தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 ஆகஸ்ட் 2020

ஒரு தாதியின் கதை

அமீதாம்மாள்

Spread the love

 

புரையோடிய

புண்ணையும்

புன்னகையால் கழுவி

களிம்பிட்டுக்

கட்டுவார்

 

ஆறேழு நாளில்

ஆறிவிடு மென்று

நம்பிக்கை விதைப்பார்

நலம் கூட்டுவார்

 

அந்த

மருத்துவ மனையில்

புண்ணாற்றும் பிரிவில்

இது பதினேழாம் ஆண்டு

அந்தத் தாதிக்கு

 

ஒரு நாள்

அவர் குடும்பம் பற்றிக்

கேட்டேன்

 

‘பல்கலையில் மகனாம்

உயர்நிலையில் மகளாம்

அப்பா முகமே

அறியாராம்

அவர் எங்கேயோ

யாரோடோ’

என்றார்

 

‘இரண்டு சிறகுகள்

இயற்கையம்மா

இணைந்து வாழுங்கள்’

என்றேன்

 

அவர் சொன்னார்

 

‘கல்லானாலும் கணவன்

புல்லானாலும் புருஷன்தான்

துரோகியானாலும்

துணைவ னென்று

சொல்லவில்லையே

அய்யா

நாகத்தோடு வாழலாம்

துரோகத்தோடு

வாழமுடியாதய்யா

 

கடவுளிடம் கத்தினேன்

 

‘தப்பய்யா

உன் தராசு’

 

கடவுள் சொன்னார்

‘எவருக்கும் புரியாது

என் தராசு

எல்லாருக்கும்

நான் கடவுள்

அந்தத் தாதி

என் கடவுள்’

 

அமீதாம்மாள்

Series Navigationகவிதைகள்என். ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” (நாவல் வாசிப்பனுபவம்)

One Comment for “ஒரு தாதியின் கதை”

  • கவிஞர் இராய. செல்லப்பா. says:

    ‘இரண்டு சிறகுகள் இயற்கை’ என்பதற்காக இரண்டு மனைவிகளைக் கோருவது ஆடவனின் இயற்கையென்று ஞாயப்படுத்துவதா? அதைப் பெண்மை எப்படி ஏற்கும்? அமிதம்மாளின் கவிதை அருமை. –நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.


Leave a Comment

Archives