரண்டு வகைப்படும்.

எழுத்தெனப் படுப

அகரமுதல் னகர இறுவாய்

முப்பஃது என்ப

சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே    .        ( தொல். எழுத்து.நூ.1)

அகரம் முதல் னகர்தை இறுதியாக உடைய எழுத்துக்கள் முப்பதாகும் இவையே முதலெழுத்துக்கள் எனப்படும். இவ்வெழுத்துக்கள் மொழிக்கு முதலில் தோன்றுவதாலும் மற்றை எழுத்துக்கள் தோன்றுவதற்கு முதற்காரணமாக அமைவதாலும் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

உயிரெழுத்து

தொல்காப்பியர் குறிப்பிடும் முப்பது எழுத்துக்களுள் ஒளகாரத்தை இறுதியபக உடைய பன்னிரண்டு எழுத்துக்களும் எயிர் எழுத்துக்காகும். இவ்வெழுத்துக்கள் தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றவையாகும், இவ்வெழுத்துக்கள் குறில், நெடில் என்று ஒலிக்கக் கூடிய கால அளவினாலும் மாத்திரை அளவினாலும் இவ்வகைபாடுகள் தோன்றுகிறது.

ஓளகார இறுவாய்ப்

பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப.         ( தொல். எழுத்து.நூ.8)

அகர முதல் என எழுத்துக்களை அறிமுகப்படுத்திய தொல்காப்பியர் ஈற்றெழுத்தை அடிப்பiயாகக் கொண்டு உயிர் எழுத்துக்களை பன்னீரெண்டாக வகுத்துள்ளதனை அறிந்து கொள்ள முடிகிறது.

மெய்யெழுத்து

தனித்து ஒலிக்கும் இயல்பில்லாதது மெய்யெழுத்தாகும் னகரத்தை இறுதியாக உடைய பதினெட்டு எழுத்துக்களும் மெய்யெழுத்தாகும். “ வாயுறுப்புகளால் உருவாகி வடிவுற்று அனுகரண ஓசையால் ஒலிநிலை எய்தி, தடையுற்று வெடித்தும் அடைவுற்று நழுவியும் தடையினறி உரசியும் நெகிழ்ந்தும், நெஞ்சுவளி- மிடற்றுவளி- மூக்குவளி-இசைகளால் வெளிப்பட்டு செவிப் புலனால் உணரமுடிகின்றன “ என்று ச.பாலசுந்தரம் குறிப்பிடுகிறார்.

னகர இறுவாய்ப்

பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப.            ( தொல். எழுத்து.நூ.9 )

தொல்காப்பியர் உயிர் மெய்களின் பாகுபாட்டை இறுதி எழுத்தை வைத்து அறிமுகப்படுத்தும் போக்குடையவர். புpற இலக்கண ஆசிரியர்கள் எளுத்துக்களை தொடக்கத்திலிருந்து அறிமுகம் செய்யும் போக்குடையவுர்களாகத் திகழ்கின்றனர். வீரசோழியம் முதலான இலக்கண நூல்கள் ககரம் முதலாகிய பதினெட்டு எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் என்று அறிமுகம் செய்கின்றார்.

குற்றெழுத்து

உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டும் ஓசை வேறுபாட்டால் குறுகி ஒலிப்பவை, நீண்டு ஒலிப்பவை என்னும் பாகுப்பில் அடங்குகின்றன. குறுகி ஒலிக்கும் எழுத்துக்கள் குற்றெழுத்துக்களாகும் நெட்டெழுத்துக்களை நோக்கும் போது குறைந்து ஒலிக்கும் எழுத்துக்கள் குறில் அல்லது குற்றெழுத்து என்றும் பெயர்பெற்றன.

அவற்றுள்

அ இ உ

எ ஒ என்னும் அப்பால் ஐந்தும்

ஓரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப.         ( தொல். எழுத்து.நூ.3 )

“ அ இ உ எ ஒ என்பன ஐந்து குற்றெழுத்துக்களாகும் இவ்வைந்து குற்றெழுத்துக்களுள் அ இ உ என்பன மூன்றும் அடிப்படையான உயிரொலிகளாகும். இம்மூன்று எழுத்துக்கள் பிறப்பதை உயிர் முக்கோணம் என்றும், இவ்வொலிகளே உயிரொலிகளுக்கு அடிப்படை என்றும் “ கூறுகின்றார் மு.வ. அவர்கள்.

நெட்டெழுத்து

உயிரெழுத்துக்களுள் இரண்டு மாத்திரை அளவினைக் கொண்டு ஒலிக்கக் கூடியவை ஆகும். அவை குற்றெழுத்தை விட நீண்டு ஒலிக்கும் தன்மை கொண்டவை. ஆதலால் நெட்டெழுத்துக்கள் என அழைக்கப் படுகின்றது.

ஆ ஈ ஊ ஏ ஐ

ஓ ஒள என்னும் அப்பால் ஏழும்

ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப             ( தொல். எழுத்து.நூ.4 )

ஐகாரத்pற்கும் ஒளகாரத்திற்கும் ஒத்த இனவெழுத்துக்கள் இல்லை, அவை மாத்திரை அளவினாலும் ஒப்பமையாலும் நெட்டெழுத்து எனப்பட்டன. இவ்வெழுத்துக்கள் கூடடெழுத்துக்கள் என்றும் மொழியியல் அறிஞர்களால் சுட்டப்பெறுகிறது.

ஆந்திரசப்தசிந்தாமணியின் எழுத்தியல்

எழுத்தெனப்படுவது சொல்லின் மிகச்சிறிய கூறு. சொல்லில் இடம்பெறும்  முறையை சிறுசிறு அலகுகளாகப் பகிர்ந்து அவற்றுக்கு வடிவம் தரும் முயற்சியே எழுத்தாக்கமாக மொழிகளில் அமைந்துள்ளது. எழுத்துக்ளால் ஆனது சொல் எனப் பெற்றாலும், எழுத்துகளுகுரிய வடிவம் எனும் நிலையில் சொற்களுக்குப் பிந்தைய வளர்ச்சி உடையதாகவே எழும்துக்கள் அமைகின்றன. இந்நிலையில் ஆந்திர சப்பதசிந்தாமணியின் முதலெழுத்துச் சிந்தனை அங்கு விளக்கப்படுகிறது.

இடுகுறிப்பெயர்ப்படலம் எனும் சஞ்ஞா பரிச்சேதத்தில் தெலுங்கு மொழிச் சொற்களில் காணலாகும் தற்சம. தத்பவ நிலைப்பாடுகள் தொடர்பான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

உயிர், மெய் எழுத்துக்கள்

இரண்டு வகையான அ இ உ ரு லு ஏ ஐ ஒ ஒள முழுவட்டம் விஸர்க என்ற ஆறும் சேர்ந்த இந்தப் பதினாறு எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கப் படுகின்றன.

‘க’ கரம் முதல் ‘ம’ கரம் வரையுள்ள எழுத்தும் யரல வளச ஷ வற ஆகிய முப்பத்தாறு எழுத்துக்களும் தெலுங்கு மொழியின் மொத்த எழுத்துக்களாகும்

தேசியம் தற்பவம் என்னும் தெலுங்கு மொழியில் உள்ள 36 எழுத்துக்களிலும் உள்ள குறில், நெடில் வேற்றுமையால் இருவகையான அ இ உ எ ஒ-க்ளும் ஒளகாரமும் முழு வட்டம் அரை வட்டங்களும் உயிர் எழுத்துக்கள் கூறப்படுகின்றது.

ஓப்பீடு

தொல்காப்பியம் மற்றும் ஆந்திரசப்தசிந்தாமணி எழுத்தியல் கோட்பாட்டில் முதலெழுத்துக்  கோட்பாட்டினை ஒப்பிடும் வகையில் இப்பகுதி அமையப்பெறுகின்றது.

உயிர்

தொல்காப்பியம் முதலெழுத்துச் சிந்தனையாக உயிர், மெய் எழுத்துக்கள் முப்பது என்று விளக்குகின்றது

ஆந்திரசப்தசிந்தாமணி முதலெழுத்துச் சிந்தனையாக   உயிர், மெய் எழுத்துக்கள் முப்பதாறு என்று விளக்குகின்றது.

உயிர் எழுத்துக்கள் தமிழில் 12.

தெலுங்கில் உயிர் எழுத்துக்கள் 16.

இரண்டு மொழிகளிலும் 12 உயிர் எழுத்துக்கள் ஒன்றிக் காணப்படுகின்றது.

6. உயிர் எழுத்துக்கள் தெலுங்கில் கூடுதலாகக் காணப்படுகிறது.

இவ்வேற்றுமைக்கு காரணம் தெலுங்கு மொழியின் வரி வடிவம் சமஸ்கிருத மொழியின் வரிவடிவமும் அதன் தாக்கமும் மற்றும் இந்நூல் சமஸ்கிருத மொழி மரபினையொட்டி எழுதப்பட்டிருப்பதாலும் இவ்வேறுபாடு காணப்படுகின்றது.

மெய்

தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாதது மெய்யெழுத்தாகும். னகரத்தை இறுதியாக உடைய பதினெட்டும் மெய்யெழுத்துக்கள் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். வீரசோழியம் முதலான இலக்கண நூல்கள் ககரம் முதலாகிய பதினெட்டும் மெய்யெழுத்துக்கள் என்று குறிப்படகின்றன.

தமிழ் மொழியில் மெய்யெழுத்துக்கள் ஒலியின் பாற்பட்டது ஆனால் தெலுங்கு மொழியில் மெய்யெழுத்துக்கள் வரிவடிவ தலையில் காணப்படுகிறன. இவ்வேற்றுமை நிகழக் காரணம் தெலுங்கு மொழி சமஸ்கிருத மொழியின் தழுவலாக இருப்பதேயாகும்.

இறுவாய்

இரண்டு நூல்களிலும் எழுத்தியல் கோட்பாட்டில் முதலெழுத்துச் சிந்தனை சிறப்பான நிலையில் விளக்கப்படடுள்ளது. தமிழ்மொழியில் பிற மொழி இலக்கண நூல்களின் தாக்கம் இருப்பின் மொழித்தூய்மைக் கொள்கை பின்பற்றப்பட்டு முதலெழுத்துச் சிந்தனையானது தெளிவான நிலையில் விளக்கப்பட்டுள்ளது. ஆந்திரசப்தசிந்தாமணியில் சிறப்பாகவும் தெளிவான நிலையிலும் இம்முதலெழுத்துச் சிந்தனையானது விளக்கப்பட்டிருப்பின் மொழித்தூய்மைக் கொளகையானது கையாளப்படவில்லை, இதற்குக் காரணம் இந்நூல் சமஸ்கிருத இலக்கண மரபினைத் தழுவி எழுதப்பட்டிருப்பதே   என்பதனையும் இக்கட்டுரை வழி அறிந்துகொள்ள முடிகின்றது.

துணை நின்றவை

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரனர் உரை கழக வெளியீடு.

ஆந்திரசப்தசிந்தாமணி (மொழி பெயர்ப்பு, முனைவர் சி.சாவித்ரி ) வெளியிடப் பெறாதது.

தொல்காப்பியம் எழுத்து காண்டிகையுரை, ச.பாலசுந்தரம்.

கழகத் தமிழ் அகராதி, கழக வெளியீடு.

மொழி நூல்.மு.வரதராசன்.

சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும், இரா.அறவேந்தன்

 

Series Navigation‘அப்பு’வின் மகாராணியும் ‘ஆதி’யின் பகவானும்ஒற்றைச் சுவடு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *