தேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’

This entry is part 30 of 31 in the series 13 அக்டோபர் 2013

Devibharathiஅவள் ஒரு பௌதிக மாணவி.அவளது வீட்டின்  கடிகாரம் திடீரென வினோதமாக பின்னோக்கிச் செல்கிறது.அவளுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, பதினொரு மணி ஆறு நிமிடங்கள் இருக்கும் போது தான் அவள் கடிகாரத்தை கவனித்தாள்.  அவளது வாழ்வில் அது  மிக முக்கியமான நேரம்  என்பதால் அதனை அவள் தனது மனதில் குறித்தும் கொண்டிருந்தாள்.

அதன் பின் மிகப் பதட்டமாகவும் பயங்கரமாகவும் நகர்ந்த நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் இப்போதுதான் கடிகாரத்தைக் கவனிக்கிறாள்.நேரம் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.அதனை அவள் உறுதிப்படுத்த கடிகாரத்தை உற்று பார்க்கையில் வினாடி முள் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது.கண நேரத்தில் நிமிட முள்ளும் பின்னோக்கி நகர்ந்தது.காலம் தனது கதியை தலைக்கீழாக மாற்றிக் கொண்டதோ என்ற எண்ணம் முதலில் தோன்றுகிறது.இரத்தம் உறைந்து போகும் பயத்தை உணர்கிறாள்.

ஆயினும் அது இயல்பியல் என்றும் கடிகாரத்தின் மின்னணுத் தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஏற்பட்ட விசித்திரமான கோளாறு என  அவள் தன்னைத்தானே சமாதனப்படுத்திக்கொள்கிறாள்.காலத்தை கணக்கிட வேறு முயற்சி எடுகிறாள்.அவளிடம் நேரத்தை பார்க்க வேறு எந்த பொருளும் இல்லை.அதுவரையில் அவள் அவளின் கணவன் அவளுக்குப் பரிசளித்த கைக்கடிகாரம் ஒன்றையும்  அவளது கணவனுக்கு அவளின் தந்தை கல்யாணத்திற்குப் பரிசளித்த கைக்கடிகாரம் ஒன்றையும்  அதை விடுத்து அவளது காதலன் அவளுக்குப் பரிசளித்த கைக்கடிகாரம் ஒன்றையும் மணி பார்க்க பயன் படுத்தியிருந்தாள்.அடுத்து அவர்களது கைப்பேசிகள்.இப்போது அவற்றில் ஒன்று கூட அவளிடம் இல்லை.

_இரவு__37944_std

அவளது ரகசிய காதல் விவகாரம் அவளின் கணவன் விஸ்வத்திற்கு தெரிய வந்ததே அருண் அவளுக்குப் பரிசளித்த கைக்கடிகாரத்தின் வழிதான்.விஸ்வம் அவள் மீது பிரோயோகித்த வன்மையான வார்த்தைகளை தாங்கிக்கொள்ள இயலாமல் அருண் பரிசளித்திருந்த கைக்கடிகாரத்தை தன் கரத்திலிருந்து தூக்கி எறிகிறாள்.அஃது மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து நொருங்குகிறது. அதனால் கணவன் திருப்தியடைவதை அறிந்து மறுகணம் விஸ்வம்  முதலாவது திருமணத் தினத்தில் அவளுக்கு பரிசளித்திருந்த கைக்கடிகாரத்தையும் அவனை பழிவாங்கும் பொருட்டு தூக்கி எறிகிறாள்.அவளின் குரோதம் அறிந்து அவளது கணவனும் தனது மாமனார் அவர்களது திருமணத்தின் போது பரிசாக தந்திருந்த கைக்கடிகாரத்தை தூக்கி எறிகிறான்.

ஆக, அவளிடம் நேரத்தை கணக்கிட  எஞ்சியிருந்தவை சுவர் கடிகாரத்தோடு அவர்கள் இருவரது கைப்பேசிகளுமாக இருந்தன.அதையும் அவள் பின்னொரு நாள் அவர்களுக்கிடையில் நடைபெற்ற சண்டையில் இழக்க நேரிட்டது.ஆகக் கடைசியாக விஸ்வம் தனது உயிரைக் காத்துக்கொள்ள போராடுகையில்  அவனது கைப்பேசியை ஆயுதமாக பயன் படுத்தியதால் அதுவும் உடைந்து போகிறது.எதோ  தொடர் சாபம் போல் அவளுக்கு இப்படி அனைத்தையும் இழந்து நேரத்தை கணக்கிடுவதில் சங்கடம் ஏற்பட்டு விட்டது. இப்போது பின்னோக்கி இயங்கிக்கொண்டிருக்கும் சுவர் கடிகாரத்தைத் தவிர வேறு எந்த பொருளும் இல்லை மணியை கணக்கிட.

ஆரம்பப்பள்ளியில் அவள் கற்று கொண்ட விரலை அறுபது முறை  சொடுக்கு போட்டு அதில் ஒரு வினாடியை கழித்து பார்க்கையில் அசலான நேரம் கிடைத்து விடும்.அதனை போலவே மிகத் துல்லிதமாக பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பழுதடைந்த  கடிகாரத்தின் சிவப்பு நிற நொடி முள்ளின் முனையையும் நிமிட முள்ளின் முனையையும் கணக்கிட்டு தற்போதைய நேரத்தை கணக்கிட முனைகிறாள்.திகிலூட்டும் உணர்வுகளை எல்லாம் தள்ளி வைத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என முடிவெடுகிறாள்.

அறைக்குள் நுழைகிறாள்.அங்கு புத்தம் புதிதாக மரணத்தின் வாடை.ஒரு மணி நேரத்திற்கு குறைவாகத்தான் அங்கு ஒரு மரணம் புத்தம் புதியதாக  நிகழ்ந்திருந்தது.கொலையுண்டவன் அவளது கணவன் விஸ்வம்.கொலை செய்தவர்கள் அவளும் அவளது காதலன் அருணும்.அறைக்குள் சிதறிக் கிடக்கும் புத்தகங்கள்,பொருட்களுடன் கணவன் விஸ்வத்தின் கொலையுண்ட உடல் கட்டிலின் மீது கிடக்கிறது.இரத்தம் தோய்ந்திருந்த படுக்கை விரிப்பையும் உடைந்தும் கலைந்தும் கிடக்கும் அறையிலிருந்த பொருட்கள் அறையை  உருக்குலைந்திருந்தன.அனைத்தையும் ஒழுங்கு படுத்தி மெத்தை விரிப்பை மாற்ற முயல்கிறாள்.

விஸ்வத்தின் கிழிந்த குடல்வழி வெளியேறிய மலத்தின் நெடி அறைக்குள் அருவருப்பூட்ட வைக்கின்றது.விஸ்வத்தின்  விரைத்திருந்த கைகளுடன் விரித்து திறந்திருந்த விழிகளில் இரத்தம் வழிந்துகொண்டிருந்தது.அவனின் கபாலத்திலிருந்து பெருகிய  இரத்தம் விழிகளில் வழிந்தது. துரிதமாக இயங்குகிறாள்.தாகத்திற்கு குளிர்சாதனப் பெட்டியிலிருந்து பழச்சாறை எடுத்து அருந்தி விட்டு முகத்தை ஒரு துண்டினால் கட்டிக்கொண்டு அவனது வயிற்றிலும் கழுத்திலும் இரத்தம் கசிந்துக்கொண்டிருந்த காயங்களை டெட்டலால் சுத்தப்படுத்துகிறாள்.கபாலத்தில் வழிந்த இரத்தத்தை கட்டுப்படுத்த கட்டனையும்  பழைய பருத்தி புடவையும் கிழித்து துண்டுகளாக்கி கட்டுகிறாள்.விரைத்திருந்த அவனது கரங்களை அவளால் மடக்க முயன்றும் மடக்க முடியவில்லை.கழுத்தையும் திருப்ப முடியவில்லை.அவனைச் சுத்தப்படுத்தியப்பின் காயத்தின் கட்டுகள் மீது யூடிகோலனை அடித்து இரத்த வீச்சத்தை கட்டுப்படுத்துகிறாள்.வீச்சம் குறைந்திருப்பதாகத் தோன்றுகின்றது. வாசனை திரவத்தை காற்றில் படர விடுகிறாள்.அந்த அறை பழைய நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டது போல் காட்சியளிக்க, கூடத்திலிருந்து ஜாடியையும் நாய் பொம்மைகளையும் எடுத்து வந்து அறையை அலங்கரிக்கிறாள்.விஸ்வத்தின் பிணத்திற்கு வேறொரு உடையை மாற்றுகிறாள்.அப்போது அந்த உடல் கொஞ்சம் தளர்ந்திருந்தது.அவனது முகத்திற்கு கொஞ்சம் கிரீம் தடவி அவனின் கேசத்தை ஒழுங்கு படுத்துகிறாள்.உறங்குபவனைப் போல அவனது கரத்தை மடக்கி வைக்கின்றாள்.அந்த அறை முதலிரவிற்கான அறைப்போல் தோன்ற, தான் மாத்திரம் அந்த சூழலுக்கு பொருந்தாது இரத்த கரைகளுடன் இருக்கின்றோமோ என்ற நினைப்பு வர குளித்து மாண்டுக்கிடக்கும் விஸ்வத்திற்கு பிடித்த அடர் நீலப் பின்னணியில் சூரியக்காந்தி பூக்கள் மலர்திருக்கும் புடைவையை உடுத்துகிறாள்.அவன் முன் உடுத்துகையில் கொஞ்சம் நாணப்படவும் செய்கிறாள்.

உறங்குபவனைப் போல் காட்சி தரும்  விஸ்வம் முதுகலையில் சரித்திரம் பயின்ற,அந்த   நகரின் பிரபலமான  வழக்கறிஞன்.ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தான், அவனின் மனைவியும்  அவளது காதலன் அவனது கழுத்தில் கயிற்றை சுருக்கி கொலை செய்ய முயற்சித்தார்கள். கயிறு இறுகையில் விழித்துகொண்டு விஸ்வம் உயிருக்கு போராடினான்.அவர்கள் இருவரிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்ள அறையினுள்ள  தடித்தப் புத்தகங்களை அவர்களை நோக்கி வீசி எறிந்தான்.மிகத் தரக்குறைவான வார்த்தைகளில் அவர்களைத் திட்டினான்.அது அவளை மூர்க்கமடைய வைத்தது. சமையலறையில் இருக்கும் கத்தியைக் கொண்டு வந்து அவனது கன்னத்தை கிழித்தாள்.அவளும் மிகக் கடுமையான சொற்களால் விஸ்வத்தை விமர்சித்தாள்.

இறுதியாக தன்னை தற்காத்துகொள்ள முடியாத நிலையில் விஸ்வம் அவளது காதலனின் காலருகே மண்டியிட்டு மன்றாடினான். “அருண்,உனக்குச் சசிதானே வேணும்?எடுத்துகோ,என்னைக் கொண்ணுடாத அருண்” மிக இழிந்த நிலையில் கெஞ்சினான்.அந்த தருணத்தில் தான் அவன் எதோவொரு கனமான பொருளால் அருணைத் தாக்கிவிட்டு வெளியே ஓடிவிட முயன்றான்.அப்போது அவள் கண்ணுக்கு எட்டிய தூரத்திலிருந்த சுத்தியலால்  அவனது தலையைத் தாக்கினாள்.கபாலம் பிளந்து அவன் பரிதாபமாக இறந்துப்போனான்.

விஸ்வத்தின் பிணத்தை அப்புறப்படுத்த ஆட்களை ஏற்பாடு செய்ய அவளது காதலன் வெளியேறி சென்ற பின் தான் அவளுக்கு அந்த விசித்திரம் நிகழ்கிறது.சுவர் கடிகாரம் பழுதடைந்தது போல் வினோதமாக பின்னோக்கி நகர்ந்தது.

 தான் திடீரென  வினோத உலகத்தில் தான் தள்ளப்பட்டிருப்பதைப் போன்று உணர்கிறாள்.வினோதமாகப் பின்னோக்கிக் கொண்டிருக்கும் சுவர்கடிகாரத்துடன் கொலை செய்யப்பட்ட கணவனின்  பிணத்துடன் அவள் தனியே நிற்கிறாள்.உறங்குபவன் போல் காட்சியளிக்கும் விஸ்வம், திகிலூட்டும் வகையில் எழுந்து அமர்ந்தால் அல்லது புரண்டு படுத்தால் என்ன ஆகும் என கற்பனை செய்கிறாள்.திடீரென விஸ்வத்தின் மூக்கு துவாரத்தின் வழி செம்மண் நிறத்தில் திரவாகம் வெளி வந்தது.உடல் அழுகத் தொடங்குவதை உணர்கிறாள்.விரைவில் திரும்பி விடுவதாகச் சொல்லிச் சென்ற அருண் என்ன ஆனான் என யோசிக்கிறாள்.அவன் திரும்பி வராமல் போனால் என்ன ஆகும் என கற்பனை பண்ணுகிறாள்.அப்படி அவன் வராமல் போனால் கணவனை கொன்று அலங்கரித்து வைத்திருக்கும் தனது நிலை என்னவென்று யோசிக்கிறாள்.ஒரு சேர சுவர் கடிகாரத்தையும் பார்க்கிறாள்.காலம் ஓடிக்கொண்டிருக்கிறது பின்னோக்கிய சீரான ஓட்டத்துடன்.

திடீர் பயத்தில் அவள் விஸ்வத்தின் கரத்தைப் பற்றுகிறாள்.ஆச்சரியமளிக்கும் வகையில் உயிரற்ற அவனது கரம் அவளுக்கு ஆறுதல் தருவதாக இருந்தது.மேலும் தாகம் எடுத்தது அவள் சமையலறைக்கு சென்று குளிசானதப் பெட்டியை திறக்கிறாள்.அதிர்கிறாள்.

அவள் குடித்து காலி செய்து வைத்திருந்த பழச்சாறு பாட்டிலில் ததும்ப ததும்ப பழச்சாறு.வீறீட்டு அலறி குளிர்சாதனப் பெட்டியை அறைந்து சாத்துகிறாள்.எதோ சிறு சிறு முனகல் ஒலிகள் பெட்டிக்குள்ளிருந்து கேட்கின்றன.தன்னை சுற்றி நம்ப முடியாத,அசாதாரணமான,மர்மமான ஒரு சூழல் உருவாகி உள்ளதை உணர்கிறாள்.அவள் வழக்கமாக வீட்டிற்கு பயன் படுத்தும் நறுமணம் வேறு கமழ்கிறது.தான் அதிக களைத்தும் பசியிலும் உறக்கமின்மையினாலும் பதற்றமாக இருப்பதால் இந்த பயங்கரக் கற்பனை தோன்றுகின்றதோ எனக் கூட நினைக்கிறாள்.

திடீரென ஒரு முனகல் ஒலிக் கேட்க அறைக்குள் ஓடுகிறாள்.போர்வையை விலக்கி விஸ்வத்தை பார்க்கிறாள்.விஸ்வத்தின் நாசி துவாரங்கள் விடைத்திருக்கின்றன.அதில் திணித்திருந்த கட்டன் வெளியேறி கழுத்து பகுதியில் கிடக்கின்றன.மார்புக்கூடு மிக மிக லேசாக எழுந்து தணிந்து கொண்டிருக்கின்றது.சட்டென்று விலகி பின்னோக்கி கொண்டிருக்கும்  நேரத்தை கணக்கிடுகிறாள்.மிகச் சரியாக பதினொரு மணி ஆறு நிமிடாத்தில் விஸ்வம் உயிர் பெற்று எழுந்து விடுவானோ?அப்படி அவன் எழுந்தால் அதனை எப்படி எதிர்கொள்வது?பின்னோக்கி கொண்டிருக்கும் அந்த காலத்தைத்  தொட  எஞ்சியிருப்பது இன்னும் ஐந்து நிமிடம், பத்தொன்பது நொடிகள் மாத்திரமே.

அவள் அவசரமாக எழுந்து சில துணிகளை பையினுள் துணித்துக் கொண்டு வாசலுக்கு விரைகையில் அதனைக் கவனித்து விடுகிறாள்.அவள் ஒழுங்குப் படுத்தி வைத்திருந்த கூடம் மீண்டும் ஒழுங்கின்மையில்… அப்படியானால் அந்த அறை? அறைக்குள் சென்று பார்த்தவள் அதிர்ந்துபோகிறாள்.மீண்டும் பழைய நிலையில் அறை கிடந்தது.அறை முழுவதும் பழையபடி இரத்த கறைகள்.கலைந்து கிடக்கும் பொருட்கள்.புத்தம் புதிதாக முன்பு தோன்றியது போல் மரணத்தின் நெடி.ஒவ்வொரு பொருளும் அதன் பழைய இடத்தில்.காலம் திட்டவட்டமாக எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருப்பதை உறுதியாக நம்புகிறாள்.சரியாக பதினொரு மணி ஆறு நிமிடங்களில் விஸ்வம் எழுது விட கூடும் என எதிர்பார்க்கிறாள்.

 “மிகத் துல்லியமாக இரண்டு நிமிடங்களுக்கு பிறகு முக்கியமான அந்தக் கணம் வந்துவிடும்.அவனது மறு உயிர்ப்பையும் நேரடியாகப் பார்த்து விடும் பதைபதைப்போடு படுகையில் அவனுக்குப் பக்கத்தில் அவனது தோள் மீது சாய்ந்தபடி கிட்டத்தட்ட முத்தமிடுபவளைப் போலக் குனிந்தவாறு குருதிவற்றி கருத்துக் கிடந்த சடலத்தின் முகத்தையும் எதிர்த்திசையில் பின்னோக்கிச் சுழலும் கடிகாரத்தின் மெலிந்த நொடி முள்ளையும் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.எஞ்சியிருந்தவை வெறும் அறுபது நொடிகள் தான்.ஒரே ஒரு நிமிடம்.ஆனால் எந்தச் சலனமுமில்லாமல் ,உயிர் பெற்றெழுவதற்கான எந்தத் தடயமுமில்லாமல் கல்போல் இறுகிக்கிடந்தது விஸ்வத்தின் உடல்.அவள் பொறுமையிழந்தவளானாள்.நொடிமுள்ளின் பின்னோக்கிய நகர்வுக்கு ஒத்திசைவாகச் சொடக்குப் போட்டபடி காத்திருந்தாள்.

நாற்பது,

முப்பத்தொன்பது,

முப்பத்தொட்டு,

முப்பத்தேழு… ஒரு வேளை எல்லாம் அவளது கற்பனையாக முடிந்து போனால்?” {தேவிபாரதி}

ஆகக் கடைசியான நொடிவரையில் அவள் நம்பிக்கை இழக்காது கணவனின் மறு உயிர்ப்பிற்காக காத்திருப்பதாகக் கதை முடிவடைகிறது.

காதலனுக்காக கணவனை இரக்கமின்றி கொல்லும் சசி என்ற பெண் திடீர் அதிர்ச்சியினாலோ அல்லது மனசாட்சியின் உறுத்தலாலோ மனம்  பிறழ் கொள்கிறாள்.சமூக மரபுகளை மீறிய பெண்ணின் நிலையையும் சமுக அவலத்துடன் மனிதர்களின் மனவக்கிரங்களை படம் பிடிக்கிறது இந்த திகில் நிறைந்த புனைவு.

பௌதிக மாணவியான அவளது அதீத கற்பனைக் கூடக்  காலம் பின்னோக்கி போய் கொண்டிருப்பதாக கற்பனை பண்ணவைத்து அப்படியொரு பிரமையை ஏற்படுத்தியிருக்கலாம்.  ‘ஒளிக்கும் பிறகும் இருளுக்கும் அப்பால்’ என்ற தேவிபாரதியின் நீள்கதையினை நான் உள் வாங்கிக்கொண்ட கதைச்சுருக்கம் இது.புனைவு 13 பக்கங்களில்  நீண்டிருந்தாலும்   ஒவ்வொரு பத்தியிலும் மரணத்தின் வீச்சம்.முழுமையாக  வாசித்தால் இதன் திகிலுணவை மிக நெருக்கத்தில் நீங்கள் உணரலாம். பல முறை படித்தாலும் திகிலிருந்தும்  திடுக்கிடும் மரண வதையிலிருந்தும்  எழுத்து வர சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களாவது எனக்கு ஒவ்வொருமுறையும் தேவை பட்டன.இந்த திகில் புனைவை தேவிபாரதியின் பிறகொரு இரவு என்ற சிறுகதை தொகுப்பில் வாசிக்க கிடைக்கும்.

{தேவிபாரதி நல்ல புனைவாளர்.காலச்சுவடு சிற்றிதழின் பொறுப்பாசிரியரும் ஆவர்.அவரது புனைவுகள் அனைத்தும் அழகிய மொழியோடு சொற்களின் பிசிறாத கட்டமைப்போடு இருப்பதால் அனைத்தும் வாசகனை தனக்குள் கவர்ந்திழுக்கும் தன்மைக் கொண்டவை.அவரது ‘பிறகொரு இரவு’  சிறுகதை தொகுப்பும் ‘தனிமையின் நிழல்’ என்ற அவரது முதல் புதினமும் அதனை நிரூபிக்கும் ஆவணங்கள்.}

Series Navigationகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31காதலற்ற மனங்கள்​
author

வாணி ஜெயம்,பாகான்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    தேவிபாரதியின், ” ஒரு மரணத்தின் வீச்சம் ” எனும் புனைவை மிக நேர்த்தியாக சுருங்கக் கூறி அதன் சாரம், கொடூரக் கொலை, அதன்பின் சசி என்ற அவள் எதிர்நோக்கும் மன உணர்வுகளை மிகவும் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார் வாணி ஜெயம். . இவ்வாறு ஒரு சிறுகதையை நான்கு அறிமுகம் செய்துள்ள அவருக்கு வாழ்த்துகள். டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *