தீர்ப்பு

This entry is part 4 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

                         -முடவன் குட்டி

“……ஒரு வாரத்தில துட்டு தாறேன்-னு சொல்லி, போன வெள்ளிக் கெழமெ அரிசி வாங்கிட்டு போனியே..? மூணு கெழமெ கழிஞ்சாச்சே.. துட்டு எங்களா..? ஓர்மையத்துப் போச்சா? இப்ப திருப்பியும், அரிசி கடனா தா-ன்னு வெக்கமில்லாம வந்து  நிக்கிறியே..? – தீ கங்குகளாய் சொற்களை உமிழ்ந்தாள் சுபைதா பீவி. .

 “ ….மாமி  பாவு அடசியாச்சு..(1) நாளைக்கு பாவு ஆத்தி,(2) தரவன் –ட்ட (3) ரூவா வாங்கி  நாளெ ராத்திரியே பழய கடனையும் சேத்து குடுத்தர்ரேன்….” – கூனிக் குறுகி  நடுங்கியவாறே சொன்னாள் மும்தாஜ்..

 “.. அப்பிடியா..? நாளெக்கே பாவு ஆத்தி.. நாளைக்கே தரவன் கிட்ட ரூவா வாங்கி, நாளைக்கே எல்லாக் கடனையும் திருப்பித் தந்திருவியா..?

.”…. கட்டாயம் தந்தர்றேன் மாமி…” மும்தாஜின் கண்களில் நம்பிக்கையின் – சிறு ஒளி.

“..அப்ப துட்டோட நாளைக்கு வா. அரிசி தாறேன்.. நாளைக்கு சோறு பொங்கித் தின்னு.. ”

  சேலைத் தலைப்பை வாயில் திணித்து,  பொங்கி வந்த அழுகையை அடக்கி, மாமியின் வீட்டிலிருந்து விருட்டென  வெளியே வந்தாள் மும்தாஜ்.

“.. குடுத்த கடனக்  திருப்பித் தர வக்க்த்த, வெறவாக்கெட்ட மூதிக்கு வெசப்பையும் ஆங்காரத்தையும் பாரு…? ஒரு வேள சோறு திங்கல-ன்னா, செத்தளா போவே..?..”.  வெளியே வேகமாய்ப் போன மும்தாஜின் காதுல  விழ்னும்-னு வீடே இடிஞ்சு போற மாதிரி கத்தினாள் சுபைதா பீவி. காக்குழியில் (தறிக் குழியில்)  தறி நெய்து கொண்டிருந்த ஹமீது தலையை உயர்த்தி,  “ஏளா இல்ல-ன்னா இல்லை-ன்னு சொல்லிட்டு தூர வுடுவியா..?  நாயி மாதிரி ஏம்ளா குரைக்கிற..?-என்றான்.

“ வேய் தறிய பாத்து நெய்வே.. பெரீய பட்டத்து சாயிபு.. வக்கலாத்து வாங்க வந்திட்டாரு..”

 

 அழுத கண்களோடு வீடு திரும்பினாள் மும்தாஜ்,. கணவன் நவாஸ் தறி நெய்து கொண்டிருந்தான்.

“ஏங்க.. நீங்க இன்னுமா குளிக்கப் போவல..? எந்திரிங்க. போய் குளிச்சிட்டு வாங்க….”

“ சாயந்தரத்துக்குள்ள பாவ அடசிரணும். அப்ப தான் நாளைக்கு பாவு ஆத்த சீட்டு கிடைக்கும்..”- முனகியவாறே தறியை விட்டு எழுந்தான் நவாஸ்

“ ஏழு வீட்டுல பாவு அடசி கெடக்கு. வட்டாரத்துல மூணு பாவு தான் போட முடியும்.. அப்ப சீட்டு குலுக்கித் தான் மூணு பேர் யாருன்னு சொல்லுவாங்க. சீட்டு நமக்கு வுளணுமே..?  என்றவாறு காக்குழியில் இறங்கினாள் மும்தாஜ். கொடியில் கிடந்த துண்டை எடுத்து தலையில் கட்டிக் கொண்டு குளத்துக்குப் போனான்   நவாஸ்.  வேக வேகமாய்த் தறி இழுக்கலானாள் மும்தாஜ், சமையலறையில் சட்டி உருளும் சத்தம் கேட்க “ ஏலே.. அங்கெ  என்னல சத்தம்..?”- கத்தினாள்.

“ ஒண்ணுமில்ல..எண்ணெய் பாட்டில் தேடினேன்… கெடச்சிடுச்சு..”

என்றான் ஐந்தாம் வகுப்புப் படிக்கிற மகன் துவானி.  “சரி..ரெண்டு சிட்டம் தார் ( நூல் ) சுத்திட்டுப் பள்ளிக்கூடம்  போ.. வள்ளிசா தார் இல்லே..”

‘ ஏம்மா ..இண்ணைக்கு கணக்குப் பரீட்சை..லேட்டாப்போனா  கணக்கு  சார்வாள்  நச்சிடுவார்..” -கத்தினான் துவானி.

 

 மும்தாஜுக்கு கோபம் கொப்புளித்தது. “ ஏல..எருவமாடு…  ராத்திரி மூணு மணிக்கு எஞ்சு, அந்த மனுஷன் காக்குழியில கெடக்கான்.. குளிச்சிட்டு வாரதுக்குள்ள ரண்டு மொளம் நெய்யலாம்-னு நானும் தறி இழுக்கிறேன்.. தார் சுத்துறதுக்கு வேற யார்-ல இருக்கா..?  பள்ளிக்கூடம் போறாராம்…. படிச்சுக் கிழிச்சு பெரிய கலெக்டர் உத்தியோகம் ஒண்ணும் பார்க்க வேணாம்.. வூட்ல உக்காந்து தார் சுத்து..”

  அம்மாவை ஏமாத்த துவானிக்கா தெரியாது..? உள் வீட்டில் (முன் அறையில்) தான் தறி நெய்து கொண்டிருக்கிறாள். சத்தங் காட்டாமல், சமையலறை வாசல்  வழியே மெல்ல நழுவி பள்ளிகூடத்துக்கு சிட்டாய்ப் பறந்து விட்டான். குளித்து விட்டு வீட்டுக்கு வந்த  நவாஸ் துண்டைக் காயப்போட்டான்.  மும்தாஜ் தறியை விட்டு வெளியே வந்தாள்.  நவாஸ் காக்குழியில் இறங்கி வேகமாக நெய்ய ஆரம்பித்தான்.

      சமையலறைக்குப் போன மும்தாஜ் பின் வாசல் கதவு திறந்திருப்பதைக் கவனித்தாள். ’ படுவா ராஸ்கல் ..ஓடிட்டியா..? மத்தியானம் முழுங்க வருவ இல்லே..” முனகினாள்.

           சீக்கிரம் எழுந்திருந்ததால்,    ஏற்கனவே ஒரு தரம்   உப்புத் தண்ணி  குடித்திருந்தான்  நவாஸ்.  ராத்திரி ஆக்கிய சோறு பானையில் மீதமிருந்தது. அதிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்து  கும்பாவில் போட்டாள்.  அதில் கொஞ்சம்  தண்ணீர் விட்டு சிறிது உப்பும் போட்டு  பிசைந்து  நவாசிடம்  கொடுத்தாள்.  காக்குழியில் நின்றவாறே குடித்துவிட்டு, கும்பாவை  திருப்பிக் கொடுத்தான் . அதனை வாங்கிய  மும்தாஜ் திடுக்கிட்டாள். பிசைந்த சோறு கும்பாவின் அடியிலேயே தங்கி இருக்க  வெறுந்தண்ணீரை  மட்டும் குடித்திருந்தான் நவாஸ். கண் கலங்க அவனைப் பார்த்தாள் மும்தாஜ். அறுந்த இழையைச் சரி செய்வது போல, சட் டெனக் குனிந்தான்  நவாஸ். சமைய்லறையை நோக்கி தொய்ந்து நடந்தன மும்தாஜின் கால்கள். பானையில் மீதமிருந்த சோற்றை வழித்து கும்பாவில் போட்டு தட்டினால் மூடிற்று அவள் கை.

    அரிசி விக்கிற சுபைதா மாமி பேசியது  நெஞ்சில் ஊசியால குத்தினாற் போல இன்னும் வலித்தது.  இவ கிட்டயெல்லாம் பேச்சு கேட்டு சீரழியணும்..னு என் தலையில எழுதியிருக்கு. என்ன செய்ய..? திடீர்-னு துவானி பேலுக்கு சுண்டு வரும்-னு யாரு கண்டா..?  அவனெ ஆசுபத்திரிக்கு தூக்கிட்டு ஓடவேண்டியதாப் போச்சு. கையில துட்டு இருக்கவா செய்யுது..? எல்லாரையும் போல  தரவன்-ட்ட தான்  கடன் வாங்கினேன். வாங்கின கடனை  புடிச்சுக்கிட்டு தான் கூலியத் தருவான் தரவன். புடிக்கட்டும்.. புடிக்கட்டும்.. வேண்டாங்கல. நீக்குப் போக்கா கொஞ்சம் கொஞ்சமா புடிச்சுக்கிட்டு குடுத்தா கொறஞ்சா போயிடுவான்..? வாங்கின கடன் பூராவையும் அஞ்சே அஞ்சு  தவணைக்குள்ள கழிக்கணும்-னு, கூலியில புடுச்சிக்கிட்டு குடுத்தா எப்படி சோறாக்குறது..? வருஷம் பத்தா இவங்கிட்ட தான தறி நெய்யிறேன்..? முன்ன பின்ன எப்பவாவது இவங்கிட்ட  கடன் வாங்கி இருக்கேனா..? என்னவெல்லாமோ  நினைத்துக் கொண்டிருந்த அவளை, ‘ஏளா வள்ளிசா தார் இல்ல..”  என்ற  நவாஸின் குரல் எழுப்பிற்று. எழுந்து ராட்டை எடுத்து வைத்தாள்.  இரண்டு சிட்டம்  (நூல் ) சுத்தினாள். சுத்திய  தார்களை காக்குழியில் இருந்த  நவாஸிடம்  கொடுக்கையில்  நாளைக்கு பாவு ஆத்த சீட்டு விழுமா-என்ற பயம் திருப்பியும் நெஞ்சை அடைத்தது. விறு விறு வென சமையலறைக்கு நடந்தாள். சொம்பிலிருந்த தண்ணீர் முழுவதையும் குடித்துத் தீர்த்தாள். ‘அப்பாடா..’ பசியும் சற்று ஆந்தது போலிருந்தது. பாவு ஆத்த பசை மாவும், கழிவு எண்ணையும் வாங்க வேண்டும். க்டைப் பெட்டியை எடுத்துகொண்டு விட்டை விட்டு வெளியே  வரும்போது. தறி குழியிலிருந்தவாறே கத்தினான் நவாஸ். “ கடைக்கா போறே.. ரண்டு சொக்கலால் பீடி வாங்கிட்டு வா…”

     பீடிச்சனியனெ எப்போ ஒழிக்கப் போறியோ.. முனகியவாறே தெருவுக்கு வந்தாள். சுள் ளென்று காலைச் சுட்டது வெயில் . மணி என்ன இருக்கும்..?  போற வழியில ஓ.ஏஸ். மாமா வீட்டில் தான் கடிகாரம் இருக்கிறது. தெருவில் நின்றவாறே மாமா வீட்டைப் பார்த்தாள்.  ” மும்தாஜா.. உள்ள வா-ம்மா”  என்றவாறு  மணி பார்த்துச் சொன்னார் மாமா. வேக வேகமாய் பசாருக்கு ஒடினாள். பசை மாவும் எண்ணையும் வாங்கி வீட்டில்  கால் வைத்த மறு கணம் மும்தாஜின் கண்கள் பாவு ரோலைத் தான்  கவனித்தன.. அப்பாடா இன்னும் அரை மணி நேரத்துல பாவு அடசி முடிஞ்சுடும். ” ஏளா பீடிய பத்த வச்சுக் குடு”- கத்தினான்  நவாஸ். பீடியும் வாங்கல ஒண்ணும் வாங்கல.. போவெ- என்றவாறு, வெளியே போனாள் மும்தாஜ்.  நவாஸுக்குத்  தெரியும்- அவள் மேல வீட்டுக்கோ கீழ வீட்டுகோ போயி அடுப்புல எரியிற நெருப்புல பீடியை பத்த வச்சுக்கிட்டு வருவா என.

                 0000     0000    000

 

       தடித்த உதடுகள்,  எலும்பு துருத்திய கன்னம்,. வெறித்த பார்வை. சீவனம் கழிப்பதன் தினசரி வலி, பசி, கடன் சுமை.. என  தழும்புகளையே வம்சா வழி அடையாளமாக  கொண்ட ஒரு தறிகாரன் முகத்தில் சிரிப்பும் வருமா..? வந்தது. லேசாக.  ’நாளைக்கு பாவு ஆத்தலாம்”  -என்ற சீட்டு, குலுக்கலில் நவாஸிற்கு  விழுந்தபோது.

      விறு விறு வென வீட்டுக்கு வந்த  ந்வாஸ் சத்தம் போட்டான். “ நீ போயி காட்டுவா சாயிபு-ட்ட நாளைக்கு  பாவு இழை முடியணும்-னு சொல்லிட்டு வா. பசைய ரொம்ப தண்ணியா வச்சிராத…”- என்றான்.  ’நாளைக்குப் பாவு ஆத்த சீட்டு வுளுந்திருச்சா..?’ பளிச் சென புன்னகை வந்து தங்கிற்று மும்தாஜின் முகத்தில்:

  மறு நாள் அதி காலைத் தொழுகை அழைப்பு ஒலி வரும் முன்னரே முழித்து குடத்தை எடுத்துகொண்டு கிளம்பி விட்டாள் மும்தாஜ். இரண்டு மைல் தள்ளி,  ஹை ஸ்கூல் அருகே உள்ள கிணத்தில்தான் குடிப்பதற்கு ’நல்ல’ தண்ணீர் எடுக்க வேண்டும். தண்ணீர் எடுத்து தெருவுக்கு வந்த போது, தூரத்தில் தெரு முனையில், கீழ வட்டாரத்தில்   பெட்ரோமாக்ஸ் லைட் தொங்கியது. ” ஐயோ கடைசி வீட்டுப் பெத்தம்மா மெளத் ஆகி  (இறந்து போய்) விட்டாளா..?”  நெஞ்சில்  தீ பாய்ந்தது.  தலை சுற்றியது. தண்ணீர் குடத்தை அருகே இருந்த வீட்டுத் திண்ணையில் இறக்கி வைத்துவிட்டு திண்ணையில் சற்று அமர்ந்தாள். குடத்தைச் சரித்து ஒரு கை நீர் குடித்த பின் மெல்ல நடந்தாள்.  இறந்து போன மையத்தை   (சடலம் ) எடுத்து அடக்கம் செய்த பின்னர் தான் தெருவில் பாவு போட முடியும் (4)இது ஊர் வழமை. மையத்தை எப்ப எடுப்பாங்களோ..? அடக்கம் பண்ணி, கை கொடுத்த பெறவு தான் பாவு போட முடியும். அதுக்குப் பெறவு பாவு ஆத்தி , இழை ஒவ்வொன்றாய் எடுத்து முடிஞ்சு , நெரடு பாத்து அப்புறம் தான் மடி ( தறியில் நெய்த லுங்கி ) கொண்டு போவணும். அப்பதான் தரவன் ரூவா தருவான். யா ரப்பூ..? ஏம்பா இப்பிடி சோதிக்கிற..?  தண்ணீக் குடத்துடன் வீட்டுக்குள் நுழைந்தாள் மும்தாஜ். மண்ணெண்ணெய் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. விளக்கின் திரி அவள் நடந்து போகையில்  அசைய, கால்களை மடக்கி சுவற்றில் சாய்ந்தவாறு இருந்த  நவாஸின்  நிழல் உருவம் எதிர்ச்சுவர்றில் பெரியதாக சலனமற்று ஆடிற்று.

        குடத்தை கீழே இறக்கி வைத்து விட்டு  நிமிர்கையில்

“ மைய வீட்டுக்குப் ( இறந்தவரின் வீடு ) போயிட்டு வரலாம் வாறியா- என்றவாறு வீட்டுக்குள் வந்தாள் பக்கத்து வீட்டு பாத்துமா. “ மையம் என்ன தூரந்தொலைவுலையா இருக்கு..?  நாலு வீடு தள்ளி- அசன் மைதீன் வூடு தான. கொஞ்சம் பொறுத்து போவலாம்..” –என்றாள் மும்தாஜ்.. ‘என்ன சொல்ற நீ..?  பள்ளிவாசல் தெருவுல இருக்கிற  மூத்த மவ வூட்லையுலோ  பெத்தம்மா  மெளத் ஆயிட்டா.. உனக்குத் தெரியாதா..? என்றாள் பாத்துமா.  ”அப்பிடியா..? பெத்தம்மா அங்க போனது தெரியும். திருப்பி மவன் அசன் மைதீன் வூட்டுக்கே  வந்துட்டதா சொன்னாங்களே … சரி.. சரி.   நீ போ. நான் கொஞ்சம் பொறுத்து  வாறேன்”  என பாத்துமாவை அனுப்பிவிட்டு,  நவாஸிடம் பாய்ந்தோடி  வந்தாள். .“ ஏஙக மையம் அடுத்த தெருவுல தானாம்..இப்ப பாவு போட்டர்லாம்.. எந்திரிங்க”  என்றவாறு, பாவு போடுவத்ற்குத் தேவையான, கம்பு கட்டு, கயிறு, முளை எல்லாவற்றையும்  எடுத்து திண்ணையில் போட்டாள். சரக் சரக் கென நடந்து போகிற  செருப்புச் சத்தம் கேட்கவே, . தெருவை உற்றுப்  பார்த்தாள். மெளத் ஆன  பெத்தம்மாவின் ஒரே மகன் அசன் மைதீன் கையில் டார்ச் லைட் அடித்தவாறு போய்க் கொண்டிருந்தார். அவர் பின்னால் வட்டாரத்துப் பெரிய மனிதர்கள் நான்கைந்து பேர். “ என் ஊட்ல இருந்து தான் மையத்தை அடக்கம் பண்ணணும். தெருவுல எந்தப் பேலாவுது பாவு போட்டா கையைத் தரிச்சுருவேன்” – உறுமினார் அசன் மைதீன்.  அதிகாலை அமைதி சற்று நடுங்கியது.. மும்தாஜிற்கு மூச்சே நின்று விடும்போல இருந்தது. ’அய்யோ  மையத்தை இங்க கொண்டு வரப் போறாங்களா..? அப்படின்னா பாவு போட முடியாதே..’ –  நிற்க முடியாது தள்ளமாடி கீழே சரிய- அனிச்சையாக அவள் கைகள்  தூணைப் பிடித்துக் கொண்டன. வாசல் படியிலேயே உட்கார்ந்து விட்டாள். பார்வை தெருவை வெறித்தது. வெறுந் தரையாய் செத்துக் கிடந்தது தெரு..

 

             0000     0000     0000

     மெளத் ஆகிப்போன பெத்தம்மாவுக்கு நான்கு பெண்கள். கடைசியாகப் பிறந்தவர் தான் அசன் மைதீன். ஒரு மாதத்திற்கு முன்னால்தான் மைமூன் பீவியுடன் அவருக்கு கல்யாணம் நடந்தது. மாமி- மருமவ சண்டை. பள்ளிவாசல் தெருவில் இருக்கிற மூத்த மவ வூட்டுக்கு வந்து விட்டாள் பெத்தம்மா. வந்த நாளிலிருந்து, பத்து நாட்களாக   ஷெய்கனா ஒலியுல்லா தர்காவுக்கு வருகிறாள்.

       சின்னப்புள்ளையா இருந்த போது தன்னோட அம்மாவின்  கையப் புடுச்சுக்கிட்டு  வெள்ளிக் கிழமை ராத்திரி தோறும்  பெத்தம்மா இங்க வருவா. வருந்தித் தவமிருந்து பெத்த ஒத்த ஒரு மவனோட குத்தங் குறைகளை யாரிடம் சொல்லி அழுவாள்..? மனுஷ மக்க கிட்ட சொல்லி அழுதா தீர்ந்துடப் போவுதா..? படைச்சானே அந்த ரப்பு.. அந்த ரப்புத் தா-ஆலாவிடம் சொல்லி அழத்தான் இந்த ஷெய்கனா ஒலியுல்லா தர்கா மூலையில சுருண்டு கெடக்கிறா. அந்த நாயன் அவள் பேசுவதைக் கருணையோடு காது கொடுத்துக் கேட்பது போல முறையிடுகிறாள்: ” என்னப் படைச்சவனே.. . நான் அநாதை.. . நாதி பிராணி அத்துப் போயிட்டேன்.. உன்ன வுட்டா எனக்கு யாரு உண்டு..? … கல்யாணம் ஆவுறது வரைக்கும் நான் பெத்த மவன் நான் கிழிச்ச கோட்டைத் தாண்டாம,  தங்கக் கம்பியாத்தான் இருந்தான். கல்யாணம் ஆச்சு. எல்லாம் போச்சு.    வாக்கப்பட்டு வந்தாளே அந்தப்  பாதகத்தி.. அவ, எம் புள்ளைய  மை போட்டு மசக்கிட்டா..அவ வெளங்குவாளா..? துலங்குவாளா.. ? நேத்து  வந்த அந்த வெறவாக்கெட்ட மூதி வெறவுக் கம்பால அடிச்சு என்னை தெருவுல தள்ளுறா.. இந்தப் பய, வாயப்  பொத்திக்கிட்டு நிக்க்கான். பெத்த தாயுலோ….. ..தெருவுல வுளுந்து கெடக்காளே…-.ங்க்கிற நெனப்பும் அத்துப் போயி படமரமாட்டம் நிக்கான்.  அந்தத் தேவுடியா செருக்கி அடிச்சது கூட வலிக்கல்ல. நான் பெத்த மவன் சும்மா நிண்ணதெ நெனெச்சாத்தான் எங் கொல கொதிக்கிது…  அப்போது  கணீர் என யாரோ பாடும் சத்தம் கேட்டது: மாங்குட்டி சாயிபு தான்: ” கண்ணின்றி காண்பவனே…காதன்றி கேட்பவனே..என்னையன்றி நின்ற இறையோனே.. / நீ படைக்கின்றவன்.. நீ அழிக்கின்றவன்.. நீயே நிறைந்த பொருளாய் இருக்கின்றவன்../ நீ இரங்குகின்றவன்.. நீ இரங்காவிடிலோ.. வாய் இருந்தென் செய்யும்.. கை இருந்தென் செய்யும் ….” ன்னு உசிரு உருகுற மாதிரி பாடுறாரு.. விடிய விடியப் பாடினாலும் கேட்டுக் கிட்டே இருக்காலாம் போல இருக்கு. கடைசியா அவர் “எக்காலம் எங்களுக்கு இடையூறு வராம தற்காத்து அருள்  புரிவாய் தனியே நீ றஹ்மானே..! /  கால கஷ்டம் அணுகாம காத்தருள்வாய் காவலேனே.. .ன்னு பிச்சைக்காரனைப் போல இரு கை ஏந்தி  வேண்டிய போது   கண்ணு தெரியாத சுலைகாவும், புத்தி  பேத்லிச்ச மஹ்மூதாவும் ” காத்தருள்வாய் காவலனே..’  ன்னு குமுறி குமுறி அழுவுறாங்க. சொத்து சொகம் ஆயுசு ன்னு எனக்கு-ன்னு ஒண்ணும் வேண்டாம்..  நான் பெத்த மக்களை நல்லாக்கி வை  நாயனே..ன்னு  நானும் கேட்டுட்டு வெளியே வந்தேன்… ..  மனசு  நெறஞ்சு போன மாதிரி இருக்கு. தூசு தும்பு இல்லாம துப்புரவா ஆயிட்டது.. கவலையும் கண்ணீரும் போன இடம் தெரியல… ” என ஏதோதோ  தனக்குத் தானே  பேசியவாறு ஷெய்கனா தர்காவிலிருந்து வீடு திரும்பினா பெத்தம்மா. “ பசி இல்ல சாப்பாடு வேண்டாம்..” –னு மகளிடம் சொல்லிவிட்டுப் பாயில படுத்தவ தான். அப்புறம் கண்ணை தெறக்கல.

           0000      0000       0000

     அசன் மைதீன், வட்டாரத்துப் பெரிய மனுஷங்களுடன் அம்மா மையம் இருக்கிற பள்ளிவாசல் தெரு மூத்த அக்கா வீட்டிற்கு வந்தார். திண்ணையில்  நான்கைந்து கிழவர்கள் அமர்ந்திருந்தனர். இறந்து போன பெத்தம்மாவின் தலைமாட்டிலிருந்து யாரோ அழுகிற சத்தம் கேட்கிறது.  ரூஹூ ( உயிர் ) அடங்கும் முன்னர் பெத்தம்மா சிந்திய கடைசி கண்ணீர்த் துளியும் அந்த அழுகையில் கரைந்திருக்குமோ…?  அப்போது,  ’மாப்ளே …’- என்றவாறு மூத்த அக்காவின் கணவர் அசன் மைதீனை  தோளோடு சேர்த்தணைத்தார். அசன் மைதீன் முகம்  கடுமை கொண்டது. .  ”என் தாயோட மையத்தை என் வீட்டிலிருந்து தான் அடக்கம் பண்ணணும்… இந்தத் தெருக்காரங்களுக்கு ஒண்ணு சொல்றேன்..எவனாவது இந்த வீட்டிலிருந்து மையத்தை  தூக்கிட்டு அடக்கம் பண்ணப் போனா தலையைச் சீவிடுவேன் சீவி..“ – தெருவே அதிரும்படி சத்தம் போட்டார். அப்போது பெத்தம்மாவின் மூத்த மகள்,   கண்ணீரும் கம்பலையுமாய் வீட்டிலிருந்து  வெளியே வந்தாள். தம்பியை மேலும் கீழும் பார்த்தாள். ” ஏல..அசன் மைதீன்..எப்பம்-ல என் தாயீ..? செத்த பெறவால..? ஒம் பொஞ்சாதி விறகுக் கம்பால அடிச்சு அவள வீட்டை விட்டு  வெளியே தள்ளினாளே அப்ப தெரியலையால ஒந் தாயீ..? இப்ப, ஊர்ல ஒங் கவுர மயிறு கொறஞ்சு போயிடுமே-ன்னு, செத்த மையத்தைக் கேட்டு வந்து நிக்கியே..? வெக்கமா இல்லியால உனக்கு..? “ என்றாள். அப்போது அசன் மைதீனின் இரண்டாவது அக்கா முகத்தை முந்தானையால் துடைத்தவாறு ” இந்த வூட்ல இருந்து தான் அடக்கம் பண்ணுவோம். முடிஞ்சத பண்ணு போ” –என அமைதியான குரலில் சொன்னாள். அசன் மைதீனின் முகம் தொங்கிப்போனது. இந்த  அக்காவின் கணவர் சிங்கப்பூரில் இருக்கிறார். அக்காவின் பண உதவியால் தான், தறி நூல் சாயம் பிடிக்கும் சாயப்பட்டறை வைத்து,  ஐந்து கோட்டை வெதப்பாடு நஞ்சை, ரண்டு வூடு எல்லாம் வாங்கி பெரும் பணக்காரனார் அசன் சாயிபுவின் வாப்பா. எதிர் பாராமல் மெளத்  ஆகியும் விட்டார்.        “

     விறு விறு வென நடந்து வீடு வந்தார் அசன் மைதீன்.   மனைவி மைமூன் பீவியின்  இரண்டு தம்பிமாரும், மாமாவும் வீட்டில் இருந்தார்கள் விஷயத்தைக் கேட்டதும் கொதித்துப் போனாள் மைமூன் பீவி. ’அந்த சிங்கப்பூர்க்காரிக்கு இம்புட்டு ஆங்காரமா..?அதையும் பாத்தர்லாம்…. டேய்  நம்ம தெருவுல உள்ள பெரிய மனுஷங்கள சத்தங்குடுடா…..அப்பிடியே பள்ளி தெரு பெரிய மனுஷங்க….பஞ்சாயத்துப் பெரியவர் காதர் சாயிபு  ..எல்லாரையும் கூப்பிடு. கூட்ரா  பஞ்சாயத்தெ..” என தம்பியை விரட்டினாள். மைமூன் பீவியின் குரலில் இருந்த  இறுக்கமும், அதிகாரத் தொனியும்  சில்லிடச் செய்தது. பரம்பரைப் பணக்காரர்  காவன்னா.மூனா ஹாஜியாரின் மூத்த புதல்வியல்லவா..?

 

                0000       0000     0000

      வீட்டு வாசல்படியில் சோகமே உருவாக அமர்ந்திருந்தாள் மும்தாஜ். பீடியை இழுத்தவாறு திண்ணையோரம் குத்த வைத்து உட்கார்ந்திருந்தான் நவாஸ். இந்த நேரம்  பாவு ஆத்தி முடிஞ்சிருக்கும்.-மெளனமாய் நினைப்பு ஓடிற்று அவன் மனதுள்.  இவர்களைப் போலவே பாவு ஆத்த சீட்டு விழுந்த எதிர் வீட்டு அலிமா பீவி, மும்தாஜிடம் வந்தாள். “ ஏம் மதினி.. மையம் இருக்கிற பள்ளிவாசல் தெருவுல தான்  பாவு ஆத்தலை..  நம்ம தெருவுலையும் பாவு ஆத்தாம சும்மா கெடக்கணுமா..?’ என்றாள். “ என்ன செய்யிறது..? நம்ம தெருவுல இருக்கிற அசன் மைதீன்   நான் தான் உடமஸ்தன்… என் வீட்டிலிருந்து தான் அடக்கம் பண்ணனும்-னு- பஞ்சாயத்த கூட்டி இருக்கிறாரே..? அசன் மைதீன் வூட்ல  இருந்து தான் அடக்கம் பண்ணணும்- னு பஞ்சாயத்துல முடிவு செஞ்சிட்டா..?’ என்றாள் மும்தாஜ். ”எப்ப பஞ்சாயத்து முடியுமோ..? மதினி நான் போயி பஞ்சாயத்துல என்ன நடக்குது-ன்னு பாத்துட்டு வரவா..?- என்றாள். அலிமா. மைய வூட்டுக்குள்ள போயிடாத. வெளியில நிண்ணு பாரு. இல்லைண்ணா மைய வூட்டுக்குப் பக்கத்து வூடு போஸ்ட் மேன் அபுபக்கர் மாமா-ட்ட கேளு..” என்றாள் மும்தாஜ்

          0000       0000    0000

 

         பள்ளி வாசல் தெரு மைய வீட்டில் அழுகைச்சத்தம்  கொஞ்சம் தணிந்திருந்தது.  எதிர் வீட்டுத் திணைணையில்   இரண்டு தெருவைச் சேர்ந்த பெரிய மனிதர்கள்  யூசுப் சாயிபு, அப்துல்லா சாயிபு, மசூது சாயிபு,  அஜீஸ் சாயிபு என  பத்துப் பதினைந்து பேர்- கூடி இருந்தனர். இது போக  பத்துப் பன்னிரண்டு பேர் தெருவில் நின்றிருந்தனர்.  அண்ணன்ன்-தம்பி தகறாறு, மாமி-மருமவ சண்டை, பாகப் பிரிவினை, சொத்துத் தகராறு என  பஞ்சாயத்துகளில் அனுபவசாலியும், நியாயமாகத் தீர்ப்புச் சொல்பவர் என ஊரில்  பேர் எடுத்தவருமான பஞ்சாயத்துத் தலைவர் காதர் சாயிபு தொண்டையைச் செருமினார். ’.இப்ப எதுக்காகக் கூடியிருக்கோம்னா  அசன் மைதீன்  சாயிபுவோட அம்மா, மூத்த மக வூட்ல தவறிப் போயிட்டா. மையத்தை,  என் வூட்ல இருந்து தான் அடக்கம் பண்ணணும்…  நான் தான் ஒரே ஆம்புளைப் புள்ள-ன்னு அசன் மைதீன் சாயிபு பஞ்சாயத்தெ கூட்டி இருக்கிறார்.  பெத்தம்மாவோட பொம்புளைப் புள்ளைக  நாலு பேரும் இதுக்குச் சம்மதிக்கிறாங்களா-ன்னு மொதல்ல அவங்கள கேக்கணும்”

’ அவங்க தான் மாட்டேன்னுட்டாங்களே..’- என்றார் அஜீஸ் சாயிபு.

“ அவங்க அதெ பஞ்சாயத்தில சொல்லணும். அப்புறம் இன்னொண்ணு: இன்னும் அடக்கம் பண்ணாம மையம் இருக்கு. .பஞ்சாயத்ல பேசுறபோது ரொம்பச் சத்தம் போட வேண்டாம். அது  மெளத் ஆயிப் போனவங்களுக்கு அவமரியாதெ..” என்றார் காதர் சாயிபு . பெத்தம்மாவின் பெண் மக்க நாலு பேரும் திண்ணையை ஒட்டிய வீட்டு வாச நடையில்,   ஒருவர் பின் ஒருவராக நின்று கொண்டார்கள். ’ஏம்மா மையத்த  தன்னோட வீட்ல இருந்துதான் அடக்க்ம் பண்ணணும்-னு உங்க தம்பி அசன் மைதீன் சாயிபு கேக்கிறார் உங்களுக்கு இதில சம்மதமா..?- என்றார் யூசுப் சாயிபு. . நால்வரும் ஓ வென ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விட்டனர். “ சம்மதமா.. இல்லியா ? அதெ மட்டும் ஒவ்வொருவரா பஞ்சாயத்ல சொல்லணும்..” என்றார்- அப்துல்லா  சாயிபு கறாராக. ’சம்மதமே இல்லை’- என பதில் வந்தது. ’அப்புறம் முக்கியமா இன்னொண்னு. நீங்களும் சரி அசன் மைதீன் சாயிபுவும் சரி  பஞ்சாயத்தோட தீர்ப்புக்குக் கட்டுப்படுவீங்க தான..? “- என அசன் மைதீனையும்   பின்னர் நாலு பெண் மக்களையும் பார்த்தார் காதர் சாயிபு. ’சரி’- என்றனர்.

 “ வேய் அசன்மைதீன் சாயிபு .அவங்க முடியாதுங்கிறாங்களே..? என்றார் மசூது  சாயிபு.

”அவங்க யாரு முடியாது-ன்னு சொல்ல..? என் வூட்-ல யிருந்து தான் மையத்த அடக்கம் பண்ணணும் ..நான் தான் உடமஸ்தன்…” என்றார் அசன் மைதீன்..

“ பொம்புளப் புள்ளைகளத்தான் கட்டிக் குடுத்தாச்சே…அவங்க இன்னொருத்தன் வூட்லையுலோ இருக்காங்க..? மகன் வூட்லயிருந்து தான் அடக்கம்பண்ணணும் அது தான் முறை..” என்றார் அசன் மைதீனோட மச்சான் காதர் ஒலி. அப்போது பெத்தம்மாவின் மூத்த மவ கண் கலங்க  “ஏங்க.. என் கூடப் பொறந்த தங்கச்சிமார் சார்புலையும் என் சார்புலையும் நான் ரண்டு வார்த்தை சொல்லலாமா.? என்றாள். காதர் ஒலி இடை மறித்து ’கொஞ்சம் இருங்க.. எங்க வாப்பா வந்துக்கிட்டு இருக்கிறார்..அப்புறமா பஞ்சாயத்தெ தொடரலாம்’ என்றார். ‘யாரு.. காவன்னா-மூனா ஹாஜியாரா ? அவரு இதுக்கெல்லாம் வர மாட்டாரே..’ என்றார் அஜீஸ் சாயிபு.

 

                                  0000             0000                0000

 

  ”பஞ்சாயத்து எப்ப முடியும்..? எப்ப பாவு போடலாம்..? தேரம் ஆயிட்டே போவுதே..” – மும்தாஜின் மனம் அடித்துக் கொண்டிருந்தது. அப்போது வேக வேகமாக ஓடி வந்தாள் அலிமா பீவி. ‘மதினி.. பஞ்சாயத்து இப்ப முடியற மாதிரி தெரியல்ல. காவன்னா.மூனா ஹாஜியார் வந்த பெறவு தான் பேசப் போறாங்களாம்’ -என்றாள்.  திண்ணையில் இருந்த நவாஸ் தெருவில் இறங்கி வானத்தைப் பார்த்தான். “ மேகம் இருண்டு வார மாதிரி தெரியுதே.. மழை வரும்போல இருக்கே..? –முனகினான். மும்தாஜும் வானத்தைப் பார்த்தாள். “ ஐயோ மழை வரும் போல இருக்கே . அதுக்கு முன்னே பாவு ஆத்தி முடிச்சாத்தான் உண்டு.. இல்லை-ன்னா பாவு காயாம  கந்தலாப் போயிடுமே..” –பதறினாள்.. ஒன்றுமே பேசாமல் விறு விறு வென வீட்டுக்குள் நுழைந்தான் நவாஸ். பாவை முழங்கையில் மாட்டிக்கொண்டான். கம்பு, முளை கயிறு எடுத்துட்டு வா.. பாவு போடலாம்..” எனச் சொல்லியவாறு தெருவில் நடந்தான். பாவு ஆத்த சீட்டு விழுந்த மற்ற இரண்டு பேரும் பாவை எடுத்துகொண்டு நவாஸ் போவதைப் பார்த்தார்கள். “ மழை வார மாதிரி இருக்கு..  நாமளும் பாவு போட்ற வேண்டியது தான்..” என அவர்களும் முளை, கரைக்கால், கயிறு எடுத்துக் கொண்டு போனார்கள். மைய வூடு இருக்கிற வட்டாரத்திலேயே பாவு போடுறாங்களே….’ என நடு வட்டாரத்திலும் மேல வட்டாரத்திலும் பாவு ஆத்த கிடு கிடு  வெனத் தயாரானார்கள்.

 

     0000          0000       0000

      பஞ்சாயத்தார் முன்னிலையில் ஒரு கும்பா, தண்ணீர் சொம்பு, துணி மூட்டை – மூன்றையும் வைத்தாள் பெத்தம்மாவின் மூத்த மகள்  மைமூன். சட் டென பஞ்சாயத்தில்  மயான அமைதி  நிலவிற்று. ”  பெத்த தாயை கம்பால அடிச்சு கழுத்த புடிச்சு தெருவுல தள்ளுனா என் தம்பி பொஞ்சாதி. அதோட நிக்காம அவ சாப்புடுற கும்பா, செம்பு, உடுத்துற சீலை சட்டை எல்லாத்தையும் மூட்டையா கட்டி தூரத்தூக்கி தெருவுல எறிஞ்சா. எல்லாத்தையும் ஒண்ணு ஒண்ணா பொறுக்கி எடுத்துக்கிட்டு  அனாதையாட்டம்  அழுதுக்கிட்டே என் வீட்டுக்கு வந்தா என் தாயி.  நடந்ததெ எல்லாத்தையும் வாசல்-ல நிண்ணு கைய கட்டிக்கிட்டு  பாத்துக்கிட்டே இருக்கான் எங்கும்மா பெத்த ஒத்த ஒரு ஆம்புள சிங்கம் அசன் மைதீன் சாயிபு. சா..யீ..பூ..பூ..

பஞ்சாயத்துக்காரவுகளே..  வருந்தித் தவமிருந்து பெத்த ஒத்த ஒரு ஆம்புள்ளப்  புள்ளைய எங்கம்மா வளத்த கதைய சொன்னா ஊரு உலகம் கண்ணீர் வுட்டுடும். நாங்க அஞ்சு பேரு.  நாலாவதா தங்கச்சி பொறந்த பத்து வருஷத்துக்குப் பொறவு தான் என் தம்பி பொறந்தான். அவன் பொறந்த பெறவு, எங்க அம்மாவுக்கு, அவனே எல்லாமா ஆயிட்டான். அக்காமாரு நாங்க நாலுபேரும் பெறாத தாயா அவனுக்கு சேவகம் பண்ணினோம். விட்டுக் கொடுத்தோம். அப்படி சேவகம் பண்ணி இருக்கத்தான்  நாங்க பொறந்ததாக எங்க அம்மா எங்கள ஆக்கிப்புட்டா.  ஒரு கந்தூரி, பெரு நாள்-னு வருஷத்தில ஒரு நாளோ ரண்டு நாளோ தான் எங்க வாப்பா கறி வாங்கி வருவாரு. கறி-ன்னா தலை, கொடலு பக்கத்து, எலும்பு- தான். வருஷத்தில ஒரு தடவையேனும் முழுசா கறி வாங்க தறி காரனுக்கு வக்கேது..? அப்படி வாங்கிட்டு வந்தா, சமச்சதுல நல்லதா பொறுக்கி முக்காவாசிய என் தம்பிக்கு வச்சிருவா எங்க அம்மா   ” என்ன செய்யிறது ..? நோஞ்சான் பயலாப் பொறந்துட்டானே.. காச்சல்-னு படுத்துக்கிட்டா அவனெ தூக்கிச் செமக்கிறது யாரு..? – அப்படி-ன்னு மறக்காம சொல்லுவா. இப்பிடி ஏன் ஒவ்வொரு தடவையும் சொல்லணும்..?  எங்களுக்கு வள்ளுசா ஒண்ணுந்தராம ஆம்புளைப் பேலுக்கு எல்லாத்தையும்  அம்மா தர்றாளே-ன்னு நாங்க நெனச்சிடப்படாது-ங்கிறதுக்காகவா..? கொளத்துல மீனு புடிச்சு ஆக்குவா. மீனு முள்ளெ எல்லாம் எடுத்துட்டு, சதையை மட்டுடும் அவனுக்குக் கொடுப்பா.  நாஙக முள்ளெ சூப்புவோம். இல்லைன்னா சட்டியில ஒட்டியிருக்குற கடுவ ( ஆணத்தை ) வழிப்போம். வூட்ல கோழிக இருக்கு. முட்டை எல்லாத்தையும் வித்துட்டதா சொல்லுவா. ஆனா கொஞ்சம் ஒளிச்சு வச்சிருப்பா. அப்பப்ப முட்டைய அவுச்சு சோத்துல அமுக்கி எங்களுக்குத் தெரியாம அவனுக்குக் குடுப்பா. “ என்ன செய்யிறது..? அந்தப்பெய நோஞ்சான் பெயலா ஆயிப்புட்டானே-ன்னு வழக்க்ம் போல  ஒவ்வொரு தடவையும் சொல்லுவா.  வூட்ல ரெண்டு தறி. ராவா பவலா நாங்க தறி நெஞ்சோம். தறிகாரனாப் பொறந்து ஒரு சிட்டம் தார் சுத்தத் தெரியாத – காக் குழியில ஒரு தடவை கூட இறங்காத யாராவது ஒருத்தர் இந்த ஊர்ல உண்டும்னா- அது – அதோ நிக்காரே அசன் மைதீன் சாயிபு ..அவரு தான்.  அப்படி அவன பொன்னா பூவா பொத்திப் பொத்தி  வளத்தா என் தாயீ. அவன அப்படி வளக்குறது தான், எங்க எல்லாரோட கடமைங்கிற மாதிரி எங்க தலைக்குள்ளேயும் பதிய வச்சுட்டா. தம்பிய  தூக்கி வச்சுக் கொண்டாடணும்-னு சின்ன வயசுல எங்க தலைக்குள்ள எங்கம்மா பதிச்ச ரேகை அவ்வளவு  சீக்கிரம் அழிஞ்சிருமா..? கல்யாணமாயி போன பின்னாலும் நாங்க அவனுக்கு செஞ்சோம். அந்தா நிக்காளே என் தங்கச்சி- அவ, .ஊர்ல தம்பி ஒரு ஆளா வரணும்-னு -ங்கிறதுக்காக சிங்கப்பூர்ல இருக்கிற புருஷன் கிட்ட  ரொக்க ரொக்கமா வாங்கி வாப்பாட்ட கொடுத்தா.  வாப்பா சாயப்பட்டறை ,   நஞ்ச, வூடு, நிலம்-னு வாங்கினாரு.  பெரிசா ஆனாரு. பாவம். அனுபவிக்கிறதுக்கு முனனாலெ மெளத் ஆயிப் போயிட்டாரு. தம்பி ஊர்லேயே பெரிய பணக்காரனாயிட்டான். தம்பிக்கு பொண்ணு குடுக்க நீ நான் –னு ஊர்ல போட்டி. பரம்பரைப் பணக்காரர் காவன்னா.மூனா ஹாஜியார் ஒரே அமுக்கா அமுக்கிட்டார். கல்யாணம் முடிஞ்சுது. புதுப் பொஞ்சாதி வூட்ல காலடி எடுத்து வச்சு ஒரு வாரந்தான் ஆகி இருக்கும் எந்தம்பி எங்க கிட்ட வந்து சொல்றான்: வூட்ல இருக்கிற சாமானெல்லாம் ஒண்ணு ஒண்ணா காணாமப் போயிட்டிருக்காம். இனிமெ நாங்க அம்மாவப் பாக்க வாறோம்-னு  அவன்  வூட்டுக்கு வரப்புடாதாம்…. ! அதுக்கு அடுத்தவாரம் எங்கம்மாவை கழுத்த புடிச்சு வெளியெ தள்ளுறா அந்த மகராசி. எலே .. அசன் மைதீன்  ஒண்ணு சொல்றேன். கேட்டுக்கோ. இண்ணைக்கு எங்கம்மாவுக்கு நேர்ந்த கதி தான் நாளைக்கு ஒம் பொஞ்சாதிக்கும்  நடக்கப் போவுது. ஒம் பொஞ்சாதி மாமியாரா ஆவா.  வெளக்குமாத்தால அடிச்சு ஒம் பொஞ்சாதியை, அந்த மருமவ நடுத்தெருவுல தள்ளத்தான் போறா. இந்த விதியிலிருந்து தப்ப முடியாது நெனச்சுக்கோ” –என்றாள்.  அப்போது இரண்டாவது அக்கா  “  நீ ஏம்ளா சாபம் வுடுறே..? பேச்ச நிறுத்து. அவன் நல்லா இருக்கட்டும். ஏங்க பஞ்சாயத்துக்காரவுளே… எங்கம்மாவெ .இங்க இருந்து தான் அடக்கம் பண்ணணும்..” என்று முடித்தாள். அப்போது காவன்னா.மூனா. ஹாஜியார் அசன் மைதீனின்  காதில் “விவகாரத்த இதோட விட்டர்லாம்.. சொத்து பத்தெல்லாம் இன்னும் உங்க வாப்பா பேர்-ல தான் இருக்கு. பொம்புள புள்ளைக ஒப்புதல் குடுத்து விடுதலைப் பத்திரத்தில கையெழுத்துப் போட்டாத்தான்  அத நாம விக்க முடியும். அவங்க வில்லங்கம் பன்ணினா  கோர்ட்டு, கச்சேரி..ன்னு அலைய முடியாது..” என்றார். அசன் மைதீனின் முகம் சற்று இறுகி ஒடுங்கிற்று. சட் டென எழுந்தார். பஞ்சாயத்துத் தலைவர் காதர் சாயிபுவிடம்  போய் அவர் காதில் ஏதோ சொன்னார். பஞ்சாயத்துத் தலைவர் ஒன்றும் பேசாது சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் இரண்டு தெரு பெரிய மனிதர்களையும் தனியாக அழைத்துப் பேசினார். சற்று நேரம் என்னவோ ஏதோ வென்ற குழப்பமும் மெள்னமும் அங்கே  நிலவியது. தொண்டையைச் செருமியவாறு பஞ்சாயத்துத் தலைவர் காதர் சாயிபு பேசினார்: “ மையத்த இங்க இருந்தே- அதாவது மூத்த அக்கா வூட்ல இருந்தே அடக்கம் பண்ணிடுங்க ..அது எனக்குச் சம்மதம்-னு அசன் மைதீன் சாயிபு இப்ப என் காதில் சொல்றாரு’. -மேலும் பேசாது இங்கே சற்று நிறுத்தினார் காதர் சாயிபு. எப்போதுமே நிதானம் இழக்காத அவர் சீறினார்: ”அசன் மைதீன் சாயிபுவோட சம்மதமோ சம்மதமில்லாமையோ  இப்ப பஞ்சாயத்துக்கு முக்கியமில்லை.  அதையெல்லாம் தாண்டி, இந்த விஷயத்துல  பஞ்சாயத்து முடிவு செஞ்சு ஆகணும். ஏன்னா, நாளைக்கு ஊர்ல இது மாதிரி பிரச்சினை வரலாம் .இல்லியா..? சரி விஷயத்துக்கு வாறேன்.. பெத்த தாயை, பொஞ்சாதி வீட்டை விட்டு துரத்துனபோது, அசன் மைதீன் சாயிபு  ஒண்ணுமே பேசாம- செய்யாம,  சும்மா இருந்தார். அதனால பொஞ்சாதி செஞ்சதுல அவரும் உடந்தை தான் –னு ஆயிடுச்சு.  பெத்த தாயை வச்சுக் காப்பாத்த முடியாம அடிச்சு வெரட்டுது ஒரு புள்ள. அடைக்கலம் தேடி இன்னொரு புள்ள வூட்டுக்கு வர்றா பெத்த தாயி. எல்லாம் பெத்த புள்ளைக தான வேய்.. இதுல என்ன வேய் ஆம்புள புள்ள ? பொம்புளை புள்ள..? இதுக்கு மேலே யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு..?  மெளத் ஆன வூட்ல இருந்து தான் அடக்கம் பண்ணணும். இது தான் பஞ்சாயத்தோட தீர்ப்பு” என்றார்

        00000      00000     00000

 பின் குறிப்பு:

 

(1) தரவன்= முதலாளி. இவர் தறிகாரனுக்கு பாவு நூல் கொடுப்பார். தறிகாரன் நூலை லுங்கியாக நெய்து இவரிடம் கொடுத்து கூலி பெற்றுக் கொள்வான்.

(2) பாவு அடசுதல்: ஒரு பாவை சுமார் 72 லுங்கியாக நெய்து முடித்தல். ( பாவு= சுமார் 320 அடி நீள நூல்)

(3) பாவு ஆத்துதல்: மேலே குறிப்பிட்டபடி, லுங்கியாக நெய்து தரவனிடம் கொடுத்த பின்பு, தரவன் புதிதாக மீண்டும் நூல் தருவான். சுமார் 320 அடி நீளமான இந்த நூலை, பசை போட்டு உலற வைத்து பதப்படுத்துவர். இரண்டு, இரண்டரை மணி நேரம் ஆகும் இந்த பதப்படுத்து வேலைக்கு பாவு ஆத்துதல் என்று பெயர். இவ்விதம் பதப்படுத்திய பிறகு தான் லுங்கியாக  நெய்ய முடியும்.

(4) தெரு/வட்டாரம்: பதப்படுத்தும் பாவு ஆத்தும் வேலை தெருவில் தான் நடக்கும். பொதுவாக  மூன்று வட்டாரங்கள் கொண்டது ஒரு தெரு. ஒரு வட்டாரத்தில் மூன்று பாவு போடலாம்/ஆத்தலாம். தெருவில் ஒரு வீட்டில் மையம் என்றால், மையத்தை அடக்கும் வரை தெருவில் உள்ள மூன்று வட்டாரத்திலும் பாவு ஆத்த மாட்டார்கள்

முக்கியக் குறிப்பு:

தென் தமிழகத்த்துக் கிராமமொன்றில் தறி நெசவு  செய்வதைக் குலத் தொழிலாகக் கொண்ட முஸ்லிம் நெசவாளர் சமுதாயத்தில், அறுபதுகளின் கடைசி/எழுபதுகளின் துவக்கத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை ( திர்ப்பும் உண்மை )ஒட்டி எழுதப்பட்ட புனைவு தான் இச் சிறு கதை.

Series Navigationஇப்படியாய்க் கழியும் கோடைகள்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 19
author

முடவன் குட்டி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *