நீங்காத நினைவுகள் – 19

This entry is part 1 of 31 in the series 13 அக்டோபர் 2013

தொட்டதும் சுட்டதும்
தொட்டது
grija (1)கொஞ்ச நாள்களுக்கு முன்னால், ஒரு வார இதழில் “இந்துத்துவம் என்பது…’ எனும் தலைப்பில் எனது சிறுகதை ஒன்று வெளிவந்தது. அது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கதையாகும்.  ஆனால், அவ்வார இதழின் ஆசிரியர் நான் எழுதாத ஒரு வாக்கியத்தை ஒரு கதாபாத்திரம் சொல்லுவது போல் இடைச் செருகல் செய்து விட்டிருந்தார். “இந்துக்கள் மட்டுமே இந்தியர்கள்!” என்கிற அந்த இடைச்செருகல் மற்றவர்கள் இந்தியர் அல்லர் என்னும் கருத்தை உள்ளடக்கியதாக இருந்தது. அது எனது கருத்துப் போன்றும் ஒலித்தது. அதைப் பார்த்ததும் நான் பதறிப் போனேன்.  அது என் கொள்கைக்கு முரணானது என்பதால் மட்டுமல்லாது, அதைப் படிக்கும் என் இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்கள் என்ன நினைப்பார்கள் என்கிற வேதனையும் என்னுள் கிளர்ந்தது. அதிலும் அப்போது இந்து-முஸ்லிம் கலவரங்கள் நடந்து கொண்டிருந்த காலகட்டம். அந்த இதழின் ஆசிரியருக்கு உடனே அதைச் சுட்டிக்கட்டி ஒரு தந்தியும் கூரியரும் எழுத்தாள நண்பர் ஷங்கரநாராயணனின் உதவியால் அனுப்பி, எனது மறுப்பை அடுத்த இதழில் வெளியிடக் கோரினேன். ஆனால் அவர் அதைச் செய்யவே இல்லை. என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை.  எனது ஆதங்கத்தையும் வேதனையையும் தெரிவித்துச் சில பத்திரிகைகளுக்கும், எழுத்தாள நண்பர்களுக்கும் கடிதம் எழுதினேன். தவறிழைத்த ஆசிரியருக்கு நான் எழுதிய கடிதத்தையே வெளியிட்ட செம்மலர் மாத இதழ், “இந்துத்துவாவை இப்படியும் புகுத்த இயலுமோ?” என்றும், “ஓர் எழுத்தாளர் எழுதாததைக்கூட அதிர்ச்சியூட்டும் வண்ணம் செருகுவார்களோ!’ என்றும் தன் வியப்பை வெளிப்படுத்தியது. அந்தச் சிறப்புச் சிறுகதைக்கு எனக்கு அவர்கள் அனுப்பிய சன்மானக் காசோலையை அவர்களுக்கே திருப்பியனுப்பிவிட்டேன். என் கருத்து அல்லாத ஒன்று புகுத்தப்பட்ட கதைக்குச் சன்மானம் தேவையில்லை எனக்கூறி நான் எழுதிய அக் கடிதத்தைத்தான் சில இதழ்களுக்கும் எழுத்தாள நண்பர்களுக்கும் அனுப்பிவைத்தேன்.  ஆர்னிகா நாசர், படுதலம் சுகுமாரன், ராஜேஷ்குமார் ஆகியோர் எனக்கு ஆறுதல் கூறத் தொலைபேசினார்கள். லேனா தமிழ்வாணன் காசோலையைத் திருப்பியதைப் பாராட்டியும் எனக்கு ஆறுதல் கூறியும் கடிதம் எழுதினார். எல்லா எழுத்தாளர்களிலும் நண்பர் பாலகுமாரனின் கடிதம்தான் என் உள்ளத்தை அதிகமாய்த் தொட்டது. நான் சற்றே வெலவெலத்துப் போயிருந்ததைப் புரிந்துகொண்டு, கடிதத்தின் முடிவில் “பயப்படாதீர்கள்” என்று எழுதி இருந்தார்.  கடிதம் எழுதியதையும் விட அவர் தமது எத்தகைய பெரும் சுமைகளுக்கிடையே அதை எழுதினார் என்பதுதான் என்னை அதிகமாய்த் தொட்டது. அவருடைய அருமை மகளுக்கு இன்னும் ஒரே வாரத்தில் திருமணம் நடக்க விருந்தது. மிக விரைவில் திருமணம் நடக்க இருக்கும் வீடு எத்தகய அமர்க்களத்தில் இருக்கும் என்பதும் அந்த நெருக்கடியிலும் பாலகுமாரன் எனக்கு ஆறுதலாய்க் கடிதம் எழுதினார் என்பதும் தான் அவரது கடிதம் என் உள்ளத்தை அதிகமாய்த் தொட்டதற்குக் காரணங்கள்.
சுட்டவை
1.    எனது கவனக்குறைவால் நேர்ந்த தவறு ஒன்று இன்றளவும் என்னைச் சுட்டுக்கொண்டிருக்கிறது. 1981 இல் வெளிவந்த எனது குறுநாவல் ஒன்றைப் படித்துவிட்டு ஓர் இளைஞர் அது பற்றி விமர்சித்து எனக்குக் கடிதம் எழுதி யிருந்தார். அதில் தாம் பத்தாம் வகுப்பில் படிப்பதாகவும், பக்கத்து ஊருக்கு நடந்து போய்ப் படித்து வருவதாகவும்,  ஆண்டுத் தேர்வுக்குப் பணம் கட்டக் கூட இயலாத நிலையில் இருப்பதாகவும், “வறுமையைத் தவிர வேறு எதையும் நான் அறியாதவன்” என்றும் குறிப்பிட்டிருந்தார். அவ்விளைஞர் இருந்தது ஒரு பட்டிக்காடு. அதன் பெயர் கடிதத்தின் தொடக்கத்தில் வலப்புறம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஊரின் பெயரையும் முகவரியையும் நான் மனத்தில் வாங்கிக்கொள்ளவில்லை. எழுதிய இளைஞனின் பெயரை மட்டுமே நினைவில் பதித்துக்கொன்டிருந்தேன். அலுவலகம் சென்றதும் அவருக்குப் பணவிடை அனுப்புவதற்காக என் கைப்பையில் இருந்து அவரது கடிதத்தை எடுக்க முற்பட்ட போது அது அதில் காணப்படவில்லை.  வீட்டில் அதைக் கைப் பிசகாக மேசை மீது போட்டிருப்பேன் என்றெண்ணி உடனே என் அம்மாவோடு தொலைபேசினேன்.  மேசையின் மீதோ அல்லது தரையிலோ எந்தக் கடிதமும் இல்லை என்று அம்மா பதில் சொன்னார். மாலை வீட்டுக்குப் போய்த் தேடியும் அது கிடைக்கவில்லை. வேறு சில தாள்களுடன் அதைக் கைப்பையில் வைக்கும்போது அது தரையில் விழுந்திருக்கலாம், அதைப் பணிப்பெண் தெருக்குப்பைக் கூடையில் பிற குப்பைகளுடன் போட்டிருக்கலாம் என்று தோன்றியதில், நான் சொல்லி மாளாத வேதனைக்கு உள்ளானேன். என்னிடமிருந்து உதவி கிடைக்கும் என்று நம்பி, நாசூக்காகத் தனது வறுமையைத் தெரிவித்த அவ்விளைஞர் எத்தகைய ஏமாற்றமடைவார் என்றெண்ணி அன்று சரியாகத் தூங்காமல் இருந்தேன்.  ஊரின் பெயரையேனும் மனத்தில் வாங்கியிருந்தால், அஞ்சல் துறையில் பணிபுரிந்துகொண்டிருந்த என்னால் அவரது முகவரியை எளிதாய்க் கண்டுபிடித்திருந்திருக்க முடியும்.  அதைச் செய்யத் தவறியதால் உதவ நினைத்தும் அதைச் செயல்படுத்த முடியாமல் போயிற்று. அவர் என்னைப் பற்றி என்ன நினைத்தாரோ என்று நினைக்குந்தோறும் என்னை வேதனை பிடுங்கித் தின்னுகிறது. அவர் எப்படியோ படித்து முடித்து இன்று ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்திருக்கக் கூடும்.இதை அவர் படிக்க நேர்ந்தால், எனது கவனக்குறைவை மன்னித்ததாய் ஒரு வரி எழுதினால் என் மனம் அமைதியடையும்.

2.       அண்மையில் ஈரோட்டில் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் புத்தக விழா ஒன்றை நடத்தினார்கள். எழுத்தாளர்கள் சிவசங்கரி, இந்துமதி, விமலரமணி, கவிஞர் இரா. மீனாட்சி ஆகியோருடன் நானும் அவ்விழாவில் பங்கு பெற்றேன். எப்போதுமே சரியாக எட்டரை மணிக்கு விழா முடிந்து விடுவது வழக்கமாம். அன்று ஒன்பது மணியாகிவிட்ட்து. இரவு உணவை உண்டபின் ரெயிலைப் பிடிக்க ஒரு மணி நேரம்தான் இருந்தது. எனவே அவசரமாய் எங்களைக் காருக்கு விழாக் குழுவினர் இட்டுச் சென்றார்கள். அப்போது வழியில் எதிர்ப்பட்ட பெரிய்வர் ஒருவர் எனக்கு வணக்கம் சொல்லிப் பேச முற்பட்டார். அந்தக் காலத்தில் வார இதழ்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த என் சிறுகதைகளை யெல்லாம் தாம் தொகுத்து ‘பைன்ட்’ செய்து    வைத்திருந்ததாகவும், அதைப் படிக்க இரவல் வாங்கிச் சென்ற ஒருவர் திருப்பிக் கொடுக்கவே இல்லை என்றும் முறையிடுகிற குரலில் என்னிடம் கூறினார். அவரது பெயர், முகவரி ஆகியவற்றை நான் அவரிடம் கேட்டு அறிந்திருக்க வேன்டும். காரில் ஏறப் போய்க்கொண்டிருந்த  அவசரத்தில் எனக்கு அதைக் கேட்கத் தோன்றவே இல்லை.  காரில் நாங்கள் ஏறி, அது கிளம்பிச் சிறிது நேரம் ஆகிவிட்ட பிறகுதான் நான் செய்த தவறு எனக்குப் ப்புலப்பட்டது. பெரியவரது முகவரியைக் கேட்டுக் குறித்துக்கொண்டிருந்திருந்தால் என் சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்றிரன்டை என் அன்பளிப்பாக அவருக்கு அனுப்பி யிருந்திருக்க முடியுமே என்று கழிவிரக்கமுற்றேன். மனம் சங்கடப்பட்ட்து. இனி வருந்தி என்ன பயன் என்று பெருமூச்சு விடத்தான் முடிந்தது.
3.   1980களில் இலங்கைலிருந்து கிளம்பி வந்து சென்னையில் குடியேறிய இரண்டு பெண்மணிகளின் அறிமுகம் கிடைத்த்து. சென்னை வார   இதழ் ஒன்றில் அந்த இருவரில் ஒருவர் பணிபுரிந்து கொண்டிருந்ததாய்த் தெரியவந்த்து.  எங்கள் குடியிருப்புக்கு அருகில் அவர்களின் வீடு இருந்ததால், அவ்வார இதழின் ஆசிரியர் எங்கள் இல்லத்துக்குச் சென்று  என்னை அறிமுகம் செய்துகொள்ளுமாறு அவர்களிடம் கூறி யிருந்திருக்கிறார். எனவே ஒரு ஞாயிறன்று இருவரும் என் வீட்டுக்கு வந்து அளவளாவிவிட்டுச் சென்றார்கள். அதன் பின் அடிக்கடி வந்து சென்றார்கள்.
அவ்வாறு வந்த ஒரு நாளில் என்னிடம் முந்நூறு ரூபாய் கடன் கேட்டார்கள். இருவரில் மற்றவர்க்கு விரைவில் வேலை கிடைக்க விருப்பதாகவும், கிடைத்ததும் கடனைத் திருப்பித் தருவதாகவும் கூறினார்க்க்ள். (அவர்களின் சகோதர்ர் ஒரு சிறு தொழிற்சாலையில் குறைந்த சம்பளத்தில் வேலையில் இருப்பதாகவும், அவரது சம்பளம் வீட்டு வாடகைக்கே சரியாய்ப் போய்விடுவதாயும் தெரிவித்தார்கள்.)  “எனக்கு எந்த அவசரமும் இல்லை. உங்கள் வசதிப்படி எப்போது முடியுமோ அப்போது திருப்பிக் கொடுத்தால் போதும்’ என்று கூறிவிட்டு அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்தேன். நன்றி கூறிப் பெற்றுக் கொண்டார்கள். கொஞ்ச நாள்கள் கழித்து அந்த மற்றொரு பெண்ணுக்கும் வேறொரு வார இதழில் வேலை கிடைத்தது தெரிய வந்தது.
இதற்குப் பிறகு சில மாதங்கள் சென்றதும், இருவரில் ஒரு பெண்மணி ஒரு ஞாயிறன்று என்னைக் காண வந்தார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்த பின், “எங்களுக்கு ரொம்ப்ப் பணக் கஷ்டம். இன்னும் இருநூறு ரூபாய் கொடுத்தால் உதவியாக இருக்கும். அப்போது வாங்கியதையும் சேர்த்து மொத்தமாய்த் திருப்பிக் கொடுத்து விடுவோம்,”” என்றார் அவர்.
“அதற்கென்ன? வாங்கிக்கொள்ளுங்கள்!” என்று கூறிவிட்டு, அவர் கேட்ட 200க்குப் பதில் 400 ஆகக் கொடுத்தேன். கேட்ட்து 200 தான் என்று அவர் சொல்லாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டார். நான் சரியாய்க் காதில் வாங்காமல் 400 சொடுத்துவிட்ட்தாய் அந்தப் பெண் நினைத்துவிட்டார் என்று தோன்றியது.
“”நாங்கள் மொத்தம் 700 தரவேண்டும்.  கூடிய சீக்சிரம் தருவோம்….” என்றபடி எழுந்துகொண்டார் அந்தப் பெண்.
எனக்குப் பாவமாக இருந்தது. அயல் நாட்டிலிருந்து வந்துளள. தமிழர்கள் என்பதால் மனம் வருந்தியது. “நீங்கள் அந்தப் பணத்தை எனக்குத் திருப்பிக் கொடுக்காமலே இருந்தாலும் சரிதான். அது பற்றிப் பரவாயில்லை.  நீங்கள் இதை மறந்து விடுங்கள்” என்றேன் ஆறுதலாக.
அந்தப் பெண்ணின் முகம் சட்டென்று கடுமை கொண்ட்து. ”என்ன சொன்னீர்கள்? திருப்பித்தரவே வெண்டாமென்றா? அப்படியானால், நாங்கள் என்றென்றும் இப்படியே வறியவர்களாக இருப்போம் என்று நினைக்கிறீர்களா?” என்று கடுமையான தொனியில் சினம் பொங்கக் கேட்டார்.
நான் திகைத்துப் போனேன். இப்படி ஓர் ஆவேசமான கேள்வியை நான் சற்றும், எதிர்பார்க்கவில்லை. சில கணங்களுக்கு வாயடைத்துப் போய் விட்டாலும், சமாளித்துக்கொண்டு, “சேச்சே! அப்படி யாராவது நினைப்பார்களா? நீங்கள் உங்களுக்கு ரொம்பப் பணக்கஷ்டம் என்று சொன்னீர்கள். அதனால் அப்படிச் சொன்னேன்…” என்றேன்.
அந்தப் பெண்மணி பணத்தை மேசை மேல் வைத்துவிட்டு ரோசத்துடன் போய்விடுவர்ர் என்று நினைத்தேன்.  ஆனால் அடுத்து அவர் செய்தது என்ன, தெரியுமா? பணத்தைத் தம் கைப்பையில் பத்திரப்படுத்திக்கொண்டபின், ஒன்றுமே சொல்லாமல், விடுவிடு வென்று நடந்து படியிறங்கிப் போய்விட்டார்!
காது சற்றே மந்தமான நிலையில் இருந்த என் அம்மா, “என்ன சண்டை? எதற்கு அந்தப் பெண் கத்தினாள்?” என்றப்டி அங்கு வந்தார். நான் நடந்ததைச் சொன்னேன்.
“”அப்படியானால், பணத்தை வீசிப்போட்டுவிட்டுப் போய்விட்டாளா?”
“இல்லை. எடுத்துக்கொண்டுதான் போனாள்.”
“”அடிப்பாவி! அவ்வளவு ரோசம் என்றால் போட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே!” என்று அதிசயித்தார் என் அம்மா!

———————

Series Navigationமேத்தாவின் கவிதைகளில் எதிர்காலம் குறித்த பதிவுகள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

2 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

    வணக்கம்.

    ஜோதிர்லதா கிரிஜாவின் புதிய கட்டுரை “நீங்காத நினைவுகள் – 19” இவ்வாரத் திண்ணை முகப்பில் காணப் படாமல் எங்கோ ஒளிந்து கொண்டு பலரது படிப்புக்கு முன்னிற்க வில்லை.

    திண்ணை முகப்பில் வரும்படிச் செய்வீர்களா ?

    நன்றி,
    சி. ஜெயபாரதன்

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    முடிவு இல்லை. அவர்கள் பணத்தைத் திருப்பித் தந்தார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை கொடுக்கவில்லை என்பதை சூசகமாக சொல்கிறாரோ!

    நானும் 80 களில் திருவல்லிக்கேணி பேச்சுலர.மேன்சனில் வாழ்ந்தேன் (வெங்கட ரங்கம் பிள்ளைத்தெரு பார்த்தசாரதி நாடக சபா அருகில்). வேலை நிரந்தரமில்லாமல் இருந்து பணக்கஷ்டம். இப்படி ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்திருந்தால் அவர் வீட்டிற்கே போய் கொஞ்சம் கடன் கேட்டு திருப்பிக்கொடுக்காமல் இருந்திருப்பேன். கொடுக்க சக்தி வர பலவருடங்கள் ஆகின.

    (மேம் இப்போ யாராவது கேட்டா கொடுக்காதீங்கோ!)

    நல்ல எபிசோட். அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *