ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)

This entry is part 9 of 22 in the series 15 செப்டம்பர் 2013

SALMAஇந்த இடத்தில், சந்தர்ப்பத்தில் சல்மா என்னும் கவிஞரைப் பற்றிப் பேசுவதும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை பல. சல்மா தன் கவிதைகளில் தன் சொந்த துயரங்களையும் இழப்புகளையும் பற்றித் தான் பேசுகிறார் என்று தோன்றும். ஆனால் அவை உண்மையில் அத்தோடு நிற்பதில்லை. இறக்கை முளைத்துப் பறக்கத் தொடங்கி விடுகின்றன. அக்கவிதைகள் வேறு நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. தன்  சொந்த துயரங்கள், தன் குடும்பத் துயரங்களாக, ஒரு சமூகத்தின் துயரங்களாக, அவர் சார்ந்திருக்கும் மதத்தின் நிலைப் பாட்டிலிருந்து பெறும் துயரங்களாக விரிவடைகின்றன, அவரை  மட்டிலும் ஒரு பெண்ணாக, தனிப்பட்ட வியக்தியாகத் தாக்கி வதைக்கும் துயரமாக நின்றுவிடாது பெண் சமூகம் முழுதையும், தான் சார்ந்த இஸ்லாமிய பெண் சமூகம் முழுதும் ஆழ்த்தியிருக்கும் துயரமாக, இழப்புக்களாக விரிவு படுகிறது. மதம் மாத்திரமல்ல, ஆண் வர்க்கமே தன் மதத்தின் துணை கொண்டு தன் மேலாண்மைக்கு தன் மதத்தையே ஆயுதமாக, சமூக நியாயமாக பயன்படுத்திக்கொள்கிறது. சல்மாவின் சொந்த துயரங்களும் இழப்புக்களும் பெண்சமூகத்தின் துயரங்களுக்கும் இழப்புக்களுக்கும் metaphor ஆகிறது. அவரது குரல் பெண்சமூகமே, குறிப்பாக இஸ்லாமிய பெண் சமூகமே அதை அழுத்தி வதைக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிராக எழுப்பும் குரலாகிறது. சல்மாவுக்கு அவரது கவிதைகள் விடுதலைக்கான மொழியாகிறது.

konangiசற்று முன் சமீப காலங்களில், எழுபது எண்பதுகளில் ஒரு வெறியாக, ஃபாஷனாக தமிழ் இலக்கிய, பண்டித உலகில் உலாவந்த ஸ்ட்ரக்சுரலிஸ, போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிஸ, போஸ்ட் மாடர்னிஸ சமாசாரங்களுக்கு இணையாக தலையெடுத்த மந்திர யதார்த்த, நான் லீனியர் ஆரவார கோஷங்கள் பற்றியும் சொல்ல வேண்டும். மிகவும் திறன் வாய்ந்த, தான் பிறந்த, வாழும் மண்ணில் திடமாகக் காலூன்றியவராக தன் ஆரம்ப எழுத்துக்களில் தன் மக்களைப் பற்றி மிக நுண்ணிய, நட்பும்  நெருக்கமும் தொனிக்கும் யதார்த்தச் சித்திரங்களைத் தன் மதனிமார்களின் கதை (1989), கொல்லனின் ஆறு பெண் மக்கள் (1990) போன்ற தொகுப்புகளில் அடங்கிய கதைகளில் எழுதிய கோணங்கி, திடீரென மார்க்வேஸ் மாதிரி எழுதப்போகிறேன் என்று தீர்மானித்து மந்திர யதார்த்தத்துக்குத் தாவியுள்ளார். ஒரு வேளை அவற்றை மந்திர யதார்த்தம் என்று சொல்வது முற்றிலும் சரியல்லவோ என்னவோ. கோணங்கி மாதிரி திடீரென இப்படி ஒரு  புதிய மதத்திற்கு தாவியவர்கள் ஒவ்வொருவரும் தம் எழுத்துப் பாணிக்கு ஒரு புதிய பெயர் தந்து கொள்கிறார்கள். கோணங்கி இதை ஏதோ ஒரு மாயவித்தை போல, தன் எழுத்துக்கள் எதையும் தான் எழுதுவதில்லை என்றும், அது தானாக எழுதிக்கொள்கிறது என்றும் சொல்கிறார். ஏதோ ப்ளாஞ்செட்டில் கை வைத்ததும் அது எழுதுவதைப் போலத்தான், தான் எழுதுவது என்னவென்று தனக்கே தெரியாது என்பது போலச் சொல்கிறார். இதை நம்புவதற்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தாலும், அவர் நம் காதில் நிறையவே பூச்சுற்றுவது போல இருந்தாலும், அவர் சொல்லும்போது மிக சீரியஸாகத் தான் தன் முகத்தை வைத்துக் கொள்கிறார். ஆனால் இந்த புதிய ஃபாஷன் அல்லது பித்து ஒரு சிறிய வட்டத்தை நம்ப வைத்துள்ளது என்று தான் தோன்றுகிறது.  அவர்கள் வெகு ஆரவாரத்துடன் தம் காதில் பூச்சூட்டிக் கொள்கிறார்கள்.

இதன் இன்னொரு விளைவு, இப்போது லத்தீன் அமெரிக்க எழுத்துக்களின் மொழிபெயர்ப்புகள் கணிசமாக வரத் தொடங்கியுள்ளன. அந்த மொழி பெயர்ப்புகள் நமக்கு எந்த உற்சாகத்தையும் தரவில்லை என்பது ஒரு புறம் இருக்கிறது. தமிழ் இலக்கியம் முப்பது நாற்பதுகளில் நிறைய மொழி பெயர்ப்புகளை கண்டது. ஐரோப்பிய மொழிகளிலிருந்து, ஆங்கிலம் வழியாகவும். நேராக மராத்தி, வங்காளி, ஹிந்தி என மற்ற இந்திய மொழி களிலிருந்தும் கூடத் தான். ஆனால் அதன் பிறகு பின் வருடங்களில் மொழிபெயர்ப்புகளுக்கு எந்த வரவேற்பும் இருந்ததில்லை. இப்போது தலித்  அரசியலும் சிந்தனையும் மேலிட்டிருப்பதால், தலித் எழுத்துக்கள், கன்னடம், மராத்தி மொழிகளிலிருந்து வரத்தொடங்கியுள்ளன. இது ஏதும் இலக்கிய விழிப்புணர்வின் காரணமாக விளைந்ததல்ல. தலித் பற்றிய சிந்தனைகள் அரசியலில் மேலோங்கி யிருப்பதன்  காரணத்தால் விளைந்ததே.

தலித் அரசியல் விழிப்புணர்வின் காரணமாக அதற்கு ஊட்டம் கொடுத்து உதவக்கூடிய,  தலித் எழுத்துக்கள் பக்கம் நம் கவனம் செல்லவேண்டும்.. தலித் பற்றிய அரசியலும் சிந்தனையும் தமிழ் நாட்டில் திடீரென எழக் காரணம்,  அம்பேத்கர் நூற்றாண்டு நினைவு விழாக்கள் இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டது, மண்டல் கமிஷனின் அறிக்கையின் காரணமாக எழுந்த நாடு தழுவிய கிளர்ச்சிகள், தலித் மக்கள் திடீரென தமக்குரிய உரிமைகளுக் காகவும்,  தம்மை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்புக்களுக்காகவும் மேல் ஜாதி ஹிந்துக்களுடன் தொடங்கிய போராட்டங்களும் அவற்றினிடையே நேர்ந்த வன்முறைகள் எல்லாம். மேல் ஜாதியினர் இதை விரும்பவில்லை.

Poomani3தலித் மக்கள் வாழ்க்கை பற்றி எழுந்த முதல் இலக்கிய படைப்பு, பூமணி(1947) எழுதிய பிறகு (1976) என்ற நாவல். ஒரு கிராமத்தில் ஒரு செருப்பு தைப்பவனின் கதை அது. அவன் தனக்கு நேரும் இழிவுகளையெல்லாம் மௌனத்தோடு தனக்குள் குமைந்து கொண்டும் கௌரவத்தோடும் சகித்துக் கொள்கிறான். கருப்பன் என்னும் ஒரு அநாதைச் சிறுவன் அவன் பொறுப்பில் வளர்கிறான். கருப்பன் தனக்கு நேரும் அவமதிப்பை எல்லாம் எதிர்கொள்ளும் வழியே வேறு. அவனைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையுமே எல்லாரையுமே பார்த்தால் அவனுக்கு கிண்டல் தான். பொதுவாக தலித் எழுத்துக்களில் காணும் மனிதர்கள், அவர்களின் வெவ்வேறு வடிவங்களுக்கும் வகைகளுக்கும் கருப்பன் ஒரு மாதிரி அச்சு உருவம். பூமணி இதை அடுத்து வெக்கை(1982) என்ற ஒரு நாவலை எழுதியிருக்கிறார். இந்த நாவலில், ஒரு இளைஞன் தன் குடும்பத்தாரை மிரட்டி ஹிம்சைப் படுத்திக் கொண்டிருந்தவனை  வெட்டி முடமாக்கிவிட்டு தப்பி ஓடி ஒரு காட்டில் தலைமறைவாகி விடுகிறான். அவனது தலைமறைவு வாழ்க்கையின் அன்றாட சித்தரிப்பை இந்த நாவலில் பார்க்கலாம்.

எல்லா தமிழ் தலித் எழுத்துக்களிலும் மாறாது காணப்படும் ஒரு குணம், அவர்களின் சீற்றம் தான். அது நாம் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று தான். அதோடு தலித் எழுத்துக்கள் நாம் இதுகாறும் காணாத சமுதாயத்தின், உலகின் வாழ்க்கையை பதிவு செய்து, அத்தோடு. ஒரு புதிய மொழியையும் இலக்கியத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளன. அந்த மொழி பண்படுத்தப் படாதது. கொச்சையானது. ஆபாசமும் வசையும் நிறைந்தது. ஆனால் அதன் வெளிப்பாடு வெளிப்படையானது. அது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். ஆனாலும் அது பேசப்படுவது. உயிரோட்டம் கொண்டது.  அந்த மொழியில் தான் தலித் மக்களின் உணர்வுகள் பேசப்படுகின்றன. பாமா (1958) ஒருகன்னி மாடத்தில் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். கருக்கு(1992) என்ற அவரது முதல் புத்தகம் சுயசரிதம் என்று சொல்ல வேண்டும். கன்னி மாடத்திலும் கூட ஜாதி வேற்றுமைகள் பேணப்படுவதைச் சொல்கிறது கருக்கு. இதைத் தொடர்ந்து வந்த சங்கதி (1992) பாமாவின் பாட்டி சொல்லும் கதையாக பதிவாகியுள்ளது. குசும்புக்காரன் என்று ஒரு சிறுகதைத் தொகுப்பும் பாமா 1996-ல் வெளியிட்டிருக்கிறார். பழையன கழிதலும், ஆனந்தாயி என்ற இரு குறிப்பிடத்தக்க நாவல்களை எழுதியுள்ள சிவகாமி ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. இந்த இரு நாவல்களும் தலித் வாழ்க்கையின் இன்னொரு புதிய பரிமாணத்தைச் சித்தரிக்கின்றன. காலம் காலமாக தாம் கட்டுண்டிருந்த தளைகளை தகர்த்து எழுந்துள்ள புதிய தலைமுறை கல்வி கற்ற, அதிகார வேட்கையும் பணத்தாசையும் கொண்ட  தலித்துகள் சிவகாமியின் நாவல்களில் மையப் பாத்திரங்களாகின்றனர். இந்த தலித்துகள், இன்னமும் வதைபடும் நிலையில் தங்கிவிட்ட அதிர்ஷ்டம் கெட்ட தம் சகோதர தலித்துகளை அடக்கி ஆளுவதில் சந்தோஷம் அடைகின்றனர். விழி. [பா. இதய வேந்தன், அபிமானி, உஞ்சை ராஜன் போன்ற இளம் தலித் எழுத்தாளர்களுக்கும் தாம் சொல்ல அவர்கள் கண்ட அனுபவித்த தலித் வாழ்க்கைகள் உள்ளன. அவை தாக்கு வலு வாய்ந்த எழுத்துக்கள். சுயவிமர்சனம் கொண்டவையாதலால். எதையும் மறைக்காதவை.

dharmanசோ தர்மனின்(1953) தூர்வை (1996), இமையத்தின் (1964) கோவேறு கழுதைகள், இரண்டும் தலித் வாழ்க்கை பற்றிய மிக முக்கியமானதும் குறிப்பிட்டுப் பேச வேண்டியதுமான  நாவல்கள். சோ தர்மனின் பாத்திரங்கள் சமீபத்திய பழமையைச் சேர்ந்தவை. எவ்வளவு தான் அவர்கள் ஒடுக்கப்பட்டாலும், வசதி அற்று இருந்தாலும், சமூகத்தில் ஒதுக்கப் பட்டாலும் தம் வாழ்க்கையை சந்தோஷத்துடனேயே கழிக்கிறார்கள். பூமணியின் கருப்பனைப் போல அவர்களுக்கு மகிழ்ச்சி தருவது அவர்களது நகை உணர்வு. அந்த நகை உணர்வு தான் அவர்களை ஒடுக்கும் சமூகத்தை மீறி வாழும் சக்தி தரும் ரகசிய ஆயுதம்.  இந்த நாவல்கள், தலித் வாழ்க்கையைச் சொல்லும் வாய்மொழி மரபில் வருபவை. ஆனாலும் எழுத்தில் பதிவாகி அச்சில் வந்துள்ளவை. இமையத்தின் கோவேறு கழுதைகள் மிகவும் சர்ச்சைக்குள்ளான எழுத்து. காரணம், தலித் சமுதாய மக்களுக்குள்ளேயே நிலவும் வர்க்க மேலாண்மையும், வசதி உள்ளோர் வசதி அற்றோர் இடையேயான ஏற்றத் தாழ்வுகளையும் ஒளிவு மறைவின்றி பதிவு செய்துள்ளது தான். தலித் மக்களுக்குள்ளேயே கூட படித்தவரும், மேல் நிலைக்கு உயர்ந்துள்ளவரும், அதிகாரம் படைத்தவருமான் மத்திய தர தலித்துக்கள், இவை எதுவுமற்ற இன்னமும் எழ்மைப்பட்ட சக தலித்துகளை அடக்கி ஆளும் கொடுமை, மேல் ஜாதியினரும் சமூகத்தில் உயர் மட்டத்தில் உள்ளவரும் தமக்குக் கீழ்ப் படியில் இருப்போரை அடக்கி ஆண்ட கொடுமைக்கு சற்றும் குறைந்ததில்லை என்பதை இமையத்தின் நாவல் சித்தரித்துள்ளது. தலித் சித்தாந்திகள், இமையத்தையும் அவர் எழுத்துக் களையும் ஒட்டு மொத்தமாகத் தம் உரத்த குரலில் வன்மையாகக் கண்டனம் செய்து வருவது நமக்கு அதிர்ச்சி தரும் செய்தி அல்ல.

நாவலும் சிறுகதைகளும் எழுதும் பாவண்ணன், பெருமாள் முருகன் போன்றோரும், கவிதை எழுதும் இரத்தின கரிகாலன், பழமலை போன்றோரும் தலித்துகள் அல்ல தான். ஆனால் அவர்கள் வாழ்க்கை தலித் மக்களோடு நெருங்கி பின்னிப் பிணைந்த காரணத்தால் அவர்கள் எழுத்துக்கள் தலித் வாழ்க்கையைப் பேசுவனவாக இருக்கின்றன.

thangar-bachanதங்கர் பச்சான் எனனை மிகவும் பரவசப் படுத்தும் ஒரு எழுத்தாளர். தமிழ் சினிமா உலகில்  வெற்றியும் புகழும் மிகப் பெற்ற, எல்லோரின் பாராட்டையும் பெற்ற சினிமா புகைப்பட வல்லுனர் அவர். ஆனால் அவரது படைப்பெழுத்துக்களைப் பார்த்தால், தன் பிறந்த கிராமத்து மண்ணிலும் வாழ்க்கையிலும் ஆழக் கால்பதித்துள்ள ஒரு  சாதாரண விவசாயியாகத்தான் அவரைக் காண்கிறோம். இந்த நவ நாகரீக காலத்தில் வாழும் ஒரு மனிதர் என்பதையோ, ஏன், அவர் வெற்றியும் புகழும் பெற்று வாழும் சினிமா உலகப் பகட்டின் மினுமினுப்பின் அடையாளம் எதையுமோ சிறிதளவு கூட அவர் எழுத்தில் காணக் முடிவதில்லை. அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டு (1996) என்ற நாவலில் காணும் சில கிராமத்து வாழ்க்கையின் நுணுக்கமான நீண்ட விவரிப்புகள் அவற்றோடு அவருக்கு இருக்கும் சொந்த அனுபவத்தை நெருக்கமான விவர ஞானத்தைச் சாட்சியப்படுத்துகின்றன. பேர்ல் எஸ் பக்கின் Good Earth நாவலில் வரும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பையும் அவை பல நூறு ஏக்கர் பரப்பில் விளைவிக்கும் பயிர் நாசத்தையும் விவரிக்கும் பக்கங்களை,  ஹெமிங்வேயின் Old Man and the Sea நாவலில் வரும் ராக்ஷஸ மீனுக்கான நீண்ட போராட்டத்தின் நுணுக்கமான விவரிப்பையும் நினைவு படுத்தும் பகுதிகள் தங்கர் பச்சானின் விவரிப்புகள்.

கடந்த இருபது வருடங்களில் கவிதை எழுத வந்திருப்பவர்களின் பெருக்கம் கொஞ்சம் அதிகம் தான். அவர்களில் பலர் நம் கவனிப்பை வேண்டும் அளவில் நன்றாகவே எழுதிய போதிலும் நம்மைப் பரவசப்படுத்தும் புதிய கண்டுபிடிப்பு என்று உற்சாகம் கொள்ளும் நிலையில் எவரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எழுபதுகளிலிருந்து தன் ஆரம்ப காலத்தில் தன் கிண்டல் பார்வையும் சமூக அரசியல் விமர்சனமும் கொண்ட கவிதைகளால் பரவசப்படுத்திய ஞானக் கூத்தனிடம் அந்த பழைய நகை உணர்வு அறவே அற்றுப் போய்விட்டது போல காணப்படுகிறார். ,அவர் கவிதைகள் எவ்வித சுவையும் அற்று பரபரப்பையும் இழந்து காண்கின்றன. இப்போல்லாம் அவர் ரொம்ப சீரியஸ். பிரமீள் (அந்நாளைய தருமு சிவராமூ) இப்போது வெற்று வாய்ச்சண்டை வீரராகக் கீழிறங்கிவிட்டார். பழையவர்கள் தம் கவிதைகளைத் தொகுப்பதில் ஈடுபட்டுள்ளார்கள். ஏதும் புதிய முகங்கள், உற்சாகம் தரும் முகங்களைக் காணோம். சல்மாவைத் தவிர.

விமர்சன எழுத்து பற்றி ஏதும் சொல்லாமல் இருப்பதே நல்லது என்று படுகிறது. பொதுவான இலக்கிய சூழல் விமர்சனத்துக்கு ஏற்றதாக இல்லை. எவ்வித மாற்று அபிப்ராயமோ,  உள்நோக்கமற்ற கருத்துப் பரிமாற்றமோ, சுதந்திரமான சிந்தனை வெளிப்பாடோ, விருப்பு வெறுப்பற்ற மதிப்பீடுகளோ வெளிவரும் சூழல் இல்லை இங்கு, இப்பொது. காட்டமான கட்சியாடல்கள் என்னவோ உரத்த குரலில் மிகுந்த ஆவேசத்தோடு நடக்கின்றன தான். ஆனால் அவை ஏதும் ஒரு மாற்றுக் கருத்தை அனுமதிக்கும் நிலையில் இல்லை. சித்தாந்திகள் எண்ணிக்கையில் அதிகமாகி உள்ளனர். அவரவர்க்கு தயாராகக் கிடைக்கும் ஒரு மேடையில் எழுந்து நின்று கொண்டு உரத்த குரலில் தம் இருப்பை தமிழ் உலகுக்கு அறிவித்துக்கொண்டு வருகின்றனர்.

நாடக இலக்கியத்தைப் பற்றிப் பேச வந்தால், தமிழர்களுக்கு ஏதோ ஒன்று ஏதோ காரணத்துக்காகப் பிடித்து விட்டால் அதை யோசனை இன்றி இறுகப் பற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கு, அவர்களில் நாடகப் பற்று கொண்ட ஒரு சிறு பான்மையினருக்கு ஒரு வகையான நடிப்பு தான் நாடகம் என்று ஒரு கருத்து பற்றியுள்ளது. சம்பிரதாய மேடை என்பதே, நாடக இலக்கியம் என்பதே மேற்கத்திய காலனீயத்தின் எச்சம் என்ற கருத்து இறுகப் பற்றியுள்ளது யதார்த்தமான, இயல்பான நடிப்போ, நாடக எழுத்தோ அவர்களுக்கு விரோதமானது. ஏனெனில் இதுவும் மேற்கத்திய காலனீயத்தின் எச்சங்கள். முதலாளித்துவ சமூகத்திலிருந்து பெற்றது. நமக்குப் பழக்கமான, சம்பிரதாய ஓரங்க நாடகங்களும் பல அங்கங்கள் கொண்ட முழு நாடகங்களும் மேடையில் நடிக்கப்படுவனவும் அவர்களுக்கு விரோத மானவை. நடிப்பு என்றால் அது பத்ததிகள் கொண்டதாக இருக்க வேண்டும் இயல்பாகவோ, யதார்த்த பூர்வமாகவோ இருத்தல் கலை ஆகாது. நாடகத்தின் சலனங்கள் நடன அடவுகள் மாதிரி முழுதும் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். பேச்சும் இயல்பாக இருக்கக் கூடாது. அதுவும் கூடியாட்டப் பாத்திரத்தின் பேச்சு போல நீட்டி முழக்கி இழுத்து இழுத்துப் பேசும் பத்ததிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.  நடனங்களும் கொண்டிருக்க வேண்டும். இவை தான் இந்திய மண்ணில் வேரூன்றிய நாடகப் பண்புகள் மற்றதெல்லாம் மேற்கத்திய காலனீயம் தந்தவை என்ற ஒரு கருத்து பரவலாக்கப் பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நாடக இயக்கம் என்ற ஒன்று முன்னரும் இருந்ததில்லை. அறுபது எழுபதுகளில் எழுந்த ஒரு எளிய பலஹீனமான தொடக்கம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விட்டது. நாடக இலக்கியம் என்று ஏதும் சொல்லிப் பெருமை படும் அளவில் இங்கு  இல்லை

இன்னும் ஒரு பகுதி உண்டு,  மிகவும்  சோர்வு தரும்  வரண்ட பகுதி அது. அவ்வப்போது ஆங்காங்கு காணும் சில துளிர்களைத் தவிர.  கடந்த 70 வருடங்களில், தமிழ் மக்களின் வாழ்க்கையையும்,  நம்பிக்கைகளையும் வரலாற்றையும் அவரவர் சிந்தனைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப செதுக்கி உருவாக்கிய சக்தி வாய்ந்த பெரும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஈ.வே. ராமசாமி நாயக்கர், சி. ராஜகோபாலாச்சாரி, கே. காமராஜ், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி ராமச்சந்திரன், மு.கருணாநிதி ஆகிய ஏழுபேரும் அதில் மிக முக்கிய மானவர்கள். தமிழனின் வாழ்க்கையை,  தலைவிதியை நிர்ணயித்தவர்கள். இவர்களில் கடைசியாகச் சொல்லப்பட்ட மு. கருணாநிதியைத் தவிர வேறு எவரும் தம் சுயசரிதத்தை எழுதியதில்லை. அதிலும் மு. கருணாநிதியின் மூன்று  பாகங்கள் கொண்ட நெஞ்சுக்கு நீதி என்ற அந்த சுய சரிதம் பெரும்பாலும் தன்னை நியாயப்படுத்திக்கொள்ளும் காரியமாகவே இருக்கிறது. வேறு ஒரு சமயத்தில், வேறு ஒரு மனச் சாய்வில் அது வேறாக எழுதப்பட்டிருக்கும். ஆனால் தம் அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பழம்  அரசியல் தலைவர்களுக்கு அவரவர்க்கு முன் உள்ள, தம்மை நியாயப் படுத்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்கள் உண்டு. அரசியல் வாழ்க்கை யிலிருந்து ஒதுங்கி வாழும் சி. சுப்பிரமணியம் போன்றவர்கள் தான் தம் வரலாற்றை சுய சார்பற்று, தன்னை நியாயப் படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்காமல் எழுத முடியும். சி. சுப்பிரமணியம் அதைத் தான் செய்துள்ளார். ஆனால், கடந்தன் ஒரு நூற்றாண்டு கால அரசியல் சமூக வரலாற்றை, அந்த வரலாற்றை உருவாக்கிய இயக்கங்களை, தலைவர்களைப் பற்றி, நேர்மையாக, எந்த கட்சி சார்பும் அற்று, உணர்ச்சி வசப்படாது, வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்யும் நோக்கில் எந்த சரித்திரப் பதிவும் வரவில்லை. ஒன்று தாம் வணங்கும் தலைவர்களை போற்றித் துதி பாடும் வகையின அல்லது தமக்கு எதிரான தலைவர்களை ஒதுக்கும் அல்லது குறைத்துச் சொல்லும்  நூல்கள் தான் வரலாறு எனப் பெயர் சூட்டப்பட்டு  வெளிவருகின்றன.

ஆனால் சில குறிப்பிடத்தக்க விதி விலக்குகளும் இருக்கின்றன தாம். அவை அரசியல் தலைவர்களால் எழுதப்பட்டவையல்ல. சாதாரண மனிதர்கள் தந்தவை.. சுவருக்குள் சித்திரங்கள் (1998) என்னும் புத்தகம் தியாகு என்னும் சிறைக் கைதியாக வாழ்ந்த ஒரு நக்சல் தீவிர வாதியால் எழுதப்பட்டுள்ளது. தியாகு கீழ்க் கோர்ட் ஒன்றால் விசாரிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டவர். அவர் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்கோர்ட்டுக்கு மனுச்செய்து கொள்ள வில்லை. ஆனால் சென்னை உயர்நீதி மன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது. அவர் 16 வருடங்கள் அனுபவித்த சிறை வாழ்க்கையை வெகு நுணுக்கமாகவும் உண்மையாகவும் தன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அவரது அரசியல் கருத்துக்கள், அதற்கான அவரது அரசியல் போராட்டங்கள், சந்தித்த வழக்குகள் எல்லாம் அவரது சுவருக்குள் சித்திரங்கள் புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளன.

azhagiyanayagiஇது போன்ற அபூர்வமான இன்னொரு வாழ்க்கைச் சரிதமும் தமிழில் இக்கால கட்டத்தில் வெளிவந்துள்ளது. அழகிய நாயகி அம்மாள் என்னும் படிப்பறிவற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி, அவ்வப்போது வாய் மொழியாகச் சொல்லச் சொல்ல பதிவு செய்யப்பட்ட அந்த அம்மையாரின் குடும்பத்தின், சமூகத்தின் மூன்று தலைமுறை வரலாறு தான் கவலை என்ற தலைப்பில் 1998-ல் வெளியானது. குறிப்பிடத்தக்க ஒரு விவரம், அந்த தடித்த வரலாற்றுப் பதிவில் அந்த அம்மையார் தன் கணவனைப் பற்றி நல்லதாகச் சொல்ல ஏதும் இருக்கவில்லை.

கடந்த 30 வருடங்களாக, ராஜபாளையத்தைச் சேர்ந்த தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ராஜூ சமுதாயத்தைச் சேர்ந்த மு.க. ஜகன்னாத ராஜா, சுயமாகக் கல்வி கற்றவர், பாலி, சமஸ்கிருதம், ப்ராக்ருதம், கன்னடம், தெலுங்கு ஆகிய அத்தனை மொழிகளிலிருந்தும் தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் முக்கியமான பழம் நூல்களையும் தற்கால இலக்கியங்களையும் மொழிபெயர்க்கும் பணியில் சிறப்பாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். அதிலும் வெகு அமைதியாக, சுயதம்பட்டம் விளம்பரம் ஆகாயத்தை நோக்கி மூக்கை உயர்த்தாமல் செய்து வருவது குறிப்பிட வேண்டிய விஷயமும் கூட. யார் சொல்லியும் எந்த அறக்கட்டளையின் தயவும் இன்றி தன் விருப்பத்திற்கே செய்து வருகிறார். இது இன்றைய தமிழ் நாட்டில், அரசியல் கலாச்சாரத்தில் நிலவும் தர்மங்கள், மதிப்புகளுக்கு முற்றிலும் மாறான செயல். இன்றைய தமிழ் கலாச்சாரத்தில் உலகத்திலேயே மிகச் சிறப்பானதும் வளமானதுமான மொழி தமிழ் தான். அது மற்ற மொழிகளிலிருந்து பெறுவதற்கு தொடர்பும் உறவும் கொள்வதற்கு ஏதும் இல்லை.,

அடுத்து சிறப்பாகச் சொல்லப்படவேண்டியவர்கள், சீனி விஸ்வநாதன், டி.வி.எஸ் மணி, பெ.சு.மணி போன்ற அறிஞர்கள் பாரதியின் எழுத்துக்களையும் வாழ்க்கையையும் முழுமையாகக் கொண்டு வருவதிலும் பாரதி பற்றிய அனைத்துச் செய்திகளையும் ஆவணப்படுத்துவதிலும் வெகு அமைதியாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்கள். பாரதி மாத்திரமல்ல,  பாரதி போல தமிழர்களின் நினைவிலிருந்து அதே வெகு அமைதியுடன் மறைந்து கொண்டிருக்கும்  வ.வே.சு. சுப்பிரமணிய சிவா, வ.வு.சி. போன்ற இலக்கிய கலாசார அரசியல் பெரியோர்களையும் அவர்களது எழுத்துக்கள்  வாழ்க்கையை முழுமையாக ஆராய்ந்து கண்டு பதிவு செய்வதிலும் தம் அக்கறைகளை விரிவு படுத்திக்கொண்டுள்ளார்கள். இவை அத்தனையும் ஏதும் ஸ்தாபனங்களின், அரசின், பல்கலைக் கழகங்களின் உதவியாலோ தூண்டுதலாலோ நடப்பன அல்ல. முற்றிலும் தனி நபர் ஆர்வத்தில் பிறந்த முயற்சி இது.

கடைசியில் ஒரு மிக முக்கியமான, சமீப காலங்களில் காணும் ஒரு மாற்றத்தையும் பற்றிச் சொல்ல வேண்டும். அதன் அர்த்தமும் உத்வேகமும் எதைக் குறிப்பிடுகிறது என்பதோ, எதும் புரியாத மாற்றமா என்பதோ எனக்கு விளங்கிய பாடில்லை. தமிழர்களிடம் புத்தகம் வாங்கிப் படிப்பது என்று ஒரு பழக்கம் இருக்கிறதா, என்ற கேட்டு பெருமைப்படும்படி பதில் சொல்லிக் கொள்ள ஏதும் இல்லை. அப்படி ஒரு பழக்கமே அவர்களிடம் கிடையாது. ஒரு புத்தகம் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு அது விற்றுத் தீர பத்து இருபது வருடங்கள் ஆகும் என்று இருந்த காலம் ஒன்று இருந்தது. க.நா. சுப்பிரமணியம் என்னும் ஒரு மிகச் சிறந்த நாவலாசிரியர், சர்ச்சைக்கிடமான எழுத்தாளர் 1946-ல் எழுதி கலைமகள் பிரசுரம் வெளியிட்ட பொய்த் தேவு என்ற நாவலின் முதல் பதிப்பு 1970-களில் கிடைத்து வந்தது. ஆனால் இப்போது ஒரு புத்தகம் ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர சில வருஷங்கள் ஆகின்றன. விதி விலக்காக, தலித் எழுத்துக்கள், சமீப காலமாக தலித் பற்றிய எதுவும் மிகுந்த ஆரவாரத்தையும் உற்சாகத்தையும் எழுப்புவதாலும், மிகுந்த உற்சாகத்துடன் தீவிரமாகவும் தலித் மக்களே செயல்படுவதாலும் வெகு சீக்கிரம் தலித் பிரசுரங்கள் விற்று விடுகின்றன.

இத்தகைய நம்பிக்கை வரண்ட சூழலில், சி.சு. செல்லப்பா 1700 பக்கங்களுக்கு, மூன்று பாகங்களுக்கு விரியும், சுதந்திர தாகம் (1998) என்னும் பிரம்மாண்ட நாவலை வெளியிட்டுள்ளார். அது 1927 லிருந்து 1934 வரை ஏழு வருட கால, சுதந்திர போராட்ட நிகழ்ச்சிகள், அவர் வாழ்ந்த மதுரையிலும் அதைச் சுற்றிய இடங்களிலும் நிகழ்ந்த போராட்ட நிகழ்வுகளை விவரிக்கும் நாவல் என்றாலும் அதன் உயிரோட்டம் நாடு தழுவிய போராட்டத்தின் தாக்கத்தை பிரதிபலிப்பது. அது அவருடைய swansong. தன் அந்திம முதுமையில் இருபது முப்பது வருடங்கள் அதை எழுதுவதற்கு எடுத்துக்கொண்டுள்ளார்.  தனது நாற்பதுகளில் ஒரு இளம் எழுத்தாளர், பாவை சந்திரன் தன் முதல் நாவலாக எழுதியது 700 பக்கங்கள் கொண்ட நல்ல நிலம் (1998) அது ஒரு தஞ்சை கிராமத்தின் விவசாய குடும்பத்தின் மூன்று தலைமுறை வரலாறு. அந்த வரலாறு, தமிழ் நாட்டில் இருபதுக்களி லிருந்து நீளும் சமூக, அரசியல் சரித்திரத்தையே பிரதிபலிப்பதாக உள்ளது. ஒரு முதல் நாவலே ஒரு சாதனையாக, தமிழ் இலக்கியத்துக்கு சிறபபான சேர்க்கையாகியுள்ளது. சுந்தர ராமசாமியின் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் (1998) என்னும் இன்னொரு பிரம்மாண்ட நாவல் சுந்தர ராமசாமியின் குடும்பம் நிரந்தரமாக நாகர்கோயிலுக்குக்  குடி பெயரும் முன்,   கேரள மாநிலத்தின்  கோட்டயத்தில் 1937 லிருந்து 1939 வரை  கழிந்த  இள்மைக் காலத்தை விரிவாகச் சொல்கிறது, மறுபடியும் 700 பக்கங்களில். ஜெயமோகனும் (1962) தன் பங்குக்கு விஷ்ணுபுரம் என்னும் 700 பக்க நாவலை எழுதியுள்ளார். இந்த நாவலின் விஸ்தாரமும், எழுத்துத்திறனும், உத்தி பெருக்கமும் அவ்வளவு சுலபமாக வாசித்துவிடக்கூடிய ஒன்றல்ல. பிரமிக்க வைக்கும் சொல்திறனும், கற்பனை விசாலமும் கொண்டது. அனந்த சயனமாக வீற்றிருக்கும் சிலை ஒன்று கற்பக்கிரஹத்திலும் அதைச் சுற்றி ஒரு பெரும் கோயிலும், விஷ்ணுபுரம் என்ற இடத்தில் எல்லாம் கற்பனையே யானாலும் அது அனந்த சயன கோலத்தில் இருப்பதால் விஷ்ணு என்ற நம்பிக்கையும் தான் மையமாக உள்ளன இந்த பிரம்மாண்ட கற்பனைக்கும் நாவலுக்கும். இன்னுமொரு நம்பிக்கை, ஒரு புறம் கவிழ்ந்து சயனத்திலிருக்கும் இந்த சிலை மறுபுறம் புரளுமானால் நிகழும் ஒரு மகா பிரளயத்தில் இந்தக் கோயிலும் சுற்றியுள்ள அத்தனையும் வெள்ளத்தில் மூழ்கும் என்ற நம்பிக்கையும் கூட நிலவுகிறது. நாவல் பல நூற்றாண்டுகளின் நம்பிக்கைகளின் மதங்களின் போராட்ட சரித்திரத்தை, ஆதிகுடிகளின் காலத்திலிருந்து, பின்னர் வந்த பிராமணியம் அதைத் தொடர்ந்த பௌத்தம் அதன் பின்னர் பிரளயம் என கதையாடல் முன்னும் பின்னுமாக ஊஞ்சலாட்டத்தில் சலனிக்கிறது. சரித்திரம் கொள்ளும்  ஒரு மாதிரியான சுழல் இயக்க குறிப்புணர்த்தலில், நாட்டின் மத, பண்பாடுகளின் சரித்திரம் எல்லாம் நாவல் என்னும் இந்த சிமிழுக்குள் அடைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரம்மாண்ட எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய வளமான கற்பனை, பாண்டித்யத்தையும், சொல்திறனையும், உத்தி சிருஷ்டியையும் சாட்சியப்படுத்துகிறது. நிகழ்கால தமிழ் இலக்கியத்தில் விஷ்ணுபுரத்தில் காணும் ஜெயமோகனின் சொல் வளத்திற்கும், கற்பனைத் திறனுக்கும், நாவல் களத்தின் விசாலத்திற்கும் மொழியைக் கையாளும் லாவகத்திற்கும் இணை நிற்கும் இன்னொரு எழுத்தாளரை சமகாலத்தில் காண்பதற்கில்லை என்று தான் தோன்றுகிறது. இதன் விளைவாக ஜெயமோகன் அதீத ஆவேசம் மிக்க பாராட்டுக்களுக்கும், அதே போல இன்னொரு கோடியில் அதே ரக வசையாடலுக்கும், சிதையில் எரித்துவிடத் தோன்றும் வெறுப்புக்கும் ஆளாகியிருப்பது ஆச்சரியம் தரும் ஒன்றல்ல.

 

இங்கு சற்று மேலே சொல்லப்பட்ட இப்புத்தகங்கள் அனைத்தும் கடந்த இரண்டு வருடங்களுக்குள் வெளியானவை. இவை எதுவும் ஏற்கனவே நிலைபெற்றுவிட்ட பிரசுர ஸ்தாபனங்கள் எதுவும் வெளியிட்டவை அல்ல. சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் தம் முயற்சியில் வெளியிட்டவை. ஒரு சிருஷ்டி இலக்கியம் சந்தை நிலவரங்களின் அல்லது, சமூக நிலையின் சாதக பாதகங்களைச் சார்ந்து எழுதப்படுவதில்லை தான். ஆனால் புத்தகங்கள் வாங்கும் கலாசாரமே அற்று இருக்கும் சூழலில் ஒரு எழுத்தாளன் தன் புத்தகஙக்ளைத் தன் செலவிலேயே வெளியிடத் தூண்டுவது எது?

 

இருப்பினும் ஆச்சரியங்களிலும் ஆச்சரியம், ஜெயமோஹனின் புத்தகமும், சுந்தர ராமசாமியின் புத்தகமும் ஒன்று பிரசுரமான ஒரு சில மாதங்களிலும் மற்றது ஒரே வருஷத்திற்குள்ளும் விற்றுத் தீர்ந்தன. இந்த நிலை முற்றிலும் நம் புரிந்து கொள்ளலுக்கு அப்பாற்பட்ட ஒன்று. ஒரு வேளை நம் கண்களுக்கு வெளிப்பட தெரிவதற்கும் அப்பால் வேறு காரணங்கள் இருக்கக் கூடும். இந்த தமிழர்கள் நான் கடந்த ஐம்பது அறுபது வருடங்களாக அறிந்திருந்த தமிழர்கள் இல்லை. எனக்கு இந்த மாற்றம் பிடித்திருக்கிறது தான். ஆனால் என்னால் புரிந்து கொள்ளத் தான் முடியவில்லை.

—————-

Series Navigationதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

8 Comments

  1. Avatar
    ameethaammaal says:

    தஙகளைப் போன்ற இலக்கிய விமர்சகர்கள் இருக்கும்வரை இலக்கியங்கள் சாகாது உங்களைப் பற்றிய ஒரு செய்தியை நாடக மேதை திரு இரானுஜம் குறிப்பிட்டிருக்கிறார். இங்கும் தாங்கள் நாடகம் பற்றிய சிந்தனையைச் சொல்லி யிருக்கிறீர்கள். பெருமையாக இருக்கிறது. நானும் 3 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறேன். சிலர் என்னிடம் என் முன்னுரையை மட்டுமே விமரிசிப்பார்கள். பிறகுதான் தெரிந்தது அவர்கள் படித்தது முன்னுரை மட்டுமே என்று. வாழ்க உங்களின் இலக்கியத் தொண்டு

  2. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    தமிழிலக்கியத்தின் ஐம்பது வருட போக்கை சுருக்கமாக அழுத்தமாக தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றிகள் வெ.சா சார்.

    அனேகமாக இன்னும் ஓரிரு முறை படித்து புத்தகங்களின் பெயர்களை குறிப்பெடுத்துக்கொள்ளவேண்டும்.

    இந்த நேரத்தில் புத்தக வாசிப்பை பற்றி எனது ஆதங்கம் :

    குறைந்தபட்சம் ஏழு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட – 80 சதம் எழுத்தறிவு தேர்ச்சி கொண்ட – தமிழகத்தில் இன்னமும் ஒரு எழுத்தாளனின் புத்தகம் ஆயிரம் காப்பிகள் விற்க ஒரு வருடம் ஆகிறது என்றால், இதை என்னவென்று சொல்ல ? அதுவும் நட்சத்திர எழுத்தாளர் என்றால் மட்டும்தான் ஆயிரமாவது. மற்ற எழுத்தாளர்களுக்கு ?

    இதோ விமலாதித்த மாமல்லன் சொல்கிறார் : (விற்றதும் கற்றதும் (சொன்னது 2001-ல்)


    சென்ற வருடம், பதினாறு வருட இடைவெளி வேறு. இணைய எழுத்தாளர்கள் நட்சத்திர அந்தஸ்துடன் இலக்கிய வானில் ஜொலிக்கிறார்களே லோகம் சுபிட்சமடைந்துவிட்டது போலும் என்கிற மூட நம்பிக்கையில் யதார்த்த நிலைமை தெரியாமல் அப்பாவியாக மனுஷ்ய புத்திரனிடம் அடுத்த பதிப்பின்போது களையவேண்டிய சில பிழைகள் பற்றிக் கூறத்தொடங்கினேன்.

    புத்தருக்குரிய மோன வதனத்துடன், ஒரு வருஷத்துல எவ்ளோ போகும்னு நெனைக்கிறீங்க? என்றார் கண்ணாடிக்குள்ளிருந்து பார்த்தபடி.

    நிலவரம் தெரியாததாலும் கூடுதலாகச் சொல்லிவிடுவோமோ என்கிற கூச்சத்தாலும் தயங்கித் தயங்கி 300 என்றேன்.

    அடுத்த வருஷம் இதே இடத்துல சந்திப்போம். 70 காப்பி போயிருந்தா உங்க புக்கு ஹிட்டுன்னு அர்த்தம் என்றார்.

    இங்கே அமெரிக்காவில் என் நண்பரொருவர் தன குடும்பத்தோடு ஆப்ரிக்கா சுற்றுலா சென்று வந்தார். அது பற்றி கேட்டபோது ஒரு விஷயம் தெரிந்தது.

    இலக்கிய – புத்தக வாசிப்பில் ஆர்வம் உள்ள ஒரு நியூசிலாந்துகார தனி மனிதர் ஒருவர் சிறுவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் சென்று பள்ளிப்பிள்ளைகளுக்கு இலக்கிய வினாடி வினா நடத்துகிறாராம். தனது சொந்த செலவில். அதன்படி ஒரு புத்தகத்தை குறிப்பிட்டு வாசிக்கச்சொல்லி, அதிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு (பாத்திரப்படைப்பு பற்றி, புத்தகத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட சம்பவம் பற்றி, நூலாசிரியர் பற்றி இப்படி) அதில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு பெற்றோரோடு சுற்றுலா செல்ல தனது சொந்த செலவில் பரிசளிக்கிறாராம். அப்படி தன் மகன் வென்று கிடைத்த பரிசுப்பணத்தில்தான் ஆப்ரிக்கா சென்று வந்ததாக சொன்னார் நண்பர்.

    அதை கேள்விப்பட்டதில் இருந்து அப்படி ஏதேனும் கேரட் காட்டினால் மாற்றம் நிகழுமோ என்று தோன்றுகிறது.

    அல்லது, ஜெயமோகன் சொல்லியிருந்தார். ‘தமிழனுக்கு எதையும் சினிமா மூலமாக சொன்னால்தான் புரியும் போல’ என்று. அதுபோல வெள்ளித்திரை தாரகைகள் சொன்னால் ஒருவேளை முன் தோன்றிய மூத்த குடி கேட்குமோ என்னமோ ?

  3. Avatar
    SOMASUNDARAM says:

    KAVALAI-written by Azhahiya naayahi ammal is not a Dalith.She studied up to eighth std.This nowel was written in her own handwritting.Sahithya Academy Awardee and popular writter Ponneelan is her son.Thiru. Ve.Sa. conveniently left the Left wing writters.

  4. Avatar
    வெங்கட் சாமிநாதன் says:

    அழகிய நாயகி அம்மாள் பற்றி சொன்ன திருத்தத்த்ற்கு நன்றி. நான் கவனமாக இருந்திருக்க வேண்டும்.

    அடுத்து, இடது சாரி எழுத்துக்களைப் பற்றி எழுதாது விட்டது நீங்கள் சொல்லும் சௌகரியம் காரணமாக அல்ல. நான் எதுவும் இலக்கியம் அல்ல என்ற காரனத்தால். அதே போல் தான் திராவிட இயக்கத்தார் எழுதிக் குவித்தது பற்றியும் இயல்பாகவே தவிர்த்து விட்டேன்.

    இப்படி இதை ஏன் விட்டாய் அதை ஏன் எழுதினாய் என்று எழுதுவது பொறுப்பற்ற காரியம். விடப்பட்டது ஏன் விடப்படக் கூடாதது என்பது பற்றி எழுதினால் அது உங்கள் பார்வையை, பொறுப்பைக் குறிக்கும்.அதோடு விவாதத்துக்கும் இடம் தரும்.

  5. Avatar
    Dr.G.Johnson says:

    தமிழ் இலக்கியப் படைப்புகளைப் பற்றிய விமர்சனமும், ஆய்வும், கண்ணோட்டமும் அருமையாக பயனுள்ள வகையில் எழுதப்பட்டுள்ளது. ! இதயம் கனிந்த வாழ்த்துகள் . அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  6. Avatar
    IIM Ganapathi Raman says:

    இக்கட்டுரை சொல்வனம் என்ற வலதுசாரி இணைய இதழில் வெளிவந்தது. சிலபல வரிகள் மாற்றப்பட்டு அல்லது நீக்கப்பட்டிருக்கலாம்.

    சாமிநாதனின் இந்த இலக்கிய விமர்சன வரலாற்றில் உள்ள குறைகள் பல. அவற்றில் ஒன்று: ஓவ்வொரு படைப்பையும் பற்றிப்பேசும் போது அதன் படைப்பாளியின் பயோ மற்றும் அப்படைப்பின் கருப்பொருள்; அப்படைப்பின் தாக்கம் – குறிப்பாக இங்கே இமயத்தில் நாவல் எப்படி தலித்துகளால் தாக்க்கப்பட்டு வருகிறது என்பது போல – என்று சொல்லிவிடுகிறார்.

    முதலில் செய்ய வேண்டியது இவையல்ல. ஒரு படைப்பு எப்படி சிறந்தவிடத்தையடைகிறது என்றால் அது படிப்பதற்கு சுவையாக இருப்பதால். அதன் இலக்கியத்தரம் நல்கும் சுவை. வெறும் கருப்பொருளோ, ஆசிரியரின் பயோ டாட்டாவோ உதவா.

    கருப்பொருளை கையாளும் விதத்தில்தான் மாற்றம். சொதப்பலாம். சிதைக்கலாம். சிறந்த இலக்கியமாக்கலாம். கருப்பொருள் எத்தகையதாகவிருந்தாலும் சரி. இலக்கியமாக்கலாம் படைப்பாளிக்கு அவ்வல்லமையிருந்தால்.

    ஏன் சாமிநாதன் இதைக்கண்டு கொள்ளவேயில்லை. ஒருவேளை இலக்கியத்தரத்தை வாசிப்போருக்கே விட்டுவிடுகிறார் போலும். இலக்கிய வரலாறு எழுதுவோர அப்படிச்செய்வதில்லை. வெறும் வரலாற்றில் கூட அறிஞர்கள் சிலசமயம் தம் கருத்துக்களையும் சொல்லிச்செல்வர். அப்படியிருக்க இலக்கிய வர்லாற்றில் கண்டிப்பாகச் செய்யப்பட வேண்டும்.

    தலித்து இலக்கியம் அம்மக்களின் பேச்சுநடையைப் பயன்படுத்தலாம். அதனால் ஏதாவது பலனுண்டா? இல்லையா? அதாவது இலக்கியத்தரத்தை உயர்த்த உதவுகிறதா? இக்கேள்விகளுக்கு விடைகளெங்கே?

    தமிழ் இலக்கியத்தில் சிறந்த மைலகல்களாக சங்க இலக்கிய காலம் போற்றப்படுகிறது. அப்பாக்களில் பல வரலாற்று நிக்ழவுகள் சொல்லப்படுகின்றன. வரலாற்றாயவாளர்கள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை இன்றும் நின்று நிலவக்காரணம் அவை ஒரு மஹத்தான இலக்கியம் என்பதாலே மட்டும்தான். அள்ளஅள்ளக் குறையா ஆபுத்திரனின் அட்சய பாத்திரமது. இலக்கியயின்பம்தான் அது.

    அதே போல இன்றைய இலக்கியம் ப்ராபகாண்டாவாக் இருக்கலாம். இன்றைய வாசகர்களைத் தாக்கலாம். ஆயினும் அவை இலக்கியமா இல்லையா என்பதையும் ஒரு இல்க்கியவரலாற்று விமர்சகர் சொல்லவேண்டும். இலக்கியம் என்பது ஆயிரங்காலத்துப்பயிராக இருக்கவேண்டும்.

    வெறும் பிராபகாண்டா என்றால் நம் காலத்திற்கப்புறம் காலாவதியாகி காணாமற்போய்விடும்.

  7. Avatar
    admin says:

    அன்புடையீர்
    பின்னூட்டங்களை சுருக்கமாக படைப்பின் மையத்துடன் தொடர்பு கொண்டதாக அமைக்கவும்.
    விரிவாக எதிர்வினை ஆக்க எண்ணினால் தனிக் கட்டுரையாக அனுப்பவும்.

  8. Avatar
    admin says:

    IIM Ganapathi Raman:
    தங்கள் மின் அஞ்சல் முகவரி போலி என்று அறிகிறோம்.
    தங்களுக்கு அனுப்பிய அஞ்சல் திரும்பி விட்டது.
    இது தவறான செயல்.
    ஆசிரியர் குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *