தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

ஒரு செடியின் கதை

அமீதாம்மாள்

Spread the love

பொத்திக் கிடந்த

பூவித்து

புறப்பட்டது-மண்

வழிவிட்டது

 

நாளும் வளர்ச்சி

நாலைந்து அங்குலம்

ஆறேழு தளிர்கள்

அன்றாடம் பிரசவம்

 

தேதி கிழித்தது இயற்கை

புதுச் சேதி சொன்னது செடி

 

முகம் கழுவியது பனித்துளி

தலை சீவியது காற்று

மொட்டுக்கள் அவிழ்ந்து

பூச்சூட்டியது

பட்டாம்பூச்சிக் கெல்லாம்

பந்தியும் வைத்தது

 

முதுகுத் தண்டில்

பச்சைப் பூச்சிகள்

கிச்சுச் செய்தது

தேன் சிட்டொன்று

முத்தமிட்டது

 

கூசுகிறதாம்

சிரித்தது செடி

உதிர்ந்தன சருகுக்

கழிவுகள்

 

திமிறிய அழகில்

திமிரும் வளர்ந்தது

மமதைச் செருக்கில் செடி

மண்ணிடம் சொன்னது

 

‘கடவுளும் காதலும்

எனக்காக

என் கழிவுகள் மட்டுமே

உனக்காக

என் கழிவைத் தின்று

கழுவிக் கொள்

உன் வயிறை’

 

நக்கலடித்தது செடி

தத்துப் பூச்சிகளிடம்

தட்டான்களிடம்

சொல்லிச் சொல்லிச்

சிரித்தது

 

அறியாமை பொறுக்கலாம்

ஆணவம் பொறுப்பதோ?

 

கூடவே கூடாது

 

வேரை விட்டு

விலகிக் கொண்டது

மண்

 

முதுகுத் தண்டு முறிந்து

மண்ணில் சாய்ந்தது செடி

 

செடியிடம் சொன்னது மண்

 

‘உனக்கு

உன்னையும் தெரியவில்லை

என்னையும் தெரியவில்லை

நீ வாழ்வதிலும் பொருளில்லை

 

செடியைச்  செரித்து

மீண்டும் அசைவற்றுக்

கிடந்தது மண்

அமீதாம்மாள்

Series Navigationபேரழகி2013 ஆண்டு அக்டோபரில் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் இந்தியச் சுற்றுளவி மங்கல்யான்.

5 Comments for “ஒரு செடியின் கதை”

 • பவள சங்கரி says:

  அன்பின் திருமிகு அமீதாம்மாள்,

  அருமையானதொரு புனைவு! செடிகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும், மமதையில் வேரை இழக்கும் சோகம். வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  பவள சங்கரி

 • சி. ஜெயபாரதன் says:

  ஆழ்ந்த கற்பனைக் கதை. அழகிய நடை. அற்புதக் கவிதை.

  சி. ஜெயபாரதன்

 • Dr.G.Johnson says:

  மிகவும் எளிய நடையில் ஆழமான ஆணித்தரமான கருத்துக் குவியல் நிறைந்த கவிதை. சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை என்பது போல் மண் இல்லாமல் ஒன்றுமே இல்லை என்பதே உண்மை.வாழ்த்துகள்….டாக்டர் ஜி.ஜான்சன்.

 • புனைப்பெயரில் says:

  good one

 • கவிஞர் இராய. செல்லப்பா says:

  ரசிக்கத்தக்க சொல்லழகும் பொருளழகும் நிரம்பிய கவிதை. –நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா


Leave a Comment

Archives