பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று
இவ்வளவு மாதங்களுக்குப் பிறகு போன வருடம் டிஸம்பர் மாதத்திலிருந்து நடந்த நிகழ்வுகளை அவற்றின் தொடர்ச்சியில் சொல்லாம் தான். ஆனால் இவற்றின் தொடக்கம் எங்கு எப்போதிலிருந்து என்பதெல்லாம் எனக்கு தெரியாத காரணத்தால் சொல்வது கடினம். ஒருவாறாக யூகிக்கலாம். அது தவறாகவும் இருக்கலாம்.
சரி இப்படித்தான் தொடங்குகிறது. அம்ருத வர்ஷினி என்ற பங்களூரிலிருந்து செயல்படும் ஒரு ஸ்தாபனத்திலிருந்து கே.எஸ்.எல் ஸ்வாமி என்பவர் கையெழுத்திட்டு 5.12.2012 தேதியிட்ட கடிதம் இரண்டு நாட்களுக்குப் பிறகு எனக்கு வந்தது. அந்த ஸ்தாபனம் 22.12.2012 அன்று டாக்டர் பி.பி. ஸ்ரீனிவாஸ் என்னும் பிரபல சினிமா பின்னணி பாடகருக்கு 82 வயது பூர்த்தி யாகிறது (பி. 22.9.1931) அன்று அவரது ஸ்ஹஸ்ர சந்திர தர்ஸனமும் பூர்த்தி ஆவதால் அந்த வைபவத்தைக் கொண்டாடவும் அவரை கௌரவிக்கவும் ஒரு பெரும் விழா ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம், அந்த சந்தர்ப்பத்தில் பி.பி ஸ்ரீனிவாஸ் கன்னட சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி சினிமா படங்களிலும் ஆயிரக்கணக்கான பாட்டுக்கள் பாடி இரண்டு தலைமுறை ரசிகர்களை மகிழ்வித்துள்ளவர். இந்த அனைத்து மொழிகள் தவிர, ஆங்கிலம், உருது சமஸ்கிருதம் மொழிகளிலும் அவர் வல்லுனராக இருந்தவர். எனவே, 22.12.2012 அன்று அவரைக் கௌரவிக்கும் போது இந்த அனைத்து மொழிகளிலும் தம் பங்களிப்பைத் தந்துள்ள, பி.பி ஸ்ரீனிவாஸ் போல 80 வயது நிறைந்த, அறிஞர்களையும் கௌரவிக்கத் திட்டமிட்டுள்ள்தாகவும், அவ்வகையில் தமிழ் மொழிக்குத் தாங்கள் செய்துள்ள பாராட்டத்தக்க சேவையைக் கருத்தில் கொண்டு பி..பி.ஸ்ரீனிவாஸை கௌரவிக்கும் அதே மேடையில் தங்களையும் கௌரவிக்க விரும்புகிறோம். இது பி.பி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும் மகிழ்ச்சி தரும். எனவே இந்த கௌரவத்தை ஏற்க, தங்கள் ஒப்புதலை உடன் தெரிவிக்க வேண்டுகிறோம், என்று கண்டிருந்தது.
ஆச்சரியமாக இருந்தது. தனித்து விடப்பட்டதால் எஞ்சிய காலத்தைக் கழிக்க மகனுடன் வாழ வந்த இடத்தில் இப்படி ஒரு ஏற்பும் கௌரவமுமா? ”தோட்டத்துப் பச்சிலைக்கு உள்ளூரிலே என்னிக்குங்க மதிப்பு இருந்துச்சி?” என்று எளிய கிராமத்து வாசி கூட கேலி செய்வான். இங்கு அதுவும் தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூச்சலிடும் கர்நாடகத்தில், ”உங்களை கௌரவிக்கிறோம்” என்றா குரல் எழும்? எப்படி இது நேர்கிறது?. அதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் சரி என்று உடனே மறு நாளே பதில் போட்டுவிட்டு சாவகாசமாக யோசிக்கத் தொடங்கினேன். அபூர்வமாக வந்தது கைவிட்டுப் போய்விட்டால்? இடையில் தடுத்தாட்கொள்பவர்கள் நிறைய எங்கும் இருப்பார்கள் என்பது ஒரு புறம் இருக்க, அம்ருத வர்ஷிணிக்காரர்களே கூட “ஸொல்ப க்ஷமா மாட்ரி, எத்தனையோ சாமிநாதன், அட்ரஸ் தப்பாப் போயிடுத்து. அது வேற சாமிநாதன்” என்று சொல்ல எத்தனை நேரம் ஆகும்? எதுவும் நடக்கலாம் தானே.
உடனே அவர்கள் கௌரவத்தை ஏற்றுக்கொள்ள சம்மதித்து கடிதம் எழுதினேன். அதே வேகத்தில், ஏற்றதற்கு நன்றி சொல்லிக் கடிதமும் வந்துவிட்டது. 27.12. அன்று 4.00 மணிக்கு என்னை பாலஸ் க்ரௌண்ட்ஸ்க்கு அழைத்துச் செல்ல கார் வரும் என்றும் சொன்னார்கள். சந்தோஷம். கமுக்கமாக இருக்கவேண்டும். யாரிடமும் சொல்லக் கூடாது என்று மனசில் நினைத்துக்கொண்டேன். அதெல்லாம் சரி. இன்னொரு குடைச்சல்.
இவர்களுக்கு என்னை எப்படித் தெரியும்? இப்படி ஒரு ஆள் இங்கே இருக்கான்யா? என்று கூட ஒருத்தனும் சொல்ல மாட்டானே நம்மூர் ஆள்? நம்மூர்லேயே கவனிக்க ஆள் இல்லை. இங்கே.? 80 வயது நிறைந்திருக்க வேண்டும் என்ற ஒரு தகுதி எனக்கு இருக்கிறது. கேட்டால் பள்ளிக்கூட சர்ட்டிபிகேட் இருக்கிறது. காட்டலாம். ஆனால் இது கலைஞர் கருணாநிதிக்கும் இருக்கிறது. பேராசிரியர் க. அன்பழகனுக்கும் இருக்கிறதே. சொல்லப் போனால் அவர்கள் 80 ப்ளஸ் over qualified. அது போக, தமிழ் உலகம் அறிந்தவர்களாயிற்றே. சக்தி வாய்ந்தவர் களாயிற்றே. அவர்களை ஏன் தேடிப்போகவில்லை? ஒரு வேளை சென்னையிலிருந்து அழைத்து வர செலவு அதிகமாகும் என்றா? அவர்களோடு ஒரு பெரிய கூட்டமே வருமே, என்றா? அல்லது பத்தோடு பதினொன்றாகச் சேர அவர்கள் மறுப்பார்கள்? தனி மரியாதை கேட்பார்கள்? பி.பிஸ்ரீனிவாஸ் பின்னுக்குப் போய் அவர்கள் மேல் தான் ஸ்பாட்லைட் விழும்? இப்படி எல்லாம் நிறைய யோசித்திருப்பார்கள். இது அவ்வளவும் எனக்கு சாதகமான points ஆச்சே! இந்த வம்பெல்லாம் சாமிநாதனிடம் இல்லையே. சல்லிஸாக காரியம் முடியும். சரி. மற்றது?
Shashwathi Nanjanagudu Tirumalamba Award winners 2011
(அமர்ந்திருப்பவர்களில் இடது பக்கம் இருப்பது உமா மகேஸ்வரி அடுத்து இருப்பது நயனதாரா ஸெஹ்கல், இந்திரா காந்தியின் கஸின், விஜயலக்ஷமி பண்டிட்டின் மகள். தைரியமும் சுயகௌரவமும் மிக்க நல்ல எழுத்தாளர். குடும்பப் பெயரைக் கொண்டு அறுவடை செய்யாதவர். இந்திரா காந்திக்கும் நயனதாராவுக்கும் இடையே ஏழாம் பொருத்தம் தான். உமா மகேஸ்வரிக்கு பின்னால் நிற்பவர் சஷி தேஷ்பாண்டே. நான்கு பெண்களும் பரிசு பெற்றவர்கள். மற்ற எவரையும் எனக்குத் தெரியாது)
பங்களூருக்கு வந்த வருடம் எனக்கு தெரிந்த தமிழறிஞர் இங்கு பேராசிரியர் ப. கிருஷ்ணசாமி, க்ரைஸ்ட் காலேஜில் இருப்பவர். இப்போது அது க்ரைஸ்ட் யுனிவர்சிடி ஆக உயர்ந்துள்ளது. அவர் எனக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு விடுத்தார். ஷாஷ்வதி அவார்ட்ஸ் கமிட்டி ஒவ்வொரு வருடமும் படைப்பு இலக்கியத்துக்கு பெரும் சேவை செய்துள்ள பெண் எழுத்தாளர்களை கௌரவித்து நஞ்சன்கூடு திருமலாம்பா அவார்ட் என்ற பெயரில் 40,000 ரூபாய் பரிசும் ஒரு காமதேனு விக்கிரஹமும் கொடுப்பார்களாம், ஒவ்வொரு வருடமும் ஒரு மொழி என முறை வைத்து. இந்த வருடம் தமிழுக்கு ஒரு பெண் எழுத்தாளரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தனக்குத் தரப்பட்டுள்ள தாகவும், அதற்கு தான் தலைமை ஏற்று இன்னும் இரண்டு பேர், ஒரு பெண்ணும் உள்ளடங்கிய குழு அமைத்து தேர்வு செய்யச் சொல்லி யிருக்கிறார்கள். அந்தக் குழுவில் நீங்களும் சேர்ந்து எனக்கு தேர்வில் உதவ வேண்டும் என்று சொன்னார். சந்தோஷமாக இருந்தது. நிறைய பெண் எழுத்தாளர்களைப் படித்தோம். தேர்வும் செய்தோம். பரிசும் கௌரவமும் உமா மகேஸ்வரிக்குச் சென்றது. அந்த பரிசுக்கு என்ன பெயர் என்பது மறந்துவிட்டது. பல வருஷங்களுக்கு முன் தில்லியில் இருந்த போது கதா பரிசுக்கு உமா மகேஸ்வரியைத் தேர்ந்ததும் எனக்கு மகிழ்ச்சி தந்த ஒன்று. அது தனித்துச் செய்த தேர்வு. இது ஒரு குழுவோடு செய்த தேர்வு. அவ்வளவே.
அதற்குப் பிறகு என்னையும் ஒரு “அறிஞனாக”, இலக்கியம் பற்றித் தெரிந்தவனாக சுட்டிக்காட்ட யாரும் இருக்கவில்லை. குடத்தில் இட்ட விளக்கு என்று நான் எனக்குச் சொல்லி மனசை ஆற்றிக்கொள்ளலாம். தமிழில் தான் எல்லாத்துக்கும் சமாதானங்கள் வழி வகை சொல்ல சொல்வளம் இருக்கிறதே.
சரி. ஆனால், இது எப்படி நேர்ந்தது? 27.12.2012 அன்று நான் என்னை அழைத்துச் செல்ல அவர்கள் சொன்னபடி கார் வரும் என்று காத்திருந்தேன். மாலை 5.00, 5.30 என்று நேரம் சென்றதே ஒழிய காரும் இல்லை. யாரிடமிருந்தும் ஏதும் செய்தியும் இல்லை. அழைப்புக் கடிதத்தில் கண்டிருந்த ரவி சுப்பிரமணியம் என்பவருக்கு டெலிபோன் செய்து கேட்டேன். வேறு யாரோ பதில் சொன்னார்கள். “சாரி. அது கான்ஸல் ஆகிவிட்டது. ஸ்ரீனிவாஸ்க்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதற்காக எல்லோரும் அலைந்து கொண்டிருக்கிறோம். உங்களுக்கு கடிதம் வரும்” என்று சொன்னார்கள்.
அதன் பிறகு சில வாரங்களோ மாதங்களோ கழித்து பங்களூர் பத்திரிகைகளில் ஸ்ரீனிவாஸை கௌரவிக்கும் விழாக்கள் ஒன்றிரண்டு நடந்ததாக செய்தி வந்தது. அதில் அம்ருதவர்ஷிணி இல்லை. பின்னர் சில நாட்கள் கழித்து பி.பிஸ்ரீனிவாஸ் மறைந்துவிட்ட (14.4.2013) செய்தியும் எல்லா பத்திரிகைகளிலும் வந்தது. என்னுடைய ஜாதகத்தின் பாதிப்பு ரொம்ப தூரம் தாக்கும் வலுவும் கொண்டது போலும் என்று நினைத்துக்கொண்டேன். பின்னர் எல்லாம் மறந்தும் விட்டது.
பி.பி ஸ்ரீனிவாஸுக்கு விழா என்று பேசி ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது அவரே இல்லையென்றால், அவரை வைத்துச் செய்யப்படும் விழா, ஸ்ஹஸ்ர சந்திர தரிசனம் கொண்டாடப்படுவதற்கு என்ன அர்த்தம் இருக்கும்? இது பற்றி எந்த நினைப்பும் இல்லாது முற்றிலும் மறந்து விட்டபோது, மே மாதம் ஒரு நாள் வாசல் மணி அடிக்க வழக்கம் போல் கதவைத் திறந்தால் முன்னால் நின்றவர் ”நான் தான் ரவி சுப்பிரமணியம், அம்ருதவர்ஷிணி யிலிருந்து, பி.பி ஸ்ரீனிவாஸ் விஷயமாக வந்தேன் என்று சொல்லிக்கொண்டு. இந்த இடத்தையும், உங்களையும் தெரிந்து அறிமுகம் செய்துகொள்ளத் தான் வந்தேன். கேஎஸ் எல் ஸ்வாமி, அவரும் ரவி தான். அவர் வந்து அழைப்பார்” என்று சொல்லிவிட்டுச் சென்றவர் மறு நாள் கே எஸ் எல் ஸ்வாமி வந்தார். அவர் தான் இந்த விழாவுக்கு முழு பொறுப்பாளர். சினிமா டைரக்டர் என்றும் பல படங்களை இயக்கியவர் என்றும் கன்னட சினிமா உலகில் தெரிந்தவர் என்றும் சொன்னார்கள். அவரிடம் நிஜமான ஒரு பெரிய மனித கம்பீரம் இருந்தது. நமஸ்காரம் என்றார். மன்னிக்க வேண்டினார். காலைத் தொட்டு வணங்கினார். எல்லாம் எனக்குப் பழக்கமில்லாததால், சங்கடமாக இருந்தது. சகஜமாக மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மிகுந்த பண்பாளர். சொன்னார்:
”பி.பிஸ்ரீனிவாஸ் விழா நடத்த இருக்கிறோம். அவர் இருந்த போது பெரிய அளவில் நடத்த இருந்தோம். நம் துரதிர்ஷ்டம் அவர் மறைந்து விட்டார். இருந்தாலும் விழாவும் கௌரவிப்பும் இருக்கும். பெரிய அளவில் இல்லாவிட்டாலும். முடிந்த அளவில் நடத்துவோம். அது தான் தாமதமாகிவிட்டது. நடப்பது அதே பாலஸ் க்ரௌண்ட்ஸில் தான். 7.5.2013 அன்று. 4.00 மாலை காரோடு வருவேன். உங்களை அழைத்துச் செல்ல. நடந்து விட்டதற்கு மிகவும் வருந்துகிறோம். ஆனால் இதெல்லாம் இப்படி நடக்கும் என்று யார் கண்டார்கள்.?” என்று சொன்னார். அத்தோடு ஒரு அழைப்பிதழையும் கொடுத்தார். 4.5.2013 அன்றைய தேதி தான். கௌரவிக்க இருந்த மற்ற அனைவரிடமும் போய் நேரில் அழைக்க வேண்டும்.
இப்படியெல்லாம் கூட ஆச்சரியம் நிகழ்கிறது. எல்லாவற்றையும் விட அவர்களுக்கு பி.பி ஸ்ரீனிவாசிடம் இருந்த பிடிப்பும் ஈடுபாடும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. பி.பி ஸ்ரீனிவாஸ் என்ற பெயர் கேட்டதும் என மனதில் எழும் ஒரு பிம்பம் சென்னைக்கு நான் வந்த புதிதிலிருந்து பலமுறை நன்பர்களுடன் உடுப்பி ட்ரைவ்-இன்னுக்கு போனதுண்டு. நண்பர்களுடன் தான். அப்போதெல்லாம் ஒரு மூலையில் சுற்றியுள்ள மேஜைகள் சில காலியாக இருக்க, ஸ்ரீனிவாஸ் தனித்து ஒரு இடத்தில் உட்கார்ந்திருப்பார். அவருக்கு என எப்போதும் காட்சி தரும் உடை உண்டே. ஒரு மைசூர் மகாராஜா தலைப்பாகை மாதிரி ஒன்று. கோட். பக்கத்தில் ஒரு தோள்பை நிறைய புத்தகங்களோ நோட்டோ காகிதங்களோ, என்னவோ. அவர் பாட்டுக்கு ஏதோ எழுதிக்கொண்டிருப்பார். யாரும் அவருடன் பேசியது கிடையாது. அவர் இருக்கும் மேஜைக்குப் பக்கத்து மேஜையில் கூட யாரும் சாப்பிட உட்கார்ந்து நான் பார்த்ததில்லை. ”ஒரு பெரிய மனிதர், வயதானவர் ஏதோ மும்முரமாக சிந்தித்துக்கொண்டும் இடையில் எழுதிக் கொண்டுமிருக்கிறார். அவரை யாரும் தொந்திரவு செய்யக் கூடாது, தனித்திருக்க விடுவோம்,” என்ற நாகரீகம் கூட இங்கு பார்க்கக் கிடைக்கிறதே என்று நான் வியந்து போவேன்.
அந்த மனிதருக்குத் தான், இப்போது, பத்து வருடங்கள் கழித்து ஒரு பெரும் பாராட்டு விழா கன்னட ரசிகர்களால் பங்களூரில் நடத்த ஏற்பாடு நடக்கிறது. அவர் மற்ற மொழிகளுக்கும் தன் பாடல்கள் மூலம் பங்களித்து இருக்கிறார், ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை இரண்டு தலைமுறைகளாகப் பெற்றிருக்கிறார். நமக்கு இருக்கும் தமிழ்ப் பற்றுப் போல் சொல் அளவில் வெற்றுப் பெருமை அளவில் இல்லாது வெகு தீவிரமாக வெறி என்று சொல்லக் கூடிய அளவில் பொது வாழ்வில் காட்டிக்கொள்ளும் கன்னட மக்களிடையே பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பது எனக்கு வியப்பாகவே இருந்துள்ளது.
இவ்வளவுக்கும் அவர் ஆந்திராவில் காக்கிநாடாவில் பிறந்தவர். முதலில் அவர் பாடியது ஹிந்தி படத்தில் 1952-ல் கீதா தத்தோடு. தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் நிறைய பாடி பின்னணிப் பாடகராக பேர் பெற்றிருந்தாலும், 1956-ல் ராஜ்குமாருக்கு குரல் கொடுத்தவர்.நிறைய சினிமா ஹீரோக்களுக்கு அவர் குரல் கொடுத்திருந்தாலும், தமிழில் ஜெமினி கணேசன், கன்னடத்தில் விஷ்ணுவர்தன், கல்யாண்குமார் போன்றோருக்கும் பாடியிருந்தாலும், கன்னட சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரே, “நான் வெறும் சரீரம் தான். என் சாரீரம் பி.பி.ஸ்ரீனிவாஸ் தான்” என்று மனம் திறந்து சொல்லும் அளவுக்கு ஈடு இணையற்ற ஒரு பாராட்டைப் பெறும் புகழ் பெற்றிருந்தவர். லதா மங்கேஷ்கர்,பானுமதி, பி.சுசீலா, ஜானகி, எல் ஆர் ஈஸ்வரி என்று ஒரு பெரிய அணிவகுப்பு அவருடன் பாடிய பாடகிகள். எனக்கு அவர் பாடிய கண்ணதாசனின் பாடல் “காலங்களில் அவள் வசந்தம்” தான் என் காதுகளில் பி. பி ஸ்ரீனிவாஸ் பெயர் சொன்னதும் ரீங்கரிக்கும். இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம், இவ்வளவு பெருமை, இவ்வளவு நீண்ட கால பின்பாட்டு வாழ்வு அவர் காலத்தில் வேறு யாருக்காவது கிட்டியுள்ளதா என்பது தெரியவில்லை. அவர் தான் உடுப்பி ட்ரைவ் இன்னில் இதோ தனித்து ஒரு ஜோல்னாப் பை நிறைய காகிதங்களைத் திணித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார், யார் பற்றியும் அவருக்கு சிந்தனை இல்லாது, சுற்றி இருக்கும் யாருக்கும் அவர் பற்றிய சிந்தனை இல்லாது கட் அவுட்டுகளே தம் பெருமையைச் சொல்வதாக மதம் கொண்ட ஒரு கடைத் தர கலாசாரம் வளர்த்துள்ள தமிழ் நாட்டில்.
பிறந்தது காக்கிநாடாவில். பாட ஆரம்பித்தது ஹிந்தியில். பாடியது எல்லா மொழிகளிலும், கன்னடத்தில் அதிகம் பாடியது என்றாலும். வாழ்வதோ, சென்னையில், சைதாப்பேட்டையா, சி.ஐ.டி. காலனியிலா? மற்ற எல்லோரையும் விட கொண்டாடப்படுவது கன்னடப் பித்து கொண்ட கன்னடியர்களால். இது என்ன இப்படி? என்ற வியப்பைத் தவிர வேறு ஏதும் தோன்றவில்லை.
இம்முறை சொன்னது போல் கார் வந்தது. தோள் கொடுக்க என் பையன் கணேஷையும் அழைத்துக்கொண்டேன். பாலஸ் மைதானத்தில் உள்ளே நுழைந்தால் ஒரு பெரிய கொட்டகை திறந்த மைதானத்தில் எழுப்பப் பட்டிருந்தது. வழக்கமாக அங்கு இருக்கும் தாற்காலிக கடைகளை அகற்றி எழுப்பபட்ட கொட்டகை என்றார்கள். மேடையும் மிகப் பெரியது. மேடை முழுதும் வாத்தியங்கள் அடைத்திருந்தன. பி.பிஸ்ரீனிவாஸின் உருவம் பிரம்மாண்டமாக மேடைக்குப் பின் இருந்த திரையில். பி.பி. ஸ்ரீனிவாஸின் உருவம் மிக பெரிய அளவில் தீட்டப்பட்டிருந்தது.
இடையில் அவசரத்துக்கு வெளியே போய் வர நேரிட்டால் என்ன செய்வது என்று அரங்கத்தின் முதல் வரிசை இருக்கைகளின் வலது கோடியை தேர்ந்தெடுத்து அமர்ந்தோம் நானும் கணேஷும். முதல் வரிசையின் நடு இருக்கைகளில் கௌரவிக்கப்பட இருந்த பல பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். நான் என் இருக்கையில் அமர்ந்ததும் ரவி என்னை அணுகி ”வாருங்கள், வெங்கட சுப்பையாவும் மற்றவர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்” என்று அழைத்துச் சென்றார். வெங்கட சுப்பையா 100 வயது நிரம்பியவர் என்றார்கள். கன்னட நிகண்டு ஒன்று அவரது மகத்தான காரியம் என்று சொன்னார்கள்.
(ரவி, விழா பொறுப்பாளர் என்னை கௌரவிக்கப்படுபவரில் ஒருவருக்கு அறிமுகப்படுத்துகிறார். (அனேகமாக இவர் தான் வெங்கடசுப்பையாவோ என்னவோ)
மு.ச. க்ரிஷ்ணமூர்த்தி, ஹிந்தி நாவலாசிரியர், டாக்டர் கே.டி. பாண்டுரங்கி என்னும் ஒரு சமஸ்க்ரித பண்டிதர், வி.கே. ரங்காராவ் என்னும் சங்கீத விற்பன்னர் ஹஸ்ரத் நயீம் இக்பால் என்னும் ஹிந்தி, உருது எழுத்தாளர், பேராசிரியர் சேஷகிரி ராவ் என்னும் ஆங்கில நாவலாசிரியர், ஹோ. ஸ்ரீனிவாஸய்யா என்னும் காந்தியானாவில் அறிஞர். கானகலா பூஷண் டாக்டர் ஆர். கே. பத்மனாபா என்னும் இன்னொரு சங்கீத விற்பன்னர், இப்படி ஒரு பன்னிரண்டு பேர் என்னையும் சேர்த்து கௌரவிக்கப் படுவோராக இருந்தனர்.
பின்னர் சற்று நேரம் கழித்து (கலைஞர் சொற்களில், கன்னடத்து பைங்கிளி) சரோஜா தேவியும், உடன் வந்தவர் ஜெயந்தி என்று சொன்னார்கள், அவரோடு வந்து காலியாக இருந்த என் பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் வந்ததும் ரசிகர், ரசிகைகள் கூட்டம் அவரைச் சுற்றியும் வரிசையில் நின்று அவரை தரிசித்து குசலம் விசாரிக்கத் தொடங்கினர். பிறகு அவர்களையெல்லாம் விரட்ட வேண்டி வந்தது. தரிசனத்துக்கு எவ்வளவு நேரம் வேண்டும்?.
(அரங்கம். முதல் வரிசையில் இடது கோடியிலிருந்து, கணேஷ், நான், ஜெயந்தி, சரோஜா தேவி)
கிட்டத் தட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, ஒரு பெரிய பின்னணி பாடகர் நக்ஷத்திரக் கூட்டம் வந்தது. அவர்களை ரவி வரவேற்று அழைத்து வந்தார்.. ஜேஸுதாஸ், எஸ் பி பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், இன்னும் எத்தனையோ பேர் எனக்கு தெரியாத பேர்கள். எல்லோரும் மேடையின் கீழே பி.பி. ஸ்ரீனிவாஸின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நானும் கணேஷும் அங்கு இருந்தது இரண்டரை அல்லது மூன்று மணி நேரம் இருக்கும். மேடை முழுதும் வாத்தியங்கள் பெரிய ஆர்க்கெஸ்ட்ரா ஸ்ரீனிவாஸ் பாடிய பாட்டுக்கள் தொடர்ந்து பாடப்பட்டன. பி.பி ஸ்ரீனிவாஸின் பதிவு செய்யப்பட்ட கன்னட பேச்சும் பாட்டும் இடையில் ஒலித்தன. வி எஸ் எல் ஸ்வாமி என்றும் ரவி என்றும் அறியப்பட்டவர் தான் நிகழ்ச்சிகளை நடத்தினார். வெகு அழகாக கன்னடத்தில் பேசினார்.
( பி.பி.ஸ்ரீனிவாஸின் குமாரர்கள் இருவர் கௌரவிக்கப்படுகிறார்கள்.)
மிக உற்சாகத்துடனும் பெருமிதத்துடனும் அவர் ஸ்ரீனிவாஸ் தொடங்கி அவருடைய அங்கு பாடப்பட்ட ஒவ்வொரு பாட்டைப் பற்றியும், அங்கு வந்திருந்த ஒவ்வொருவர் பற்றியும் பேசியது சந்தோஷமாக இருந்தது. அவர் உணர்ந்த பெருமிதம் தான் அவர் வார்த்தைகளில் இருந்ததே தவிர வெற்று அலங்காரங்கள் அல்ல. ஜேஸு தாஸ், வாணி ஜெயராம், பாலசுப்பிரமணியம் இன்னும் மற்றவர்கள் இடைவிட்டு இடைவிட்டு அடிக்கடி வந்து பாடினார்கள். ஒரு சில பாட்டுககளுக்குப் பிறகு, கௌரவிக்கப்பட இருந்தவர்கள் மேடைக்கு அழைத்து வரப்பட்டு நக்ஷத்திர பாடகர்கள், சரோஜா தேவி, ஜெயந்தி, ரவி உட்பட எல்லோரும் புடை சூழ ஒவ்வொருவரும் கௌரவிக்கப்படுபவரை கால் தொட்டு வணங்கி, சால்வையோ, மாலையோ, பணமுடிப்போ, ஷீல்டோ கொடுத்தனர்.
(எஸ்.பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், சரோஜா தேவி, ஜேசுதாஸ், நீல நிற அங்கியில் இருப்பவர் ரவி.)
என் முறை ஆறாவதோ ஏழாவதோவாக இருந்ததால்,. அது வரை நான் கண்டதிலிருந்து ஒவ்வொருவருக்கும் அந்த மரியாதை நடந்ததைப் ;பார்த்தேன். கௌரவிக்கப்பட இருந்த அத்தனை பேருக்கும் இந்த மரியாதை நடந்திருக்கும்.. கௌரவிக்கப்பட்டவர் யார் யார் என்று ஒரு சிலருக்கே தெரிந்திருக்கும். ஆனால் பரிசுப் பொருட்களைக் கால்தொட்டு வணங்கிகொடுத்தவர்கள் பெரும் புகழ் பெற்றவர்கள். உலகத்தையே தம் ரசிகர்களாகக் கொண்டவர்கள். பி.பி. ஸ்ரீனிவாஸைக் கௌரவிக்க வந்தவர்கள். ஜேசுதாஸ், பாலசுப்பிரமணியம் எல்லாம் ஒரு நிகழ்ச்சிக்கு வர ஒரு லக்ஷம் பெறுபவர்கள். இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் ஒரு ரூபாய் கூட கேட்கவில்லை. பெறவில்லை என்று.
நாங்கள் அங்கு இருந்தது அதிகம் மூன்று மணிநேரம் தான். என் கௌரவிப்பு நடந்ததும் காருக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் போகலாம். கடைசி வரை இருக்க வேண்டிய அவசியமில்லை என்று ரவி எனக்கு அனுமதி தந்தார். இரவு வெகு நேரம் பன்னிரண்டு மணி வரை நிகழ்ச்சிகள் நீளும் பின்னர் எல்லோரையும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று என்னை அழைத்துச் சென்ற ட்ரைவர் தந்த தகவல்.
பி.பி ஸ்ரீனிவாஸைக் கௌரவிக்க வந்த, எந்தப் பொருளும் பெற்றுக்கொள்ளாத அவ்வளவு பின்னணிப் பாடகர் பாடகிகளும் நடிகைகளும் அந்த ஐந்து மணி நேரமும் மேடையில் பாடவேண்டும், கௌரவிக்க வேண்டும். அவர்களுக்குத் தான் காக்கிநாடாவில் பிறந்து, சினிமாவில் பலருக்கும் பின்னணி பாடி, சென்னையில் வாழும் பி.பி.ஸ்ரீனிவாஸிடம் எவ்வளவு விஸ்வாசமும், பாசமும்? அதைக் காட்ட ஒரு சந்தர்ப்பம் வரும்போது என்னவெல்லாம் செய்கிறார்கள்! கன்னட ரசிகர்களும் ஸ்ரீனிவாஸை எப்படியெல்லாம் நினைவு கொண்டு கௌரவிக்கிறார்கள் எனறு எனக்கு ஒரு கோடி காட்டியது அன்றைய நிகழ்ச்சி.
(நஸீம் இக்பால் கௌரவிக்கப் படுகிறார்)
உடுப்பி ட்ரைவ் இன்னில் தன்னை மறந்து, தன்னைச் சுற்றிய அந்த உடுப்பி சூழலையும் மறந்து அமைதியோடு, அடக்கத்தோடும், தன்னில் ஆழ்ந்திருந்த ஸ்ரீனிவாசையும் நினைத்துக்கொண்டேன். மனதை நெகிழ்விக்கும் கணங்கள் அவை.
(ஒன்று சொல்ல வேண்டும். பரிசுப் பணமும் ஒரு பட்டு சுருக்குப் பையில் இருந்தது. அதில் ஒன்பது ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள். பின் ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்கள். 15 பேருக்கோ என்னவோ ஒவ்வொருவருக்கும் இப்படிக் கொடுக்க பத்து ரூபாய் நாணயங்களை எங்குதான் எத்தனை பாங்குகளுக்குச் சென்று சேகரித்தார்களோ. அந்த மைசூர் ராஜா தலைப்பாகையைத் தான் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை).
விழா நடந்து சில நாட்களுக்குப் பிறகு ரவிக்கு நான் டெலிபோன் செய்து கேட்டேன்.”எனக்கு அந்த விழாவில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றைத் தர ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று. ரொம்ப சந்தோஷத்துடன் ”எல்லாம் முடிந்தவுடன், நானே வருகிறேன். உங்களுக்குத் தேவையானதைத் தருகிறேன்” என்றார். இப்படி ஒரு சில தடவைகள் கேட்டு அதே பதில் தான் வந்தது. ஓரிரு தடவைகள், அவரே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “இன்று ZEE kannada வில். அந்த விழா நிகழ்ச்சிகள் ஒளி பரப்புவார்கள். பாருங்கள்” என்றார். வீட்டில் எல்லோரும் பார்த்தார்கள். அன்று பஙகளூர் வந்திருந்த சம்பந்திகளும் தான். அன்று என் பெருமையை சாட்சி பூதமாக ஸ்தாபிக்க முடிந்தது. ஆனால், முழுதுமாக எல்லாமே பாட்டுக்கள் தான். கௌரவிப்பு ஒவ்வொன்றும் இரண்டு நிமிடங்களுக்கு சுருக்கப்பட்டிருந்தது.. அதுவே 4 மணி நேரமாக நீண்டது. பின்னும் ஒரு நாள் வஸந்த் டிவியில் பாருங்கள். என்றார். அதுவும் பி.பி. ஸ்ரீனிவாஸ் நினைவு விழா தான் என்றாலும், பெங்களூர் நிகழ்ச்சி அல்ல. புதிது. வேறானது. அரங்கில் முதல் வரிசை இருக்கையில் ரவி இருந்தார். வஸந்த் டிவி வஸந்தும் இருந்தார். பின்னர் இருமுறை, அந்த விழாவிற்கு வந்து கௌரவிக்க முடியாத முதுமையிலோ நோய்வாய்ப்பட்டோ இருந்தவர்களை கர்நாடகாவின் ஏதோ ஒரு கிராமத்து மூலையில், பின்னர் ஹைதராபாது போய் தாம் சென்று கௌரவித்து வந்ததாகச் சொன்னார். இப்படி பல காரணங்களால் தாமதம்.
கடைசியில் ஒரு நாள் ரவி சுப்பிரமணியம் தன்னுடன் ஒரு உதவியாளரை அழைத்துக்கொண்டு வந்து தன் லேப் டாப்பில் பதிவாகியிருந்த பங்களூர் பாலஸ் மைதான விழாவின் 500க்கும் மேற்பட்ட படங்களைக் காட்டி, “ எது வேண்டுமோ சொல்லுங்கள். இப்பொதே ஒரு CD யில் பதிவு செய்து தருகிறேன்,” என்றார். 35 படங்களோ என்னவோ பதிவு செய்து கொடுத்தார்.
(அவற்றில் சில படங்கள் தான் மேலே உள்ளவை. விழா நிகழ்ச்சியின் படங்கள் சில இத்துடன், என் வார்த்தைகளை சாட்சியப்படுத்தும்).
. இனி கடைசியாக சொல்ல விரும்பியதைச் சொல்லி விடுகிறேன்.
இந்த விழா என்னைமிகவும் பாதித்த ஒன்று. தம் வாழ்வையும் மற்ற விஷயங்களையும் பொருத்த விஷயங்களில் மிக தீவிரமாக இருப்பவர்கள், ஒரு அநியாய எல்லைக்கு இட்டுச் செல்பவர்கள் கன்னடியர்கள் என்பது என் எண்ணம். தமிழர்களோ தம் சுய நலத்துக்காக தமிழ் நாட்டையே விற்றுக் கொள்முதல் செய்துவிடும் அரசியல் தலைவர்களைக் கொண்டது தமிழ் நாடு. இருந்தாலும் இதற்கு நேர் எதிராக தம் தமிழ்ப் பற்றைப் பற்றி வெற்று தகர டப்பா சத்தம் எழுப்பும் அரசியல் வாதிகள் நம்மவர்கள். இந்த நேர் எதிர்நிலை கொண்ட குணங்களைச் சொல்ல இது ஒரு சந்தர்ப்பம் எனக்கு.
ஸ்ரீனிவாஸ் தெலுங்கர். பின்னணிப் பாடகர். எல்லா மொழிகளிலும் பாடியவர்.இருப்பினும் தீவிர கன்னடப் பற்றுக்கொண்டவர்கள் அவரைக் கொண்டாடினர். இம்மாதிரி ஒரு பின்னணிப் பாடகர் என்ன, எவரையாவது தமிழ் நாடு கொண்டாடியுள்ளதா? என்று சற்று எண்ணிப் பார்த்தல் நல்லது. ஒரு பெரிய விழா ஒன்று கொண்டாடப்பட்டது. கருணாநிதியின் காலத்தில். பக்கத்து மாநில நடிகைகள், தமிழ் சினிமாவில் நடித்தவர்கள் எல்லாம் ஒரு பெரியகூட்டத்தில் உட்காரவைக்கப்பட்டனர். அவர்களில் ஒரே ஒருவரைத் தான் மு.கருணாநிதி “கன்னடத்துப் பைங்கிளி” யும் வந்திருக்கிறார்” என்றார். வேறு யாரையும் அவர் குறிப்பிடவில்லை. என் நினைவு சரியெனில் டி.எம். எஸ்ஸும் அங்கிருந்தார். அவருக்கு ஒரு வருத்தம். தான் அங்கிருந்தும், தான் பாட அழைக்கப் படவில்லை. மற்ற எத்தனையோ பேருக்கு வாய்ப்பு கொடுக்கப் பட்டது என்று அவருக்கு வருத்தம். டி.எம்.எஸ் மு.க. அழகிரிக்கு மிக பிடித்தமான பாடகர் என்றும். எப்போதும் டி.எம்.எஸ் பாட்டுக்களையே காரில் போகும் போதும் கேட்டுக்கொண்டிருப்பார் என்றும் செய்திகள் படித்திருக்கிறேன்.
நடத்தப்பட்ட விழாவைப் பற்றிய ஒரு சித்திரம் புகைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு கிடைத்திருக்கும். “ஸ்ரீனிவாஸுக்கு பெரிய அளவில் பாராட்டு நடத்த நினைத்திருந்தோம். ஆனால் அவர் மறைந்துவிட்ட பிறகு ஒரு சிறிய அளவிலாவது நடத்த தீர்மானித்துள்ளோம்,” என்று விழா ஏற்பாடு செய்த ரவி சொன்னார். இது சிறிய அளவு என்கிறார் அவர். ஒவ்வொரு முறை பாடப்போகும் பாட்டு பற்றியும் ஸ்ரீனிவாஸ் பற்றியும் நான் அங்கிருந்த இரண்டரை அல்லது மூன்று மணி நேரமும் அவர் எவ்வளவு பரவசத்துடன் லயிப்புடன் பேசினார் நான் உணர்ந்தேன்.
அங்கு வந்து ஸ்ரீனிவாஸுக்கு தம் நன்றிக்கடனைச் செலுத்த வந்த பின்னணி பாடக நக்ஷத்திரங்கள் எவரும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. ஸ்ரீனிவாஸுக்கு சரி. ஆனால் அவர் பெயரில் கௌரவிக்கப்பட்ட ஸ்ரீனிவாஸின் குமாரர்களுக்கும், மற்ற மொழிக்காரர்களுக்கும் (மொத்தம் பதினைந்து பேர்) அவ்வளவு பேருக்கும் ஒவ்வொருத்தரையும் பாதம் தொட்டு வணங்கி ஆளுக்கொன்று என பரிசுப் பொருள் கொடுத்து வணங்குவது என்பது கௌரவிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் அலல, இது ஸ்ரீனிவாஸுக்குச் செய்யும் மரியாதை என்று ஜேசுதாஸிலிருந்து சரோஜா தேவி வரை அத்தனை பேரும் செய்தது, ஒரு உயரிய கலைப் பண்பாடு, நாகரீகம் என்று எனக்குப் பட்டது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அவர்கள் மேடையில் இருந்திருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு நிகழ்வை தமிழ் நாட்டில் எதிர்பார்த்திருக்க முடியுமா?, இந்த பண்பு நம்மிடம் உள்ளதா? என்று நாம் சற்று நினைத்துப் பார்க்கலாம்.
எனக்கு பரிசு பெற்ற மற்றவர் யார் என்று தெரியாது. அங்கு சொல்லப்பட்ட பெயரும் செய்தியும் தவிர. அது போல என்னையும் அவர்களுக்குத் தெரியாது. ஏன்? (நம்மூரிலேயே தெரியாது என்னை. தெரிந்த வர்களும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளமாட்டார்கள் என்பது ஒரு கூடுதல் தகவல்) நான் இதையெல்லாம் சொல்லக் காரணம் நான் விளம்பரம் பெற்றேன் என்பதல்ல. ஸ்ரீனிவாஸ் பெயரைச் சொல்லி என்னையும் சேர்த்து ஒரு பதினைந்து பேர் அன்று ஒரு சில மணிநேர விளம்பரத்தை எங்களுக்குள் பகிர்ந்து கொண்டோம் அவ்வளவே.
இங்கு கவனிக்க வேண்டியது காக்கிநாடாவிலிருந்து வந்து தம் சினிமாவுக்கு தன் பங்களிப்பு செய்த ஒருவரை, சென்னையில் வாழும் ஒருவரை, கன்னட சினிமாக் காரர்கள் எப்படி கௌரவிக்கிறார்கள், மதித்து மரியாதை செய்கிறார்கள் எவ்வளவு உயர்வான இடத்தில் வைத்துள்ளார்கள் என்பதைச் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு விஷயத்திலும் விழா ஏற்பாட்டாளர்கள் எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொண்டார்கள். என்பதைக் கவனிக்கவேண்டும். ரூ 10,000 -க்கு ஒரு காசோலையைக் கொடுத்து விடுவது எவ்வளவு சுலபம்? ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஆயிரம் ரூபாய்க்காவது நாணயமாகக் கொடுக்கவேண்டும் என்று 12,000 ஆயிரமோ 15,000 ஆயிரமோ நாணயங்கள் சேர்த்து ஒரு பணமுடிப்பாகக் கொடுக்க வேண்டும் என்று என்ன அக்கறை? ஒவ்வொருவராக வீடு சென்று அழைப்பிதழ் கொடுத்து கால்தொட்டு வணங்கிச் செய்வது தான் பண்பு என்று ஒரு சினிமா டைரக்டருக்கு தோன்றியிருக்கிறது. நாம் சினிமா என்றால் விளம்பரம், ரசிகர், பாலாபிஷேகம், பணம் என்று தான் நமக்கு காட்சி தருகிறதே தவிர பண்பும் நாகரீகமும் கொண்டதாக நினைக்கிறோமோ.
என் பெயர் ஸ்ரீனிவாஸின் கௌரவிப்பின் பிரதிபலிப்பில் கவனிக்கப்பட்டது. இதில்பெருமைப் பட வேண்டியது இப்படி ஒரு சந்தர்ப்பம் நேரும்போது, என் பெயரை நினைத்துச் சொன்ன ஒருவர் இங்கிருந்திருக்கிறார் என்பது தான் எனக்கு மகிழ்ச்சி தந்த விஷயம். அதற்கும் மேல் எனக்கு இதில் சிறப்பு ஏதும் இல்லை.
என் கருத்துக்கள் கவனிக்கப்படுகின்றனவா, அதனால் சூழல் மாற்றம் பெற்றுள்ளதா, , தமிழ் கலைகளில், அறிவார்த்த சூழலில் மாற்றம் என் கருத்துக்களால் விளைந்துள்ளதா என்பது தான் என் அக்கறை. அது நிகழ இல்லை என்பது தெளிவு.
ஒரு எளிய உதாரணம். ஞானபீட பரிசு அகிலனுக்கும் ஜெயகாந்தனுக்கும் கிடைத்துள்ளது. சரி. அதன் விளைவுகள் என்ன? தமிழ் எழுத்துலகில்? அவர்கள் பணமும் விளம்பரமும் பெற்றார்கள். அகிலன் தான் கட்டிக்கொண்டிருந்த வீட்டின் கடனை அடைத்தார் என்பது அவர் சொல்லித் தெரிந்தது. ஒரு பரிசின் பாதிப்பைப் பெருமையைச் சொன்னேன். அவரவர்க்குள்ள நிறையோ குறையோ அப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறது
இதற்கு நேர் எதிராக, அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு கிடைத்த பிறகு, அந்தப் பரிசின் பாதிப்பைப் பார்க்கலாம். அவர் எது பற்றியும் என்ன சொல்கிறார் என்று இந்தியா முழுதும் எல்லா பத்திரிக்கைகளும் ஊடகங்களும் வாய்பிளந்து காத்திருக்கின்றன. அந்தக் கருத்துக்கள் பற்றிய நம் கருத்து வேறு விஷயம்.
கடைசியாக, இந்த கௌரவிப்பு பற்றி – நான் சொல்லித்தானே ஐயா உங்களுக்குத் தெரிந்தது? – நான் சொன்னது, கன்னடியர்கள் ஸ்ரீனிவாஸை இப்படியெல்லாம் பெருமைப்படுத்துகிறார்கள், நாம் என்ன செய்கிறோம், நம்மைப் பெருமைப் படுத்தியவர்களை, நாம் எப்படி கௌரவிக்கிறோம் என்று சிந்திக்கத் தூண்டத்தான் நான் இவ்வளவும் எழுதியது. ஆனால் கடைசியில் நான் என் கருத்தில் தோல்விதான் அடைந்துள்ளேன். என் பெருமையை நான் அடைந்த கௌரவத்தைச் சொல்லிக்கொண்டதாகத்தான் கதை முடிந்துள்ளது.
