தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

29 மார்ச் 2020

ஒலியின் க‌ல்வெட்டுக‌ள்

ருத்ரா

Spread the love

TM_Soundararajan

 

(இன்னிசைச்செல்வ‌ர் டி.எம்.ஸ் அவ‌ர்க‌ள் ம‌றைவிற்கு அஞ்ச‌லி)

குர‌ல் த‌ந்து
குரல் மூலம்

முக‌ம் த‌ந்து
இம்ம‌க்க‌ளை
ஆட்சி செய்தீர்.

முருக‌ன் எனும்
உந்து விசை
அத்த‌னையும்
உன்னிட‌ம்
தேனின் ம‌ழை.

“அன்ன‌ம் இட்ட‌ வீட்டிலே”
அந்த‌ முத‌ல் பாட்டிலிருந்து
“க‌ணீர்”க்குர‌ல்
தேய‌வில்லை மாற‌வில்லை.

கோடித் த‌மிழ் நெஞ்சுக்குள்ளும்
ஊடி ஊடி பாய்ந்த‌தில்
ஊன் உருக்கி என்பு உருக்கி
ஊழி இசை வெள்ள‌ம் தான்.

உன் குரலுக்கு
உதடு அசைத்தவர்கள்
உயரம் போனார்கள்.
அவர்களை
கீழே விழாமல்
தூக்கிப்பிடித்திருந்தது
இவர்களின் கண்ணுக்கு தெரியாத
உன் உயிர்க்குரல் அல்லவா?

பாவம் நீ ..அந்த
கூம்பு ஒலிபெருக்கிகளில் அல்லவா
கூடு கட்டிக்கிடந்தாய்!

இதுவும் ஒரு வகையில்
வைக்கோல் கன்றுக்குட்டியை காட்டி
பால் கறப்பது போல் தான்.
ஆம் அந்த
வாக்குப்பெட்டிகளுக்குள்ளேயும்
கண்ணீர்ப்பிரளயம் தான்.

மெல்லிசை ம‌ன்ன‌ர்களும்
எழுதிக்கொடுத்த கவிஞர்களும்
ப‌லூன் எடுத்து கொடுத்தார்க‌ள்
உன் உயிர் மூச்சு அத்தனையும்
இன் மூச்சாய் உள்ளிற‌ங்கி
விஸ்வ‌ரூப‌ம் காட்டிய‌து.

ப‌த்து அவ‌தார‌ம் அத்த‌னையும்
ப‌த்தாது உனைக்காட்ட‌!!!1.
“திருமால் பெருமைக்கு நிக‌ரேது”

எனும் பாட‌லே ஒரு பாற்க‌ட‌ல்
ராக‌ங்க‌ளின் ராக‌ங்க‌ள் அங்கு
பொங்குமாம்பெருங்க‌ட‌ல்.

இன்னொரு பாட்டு..அதில்
மெட்டு குழைந்த‌து.
உண‌ர்வு குவிந்த‌து..உன்
உயிரிசை பிசைந்த‌து
எங்க‌ள் ம‌ன‌ங்க‌ளை யெல்லாம்!
அது “அவன் தான் ம‌னித‌ன்” ப‌ட‌ம்.
“ம‌னித‌ன் நினைத்திருந்தான்
வாழ்வு நிலைக்கு மென்று..”

இப்போது எல்லாம்
வைக்கோல் படப்பில்
விழுந்த‌ ஊசியை
தேடுவ‌து போல்
அபூர்வ‌மாய் கேட்கின்றது
ந‌ல்ல‌ சினிமாப்பாட்டு.

அன்று
உன் பாட‌ல்க‌ளின்
வைக்கோல் ப‌ட‌ப்பு எல்லாமே
தேன் கீற்றுக‌ள்…இசையின்
உயிர் நாற்றுக‌ள்.

குர‌ல் இசைக்கு
பக்க‌ வாத‌ம் இன்று
அத‌னால்.
ப‌க்க‌ வாத்திய‌மே
இன்றைய‌ இசை.

உன் முத்திரைக்கு
எந்த‌ பாட்டை சொல்ல‌?
எந்த‌ ப‌ட‌த்தை சொல்ல‌?

பாட்டுக‌ள் வெறும் அடையாள‌ங்க‌ள்.
அவை நீ
உன் நுரையீர‌ல் பூங்கொத்தின்
ஒவ்வொரு இத‌ழாய்
உதிர்த்து உதிர்த்து
ந‌ட்டு வைத்த‌ மைல் க‌ல்.

உன் இசையின் ப‌ய‌ணம்
போய்
முட்டி நிற்கும் இட‌மும்
அந்த‌ பாட்டு தான்.
க‌ண்ணீர் முட்டி நிற்கிற‌து
காட்சிக‌ள் புகைமூட்ட‌ம்.

“போனால் போக‌ட்டும் போடா”

உன் உட‌ல்கூடு போக‌ட்டும்.
உன் குர‌ல்க‌ள் யாவும்
உன் இசை மூச்சுக‌ள் யாவும்
எங்க‌ளுக்கு
அழியாத‌ அக‌லாத‌
இசைக்கு .
ஒலியின் க‌ல்வெட்டுக‌ள்

Series Navigationஜங்ஷன்தாகூரின் கீதப் பாமாலை – 66 பிரியும் வேளையில் நீ சொல்லி விடு .. !

9 Comments for “ஒலியின் க‌ல்வெட்டுக‌ள்”

 • சி. ஜெயபாரதன் says:

  இராம காவியம் படைத்த கவிச் சக்ரவர்த்தி கம்பன், சிலப்பதிகாரம் வடித்த மேதை இளங்கோவடிகள் வரிசையில் 10,000 மேற்பட்ட இசைத்தமிழ்ப் பாடல்கள் பாடித் திரை இலக்கிய வானில் ஒளிர்ந்த டி. எம். சௌந்திர ராஜன் ஒருவராய் அமராகி விட்டார்.

  அவருக்கு இரங்கல் பாமாலை சூடிய கவிஞர் ருத்ராவைப் பாராட்டி நன்றி கூறுகிறேன்.

  சி. ஜெயபாரதன்.

 • RUTHRAA (E.PARAMASIVAN) says:

  நன்றி !விஞ்ஞான வித்தகர் சி.ஜெயபாரதன் அவர்களே

  இறந்தது
  டி.எம்.எஸ் மட்டும் அல்ல.
  மீண்டும் இங்கு
  எம்.ஜி.ஆரும்
  சிவாஜியும் தான்.

  அன்புடன் ருத்ரா

  • சி. ஜெயபாரதன் says:

   கவிஞர் நண்பர் ருத்ரா,

   உயிர்நீத்த நடிகர் சிவாஜி கணேசனுக்கும், ஒப்பற்ற புரட்சி நடிகர் எம்ஜியாருக்கும் இன்னும் பல நூற்றாண்டுகள் திரையில் உயிரூட்டி வரப்போவது ஐயமின்றி டியெம்மஸ் சௌந்திரராஜந்தான்.

   சி. ஜெயபாரதன்

 • punaipeyaril says:

  டி எம் எஸ் நல்லதொரு பாடகர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்க்காக பிறரை தாக்குதல் என்ன நியாயம். எம் ஜி ஆரும் சிவாஜியும் உயரம் போனதற்கு இவர் பாடலுக்கு வாயசைத்தது தான் எனில், டி எம் எஸ் பாடிய பிற நடிகர்கள் கதையென்ன..? மேலும், டி எம் எஸ் பாடல்களின் வரிகள் தந்தவர்கள் அதனிலும் மேலானவர்கள் தானே… கருத்துள்ள வரிகள் தானே நெஞ்சில் நின்று , நமது அனுபவம் ஒட்டி அதுவும் மனதில் அசைபோடுகிறது. மேலும், “பாவம் நீ ..அந்த
  கூம்பு ஒலிபெருக்கிகளில் அல்லவா
  கூடு கட்டிக்கிடந்தாய்! “ – இது என்ன அர்த்தம் என்று புரியவில்லை?
  இவர் இறந்த போது மீண்டும் எம் ஜீ ஆர், சிவாஜி செத்தார்கள் என்றால், எம் ஜீ ஆர் சிவாஜி இறந்த போது இவரும் செத்தாரா என்ன? தயவு செய்து ஒருவரின் உயர்வைச் சொல்வதாக எண்ணி பிறரை தரம் தாழ்த்த வேண்டாம்.

 • Dr.G.Johnson says:

  மறைந்த இசை வேந்தர் டி .எம். சௌந்தரராஜனுக்கு அஞ்சலிக் கவிதை வடித்துள்ள ருத்ரா அவர்களுக்கு நன்றி. உண்மையில் அவருக்கு ஒரு தலையங்கமான சிறப்பு கட்டுரை வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் யாரும் எழுதாதது பெருங்குறையே.

  டி .எம்.எஸ் .குரல் ஒலிக்காத வீடு இல்லை எனலாம். நான் சிறுவயதிலிருந்து இவரின் பாடல்கள் கேட்டு மகிழ்ந்துள்ளேன்.

  மலைக்கள்ளனில் , எம்.ஜி.ஆருக்கு ” எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ” என்ற கலைஞரின் வரிகளை அவர் பாடியது அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றது. அன்றிலிருந்து அவர் பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு அப்படியே பொருந்தின . ” நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் ” பாடலை எம்.ஜி.ஆர்.பாட்டு என்றே மக்கள் கூறுவதுண்டு.

  அதுபோல் அவரின் குரல் அசலாக சிவாஜிக்கும் பொருந்தியது. ” தேவனே என்னைப் பாருங்கள்” , “யாருக்காக இது யாருக்காக” , ” போனால் போகட்டும் போடா ” என்பவை பிரலமான சிவாஜி பாடல்கள்.

  இந்த இரு ஜாம்பவான்களுக்கும் இவர் எப்படி தன்னுடைய குரலை மாற்றி பாடுகிறார் என்பதை எண்ணி நான் வியந்ததுண்டு.

  இவர் பாடிய முதல் பாட்டு ஸ்ரீ வள்ளியில் பாடிய, ” ராதே உனக்குக் கோபம் ஆகாதடி ” என்பதே.

  இவரின் கடைசிப் பாடல், கலைஞர் எழுதி ,ஏ .ஆர் . ரகுமான் இசையமைத்த ,” செம்மொழியாம் நம் தமிழ்மொழியே ” என்பது. இப் பாடலை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பாடப்பட்டது.

  10,000 பாடல்கள்வரைப் பாடி உலகச் சரித்திரம் படைத்தவர் டி .எம் .சௌந்தரராஜன் அவர்கள்.

  இன்று இந்த மாபெரும் இசை மேதை நம்மிடம் இல்லையெனினும் அவருடைய இனிய கானங்கள் உலகின் தமிழர் இல்லங்களில் ஒலித்த வண்ணமே இருக்கும்…டாக்டர் ஜி.ஜான்சன்.

  • RUTHRAA (E.PARAMASIVAN) says:

   நன்றி.டாக்டர் ஜி.ஜான்சன் அவர்களே

   டி.எம்.எஸ் அவர்கள் எம்.கே.டி (தியாகராஜ பாகவதர்) அவர்களின் எதிரொலியாக சினிமா உலகத்துள் நுழைந்தாலும் அவரை எதிரொலிக்காத மக்கள் இல்லை,இந்த மக்கள் ஆட்சியும் இல்லை.தேர்தல் வாக்குறுதிகளில்
   நான் ஆணையிட்டால் என்று சவுக்கு சத்தம் கேட்கும்போதெல்லாம் அவரது கணீர்க்குரல் தான் எதிரொலிக்கிறது.

   அன்புட‌ன் ருத்ரா

 • கவிஞர் இராய செல்லப்பா says:

  இன்றைய தமிழ்ப்படங்களில் பின்னணி பாடும் ஆண்களில் எவ்வளவு பேர் ஆண்குரலில் பாட முடிகிறது என்று பார்த்தால் டி.எம்.எஸ்.சின் மாட்சிமை புரியும். – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

  • RUTHRAA (E.PARAMASIVAN) says:

   அன்புள்ள கவிஞர் ராயசெல்லப்பா அவர்களே

   நீங்கள் குறிப்பிடும் ஆண்குரல் பெண்குரல் எல்லாம் கம்பியூட்டரின் குரல்வளையில்”சிங்க்ரோனைஸ்”பண்ணப்பட்டு விட்டது.அதனால் தான் டி.எம்.எஸ்ஸின் குரல் தனித்துக்கேட்கிறது.

   அன்புடன் ருத்ரா

 • Sivakumaran says:

  இசையின் பொருள் விளங்க பாவத்துடன் பாடி ஏராளமான தமிழ் ரசிகர்களை இசையால் வசமாக செய்த டி.எம்.எஸ் ஐயாவிற்கு அருமையான கவிதை மூலம் அஞ்சலி செய்துள்ளீர்கள். நன்றி.


Leave a Comment

Archives