ஊழலின் செயல்பாட்டை இரு கண்ணோட்டங்களில் புரிந்து கொள்ளலாம். ஒன்று அமைப்பு ரீதியில்; மற்றொன்று அன்றாட வாழ்வின் தளத்தில். அமைப்பு சார் ஊழல்கள்(systemic corruption) சமுதாயத்தைச் சீரழிக்கின்றன. பொருளாதாரத்தைப் பாழடிக்கின்றன. அலைக் கற்றை, நிலக்கரி, மணல், நிலம் என்று ஒன்றையும் விட்டு வைக்காமல் இயற்கைத் தாதுப் பொருட்களைச் சுரண்டி இந்தியாவில் நிகழ்த்தப்பட்டுள்ள ஊழல்கள் இதனைத் தெளிவாக்குகின்றன. அன்றாட வாழ்வில் நிகழ்த்தப்படும் ஊழல்கள் அமைப்பு சார் ஊழல்கள் போலல்லாமல் மக்களை நேரடியாய்ப் பாதிக்கின்றன. நச்சாய் நச்சரிக்கின்றன. இவை மக்கள் மேல் விதிக்கப்படும் மறைமுக வரி போன்று அமைகின்றன. இவை சில்லரை ஊழல்கள்.(retail corruption). இவற்றைப் பட்டியலிட்டால்-மின்னிணைப்பு வாங்க, சமையல் எரிவாயு, குடும்ப அட்டை வாங்க, பாஸ்போர்ட் சோதனைக்கு வரும் காவல்துறையினருக்குக் கொடுக்க, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் பெற, அதிகமாய்ச் செலுத்திய வருமான வரியின் மீதம் வாங்க, ரயில் பயணத்தில் இருக்கை பதிவு பெற – என்று நீண்டு கொண்டே செல்லும். www.ipaidabribe.com என்ற இணைய தளத்தில் வாசித்தால் இவ்வளவு சில்லரை ஊழல்களா என்று முகத்தில் அறை விழுகிறது. இந்த இணைய தளம் ஊழலுக்கு எதிராகப் போராடும் வித்தியாசமான இணைய தளம். இது வரை ( 29, ஆகஸ்ட்,2013) 20.990 ஊழல் விவரணங்கள் இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் கைமாறி இருக்கும் லஞ்சத் தொகை Rs 181.65 கோடி. நம்ப முடியவில்லையா? சிறு துளி பெரு வெள்ளம்!
பெரும்பாலும் இந்தச் சில்லரை ஊழல்கள் மக்கள்/பொதுச் சேவையின் விநியோகச் சங்கிலியில்( supply chain in the public service) கண்ணிகளாய்ப் பல அதிகார மட்டங்களில் இருக்கும் அரசுப் பணியாளர்களுக்கு(public servants), தங்களுக்கு சட்டப்பூர்வமாகக் கிடைக்க வேண்டிய சேவைகளுக்கும் பயன்களுக்கும் கூட மக்கள் அவற்றை விரைவாகப் பெற லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் என்ற வகையில் அமைகின்றன. இந்த அரசுப் பணியாளர்கள் வாயிற்காவலர்கள்(gate keepers) போன்றவர்கள். லஞ்சம் தரா விட்டால் இந்த வாயிற் காவலர்கள் சேர வேண்டிய சேவைகளின் ’கதவம்’ திறக்க மாட்டார்கள். இழுத்தடிப்பார்கள். அலைக்கழிக்க வைப்பார்கள்.
எப்படி இந்த மாதிரியான சில்லரை ஊழல்களில் ’புழங்கும்’ லஞ்சங்களை ஒழிப்பது? இப்போதுள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தில்(Prevention of Corruption Act, 1988) லஞ்சம் கொடுப்பவரும் லஞ்சத்திற்குத் துணை போவதால், லஞ்சம் வாங்குபவர் போல் குற்றம் புரிந்தவரே. லஞ்சம் கொடுப்பவரும் தண்டனைக்குரியவர். இந்த ஊழல் தடுப்புச் சட்டம் நடைமுறையில் எவ்வளவு விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுகிறது என்பது விவாதத்திற்குரியது. இப்போதுள்ள சட்டம் பெரும்பாலும் லஞ்சம் என்ற பேரம் நடந்த பின்னால் துரத்துகிறது. அதுவும் சம்பந்தப்பட்ட இருவரையும்-லஞ்சம் கொடுப்பவரையும் லஞ்சம் வாங்குபவரையும்- துரத்துகிறது. இதைக் கொஞ்சம் மாற்றிப் பார்த்தாலென்ன? இப்படி ‘கட்டத்திற்கு வெளியேயான’(out of the box) ஒரு கேள்வியை முன் வைக்கிறார் பொருளியல் அறிஞரும் (Economist), இந்தியாவின் முன்னாள் தலைமைப் பொருளியல் ஆலோசகராயுமாய் ( Chief Economic Advisor) இருந்த கெளசிக் பாசு ( Kaushik Basu). இவர் சில்லரை ஊழல்களில் புழங்கும் லஞ்சங்களை ’ அலைக்கழிப்பு லஞ்சங்கள்’(harassment bribes) என்கிறார். இந்த அலைக்கழிப்பு லஞ்சங்களில் லஞ்சம் கொடுப்பதைச் ’சட்டப்பூர்வமாக்கினால்’ என்ன என்கிறார். அதிர்ச்சியாயிருக்கிறதா?(லஞ்சம் வாங்குவதையல்ல; கவனிக்க வேண்டும்) இப்படி ஒரு வித்தியாசமான கருத்தை அலைக்கழிப்பு லஞ்சங்களை ஒழிக்கும் அல்லது குறைக்கும் தீர்வாக முன் வைக்கிறார். ஆட்டக் கோட்பாடு( Game Theory) என்ற பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையில் அவர் முன்வைத்த தீர்வு பரவலான விவாத அலைகளை எழுப்பியது. சுருக்கமாக அவரது கருத்தாக்கத்தைக் காண்போம். (அவரின் முழுக் கட்டுரையை (Why, for a class of bribes, the act of giving a bribe should be treated as legal( March 2011)) மத்திய நிதியமைச்சக இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.)
லஞ்சம் ஒரு ஆட்டம். முன்னமே சொன்னது போல் லஞ்ச ஆட்டத்தில் விளையாடுபவர்கள் இருவர்- லஞ்சம் வாங்குபவர்(bribe taker), லஞ்சம் கொடுப்பவர்(bribe giver). லஞ்சம் வாங்குபவருக்கு ஊக்கத் தொகை கிடைக்கிறது. லஞ்சம் கொடுப்பவருக்கு விரைவில் வேலை முடிகிறது. இது இருவருமே ஒத்துழைத்து விளையாடும் ஆட்டம்(cooperative game). இதனால், லஞ்சம் கொடுப்பவரும் இதை லஞ்ச ஒழிப்பு அதிகார அமைப்பிடம் புகார் செய்வதில்லை. அப்படிச் செய்தாலும் இப்போதுள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்சம் கொடுத்தவரும் குற்றத்திற்குத் துணை போனவராய்த் தண்டிக்கப்படுவார். அதனால் லஞ்ச நிகழ்வை வெளிக் கொணர்வதற்கான ஒத்துழைப்பை லஞ்சம் கொடுப்பவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இப்போதுள்ள சட்டமும் முன்னர் சொன்னது போல் அதை ஊக்குவிப்பதாயில்லை. கெளசிக் பாசு லஞ்சம் வாங்குபவரும், லஞ்சம் கொடுப்பவரும் ஒத்துழைத்து விளையாடும் ஆட்டத்தை ஒத்துழையாது விளையாடும் ஆட்டமாக(non-cooperative game) மாற்றும் விதத்தைச் சொல்கிறார்.
இப்போதுள்ள சட்டத்தின் படி லஞ்சம் வாங்குபவருக்கு தண்டனை X என்றும், லஞ்சம் கொடுப்பவருக்கு தண்டனை X என்றும் வைத்துக் கொள்வோம். இதை லஞ்சம் வாங்குபவருக்கு தண்டனை 2X என்றும், லஞ்சம் கொடுப்பவருக்கு தண்டனை ஒன்றுமில்லையாய் (0X) சட்டத்தை மாற்றினாலென்ன? அதாவது லஞ்சம் கொடுப்பவருக்கு சட்டத்தின் தண்டனையிலிருந்து முழு விலக்கு கொடுக்கப்படும். அது மட்டுமல்ல. லஞ்சம் வாங்குபவர், அவருக்கு மட்டுமே அதிகபட்ச தண்டனை என்பதோடு லஞ்சத் தொகையையும் அவர் திருப்பித் தர வேண்டுமென்றும் சட்டம் திருத்தப்பட வேண்டும். இதன் விளைவுகளென்ன? லஞ்ச ’ஆட்டம்’ ஆடும் தருணத்திலேயே -அதாவது லஞ்சம் நிகழ்த்தப்படும் தருணத்திலேயே- ஆட்டத்தின் பயன்பாடுகளாய்(pay-off) லஞ்சம் வாங்குபவருக்கு அதிக பட்ச தண்டனையும், லஞ்சத் தொகையைத் திருப்பியும் தர வேண்டும் என்பதும், லஞ்சம் கொடுப்பவருக்கு தனக்கு தண்டனையேதுமில்லை என்பதும்- வெளிப்படையாய்த் தெரிந்திருக்கும். இதன் அடிப்படையில் ஆடப்படும் லஞ்ச ‘ஆட்டத்தில்’ என்ன தூண்டுதல்களை (incentives)எதிர்பார்க்கலாம்?. முதலில், லஞ்சம் கொடுப்பவருக்கு அரசு அமைப்பு மற்றும் நீதித் துறையிடம் லஞ்சம் கேட்பவரைக் பிடித்துக் கொடுப்பதில் தயக்கமிருக்காது. ஏனென்றால் அவருக்கு எந்தவித தண்டனையுமில்லை; லஞ்சத் தொகையும் திருப்பிக் கிடைக்கும் உத்தரவாதம் உள்ளது. இதனால் லஞ்சம் கொடுப்பவரின் பயன்பாடும் அதிகபட்சமாகிறது. அடுத்து லஞ்சம் கொடுப்பவரிடமிருந்து இந்த எதிர்பார்க்கப்படும் உத்திக்கு(predicted strategy) லஞ்சம் கேட்பவரின் எதிர்பார்க்கப்படும் சிறந்த பதில் உத்தி என்னவாயிருக்கும்? லஞ்சம் வாங்கக் கூடாததாய்த் தான் இருக்கும். ஏனென்றால் லஞ்சம் வாங்கினால் தண்டனை அவருக்கு மட்டுமே. லஞ்சத் தொகையையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். அப்படியென்றால் லஞ்சம் வாங்குபவரின் பயன்பாடு லஞ்சம் வாங்கா விட்டால் தான் அதிகபட்சமாகும். இதனால் லஞ்சம் வாங்கலில்லாமல், அதனால் லஞ்சம் கொடுக்கும் அவசியமில்லாமல் லஞ்சம் நிகழும் சாத்தியம் குறைந்து போகிறது அல்லது இல்லாமல் போகிறது.
சுருக்கமாகச் சொன்னால், கெளசிக் பாசு சொல்வது இப்போதுள்ள சட்டம் லஞ்சம் கொடுப்பவரையும், லஞ்சம் வாங்குபவரையும் சமமாக நடத்துகிறது. அப்படியில்லாமல் அசமமாக(asymmetric) லஞ்சம் வாங்குபவருக்கு மட்டும் பாதகமாக- இருக்கும் வகையில் இன்றைய சட்டத்தில் உரிய திருத்தங்கள் அவசியம் என்கிறார். இது லஞ்சம் வாங்குபவரைப் பிடிப்பதற்கல்ல! முதலில் லஞ்சம் வாங்குபவரே லஞ்சம் வாங்க மாட்டார்! ஏனென்றால் முன்னர் சொன்னது போல் லஞ்சம் கொடுப்பவருக்கும், லஞ்சம் வாங்குபவருக்குமிடையே லஞ்ச நிகழ்வில் ஒரு பரஸ்பர ’நம்பிக்கையின்மையான’ சூழலை உருவாக்கும் போது, பிடிபடாமல் லஞ்சம் நிகழ்த்த முடியாதென்னும் நிலையில் லஞ்ச நிகழ்வுகள் முற்றிலும் ஒழியாமல் போனாலும் வெகுவாகக் குறைய வாய்ப்பிருக்கிறது.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது, லஞ்சம் கொடுப்பவருக்கு குற்றம் செய்து விட்ட பின்னால் -லஞ்சம் கொடுத்து விட்ட பின்னால்- முன்பிருந்து மன்னிப்பு ( retrospective pardon) உண்டு என்ற அர்த்தத்திலில்லை. அப்படியென்றால், பின்னால் எப்படியும் மன்னிப்பு உண்டு என்று சகட்டு மேனிக்கு லஞ்சங்கள் தரப்படுவது ஊக்குவிக்கப்பட்டு விடலாம். இதனால் சமூகத்தின் அறநெறிகளும் சீரழிந்து விடும் என்று எச்சரிக்கிறார் கெளசிக் பாசு. இங்கு லஞ்சம் கொடுப்பவரின் பங்கைக் குற்றம் நிகழ்வுறும் தருணத்திலேயே அல்லது நிகழ்வுக்குப் பின் குற்றவாளியை (லஞ்சம் வாங்குபவரை) உடனடியாகப் பிடித்துக் கொடுக்க உதவும் ஒரு ’விசில் எச்சரிக்கையாளர்’(Whistle blower) என்ற வகையில் தான் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் லஞ்சம் கொடுப்பவருக்கு புதிய சட்டத் திருத்தத்தில் தண்டனையிலிருந்து சலுகை என்பது சட்ட விரோதமான சகாயங்களைப் பெறுவதற்கல்ல; இழுத்தடிக்கப்படாமல் சட்டப்பூர்வமாகச் சேர வேண்டிய சேவைகள் அளிக்கப்படுவதை சாத்தியப்படுத்துவதிற்கு மட்டுமே.
பொருளியல் கோட்பாடின் படி , மேற்சொன்ன தீர்வு தர்க்க ரீதியில் ஒப்புக் கொள்ளத் தக்கதாயிருக்கும் போது, நடைமுறையில் இது சாத்தியப்படுமா என்று ஐயம் எழுகிறது. www.ipaidabribe.com என்ற இணைய தளத்தில் லஞ்சம் கொடுத்தவர்களிடம் லஞ்சம் பற்றிய தகவல்களோடு லஞ்ச நிகழ்வில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் பணியாளர்களையும் குறிப்பிட்டுச் சந்தியேற்றச் செய்யும் துணிச்சலைக் காண முடிகிறது. லஞ்சம் கொடுப்பவரும் குற்றத்திற்கு உடந்தை என்ற இன்றைய சட்டச் சூழலிலேயே இந்தத் துணிவும், தூண்டுதலும் இருக்கிறதென்றால், லஞ்சம் கொடுப்பவருக்கு புதிய சட்டத் திருத்தத்தில் தண்டனையிலிருந்து முழு விலக்கென்றிருப்பின் லஞ்ச நிகழ்வில் சம்பந்தப்படுவோரை சந்தியேற்றச் செய்யும் துணிவும் தூண்டுதலும் மேலும் கூடுவதற்கு வாய்ப்பிருக்கும். எனவே கெளசிக் பாசுவின் யோசனையை வெறும் ஏட்டுச் சுரைக்காய் என்றும் ஒதுக்கி விட முடியாது.
அதே சமயத்தில் இது கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிப்பது போலிருக்கிறதோ என்ற ஐயமும் எழாமல் இல்லை. மேற்சொன்ன உதாரணத்தில், ஆட்டம் ஒரு முறை தான் நடைபெறுகிறது( one time game). ஆனால் திருப்பித் திருப்பி ஆட்டம்(repetitive games) நடை பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். நடைமுறையில் மக்கள் தங்களுக்கான பொதுச்சேவை விநியோகச் சங்கிலியில் பல கண்ணிகளில் இருக்கும் வாயிற்காவலரோடு அடிக்கடி சம்பந்தப்பட வேண்டிய சூழலில், வாயிற்காவலரின் ’தயவு’ வேண்டியிருக்கிறது. இதனால் லஞ்சம் கொடுப்பவர் ஒத்துழைக்காத விளையாட்டு விளையாடுவாரா என்பது சந்தேகம். மேலும், தண்டனை முழுதும் லஞ்சம் வாங்குபவரின் மேல் எனும் போது லஞ்சம் வாங்குபவருக்கு ‘துணிச்சல்’(risk) கூடத் தேவை. கூடத் துணிச்சலுக்கு கூட லஞ்சம் கேட்பதாகி, தலைவலி போய் திருகு வலி வந்த கதையானாலும் ஆகி விடும். ழீன் டிரெஜ் (Jean Dreze ) என்ற வளர்ச்சிப் பொருளியல் அறிஞர் (development economist) கருதுவது போல இது வரை லஞ்சம் கொடுப்பதில்லை என்று உறுதியாயிருப்பவரையும் புதிய சட்டத் திருத்தம் லஞ்சம் கொடுக்கத் தூண்டினாலும் தூண்டி விடும். மேலும் லஞ்சம் கொடுப்பவர் எதிர்பார்த்தபடி லஞ்ச விவரங்களை வெளிக் கொணர முன் வந்தாலும் இன்றைய சட்டச் சூழலில் எவ்வளவு வேகமாய் விசாரணை முடிந்து அவருக்கு நீதி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. நீதிமன்ற வாசலில் ஏறி ஆண்டுகளாய் அல்லாடுவதை விடக் ’கொடுத்துத் தொலைத்து’ காரியத்தை முடித்துக் கொண்டால் என்ன என்று லஞ்சம் கொடுப்பவர் கருதினால் என்ன செய்வது? ஏனென்றால் ஆண்டுகளாய்க் காத்திருந்து நீதி பெற்றாலும் அதற்கும் ’செலவினம்’(cost) உள்ளது. இந்தச் செலவினம் ஆதாயத்தை(gain) விட அதிகமென்றால், லஞ்சம் வாங்குபவரின் எதிர்பார்க்கப்படும் பயன்பாடு( predicted pay-off/utility = gain – cost) எதிர்மறையாய் இருந்தாலும் இருக்கலாம்( <0). இதற்கு பதிலாக லஞ்சம் கொடுத்து விட்டுக் காரியம் சாதிப்பதில் எதிர்பார்க்கப்படும் பயன்பாடு நேர்மறையாயும்( >0) அதிகமாயும் இருந்தால், லஞ்சம் கொடுப்பது சிறந்த உத்தியாகி விடும்.
சில்லரை ஊழல்களுக்கான மேற்சொன்ன பொருளியல் சார் தீர்வு அமைப்பு சார் ஊழல்களுக்கு(systemic corruption) பொருந்துமா என்பது கேள்வி? அமைப்பு சார் ஊழல்கள் சில்லரை ஊழல்கள் போல் சாதாரணக் ‘கொடுக்கல் வாங்கல்’ போன்றவை அல்ல. புத்திசாலித்தனமாக அமைப்பு விதிகளும், நடைமுறைகளும் திரிபுபடுத்தப்பட்டு ,வளைக்கப்பட்டு அமைப்பு சார் ஊழல்கள் நிகழ்த்தப்படுகின்றன. இவற்றில் சம்பந்தப்பட்ட எல்லோருமே சட்டத்தின் படி குற்றத்திற்கும், தண்டனைக்குமுரியவர்கள். சில்லரை ஊழல்களில் போல் இங்கு லஞ்சம் கொடுப்பவருக்கு விதி விலக்கு இருக்க முடியாது. சந்தைப் பொருளாதாரத்தில் அரசு என்ற அமைப்பின் பங்கு குறைந்து போன நிலையில், எதிர்பார்த்தவாறு சந்தைப் போட்டி( market competition) வெளிப்படையானதாய் ஊழல்களற்றதாய் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதாரத்தைக் கட்டமைக்க உதவவில்லை. முன்னைய உரிம இராஜாங்கத்தில்(License raj) நிலவிய சலுகைகள், ஊழல்களை விட, சந்தைப் போட்டியில் ஊழல்கள் புதிய கோர வடிவங்களில் உருவேறிப் படங்காட்டுகின்றன. அன்றைய சத்யம் கணிணி (Satyam Computers) முதல் இன்றைய NSEL(National Stock Exchange Ltd) வரையான வணிகக்குழும ஊழல்களும், 2-ஜி அலைக்கற்றை போன்ற உலுக்கிப் போடும் மாபெரும் ஊழல்களும் நடந்தேறிய வகைகளைப் பார்க்கும் போது எப்படி புத்திசாலித்தனமாய்ப் பொருளாதாரக் குற்றங்களைச் செய்ய முடியும் என்று திகைப்பாயிருக்கிறது. சந்தைப் பொருளாதாரத்திலேயே உள்ளடங்கியிருக்கும் ‘சந்தைத் தோல்வி’யென்று (market failure) கூட இதைச் சொல்ல முடியாது; அதற்கும் மேலாக சந்தைப் பேரிடராகத்(market disaster) தான் இதைக் கருத முடிகிறது. சந்தைத் தோல்வியைக் கருத்தில் கொண்டு , அதைக் கண்காணித்துச் செயல்பட வேண்டிய ஒழுங்கு முறை அமைப்புகளும்(regulatory bodies) வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்று இந்தியாவில் வலுவாக இல்லை. வலுவாக்குவதற்கான அமைப்பு சார் சூழல்களை இன்னும் அரசு முழுமையாய் உறுதிப்படுத்தவில்லை. அறம் தனிமனித நிலையில் தனிமனிதனின் உள்ளார்ந்த பண்புகளைச் சார்ந்துள்ளது. ஆனால், அரசியல், சமூக மற்றும் பொருளாதாரத் தளங்களில், தனி மனிதனின் உள்ளார்ந்த பண்புகளை உரிய முறையில் தூண்டும் புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளை நிறுவினால் தான் அறம் அமைப்புமயமாய்(institutionalizing) நிறுவப்படுவதும் பேணப்படுவதும் சாத்தியமாகும். இந்தக் கண்ணோட்டத்தில் தான் பொருளியல் அறிஞர் கெளசிக் பாசுவின் யோசனை குறைந்த பட்சம் சில்லரை ஊழல்களை ஒழிப்பதற்கான கருத்தாக்கங்களுக்கு கட்டத்திற்கு வெளியேயான ஒரு முக்கியமான சிந்தனைப் பங்களிப்பாக இருக்கிறது.
————————————————————
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 54வது நினைவு நாள் நிகழ்
- எண்பதுகளில் தமிழ் இலக்கியம் (2)
- ஜாக்கி சான் – 10. சுட்டிப் பையன்
- தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்
- தமிழ் விக்கியூடகங்கள்
- தமிழ் விக்கிப்பீடியாவுக்கு 10 வயது
- தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு
- நீங்காத நினைவுகள் – 18
- திண்ணையின் இலக்கியத் தடம் -3
- திருவரங்கக் கலம்பகத்தில் மறம்
- தாகூரின் கீதப் பாமாலை – 84 புயல் அடித்த இரவில் .. !
- புகழ் பெற்ற ஏழைகள் -27
- தண்ணீரின் தாகம் !
- ஊழல் ‘ஆட்டம்’- ஒரு பொருளாதாரக் கண்ணோட்டம்
- மணல்வெளி
- காய்நெல் அறுத்த வெண்புலம்
- பொய் சொல்லும் இதயம்
- மயிலிறகு…!
- இதயம் துடிக்கும்
- கவிதைகள்
- வானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 21
- நிறையற்ற ஒளித்திரள்களை [Photons] இணைத்து மூலக்கூறு விளைந்து முதன் முதல் புது நிலைப் பிண்டம் கண்டுபிடிப்பு
- கவிதைகள்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம்-4 – ஸ்ரீ ராதை
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 30
- சீதாயணம் தொடர்ப் படக்கதை -1
- மரணவெளியில் உலாவரும் கதைகள்
- ~ சீதாயணம் ~ (முழு நாடகம்)
- இதய வலி
- இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும்.
- Grieving and Healing Through Theatre Canadian-Tamil artistes present 16th Festival of Theatre and Dance
- தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம் – 2