மது பூர்ணிமா கிஷ்வர்
அரிதான போலீஸ் இருப்பு.
சாலைகளில் மிகவும் அரிதாகவே காணப்படும் போலீஸே ஆமதாபாத் நகரத்தின் குறிப்பிடத்தகுந்த விஷயம் எனலாம். நான் ஆமதாபாதில் நள்ளிரவு நேரங்களில் என் நண்பர்களுடன் சென்ற மூன்று நாட்களிலும், டெல்லியில் மிகவும் அடிக்கடி காணப்படும் போலீஸ் சாலை தடைகள் இங்கே இல்லவே இல்லை என்பதை கண்டேன். நான் ஆமதாபாதை சென்றடைந்த நாள் மகர சங்கராந்தி கொண்டாட்டமும், அத்தோடு சேர்ந்த பட்டம் விடும் விழாவுக்கும் சற்று முன்னர், இருந்தும் அங்கே எந்த விதமான போலீஸ் தடுப்புகளும் சாலைகளில் இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. அதுவும் அப்போதுதான் குஜராத் உச்சி மாநாடு காந்தி நகரில் நடைபெற இருந்தது. ஏராளமான அமைச்சர்கள், அயல்நாட்டு தூதுவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் ஆமதாபாத்துக்கும் காந்திநகருக்கும் இடையே அடிக்கடி வந்து சென்றுகொண்டிருந்தார்கள். உச்சி மாநாட்டின் சுற்றுப்புறத்தில் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தவிர்த்து, இந்த இரட்டை நகரங்களில் சுற்றுச்சூழல் பதட்டமாக இல்லாமல் சாதாரணமாகவே இருந்தது. யாரும் முஸ்லீம், தலித், ஏழை குடியிருப்புகளில் போலீஸ் தாக்குதலோ, அல்லது அப்பாவிகளை முன்னேற்பாடாக கைது செய்வதோ இல்லை. 2002 கலவரத்துக்காக மோடி அவர்களே ஜிகாதி முஸ்லீம் அமைப்புகளால் ஹிட்லிஸ்டில் முக்கிய இடத்தி வைத்து குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்றாலும், எந்த இடத்திலும் அமைச்சர்கள் அல்லது முதல்வர் செல்வதற்காக போக்குவரத்தை நிறுத்தி நான் பார்க்கவில்லை.
இதற்கு மாறாக, டெல்லியில் சாதாரண நாட்களில்கூட, நகர சாலைகள் போலீஸ் தடைகளால் நிரம்பி வழிகின்றன. அதுவும் முக்கியமாக இரவு நேரங்களில். இரவு நேரங்களில் லாரி ஓட்டுனர்கள், ஸ்கூட்டர் ஓட்டுனர்கள், பைக் ஓட்டுபவர்கள் போலீஸால் வழக்கமாக நிறுத்தப்படுகிறார்கள். இந்த தடைகள் எல்லாமே முட்டாள்தனமாக, பார்ட்டிகளுக்கு போய்விட்டு திரும்பும் இளைஞர்கள், தம்பதியினரிடமிருந்து போலீஸ் லஞ்சம் வாங்கும் வாய்ப்பை அதிகரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன.
குடியரசு நாள், சுதந்திர நாள் கொண்டாட்டங்களுக்கு முன்னால், டெல்லியிலும் மற்ற முக்கிய நகரங்களிலும் போலீஸ் ஏழை மக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக எந்த வித காரண காரியமுமின்றி முன்னேற்பாடாக கைது செய்து வைத்து, குண்டா சமூக விரோதிகளை கைது செய்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்பார்கள்.இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி ரிக்ஷா ஓட்டுனர்கள், தெருக்கடைகளை நடத்துவர்கள், தள்ளுவண்டி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் ஏழை குப்ப வாசிகள். முஸ்லீம் இளைஞர்கள் இவர்களுக்கு முக்கியமான குறி. இவ்வாறு முன்னேற்பாடாக கைது செய்யப்பட்டவர்கள் உண்மையிலேயே குண்டா சமூக விரோதிகளா என்று யாரும் இதுவரை கேட்டதில்லை. அப்படி குண்டாக்களாக இருக்கும் பட்சத்தில் ஏன் இதுவரை வெளியே இருக்கிறார்கள் என்றும் கேட்டதில்லை. முக்கிய புள்ளிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு சற்று முன்பாக போலீஸ் ஏதோ நடவடிக்கை எடுக்கிறது என்று காண்பிப்பதற்காக போடும் ஷோ.
முஸ்லீம்களும், இந்துக்களும் சொல்லுவதை வைத்து பார்த்தால், குஜராத்தில் போலீஸ் சமீப வருடங்களில் மிகவும் தொழில்முறையில் முன்னேறியுள்ளது. ஜூஹூபுராவில் கூட, முன்பு வகுப்பு கலவரங்கள் நடந்த காலத்தில் இருந்த பயமும் பாதுகாப்பின்மையும் இன்னும் தொடர்கிறதா என்று பல இளைஞர்களையும் இளைஞிகளையும் நான் கேட்டேன். ஒருவர் கூட இரவு நேரங்களில் வெளியே செல்ல பயப்படவில்லை. அது வியாபார தளங்களுக்கு செல்வதாக இருந்தாலும் சரி, இந்து பெரும்பான்மையினர் வசிக்கும் இடங்களுக்கு செல்வதாக இருந்தாலும் சரி. ஆனால் போலீஸ் அடாவடித்தனம் இல்லவே இல்லை என்று சொல்லவே முடியாது. ஆனால், நான் சந்தித்த பல முஸ்லீம்கள் மேல் மட்டத்திலிருந்து வந்த ஆணைகளை பற்றி தெளிவாக சொன்னார்கள். முஸ்லீம்களுக்கு மட்டும் எதிராக பாரபட்சமாக நடக்கக்கூடாது. முஸ்லீம் ரவுடிகளாக இருந்தாலும் சரி, இந்து ரவுடிகளாக இருந்தாலும் சரி, கடுமையாக அந்த குண்டா சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும் என்பதே ஆணைகள். இருப்பினும், மானெக் சௌக் அருகே இருக்கும் சில முஸ்லீம் கடைக்காரர்கள் தற்போதைய அரசை பற்றி சாதகமான கருத்தை கொண்டிருக்கவில்லை. ஆனால், மேலும் மேலும் வற்புறுத்தி கேட்டாலும், அவர்களால், சட்டம் ஒழுங்கு சீர்குலைவை பற்றி சரியான ஆதாரங்களை தர முடியவில்லை.
மத விரோதம், தொடர்ந்து நடக்கும் கலவரங்கள் காரணமாக முக்கியமாக 1990களில், முஸ்லீம்கள் இந்துக்களின் பகுதிக்கு செல்ல அஞ்சினார்கள். அதே போல இந்துக்களும் முஸ்லீம்களின் பகுதிகளுக்கு செல்ல அஞ்சினார்கள். கலவரமே நடக்காமல் இருந்தாலும், இந்த பயம் அவர்களை கட்டுப்படுத்தியிருந்தது. பல இந்துக்களுடன் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் முஸ்லீம்களும், நூறு சதவீத இந்து பகுதிகளுக்கு செல்ல அஞ்சினார்கள். இப்போது அந்த பயம் மறைந்துவிட்டது. இன்று, ஏராளமான புர்க்கா அணிந்த முஸ்லீம் பெண்களை நூறு சதவீத இந்து பகுதிகளில் இரவில் கூட பார்க்கமுடிகிறது.
பிராந்திய போலீஸ் நிலையங்களில் (தானா) முஸ்லீம் போலீஸ்காரர்களின் எண்ணிக்கை 11 சதவீதம். இது மற்ற மாநிலங்களை விட அதிகம். குஜராத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 9 சதவீதமே. அதாவது குஜராத்தில் மட்டுமே அவர்கள் இருக்கும் சதவீதத்தை விட அதிக சதவீதத்தில் தானா அளவில் முஸ்லீம் போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள். இது எந்தவிதமான பிரச்சாரமோ அல்லது தாரை தப்பட்டையோ அடிக்காமல் செய்யப்பட்டுள்ளது.
முன்னால் ADG Police ஆக இருந்த மிகுந்த மதிப்புக்குரிய ஏ.ஐ. சையத் அவர்கள் என்னிடம் கூறியது.
“காங்கிரஸ் ஆட்சியின் போது, முஸ்லீம் ரவுடிகள் ஊக்குவிக்கப்பட்டார்கள். அப்போது ஏராளமான முஸ்லீம் தாதாக்கள் இருந்தார்கள். இவர்கள் முஸ்லீம் சமூகத்தை பற்றிய எதிர்மறையான பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக காரணமானார்கள். கடந்த பத்தாண்டுகளில், இந்த தாதாக்கள் அனைவரும் உறுதியாகவும், கடுமையாகவும் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். மோடி அரசாங்கம் சமூக விரோத கும்பல்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடுமையாக ஒடுக்குகிறது. அது விஹெச்பியாக இருந்தாலும் சரி, அது முஸ்லீம் தாதாக்களாக இருந்தாலும் சரி. இதனால், இந்த தாதாக்கள் ஆக்கிரமித்த இடம் நீக்கப்பட்டிருக்கிறது”
A.I Syed, retired ADG Police
அதனை விட முக்கியமாக, விஹெச்பி, பஜ்ரங் தள் ஆகிய சமூக விரோத சக்திகள் அடக்கப்பட்டதால், அவர்கள் முஸ்லீம்களை அச்சுருத்துவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற செய்தி கடுமையாக கொண்டுசெல்லப்பட்டதால், இந்த இந்து தாதாக்களை எதிர்கொள்ள, முஸ்லீம்கள் தங்களுக்குள் ஒரு தாதா வேண்டும் என்ற தேவை இல்லாமல் ஆனார்கள். மோடியின் திட்டம் இந்த முஸ்லீம் தாதாக்களை தேவையில்லாமல் ஆக்கியிருக்கிறது.
இன்றும், காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு தலைமை முஸ்லீம் தாதாக்களின் கையில்தான் இருக்கிறது. குஜராத் காங்கிரசின் சிறுபான்மையினர் பிரிவு தலைவராக இருப்பது வாஸிர் கான் பதான் என்ற மனிதர். இவர் பி.ஏ எல்.எல்.பி யை பெயரளவுக்கு எழுதிவிட்டு ஹைகோர்ட் பார் அசோசியேஷனில் உறுப்பினராக இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர் மது கடத்தும் தாதா. இவர் விஷ்நகர் மெஹ்சானா மாவட்டத்தை சேர்ந்தவர். இன்று காங்கிரஸ் கட்சி முழுமையாக முஸ்லீம் தாதாக்களின் கையில் இருக்கிறது. அதனால்தான் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமாக தேர்தலில் தோற்கிறது” என்கிறார்.
முன்பு தீஸ்தா ஸ்தெல்வாத் என்ற சமூக சேவகரின் வலது கையாக இருந்து பின்னர் அவரிடமிருந்து வெளியேறிய ரைஸ் கான் பதான் கூறுகிறார்.
Rais Khan Pathan
“இந்த முஸ்லீம் பகுதிகள் எல்லாமே முன்பு சமூக விரோத சக்திகளால் நிரம்பி வழிந்தன. இங்கே கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கள்ளகடத்தல் செய்வது, போதை மருந்து விற்பது, இன்னும் பல குற்றங்கள். இந்த ரவுடிகள் மீது கடுமையாக மோடி நடவடிக்கை எடுத்து இந்த இடங்களை பாதுகாப்பானதாக ஆக்கியிருக்கிறார். அது முஸ்லீம் ரவுடியாக இருந்தாலும் சரி, இந்து ரவுடியாக இருந்தாலும் சரி, கடுமையான நடவடிக்கைதான். ஆகவே முஸ்லீம்கள் தங்களது சமூகத்து தாதாக்களை காப்பாற்ற முயற்சியே எடுக்கவில்லை. போலீஸ் நடவடிக்கை மட்டுமே ரவுடிகளையும் குண்டர்களையும் குற்றங்களிலிருந்து தடுத்துவிடமுடியாது. இன்று சட்டப்பூர்வமாக தொழில் செய்து முன்னேற ஏராளமான வாய்ப்புகள்முஸ்லீம்களுக்கு இருக்கின்றன. முஸ்லீம்கள் படிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகளை மோடி உருவாக்கியிருக்கிறார். ஆகவே இளம் முஸ்லீம்கள் குற்றப்பாதைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அதில் ஆர்வமும் இல்லை. என்னையே எடுத்துகொள்ளுங்கள். நான் மும்பையில் குட்கா தயாரிக்கும் பிஸினஸில் இருந்தேன். குட்கா தயாரிக்க முக்கியமான பொருட்களை நான் குஜராத்திலிருந்துதான் தருவிப்பேன். குட்கா புற்றுநோய்க்கு இட்டுச்செல்வதால், குஜராத் மாநிலம் குட்காவை தடை செய்துள்ளது. எனக்கு இந்த தடை பெரிய விஷயமில்லை. ஏனென்றால், நான் வேறொரு வியாபாரத்துக்கு தாவி உருப்படியான சம்பாத்தியத்தை பெற வாய்ப்பு இருக்கிறது”
இப்போது மாபியா கும்பல்கள் ரியல் எஸ்டேட் பிஸினஸில் ஈடுபட்டுவருகிறார்கள். இது இப்போது பணக்கார பட்டேல்களின் கையில் உள்ளது. குஜராத் நகரமயமாகி வருவதாலும், தொழில் மயமாகிவருவதாலும், அதில்தான் நிறைய பணம் இருக்கிறது”
நான் ரியல் எஸ்டேட் பிஸினஸுக்குள் எவ்வாறு குற்ற செயல்கள் நடைபெறுகின்றன என்று ஆராயாததால், அதனை பற்றி கருத்து கூறுதல் கடினமானது. ஆனால், ஒரு விஷயம் உண்மை. பொதுமக்களிடத்தில் குஜராத்தில் குற்றம் குறைவு என்ற உணர்வு அதிகரித்துள்ளது. குடிமக்கள் பாதுகாப்பும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் காணக்கூடியதாக இருக்கிறது.
அனாமதேயமாக இருக்க விரும்பிய ஒரு முஸ்லீம் வியாபாரி என்னிடம் சொன்னது:
“எந்த போலீஸ்காரரை வேண்டுமானலும் கேட்டுப்பாருங்கள். அமைச்சரிடமிருந்தோ அல்லது முதலமைச்சரிடமிருந்தோ எந்த விதமான இடையூறும் ஒரு போலீஸ்காரருக்கு இருக்காது. இதனால், போலீஸ் வேலை பார்ப்பது எளிதாக ஆகியிருக்கிறது. அவர்களிடம் கேட்டால்,”எந்த பாரபட்சமும் இல்லாமல், கட்சி சார்பு இல்லாமல், மத சார்பு இல்லாமல், வேலையை நேர்மையாக செய்ய எங்களுக்கு அனுமதி இருக்கிறது” என்று சொல்வார்கள். முஸ்லீம் பகுதிகளில் போலீஸ் வேலை மிகவும் எளிதாக ஆகியிருக்கிறது. ஏனென்றால் முன்பு அங்கே இருந்த குற்றங்கள் வெகுவாக குறைந்துவிட்டன. முன்பு தாரியாபூர், காலுபூர் ஆகியவை சமூக விரோத சக்திகளின் கூடாரமாக இருந்தன. கடந்த 50 வருடங்களில் கலவரங்கள் எல்லாமே இந்த இடங்களிலிருந்துதான் ஆரம்பித்து பிறகு நகரமெங்கும் பரவும். கடந்த 10 வருடங்களில் அதுமாதிரி ஒரு நிகழ்ச்சியும் நடக்கவில்லை. இந்த இடங்களிலிருந்து சூதாட்ட மையங்கள், மதுக்கடைகள் எல்லாமே காணாமல் போய்விட்டன. முன்பு, இந்துக்கள் மட்டுமல்ல, படித்த முஸ்லீம்கள் கூட இந்த இடங்களுக்கு செல்ல பயந்தார்கள். இன்று இந்த இடங்களுக்கு போக யாருக்குமே பயமில்லை. இந்த இடங்களில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதை பார்க்கலாம். ஏனென்றால், வளமை அங்கேயும் போயிருக்கிறது. குற்றங்கள் இல்லை. அமைப்பு ரீதியான மாபியா கும்பல்கள் இருக்கும் நகரங்களே குற்றங்கள் அதிகரித்திருக்கும் நகரங்கள். அப்படிப்பட்ட ஒரு கும்பல் கூட ஆமதாபாதிலோ குஜராத் நகரங்களிலோ இருக்கமுடியாது”
“இதனால்தான் டெல்லியை போல, சிறு குழந்தைகள் கடத்தப்பட்டு பணம் பிடுங்குவதோ, பெண்கள் கடத்தப்படுவதோ, இவர்கள் விபச்சாரத்துக்குள் கொண்டுசெல்லப்படுவதோ குஜராத்தில் இல்லை. நீங்களே சிறு பெண்கள் நள்ளிரவிலும் குஜராத்தில் ஸ்கூட்டர்களில் செல்வதை பார்க்கலாம்.
“குஜராத்தில் குற்றங்களே இல்லை என்று சொல்லவில்லை. உலகத்தில் எந்த நாடும் குற்றமே இல்லாத நாடு என்று சொல்லமுடியாது. ஆனால், மற்ற மாநிலங்களை விட குஜராத்தில் குற்றங்கள் குறைவு. காரணம், அமைப்புரீதியான மாபியா கும்பல்கள் அடக்கப்பட்டிருக்கிறன. முன்பு சிவசேனா, பஜ்ரங்தள், ஆகியவை இந்து ரவுடிகளை, குண்டர்களை ஆதரித்தன. காங்கிரஸ் முஸ்லீம் குண்டாக்களுக்கு ஆதரவளித்தது. ஆனால், இந்து குண்டர்கள் அடக்கப்பட்டபின்னால், முஸ்லீம் பகுதிகளும் தங்களது மது கடத்தும் ரவுடிகளையும் மற்ற குற்றவாளிகளையும் ஒதுக்கிவிட்டது. நீங்கள் முஸ்லீம் பகுதிகளில் குற்றங்கள் குறைந்துவிட்டதால், போலீஸின் வேலை எவ்வளவு எளிதாக ஆகியிருக்கிறது என்று கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்”
இந்த விஷயங்களை என்னுடைய தொடரும் குஜராத் ஆய்வின் போது பரிசோதித்து அறிய இருக்கிறேன்.
© Madhu Purnima Kishwar
- ஆமதாபாதில் இரவுகள் – சில பார்வைகள் – 2
- ரோஜர் எபர்ட் – ஒரு சினிமா விமர்சகனின் பயணம்.
- சமகாலச் சிறுபத்திரிகைகளின் மீதான உரையாடல்
- வடிவம் மரபு: பத்துப்பாட்டு
- எட்டுத்தொகை : வடிவம் குறித்த உரையாடல்
- க.நா.சு.வின் ”அவரவர்பாடு” நாவல் வாசிப்பனுபவம்
- சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடகம் – விமர்சனம்
- எலும்புத் திசு ( bone marrow ) – பேராசிரியர் நளினியின் தேவை..
- உபதேசம்
- நள்ளிரவின்பாடல்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -7 மூன்று அங்க நாடகம்
- பளு நிறைந்த வால்மீன் சூமேக்கர்-லெவி 9 பூதக்கோள் வியாழனில் மோதி வெளியான நீர் மூட்டப் புதிர் உறுதியாய்த் தீர்வானது.
- நிழல் தேடும் நிஜங்கள்
- பாலச்சந்திரன்
- பொது மேடை : இலக்கிய நிகழ்வு
- மறுபக்கம்
- பிராயச்சித்தம்
- எத்தன் ! பித்தன் ! சித்தன் !
- லண்டன் தமிழ் சங்கம் – மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி
- வொரையால் தமிழ்க்கலாச்சார மன்றத்தின் 8 -ஆம் ஆண்டு விழா …தமிழோடு வாழ்வோம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -21 என்னைப் பற்றிய பாடல் – 15 (Song of Myself) நாணல் புல் கீழானதில்லை..!
- தாகூரின் கீதப் பாமாலை – 62 தீராத ஆத்ம தாகம் .. !
- போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 17
- மாயக்கண்ணன்
- பாசம் என்பது எதுவரை?
- விஸ்வரூபம் – சோவியத் யூனியனின் வியட் நாமும், மௌனம் படர்ந்த முற்போக்கு இடதுசாரிகளும்
- வேர் மறந்த தளிர்கள் – 2
- அக்னிப்பிரவேசம்-32 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 8