தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

26 ஜனவரி 2020

சிவதாண்டவம்

புதிய மாதவி

Spread the love

புதியமாதவி, மும்பை

ஊர்த்துவ தாண்டவத்தில்
உன்னிடம் தோற்றுப்போன
சந்திரகாந்த தேவி அல்லவே நான்.
இதோ….
நானும் காலைத் தூக்கிவிட்டேன்.

உன் பிரணவ ஒலியில்
கரைந்துவிட
உன் உமையல்ல நான்.
அண்ட சராசரங்களை
எனக்குள் அடக்கும்
யோனி பீடத்தில்
உன் நெற்றிக்கண்
தீப்பிழம்பாய் எரிந்துச்
சாம்பலாகிப் போனது.

அந்தச் சாம்பலிலிருந்து
உன் ஆட்டத்திற்குள் அடங்கும்
காத்யாயனி தேவியைக்
கண்டுபிடித்திருக்கிறாய்.
அவளோடு நீயாடும்
சிருங்கார தாண்டவம்
உனக்காக என்னை
ஏங்கித் தவிக்கவிடும்
என்ற கனவுகளில் நீ.
கங்காதேவியையும்
துணைக்கு அழைக்கிறாய்.

பித்தனே மறந்துவிடாதே
பாற்கடலில்
நீயுண்ட நஞ்சை
ஸ்கந்தமாதாவின்
கைப்பிடிக்குள்
பத்திரமாக வைத்திருக்கிறேன்
என்பதை.

மகாபிரளயம் சாட்சியாக
நீ ஆடப்போகும்
ஊழிக்கூத்துக்கு
ஒத்திகைப் பார்க்க
என்னை அழைக்காதே.

என் கருமுட்டையிலிருந்து
நீ கற்றுக்கொண்ட பாடம்
ஆக்கலும் அழித்தலும்.
என்னில் சரிபாதியாக
நீ கொண்ட
அர்த்தநாரீஸ்வர கோலம்
உனக்கு
நான் போட்ட
காதல் பிச்சை.

போதும்…
சிவதாண்டவ
வேடங்கள் களைந்து
வெளியில் வா.
காத்திருக்கிறேன் காதலியாக
உன் நெற்றிக்கண்ணுக்கு
மட்டுமே தெரியும்
மூன்றாவது முலையோடு.

Series Navigationமுக்கோணக் கிளிகள் ! [நெடுங்கதை] மீள் பதிப்புகொம்புத்தேன்

One Comment for “சிவதாண்டவம்”

 • ஷாலி says:

  புதிய மாதவி அவர்கள், சமஉரிமை சட்டத்தை சிவனையே அதட்டி அதிகாரத்தோடு கேட்கிறார். சக்தியில்லையேல் சிவனில்லைதான். ஆனால் டெல்லி சக்திகள் சிவ தாண்டவமும் ஆடவில்லை.சிருங்கார தாண்டவமும் ஆடவில்லை.கிரியையும்,பாம்பையும் வைத்துக்கொண்டு சண்டையிடப் போவதாக மோடி மஸ்தான் வித்தைதான் காட்டுகிறார்கள்.ஒருவேளை அடுத்த தேர்தலில் வென்றால் சக்திகளுக்கு சமஉரிமை கிடைக்கலாம்.
  புதிய மாதவி அவர்களுக்கு கவிதை நன்றாகத்தான் வருகிறது.எதுவும் குறையாக சொல்லவில்லை. இதுபோன்ற புது கவிதை எழுதுவதற்க்கு ஒரு பெருங்கூட்டமே முட்டி மோதிக்கிடக்கும்போது “சேணியனுக்கேன் குரங்காட்டம்?”
  இவரது சமூக விழிப்புணர்வு சனாதான சங்கறுப்பு கட்டுரைகள் தொடர்ந்து வரவேண்டும் என்றே நாம் எதிர்பார்க்கிறோம்.

  ஆடியது போதும்..
  சிவதாண்டவ
  வேடங்கள் களைந்து
  வெளியில் வா,
  காத்திருக்கிறேன்- உன்
  கனல் பறக்கும்
  கட்டுரைக்காக…..


Leave a Comment

Archives