தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 அக்டோபர் 2020

மாய க்குகை

புதிய மாதவி

Spread the love

அந்தக்குகை

அப்படியொன்றும்

இருட்டானதாக இல்லை

தொலைதூரத்திலிருந்து

பிடித்து வந்த

நட்சத்திரங்களை

கயிறுகளில் கட்டி

தலைகீழாகத் தொங்கவிட்டிருந்தார்கள்.

மின்மினி  வெளிச்சத்தில்

குகையின் பிரமாண்டம்

பயமுறுத்தியது.

நடக்க நடக்க

நீண்டு கொண்டே போன குகையில்

வெளியை செல்ல  வாசல்

எங்காவது இருக்கும்.

ஒருவேளை யாரும் திறக்காமல்

பூட்டியே இருப்பதால்

கதவுகளும் சுவர்களாய்

காட்சியளிக்கலாம்.

புறப்பட்ட இடத்திற்கே

வந்து விட்டதால்

பெருமூச்சு விடும் கால்கள்

இடறி விழுந்த வேகத்தில்

திறந்தது கதவு.

கண்ணைக்கூசும் வெளிச்சம்

கடலலை சப்தம்

காற்றாடி அறியாத

காற்றின் தரிசனம்

கையூன்றி எழுந்து நிற்பதற்குள்

நட்சத்திரங்கள்

பறந்து போயின.

குகை எங்கும்

இருள் கவிந்தது.

ஒற்றைக்கண் அரக்கன்

பக்கத்தில் வருகிறான்.

பைங்கிளி யாய்

அவன் தோள்களில் நான்.

சிறகுகளின்றி.

Series Navigationநவீன அடிமைகள்தண்ணி மந்திரம்

3 Comments for “மாய க்குகை”

 • கவிஞர் இராய செல்லப்பா, நியூஜெர்சி. says:

  கவிதையில் அவநம்பிக்கை தொனிக்கிறதே! மற்றபடி வாசிப்புக்குச் சுவையானதே.- நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

 • சோமா says:

  சற்றுக் குழப்புகிறது. மாயக் குகை ஒரு மாயை என்று உணர்ந்து நிஜ உலகிற்கு வரும் கிளியை துரத்தும் அந்த ஒற்றைக்கண் அரக்கன் யார்? மாயக்குகையின் பீடாதிபதியா?

 • ருத்ரா இ.பரமசிவன் says:

  தூக்கம் எனும் ஆழ்கடலுள்
  தின்று செறித்த‌
  நனவு எலும்புகளின்
  கூர்மை மிச்சங்கள்
  நங்கூரம் பாய்ச்சியதில்
  நீர்ப்பரப்புக்கு வந்த‌
  நுரைக்குமிழி இது.
  மனமே கடப்பாரை ஆகி
  மனதுக்குள்
  “தொட்டனைத்தே ஊறும்”
  வானவிற்குழம்பு பீய்ச்சும்
  அற்புத குகை இது.
  ஒற்றைக்கண் அரக்கனை
  விளையாட்டுத்தோளாய்
  எடுத்துக்கொண்ட‌
  அறிவின் பைங்கிளி
  விரித்த பஞ்சுச்சிறகில்
  படபடப்பது
  அச்சம் அகன்ற‌
  அழகின் அறிவு அல்லது
  அறிவின் அழகு.
  கீட்ஸ் சொன்ன‌
  ட்ரூத் பியூட்டி…
  பியூட்டி ட்ரூத்
  இதுவே.
  பாராட்டுகள்
  புதிய மாதவி அவர்களுக்கு.

  ====================ருத்ரா


Leave a Comment

Archives