டி.எம்.ஏஸ் -ஐ தனக்குப் பெருமை சேர்க்க அழைத்து ஆயிரம் பேருடன் ஒருவராக நாற்காலியில் உட்கார வைத்து அவரை வருத்தத் துடன் “ எனக்குப் பாட ஒரு சான்ஸ் கொடுக்கலையே” என்று வீடு திரும்ப வைத்துள்ளது நாம். நம் குணம். அவருக்குள்ள பெருமை அவருக்கு. ஆனால், அவரைச் சிறுமைப் படுத்திய சிறுமை நமது தான்
ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். எது மிக முக்கியமோ அது மறந்து போகிறது.
ஏதோ எங்களால் முடிந்த சிறிய அளவிலாவது என்று ரவி சொன்னது தான் நீங்கள் பார்க்கும் சிறிய அளவு. ஸ்ரீனிவாஸ் உயிருடன் இருந்திருந்தால் அவரகள் திட்டமிட்ட பெரிய அளவு என்ன என்பது நம் கற்பனைக்கு விடப்படவேண்டியது.
இத்தனையும் ஸ்ரீனிவாஸின் ரசிகர்களால்,தனி மனிதர்களால், தனிமனிதர்களின் ஸ்தாபனங்களால் நடத்தப்பட்ட விழா. இதில் அரசின் தலையீடோ பண உதவியோ, அரசியல் கட்சிகளின், அரசியல் தலைவர்களின் ஆதரவோ, பிரசன்னமோ கொஞ்சம் கூட கிடையாது. அரசியல் வாதிகளின், அரசின், அதன் பகட்டின், டாம்பீகத்தின் வாடை நாம் அரங்கத்தின் உள்ளே நுழைவதற்கு முன்னேயே நம் மூக்கைத் துளைக்கத் தொடங்கிவிடும். அது அறவே இல்லாத ஒரு விழா. கன்னட சமூகத்தின் ரசனையின் வெளிப்பாடு இது முழுக்க முழுக்க.
- டௌரி தராத கௌரி கல்யாணம் ……16
- மருத்துவக் கட்டுரை மன உளைச்சல்
- நேர்முகத் தேர்வு
- நீங்காத நினைவுகள் 15
- பிரேதத்தை அலங்கரிப்பவள்
- ஜீவி கவிதைகள்
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 34
- புகழ் பெற்ற ஏழைகள் 21
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -38 என்னைப் பற்றிய பாடல் – 31 (Song of Myself)
- அயோத்தியின் பெருமை
- தாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 24
- தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.
- பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று
- கூடு
- பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!
- தொல்காப்பியம், ஆந்திர சப்த சிந்தாமணியில் – வினையடிகள்
- தூங்காத கண்ணொன்று……
- சாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக
- முக்கோணக் கிளிகள் [2]
- நாவற் பழம்
- திட்டமிட்டு ஒரு கொலை
- பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter]
- காவ்யா வெளியிட்டு விழா – திலகபாமா கவிதைகள் வெளியீட்டு விழா
- எங்கள் தோட்டக்காடு
நமஸ்காரங்கள் பல கோடி. நிகழ்ச்சிகள் படிக்கப் படிக்கப் புல்லரிக்க வைக்கின்றன. தாங்கள் இதைப் பற்றி எழுதவில்லை என்றால் இங்குத் தமிழ் நாட்டில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது ஸ்ரீனிவாஸுக்குச் செய்யும் மரியாதை என்று ஜேசுதாஸிலிருந்து சரோஜா தேவி வரை அத்தனை பேரும் செய்தது, ஒரு உயரிய கலைப் பண்பாடு, நாகரீகம் என்பது உண்மைதான். அந்த உண்மையான நாகரீகம் தமிழ்நாட்டு அரசியல் சாக்கடையில் அமிழ்த்தப்பட்டு விட்டது.
இக்கட்டுரையின் அடிநாதம் ‘பலரோடு எனக்கும் ஒன்று’ என்பதுதான். தன்னைத் தமிழ்நாட்டில் யாரும் கண்டு கொள்ளவில்லை; பாராட்டு விழா நடாத்தவில்லையென்ற ஆதங்கத்தை வெளிபபடுத்தவே இக்கட்டுரை.
அதற்கு உட்காரணமும் கட்டுரை தெரிவிக்கின்றது:
//என் கருத்துக்கள் கவனிக்கப்படுகின்றனவா, அதனால் சூழல் மாற்றம் பெற்றுள்ளதா, , தமிழ் கலைகளில், அறிவார்த்த சூழலில் மாற்றம் என் கருத்துக்களால் விளைந்துள்ளதா என்பது தான் என் அக்கறை. அது நிகழ இல்லை என்பது தெளிவு.//
முதலில் உங்கள் கருத்துக்கள் என்றால் இலக்கிய விமர்சன்ம், நூல் விமர்சனம் என்ற கோதாக்களைப் போட்டு நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள். அவை ஒருசாராரால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. உங்களால் ஒரு படைப்பை உருவாக்க முடியாது. காநாசு விமர்சனம் எழுதினார். ஆனால் படைப்பிலக்கியத்தையும் உருவாக்கினார். விமர்சனம் எல்லாரும் படிப்படுவதற்கன்று. நீங்கள் விமர்சனம் மட்டும்தான் எழுதுகிறீர்கள். ஆனால் அதுவும் தான் என்ற நர்சிசத்தால் பெர்வட்டாகி விடுகிறது.
இலக்கிய விமர்சனம் இலக்கியத்தோடு முடிந்திருந்தால் கவனிக்கப்பட்டு இருப்பீர்கள். மாறாக, தனிநபர் தாக்குதல்கள், திராவிட இயக்கத் தலைவர்களைக் கடுமையாகச்சாடுதல் இவற்றில் இறங்கிவிடுகிறீர்கள்; எந்தச்சாக்கு என்றில்லை. எதுவும் சரி உங்களுக்கு: மவுண்டு ரோடில் தோசைக்கடையைப்பற்றி விமர்சனம் எழுதினாலும், திராவிடத்தலைவர்களாலே உங்கள் அபிமான தோசைக்கடை மூடப்பட்டுவிட்டதாக அங்கலாய்ப்பீர்கள். இக்கட்டுரையிலும் அப்படி இருப்பதை படிப்பவர் உணர்வார்கள். பார்க்கவும் செய்யலாம். கருநாநிதியின் பெயரை எழுதியிருக்கிறீர்கள்.
அதே வேளையில் எவரைச்சாடுகிறிர்களோ அவர்களே உங்களைப் பாராட்ட மாட்டார்களா என்ற ஏக்கத்தையும் பார்க்க முடிகிறது. உங்களுக்கும் அவர்களுக்கும்தான் ஏழாப்பொருத்தம்தானே ? பின் ஏன் அவர்களை நினைத்துக்கொண்டே உங்கள் எழுத்துக்களை அழுக்காக்குகிறீர்கள்? Why are you paranoid about them? You can critcise; you can call their polices bad; but your aversion is beyond acceptable degree expected of a cultured man. Proportion is all: exceeding the proportion is diagnosed as madness. You are not sparing the occasion of this ceremony from your attack on them, sure.
அதோடு விட்டுவிட்டால் தாவலை!தமிழர்கள்; தமிழர் பண்பாடு; கேடு கெட்ட மக்கள் ஆதிகாலம்தொடர்ந்து என்று உங்கள் பார்வை நீள்கிறது. இஃது எவ்வளவு தூரம் தவறான அணுகுமுறை என்பதை உங்கள் அபிமான எழுத்தாளர் ஜெய்மோஹன் உங்களைப்பற்றி ‘வெ சாமிநாதன்’ என்ற கட்டுரையில் எழுதுகிறார்; போய்ப்படித்துப்பாருங்கள். உங்கள் அபிமான எழுத்தாளரே உங்கள் பார்வை குறைப்பார்வை என்று சொல்லும் போது நீங்கள் உங்களைப்பரீட்சித்து பார்ப்பதுதான் நல்லது. உங்களுக்கு வேண்டுமானால் அக்கட்டுரையிலிருந்து எடுத்துப்போடுகிறேன். திண்ணை அனைத்துவாசகர்களும் படிக்கட்டும்.
“Unexamined life is not worth living’ என்றார் சாக்கரடீசு. It is not too later for you to examine the values you are dearly holding onto.
உங்களுக்கு மனநிம்மதி தர எனது பணிவான ஆலோசனை என்னவென்றால், உங்கள் எழுத்துக்கள் ஒரு சாராருக்கு மட்டுமே இனிக்கும் என்பதை உணர்ந்து விடுவது நல்லது. அவர்கள் இருக்கிறார்கள் இங்கேயும். அவர்கள் பாராட்டுக்கள் போதும் என்று விட்டுவிடுங்கள்.
“Fit audience though few” என்றார் மில்டன். அவர்களுக்குத்தான் எழுதுகிறேன் என்றார். பிறரைப்பற்றிக் கவலையி8ல்லை.
இத்தகைய மனோதிடம் இல்லையென்றால் பொதுவெளியில் நுழைந்து ஏன் வருந்த வேண்டும்?
Harsh? But wounds cannot be cured w/o searching !
கட்டுரையின் நோக்கம் என்று வே சா அவர்களே இன்னொரு இணையத்தில் தெளிவு படுத்தி உள்ளார். குறைந்த பட்சம் அதை படித்து விட்டு பின்பு முடிவுக்கு வரலாமே…
எழுதிய பொதுவெளியில் வைத்தபின் அவரவரவர் தங்கள்தங்களுக்குத் தோன்றியபடியேதான் எடுத்துக்கொளவர். நான் அதைச்சொல்லவில்லை; இதைச்சொல்லவில்லை என்று விளக்கம் கொடுப்பது ஒரு பயனிமில்லை. சிந்திய நெல்லைப்பொறுக்கலாம். சிந்திய சொற்களைப்பொறுக்க முடியா.
கட்டுரை நோக்கம் ஒன்று வியாக்கியானம் பண்ணுவது வேறு என்றால் , யாரு சொல்லி திருத்துவது??? நெல்லும் புல்லும் உவமானம் எல்லாம் சரி , படிக்காமல் கறுதத்து போடுவேன் என்று அடம்புடிதால் ….
நோக்கத்தை சரியான வழியில் புலப்படுத்தவேண்டும். குரங்கு பிடிக்க பிள்ளையாராக முடியக்கூடாது. நோக்கத்தை நிறைவேற்றுகிறெனச் சொல்லி அப்பாவி தமிழ்ஜனங்களை ஒட்டு மொத்தமாக மோசமெனக்கூடாது. அரசியல் வாதியைத் திட்ட விரும்பினால் செய்யலாம். அதற்கு ஏன் தமிழ் மக்களையே திட்ட வேண்டும்?
புருஷன் மேலுள்ள கோபம் நியாயாக இருந்தாலும் அதைக்காட்ட பிள்ளையை போட்டா அடிப்பது?
பெரியவர் வெ.சா அய்யா அவர்களுக்கு கன்னடத்து கலைக் குடும்பம் கொடுத்த கெளரவம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.அய்யாவுக்கு தெரியாதது ஒன்றுமில்லை.தமிழன் பிறரை பாராட்ட மாட்டான், பாராட்டவும் விட மாட்டான்.இப்படி பல உயர்ந்த குணநலன்கள் உள்ளதால்தான் இன்னும் உருப்படாமல் இருக்கிறான்.தங்களைப்போல் குடத்திலிட்ட விளக்காக எத்தனையோ தமிழ் அறிஞர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.இவர்களை குன்றிலிட்ட விளக்காக உயர்த்திப் பிடிப்பதற்கு கன்னட,மலையாள,தெலுங்கு மக்களே வரவேண்டியுள்ளது.செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலோடு நடத்தப்பட்ட மாநாட்டிலேயும் முத்தமிழ் வேந்தர் மும்முடிச் சோழனை பார்ட்டு பார்ட்டாக பாராட்டி ஜன்னி வரும் அளவிற்கு குளிப்பாட்டி விட்டார்கள்.பதவியில் இருப்பவர்களை மட்டுமே பாராட்டும் பழக்கம் தொன்று தொட்டு வந்ததுதானே.மன்னனை பாடி பரிசு பெற்ற புலவர் கூட்டம் நம்ம மக்கள்தான்.
//ஸ்ரீனிவாஸ் தெலுங்கர். பின்னணிப் பாடகர். எல்லா மொழிகளிலும் பாடியவர்.இருப்பினும் தீவிர கன்னடப் பற்றுக்கொண்டவர்கள் அவரைக் கொண்டாடினர். இம்மாதிரி ஒரு பின்னணிப் பாடகர் என்ன, எவரையாவது தமிழ் நாடு கொண்டாடியுள்ளதா? //
எல்லா மொழிகளிலும் பாடியவர் – கன்னடத்திலும் பிரபலமானவர். மலையாளத்திலும்தான். எப்படி நாம் அவரைத் தமிழ்ப்பாடலகளால் மட்டுமே தெரியவந்தோமோ அப்படி அவர்களுக்கும் தங்கள்தங்கள் மொழிப்பாடல்களால் மட்டுமே அவர் தெரிய வந்தார். இப்படி இருக்கும் போது கன்னடியர் அவரைப்பாராட்டினாரென்றால் அவர் பாடிய கன்ன்டப்பாடல்களுக்கு மட்டுமே. அதைத்தாண்டியெதுமில்லை. அதையும் வெசாவே சொல்லிவிட்டார்: //தீவிரப்பற்று கொண்டவர்கள். அவரைக்கொண்டாடினர்//
தீவிரப்பற்று தேவையில்லை. அதனால்தான் இன்று பிரச்சினைகள். ஆந்திர மூன்றாக பிளவுபட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களும் நம்மைப்போல என்ற நினைப்பு தீவிரப்பற்று இருப்போருக்க்கு இருக்காது.
இப்படி தீவிரப்பற்று இருப்போரைப் புகழ்வது ஒரு மென்டல் பெர்வர்சந்தான்.
நமக்கு அது தேவையில்லை. திரைப்பட பாடகர்களுக்கு அடிக்கடி சென்னையில் விழாக்கள் நடக்கத்தான் செய்கின்றன. அவை இப்போது ரொம்ப ஃபேஷன். தொலைக்காட்சி ஊடகங்கள் செய்கின்றன. காரணம். ஸ்போன்சோர்ஷிப் நிறைய. ஸ்ரீனிவாஸ் போனபின்பு உங்கள் அபிமான கன்னடியர்கள் கொண்டாடினார்கள்; இருக்கும்போதே நீங்கள் வெறுக்கும் தமிழர்கள் கொண்டாடினார்கள். அவருக்குப் பொன்னாடை போர்த்தி அவர் கண்ணீர்மல்க வாங்கிய காட்சிகளை நான் விஜய் டிவியிலோ, சன் டிவியிலோ பார்த்திருக்கிறேன். அம்மேடையில் பிரபலங்கள் இருந்தார்கள்.
கருநாடகத்தோடு நமக்குப் பிர்ச்சினையென்றால், கன்னடியர்களை அடித்து நாம் விரட்டுவதில்லை. ஆனால் எப்போது எதுநடந்தாலும் சேலம் தர்மபுரி மாவட்டக்கூலித்தொழிலாளிகளை அடித்து ஓசூர் வரை விரட்டுவார்கள் என்பதே கன்னடியர்கள் – ஆஹோ ஓஹோ என்று புகழப்படும் ‘தீவிரப்பற்றுக்கு’ எடுத்துக்காட்டு.
அது நமக்கு வேண்டாம் சார். நாம் நாமாக இருப்போம். வெறி காட்டுமிராண்டித்தனம்.
நமக்கென்று ஒரு குணமுண்டு; அதுதான் வந்தாரை வாழவைப்பது. வந்தேறி மக்கள் அமைதியாகவும் செழிப்பாகவும் வாழ்கின்றார்கள் தமிழகத்தில். அவர்கள் கலாச்சாரத்தைப் பேணி. தெலுங்கைத்தாய்மொழியாகக்கொண்ட நாயுடிக்கள் அரசியல்வாதிகளாக, நிலச்சுவாந்தார்களாக, ராஜூக்கள் தொழிலதிபர்களாகி ஒரு மாவட்டத்தையே வலைத்துப்போட்டுவிட்டார்கள். சவுராட்டியர்கள் தங்கள் விழாவுக்கு மோடியையே அழைத்தார்கள் போனவருடம். அவர் வராத காரணத்தால் கருநாடக அமைச்சரைத்தான் அழைத்தார்கள். சைகார் பேட்டையிலும் மதுரை மீனாட்ச்சி கோயில் தெருக்களிலும் மார்வாடி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள். மலையாளிகளைப்பற்றிக்கேட்க வேண்டாம். என் அபிமான அமலா பால் இலலையா? ஏசுதாஸ் இல்லையா? இப்படி ஏராளம் ஏராளம்.ம் அடடே சென்னை எக்பிரஸு சூப்பர் ஹிட். இந்திப்படம்.
கன்னடியர்களைப்புகழ்ந்து தமிழர்களை இகல்வதிலும் ஒரு சுகம் இருக்கிறது வெசாவுக்கு. இப்படி தானும் தன் முன்னோர்களுக்கும் உப்பைத்தந்த மண்ணை ஒருவர் இகழும் செயலை நான் பார்த்ததல் அரிது.
தமிழ்நாட்டையும் தமிழ்மக்களையும் இவர் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை. That is because he saw all Tamilians through the prism of Dravidian politics. I too hate them but I don’t indulge in wholesale condemnation of Tamils.
மிக மிக மட்டற்ற மகிழ்ச்சி அய்யா வெ சா அவர்களே. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் என தொடரட்டும் உங்கள் வாழ்வு. தமிழகம் காழ்ப்புணர்ச்சியின் கருவறையாய் மாறிக் கொண்டிருக்கிறது என்பது ஐ ஐ எம் போன்றோர் புரிந்தால் நலம். வந்தனம் அய்யா வெ சா. வந்தனம்.
எழுத்துலக பிதாமகருக்கு,
வணக்கம்.
உங்களுக்கும் சுஜாதாவிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவரிடமும் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் ஒன்று இருக்கும். அதில் இவர் நல்ல எழுத்தாளர், நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறார், இவர் எழுத்துலகில் பிரகாசிக்கப் போகும் நட்சத்திரம் போன்ற வாசகங்கள் இருக்கும்.நீங்கள் இருவரும் அந்த முத்திரைகளை குத்துவீர்கள்.சுஜாதா குமுதத்திலும் நீங்கள் கணையாழியிலும் குத்துவீர்கள்.இந்த முத்திரை தன் மேல் விழாதா என்று முதுகு காண்பித்து நின்ற ஏராளமான தமிழ் எழுத்தாளர்களை எனக்கு தெரியும்.அவர்களில் சிலர் உங்கள் முத்திரைகளைப் பெற்று கொண்டு உங்களை மதிக்காமல் போய்விட்டனர் என்பதும் தெரியும்.
இலக்கிய சிந்தனையில் என் சிறுகதை ஒரு முறை தேர்வு செய்யப் பட்டிருந்தும் உங்களிடமிருந்தோ சுஜாத்தாவிடமிருந்தோ முத்திரை பெரும் பாக்கியம் என் கதைகளுக்கு இல்லை போலும்.அது ஒரு marketing strategy என்பது எனக்கு பின்னால்தான் தெரிந்தது. அதற்குள் காலச்சுவடு,உயிர்மை என்று வித விதமாக ரப்பர் ஸ்டாம்புகள் தயாராகத் தொடங்கி விட்டன.நல்லி சில்க்ஸ் விளம்பரம் பெற்றுக் கொண்டு காலாண்டு அரையாண்டிதழ் தொடங்குபவர் எல்லாம் இந்த ரப்பர் ஸ்டாம்ப்பை தூக்கத் தொடங்கியதும் மிக வருத்தமானது.எழுத்து என்பது வேறு எழுத்தில் முத்திரை பதித்த எழுத்தாளனாக ஆவது வேறு என்று புரிந்தது.இத்தனைக்கும் என் எழுத்துக்கள் கணையாழியில் வெளி வந்திருக்கிறது இரண்டு முறை தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டியில் பரிசு வாங்கி இருக்கின்றன.புதிய பார்வை -பாவை சந்திரனை ஆசிரியராக கொண்டு நடத்தப் பட்ட சமயம் ஒரே போட்டியில் என் குறுநாவல் முதல் பரிசு ஆறுதல் பரிசு இரண்டையும் பெற்று சென்றது.கல்கியில் அமரர் கல்கி சிறுகதை போட்டியில் முதல் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளை வென்றிருக்கிறேன். லா சா ரா ஒருவர் மட்டும் நான் யார் என்ன என்று பார்க்காமல் என் எழுத்தை பாராட்டி கல்கி இதழுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.விகடன் ஒரே பரிசு நாவல் போட்டியில் கடைசி வரையில் neck to neck என்பார்களே அது வரை வந்து முதல் பரிசை எட்டிப் பிடிக்க முடியாமல் போன எனது மறந்து போகுமா ஆசை முகம் என்ற நாவல் 32 வாரம் விகடனில் தொடராக வந்தது.எனக்கு முத்திரை விழ வேண்டும் என்ற ஏக்கம் இருந்ததில்லை.ஆனால் முத்திரை மேலே விழுவதற்காக இந்த எழுத்தாளர்கள் பம்மாத்து பண்ணும் போக்கு பிடிக்காமல் ஒதுங்கியிருந்தேன்.நான் மீண்டும் முழுவதுமாக என் தற்சமய வங்கிப் பணியை விருப்ப ஓய்வில் கடாசி விட்டு எழுத்துப் பணியில் பிரவேசிக்க உள்ளேன். என்னால் நிச்சயம் ஒரு நல்ல நிலையை எழுத்துலகில் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வளவும் ஏன் சொல்கிறேன் என்றால் நமது தமிழ் நாட்டில் எழுத்திருந்து சகலமும் அரசியல் மயமாகப் போய் விட்டது. விரும்பியோ விரும்பாமலோ நீங்களும் அதில் ஒரு அங்கமாகி இருந்திருக்கிறீர்கள். எனவேதான் எழுத்தை எழுத்து என்று பாராமல் அதன் பின்னணி, ஆள்பலம், அரசியல் பலம் பார்த்து பாராட்ட வேண்டும் என்பதை தமிழன் சங்க காலத்திலிருந்து ஒரு பாரம்பரியமாகக் கொண்டுள்ளான்.
இந்த கணம் வரை நான் வணங்கும் ஒரே தமிழ் எழுத்தாளன் திரு. அசோகா மித்திரன் அவர்கள்தான்.
அவருக்கும் கூட என்பது வயது கடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அன்புடன் என்றும்,
சத்தியப்பிரியன்.
பி.கு.இந்த இதழில் வெளி வந்துள்ள அசடு என்ற சிறுகதையை சாம்பவி என்ற பெயரில் எழுதியிருப்பவனும் நான் தான்.
This is posted apropos Saththiyappriayan’s mge above.
The below are my personal views only. I represent an average man in Thinnai forum. Please always mind this fact when you read me.
எழுத்தாளர்களின் மூவகை. 1 ஜனரஞ்சக சஞ்சிகைகளில் எழுதிப் பிரபலமானவர்கள். 2. இலக்கியப்பத்திரிக்கைகளில் – சிறுபத்திரிக்கைகளில் – எழுதிக்கொண்டேயிருப்போர் ஆனால் அவற்றைப்பற்றிப் படிப்பவர்களுக்கும் மட்டும் தெரியப்படுவோர் 3. இந்த இரண்டிலும் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் ஆகி இருப்பவகள். (இவர்கள் பிரபலமாகியும் இல்லாமலும் இருக்கலாம் ஜோதிர்லதா கிரிஜா இந்த மூன்றாம் வகையில் வருவார்.)
சத்தியப்பிரியன் இந்த மூன்றாம் வகையில் பிரபலமாகாதவர். அவ்வளவுதான்.
ஆனால், ஒரு இலக்கிய விமரசகரால் பிரபலமாக்கப்பட்ட எழுத்தாளர்களை நான் கண்டதில்லை. அரசியல்வாதிகளால் நிச்சயம்.
எடுத்துக்காட்டு வெ சா வோ ஜெயமோஹனோ நாஞ்சில் நாடனைப்பற்றி ரொமபத்தூக்கி வைத்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருப்பவர். சாஹித்ய அகாடமி அவரை இன்னும் தூக்கியது. கண்டிப்பாக இந்த இருவரால் பிரபலமாக்கப்படவில்லை.
அதே சமயம் சுஜாதா விமர்சனம் வெ சா போல எழுத மாட்டார். அவர் அங்கு இங்கு என்று ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளில் எழுத்தாளரைப்பற்றி ஒரு சொட்டு வைப்பார் அவ்வளவுதான். அது கண்டிப்பாக பிரபலத்துக்கு உதவும். Sujatha’s reach is amazingly wide. Hence, the effectiveness of his praise.
சத்தியப்பிரியன் வெ சா போன்ற விமர்சகர்கள் பார்வை கிடைக்குமா என்று எதிர்நோக்குவது பயனிலாச்செயல். மாறாக, தம்மைப்போன்ற சக எழுத்தாளர்களிடம் பிரபலாமாகிவிடுவது நல்லது. அஃதெப்படி பண்ணுவது?
அவர்கள் குழுக்கள் வைத்தால், அவர்களில் ஒருவருக்குப் பாராட்டு நடந்தால், அம்மேடையில் ஏறி, இப்படியாக பலபல இலக்கிய மேடைகளில் ஏறிவிடுவது, வலைதளம் வைத்துக்கொள்ளல் (ஒரு கம்யூட்டர் எஞசினியரிடம் 5 கொடுத்தால் அவர் செய்து தருவார்) எழுத்தைத்தாண்டி அரசியல் சமூஹ விசயங்களில் மூக்கை நுழைத்து குண்டக்க மண்டக்க என கருத்துக்களைச் சொல்வது; பெண் உரிமை, மார்கிசியம், இந்துதவா, தலித்தியம் என்று ஏதாவது பிறரைச்சீண்டிவிடும் கருத்து மேடைகளில் கலந்து கொள்வது. இதையேன் சொல்கிறேன் என்றால் ஒவ்வொன்றுக்கும் ஒரு தீவிரக்கும்பல் உண்டு. நீங்கள் அவர்கள் பக்கம்தான் எனத்தெரிந்தால் அவர்கள் உங்களை விளம்பரம் செய்வார்கள் பலபல வழிகளில்.
இப்படி தனக்குத்தானே திட்டம் போட்டு அதைத்திறம்படச்செய்து விட்டால், பிரபலபத்திரிக்கைகள் கேள்வி-பதில் எழுத அழைக்கும். பல இயக்கங்கள் திருநெல்வேலியில் சென்னையில் கோவையில் புதுவையில்பேச அழைக்கப்படுவீர்கள். திண்ணையில் அழைப்பிதழைச் ஸ்கேன் பண்ணிப்போடுவார்கள்.. வலைதள மூலமாக கிரங்கடிப்பட்ட இளம் கம்யூட்டர் கைஸ் வெளிநாட்டிலிருந்து அழைப்பர்.
பிரபலமாகி விட்ட பின எனக்குத் தெரியப்படுத்துங்கள் சார். நான் உங்கள் புதினத்தை வாங்கிப்படிக்கிறேன்.
The bottom line is: It is not literary criticism but your showing of faces at important places at appropriate occasions will make you popular. Gooddy goody luck.
கட்டுரையை விமர்சனம் பண்ணாமல் பின்னூட்டதிர்க்கு பிநூட்டம் போட்டு தாக்குவது கூட ஒரு சீப் பப்ளிசிட்டிதான் . தன் முதுகு முதலில் பார்ப்பது நலம்
Permit me to take advantage of the occasion something more about being popular.
பள்ளிக்கூடத்தில் இரண்டாவதாக வந்து கொண்டேயிருந்தால் பிரச்சினையே யில்லை. முதலாவதாக வந்தால்தான் பிர்ச்சினை. pressure to perform will be acutely felt and suffered. யாருக்காக? மற்றவர்களுக்காக. ஆசிரியர்களுக்காக? போன தடவை நன்றாக வந்த நீ இப்போது சொதப்பிட்டியேடா? பொம்பிளை டீச்சர் இந்தப்பழமொழி சொல்லியே கொடுமைப்படுத்துவாள்; வரவர மாமியா கழுதை போல போனாலும். அம்மா எங்க கூட போனாலும்: இவன் நல்லா படிப்பான். கிளாசிலே எப்பவுமே ஃபர்ஸ்ட் என்று சொல்லி சங்கடப்படுத்துவாள். அம்மாவுக்காக, அப்பாவுக்காக, அண்ணனுக்காக, ஆசிரியருக்காக, நண்பர்களுக்காக (அவனெல்லாம் நல்லா படிக்கிறவன் நம்ம கூடெல்லாம் பழகுவானா?) இப்படி பிறருக்காக.
இதனால் பாதிக்கப்படுவோரில் எழுத்தாளர்கள் அதிகம். அவர்களது கிரியேட்டிவிட்டி பவர் குறையும். நாயிபால் பிரபலமானபின் எழுதிய நாவல்களுக்காக அவருக்கு நோபல் பரிசு கொடுக்கவில்லை. அவரின் தொடக்க நாவல்களைக்குறிப்பாகச் சொல்லி நோபல் கமிட்டி பட்டயத்தை வழங்கியது. அந்த தொடக்க நாவல்களில் நம்மை அழுத்திய மனித நேயமும் மனிதர்கள் படும் துயரங்களும் அலாதியானவை. அத்தொடக்க நாவல்கள் நான் படிக்கும்போது நாயிபால் நோபல் பரிசு பெற்றவரன்று. ஆனால் இவன் மாபெரும் எழுத்தாளன் என்று என் இலக்கிய உள்ளுணர்வு எனக்குச் சொல்லியது. என்ன ஆச்சரியம்! நோபல் கமிட்டி அதையே சுட்டிக்காட்டிய போது!! ‘காக்கைச்சிற்கினிலே நந்த லாலா” எழுதிய போது சுப்பிரமணிய பாரதி ஒரு எளிய ஊரின் எளிய மனிதர் மட்டுமன்று; அனைவராலும் உதவாக்கரை என்று திட்டப்பட்டவர். “சுப்பையா எங்கே? ‘ அதோ நவநீதிகிருஸ்ண கோயில் படியில் உடகார்ந்து வெட்டியா கிறுக்கிக்கொண்டிருப்பான்! உருப்படியா ஒரு வேலைத் தேடி குடுமபத்தை நல்லா வச்சிருக்காமிலே!” வெட்டியா கிறுக்கிய கவிதைகள், அந்த கோயில் படித்துறையிலிருந்து, இன்று மாபெரும் கவிதைகள்.
சில எழுத்தாளர்களுக்கு இந்த மாய வலை தெரியும் எனவே பிரபலமான பிறகும் அது தம்மைப்பாதிக்காத படி ஒரு டிடாச்மெண்டை வளர்த்துக்கொள்ள முடியும். சாதாரமாணவர் தங்கள் தொடக்க கிரியேட்டியில் கிடைத்த புகழில் மீது ஏறிச்சவாரி செய்து வாழ்வார்.
எனவே ஒரு எழுத்தாளன் தான் பிரபலமாகவில்லையென்றால், அவன் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏன்? அவனுக்கு கிடைத்திருப்பது மிகவும் தேவையான் ஒன்றான சுதந்திரம். எவருக்காகவும் எழுத வேண்டியத்தேவையில்லை. பெற்றோர் திட்டிதிட்டி படிக்கவைக்கப்படும் குழந்தையைவிட தானே படிக்கும் குழந்தை அப்பாடத்தில் பெரியாளாவான்.
கிரியேட்டிவ் பவர் கேன் கோ அப் அன்ட் டவுன். ஆனால், இப்பிரபலங்களுக்கு அது டவுனாகத்தான் போகும்.
நான் எழுத்தாளன். என்னுள் எழுந்த எண்ணங்களின் அழகிய வடிவமே என் எழுத்துக்கள். அவை எனக்கு இனிமை தருகின்றன. பிறருக்கும் தரும். ஏனெனில் என்னால் உண்ரப்பட்ட இனிமை பொய்யன்று. எனக்கு இது போதும்.
என்று நினைத்து வாழ்பவனே உண்மையில் பிரபலம். பிரபலம் இஸ் நாட் பிர்பலம் சேக். இட் இஸ் ஃபார் யுவர் சேக். அதாவ்து உங்களைக்கெடுககாமல் எழுத்தின் உயர்வுக்கு வழிகோல Keep the literary critics out of door! Take care.
மறைந்த பி .பி. ஸ்ரீநிவாஸ் நினைவாக மிகச் சிறந்த வகையில் அவர் வயதுடையவர்கள் சிலரைக் கன்னட மக்கள் பாராட்டி பெருமை செய்த விதம் பற்றி அருமையாக விவரித்துள்ளீர்கள். அதில் தங்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது மகிழ்ச்சியைத் தருகிறது.
ஆனால் இதுபோல் கலைஞர்களுக்கு தமிழகத்தில் சிறப்பு செய்யப்படவில்லை என்றும் , இங்கு அரசியல் பிரமுகர்களுக்கே எல்லாம் செய்யப்படுகிறது என்ற பாணியில் இந்த கட்டுரையை முடித்துள்ள விதம் ஒருவித நெருடலை உண்டுபண்ணுகிறது.
இந்தியாவிலேயே வேற்று மாநில கலைஞர்களுக்கு சிறப்பு செய்ததோடு ஆட்சியின் அரியணையில்கூட அமரும் அளவுக்கு அவர்களுக்கு உரிமை தந்துள்ளது தமிழகம். நான் யாரையெல்லாம் குறிப்பிட முடியும் என்பது வெள்ளிடைமலை!
இவ்வளவு என்? இன்று தமிழக மக்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் எந்த மாநிலத்தவர்? வேற்றுமையா பார்க்கின்றனர் தமிழ் மக்கள்?
இன்னும் சொல்ல வேண்டுமெனில் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துள்ளவர்களில் வெளி மாநிலத்தவறே அதிகம். ஒரு காலத்தில் நாகேஸ்வர ராவ் , ரெங்க ராவ் , என். டி.ராம ராவ், பானுமதி, பத்மினி, சரோஜா தேவி, அஞ்சலிதேவி, சாவித்திரி ,கண்டசாலா, ஏ. எம். ராஜா , ஜிக்கி, சுசீலா என பட்டியல் நீண்டு கொண்டே போகும். எம். ஜி. ஆர் . ஜெயலலிதா பற்றி சொல்லத் தேவையில்லை. அவர்களை தமிழ் மக்கள் தெய்வமாகவும் , தெய்வத் தாயாகவும் ( அம்மா ) தரிசிக்கின்றனர்!
தமிழர்கள் வெளி மாநில கலைஞர்களை கௌரவிக்கவில்லை என்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும்!..டாக்டர் ஜி. ஜான்சன்.
//இவ்வளவு என்? இன்று தமிழக மக்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் எந்த மாநிலத்தவர்? வேற்றுமையா பார்க்கின்றனர் தமிழ் மக்கள்?
//
, அவரது தகப்பனார் ஆகியோர் பிறந்த இடம் தமிழகத்திலுள்ள கிருஷ்ணகிரி அருகிலுள்ள நாச்சி குப்பம் . அங்கிருந்து எழுபது மைல் தூரத்திலுள்ள பெங்களூருக்கு பிழைக்கப்போன குடும்பம் தான் ரஜினியின் குடும்பம் .
இப்படிதான் வெளி மாநிலம் என்று ஒரு நொண்டி சாக்கு சொல்லிக்கொண்டு குண்டு சட்டியில் குதிரை ஒட்டுகின்றான் தமிலன்
நான் கேள்விப்பட்டவரை இரசனிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். மராட்டியர். பெல்காம்தான் பிறந்த ஊர். பெல்காம் மராட்டியமக்கள் அதிகம் வாழுமூர் எனவே மஹாராஸ்டிராவோடு இணய வேண்டுமென்பது அவர்தம் நெடுநாள் போராட்டம். இப்போது அது கருநாடகத்தில் உள்ள ஊர்.
அங்கிருந்த ஏழைமக்களில் ஒருவர்தான் சிவாஜி ராவின் தந்தை. பெங்களூருக்கு பிழைக்கவந்த குடும்பம். பேருந்து நடத்துனராக பதவி கிடைத்தது. பின்னர் ரெஸ்ட் இஸ் ஹிஸ்டரி.
40 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தாலும் அவருக்குத் தமிழ் எழுத வாசிக்க வராது. மேலும் தமிழர்தம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாண்டியன் போன்றோர் எப்படி ஏற்கவில்லையோ அப்படி அவரும்தான் என்பது அவரின் கொள்கைகளில் இருந்து தெரியவரும். Unlike MGR, Rajni feels alienated. Unable to attach himself to Tamil society. Hopefully his children will be different.
எனவேதான் அரசியலுக்கு வரவில்லை. வந்தால் ராமதாசு சுட்டிக்காட்டி ஏளனம் செய்வாரல்லவா?
அன்பின் திரு வெ.சா. ஐயாவிற்கு,
மனம் நிறைந்த வாழ்த்துகள். மகிழ்ச்சியான செய்தி.
அன்புடன்
பவள சங்கரி
பதவியில் இருப்பவர்களை மட்டும் தான் தமிழ் நாட்டில் பாராட்டும் வழக்கம் உண்டு. அதாவது பரஸ்பர நன்மை இருக்கும் வரையில் தான் நீங்கள் கவனிக்கப்படுவீர்கள்.அதே சமயம் இலக்கியப் படைப்புகளும் உங்கள் பேர் சொல்லும் வகையில் இருக்க வேண்டும். வெறும் விமர்சகராக இருப்பவர்கள் கீழ்மட்டமக்களிடம் சென்று சேருவது சற்று கடினமே. -கவிஞர் இராய செல்லப்பா சென்னை.
கடினம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இலக்கிய விமர்சனம் என்பது ஒரு கலையென்பர். அதை எழுதுவோர் சமூஹத்தில் படித்த மக்களிடையே பெருத்த மரியாதையை தங்கள் நுண்மான் நுழைபுலத்தால் பெற்றவராயிருக்க வேண்டும். இலக்கிய விமர்சன்ம் பூஜ்வாக்களுக்குத்தான். எனவே படித்த மக்கள் என்றேன். அவர்களும்கூட Books about books படிப்பது வேலையத்த வேலை என்றுதான் நினைக்கின்றனர்.
மற்றெல்லாரும் இலக்கிய விமர்சனத்தை ஏறேடுத்துப்பார்ப்பதேயில்லை. எனவே இலக்கியவிமர்சனத்தில் எல்லைகள் மிக குறுகியவை. I don’t care what Ve Saa or Ka Naa Su thinks about a book I want to read. No one can come between me and the book. I can think for myself. Keep off.
இலக்கிய விமர்சகர்கள் ஆரவார வரவேற்பை எதிர்ப்பார்க்க முடியாது. பெரியவர் வெ சாமிநாதனுக்கு கிட்டத்தட்ட 80 ஆகிறது. இவ்வளவு ஆண்டுகளாக எழுதிக்கொண்டுதான் இருக்கிறார். மக்களுக்குத்தான் தெரியவில்லை. குற்றம் எழுதும் துறையில். மக்களிடம் இல்லை. தன்னைப் பாராட்டவில்லையே என்று வருந்துவ்து பொருந்தாது இங்கே. எனக்குக்கூட திண்ணை, தமிழ் ஹிந்து. காம் படிக்கும்போதுதான் வெ சா என்றொருவர் எழுதுகிறார் என்றே தெரிய வந்தது. சாரி சார்.
ஏதாவது சினிமாவுக்கு வசனம் எழுதிவிடுங்கள். அது நன்றாக ஓடிவிட்டால் பிரபலமாகிவிடுவீர்கள். பின்னென்ன? மேடையில் பாராட்டு மழைதான்.
//இந்தியாவிலேயே வேற்று மாநில கலைஞர்களுக்கு சிறப்பு செய்ததோடு ஆட்சியின் அரியணையில்கூட அமரும் அளவுக்கு அவர்களுக்கு உரிமை தந்துள்ளது தமிழகம். நான் யாரையெல்லாம் குறிப்பிட முடியும் என்பது வெள்ளிடைமலை.//
டாக்டர்.ஜான்சன் சொல்வது உண்மைதான்.தமிழன் செய்யும் முட்டாள்தனத்தில் பெருமிதப்பட என்ன இருக்கிறது?.பிற மாநிலத்தவர்கள் கலைஞர்களை கலைஞர்களாக மட்டுமே பார்க்கிறார்கள்.அவர்களுக்குரிய கௌரவத்தை வஞ்சனையின்றி கொடுக்கிறார்கள்.அதற்குமேல் தூக்கி வைத்து ஆடி, இதய தெய்வத்தையும்,இதயக்கனி யையும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்ப்பதில்லை.செருப்பை காலில் போட்டுப் பார்ப்பதுதான் அதற்குரிய அழகு.அதை பிற மாநில மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள்.
அப்பாவித் தமிழன் மட்டும் செருப்பை தலையில் தூக்கி வைத்து ஆடுவதில் ஆனந்தப்படுகிறான்.பிழைக்க வந்த கூத்தாடிக்கூட்டம் கோடம்பாக்க கொல்லைப்புறம் வழியாக கோட்டையில் கோலோச்சுவதற்க்கு யார் காரணம்? அப்பாவித்தமிழன் தானே!
இதில் பெருமிதப்படுவதில் கற்றவர்,கல்லாதவர் யாருக்கும் வெட்கமில்லை?
குஷ்புவுக்கு கோயிலும், கட் அவுட்டிற்கு பாலும் ஊற்றுகின்ற தமிழன் இருக்கும்வரை அரிதாரங்கள் அவதாரமாகி பின்பு ஆட்சி அதிகார மையமாவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
தமிழர்கள் கரும் பலகையில் கற்றுக்கொண்டதை விட வெள்ளித் திரையில் அள்ளிக்கொண்டதே அதிகம்.ஆகவேதான் கனவுத் தொழிற்சாலைகள் கோடிகளை வாரிக்குவிக்கின்றன.கனவுலக நாயகர்களின் ஆட்சியில் டாஸ்மாக் போதையும் கோடிகளை சுருட்டுகிறது. திரை போதை, மற்றும் மது போதை இரண்டை விடாதவரை தமிழனுக்கு வாழ்வும் இல்லை! வளமும் இல்லை! இழிவு மட்டுமே அன்றும் இன்றும் என்றும் நிரந்தரம்.
//திரை போதை, மற்றும் மது போதை //
திரை போதை, மற்றும் மது போதை மற்றும் அரைகுறையாக கற்றுக்கொண்டு, தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற பிநூட்டமிடும் போதை என்று கூறுங்கள்..
ஸ்ரீமான் வெ.சா அவர்களுக்கு வாழ்த்துக்கள். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு இத்யாதி கதைகளை வாசித்து மகிழ்ந்ததுண்டு. ஆனால் இப்போது இணைய தளங்களில் இவருடைய கதைகள் இலக்கியமல்ல என வாசிக்க நேர்ந்தது. தமிழ் இலக்கியம் பற்றிய ஆழ்ந்த பரிச்சயம் சிறியேனுக்கு இல்லை.
பின்னும் தமிழகத்தைச் சார்ந்த ஒரு இலக்கிய விமர்சகர் அண்டை மாகாணமான கர்நாடகத்தில் கௌரவிக்கக்ப்பட்டுள்ளது ஹிந்துஸ்தானத்தின் சஹோதரத்துவ மனப்பான்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. நம்மிடையே காவிரிப் பங்கீடு பாஷை சம்பந்தமான ப்ரச்சினைகள்….. இவைகள் இருந்த போதிலும் கூட இவ்வாறு கர்நாடக சஹோதரர்கள் தமிழகத்து அன்பர் ஒருவரை பாராட்டுவது பெருமைக்குறியது.
தமிழகத்து இசை மற்றும் கலைத்துறையில் மாற்று மாகாண மக்களைப் பாராட்டுதல் என்பதும் நடந்து வரும் விஷயமே.
வருஷா வருஷம் சினிமாக்காரர்கள் மாற்று மாகாண சினிமாக்காரர்களுக்கு விருதுகள் அளித்து வருகின்றனரே.
பாஷை மதம் போன்ற குறுகிய எல்லைகளை மீறிய பாந்தவ்யத்தை கலைகள் அளிக்கின்றன என்றால் மிகையாகாது.
ஸ்ரீமான் ஷேக் சின்னமௌலானா சாஹேப் அவர்களுக்கு உஸ்தாத் பிஸ்மில்லாகான் சாஹேப் அவர்களுடன் இருந்த பாந்தவ்யம் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீமான் இளையராஜா அவர்களை ச்லாகிக்கும் ஸ்ரீமான் ஹரிப்ரஸாத் சௌரசியா. த்வீபாந்தரங்களைத் தாண்டி ஹிந்துஸ்தானத்துக்குப் பெருமை சேர்த்த ஜெனாப் ஏ.ஆர்.ரஹ்மான்.
திருக்குறள் சம்ஸ்க்ருத பாஷையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழக மக்களும் மாற்று மாகாணக் கலைஞர்களைப் பாராட்டுகிறார்கள் என்பது பகிரப்பட வேண்டிய விஷயம்.
ஹிந்துஸ்தானம் முழுதும் பொதுவிலே மக்கள் பாஷை மற்றும் மதம் இவற்றைக் கடந்து அடுத்த மனுஷ்யனை மதிப்பவர்களே…..இவர்களிடையே எண்ணிறந்த வேறுபாடுகளும் இருப்பினும்.
அந்த வேறுபாடுகள் என்பதன் தலை மீது ஏறி நிற்கின்றனவே ஹிந்துஸ்தான மக்களிடையே காணப்படும் ஒற்றுமை.
ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்தோசிதா ஹமாரா (கவிஞர் அல்லாமா இக்பால்)
புவனமுழுதிலும் சிறந்தது என் தாய்த்திருநாடாம் ஹிந்துஸ்தானம்.