குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 25

This entry is part 4 of 15 in the series 1 செப்டம்பர் 2013

ஆணி அடித்தது போல் சில நொடிகளுக்கு அப்படியே நின்றுவிட்டாலும், தயா திரும்பித்தான் பார்த்தாள். அவளுடைய ஓரகத்தி சாந்திதான் நின்றுகொண்டிருந்தாள். அச்சத்திடையேயும் தயாவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ‘இவள் பாம்பா, பழுதையா என்று தெரியாது. இருந்தாலும் அவரிடமோ அல்லது மாமியாரிடமோ காட்டிக்கொடுக்கிற அளவுக்கு மோசமானவளாக இருக்க மாட்டாள் என்றே தோன்றுகிறது.’ – தயா சட்டென்று வெளியே வந்தாள். முகத்தில் அதற்குள் வேர்வை பொடித்து விட்டிருந்தது.

“சும்மாதான்! சாவி அதிலேயே சொருகி இருந்தது. உள்ளே என்ன இருக்கு, எல்லாம் அடுக்கி வெச்சிருக்கானு பாத்தேன். வேற ஒண்ணுமில்லே.”

“உன்னோ¡ட கொஞ்சம் பேசணும். கிணத்தடிக்குப் போய்ப் பேசலாம், வா. அத்தை தூங்கிண்டுதான் இருக்கா. அதனால பயப்படாம வா!” என்று சாந்தி சொன்னதும், தயாவின் முகத்தில் நிம்மதி தோன்றியது.

கிணற்றடிக்குப் போய் இருவரும் நின்றார்கள்.

“தயா! உனக்கு என்ன பிரச்சனை? சொல்லலாம்னா சொல்லு. என்னால முடிஞ்சா  உதவி பண்றேன் அப்புறம் இன்னொரு விஷயம். எங்க வீட்டுக்காரர் கிட்ட ஜாக்கிரதையா யிரு- உன் வீட்டுக்க்காரர் கிட்ட நான் ஜாக்கிரதையா யிருந்திண்டிருக்கிற மாதிரி!”

‘அட கஷ்டமே! இது வேறயா?’ என்றெண்ணிய தயா திகைத்து அதிர்ந்தாள்.

“என்னடா, இவ இப்படி அப்பட்டமாப் பேசறாளேன்னு நினைச்சுக்காதே, தயா. நீ இப்பதானே இந்த வீட்டுக்குள்ள அடி எடுத்து வெச்சிருக்கே? அதனால அவரும் கவனமா யிருப்பார். அதுக்கு அப்புறமா வாலாட்டுவார். அதனால நீ ஜாக்கிரதையா யிருந்துக்கோ.. ..” என்ற சாந்தியின் கண்களில் கண்ணீர் ததும்பிக்கொண்டிருந்தது.
தொடர்ந்து, “முடிஞ்சா நாம ரெண்டு பேருமே இங்கேருந்து தப்பிச்சுப் போயிடலாம். அது கஷ்டம்தான். ஆனாலும் முயற்சி பண்ணணும்.. ஒரு தரம் நான் ஓடிப் போனேன். போலீஸ்ல சொல்லிக் கண்டு பிடிச்சுக் கூட்டிண்டு வந்துட்டா.. அண்ணனும் தம்பியும் கெட்ட விஷயங்கள்லே ஒரே அச்சு,” என்றாள் சாந்தி.

“நேத்து சாயந்தரம்  நீ  கோவிலுக்குத்தானே போயிருந்தே?”

“ஆமா, தயா. ஆனா உன்னை எங்கேயும் வெளியே அனுப்பக் கூடாதுன்னு உங்க வீட்டுக்காரன் உத்தரவு.”

“தெரியும். கோவிலுக்குப் போற வழியிலே தபால் பெட்டி இருக்கா, சாந்தி?”

“இருக்கே.  ஆனா, அம்மா முழிச்சுக்கிறதுக்குள்ள முடிஞ்சா எழுதிக் குடு. நான் போற வழியிலெ போஸ்ட் பண்ணிட்றேன்.”

“எனக்குத் தெரிஞ்ச ஆ·பீஸ்காராளுக்குத்தான்.”

“யாருக்கு, என்ன, ஏதுன்னு நான் கேட்டேனா?”

அதிகம் படிக்காத அவளிடம் வெளிப்பட்ட பண்பாடு தயாவை அயர்த்தியது. உள்பக்கம் தாழிட முடியாத தன் அறையில் உட்கார்ந்து தயா கடிதத்தை எழுதலானாள். மாமியார் எழுந்துவிட்டால் ஜாடை செய்வதற்காகச் சாந்தி கதவுக்குப் பக்கத்தில் நின்றாள். தயா அவசர, அவசரமாகக் கடிதத்தை எழுதி முடித்த பின் சாந்தியிடம் கொடுத்தாள்.

“லெட்டரை எங்கே மறைச்சு வெச்சுப்பே, சாந்தி?”

“என்னோட பூக்கொடலையில அடியிலே எப்பவுமே ஒரு பேப்பர் இருக்கும். அதிலே ஓட்டை இருக்கிறதால, பூக்கள் சிந்தாம இருக்கிறதுக்காக. அந்தப் பேப்பருக்கு அடியில இதை வெச்சுக்கறேன். பூக் கொடலை என் ரூம் அலமாரியிலதான் இருக்கு. யாரும் எடுக்க மாட்டா. பயப்படாதே.”

“ரொம்ப தேங்க்ஸ், சாந்தி!”

“அதெல்லாம் சொல்லாதே. இது கூடச் செய்ய மாட்டேனா?”

கடிதத்துடன் சாந்தி தன்னறைக்குள் சென்று மறைந்தாள். அன்று மாலை கோவிலிலிருந்து திரும்பி வந்ததும் கடிதத்தைத் தபால் பெட்டியில் போட்டுவிட்டதாக அவளிடம் சாந்தி தெரிவித்தாள்.

சங்கரன் இன்னும் விடுப்பில்தான் இருக்கக்கூடும் என்பதால் மட்டுமின்றி,  அவனது வீட்டு முகவரிக்கு அவள் எழுதினாலும், கடிதம் அவனிடம் கொடுக்கப்படுமோ, இல்லாவிட்டால் மறைக்கப் படுமோ என்கிற ஐயத்தால், அவள் ரமாவுக்கு எழுதினாள்.

. . . . . .     தயாவின் கடிதத்தைப் படித்த ரமாவுக்குக் கண்கள் கலங்கிவிட்டன.

‘அன்புள்ள ரமா!

‘நான் சவுக்கியம்’ என்று இந்தக் கடிதத்தைத் தொடங்க முடியாத நிலையில் இருக்கிறேன். என் துன்பங்களை உன்னிடம் சொல்லுவதால் உன்னையும் வருத்துவேன் என்றாலும், யாருடனாவது அவற்றைப் பங்கு போட்டுக்கொள்ளாவிட்டால் எனக்குப் பயித்தியமே பிடித்துவிடும் என்று தோன்றுகிறது.

ரமா! நரகம், நரகம் என்கிறார்களே, அதைப் பற்றி உனக்குத் தெரியுமா? அது எனக்குத் தெரிந்துவிட்டது. அது நான் வாழ்ந்து கொண்டிருக்கிற இடம்தான். ராட்சசன் என்று கதைகளில் படித்திருக்கிறோமே, அப்படி ஓர் இனம் தனியாக இல்லை. மனிதர்களிலேயே நிறைய அரக்கர்கள் இருக்கிறார்கள். எனக்குத் தாலி கட்டியவன் ஓர் உதாரணம். அவன், இவன் என்று மரியாதைக் குறைவாக எழுதுகிறாளே என்று பார்க்கிறாயா? என்ன செய்ய? மனத்தில் இல்லாத மரியாதை எழுத்தில் எப்படி வரும்?

இன்னொரு விஷயம் சொல்லட்டுமா? அப்படியே அதிர்ந்து போய்விடுவாய். சங்கரை இவன்தான் ஆள்வைத்து அடித்துப் போட்டிருக்கிறான். சங்கரையும் என்னையும் சேர்த்துப் பார்க்கில் பார்த்திருக்கிறான். மறு நாள் அவர் பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த போது இவன் அனுப்பிய அடியாள் அவரை அடித்துப் போட்டுவிட்டு பைக்கில் ஓடிவிட்டான். எப்பேர்பட்ட அசுரன் இவன், பார்த்தாயா? நான் என் அப்பா-அம்மா தவிர வேறு யாருக்கும் கடிதம் எழுதக் கூடாது என்பது இவனது உத்தரவு.  அவர்களுக்கு எழுதுகிற கடிதத்தையும் அவனிடம் கொடுத்துவிட வேண்டுமாம். அவன் அதைப் படித்துவிட்டுத்தான் தபாலில் சேர்ப்பானாம். எனக்கு ஏதேனும் கடிதம் வந்தாலும் பிரிக்காமல் வைத்திருக்க வேண்டுமாம். கண்காணிக்கச் சொல்லி என் மாமியாருக்கு உத்தரவு போட்டிருக்கிறான்.

எப்போதும் குடியில் மிதக்கிறான். இன்னும் என்னென்ன கெட்ட சகவாசமெல்லாம் வைத்திருக்கிறானோ! தினமும் அடி, உதை, ஆபாச வசவுகள். ‘எதிலும்’ சிறிதளவு கண்ணியமும் இல்லாதவன். புரிந்து கொள்ளுவாய் என்று நினைக்கிறேன். சங்கரிடம் இதைக் காட்டு. கல்யாணத்தை என் நண்பர்கள் யாராவது தடுத்து விடுவார்களோ என்பதால்தான் இரவோடிரவாக என்னையும் எங்கள் குடும்பத்தாரையும் இவன் ‘கடத்திக்கொண்டு’ போய்விட்டான். சங்கரிடம் காட்டிய பிறகு, இதை சாம்பவிக்கும் என் அம்மா, அப்பாவுக்கும் காட்டு. இது அவர்களுக்குத் தெரிவதால் என்ன லாபம் என்றெல்லாம் நான் நல்ல பெண் வேஷம் போடத் தயாராக இல்லை. சாம்பவி விஷயத்திலாவது என் பெற்றோர்கள் அனுசரணையாக நடக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களிடம் இதைக் காட்டச் சொல்லுகிறேன். இன்லண்ட் லெட்டரில் இதற்கு மேல் எழுத முடியவில்லை. என் ஓரகத்தி – நல்லவள்- சாந்தி என்று பெயர் – இதைத் தபாலில் சேர்த்து உதவினாள். பதில் எழுதவேண்டாம்.

உன் துரதிருஷ்ட சிநேகிதி,

தயா.’

அலுவலகம் விட்டதும், ரமா சங்கரனின் வீடு நோக்கிப் புறப்பட்டாள்.

……   அன்றிரவு முழுவதும் ராதிகாவுக்குச் சரியான உறக்கமில்லை. தன் கல்லூரிக்குத் தொலைபேசி யழைப்புச் செய்து சிந்தியா தன்னை அவளது வீட்டுக்கு உடனே வரச் சொன்னது எதற்காக எனும் கேள்விக்கு அவளால் எந்த ஊகமும் செய்ய முடியவில்லை.  ‘எதற்காக இருக்கும்? ஒருவேளை அப்பாவே அவள் என்னைக் கூப்பிட்டுப் பேசிச் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று எனக்குப் புத்திமதி சொல்லச் சொல்லி யிருப்பாரோ?  … அதெப்படி? என்னுடைய கோபம் புரிந்த பிறகுமா!  அவள் என்னை நேரில் சந்தித்து அது பற்றிப் பேசினால் என் கோபம் இன்னுமல்லவோ அதிகமாகும்? … ஒன்றுமே ஊகிக்க முடியவில்லயே! .. நாளை மாலை வரையில் என்னால் தாக்குப் பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை. அதனால்தான் காலையில் வரட்டுமா என்று கேட்டேன்.  காலையில் எழுந்ததும் சீக்கிரமே கிளம்பிப் போக வேண்டியதுதான்…’

ராகேஷுடனான புது உறவு ஏற்பட்டதிலிருந்து தன் அப்பா பற்றிய கசப்பை அவள் சற்றே ஓரங்கட்டி யிருந்தது உண்மைதானெனினும், அவரை எக்காரணங் கொண்டும் மன்னிக்க அவள் தயாராக இல்லை.  அவரது தவற்றின் இமாலயத் தன்மையை அவள் குறைத்து மதிப்பிடவும் தயாராக இல்லை!  சில சமயங்களில் அந்தச் சிந்தியாவைச் சந்தித்து நாக்கைப் பிடுங்கிக்கொள்ளுகிறார்ப் போல் நறுக்கென்று நாலு கேள்விகள் கேட்க வேண்டும் போன்ற ஆத்திரம் அவளுள் மூண்டதுண்டு.  இப்போது சிந்தியா தன்னை எதன் பொருட்டு அழைக்கிறாள் என்பது தெரியாத போதிலும், அது வெறும் அற்பக் காரணத்துக்காகவே கூட இருப்பினும், அந்தச் சாக்கில், தன் அப்பாவை வளைத்துப் போட்டு அவர் தன் அம்மாவுக்குத் துரோகம் செய்யும்படியான நிலையை ஏற்படுத்தியுள்ள அவளை வங்கு வாங்கென்று வாங்கிவிட்டே திரும்ப வேண்டும் என்று அவள் கறுவிக்கொண்டாள்.

‘டிக்கெட் விற்பனை பற்றிய விஷயம் என்றால், உடனே வா என்றும், முடியாவிட்டால் மறு நாளாவது அவசியம் வா என்றும் ஏன் சொன்னாள்? டிக்கெட் பற்றியது என்றால் அதை ஃபோனிலேயே சொல்லி யிருந்திருக்கலாமே? …. நாளைக்கு நேரில் பார்க்கும் போது தெரிந்துவிட்டுப் போகிறது! அதற்கு ஏன் நான் இப்போது என் மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டுமாம்? – ராகேஷ் பற்றி நினைப்பதை விட்டு? உம்?  ’ – ராதிகா சிரித்துக் கொண்டாள்.

ராகேஷ்!
‘எவ்வளவு கம்பீரமும் அழகும் பொருந்தியவர்!  எனக்கேற்ற ஜோடிதான். தெருப் பிச்சைக்காரனுக்குக் கூடப் பத்து ரூபாய்க்குக் குறையாமல் தர்மம் செய்பவர்!  மனத்தில் எவ்வளவு இரக்க சுபாவம் இருந்தால் அப்படி ஒரு தாராளம் வரும்!  உண்மையில் நான் கொடுத்து வைத்தவள்தான்! பணம் இருக்கலாம்.  ஆனால், மனம் இருக்க வேண்டுமே! அவர் கைகள்தான்  சில சமயம் சும்மா இருக்க மாட்டேன் என்கின்றன. எதைக் கொடுத்தாலும் இடித்தபடியே கொடுக்கிறார். தொட்டுத் தொட்டுப் பேச முயல்கிறார்.  போகட்டும். விடு.  இந்த ஆண்பிள்ளைகளே அப்படித்தான்….’  – இரவெல்லாம் உறக்கமும் விழிப்புமாய் மாறி மாறிக் கழித்துவிட்டு ராதிகா காலை ஆறு மணிக்கு எழுந்துகொண்டாள்.   அன்று சீக்கிரமே கல்லூரிக்குப் போக வேண்டும் என்று சொல்லி, காலைச் சிற்றுண்டியை மட்டும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிய மகளைத் தனலட்சுமி கவலையுடன் பார்த்தாள்.  ‘தினமும் மாலையில் தாமதமாக வீடு திரும்புகிறாள்.  கேட்டால் கேம்ஸ் என்கிறாள். இப்போது சீக்கிரம் கிளம்பிப் போகிறாள். கல்லூரியில் ஏதோ ஸ்பெஷல் க்ளாஸ் என்கிறாள். கொஞ்ச நாளாய் இவள் முகம் பிரகாசமாய் இருக்கிறது… அதற்கு ஒரு காரணம்தான் இருக்க முடியும்!… ஆனால், என் மகள் அசடா என்ன! எவனிடமும் ஏமாற மாட்டாள். இருந்தாலும் இன்று சாயுங்காலம் வீட்டுக்கு வந்ததும் கண்டிப்பாய்க் கேட்டு விட வேண்டும். பெற்றவர்களும் ஒரேயடியாய் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது.  …’
“என்னம்மா, இவ்வளவு சீக்கிரமாக் கெளம்புறே?” என்ற தீனதயாளன் மகளைக் கூர்ந்து பார்த்தார்.

இப்போதெல்லாம் அவர் ராதிகாவை நேரடியாகவோ ஆழமாகவோ கண்களில் சிரிப்புடன் நோக்குவதில்லை.  ராதிகாவும் தான்.  எனினும் இன்று அவளும் அவரைக் கூர்ந்து நோக்க, அவரது தலை தாழ்ந்தது.

“ஸ்பெஷல் க்ளாஸ்ப்பா!”

“நான் வேணா கார்ல ட்ராப் பண்ணட்டுமா?”

“வேணாம்ப்பா. அப்பால, மறுபடியும் ஒரு தரம் நீங்க இங்க வரணும் சாப்பிடுறதுக்காக.  நானே போய்க்கிறேன்.  நீங்க அனுமதிச்சா நான் இன்னைக்கு பைக்ல போறேன்.”

அதில் மட்டும் தீனதயாளன் மிகவும் கண்டிப்பாக இருப்பவர்.  எனினும் மகளைத் திருப்திப் படுத்தும் நோக்கத்தில், “சரி. எடுத்துட்டுப் போ.  ஆனா இன்னைக்கு மட்டுந்தான்.  ஜாக்கிரதையா ஓட்டு!”  என்றார்.

முன்பு போலென்றால், ஆரவாரத்துடன் அவருக்கு “தேங்க்ஸ்” சொல்லியிருப்பாள்.  அவரது கையை எடுத்து  உதடுகளில் வருடியிருப்பாள்.  அல்லது பறக்கும் முத்தம் கொடுத்திருப்பாள்.  இப்போது இவற்றில் எதையுமே செய்யாமல், உணர்ச்சியற்ற குரலில் வெறும் “தேங்க்ஸ்” மட்டுமே அவள் சொன்னது தனலட்சுமிக்கு வியப்பளித்த்து. ராதிகா கொஞ்ச நாள்களாகவே கணவருடன் கலகலப்பாய்ப் பழகாதது ஏற்கெனவே அவள் மனத்தில் உறைத்துக்கொண்டுதான் இருந்த்து.

ஒரு முறை, ‘ஏங்க! ராதிகா இப்பல்லாம் முன்ன மாதிரி உங்களோட கலகலன்னு சிரிச்சுப் பேசிப் பழகுறதே இல்லியே! ஒரு மாதிரி உம்னு இல்லே இருக்குது!’ என்று அவள் அவரைக் கேட்டபோது,   ‘அதுக்குப் படிப்புச் சுமை
எக்கச்சக்கமால்லே இருக்குது! எத்தினி புஸ்தகங்க! எப்ப பாரு, மன்த்லி டெஸ்டுக்குப் படிக்க வேண்டியதா இருக்குதில்ல? வேலைச் சுமை அதிகமானாலே மொகத்துல ஒரு சீரியஸ்நெஸ் வந்து குந்திக்கிடுமில்லே?’ என்று அவரும் பதில் விளக்கம் அளித்திருந்தார்.

‘உங்களுக்கும் சேத்துத்தான் சொல்லிக்கிறீங்க போல!  நீங்களுந்தான் இப்பல்லாம் கலகலன்னு இருக்கிறதே இல்லே!’  என்று அவள் தொடர்ந்த போது,  ‘ஆமா, தனலட்சுமி!  எனக்கும் சுமை அதிகமா யிருக்கிறதுனாலதான் அவளை என்னால புரிஞ்சுக்க முடியுது.  ஆஃபீஸ்ல கூட இப்பல்லாம் நான் சிரிச்சுப் பேசுறதே இல்லேன்னு ஸ்டாஃபெல்லாம் பேசிக்கிறாங்களாம்!  முதுகை முறிக்கிற வேலைப் பளுவில சிரிக்கிறதாவது, சிரிக்கிறது!” என்று அவர் பதில் சொல்லியிருந்தார்.

வாசல் வரை போய் மகளை வழியனுப்பிய பின்னர், தனலட்சுமி உள்ளே போனாள். தீனதயாளனும் வாசற்படியில் நின்று பார்த்த பிறகே உள்ளே போனார்.

… வழியில் போக்குவரத்துக் கைகாட்டிக்காக ராதிகா தன் பைக்கை நிறுத்த வேண்டியதாயிற்று.  அப்போது அவளது பைக்கில் இடிக்கிற மாதிரி இன்னொரு பைக் வந்து நிற்க, ராதிகா எரிச்சலுடன் திரும்பினாள்.
“ஹாய்!” என்ற ராகேஷ் தன் காலால் அவளது காலை நெருட முயல, அவள் உடனே தன் காலை நகர்த்திக்கொண்டு, பொய்யான முறைப்புடனும், மகிழ்ச்சியுடனும், “என்ன, ராகேஷ், இந்தப் பக்கம்?” என்று வினவினாள்.

“ராயப்பேட்டையில ஒரு வேலை. அதான் போயிக்கிட்டிருக்கேன்”

“அட! நானும் ராயப்பேட்டைக்குத்தான் போய்க்கிட்டிருக்கேன்.”

“என்ன விஷயமான்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

ராதிகாவுக்குச் சட்டென்று வாயில் பொய் வரவில்லை. தவிர, சமூக சேவகி என்கிற முறையில் சிந்தியாவின் பெயரை மட்டும் சொல்லுவதால் என்ன ஆகிவிடப் போகிறது என்றெண்ணி, “சோஷியல் வொர்க்கர் சிந்தியாவை பார்க்கிறதுக்காகப் போய்க்கிட்டிருக்கேன்,” என்றாள்.

“யூ மீன் – சிந்தியா தீனதயாளன்?”

“ஆமா. அவங்களை உங்களுக்குத் தெரியுமா?”

“ரொம்ப, ரொம்ப நல்லாத் தெரியும்.  ராதிகா! நீ அவங்களைச் சந்திக்கக் கூடாது.  … நான் உன் கூடக் கொஞ்சம் பேசணும்.  … சிக்னல் விழுந்திடிச்சு.  ஹோட்டல் அஜந்தாவுக்குப் போய்ப் பேசலாம்…” என்று அவன் அவசரமாய்ச் சொல்ல, இருவரும் புறப்பட்டார்கள்.

பைக்கில் பயணித்த நேரத்தில் எதுவும் பேசிக்கொள்ள முடியவில்லை. ‘சிந்தியாவை நான் ஏன் சந்திக்கக் கூடாது?  ஏன்? சிந்தியாவை ஏற்கெனவே ராகேஷுக்குத் தெரியும் என்றால் எந்த முறையில்? …’  – அவள் குழம்பியபடியே அவனுக்குப் பக்கவாட்டில்  தன் பைக்கில் பயணித்தாள்.
தொடரும்

jothigirija@live.com

Series Navigationமுக்கோணக் கிளிகள் [3]சுற்றுச்சூழல் அதிர்ச்சி – “ சாயத்திரை “ சுப்ரபாரதிமணியனின் நாவல்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *