ஜாக்கி சான் 11. புதிய வாழ்க்கைக்கான அறிமுகம்

This entry is part 9 of 31 in the series 13 அக்டோபர் 2013

 

சானின் பெற்றோர் அடிக்கடி அவனது எதிர்காலம் பற்றி யோசனை செய்த வண்ணம் இருந்தனர்.

 

பிரன்சுத் தூதுவர் வீட்டில் செய்யும் வேலை எல்லாவிதத்திலும் சௌகரியமாக இருந்த போதும், அந்த வேலை மூலம் பணம் சேமிக்க முடியவில்லை.  வேறு எந்த எதிர்காலமும் இருந்ததாகத் தோன்றவில்லை.

 

அவர்களது வேலை நேர்த்தி பலருக்கும் தெரிய வந்ததன் காரணமாக, பல விதமான வேலைகள் சார்லஸ் சானைத் தேடி வந்தன.  அவற்றை ஒத்துக் கொள்வதா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டு இருந்த வேளையில், மறுக்கவே முடியாத நல்ல வேலை ஒன்றும் கிட்டியது.

 

ஆஸ்திரேலியாவில் இருந்த அமெரிக்கத் தூதுவரலுவலகத்தில் தலைமை சமையல் அதிகாரிக்கான பணி அது.  இதனால் ஆஸ்திரேலியா செல்லலாம்.  நல்ல சம்பளம் கிடைக்கும்.  அங்கேயே சில வருடங்கள் பணி செய்தால், ஆஸ்திரேலியக் குடியுரிமைப் பெறலாம்.  அதன் மூலம் எளிதில் அமெரிக்கா சென்று வாழும் வாய்ப்பும் கிட்டலாம்.

 

இத்தனை வசதிகளைப் பெற்றுத் தரும் அந்தப் பணியை ஏற்க சார்லஸ் முடிவு செய்தார்.  அதில் ஒரேயொரு சங்கடம்.  உடன் பாவ்வை அழைத்துச் செல்ல முடியாதது ஒன்றே.  அவனை எங்கே விட்டுச் செல்வது? படிப்பதற்கோ அவனுக்கு விருப்பமில்லை.  அதனால் அவனைப் பள்ளி விடுதிக்கு அனுப்பவதும் முடியாது.

 

வழக்கம் போல நண்பர்களிடம் அறிவுரை கேட்டார்.  அவர்கள் பாவ் பிறந்த போது ஆதரவாகப் பேசி குழந்தையை வைத்துக் கொள்ள வற்புறுத்தியது நினைவிருக்கலாம்.  ஆனால் இப்போது சூழ்நிலை முழுவதும் மாறிவிட்டது.  பாவ்வை எப்படி விட்டுச் செல்வது என்பதை மட்டுமே யோசித்தனர்.  வௌவேறு வழிகளில் சந்தித்தனர்.

 

“கடுமையான வாழ்க்கை.  இருந்தாலும் சிறந்தது.”

 

“ஒழுக்கத்தைக் கற்றுக்  கொள்வான்.”

 

“ஒரு காலத்தில் சிறந்தக் கலைஞனாக வரவும் வாய்ப்புண்டு.”

இப்படிச் சொல்லி நண்பர்கள் இறுதியில் சார்லஸை முடிவு எடுக்க வைத்தனர்.  அடுத்த பத்து ஆண்டுகள் ஜாக்கி வாழ வேண்டிய இடத்தை முடிவு செய்தனர்.  அது தான் யு ஜிம் யுன்னின் சீன நாடகக் கழகம்.

 

ஒரு நாள் அதிகாலைப் பயிற்சிக்குப் பின்னர், சார்லஸ், பாவ்விடம் “இன்றைக்கு நாம் வெளியே போகிறோம்” என்றார். ஏழு வயமான பாவ் அது வரை எங்குமே சென்றதில்லை.  தந்தையுடன் முதல் முறையாக வெளியில் போகப் போகிறான். இதைக் கேட்டதும் பாவ்வுக்கு மிகுந்த சந்தோசம்.  எங்கே என்று கூட கேட்காமல் கத்திக் கொண்டே தனக்குப் பிடித்தமான உடையை அணியச் சென்றான்.

 

பாவ்விற்கு பிறந்த நாளன்று, பிரன்சுத் தூதுவரின் உதவியோடு பெற்றோர் வாங்கிக் கொடுத்த கௌபாய் உடையை அணிந்து கொண்டான்.  அதனோடு அணிய வேண்டிய தொப்பி, தூப்பாக்கி அனைத்தையும் போட்டுக் கொண்டான்.

கிளம்பும் நேரத்தில் ஞாபகமாக தாய்க்கு கை காட்டிச் சென்றான்.  விக்டோரியா சிகரத்திலிருந்து பேருந்தில் ஏறி வளைந்து வளைந்து கீழே நகருக்கு வந்தனர்.

கீழுருந்த நகரத்தை பாவ் முதன்முறையாகக் கண்டான்.  அது மேலிருக்கும் சூழலை விட மிகுந்த வித்தியாசமாக இருந்தது.  விக்டோரியா சிகரம் மிகவும் அமைதியாக இடம். இங்கோ சலசலப்பு அதிகமாக இருந்தது.  நிறைய மனிதர்கள். அசுத்தம். சத்தம்.  பாவ்விற்கு ஆச்சரியமாக இருந்தது.

 

அங்கு வழியில் பல கடைகள் இருந்தன.  தந்தை வாங்கிக் கொடுக்க மாட்டார் என்ற முடிவோடு இருந்த போதும் கேட்டுத் தான் பார்ப்போமே என்று அங்கு விற்றுக் கொண்டிருந்த இனிப்பு பன்னை வாங்கித் தரும்படிக் கேட்டான். வழக்கத்திற்கு மாறாக, தந்தை அதை அன்போடு வாங்கிக் கொடுத்தார்.  பாவ் அன்றைய பொழுதை தனக்கு அதிர்ஷ்டமானதாக எண்ணிக்கொண்டு அதை உண்டான்.  அவர்கள் கௌலூன் செல்லும் படகுத் துறைக்கு வந்து சேர்ந்தனர்.

 

ஹாங்காங் மிகச் சிறிய நாடு.  அது பல தீவுகளைக் கொண்டது.  அதில் மிகப் பெரிய தீவு ஹாங்காங் என்று வழக்கப்படுகிறது.  லான்டாவ், லாமா, செங் சாவ் போன்றவை சிறிய தீவுகள்.  ஆங்கிலேயர்கள் சீனர்களிடமிருந்து, இந்த நிலபகுதிகளைப் பெற்ற பின்னர், பலவித சிறு சிறு சண்டைகளுக்குப் பின், சீன நாட்டுடன் ஒட்டியிருந்த சிறிய நிலப்பகுதியையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர்.  அதுவே கௌலூன் நிலப்பகுதி.

கொள்ளையர்களும் கடத்தல்காரர்களும் வாழ்ந்து வந்த இந்த நகரம் 1960களில் சட்ட திட்டங்களுக்கு ஆட்படாத நகரமாக இருந்தத.  கட்டுப்பாடில்லாமல் வாழ்ந்தனர்.  மக்கள் அனைவரும் விருப்பம் போல் செயல்பட்டனர்.  பணம் அதிகமாகப் புழங்கும் இடம். கொலைகளும் கொள்ளைகளும் தினம் தினம் நடக்கும் இடமாக இருந்தது. கௌலூனின் முக்கிய பகுதியான சிம் சா சுய் இப்படிப்பட்ட மக்கள் நிறைந்த இடம்.  வீதியின் வழி நெடுகிலும் கடைகள் இருந்தன.  மக்கள் கூட்டம் அலை மோதும் இடமாகவும் இருந்தது.

 

ஸ்டார் பெரி என்ற படகுத்துறையே கௌலூனுக்கு வாயிலாக இருந்தது.  கஷ்டப்பட்டு வாரம் முழுவதும் உழைத்துக் களைத்த ஹாங்காங் தீவுவாசிகளுக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் கொடுக்கும் இடமாக சிம் சா சுய் இருந்தது.  அது உல்லாச உலகமாக அப்போது எண்ணப்பட்டது.

 

பாவ் கடலை முன்பின் பார்த்தது கிடையாது.  படகிலும் சென்றதில்லை.  அதனால்  விக்டோரியா படகுத் துறைக்கு  வந்ததுமே பாவ்விற்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.  பார்ப்பது  அனைத்தும் வியப்பைத் தந்தது.  கூட்டம் கூட்டமாக வந்து போகும் மக்களைக் காண அதிசயமாக இருந்தது.  கௌபாய் உடையில் இருக்கும் சிறுவனைக் கண்டு சிலர் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றனர்.

அப்போது தான் “அப்பா எங்கே போறோம்?” என்று திடீரென நினைவுக்கு வந்தவனாய் கேட்டான்.

 

“முக்கியமான இடத்திற்கு” என்று மட்டுமே சார்லஸ் சொன்னார்.

 

படகுத் துறையில் நீல உடை அணிந்த பணியாள் கை காட்டியதும், அனைவரும் படகில் ஏற ஆரம்பித்தனர்.  பாவ்வும் உற்சாகத்துடன் படகில் ஏறினான்.  அதிகாலை என்பதால் அத்தனை கூட்டம் இருக்கவில்லை.  பாவ் படகில் அங்கும் இங்கும் ஓடி மகிழ்ந்தான்.  சார்லஸ் மகனுடன் ஒரு இடத்தில் அமர்ந்தார்.  பாவ் கடல் பயணத்தை மிகவும் ரசித்தான்.

 

கடல் பயணத்தை முழுமையாக உணரும் முன்பே, படகு அடுத்தத் துறைக்கு வந்து சேர்ந்துவிட்டது.  ஹாங்காங் தீவிற்கும் கௌலூன் பகுதிக்கும் இடையேயான தூரம் மிகக் குறைவே.  அதனால் படகு வேகமாக வந்து சேர்ந்தது.

 

அதிகாலையாக இருந்த போதும், அந்த தினமே தன் வாழ்க்கையின் மிகச் சந்தோசமான சிறந்த நாளாக முடிவு செய்து கொண்டான் பாவ்.

அத்தனை மக்களை இதற்கு முன் பாவ் ஒரு சேர பார்த்ததில்லை.  கூட்டத்தினர் மத்தியில் தந்தையுடன் நடப்பது மிகவும் கடினமாக இருந்தது.

 

நேதன் சாலை வழியாக கௌலூன் பகுதியில் வியாபாரத் தலமான சிம் சா சுய் பகுதியில் இருந்த வீதிகளில் நடந்து சென்றனர்.  வீதி விளக்குகளும் பல அடுக்கு மாடிக் கட்டடங்களும் விளம்பரப் பலகைகளும் நிறைந்த அந்த வீதிகளைக் காண பாவ்விற்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாக இருந்தது.

 

பல வீதிகளைக் கடந்து, சார்லஸ் ஒரு வீட்டிற்கு முன் நின்றார். “பாவ்.. நாம் வந்து விட்டோம்” என்ற அவர் சொன்னதைக் கேட்டு, சான் தலை நிமிர்ந்த பார்த்த போது, அங்கே ஒரு பலகையில் “சீன நாடகக் கழகம்” என்ற எழுதியிருந்தது. அது என்ன என்று பாவ்விற்கு அப்போது புரியவில்லை.

 

கதவைத் தட்டிவிட்டு காத்திருந்தனர்.  கதவு திறந்ததும், பதினோரு வயது மதிக்கத் தக்க ஒரு சிறுவன் நின்றிருந்தான்.

 

“என்ன வேண்டும்?” என்று கேட்டான்.

 

முதலில் சார்லஸை சந்தேகக் கண்ணோடு பார்த்தான் பின்னர் கௌபாய் உடையை அணிந்து கொண்டு பாவ் தன் தந்தையின் உடையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நிற்பதைக் கண்டதும், சார்லஸ் பதில் தரும் முன்னரே, “ஓ.. இன்னொருவனா?” என்று சொல்லிவிட்டு “வேடிக்கையாக இருக்கிறானே..” என்றான்.

 

“யூ அவர்களைப் பார்க்க வேண்டும்” என்றார் சார்லஸ்.  பின் தொடரும்படிச் சைகை காட்டி,  அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான் அச்சிறுவன்.

 

அப்போது அங்கு தான் தன்னுடைய வாழ்க்கையைத் தொடரப் போகிறோம் என்று சிறுவன் அறிந்திருக்கவில்லை.

 

—-

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 28அண்மையில் படித்தது – முனைவர் தெ.ஞானசுந்தரம் எழுதிய “ கம்பர் போற்றிய கவிஞர்”
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *