அவசரகாலம்

This entry is part 17 of 31 in the series 13 அக்டோபர் 2013
nathanகோ.நாதன்

ஊரை உக்கிரமாய் மேய்கிறது ஊரடங்கு இரவு
மிகத்தொலைவிலிருந்து வன்முறையின்
வேட்டொலிகள் கேட்கின்றன.
பின்னர் அதிவேகத்துடன் அபாயயொலி எழுப்பி 
இராணுவ வாகனங்கள் வீதியை அச்சத்தால் நிரப்புகின்றது.


ஒவ்வொரு ஊரின் எல்லாத்தெருக்களையும்
இராணுவத்தினுடைய காலடிகள் மிதிக்கப்பட்டிருக்கிறது  
வீதியில் சொட்டிருக்கும் இரத்தம் உலராத 
ஈரத்தை நாய்கள் மோப்பத்தில்  நக்குகின்றன 
ஒரு   முலையில் வீட்டின் கதவுகள் உடைக்கப்படும்
சப்தம் பீதியூட்டியது கடத்தப்பட்ட இளம் தம்பதி 
பாழடைந்திருந்த கிணற்றுக்குள் பிணமாய் கண்டெடுத்தனர்.


மின்சாரம் தடைப்பட்டிருந்த இருள் பொழுது
கர்ப்பினிப் பெண்ணின் பிரசவ வலி விளக்கு வெளிச்சத்தில்
வைத்தியசாலைக்காய் தெருமுனைக் கடக்கையில் 
எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கும் துப்பாக்கி
எல்லோருரையும் வெறித்தனமாக சுட்டுக் கொன்றது.
சாவிலும் அம்மணமான குழந்தையின் புன்னகை
சாகடிக்கப்படாமல் விழி மூடாது திறந்திருந்தது.

சூரியப் பெட்டை  பஞ்சபூதங்கெல்லாம்
இழுத்து திரியும் ரத்தம் தோய்ந்திருக்கும் உயிரற்ற
உடல்கள் காலத்தின் வெறுமை தோல்விகளிலிருந்து
நீளும் சாவின் தூரிகைகளால் வரையப்பட்ட படிமங்களை
இன்னுமொரு வாழ்வின் நகரத்தை ஆரம்பித்து எழுகிறது. 


ஒவ்வொரு பொழுதும் மிகவும் பயந்து கழிகின்ற கணத்தில் 
ஏதோதொன்றை இழக்க முன்நகரும் நடவடிக்கைகளிலிருந்து 
வதைகளின் வலிகளை மீட்டிக் கொண்டிருக்கும் 
குழந்தைகளின் பதட்டம் சொற்களற்ற உரையாடல்களை 
மரணத்தின் கடைசி வாக்குமூலமாய் பதியப்படுகிறது. 


அமைதி என்பது அடக்குமுறைகளிலிருந்து 
அங்கிகரிக்கப்பட்டது
அவசரகாலச்சட்டமும், பயங்கரவாதச்சட்டமும் 
நிலங்கள் முழுதுவதையும் மேய்கின்ற ஊரடங்கு சட்டமும்
ஆயுதம் ஆக்கிரமிக்கும் எல்லாச் சட்டமும் சித்திரவதையோடு 
சரீரத்தை புசித்து மரணங்களை தோற்றுவிக்கின்றன.
 

 

சடலம் இறைச்சியின் பிரகடனம்.
—————————————————————–
 
நிலத்தை சுரண்டி முதுகில் சுமந்து 
வாழப்பட்ட எருமை இன்னுமொரு 
ஊருக்கு கழுவப்படாமல் இறைச்சிக்காக 
சிலுப்பி சிலுப்பி இழுவையில் செல்லப்படுகிறது.

படிந்திருந்த மண் சூரிய வெக்கையால் 
காற்றில் உதிர்ந்து வெளியெல்லாம் கொட்டி
குருதி வாழ்வின் எண்ணங்களை முகம் சுழித்து 
தரை மண்ணுள் முத்தமிட்டவாறு 
கொலை அச்சத்தை மென்று மென்று நகருகின்றன. 
 
நேர்த்திக் கடனுக்காய் கடவுளின் நாமம் 
குத்தப்பட்ட குறி சூட்டின் வடு… 
வண்ணம் அழியப்பட முன்னர் கருணையில்லாமல்
அறுவைக்கு எந்த தீர்மானத்துடன் விரைகின்றன..?

எல்லா மத அனுஸ்டான விழா விளம்பர
செய்தித்தாளில் அச்சுக் கொணர்ந்த கடவுளும் 
கசாப்புக்கடை ஆணியில் கொழுவி தொங்குகின்றன 
இறைச்சிப் பொதியான கடவுள் ரத்தம் குடித்து 
தெருவில் கடதாசிகளை தின்று கரைந்து உலாவுகிறார். 

மாமிசம் கடவுளுக்கு உகந்தல்ல…என்பதால்
மிருகத்தின் இறப்பை இறைச்சிக்கடையாகிய வாழ்வில்
எல்லாவற்றையும் உயிரிலிருந்து உள்வாங்கி மரிக்கிறது.
 
மாட்டின் ஆண்குறி கருவாடாகி தடித்த காலம்
கடவுளை அதிகம் உரத்து அழைத்து 
யுத்த சித்திரவதை தழும்புகளை உற்பத்தியாக்கியன.
 
மிருகத்தின் சடலம் இறைச்சி பிரகடனத்தில் 
இருப்பினை அழிக்க அதிகாரம் 
கடவுள் எந்த பிரதிநிதி பிசாசிகளிடம் வழங்கியது…?
 
கோ.நாதன் 
20131006
Series Navigationகட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்நீண்டதொரு பயணம்
author

கோ.நாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *