Posted in

நடுங்கும் என் கரங்கள்…

This entry is part 5 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

===========================================ருத்ரா

வெயில் காய்ந்து கொண்டிருந்தது
காதலர்களின் நிலவு போல்.
கந்தல் துணி
நடுவானில் சுருட்டிக்கிடந்தாலும்
அதற்குள் இருக்கும்
சல்லடைக்கண்கள் எல்லாம்
கனவு ஊசிகளின்
குத்தல்கள் குடைச்சல்கள்.
வேப்பமரத்தோப்பின்
கோடைகால சருகுகளின் குவியலில்
காலடிகள் ஊரும் ஓசை.
ரயில் எஞ்சின்கள் தட தடத்து
நெஞ்சின் மேல் ஏரும் தருணங்கள்.
எல்லாமாய் பிசைகிறது.
உருகிப்போன மெழுகு வர்த்தியை
உருட்டிவைத்து
உருவம் செய்கிறேன்
வெளிச்ச தேவதையாய்.
இருட்டு
முந்தானை விரித்துக்கொண்டு
விழி குத்திப்பார்க்கிறது.
தாகம்
சஹாரா மணல் வயிற்றைக்கிழித்து
குளிர் நிலவின்
பனை நுங்குகளை சப்பிக்கொள்ள‌
சூடு பறத்துகிறது.
ஒரு பார்வையின் பிஞ்சை
வடு மாங்காய் ஆக்கி
ஆற்றங்கரையில் அன்றொருநாள்
என் மீது வீசினாள்.
வெடுக்கென்று கடிப்பதற்குள்
வானிலிருந்து நட்சத்திரங்கள்
பொடிப்பொடியாய் உதிர்ந்தன.
மாயநதி குடல் போல்
சுருண்டு சுருண்டு என்னைக்குடிக்கிறது.
மயிர்க்கால்கள் எல்லாம்
கோடிக்கரை மங்குரோவ் வேர்ச்சங்கிலிகளாய்
தண்ணீருக்குள் பிதுக்கிப்பார்க்கின்றன.
அது அவள் கண்ணீர்.
இது என்ன தீ.
சூரியனின் கொரானாஸ்ஃபேர்
போர்வையாகி
என்னை மூடி
அவளைத்தழுவுகிறது.
இதை விலாவரியாய் அவளுக்கு கடிதமாக்க‌
காகிதம் எடுத்தேன்.
உள்ளே ஒரு குலுங்கல்.
பூமியின் புளிச்ச ஏப்பத்தில்
வெப்பத்தின் பீய்ச்சல்.
மின்னல் மீசைகளை நீட்டிக்கொண்டு
மில்லியன் கணக்காய்
பூதாகரமான கரப்பு பூச்சிகள்.
என்ன உணர்ச்சி இது.
கோடிக்கணக்காய் மெழுகுவர்த்தி உருகலை
முழுங்கியா
இந்த இருட்டை வெளியே
கொப்பளிப்பது…
வெள்ளை லாவா
வெள்ளமென எங்கும்..
சூரியன் முழுகிப்போனது.
அதன் பனி முதுகைத் தடவிக்கொள்ள‌
நடுங்கும் என் கரங்கள்…

====================================================ருத்ரா

Series Navigation3. சின்ன டிராகன் புரூஸ் லீயுடன் சாகச நாயகன்உனக்காக ஒரு முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *