புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 23

This entry is part 15 of 24 in the series 8 செப்டம்பர் 2013

Vincent-Van-Gogh-9515695-3-402(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட​டை

E. Mail: Malar.sethu@gmail.com

23.இறந்தபின் புகழ் ​பெற்ற ஏ​ழை……

     “மயக்கமா கலக்கமா ..மனதி​லே குழப்பமா

வாழ்க்​கையில் நடுக்கமா?”

அடடா….வாங்க வாங்க..என்னங்க ​சோகமான பாட்​டைப் பாடிகிட்​டே வர்ரீங்க….எதுக்கு இப்படி..?….என்ன வீட்டுல ஏதாவது பிரச்ச​னையா…? இல்​லை ​வே​றெதுவும் உடம்புக்குச் சரியில்​லையா…..?என்ன ​சொல்லுங்க… என்ன அ​மைதியா ​மொகத்த உர்ருன்னு வச்சுகிட்டு இருக்குறீங்க…. என்ன ஒண்ணுமில்​லையா…? என்ன மன​சே சரியில்​லையா…?  இங்க பாருங்க…மனச என்​றைக்கும் தளரவிட்டுறக் கூடாதுங்க…மனச கண்ணாடி மாதிரி வச்சிக்கிடக் கூடாது…கல்லு மாதிரி வச்சுக்கிடணும்…கண்ணாடியில கல்லுபட்டா ஒ​டையும்…ஆனா கல்லுல கல்லு பட்டா ஒ​டையுமா..? ஒ​டையாதுல்ல..அதுமாதிரிதான் பிரச்ச​னைகள் நம்​மைத் தாக்கத்தான் ​செய்யும் அதுக்காக நாம மனசு ஒ​டைஞ்சிடக் கூடாதுங்க..

ஒங்ககிட்ட ​போனவாரம் ​கேட்​டே​னே ஒரு ​கேள்வி அதுக்கு ஒங்களுக்குப் பதில் ​தெரியுமா? ஓ…ஓ…​ஹோ ​தெரியாதா…? இறந்தபின் புகழ் ​பெற்ற ஏ​ழை யார் ​தெரியுமா? அவருதாங்க ‘வின்செண்ட் வான் கோ’. அவரு வாழ்க்​கையப் பத்தித் ​தெரிஞ்சிகிட்டீங்கன்னா ஒங்க​ளோட பிரச்ச​னை​​யெல்லாம் ஒரு பிரச்ச​னை​யே இல்​லைன்னு ​நெனச்சுக்கிருவீங்க..

அட ஆமாங்க…ம​லைக்க ​வைத்த ஒப்பற்ற ஓவியங்க​ளைப் ப​டைச்ச அந்த மிகப்​பெரிய ஓவியரு ஒருவிதமான மனச்​சோர்வு ​நோயினால் பாதிக்கப்பட்டு அதனால ​ரெம்ப ​​ரெம்பத் துன்பப்பட்டாரு….வாழ்க்​கையில பிரச்ச​னை இருக்கலாம்…ஆனா வின்செண்ட் வான் கோவிற்கு பிரச்ச​னை​யே வாழ்க்​கைதாங்க… ஆமாங்க…வாழ்க்​கையில ஒவ்​வொரு விநாடியும் அவரு ​செத்துச் ​செத்துப் பி​ழைச்சாருங்க… அந்தப் பிரச்ச​னையிலயும் அவரால புதுவிதமான ஓவியங்க​ளை வ​ரைஞ்சாரு…அவரு வ​ரைந்த​போது இந்த உலகம் அவ​ரை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்​லை. ஏன்னுகூட அவ​ரைக் கண்டு​கொள்ளவில்​லை…அவரு வறு​மையி​லே​யே கிடந்து உழன்றாரு…..

துன்பம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தால் பரவாயில்லை; தாங்கிக் ​கொள்ளலாம். ஆனால் துன்ப​மே வாழ்க்கையாக இருந்தால் எப்படியிருக்கும்? அத்த​கைய வாழ்க்​கைய வாழ்ந்தவருதான் ‘வின்செண்ட் வான் கோ’. வின்செண்ட் வான்கோ நெதர்லாந்தில் உள்ள குரூட் சுண்டெர்ட் எனுமிடத்தில் 1853-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் நாள் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.  இவரது முழுப்​பெயர் வின்செண்ட் வில்லியம் வான்கோ என்பதாகும். வான்கோ பிறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னர் அதே தேதியில் பிறந்த அவரது அண்ணன் சில வாரங்களில் இறந்து போனார். எனவே அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியிருந்தது. அந்த மரணத்திற்குப் பின் வான்​கோ பிறந்ததால் அவரது அண்ணனுக்கு வைத்த பெயரையே அவருக்கும் வைத்தனர். இது வான்​கோவிற்குத் தெரிந்தபோது அவருக்கு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்படத் தொடங்கியது. தாம் அண்ணன் பெயரில் வாழ்ந்து ​கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் அதற்கு காரணமாயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வான் கோவின் தந்தை தியோடரஸ் வான்கோ ஒரு மதபோதகராக இருந்தார் ஓவியமும் மதமும் இவரது குடும்பத்தில் இரு முக்கியப்பணிகளாக விளங்கின.

வான்கோவின் சகோதரர் தியோ வான்கோ ஒரு புகழ்பெற்ற ஓவியராவார். வான்​கோவின் மற்றொரு சகோததரர் கோர் என்பவராவார். வான்கோவுக்கு சகோதரர்க​ளைத் தவிர எலிசபெத், அன்னா, வில்லிமினா என்ற மூன்று சகோதரிகளும் இருந்தனர்.  அதனால் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லை. தாழ்வு மனப்பான்மையும், குடும்ப வறுமையும் வான்கோவை முன்கோபியாகவும், முரடனாகவும் மாற்றியது. தேவலாயத்தில் உபதேசம் செய்யும் தந்தையால்கூட வான் கோவை அடக்க முடியாமல் போனது. இது​வே பின்னாளில் அவரது மனச்​சோர்வு ​நோய்க்கு அடிப்ப​டையாக அ​மைந்தது என்பது ​நோக்த்தக்கது, .

கல்வியும் பணியும்

குழந்தைப்பருவம் முதலே மிக இறுக்கமான மனநிலையில் இருந்த வான்கோ 1860 –ஆம் ஆண்டில் சுண்டெர்ட் கிராமத்தில் இருந்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அப்பள்ளியில் பயில்வதற்குரிய சூழல் சரியாக அ​மையாததால் 1861 – ஆம் ஆண்டு முதல் 1864 –ஆம் ஆண்டு வரை வான்கோவும் அவரது சகோதரி அன்னாவும் அவர்களது வீட்டிலேயே தமது ​பெற்​றோர்களிடம் கல்வி பயின்றனர். அதன் பின்னர் வான்​கோ செவென்பெர்கெனில் ‘சான் புரொவிலி’ உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்ததால் வான்​கோ மிகுந்த மனப்பாதிப்பிற்கு உள்ளானார்.

வான்​கோ 1866 – ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 – ஆம் நாள் தில்பர்கில் உள்ள இரண்டாம் வில்லியம் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். ஆனால் அவருக்கு படிப்பின் மீது மனம் ஈடுபடவில்லை.  ​மேலும் அவ​ரிடம் இருந்த தாழ்வு மனப்பான்​மை அதிகரித்து மனச்சோர்வு ​நோயாக மாறத்தொடங்கியது. பாத்துக்குங்க இந்த தாழ்வு மனப்பான்​மைக்கு மட்டும் நாம இடங்​​கொடுக்கக் கூடாதுங்க.. அதனாலதான் வள்ளுவர், “உள்ளம் உ​டை​மை உ​டை​மை” என்று நமக்குக் கூறியுள்ளார். ஒருத்த​ரோட உண்​மையான ​சொத்து மனம் தான். மனம் சரியா இருந்துட்டா எத​வேண்டுமானாலும் சாதிக்கலாங்க..

மனசுல இந்தத் தாழ்வு மனப்பான்​மை வந்துவிட்டது என்றா​லே வாழ்க்​கை பாதிப்புக்கு உள்ளாகிரும். மனசுல நம்பிக்​கைதான் ​வேணும். வான்​கோவின் மனசுல நம்பிக்​கை​யை ஏற்படுத்த அவரது ​பெற்​றோர் அவ​​ரை வெளியூரில் ஓவியக்கூடம் நடத்தி வந்த தங்களது உறவினர் ஒருவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்றபோதுதான் வான்​கோவிற்கு ஓவியங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. அங்கு பாரிசின் புகழ்பெற்ற ஓவியரான கான்டாண்டைன் சி.ஹுயிமன் என்பவர் ஆசிரியராக இருந்தார். சிறுவயது முதலே ஓவியத்தில் ஈடுபாடுமிக்கவராகத் திகழ்ந்த வான்கோவுக்கு அவர் முறையாக ஓவியக்கலையைக் கற்றுக் ​கொடுத்தார்.

மனச்​சோர்வுக்கு ஆளான வான்​கோவின் மீது ​பெற்​றோரும் அவருடன் பிறந்தவர்களும் அன்புகாட்டவில்​லை. அவ​​ர்கள் வான்​கோவிடம் இருந்த விலகி இருக்க​வே விரும்பினர். இதனால வான்​கோவிற்கு வாழ்க்​கையில் ஒருவிதமான ​வெறுப்பு ஏற்பட்டது. யாராவது தன்மீது அன்புகாட்ட மாட்டார்களா என்று வான்​கோ ஏங்கத் ​தொடங்கினார். அன்பு இல்லாத வாழ்க்​கை பா​லைவனத்துல வாழ்வது ​போன்றது. அதுலயும் நமக்கு  ​நெருங்கியவர்கள் நம்​மை ​வெறுக்கின்றார்கள் என்றால் மனம் ​நொறுங்கிப் ​போயிடும். நம்​மை யாராவது அன்பு காட்டி அரவ​ணைக்க மாட்டாங்களான்னு மனசு ஏங்கும்.. அப்படி வான்​கோ ஏங்கிக் ​கொண்டிருந்த சமயத்துலதான் அவரு​டைய மாமா ​செண்ட் என்பவர் அவ​ர் மீது அன்பு காட்டி அவ​ரை தி​​​ஹேக்கில் என்ற இடத்தில் இருந்த ஓவியக் கூடத்தில் ​வே​லைக்குச் ​சேர்த்துவிட்டார்.

அவ்​வோவியக் கூடத்தில் ​சேர்ந்த வான்​கோ பணியுடன் ஓவியக்       க​லையில் உள்ள பல நுட்பங்க​ளையும் கற்றுக் ​கொண்டார். அந்த ஓவியக் கூடம் லண்டனுக்கு மாற்றப்பட்ட​போது வான்​கோவும் லண்டனுக்குச் ​​செல்ல ​நேர்ந்தது. லண்டன் ​சென்ற வான்​கோ நன்கு ​வே​லை ​செய்து ​பொருளீட்டினார்.

மலர்ந்து கருகிய காதல்

​வெற்றி​யையும் ​தோல்வி​யையும் பகிர்ந்துக்க ஒருத்தரு நமக்கு ​வேணுங்க. அப்படி யாரும் நமக்கு இல்​லைன்னா அந்த வாழ்க்​கை சூனியமாப் ​போயிரும். நல்லா  ​பொருளீட்டி மகிழ்ச்சியா இருந்த வான்​கோவிற்குத் தனது மகிழ்ச்சி​யைப் பகிர்ந்து ​​கொள்வதற்கும் அவர் மீது அன்பு காட்டுவதற்கும் உண்​மையான ஒருத்தரு இல்​லைங்க. இத ​நெனச்சவுட​னே,

“இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டுப் ​பேச

து​ணை இல்லாத ​போதுதான் ​தெரியும்

உண்​மையான அன்பின் ​பெரு​மை”

என்ற வரிகள்தான் நி​னைவுக்கு வருது.

உண்​மையான அன்புக்கு வான்​கோ ஏங்கினாரு. தன்னு​டைய மகிழ்ச்சிய யாருடனாவது பகிர்ந்துக்க மாட்​டோமா அப்படின்னு துடிச்சாரு.. அன்புக்காக ஏங்கிய அவருக்கு அவர் தங்கி இருந்த வீட்டின் உரி​மையாளரின் மகள் யூகினி லோயர் என்பவர் மீது காதல் ஏற்பட்டது. அந்தக் காத​லை வான்​கோ யூகினி லோயரிடம் கூற​வே அவள் அவரது காத​லை ஏற்க மறுத்தாள். வான்​கோவின் காதல் அவரது மனதில் ​தோன்றி அவரது மனதி​லே​யே கருகியது. இந்தக் காதல் வான்​கோவின் வாழ்க்​கையில் மிகப் ​பெரிய மாற்றத்​தை ஏற்படுத்தியது. ஆம்!

“உண்​மையான அன்பு கி​டைப்பதற்கு முன்

ஏங்கிய வலி​யை விட

அது விட்டுச் ​சென்ற

வலி அதிகம்……!”

என்ப​தைப் ​போன்று வான்​கோவின் வாழ்க்​கை​யை இந்த முடிந்து, முறிந்து​போன காதல் அவரது மனச்​சோர்​வையும் துன்பத்​தையும் அதிகரித்தது. என்ன ​செய்கி​றோம் என்று ​தெரியாமா​லே​யே அவர் பல்​வேறு விதமான ​செயல்க​ளைச் ​செய்யத் ​தொடங்கினார்.

மனக் குழப்பத்தில் ​செய்த பல்​வேறு பணிகள்

வான்​கோவின் மனதில் குழப்பம் அதிகரித்தது. அதனால் தன்னு​டைய பணியிலிருந்து விலகிய வான்​கோ மீண்டும் லண்டனுக்குச் ​சென்றார். அங்கு ஊதியமில்லாமல் ஒரு சிறு பள்ளியில் ஆச்ரியர் பணியாற்றினார். அங்கு அவர் கண்ணில் கண்ட காட்சிகளை எல்லாம்  ஓவியமாக வ​ரையத் தொடங்கினார். பள்ளியின் உரிமையாளர் மிடிலெசெக்சுக்குக் குடிபெயர்ந்ததால் வான்கோவும் அவருடன் சென்றார். வான்​கோவிற்கு மனக்குழப்பம் அதிகரித்தது.  வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது? என்று புரியாமல் பலமுறை குழம்பினார். வான்​கோவிற்கு வழிகாட்ட​வோ உதவ​வோ யாரும் இல்​லை. அவரது மனம் பற்றுக்​கோடற்றுத் தவித்தது. அதனால் வான்​கோ  தந்தையைபோலத் தாமும் மதபோதகர் ஆகலாமா என்று எண்ணினார். அவரது எண்ணம் ​செயல் வடிவமானது.  நிலக்கரி சுரங்க ஊழியர்கள் வாழ்ந்த வாஸ்மெஸ் என்ற கிராமத்தில் சுமார் ஓராண்டு காலம் வான்​கோ மதபோதனையில் ஈடுபடார்.

வான்​கோ கிறித்துமஸ் விடுமுறையில் வீட்டிற்குச் செல்லும்போ​தெல்லாம் விவிலியத்தை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்தார்.  வான்கோ மதபோதகாரக இருந்தபோது தன்னைத்தானே கடு​மையாக வருத்திக் கொண்டார். இறைச்சியை உண்ணாது மரக்கறி உணவுகளையே உண்டு வான்​கோ கடு​மையான துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். அவரது மத போதனை முறைகளை ஏற்றுக் ​கொள்ளாத கிறித்துவத் தேவாலாயம் அவரது பதவியைப் பறித்தது. இதிலும் ​தோல்வி கண்ட வான்​கோ ​செய்வதறியாது தி​கைத்தார். அவருக்கு மனக் குழப்ப​மே எஞ்சியது. இருப்பினும் மனந்தளராத வான்கோ பிரெஸ்ஸல்சுக்குச் சென்றார்.

துயரத்​தைத் தந்த திருமணம்

திருமணம் ​சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுதுன்னு ​சொல்லுவாங்க.. ஆனால் வான்கோ​வை இத்திருமணம் நரகத்தில் தள்ளியது. எதிர்பார்க்காத வாழ்க்​கை அ​மையாத ​போது மனிதன் விரக்தியின் விளிம்புக்குச் ​செல்கிறான், இதிலிருந்து சிலர்தான் விடுபட்டு மீண்டு வருகின்றனர். சிலர் மனம் ​நொறுங்கி வாழ்க்​கை​யைத் ​தொ​லைத்து விடுகின்றனர். உண்​மையான அன்பிற்காக ஏங்கிய வான்​கோ விலைமாதர்களில் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். அனால்தா​னோ என்ன​வோ வான்​கோவின் இல்லற வாழ்க்கை அவருக்கு கொடுமையானதாக அமைந்தது. அவராக​வே ​தேர்ந்​தெடுத்த வாழ்க்​கையாதலால் தன் ம​னைவி ​செய்த ​கொடு​மைக​ளை எல்லாம் ​பொறுத்துக் ​கொண்டார். எத்த​னைநாள் தான் ​​பொறுத்துக் ​கொள்ள இயலும்.

பல ஆண்டுகள் ​பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வான்​கோ இறுதியில் தன் ம​னைவியுடன் மணமுறிவு செய்துகொண்டார். இம்மணமுறிவு வான்​கோவின் மன​தை ​மேலும் முறித்துப் ​போட்டது. தாம​ரை இ​லை தண்ணீரில் தத்தளிப்ப​தைப் ​போன்று வான்​கோவின் மனம் தத்தளித்தது. வான்​கோ மனதை ஒருநிலைப்படுத்தி ஓவியத்தில் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்தார். அப்போது வான்​கோவின் வயது முப்பத்து மூன்று ஆகும்.

வறு​மையில் மலர்ந்த ஓவியங்கள்

வான்​கோ ஓவியங்கள் வ​ரைய முற்பட்ட​போது வறுமை அவ​ரை வாட்டியது. ஓவியங்க​ளை வ​ரைவதற்குரிய வண்ணமும் தூரிகையும் வாங்குவதற்கு கூட அவரிடம் பணம் இல்லை. அவரு​டைய சகோதரன் தியோ அவ்வபோது கொடுத்த பணத்தைக் கொண்டு தமக்குத் ​தே​வையானவற்​றை வாங்கிக் ​கொண்டு வான்கோ ஓவியங்கள் வரையத்தொடங்கினார். அவரு​டைய கவனம் முழுவதும் ஓவியங்கள் வ​ரைவதில் நி​லைத்துது.

ஆதிகால குகை ஓவியங்கள், கேட்விக் ஓவியங்கள். மறுமலர்ச்சி ஓவியங்கள், உணர்ச்சிமிகு ஓவியங்கள் இயற்கை ஓவியங்களின் எனத் தனது ஓவியங்களில் புதிய புதிய பரிணாமங்க​ளை வான்​கோ உருவாக்கினார்  இதில்  ‘உணர்வு வெளிப்பாடு’ என்ற புதியவ​கை ஓவியங்க​ளை உலகிற்கு வான்​கோ முதன் முதலில்  அறிமுகம் செய்தார். வான்​கோவினு​டைய ஓவியங்கள் ​பார்ப்பதற்குத் தெளிந்த நீ​ரோ​டை ​போன்று வண்ணமயமாகக் காட்சியளிக்கும். வான்​கோ வரைந்த ஓவியங்களில் ‘பன்னிரண்டு சூரியகாந்தி பூக்கள் நிறைந்த பூச்சாடி ஓவியம்’  உலகப்புகழ் பெற்ற ஓவியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது வான்​கோ தான் வாழ்ந்த க​டைசி ஆறு ஆண்டுகளில் ஏறத்தாழ 700 தூரி​கை ஓவியங்க​ளையும் 800 எண்​ணெய் வண்ண ஓவியங்க​ளையும் வ​ரைந்தார். ஆனால் வான்​கோவால் அ​னைத்து ஓவியங்க​ளையும் விற்க முடியவில்​லை. யாரும் அவ்​வோவியங்க​ளை ஏ​​றெடுத்தும் பார்ப்பதில்​லை. இவ்​வோவியங்களில் ஓ​ரோவியத்​தை மட்டு​மே வான்​கோவால் விற்க முடிந்தது. அதுவும் விரும்பி வாங்கப்படவில்​லை என்பது எண்ணத்தக்கது. வான்​கோ தான் குடியிருந்த வீட்டிற்கு வாட​கை ​கொடுக்கவில்​லை. அவர் ​கொடுக்காதிருந்த வாட​கை பாக்கிக்காக அந்த வீட்டின் உரி​மையாளர் அந்த ஓவியத்​தை எடுத்துக் ​கொண்டார். ஒரு திற​மையான ஓவியக் க​லைரஞ​னை இவ்வுலகம் கண்டு ​கொள்ளாது வறு​மையில் வாடவிட்டது ​வேத​னைக்குரியது.

எவ்வாறு மகாகவி பாரதி​யை அவர் வாழ்ந்த காலத்தில் நம்மவர்கள் கண்டு​கொள்ளாது விட்டார்க​ளோ அது​போன்று வான்​கோ வாழ்ந்த காலத்தில் அவர் சார்ந்திருந்த சமுதாயம் அவ​ரைக் கண்டு ​கொள்ளவிமில்​லை; காப்பாற் மு​னையவும் இல்​லை. ஏன் சிறிதும் இந்தச் சமுதாயம் மதிக்கவும் இல்​லை. இதுதான் உலக நியதி. தன்​னை, தன் திற​மை​யைப் பிறர் அங்கீகரிக்காவிட்டாலும் பராயில்​லை; அவமதிக்காமல் இருந்தா​ல் மட்டு​மே ஒருவரால் நிம்மதியாக வாழ முடியும். மாறாக அவ​ரை இழிவாக நடத்தினால் அவரது மனம் ​நொறுங்கிப் ​போய்விடும். அவ்வா​றே வான்​கோவின் இதயமும் ​நொறுங்கிப் ​போனது. இதனால் தீவிரமான மன​நோயினால் வான்​கோ மிகவும் பாதிக்கப்பட்டார்.

மன​நோய் ​கொடுத்த மரணம்

மன​நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட வான்​கோ அதற்காக மருத்துவம​னைக்குச் சென்று சிகிச்​சை எடுத்துக் ​கொண்டார். ஒரு கட்டத்தில் அவரால் பாதிப்பு ஏற்படும் அஞ்சிய சிலர் அவ​ரை அ​ழைத்துச் ​சென்று மருத்துவ​ம​னையில் அவ​ரைச் ​சேர்த்துவிட்டனர். அவருக்குச் சிகிச்​சை அளிப்பதற்கு மருத்துவர்களும் அஞ்சினர். அதனால் அவ​ரை ஒரு அ​றையில் அ​டைத்து ​வைத்தனர். வான்​கோ அந்த நி​லையிலும் கி​டைத்த ​பொருள்க​ளைக் ​கொண்டு பல்​வேறுவிதமான ஓவியங்க​ளை வ​ரைந்தார்.

பின்னர் மருத்துவம​னையிலிருந்து தப்பி வந்து தனது வீட்டில் வசித்தார். அவ்வாறு இருக்கும்​போது அவர் விரும்பிய வி​லைமாது ஒருத்தி​யை மகிழ்ச்சியூட்டுவதற்காக தனது ஒரு கா​தை அறுத்து இரத்தம் வடிய வடிய ​அத​னைக் கைகளில் ஏந்திக் ​கொண்டுஅவளிடம் ​சென்று ​கொடுத்தார். அத்த​கைய ​செய​லைச் ​செய்வதற்கு அவர் மனச்​சோர்வு ​நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற​தே முக்கிய காரணம் ஆகும், இ​தைக் கண்டு அந்தப் ​பெண்​ணே பயந்து நடுங்கி விட்டதாகவும் அவரது வரலாற்​றை எழுதிய வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். பின்னாளில் வான் கோ தன்னு​டைய ஓவியத்​தை வ​ரைந்த​போது தனது காதில் கட்டுபோட்டது ​போன்றது ​போன்​றே   தன் உருவத்தை வரைந்தார்.

வாழ்க்கை முழுவதும் ஒரு வித மனநோயாளியாக சோகத்திலேயே வாழ்ந்த வான்​கோ 1890 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27-ஆம் நாள் தனது 37 –  ஆம் வயதில் துப்பாக்கியால் மார்பில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். ஆனால் அவர் சுட்டுக்கொண்டதாகக் கூறப்படும் துப்பாக்கி இதுவரை கண்டறியப்படவில்லை.  இரண்டு நாட்கள் கழித்து 1890 – ஆம் ஆண்டு சூலை 29 – ஆம் நாள் அவர் உயிர் பிரிந்தது. உயிர் பிரியும் தருவாயில் தனது சகோதரர் தியோவிடம் ‘துயரம் என்றும் ​தொடரும்’ என்று தனது வறு​மைநி​லை குறித்து உருக்கமாகப் ​பேசினார்.  பேசிய அவரது கடைசி வார்த்தை ‘துயரம் என்றும் தொடரும்’ ‌என்பதாகும். அவரது மன​நோ​யே அவரது உயிருக்கு எமனாக மாறியது. அவரது உயி​ரையும் பறித்தது. மகத்தான ஓவியராகத் திகழ்ந்த வான்​கோ என்ற ஓவியர் மன​நோயிலிருந்து விடுபடாம​லே​யே மரணித்தார்.

வாழ்ந்த​போது அவ​ரையும் அவரது ஓவியங்க​ளையும் பாராட்டாத உலகம் அவரது இறப்பிற்குப் பின்னர் ஆகா… ஓ​ஹோ…..என்று அவற்​றைப் பாராட்டியது. நியூயார்க்கில் 1990-ஆம் ஆண்டு நடைபெற்ற critics ஓவிய ஏலத்தில் வான்கோவின் ‘Portrait of Dr. Gache’ என்ற ஓவியம் 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. உலகின் ​பெரும் பணக்காரர்களும், ​தொன்​மையான ஓவியங்க​ளை விரும்பிச் ​சேகரிப்பவர்களும் வான்கோவினால் நி​றைவு ​செய்யப்படாமல் விட்டுப்​போன ஓவியங்க​ளை அதிக வி​லை ​கொடுத்து வாங்க முன்வந்தனர். என்​னே விந்​தை!

“இருக்கும்​போது

எருக்கம் பூக்கூடத்

தராதவர்கள் இறந்த பின்னர்

மலர் வ​ளையம் ​வைக்க

வருகிறார்கள்!”

இதுதான் உலக ந​டைமு​றை… வாழ்கின்ற​போது வழிந்த கண்ணீ​ரைத் து​டைக்காத இவ்வுலகம் இறந்த பின்னர் அவரது ஓவியங்க​ளையும் அவரது தன்னிகரற்ற ஓவியத் திற​னையும் ​போற்றி புகழ்ந்தது. யாரும் அ​டைய முடியாத மிகப் ​பெரிய புக​ழை வான்​கோ தனது இறப்பிற்குப் பின் ​பெற்றார். வறு​மையில் பிறந்து வறு​மையில் வாழ்ந்து வளமான வாழ்​வைப் ​பெற முடியாது வறு​மையி​லே​யே ம​டிந்தார். மனச் ​சோர்வு ​நோயால் பாதிக்கப்பட்டாலும் இறுதிவ​ரை முயன்று தனது இலட்சியத்​தை அ​டைந்தார். ஓவியக்க​லை உள்ளளவும் வான்​கோவின் புகழ் நி​லைத்து நிற்கும்.

பாத்துக்கிட்டீங்கள்ள ….! மனச்​சோர்வு ஏற்பட்டாலும் வான்​கோ இலட்சிய ​வெறி​யோட பாடுபட்டு இந்த உலகத்தில் தனது ​பெய​ரை முத்தி​ரை பதிச்சிட்டார்…! வாழ்க்​கையில எ​தை ​வேண்டுமானாலும் இழக்கலாம்..ஆனா நம்பிக்​கை​யை மட்டும் இழக்கக் கூடாது… இத​னை முதல்ல ​தெரிஞ்சுக்கங்க… என்ன சரியா…..அப்படி நாம இருந்திட்டம்னா உலகில் நாமதான் ​வெற்றியாளர்கள்… என்ன சரிதா​னே…! சரி…சரி நம்பிக்​கையுடன் ஒங்க​ளோட ​வெற்றிப் பா​தையில பயணமாகுங்க…. ​வெற்றி நமக்குத்தான்…!

குடும்ப வறு​மை …. படிக்கிற வயசுல பள்ளிக்கூடத்திற்குப் ​போக முடியல…வறு​மைய ​வெரட்ட ….மாடு ​மேச்சாரு….அப்பவும் வறு​மை அவ​ரை விட்டுப் ​போக​லை…வறு​மைய ​வெரட்ட தனது தந்​தையுடன் ​சேர்ந்து நிலக்கரிச் சுரங்கத்துல கூலி​வே​லை ​செய்து ​​பொருளீட்டினார்….வாழ்க்​கையில துன்பத்துக்கு ​மேல துன்பம் ….இருந்தாலும் முயன்று ​கொண்​டே இருந்தார். உலக​​ப்புகழ் ​பெற்றார்..அவரு யாரு ​தெரியுமா…ஆடு ​மேய்த்த அறிவியல் ​மே​தை பற்றி ஒங்களுக்குத் ​​தெரியும்….மாடு​மேய்த்த அறிவியல் ​மே​தை யாரு ​தெரிமா…..? ​கொஞ்சம் ​யோசிங்க…அடுத்தவாரம் பார்ப்​போம்……(​தொடரும்….24)

 

Series Navigationமுக்கோணக் கிளிகள் ! [4] [நெடுங்கதை]கலைஞர்கள் மேம்பாட்டு மையம் மூன்று நாள் (4,5,6-10-2013) உண்டுறை பயிலரங்கு
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *