தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

31 மே 2020

சிறுகவிதைகள்

ப மதியழகன்

Spread the love

களவு

சல்லடை போட்டு
தேடியாகிவிட்டது
கடல் தான் களவாடிப் போயிருக்கும்
உன் காலடிச்சுவடை.

வகுப்பு

தேவதைகளின்
பயிற்சிக் கூட்டத்தில்
குழந்தைகள் வகுப்பெடுத்தன.

அஸ்தி

புழங்குவதற்கு காவேரி
அஸ்தியைக் கரைப்பதற்கோ
கங்கை.

குயில்பாட்டு

அடர் வெண்பனி
மூடியிருந்தது சாலையை
விடியலை வரவேற்கும்
விதமாக
கருங்குயில் மரக்கிளையில்
அமர்ந்து ஆனந்தமாக
பாடிக் கொண்டிருந்தது.

வெளிச்சம்

தீபத்தை
ஏற்றி வைத்து
தீக்குச்சி கரியானது.

பிம்பம்

நகர்ந்து கொண்டிருக்கும்
நதியலையில்
எனை பார்த்துச் சிரிக்கும்
என் பிம்பம்.

உதயம்

மலை முகட்டில்
சூரியன்
இனி எல்லோருடைய
கால்களிலும் மிதிபடும்
கிரணங்கள்.

பிறை

வளர்ந்து
தேய்கிற நிலவு
அமாவாசையன்று
வருத்தப்பட்டிருக்குமா?

பீதி

மலையின் மௌனம்
பீதியடையச் செய்கிறது
செடியிலுள்ள ஒற்றை மலரை.

வாயில்

மரணக் குகையில்
நுழையும்
வசந்தகாலத்தை
பின்தொடர்வதில்லை
மலர்கள்.

தரிசனம்

உணர்ந்து கொண்ட
உண்மையால்
சிலை போல் சமைந்தேன்
தேடி வருகிறார்கள்
மது, மாமிசத்துடன்
வெகு ஜனங்கள்.

வித்து

முற்றாக அழிந்த
பின்பே
முளைவிடுகிறது
விதை.

நிலா

நிலவை
சுட்டிக் காட்டும் போது
மற்றது அனைத்தும்
மறைந்து போய்விடுகிறது.

ஞானம்

போதி மரத்தடி
தேடுகிறது
இன்னொரு புத்தரை.

விருப்பம்

நித்யத்திற்கு
ஆசைப்பட்ட எவரும்
மரணத்திற்கு தப்பியதில்லை.

மௌனம்

வார்த்தைக்கு
ஒரே அர்த்தம்
மௌனத்திற்கு
ஆயிரம் அர்த்தம்.

Series Navigationஉலகெலாம்நய்யாண்டி

Leave a Comment

Archives