தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 அக்டோபர் 2020

கறுப்புப் பூனை

கு.அழகர்சாமி

Spread the love

பொழுது சாயும்

வேளை.

 

கறுப்புப் பூனை

பரபரப்பாயிருக்கும்.

 

காரணமில்லாமல் இருக்காது.

இருளின் துளியாய்த்

திரியும் அது.

 

இன்று

இருளைத் தூவித்

துரிதப்படுத்த

முடிவு செய்திருக்கும்.

 

கால் பதித்த இடங்கள்

கறுப்பு மச்சங்களென

கறுப்புக் கோடுகளை மைதானமெங்கும்

இழுத்துத் தாவியோட

இரவு முன் கூட்டியே

இறங்கியிருக்கும்.

 

பல் நாய்க்குட்டிகள் தாய் நாயின்

பால் முலையை உண்ணுவது போல்

மண்ணில் விழுதுகள் ஊன்றியிருக்கும்

ஆல்மரத்தின் மேல் தாவும்.

 

மேகங்களை மண்டியிட வைக்கப் பார்க்கும்

மைதானம் சுற்றியிருக்கும் நகரின்

உயரடுக்கு வீடுகளை நோக்கும்.

பழுத்த நெருப்புப் பழங்களாய் மரத்தில்

பூனையின் கண்கள் ஒளிரக்

கிளை விட்டு

கிளை தாவும்.

 

நீளும் அதன் நிழல்

வீடு விட்டு

வீடு தாவி நுழையும்.

 

அங்கே

கனவு போல் இருள் யாவரின் முகமூடிகளைக்

கலைத்துப் போட்டிருக்கும்.

 

முகங்களில்லையா

எவருக்கும்?

 

எகிறிக் குதித்து

இருள் சுருண்டு உருளும் பந்தாய்

இருளிலோடும் கறுப்புப் பூனை வெருண்டு.

Series Navigationநீங்காத நினைவுகள் 16மருத்துவக் கட்டுரை மயக்கம்

3 Comments for “கறுப்புப் பூனை”

 • G.Alagarsamy says:

  ’கறுப்பு’ என்பதில் பிழையுள்ளது. ‘கருப்பு’ என்றிருக்க வேண்டும். திருத்தப்பட்ட கவிதையைக் காலதாமதமாய் அனுப்பியதற்கு வருந்துகிறேன்.

 • G.Alagarsamy says:

  கால தாமதமாய்த் திருத்தியனுப்பப்பட்ட கவிதை பின்வருமாறு.

  கருப்புப் பூனை

  பொழுது சாயும்
  வேளை.

  கருப்புப் பூனை
  பரபரப்பாயிருக்கும்.

  காரணமில்லாமல் இருக்காது.
  இருளின் துளியாய்த்
  திரியும் அது.

  இன்று
  இருளைத் தூவித்
  துரிதப்படுத்த
  முடிவு செய்திருக்கும்.

  கால் பதித்த இடங்கள்
  கருப்பு மச்சங்களென
  கருப்புக் கோடுகளை மைதானமெங்கும்
  இழுத்துத் துள்ளியோட
  இரவு முன் கூட்டியே
  இறங்கியிருக்கும்.

  பல் நாய்க்குட்டிகள் தாய் நாயின்
  பால் முலையை உண்ணுவது போல்
  மண்ணில் விழுதுகள் ஊன்றியிருக்கும்
  ஆல்மரத்தின் மேல் தாவும்.

  மேகங்களை மண்டியிட வைக்கப் பார்க்கும்
  மைதானம் சுற்றியிருக்கும் நகரின்
  உயரடுக்கு வீடுகளை நோக்கும்.

  மரத்தில்
  இரு நெருப்புக் கனிகள் கனிந்ததெனக்
  கருப்புப் பூனையின் கண்கள் மினுக்கும்.

  சட்டென அது
  கிளை விட்டு
  கிளை தாவும்.

  நீளும் அதன் நிழல்
  வீடு விட்டு
  வீடு தாவி நுழையும்.

  வீடெல்லாம்
  கனவு போல் இருள் யாவரின் முகமூடிகளைக்
  கலைத்துப் போட்டிருக்கும்.

  முகமில்லையா
  எவருக்கும்?

  எகிறிக் குதித்து
  இருள் சுருண்ட பந்தாய்
  இருளிலோடும் கருப்புப் பூனை வெருண்டு.

 • ஜி.ஜே.தமிழ்ச்செல்வி says:

  கனவு போல் இருள் யாவரின் முகமூடிகளைக்
  கலைத்துப் போட்டிருக்கும்.

  யோசிக்க வேண்டிய வரிகள், ஒவ்வொருவரும் முகமூடிகளுக்குள் அல்லவா பதுங்கிக்கொள்கிறோம். வெளிப்படையான நேர் மனிதர் யார் உளர் உலகத்தில்.


Leave a Comment

Archives