இருபது ரூபாய்

This entry is part 28 of 30 in the series 28 ஜூலை 2013

அது ஒரு மழைக்காலம், சாதாரண மழை என்றால் பரவாயில்லை, வானத்திற்கு பூமியின் மேல் என்ன கோவமோ என்று தெரியவில்லை, மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர். தண்ணீர் தவிர வேறெதுவும் இல்லை. வீதியெங்கும், வீட்டின் வெளியேயும், சிலர் வீட்டிற்குள்ளும், நிறம் தான் வேறுபட்டதே ஒழிய, எங்கும் தண்ணீர் தான். மண்ணின் நிறததிற்கு ஏற்ப தண்ணீரின் நிறம் மாறுபட்டும், நல்ல தண்ணீர் எது, சாக்கடை தண்ணீர் எதுவென்று தெரியாமல் தெருவெங்கும் எங்கும் ஒரே தண்ணீர் மயம்.

கந்தசாமிக்கு மழை வந்தாலே பிடிக்காது, காரணம் அவன் செய்யும் வேலை, அவன் ஒரு டூ வீலர் மெக்கானிக். ஒரு மெக்கானிக் ஷாப்பில் நீண்ட வருடங்களாக வேலை செய்து வருகிறான். மழைக்காலங்களில் தான், அதிக வாகனங்கள் பழுது அடைவதும், அதனால் வேலை பளு அதிகரிப்பதும் வாடிக்கையாகவே, மழையைக் கண்டாலே அவனுக்கு பிடிப்பதில்லை. அன்றும் அவனுக்கு அதிக வேலை, காலை வந்தவன், ஓய்வு ஒழிச்சல் இன்றி வேலை செய்து களைத்து போய்விட்டான்.

கடை முதலாளி கடையை மூடச் சொல்லிவிட்டு, அவர் சென்று விட, தான் ஒருவன் மட்டும், பழுது அடைந்த வாகனங்களை எல்லாம், ஒவ்வொன்றாக எடுத்து கடையின் உள்ளே அடுக்கிவிட்டு வீட்டுக்கு கிளம்பத் தயாரானான்.

இனிமேல் பஸ் பிடித்து, வீட்டிற்குச் செல்ல வேண்டும், கடந்த பத்து ஆண்டுகளாக வேலை செய்த போதிலும், அவனிடம் எந்த ஒரு இரு சக்கர வண்டியும் இல்லை.

எட்டாவது வரை பள்ளி சென்றவன், அதற்கு மேல் படிப்பு ஏறாததால், ஒரு சாதாரண ஹெல்ப்பராகாச் சேர்ந்தவன், முதலில் காபி, டீ, வாங்கி வரவும், சின்ன சின்ன டூல்ஸ் எடுத்து தரவும், பிறகு வண்டியின் பாகங்களை கழற்றி தருவதுமாய் தன் ஆரம்ப கால வேலையை ஆரம்பித்தவன், படிப்படியாக எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டு, இன்று எந்த ஒரு இரண்டு சக்கர வாகனத்தையும், அக்கு வேறு ஆணி வேறாக கழட்டிபோட்டாலும், திறம்பட ஒன்றிணைக்கும் அனுபவ அறிவும், ஆற்றலும், திறமையும் பெற்று வளர்ந்திருக்கின்றான்.

திறமை இருந்தும், படிப்பு இல்லாததால், வேறு எந்த வேலைக்கும் செல்ல அவன் முயன்றதில்லை. மேலும், அவனுக்கு முதலாளியின் அன்பும் கருணையும் பிடித்து விட, அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டான். இருந்தாலும், அவ்வப்போழுது, தானும் தனியாக ஒரு கடையை திறக்க மனம் விரும்பும், ஆனால், அதற்கான முதலீட்டை நினைத்து பேசாமல் விட்டு விடுவான். அவர் தரும் மாதச் சம்பளத்தில்தான் குடும்பத்தை நடத்திக் கொண்டு வருகிறான்.

மல்லிகா, அவன் மனைவி, அஷ்வினி, ஐந்து வயது மகளுடன், ஒரு குடிசையில், மாத வாடைகையில் தங்கி இருக்க, அவன் மனைவியோ, பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருக்கிறாள்.

திருமணம் முன்பு வரை எப்படி எப்படியோ இருந்தவன், மல்லிகாவை கரம் பிடித்ததில் இருந்து, வெகுவாக மாறிவிட்டான், மாறிவிட்டான் என்பதை விட, அவனை மல்லிகா மாற்றிவிட்டாள். மல்லிகா அதிகம் படித்தவள் இல்லை என்றாலும் அறிவாளி, கணவனின் தவறானப் போக்கையும், வீண் செலவுகளையும் குறைத்து, வீட்டை திறமையாக நிர்வாகித்து, அவனையும் சிறிது சிறிதாக மாற்றி குடும்பத்தை கட்டுப்பாடாக நடத்தி வருகிறாள்.

வாழ்க்கை வசதிகள் அவ்வளவு சொல்லும் படியாக இல்லையென்றாலும், பிரச்சினை எதுவும் இன்றி ஒவ்வொரு நாளும் சென்று கொண்டுதான் இருந்தது. தான் தான் படிக்கவில்லை, தன் மகளாவது ஒரு நல்ல ஆங்கிலப் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, தன் சக்தியையும் மீறி, ஒரு கான்வென்டில் சேர்த்தான் கந்தசாமி. குழந்தையும் நன்றாக படிக்கிறாள்.

கடையை மூடிவிட்டு, பஸ் நிறுத்தத்திற்கு செல்ல வீதியில் நடக்க ஆரம்பித்தான் கந்தசாமி. சாலை எங்கும் தண்ணீர் வழிந்து கொண்டு, சேரும் சகதியுமாய் இருந்தது. தூறல் வேறு விட்ட பாடில்லை, வழியில் சிறுவர்கள் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்க, அவனுக்கும் தன் குழந்தைப் பிராயத்து நினைவுகள் தோன்றியது. சிறு வயதிலே வேலைக்கு வந்து விட்டதால், நிறைய குழந்தைப்பருவ விளையாட்டுகளையும், குறும்புத்தனங்களையும் இழந்துள்ளதை அப்பொழுது உணர்ந்தான்.

மழையில் நனைந்தவாறே, வேக வேகமாக பஸ் நிறுத்தம் சென்றடைந்தான். அங்கு நிழக்கூடையும் இல்லை, மழை வேறு வலுக்க ஆரம்பிதத்தது, நிறைய குடைகளின் கீழ் மனிதர்கள், பல நிறங்களில் குடைகள், தன்னால் ஒரு குடையைக் கூட வாங்க முடியவில்லையே என்று தன்னையே மனதில் திட்டிக் கொண்டான். பக்கத்தில் உள்ள ஒரு டீக் கடையின் வாசலில், பஸ் வரும் வரை சிறிது நேரம் நிற்கலாம் என்று அங்கு சென்றான்.

அந்த டீக்கடையில், சுடச்சுட பஜ்ஜி சுடும் வாசனை, அவன் மூக்கைத் துளைத்தது. மக்கள், அந்த மழைக்கு இதமாக, அதனி வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அந்த மழையும், லேசான குளிரும், அவனையும் வாங்கி சாப்பிடத் தூண்டியது. பாக்கெட்டில், கையை விட்டு துழாவிப் பார்த்தான், ஒரு இருபது ரூபாய் மட்டுமே இருந்தது. நீண்ட நாட்கள் அவ்வழியே செல்கையில், அவனுக்கும் வாங்கிச் சாப்பிடத் தோன்றும், ஆனால் வீண் செலவு என்றும், அந்த பணத்தைச் சேர்த்து வைத்தாலாவது, தன் மகள் படிப்புச் செலவுக்கு உதவுமே என்று அதன் மணத்தை மட்டும் முகர்ந்தவாறே, வீட்டுக்குச் சென்று விடுவான். எப்பொழுதாவது சம்பள நாளில், குழந்தைக்கும், மனைவிக்கும் வாங்கிச் செல்வதோடு சரி.

இன்றைய தூறலும், சாரல் மழையும், அவனை வாங்கி சாப்பிடத் தூண்டியது. வெறும் பஜ்ஜி சாப்பிட ஆசைப்பட்டவன், டீயும் சேர்ர்ந்து சாப்பிட, கையில் இருந்த இருபது ரூபாயில், பத்து ரூபாய் கரைந்து போயிற்று. இப்பொழுது அவனுக்கு இதமாகாவும் வயிறு, ஓரளவு நிரம்பியும் இருக்க, அப்பொழுதான் தன் மகள் நேற்று சொன்னது நினைவுக்கு வந்தது,

நேற்று இரவு…

கந்தசாமி, தான் தங்கி இருக்கும் குடிசையில் தன் மனைவி, குழந்தையுடன் டிவி பார்த்துக் கொண்டே, உணவு அருந்திக் கொண்டிருக்க வெளியே மழை பெய்து கொண்டிருந்தது.

‘அப்பா… ஸ்கூல எல்லாரும் ரைன்கோட் போட்டுட்டு வராங்கப்பா..,நான்தான்.. . நனைஞ்சிட்டுப் போறேன்…. எனக்கும்…ரைன்கோட் வேணும் வாங்கித்தாங்கப்பா’ மகள் அஷ்வினி சாப்பிடாமல் அடம்பிடிக்க…

‘சம்பளம் வந்தவுடன்.. என் செல்ல குட்டிக்கு புதுசா ரைன்கோட் வாங்கித்தரேன்….என் செல்லம் இல்ல… கொஞ்சம் சாபபிடும்மா’ கெஞ்சினான்… ஒரு வாய் சாப்பிட்டு விட்டு…

‘எனக்கு அம்மா.. ஸ்நாக்ஸ் பாக்ஸ்ல… பிச்சி தான் வைக்கிறாங்க… .மத்தவங்க எல்லாம் ஆப்பிள், திராட்சை, ஜூஸ் என்னென்னமோ எடுத்திட்டு வராங்க’

‘பிஸ்கெட் சாப்பிட்டத் தான் உடம்புக்கு நல்லது ..அப்புறம் ஜுரம் எல்லாம் வாரது.’ சமாளித்தான் கந்தசாமி. .

‘பழம் சாப்பிட்டாத்தான்.. நல்லது .. எங்க மிஸ் சொல்றாங்கப்பா …’

‘சரிம்மா… இனிமே அம்மா கிட்ட சொல்லி… கொடுத்தனுப்பச் சொல்றேன்’ ‘ஸ்கூல்ல இன்னிக்கு என்னென்ன சொல்லித்தந்தாங்க..’

‘எ பார் ஆப்பிள், பி பார் பால், சி பார்’ என்றவுடன்… டிவியில் சாக்லேட் விளம்பரம் வர …

‘அப்பா. அப்பா.. எனக்கு அந்த சாக்லேட் வேணும்பா’

‘சரிம்மா… நாளைக்கு கண்டிப்பா வாங்கிட்டு வரேன்.. இப்ப சாப்பிடு’

‘இப்படியே… செல்லம் கொடுத்து .. கொழந்தைய ஏன் கெடுத்து வைக்கிறீங்க..’ இதுவரை தந்தையும் மகளும் உரையாடுவதை மெளனமாக ரசித்து வந்த மல்லிகா அப்படி கூற,

‘குழந்த தானே மல்லிகா .. எல்லாம் போகப் போக சரியாயிடும்..’ மகள் சொன்ன சாக்லேட்டை சிறிது நேரம் நினைவுபடுத்தி, பக்கத்து கடைக்கு சென்று.. குழந்தை சொன்ன சாக்லேட்டை கேட்க… அவன் ஐந்து ரூபாய் என்றான்.. .வாங்கிக்கொண்டான். தன் பாக்கட்டைத் தடவிப் பார்த்து ஐந்து ரூபாய் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தான் செல்லும் பஸ்ஸை எதிர் நோக்கி காத்திருந்தான்…

நீண்ட நேரம் ஆகியும் பஸ் வராமல் இருக்கவே, அருகில் இருப்பவரிடம், பஸ் எண்ணைக் கூறி..

‘சார்.. அடுத்த பஸ் எப்ப வரும்..’ .. ‘அந்த ரூட்ல, பஸ் போகாதாம்..வழியில ஒரு மரம் விழுந்துப்போச்சு, எப்படியும் எடுக்க ரெண்டு மூணு மணிநேரம் ஆகும்…. அதுவும் இந்த மழையில யாரும் எடுக்க மாட்டாங்க…’

‘இப்ப எப்படி போறது..’ தனக்குள் முனகினான்.

‘ஆட்டோ மட்டும் தான் போகும்…வேணுமின்னா கேட்டுப் பாருங்க…’

அவன் அதிர்ச்சி அடைந்தான், நேரம் வேறு ஆகிவிட்டது.. எப்பொழுது வீட்டுக்கு போவது…. மறுநாள் மீண்டும் வேலைக்கு வரவேண்டும்… கையில் இருப்பதோ ஐந்து ரூபாய்…

ஆட்டோ ஒன்று வந்தது.. தன் இருப்பிடத்தைக்கூறி,

‘ஆட்டோ வருமா ‘

‘இருபது ரூபாய்.. ‘

‘வேண்டாம்ப்பா..’

சிறிது நேர காத்திருப்புக்குப் பிறகு, ஒரு ஷேர் ஆட்டோ வந்தது… உட்கார இடமில்லை, இருந்தும் எப்படியாவது ஒட்டிக்கொண்டாவது வீட்டுக்கு சென்றுவிட ஆசைப்பட்டு நிறுத்த..

‘பத்து ரூபாய்..’ என்றான்.

‘வேண்டாம்ப்பா…’

பேசாமல்.. அந்த சாக்லேட்டைத் திரும்பவும்.. கடைக்காரனிடம் கொடுத்து விட்டு… அந்த ஐந்து ரூபாயை திரும்பவும் வாங்கலாமா … என்று யோசிக்க..

‘ச்சே… என்ன ஒரு மடத்தனம்… குழந்தை ஆசையாய் கேட்டதை கூட வாங்கி தர முடியாத பாவி ஆகிவிட்டேனே.’ வேண்டாம்.. கொடுக்க வேண்டாம்… அவனுக்கே அவன் மீது கோபம் கோபமாய் வந்தது…

என்ன ஒரு வாழ்க்கை… மக்களை ஒரு பக்கம் நல்ல வசதியாகவும்… மறுபக்கம் ஏழ்மையாகவும் ஏன் பிறக்க வைத்தாய் இறைவா… இறைவனையும் திட்டியபடி…என்ன செய்வது… யோசித்தான்.. வேறு வழி தெரியவில்லை .. இதற்கு மேல் வீட்டுக்கு சென்றால், அஷ்வினியும் தூங்கிவிடுவாள்… அவள் ஆசையாய் கேட்ட எல்லாப் பொருள்களையும் வாங்கிக் கொடுக்க முடியாமல் போனாலும், இந்த சாக்லேட்டையாவது அவளிடம் கொடுத்து அவளை சந்தோஷமடையச் செய்யலாம் என்று மனதில் நினைத்து விதியையும் நொந்தபடி…

மிகுந்த யோசனைக்குப் பிறகு…

வீட்டிற்கு நடந்தே செல்ல ஆரம்பிக்க, எங்கோ இடிச் சத்தமும் கூடவே மின்னலும் மின்ன… தூறல் நின்று… மேகம் விலகி.. நிலவு முழுதாய் வெளியே தெரிய ஆரம்பித்தது.

Series Navigationகுளம் பற்றிய குறிப்புகள்மாஞ்சோலை மலைமேட்டில்…..
author

ரிஷ்வன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *