அக்னிப்பிரவேசம்-34

This entry is part 2 of 33 in the series 19 மே 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

ரேடியோவில் “குந்தி விலாபம்” வந்து கொண்டிருந்தது

“ராமநாதன்! நீங்க என்னைக் காதலிக்கிறீங்களா?” தீனமாய் கேட்டாள் சாஹித்தி.

“உனக்கு இந்த சந்தேகம் ஏன் வந்தது?”

“என்னவோ, எனக்கு அப்படித் தோன்றுகிறது.”

“நீ என்றுமே என் சாஹிதி தான். நான் காதலிப்பது உன்னைத்தானே தவிர உன் பணத்தையோ, சொத்தையோ இல்லை.” அவளை அருகில் இழுத்துக் கொண்டான். அவன் மார்பில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

“சாஹிதி!”

“ஊம்.”

“நாம் இருவரும் மனதளவில் இவ்வளவு நெருக்கமாகி விட்டோம். உடல்களை மட்டும் தொலைவில் வைத்திருப்பது நியாயமா?”

“வேண்டாம் ராமநாதன்! எனக்கு ஏனோ பயமாய் இருக்கு.”

“இந்த சிருஷ்டியில் ஆனந்தம் தருகிற எது ஒன்றுக்குமே முதலில் பயமாகத்தான் இருக்கும். கஞ்சாவை எடுத்துக் கொண்ட போது முதலில் பயந்தாய். அது சந்தோஷத்தைத் தரவில்லையா?” என்று அவள் மேல்தலைப்பை விலக்கினான். அவள் அவனையே சலனம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் ஆனந்தம் இல்லை. துக்கமும் இல்லை. ஒரு பார்வையாளரைப் போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரேடியோவில் இன்னும் குந்தி விலாபம் வந்து கொண்டிருந்தது. அவன் ஷர்ட்டைக் கழற்றினான். அவள் தோளைச் சுற்றிலும் கையை போட்டு ஜாக்கெட் பட்டனை அவிழ்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது கதவை யாரோ தட்டிய சத்தம் கேட்டது. இருவரும் சட்டென்று விலகிக் கொண்டார்கள். அவன் கலவரமடந்தான். சாஹிதிக்கு மயக்கம் விடுபட்டாற்போல் இருந்தது.

அவன் அவளை பின் அறையில் மறைவாக இருக்கும்படி செய்துவிட்டுக் கதவைத் திறந்தான்.

எதிரே பாவனா! அவன் அதிர்ச்சி அடைதவனாய் பார்த்தான்.

அவள் சர்வ சாதாரணமாய் “வணக்கம். என் பெயர் பாவனா. நான் இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ. வாய் நிற்கிறேன். உங்களுடைய ஓட்டை எனக்குப் போட்டு என்னை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றாள்

“நீயா? எம்.எல்.ஏ. வா?” என்றான்.

அவள் குரல் மாறிவிட்டது. “ஏன்? அதில் வியப்படைய என்ன இருக்கு?” என்றாள்.

“புருஷனை விட்டுவிட்டு ஓடிவந்து நீ செய்கிற காரியம் இதுதானா?”

“புருஷன் இல்லாத நேரத்தில் எதிர் வீட்டுக்குள் நுழைந்து நீ பண்ணும் காரியத்தை விட இது மேல்தானே?”

“பரவாயில்லையே? கூண்டுக் கிளி பேச கற்றுக் கொண்டுவிட்டதே?” என்றான்.

மூலையில் இருந்த பெண்களின் செருப்பு அவள் .கண்ணில் பட்டது. “நான் இங்கே வந்தது ஒட்டு கேட்பதற்கு. ஜனநாயகத்தில் மனிதனுக்கு எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஓட்டுரிமை மட்டும் உண்டு இல்லையா? வீடு வீடாய் போய், “உங்கள் புனிதமான ஒட்டடை எனக்கே போடுங்கள் என்று கேட்டுப் பழக்கப்பட்டுப் போய் உங்க வீட்டிற்கும் தவறுதலாய் வந்துவிட்டேன். இந்த வீட்டில் இருப்பது புனிதமில்லாத ஒட்டு என்பதை மறந்துவிட்டேன்” என்று மேற்கொண்டு அவன் பதில் பேச இடம் கொடுக்காமல் அங்கிருந்து திரும்பி விட்டாள்.

முகம் சிவக்க கதவை படீரென்று சாத்திவிட்டு ராமநாதன் திரும்பினான். உள்ளே போய் “சாரி, சாஹிதி. யாரோ தேர்தலுக்கு ஒட்டு கேட்க வந்தாங்க” என்றான். ஒரு நிமிஷத்திற்கு முன்பிருந்த ராமநாதனுக்கும் இப்பொழுது தென்பட்ட ராமநாதனுக்கும் சம்பந்தமே இல்லை. ஆள் அமைதியோடு, அன்போடு இருந்தான்.

“நான் போய் வருகிறேன்” என்றாள் சாஹிதி. இந்தக் கொஞ்ச நேர இடைவெளியில் அவள் சுதாரித்துக்கொண்டு விட்டாள்.

“ஏன்? அதற்குள்ளேயா?”

“எனக்கு மூட் சரியாக இல்லை.” தலை குனிந்தபடி சொன்னாள்.

அவன் அவளை ஒரு வினாடி பார்த்துவிட்டு “அப்படி என்றால் சரி. வா கொண்டு விடுகிறேன்” என்றான். பாவனாவைப் பார்த்த பிறகு அவன் மனம் கலங்கி விட்டிருந்தது.

“வேண்டாம். நான் காரில் வந்தேன். யாராவது பார்த்தால் நன்றாக இருக்காது என்று தொலைவிலேயே நிறுத்தி வைத்திருக்கிறேன்” என்று அவள் கிளம்பினாள்.

தெருக்கோடியில் நிறுத்தி வைத்திருந்த காரை அணுகி முன் பக்கத்துக் கதவின் பூட்டைத் திறந்து உள்ளே உட்காரப் போனவள் பக்கத்து சீட்டில் இருந்த நபரைப் பார்த்துவிட்டு அதிர்ந்து விட்டாள். அங்கே பாவனா உட்கார்ந்திருந்தாள்.

“இந்தப் பக்கத்துக் கதவைப் பூட்ட மறந்து விட்டாய். வாழ்க்கையைப் போலவே காரைக் கூட சரியாக கவனிக்காமல் போனால் எப்படி சாஹிதி?”

“என்ன பேசுறீங்க நீங்க”

“ராமநாதன் வீட்டில் செருப்பைப் பார்த்தேன். அவன் கண்ணில் மிரட்சியைப் பார்த்தேன். வரும் போது உன் கார் கண்ணில் பட்டது. ஒன்றோடு ஒன்று கூட்டிப் பார்த்தபோது என் சந்தேகம் நிஜமாகிவிட்டது. அந்த ஆளின் வலைவீச்சு தெருவைத் தாண்டி நகரம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது என்று புரிந்தது.”

“அவரைத் தெரியுமா உங்களுக்கு?”

‘அடி பைத்தியமே! அவனால்தான் நான் இப்படி ஆனதே’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் பாவனா.

அதற்குள் சாஹிதி சொன்னாள். “அவர் எனக்கு நல்ல நண்பர். இருவருமே வாழ்க்கையில் முக்கியமானவற்றை இழந்து விட்ட துரதிர்ஷ்டசாலிகள்” என்றாள்.

பாவனா அவளை வியப்புடன் பார்த்து “என்னத்தை இழந்துவிட்டானாம் அவன்?” என்றாள்.

“அன்பை!”

பாவனா சாஹிதியை இரக்கத்துடன் பார்த்தாள். அவளுக்கு தேர்தல் வேலைகள் தலைக்கு மேல் இருந்தன. ஆனாலும் சாஹிதியை அப்படியே விட்டுவிட மனம் ஒத்துழைக்கவில்லை. “மாலையில் உனக்கு ஏதாவது வேலை இருக்கா?” என்று கேட்டாள்.

“ஒன்றும் இல்லை.”

“மாலையில் என்னோடு ஒரு மணி நேரம் இருக்க முடியுமா?”
“கண்டிப்பாய்.”

அன்று மாலையில் அவள் தன் தேர்தல் வேலைகளை ஒதுக்கிவிட்டு சாஹிதியைச் சந்தித்தாள். இருவரும் சேர்ந்து புறப்பட்டார்கள்.

“எங்கே போகிறோம் நாம்?’ சாஹிதி கேட்டாள்.

“சொல்கிறேன்” என்று காரை ஒரு ஆபீசுக்கு முன்னால் நிறுத்தச் சொன்னாள். “இங்கே யார் இருக்கிறார்கள்?’ என்று கேட்கப் போன சாஹிதி வார்த்தைகளை பாதியிலேயே நிறுத்திக் கொண்டாள். உள்ளேயிருந்து ராமநாதன் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தான். ஸ்கூட்டரின் முன்னால் ஏழு வயது சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். பின் இருக்கையில் மனைவி உட்கார்ந்திருந்தாள். அவன் சிரித்துக் கொண்டே ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவள் தலையை அசைத்துக் கொண்டிருந்தாள். சந்தோஷமாக போய்க் கொண்டிருந்தார்கள். சாஹிதியின் முகம் வாடி விட்டது.

“அவள் யார்?” என்று கேட்டாள்.

“யார் மூலமாய் தனக்குச் சுகம் இல்லையென்று அவன் உன்னிடம் உளறினானோ அந்த மனைவி அவள். மிகவும் சந்தோஷமான குடும்பம் அவர்களுடையது. அவள் ஆபீசுக்குப் போய் விட்ட நேரங்களில் உன்னைப் போன்ற பெண்களிடம் இது போன்ற கதைகளை அளந்துக் கொண்டிருப்பான்” என்றாள் பாவனா.

சாஹிதி அழத் தொடங்கினாள். பாவனா அவள் அழுகையைப் பொருட்படுத்தவில்லை.

“நம்ப வைப்பது போல் கதைகளை ஜோடித்துச் சொல்லுவது ஆண்களுடைய சுபாவம். அவற்றை நம்பி மோசம் போகாமல் இருக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. முன்பாக இருந்தால், இதெல்லாம் ராமநாதனின் தவறு என்று சொல்லி இருப்பேனோ என்னவோ. ஆனால் இப்போது உன்னுடைய அப்பாவித்தனத்தை என்னால் மன்னிக்க முடியவில்லை.”

சாஹிதி மேலும் பெரிதாக விசும்பிக்கொண்டே “நான் என்ன செய்யட்டும்? எல்லோருமே என்னை ஏமாற்றுகிறார்கள். வீட்டில் அம்மாவின் இரண்டாவது கணவன் கொடுக்கும் தொல்லையைத் தாங்க முடியாமல் வெளியே நட்புக்காக தவித்துப் போய் இப்படிப் பண்ணிவிட்டேன்” என்றாள்.

“உங்க அம்மாவின் இரண்டாவது கணவன் யார்?” ஆச்ச்சரியமடைந்தவளாய் கேட்டாள் பாவனா.

“அன்றைக்கு நீங்க பார்த்தீன்களே, அவன்தான். பரமஹம்சா!” என்று தன் கதை முழுவதையும் சொன்னாள். பாவனா வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள். எல்லாம் கேட்டு முடித்த பின், “அவனுக்குப் பாடம் கற்பிக்காமல் போனாயா?” என்று கேட்டாள்.

“எப்படி?”

“எப்படியாவது? சொத்து முழுவதும் உன்னுடையது, உங்க அம்மாவுடையது. அம்மாதான் அப்பாவி. ஆனால் உனக்கென்ன வந்தது? படிப்பு இருக்கு. புத்திசாலித்தனம் இருக்கு. நினைத்தால் எப்படியாவது பாடம் கற்பிக்க முடியும்.”

“நீங்க அப்படியே பரத்வாஜ் போல் பேசுறீங்க.”

பாவனா வியப்போடு “பரத்வாஜை உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.

“ஒரு நாள் இந்த கஷ்டங்களை எல்லாம் தாங்கிக்க முடியாமல் சூட்கேசை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். அன்று இரவுதான் அவர் என்னைச் சந்தித்தார். இப்போ நீங்க சொன்னதையே  சொன்னார் அவர். எனக்கு தைரியம் போதவில்லை. திரும்பி வீட்டிற்குப் போய்விட்டேன்.

“பரவாயில்லை. இப்பவும் ஒன்றும் மிஞ்சி விடவில்லை. அந்த பரமஹம்சாவை ஒரு ஆட்டம் ஆட்டி வைப்போம்.”

சாஹிதியின் முகம் மலர்ந்தது. “அது மட்டும் நடந்தால் உங்கள் நன்றியை மறக்க மாட்டேன். கைமாறு பண்ணுவேன்.”

“பாவனா சிரித்தாள். “என்ன பண்ணுவாய்?”

“சொத்து முழுவதையும் எழுதித் தந்து விடுகிறேன்.”

“உன் சொத்து எனக்கு எதுக்கு? ஆனாலும், இதோ பார்… இந்த தேர்தல் முடியும் வரையிலும் பொறுத்திரு. நீ மட்டும் தளர்ந்து போய்விடக் கூடாது. அந்தப் பரமஹம்சா ஒரு குள்ள நரி. விதவிதமாக திட்டம் போடுவான். பாம்பு போல் பழி வாங்குவான். நீ தைரியமாய் இருக்கணும்.”

“கண்டிப்பாய் இருப்பேன். ஆனால் ஒரு கேள்வி கேட்கலாமா?”

“என்ன?”

“எனக்காக இதெல்லாம் ஏன் பண்ணுறீங்க?”

“உனக்காக மட்டுமே இல்லை. எனக்காகவும்தான். அன்றிரவு பரத்வாஜ் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுவிட்டு இந்தக் கஷ்டங்களிலிருந்து நான் எப்படி வெளியேறுவது என்று மட்டும்தான் யோசித்தேன். கஷ்டம் தருபவர்களை அப்படியே விட்டு விடக்கூடாது என்று இப்போ தோன்றுகிறது. பரமஹம்சா, ராமமூர்த்தி, ராமநாதன்.. இவர்களின் கைகளிலிருந்து ஒரு பாவனா விடுப்பட்டால் இன்னொரு சாஹிதி சிக்கிக் கொள்கிறாள். எல்லோருக்கும் பாடம் புகட்டணும். அதுசரி, ராமநாதன் மீது உனக்கு சாப்ட் கார்னர் எதுவும் இல்லையே?”

“சாப்ட் கார்னரா? இனி வாழ்நாளில் என்றுமே அவனைச் சந்திக்கப் போவதில்லை.” உறுதியாய் சொன்னாள் சாஹிதி. ஆனால் அது அத்தனை சுலபமாக முடியவில்லை.

*****

தேர்தல்கல் முடிவடைந்தன.

பாவனா ஐம்பதாயிரம் ஓட்டுகள் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றாள்.

எண்ணிக்கை முடிவடைந்து, முடிவுகளை அறிவித்த பொழுது, அவளால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. “எனக்கு இன்னும் இதெல்லாம் கனவைப் போலவே இருக்கு” என்றாள் கட்சித் தலைவரிடம்.

கட்சித் தலைவர் சிரித்தார். “எனக்கு இதல்லாம் ஆச்சரியமாய்த் தோன்றவில்லை. மக்கள் அபிப்பிராயம் வெள்ளத்தைப் போன்றது. காற்றின்போக்கைப் பொறுத்து அது வேகமாய் பரவும். அவருடைய மகன் அப்பாவிப் பெண்ணை ஏமாற்றினான். அதை நீ தைரியமாய் வெளிப்படுத்தினாய். அது போதும். அவருடைய இருபத்தைந்து அரசியல் வாழ்க்கை வெள்ளத்தோடு அடித்துக் கொண்டு போய்விட்டது. தாம் பண்ண முடியாததை இன்னொருத்தர் பண்ணிவிட்டால் மக்கள் ஐடென்டிஃபை  பண்ணிகொள்வார்கள். உன் வெற்றிக்கு அதுதான் காரணம்.”

“அப்போ இந்த வெற்றி நெகடிவ் ஓட்டிங் மூலமாய் வந்ததுதானா? இது நிரந்தரம் இல்லையா?”

“அரசியலில் எதுவுமே நிரந்தரம் இல்லை. அது வெற்றியே இருந்தாலும் சரி, தோல்வியாய் இருந்தாலும் சரி.”

******

“வணக்கம். என் பெயர் பாவனா. என்ன நினைவிருக்கலாம்” என்றாள் கைகளைக் கூப்பியபடி பாவனா.

பரமஹம்சா அவளைக் கூர்ந்து நோக்கினான். எங்கேயோ பார்த்த நினைவு. ஆனால் ஞாபகம் வரவில்லை. தினந்தோறும் நிறைய பெண்பக்தர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் பாவனாவின் அழகு கண்களைத் திருப்பிக் கொள்ள முடியாதபடி இருந்தது.

“என்னை அன்றைக்கு சாஹிதி காரின் கொண்டு விட்ட போது நீங்க பார்த்தீங்க.”

“ஓ.. நீயா.. எப்படி இருக்கும்மா உன் உடம்பு?”

அவன் பேப்பர் படிக்க மாட்டான் என்று பாவனாவுக்குப் புரிந்துவிட்டது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அவன் மூலமாய் பூஜைகளைப் பண்ணிக் கொண்டவர்கள் கூட பாவனாவைப் பற்றி அவனிடம் சொல்லவில்லை. அது அவன் துரதிர்ஷ்டம். கையை காற்றில் வீசி உள்ளங்கையைத் திறந்தான். சிவப்பு நிற குங்குமம் அவன் உள்ளங்கையில் மின்னிக் கொண்டிருந்தது.

“எடுத்துகொள். உன் சௌபாக்கியம் என்றும் தழைத்திருக்கும்” என்றான்.

பாவனா பக்தியோடு அந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டாள்.

“உங்க ஆசீர்வாதத்தால் என் உடம்பு சரியாகிவிட்டது. அது கேன்சர் இல்லை என்று சொல்லி விட்டார்கள். உங்கள் தரிசன பாக்கியம் கிடைத்ததுமே இவ்வளவு பெரிய ஆபத்து நீங்கிவிட்டது என்று தோன்றியது. அதான் இன்னொருமுறை உங்கள் தரிசன பாக்கியத்துக்காக  வந்திருக்கிறேன். உங்களைப் பார்த்தால் ஏதோ புதிய சக்தி உள்ளேயிருந்து பொங்கி எழும்புகிறது.”

“ரொம்ப சந்தோஷம் அம்மா. பரமஹம்சாவை நம்பியவர்களை யாரையுமே துக்கம் நெருங்காது.” அவள் கையைத் தடவிக் கொண்டே சொன்னான். பாவனாவுக்கு ராமநாதனின் நினைப்பு வந்தது. இவன் மக்களை கவர்வது  இந்த விதத்தில்தான் போலும் என்று நினைத்துக் கொண்டாள்.

சிரிப்பை அடக்கிக் கொண்டே “சாஹிதிக்கு எப்போ கல்யாணம் பண்ணப் போறீங்க?” என்று கேட்டாள்.

“பண்ணனும். ஆனால் யார் வந்தாலும் பெண்ணின் சொத்துக்காகவே வருகிறார்கள். அதுதான் வருத்தமாய் இருக்கு.”

“சொத்தெல்லாம் அவளுடைய அம்மா நிர்மலாவின் பெயரில்தானே இருக்கு?  மகளுடைய பெயருக்கு எழுதி வைக்க வேண்டாம் என்று சொல்லி விடுங்கள். சொத்து கைக்கு வந்தால் சாஹிதி எல்லா பணத்தையுமே கஞ்சாவுக்கு செலவு பண்ணி நாசமாக்கி விடுவாள்.”

“ஓஹோ! சாஹிதி விஷயம் உனக்குக் கூட தெரியும் என்று சொல்லு. உன் சிநேகிதிதானே! எனக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. இந்த தொல்லைகளை எல்லாம் விட்டுவிட்டு சன்யாசம் வாங்கிக்கொண்டு எங்கேயாவது போய் விடலாம் என்றாலும் பந்தங்கள் விட மாட்டேன் என்கிறது.”

“எப்படிங்க விடும்? உங்க முதல் மனைவி இறந்து விட்டாள் என்றாலும், இரண்டாம் மனைவியும், மூன்றாம் மனைவியும் உயிரோடுதானே இருக்கிறார்கள்? அப்புறமாய் ரங்கம்மாவைப் போன்ற பெண் பக்தர்களின் கதி என்னவாகும்?”

திடீரென்று அந்த அறையில் நிசப்தம் சூழ்ந்து கொண்டது. பரமஹம்சா வியப்போடு அவளைப் பார்த்தான். அவள் லேசாய் சிரித்துக் கொண்டிருந்தாள். அவன் முகம் சிவந்தது.

“நீ என்ன சொல்கிறாய்? அதிகப் பிரசங்கம் பண்ண உனக்கு தைரியம் எப்படி வந்தது? சாஹிதி உன்னிடம் வந்து போதை மயக்கத்தில் எதையோ உளறி இருக்கிறாள். அப்படித்தானே?”

“உண்மைதான். சாஹிதி ஓரளவுக்குச் சொன்னாள். அவள் விஷயத்தை விட்டுத் தள்ளு. ரங்கம்மா என்ற சமையல்காரி வெளியே ஹாலில் உன் தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய சேரியில் பஞ்சாயத்து நடந்ததாம். நீ தந்த தெய்வப் பிரசாதம் அவளுக்கு ஆபத்தைக் கொண்டு வந்திருக்கிறது. கணவன் உண்மையைத் தெரிந்துகொண்டு அவளை வீட்டைவிட்டு துரத்திவிட்டான். உனக்கு பாத சேவை பண்ணிக்கொண்டு  குழந்தையின் பொறுப்பைத் தந்தையான உன்னிடமே ஒப்படைத்து பெரும் பேரு அடையணும் என்று காத்திருக்கிறாள்.”

பரமஹம்சாவின் முகம் தொய்ந்துவிட்டது. “அந்த ரகளை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்குத் தேவையில்லை. நீ இங்கிருந்து போய்ச் சேர் . என் பொறுமையைச் சொதிக்காதே” என்றான்.

“அம்மம்மா! அப்படிச் சொல்லிவிடாதே. நான் வந்த வேலை இன்னும் முடியவில்லை. இன்னொரு விஷயம்.. கொஞ்ச நேரத்திற்கு முன்னால் நீ கொடுத்த சௌபாக்கியம் எனக்குக் கொஞ்சமும் பயன்படாது. நான் விவாகரத்துக்காக கோர்டில் கேஸ் பைல் பண்ணி இரண்டு மாதமாகிறது. உனக்கு ஜோசியம் சொல்லும் சக்தி கூட கிடையாது. அப்பாவி மக்களுக்கு எட்டாத வகையில் உன்னைப் பற்றிய உண்மைகள் நிறைய மறைந்து இருக்கின்றன. அதில் முக்கியமானது, நீ இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் சொத்து உன்னுடையது அல்ல. அதை நிரூபிப்பதற்காக வந்திருக்கிறேன். ஒரு காலத்தில் சோடா குடிக்கவும் வக்கு இல்லாமல் தகிக்கும் வெயிலில் நடந்து போவாய் நீ. இன்றைக்கு ஏ.சி. காரில் தவிர வேறெதிலும் சுற்றுவதில்லை. எப்படி? அதை விட்டுத் தள்ளு. சௌபாக்கியம் பெண்களுக்கு மட்டுமே உரியது இல்லை. நாளையிலிருந்து உன் வீடு உன் மூன்று மனைவியருடனும், ஆறு குழந்தைகளுடனும் கலகலவென்று இருக்கப் போகிறது. அதோடு இந்த விஷயத்திற்கு விளம்பரம் தந்து பத்திரிகையில் நான் எழுதும் கட்டுரைகளால் உன் எஞ்சிய பக்தைகளின் கணவன்மார்கள் எல்லோரும், தம் மனைவியரை அழைத்து வந்து மிகப் பணிவுடன் உனக்கு அர்பணித்துக் கொள்வார்கள். விரைவிலேயே நீ ஸ்ரீகிருஷ்ணரைப் போன்ற பெரிய மனிதனாகி விடுவாய்.”

“என்ன துணிச்சல் உனக்கு? என்னைப் பற்றி பத்திரிகையில் எழுதப் போகிறாயா? உன் மீது மானநஷ்ட வழக்குப் போடுகிறேன் பார். உன்னை ஜெயிலுக்கு அனுப்புகிறேன்.”

“கண்டிப்பாய் அனுப்பு. நான் மட்டும் உன்னை ஜெயிலுக்கு அனுப்ப  மாட்டேன். மனைவிகளையும், குழந்தைகளையும் போஷிப்பதற்கு தெருவில் கையேந்தி பிச்சை எடுத்து சம்பாதிக்கும் நிலைக்கு அனுப்புகிறேன்.”

“உன்னை… உன்னை…”அவன் அவள் மீது பாயப் போனான்.

பாவனா சிரித்தாள். “என்னை ஒன்றும் பண்ண முடியாது உன்னால். என் உடம்பின் மீது உன் கை பட்டால் போதும். அடுத்த வினாடி என் செகரெட்ரி உள்ளே வருவார். அவர் அடிக்கும் அடி உன் உடம்பில் வெளியில் தென்படாது. கோர்ட்டுக்குப் போனாலும் கேஸ் நிற்காது. மேலும் உன் மேலேயே கேஸ் போடுவேன்.”

“உனக்கு செகரெட்ரியா? எதுக்கோ, பாவம்!” ஏளனமாய் சிரித்தான் அவன். தன்னை பயமுறுத்துவதற்காகதான் அவள் அவ்வாறு பேசுவதாய் நம்பினான் அவன்.

அவன் சிரிப்பைத் தன் குரலால் அடக்கியபடி பாவனா சொன்னாள்.

“ஆமாம். என் சேகரெட்ரி தான். அதான் சொன்னேனே, உன் சக்திக்கு எட்டாத உண்மைகள் இன்னும் இருக்கின்றன என்று. தற்சமயம் இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. நான். என் தொகுதியில் சாஹிதி, ரங்கம்மா என்ற இரு பெண்கள் கொடுத்த புகாரின் ஆதாரமாய் விசாரணை செய்வதற்கு உன்னிடம் வந்தால், என்னையே கற்பழிக்க முயன்றாய் என்று நாளைய பேப்பரில் எழுதச் செய்கிறேன். எதற்கும் நல்லது. நாளை முதல் எல்லா பேப்பர்களையும் வாங்கிப் புரட்டு. என்னதான் சுவாமிகளாய் இருந்தாலும் இதுபோன்ற விஷயங்கள் பேப்பர் மூலமாய்தான் தெரியும்” என்று அங்கிருந்து போய்விட்டாள்.

பரமஹம்சா சுதாரித்துகொள்ள ரொம்ப நேரம் ஆயிற்று. பிறகு யோசனையில் ஆழ்ந்தான். “யார் இந்த பாவனா? தன்னை எதற்காக இவ்வாறு மிரட்டுகிறாள்? சாஹிதிக்காகவா? சிநேகிதிக்கு உதவி செய்யும் எண்ணமா? இதற்கு நிர்மலா சம்மதித்தாளா?

நிர்மலாவின் நினைவு வந்ததுமே தைரியம் வந்து விட்டது. அந்த அப்பாவிப்பெண் தன் பக்கம் இருக்கும் வரையில் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. அவளிடம் பேசுவோம் என்று போன் அருகில் சென்றான். அதற்குள் போன் மணி ஒலித்தது.

“நான்தான் ராஜலக்ஷ்மி. உங்களை எல்லா இடத்திலும் தேடிக் கொண்டிருக்கிறேன். என்ன செய்துகிட்டு இருக்கீங்க? இங்கே குடி மூழ்கிப் போய்க் கொண்டிருக்கு” என்றாள். அவள் வாய்த் துடுக்குத்தனம் அவன் அறியாதது இல்லை.

“என்ன நடந்தது?”

“இந்த வீடு நம் சொந்த வீடா இல்லையா? அதைச் சொல்லுங்க முதலில்.” உலுக்கி எடுத்தாள் போனில்.

ஊட்டி ரேஸில் எதிர்பாராமல் எழுபத்தையாயிரம் இழந்துவிட்ட போது, அந்த வீட்டை வாங்கப் போவதாய் போய் சொல்லி, அவள் சொந்த நிலத்தை விற்கச் செய்து பணத்தை எடுத்துக் கொண்டான். நிர்மலாவின் வீட்டை தன் சொந்த வீடு என்று சத்தியம் பண்ணினான். இப்பொழுது லக்ஷ்மி அதைப் பற்றிக் கேட்க வேண்டிய காரணம்?

“சொல்லுங்கள். வீடு நம்முடையது என்றால்  காலி பண்ணச் சொல்லி நோட்டீஸ் ஏன் வந்திருக்கு?” அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் வெடி குண்டாய் வெடித்தது. காலி பண்ணச் சொல்லி நோ…ட்…டீ….ஸ்!

“இதோ நான் வருகிறேன். அப்புறமாய்ப் பேசுவோம்” என்று போனை வைத்துவிட்டான் அவன். நோட்டீஸ் யார் கொடுத்திருப்பார்கள்? சாஹிதியா? அவளுக்கு அத்தனைத் துணிச்சல் எப்படி வந்தது? யோசித்தபடியே வெளியே வந்தான்.

வாசலில் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள் ரங்கம்மா. மடியில் குழந்தை.

“அந்தம்மா யாரோ தெரியாது. என் விஷயம் எல்லாம் கேட்டுக்கிட்டு இங்கே கூட்டிக் கொண்டு வந்தாள் சாமி. என்னை இங்கனே இருக்கச் சொல்லிடுத்து” என்றாள் பணிவுடன்.

அவளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பரமஹம்சா வெளியே நடந்தான். நிலைமை எவ்வளவு மோசமாய் மாறப் போகிறது என்று அவன் ஊகித்திருக்கவில்லை.

அன்றே அவன் பங்களூருக்குப் போய்விட்டான். பதினைந்து நாட்களுக்குப் பிறகு அவன் திரும்பி வந்தான். விமான நிலையத்திற்கு எப்போது போல் கார் வரவில்லை. அவனுக்குக் கோபம் வந்தது. டாக்சியைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான். வீட்டு வாசலில் பூட்டு தொங்கிக் கொண்டு இருந்தது. வீட்டிற்கு முன்னால் சிம்மாசலம் இருந்தான், ஒரு காலத்தில் தான் வேலையை விட்டுத் துரத்திய வேலைக்காரன்!

“வீடு, பேக்டரி எல்லாத்தையும் தன் ஆதீனத்தில் எடுத்துக் கொள்ளச் சொல்லி யாரோ லாயரை ஏற்பாடு செய்து கொண்டாங்களாம் சின்னம்மா. அவர் பூட்டிக்கொண்டு போய்விட்டார். பெரியம்மா, சின்னம்மா இரண்டு பெரும் ஊருக்குப் போயிருக்காங்க. நிர்மலாம்மா உங்களுக்கு எழுதிக் கொடுத்த பத்திரங்களை எல்லாம் கொடுத்துவிட்டுப் போகச் சொன்னாங்க. இல்லா விட்டால் நோட்டீஸ் அனுப்புவாங்களாம்.”

“பின்னே நீ எதற்காக இங்கே இருக்கிறாய்?”

“இரண்டு மாத சம்பளம் கொடுத்துவிட்டு, சர்வென்ட் க்வார்டரில் இருந்துகொண்டு வீட்டை பார்த்துக் கொள்ளச் சொன்னாங்கய்யா.”

“ஒரு தடவை பூட்டைத் திற. உள்ளே என் துணிமணி எல்லாம் இருக்கு. எடுத்துக் கொள்கிறேன்.”

‘சாவி என்னிடம் இல்லை. உங்க துணிமணி எல்லாம் ஒரு சூட்கேசில் போட்டு வைத்திருக்கிறாங்க. கொண்டு வருகிறேன், இருங்கள்” என்று உள்ளேயிருந்து சூட்கேஸ் கொண்டு வந்து கொடுத்தான்.

“ஒரு தடவை சாவியைத் தாடா. என் இந்திரா விகாஸ் பத்திரங்கள் எல்லாம் உள்ளேதான் இருக்கு.”

“இன்னும் விகாஸம் எங்கே இருக்கு? எல்லாமே இருட்டுதானுங்க.” ஜோக் அடித்தான்.

“மூடு வாயை. போய் ஆட்டோவை பிடித்துக் கொண்டுவா.”

“அருகில் கிடைக்காதுங்க. வீட்டை விட்டுவிட்டு ஒரு நிமிஷம் கூடப் போகக் கூடாதுன்னு வார்னிங் கொடுத்திருக்கிறாங்க. ராத்திரி வேளையில் திருட்டு பயம் ஜாஸ்தின்னு சொன்னாங்க. நீங்க வந்தால் இன்னும் ஜாக்கிரதையாய் இருக்கச் சொன்னாங்க.”

“கிழித்தாய் போ.”

“நான் எப்போதும் எதையும் கிழிக்கலைங்க. ஒரு நாளும் தவறான காரியங்கள் செய்தது இல்லை” என்றான் சிம்மாச்சலம் ஓரக்கண்ணால்  பார்த்துக்கொண்டே.

பரம்ஹம்சாவின் முகம் சிவந்துவிட்டது. சூட்கேசை எடுத்துக்கொண்டு இரண்டாவது வீட்டிற்கு வந்த போது வீட்டிற்கு முன்னால் லாரி நின்று கொண்டிருந்தது. சாமான்களை ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

“என்ன இது? நான் வராமல் வீட்டை ஏன் மாற்றுகிறாய்?” கோபமாய் கேட்டான் ராஜலக்ஷ்மியை.

“இது நம் வீடுன்னு ஏமாற்றினாய். அவர்கள் நோட்டீஸ் அனுப்பி விட்டார்கள். ஆனாலும் உனக்கு நான் எதுக்கு? அதான் துணைக்கு ரங்கம்மாவும், குழந்தையும் இருக்காங்களே?”

“லக்ஷ்மி.. நீ .. நீ என்னை விட்டுப் போகிறாயா?” நம்ப முடியாதவனாய் கேட்டான்.

“ஆமாம். நிர்மலாவுக்கு ஏற்பட்ட கதி எனக்கும் வந்து விடக் கூடாது என்றுதான்.” விடுவிடென்று வெளியே நடந்தாள். அவன் தடுக்கப் போனபொழுது பின்னாலேயே வந்த ரங்கம்மா “வாங்க சாமி. அவள் போனால் போகட்டும். நான் தான் இருக்கிறேனே உங்களுக்கு பாதசேவை பண்றதுக்கு” என்றாள்.

“சீ.. போ” என்று அவள் பிடியிலிருந்து கைகளை உதறிக் கொண்டான் பரமஹம்சா. இயந்திர கதியில் இதையெல்லாம் செய்து கொண்டிருந்தானே  தவிர சாஹிதியை எப்படி எதிர்த்து நிற்பது என்று அவன் மனம் யோசித்துக் கொண்டிருந்தது.

(தொடரும்)

Series Navigationபோதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 20பின்னற்தூக்கு
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *