கோத்தா திங்கி பேருந்து நிலையத்தின் எதிர்புறம் பிரதான வீதியில்தான் நான் பணிபுரியும் குவாலிட்டாஸ் ( Qualitas ) கிளினிக் உள்ளது.
இது மலாய்காரர்கள் நிறைந்துள்ள பகுதி. சுற்று வட்டாரத்தில் பெல்டா செம்பனைத் தோட்டங்கள் ( FELDA oil palm estates ) நிறைய உள்ளன. நல்ல வசதியுடன் மலாய்க்காரர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் கரங்களில் பணம் புரள்வது இங்கு கண்கூடு!
என் கிளினிக் இருக்கும் வரிசையில் இரண்டு உணவகங்களும், பக்கத்துக்கு வரிசையில் இரண்டு உணவகங்களும் உள்ளன. மலாய்க்காரர், கேரளா முஸ்லிம், தமிழ் முஸ்லிம், பாகிஸ்த்தானியர் என்று நான்கு வேறுபட்டவர்கள் இவற்றை நடத்துகின்றனர்.
நான் காலை ஒன்பது மணிக்கு பணிக்கு வருவதால் காலைச் சிற்றுண்டியை வீட்டில் அருந்தி விடுவேன்.ஆனால் மதிய உணவும், இரவு உணவும் மேற்கூறிய உணவகங்களில்தான் உட்கொண்டாக வேண்டும். இங்கு தமிழர் சைவ அசைவ உணவகம் கிடையாது., இந்த உணவகங்களில் முழுக்க முழுக்க மலாய்க்காரர்களின் சுவைக்கு ஏற்ற வகையில்தான் தயாரிக்கப் படுகின்றன. அந்த வாடை எனக்குப் பிடிப்பதில்லை. பாகிஸ்தான் உணவகச் சமையல் ஓரளவு நம்மவர் சுவைக்கு ஒத்திருக்கும்.ஆனால் அதை உண்டபின் நெஞ்சு கரிப்பு அதிகம் உண்டாகும். நான் இரவு பத்து வரை பணியில் இருப்பதால் வேறு வழியின்றி இவற்றில்தான் மாறி மாறி பசியை ஆற்றிக்கொள்வேன்.இடையிடையே தேநீரும் பருகுவேன்.
கடந்த ஒரு வருடமாக இந்த உணவகங்களுக்கு சென்று வருவதால் என்னை உணவக உரிமையாளர்களுக்கும் பெரும்பாலான மலாய்க்கார வாடிக்கையாளர்களுக்கும் தெரியும்.
இதனால் எனக்கு உணவு உண்ணும் நேரங்களில் துணைக்கு பஞ்சமில்லை. யாராவது தெரிந்தவர் அருகில் வந்து அமர்ந்துகொள்வதுண்டு.அங்கும் நோய் பற்றியும் மருந்து பற்றியும் பேசிக்கொண்டிருப்பார் .. இதனால் என்னால் நிம்மதியாக தனியே அமர்ந்து உணவை சுவைத்து உண்ண முடியாது. எது பற்றியும் சிந்தனை செய்யவும் முடியாது. அனைவருக்கும் தெரிந்த ஒருவராக இருந்துவிட்டால் இவ்வாறு தனிமையை இழக்க நேர்கின்றதே என்று சில வேளைகளில் அங்கலாய்ப்பதுண்டு.
இது இதோடு நின்றால் பரவாயில்லை.இன்னொரு துன்பமும் உள்ளது.
நாம் அன்பாக எல்லாரிடத்திலும் பழகினால் அதையே அவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நமக்கு தர வேண்டிய மரியாதையைக் குறைத்துக் கொள்கின்றனர்.
மலையாளி முஸ்லிம் கடை முதலாளியின் அண்ணன் ஒருவர் அந்த கடையில் வேலை ஏதும் செய்யாமல் சுற்றிக்கொண்டிருப்பார். என்னைக் கண்டதும் என் எதிரே வந்து அமர்ந்துகொண்டு சம்பந்தம் இல்லாமல் எதையாவது பேசிக்கொண்டிருப்பார்.
அவரின் ” பொன்மொழிகளில் ” சில முத்துக்கள் :
” அமெரிக்கர்கள் நல்லவர்கள். இது தெரியாமல் அவர்களை எதிர்க்கின்றனர்.”
” வெள்ளைகாரர்கள் இல்லாவிட்டால் நம்மால் இப்படி வாழமுடியுமா? ”
” இன்று குர்ஆனில் இல்லாததை இருப்பதாக மதத் தலைவர்கள் போதிக்கின்றனர். ”
அவர் ஒரு இஸ்லாமியர். அவர் என்னிடம் பேசும்போது இஸ்லாத்திற்கு எதிராகப் பெசிக்கொண்டிருப்பார். சாப்பிடும்போது இதுபோன்று ஒருவர் எதிரே உட்கார்ந்துகொண்டு சம்பந்தம் இல்லாமல் பேசுவது எரிச்சலைத் தரும். இப்படி பேசுவதோடு விட்டால்கூட பரவாயில்லை. பேசிக்கொண்டே மேல் சட்டைக்குள் கையை விட்டு சொறிந்து கொள்வார். அதைப் பார்க்க அருவருப்பாக இருக்கும்.
இதுபோல் குருவிகள், புலி , சிங்கம். கார்கள் ,மலாய்ப் பெண்கள், எதிர்க் கட்சிகள் , சாவு, தற்கொலை என்று பலதரப்பட்ட பொருட்கள் பற்றி பேசி என் பொறுமையைச் சோதித்து தனிமையைக் கெடுப்பார்.
இவருக்கு உள்ளது மனநோய்தான் என்று புரிந்துகொண்டாலும், சாப்பிடும் நேரத்தில் இவருக்கு நான் பேச்சுத் துணையாக இருக்க விரும்பவில்லை., இவரின் இந்தத் தொல்லையைப் பொறுக்க முடியாமல் அந்த உணவகம் செல்வதை அடியோடு நிறுத்திக் கொண்டேன்.
அடுத்த கடை பாகிஸ்தானியரின் உணவகம். அது அடுத்த கடை வீடுகள் கட்டிடத்தில் இருந்தது. அங்கு கோழி, மாடு, ஆடு குழம்புகள் .இருந்தன . சாம்பார், மீன் குழம்பு கிடையாது. தினம் மதியம் வெள்ளை சாதமும் கோழிக் குழம்பும் உட்கொண்டு ஆறு வெள்ளி தருவேன்.மாலையில் சப்பாத்தி கொண்டைக் கடலை குருமா, தேநீர் உட்கொண்டு ஐந்து வெள்ளி தருவேன்.அனால் அன்றாடம் மதியம் கோழிக் கறி சாப்பிடுவது திகட்டியது.நெஞ்சு கரிப்பும் அதிகமானது. அங்கு செல்வதையும் நிறுத்திக்கொண்டேன் .
மலாய்க்காரரின் உணவகம் சென்றேன். அங்கு மீன் குழம்பு இருந்தது. அனால் அதன் வாசம் குமட்டியது. மறுநாள் அங்கு செல்லவில்லை.
கடைசியாக இருந்தது தமிழ் முஸ்லிம் உணவகம்.
மற்ற உணவகங்களில் காண முடியாத அளவில் இங்கு வரவேற்பு பிரமாதமாக இருந்தது. பரோட்டா போடும் மலாய் இளைஞனைத் தவிர மற்ற அனைவரும் பெண்கள். மொத்தம் ஐவர் பணிபுரிந்தனர்.
அவர்களில் இரு இளம் இந்தோனேசியப் பெண்கள் இருந்தனர்.தங்க நிற மேனியழகும், பளபளக்கும் முகத் தோற்றமும் , இறுக்கமான உடையும் அவர்களுக்கு தனி அழகை உண்டு பண்ணியது.நான் யார் என்று தெரிந்த பின்பு அவர்கள் இருவருமே என்னை விழுந்து விழுந்து வரவேற்று கவனித்தனர்.
நான் சொல்லாமலேயே அவர்கள் இருவருமே அன்று என்னென்ன உள்ளது என்பதைக் கூறி எது சுவையானது என்றும் கூறுவார்.உணவைப் பரிமாறிவிட்டு அருகிலேயே நிற்பார்கள். சில வேளைகளில் அருகிலும் அமர்ந்து கொள்வர்.இருவருக்கும் சுமார் இருபத்தைந்து வயதிருக்கலாம். முகம்கூட ஒரே மாதியே தோன்றியது.
அவர்களின் பெயர்களில் தமிழ் மனம் வீசிற்று! ஒருத்தி சுசிலாவதி. மற்றொருத்தி லீலாவதி.
ஒரு காலத்தில் இந்தோனேசியாவில் பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்தபோது புத்த மதம், பின்பு இந்து மதம் , அவற்றுடன்,சம்ஸ்கிருத மொழியையும் கொண்டு சென்றதால், இன்றுவரை அந்த தாக்கம் அவர்களின் பெயர்களில் இவ்வாறு பிரதிபலிக்கிறது.
இந்த உணவகத்திலும் மீன் குழம்பு மலாய் பாணியில்தான் தயார் செய்யப்பட்டது.அதன் ருசி பிடிக்காமல் குமட்டியது. ஆனால் மாலையில் அங்கு செய்யும் மீ பாண்டுங் சுவையாக இருந்தது.
மாலையில் இங்கு வந்துவிடுவேன். இடையிடையே தேநீர் அருந்தவும் வருவேன்.கூட்டம் அதிகம் இல்லையேல் சுசிலாவாதியோ அல்லது லீலாவதியோ என்னிடம் வந்த்விடுவார்கள். அவர்கள் இந்தோனேசியா மலாய் மொழியில் பேசுவதை விளங்கிக் கொள்ள கொஞ்சம் சிரமம்தான்.ஆனால் கொஞ்சிக் கொஞ்சி பேசுவர்!
உணவகத்தின் எதிரே பேருந்து நிலையம் செல்லும் பிரதான வீதி இருந்தது. வீதியின் மறுபுறம் ” ” லாயாங் பூட் ” ( LAYANG FOOD ) என்ற பெயர்ப் பலகையுடன் கடை இருந்தது. வீதியைத் தாண்டும் அருகாமையில் இருந்தபோதிலும், நான் அங்கு ஒரு முறைகூடச் சென்றதில்லை.
ஒரு நாள் சுசிலாவதியிடம் அங்கே என்ன கிடைக்கும் என்று கேட்டேன்.
” குரோப்பாவ் விற்குது. வேண்டுமா? பணம் கொடுங்கள் . நான் வாங்கி வருகிறேன்.” அவளின் இந்தோனேசியா மலாய் மொழியில் கூறினாள்
நான் பத்து வெள்ளி தந்தேன்.
வீதியின் குறுக்கே சிறு பிள்ளையைப் போல் ஓடி அந்த கடைக்குள் புகுந்தாள் . சிறிது நேரத்தில் ஒரு பையுடன் திரும்பினாள் . உள்ளே இரண்டு குரோப்பாவ் பொட்டலங்கள் இருந்தன.
அவளுக்கு நன்றி சொலிவிட்டு , ” இதன் விலை என்ன? ” என்று கேட்டேன்.
” பத்து வெள்ளி ? “என்றாள் . ” நான் நன்றி கூறிவிட்டு அதை எடுத்துச் சென்றேன்.
அதன்பின் பின்பு தினமும் மாலையில் பத்து வெள்ளிக்கு இரண்டு பொட்டலங்கள் வாங்கி வருவாள் .
சில வேளைகளில் அவள் மேசையில் சாய்ந்து அதில் தலை வைத்துக்கொண்டு கண்களை சுழலவிட்டு என்னை ஏக்கத்துடன் பார்ப்பாள்.அப்போதெல்லாம் அவளின் இளமையின் செழுமை புடைத்து நிற்பது தெரியும்.
” நீ உடலை நன்றாக வைத்துள்ளாய் ” என்றேன் .அது புகழ்ச்சி இல்லை.உண்மைதான் .
அவள் கையை நீட்டி ,” இதைத் தொட்டு அழுத்திப் பாருங்கள்.என் உடல் அப்படிதான் இருக்கும். ” என்றாள் .
அவளின் கையை அழுத்திப் பார்த்தேன். அது பட்டு போன்று மென்மையாகத்தான் இருந்தது.
” உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டும் என்றாலும் நான் தருவேன். ” என்றவாறு ஓரக்கண்ணால் பார்த்து புன்னகைத்தாள் .
இப்படி அவள் கூறியபோது மலை நான்கு மணி.
நான் தேநீர்ப் பருகிவிட்டு திரும்பிவிட்டேன்.
மீண்டும் ஆறு மணிக்கு உணவகம் சென்றேன். அது வெறிச்சோடி கிடந்தது! அந்த இரு இளம் இந்தோனேசியச் சிட்டுகளைக் காணவில்லை.
சிறிது நேரம் அமர்ந்திருந்தும் கூட என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்கக்கூட ஆள் இல்லை!
அப்போது குனிந்த தலையுடன் சோகமே உருவாக உணவகத்தின் உரிமையாளர் என்னை நோக்கி வந்தார்.
” அன்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்? ” எதிரில் அமர்ந்த அவரிடம் கேட்டேன் .”
” ரேய்டு பண்ணிட்டான் டாக்டர் . மூன்று பேரை கொண்டு போயிட்டான். ” சோகக் குரலில் கூறினார்.
” யார் யார் ? ” பரபரப்புடன் கேட்டேன்.
” அந்த இரண்டு இந்தோனேசியக் குட்டிகளும் இன்னொருத்தியும். ”
நான் இது கேட்டு அதிர்ச்சியுற்றேன் .
” நான் நான்கு மணிக்கு இங்கு அவர்களைப் பார்த்தேனே? எப்போது? ”
” நாலரை மணிக்கு டாக்டர். ”
நான் பதில் கூறவில்லை. அவரின் மனநிலை எனக்குப் புரிந்தது.
” எப்படியும் ஆளுக்கு ஐயாயிரம் வெள்ளி கட்டியாக வேண்டும்.தப்பிக்க முடியாது. ” அவரே கூறினார்.
” வேறு ஏதாவது செய்து வெளியில் கொண்டு வர முடியாதா ? ”
” நேராக ஜோகூர் பாரு கொண்டு பொய் கேஸ் புக் செய்துட்டான்.இனி ஒன்னும் செய்ய முடியாது..அவர்களை நேராக பெக்கான் நன்னாஸ் கொண்டு சென்று அடைத்து இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பிவிடுவான். ” விளக்கினார்.
முறையான வேலை அத்தாட்சி சான்றிதழ் ( work permit ) இல்லாமல் அந்த மூன்று இந்தோனேசியா பெண்களையும் இவர் உணவகத்தில் வேலைக்கு வைத்திருந்ததால் அவர்கள் பிடிபட்டு நாடு கடத்தப்படுவர். இவர் குற்றம் புரிந்துள்ள காரணத்தால் ஆளுக்கு ஐயாயிரம் வெள்ளி அபராதம் கட்டியாக வேண்டும்.
எனக்கு சுசிலாவதி மீதும் லீலாவதி மீதும் அனுதாபம் உண்டானது. பாவம் அவர்கள். வறுமை காரணமாகத் தாய் நாட்டைவிட்டு இங்கு வந்து பிழைப்பு தேடினர். அவர்களின் கனவுகள் யாவும் நொடிப் பொழுதில் மண்ணானது!
அன்று உணவகத்தை இரவு ஏழு மணிக்கே மூடிவிட்டார்.
மறு நாள் மாலை நான் வழக்கம்போல் தேநீர் குடித்தபோது சுசிலாவதி ஓடிச் சென்று குரோப்பாவ் வாங்கி வருவதை எண்ணிக்கொண்டேன்.
இன்று நானே அங்கு சென்று வாங்கலாம் என்று வீதியைத் தாண்டினேன்.
இரண்டு குரோப்போவ் பொட்டலங்கள் எடுத்துக்கொண்டு பத்து வெள்ளியை நீட்டினேன். அதை வாங்கிய பணிப்பெண் மீதம் ஆறு வெள்ளியை திருப்பித் தந்தாள் .
இரண்டு வெள்ளி பொட்டலத்தை ஐந்து வெள்ளி என்று சுசிலாவதி கூறியபோதிலும், அவளுடைய வறுமையை எண்ணியே மனம் வருந்தினேன்!
( முடிந்தது )
- ஆகஸ்ட்15 நூலின் அறிமுக நிகழ்வு
- டௌரி தராத கௌரி கல்யாணம்..! – 9
- தென்மேற்கு பருவக் காற்று – புதிய முயற்சிகளில் ஒன்று
- வறுமை
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………25 அசோகமித்திரன் – ‘தண்ணீர்’
- லாடம்
- பால்ய கர்ப்பங்கள்
- நீங்காத நினைவுகள் – 8
- வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை’ நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும்
- கேத்தரீனா
- நசுங்கிய பித்தளைக்குழல்
- அகமும் புறமும்
- மரணத் தாள்
- உறவுப்பாலம்
- இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்
- வேர் மறந்த தளிர்கள் – 11,12,13
- முன்பொரு நாள் – பின்பொரு நாள்
- நா. ரகுநாதன் – சில நினைவுக் குறிப்புகள்
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 26
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் – ஒரு பார்வை.
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 30 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) உன்னத நிலை அடையும் காலம்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -8
- தாகூரின் கீதப் பாமாலை – 71 என் படகோட்டியின் போக்கு .. !
- மருத்துவக் கட்டுரை டெங்கி காய்ச்சல்
- ஈசாவின் சில்லி விண்ணோக்கி ஆய்வகம் பூதக் கருந்துளையைச் சுற்றி வியப்பான வெப்ப /குளிர்ச்சி தூசி மயம் கண்டது.
- புகழ் பெற்ற ஏழைகள் -13 ம.பொ.சி
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 16