க்ளோஸ்-அப்

This entry is part 28 of 31 in the series 20 அக்டோபர் 2013

 

                                 BY  சாம்பவி

                     “ அடுத்தது மீரா ”என்றதும் மீண்டும் ஒரு ஒலி அலை எழுந்தது . ஒலியில் வானவில் தோன்றுமா என்ன? ஏழல்ல, ஏழாயிரம் நிறங்களில் எழுந்த கானவில் அது. கிளப்பி விட்டது நிர்மலா.

யாழினிக்கு ஆச்சரியமானது. அடுத்தது நிர்மலா சொன்ன வண்ணம் மீராதான். விஜய் நடித்த ஒரு படத்தில் ஒரு பாடல் காட்சியில் டைட் க்ளோசப்பில் முகம் காட்டியவள். சங்க உறுப்பினர் அட்டை உண்டு. கருப்பாக  இருந்தாலும் அவளுடைய சிரிக்கும் கண்கள் அவளது நுழைவு சீட்டு. திருமண மண்டபத்தின் ஹாலில் தூணுக்கு தூண்  நிறுவப்பட்டிருந்த பெரிய அளவு எல்சிடி திரைகள் அனைத்திலும் மீராவின் முகம். எந்த கோணத்தில் காட்டினால் முழு அழகும் வெளிப்படுமோ அந்த கோணத்தில் அந்த அழகை வெளிச்சம் போட்டுக்  காட்டி கொண்டிருந்தான் சிவா. பத்து  வினாடிகள் வரை திரையில் அவள் படம் நிலையாக நின்றது. மீண்டும் பெண்கள் வரிசையில் ஒலி அலை..

சிவாவின் கை வண்ணமும் காமிரா வண்ணமும் கோடம்பாக்கம் முழுவதும் தெரியும் .  திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாத பல்லாயிரம் உறுப்பினர்களை போல அவனும் ஒரு உறுப்பினன். கிரேடு மட்டும் மாறும்.

“ அடுத்தது புவனா  “ என்று நிர்மலா கூவினாள்.

யாழினிக்கு முதலில் இது புரியவில்லை. இளங்கிள்ளியின் திருமணத்திற்கு வீடு தேடி அழைப்பு வந்தபொழுது அவளால் நம்ப முடியவில்லை. இளங்கிள்ளி பல ஆண்டுகளாக இந்த சினிமாத் துறையில் போராடியவன். “ முன்னே ஒரு முத்தம் “ திரைப்படம் அவன் வாழ்வை ஒரே இரவில் திருப்பிப் போட்டது. அடுத்து அடுத்து மூன்று வெற்றி படங்கள் அமையவே அவன் உயரம் மவுண்ட் ரோட்  கட்-அவுட்டில் அளக்கப்பட்டது. தொட முடியாத உச்சிக்கு அவன் போய் விட்டாலும் ஏறி வந்த படிக்க்கட்டுக்களில் ஒன்றை கூட மறக்காமல் அழைப்பு அனுப்பியிருந்தான். கல்யாணம் திருநீர்மலையில். ரிசப்ஷன் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில். பத்தோடு பதினொன்றாக திரையில் தோன்றும் முகங்களை அழகான க்ளோசப்பில் காட்டும் உத்திக்கு அனுமதி வாங்கியது சிவாதான்.

குழுமியிருந்த உற்சாக குரல்களில் முக்கால்வாசி “ மற்றும் பலர்  “. ஆசை காரணமாக, நிர்பந்தம் காரணமாக,  வயிறு காரணமாக அனைத்தையும் இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத ‘ மற்றும் பலர் ’. திருமண வரவேற்பை ஒரு சம்பிரதாய சடங்காக மாற்றாமல் அழகான முகங்களை ஒருமுகப்படுத்தி , ஒரு நிலைப்படமாக மாற்றும் மாய வித்தையை சிவா சந்தோஷமாக செய்து கொண்டிருந்தான்.

இந்த மாயா ஜாலத்தில் முதலிலில் மின்னியது யசோதாம்மாவின் முகம்தான். என்ன குறை அந்த முகத்திற்கு? தேவிகாவை போல குளிர்ந்த கண்கள் .குழி விழும் கன்னம் .இரட்டை நாடி. என்ன பிரயோஜனம்? இன்னமும் இந்த ஐம்பது வயதிலும் திரையில் தோன்றினால் பத்தோடு பதினொன்றுதான். கல்யாணம் காட்சி எதுவும் இல்லாத வாழ்க்கை. அரசு குடியிருப்பில் காரை உதிர்ந்த வீட்டினுள் நான்கு சுவர்களுக்குள் வாசம்.

எல்சிடி திரையில் யசோதம்மாவின்  முகத்தை  அப்படி ஒரு அழகான டைட் க்ளோஸ் அப்பில் பார்த்து விட்டு யாழினி அழுது விட்டாள். நிர்மலா ஜாடையால் யாழினியை அமைதி காக்க சொன்னாள்..

‘ இது பணக்காரர்களின் உலகம் “ என்றாள் யாழினி.

“ இல்லை. முதலாளிகளின் உலகம் “ நிர்மலா திருத்தினாள்.

“ அழகு ஒரு நுகர்பொருள் மட்டும்தான்”

‘ இல்லன்னா நீயோ நானோ ஏன் இந்த தொழிலுக்கு வரணும்? ஒரு நொடியாவது நம்ம முகம் திரையில் க்ளோசப்பில் வராதான்னு ஏன் ஏங்கணும் ? இப்போ ஏங்கறோமே அது மாதிரி.”.  நிர்மலாவின் வார்த்தைகளில் இருந்த சத்தியம் அவள் முகத்தை மினுங்க செய்ததது. அந்த மினுங்கல் அவள் முகத்தை ஆயிரம் கோடி தாமரையாக மலர்த்தியது.

“ அதோ நிர்மலா “ என்ற ஒலி அலை எழ யாழினி எல்சிடி திரையை பார்வையிட்டாள். அதே ஆயிரங்கோடி மலர்ச்சி நிர்மலாவின் நிலைப் படத்திலும் மின்னியது. நிர்மலாவின் கண்களில்  நீர் துளி. போகஸ் விளக்கின் வெளிச்சத்தையும் ஊடுருவி சிவாவை பார்த்து கை கூப்பினாள். புரிந்து கொண்டு அவனும் உற்சாக கை அசைப்பு செய்தான்.

“ நடிகர்கள் இயக்குனரின் எண்ணதை வெளிப்படுத்தினாலும் அவனுடைய நடிப்பின் உச்சத்தை ஒரு பிரேமுக்குள் கொண்டு வருபவன்தான் உண்மையான  காமிராமேன் “, என்பான் சிவா . அவனுக்கும் ,யாழினிக்கும் ஒரு படப்பிடிப்பு தளத்தில் பேச கிடைக்கும் தருணங்கள் ஏராளம். சிவா முறைப்படி காமிரா பயிற்சியை ஒரு பட்டப் படிப்பாக படிக்கவில்லையே தவிர  பிரபல காமிராமேன் ஒருவரிடம் 15 வருடங்களாக உதவியாளனாக இருந்து வருகிறான்.

“ ஒங்களுக்கவது கல்யாணம் கருமாதி,காது குத்துன்னு பொழப்பை ஓட்டிடலாம். எனக்கு என்ன இருக்கு? “ என்றாள்.

“ பெரிய கண்ணு இருக்குல்ல? போகஸ் லைட்டை ஆன் பண்ணி விட்ட ப்ளோர் கணக்கா என்ன்னா  கண்ணனும்மா உன்னுது?  “

“ அதோ நசீமா “ என மீண்டும் ஒரு ஒலி அலை எழுந்தது. உள் அரங்கு வண்ணத் திரையில் நசீமா பானுவின் முகம் தோன்றி மறைந்தது..

யாழினியின் பலமும் பலவீனமும் அவளுடைய கண்கள்தான். திரும்பி பார்க்க வைக்கும் கண்கள். கூர்ந்து பார்த்தால் கூச வைக்கும் கண்கள். சரோஜாதேவியின் அழகும், வகீதா  ரெஹ்மானின்  வசீகரமும் ஒருங்கிணைந்த கண்கள். அந்த கண்கள் அவளை ஆச்சரியப் படச் சொன்னது. ஆவேசப் படச் சொன்னது. பரவசப் படச் சொன்னது. சந்தோஷப் படச் சொன்னது. கால்களில் சலங்கை கட்டச் சொன்னாது .மேடை மேடையாக ஆடச் சொன்னது .சென்னைக்கு சென்றால் பெரிய நட்ச்சதிரமாக மின்னலாம் என ஆசை காட்டியது. பெண்களின் மேடை வெளிச்ச முன்னேறற்றம் என்பதற்கு வெறும் திறமை மட்டும் போதாது என்பது புரிந்தது.

“ அப்பா ஒரு பேராசைக்காரர் .. நிலம் வீடு எல்லாம் போச்சு. இது ஆண்களின் உலகம் இங்கே கண்களை விட உடம்புக்குத்தான் முன்னுரிமை என்பது புரிய வந்தப்ப எல்லாம் போயாச்சு.எனக்கு மானம்.அப்பாவுக்கு சொத்து. அப்பாவுடன் ஊர் திரும்ப பிடிக்கலை .இங்கேயே தங்கிட்டேன். இப்ப சொல்லு சிவா என் கண்கள் அழகா?”

“ உன் கண்களை மட்டும் மதித்து உன்னை தேடி ஒருவன் வராமலா போயிடுவான்?”

“அதுவரைக்கும் பூவாவுக்கு என்ன பண்றது? “

அவளுடைய எதார்த்த கேள்விக்கு பதிலாகத்தான் அவளை பரிமளா டான்ஸ் மாஸ்டரிடம் கொண்டு போய் சேர்த்தான். பரிமளா திரையில் தோன்றும் அத்தனை நம்பர் ஒன் ஹீரோயின்களுடைய முழங்கால் சில்லை பெயர்த்து எடுப்பவள். அவளிடம் உதவியாளராக சேர்ந்த பின்புதான் பிழைப்பு ஓடுகிறது.

“ அடுத்தது நந்தினி “

நந்தினியின் முகம் சந்தோஷமாக திரையில் மின்னியது.

நந்தினி கதை கொடூரமானது. அவள் சீரியலில் பத்து எபிசோட் பண்ணினால்தான் வீட்டில் உலை வைக்க முடியும். ஒரு சொடுக்கு போடுவதற்குள் ஒரு பக்க வசனத்தை ஒப்பித்து விடுவாள். ஆனால் சீரியல் டைரக்டர் இவளுடைய காட்சிகளை முக்கியத்துவம் கொடுத்து எடுத்து கொண்டே போய் விட்டு பாதியில் கட் பண்ணி விடுவான். அடுத்த எபிசொட் வர வேண்டும் என்றால் அவனுடைய வக்கிர ஆசைகளுக்கு இணங்க வேண்டி வரும். பாதி நாள் பரிமளம் மாஸ்டரிடம் சொல்லி அழுவாள்.

‘ உடலை  மீறி இவங்களாலே பொண்ணுங்களை பாக்க்கவே முடியாதா மாஸ்டர்?’ என்று யாழினி பரிமளாவிடம் குமுறுவாள். அவள் கேள்விக்கு அவர்கள் யாரிடமும் பதில் இருக்காது.

“ ரோஜா இதழ்களை அடுக்கி வச்சா மாதிரி இந்த கல்யாண ரேசெப்டின் ஆல்பம் அமையப் போகுது “ என்றாள் யாழினி.

“ ஆமாம்”” நிர்மலா ஆமோதித்தாள்.

மீரா ஓடி வந்தாள்.

“  எல்லோரோட முகமும் ஸ்டில்லா வந்துடுச்சான்னு சிவா அன்னான் கேட்டுட்டு வரச் சொன்னாரு.  “  என்றாள்.

“ யசோதாம்மா, கல்யாணி, மீரா, நசீமா, கிருஷ்ணா , டெய்சி, சுபத்த்ரா, சௌம்யா “ என நிர்மலா பெயர் கூப்பிட கூப்பிட பெயருக்குரியவர்கள் கை தூக்கிய வண்ணம் இருந்தனர்.

“ யாழினி உன் முகம்? “ என்று நிர்மலா கேட்டாள்.

யாழினி ஒரு நிமிடம் யோசித்தாள் . தோன்றி மறைந்த முகங்களில் தன் முகம் இல்லை. அதுவும் இன்றி எந்த போட்டோ கவரிலும் அவள் இல்லை. ஏன்?

“ மீரா. இன்னும் யாழினியோட முகம் மட்டும் பிரீஸ் ஆவலைன்னு சொல்லு  போ  “ என்று நிர்மலா கூறினால்ள் யாழினி தடுத்தாள்.

“ வேணாம் நிர்மலா”

அவளுடைய குரலில் வெளிப்பட்ட வேதனையை புரிந்து கொண்ட நிர்மலா        ” ஏண்டா வேணாம்? சிவா நம்மாளுதானே? மறந்திருப்பான். “

சிவா மறக்கக் கூடியவனா?  வக்கிர ஆண்பார்வை அமைந்த உலகில் நீ விதிதியாசமானவன் சிவா என அவளால் பாராட்டுப் பட்டம் பெற்றவன்.

“ பிச்சை எடுக்கிறா மாதிரி இருக்கு.”

“ இது பிச்சை இல்லை. உன்னை எவ்வளோ பாராட்டி பேசியிருக்கான் தெரியுமா? உன் கண்கள் ஒரு நாடக மேடைன்னு வருணிச்சிருக்கான் என் கிட்ட.”

“ இந்த சின்ன விஷயத்தில் கூட என்னோட அதிர்ஷ்ட்டத்தை பாரேன் “ என்ற யாழினியின் கண்களில் நீர் துளிர்த்தது.

மீண்டும் எல்சிடி திரையில் திருமண வரவேற்பு காட்சிகள். எல்லா பிரபலங்கள் இது போன்ற வைபவங்களில் கூட நடிப்பதை அவன் மறக்காமல் காட்சி படுத்திக் கொண்டிருந்தான் சிவா. எத்தனை போலி புன்ன்கைகள். எத்தனை போலி பாவங்கள். நடு நடுவில் சிறுவர்களின் கள்ளமில்லா சிரிப்பு ஓடி மறைந்தது.. கடைசி வரையில் யாழினியின் முகம் திரையில் மின்னவில்லை.

“ சோறு ரெடியாம் .என்னவோ பப்பே சிஸ்ட்டமாமாம்.. வாங்கடி துன்ன. “ என்று யசோதா அழைத்தாள்.

தடபுடலான விருந்து. இனிப்பு என்றால் நான்கு வகை. தோசை என்றால் ஏழெட்டு வகை. பிரைட்  ரைஸ் : ருமாலி ரொட்டி: பனீர் மசாலா : ஐஸ்கிரீம் : பீடா என்று விருந்து அமர்க்களப் பட்டது. மற்றும் பலரின் வாழ்வில் எப்பொழுதோ எட்டி பார்க்கும் வசந்தங்களில் ஒன்றாக விருந்து அமைந்திருந்தது.

கையில் பபே தட்டுடன்  சுற்றி சுற்றி வந்தபொழுது ஒரு சுழற்சியில் சிவாவை நேருக்கு நேராக சந்தித்தாள். அதுவும் ஒரு தனி இடத்தில்.

அவனேதான் ஆரம்பித்தான்.

“ உன் முகம் மட்டும் ஸ்க்ரீனில் வந்துரூக்காதே கவனிச்சியா? “ என்றான்.

தெரிந்துதான் செய்திருக்கிறான்.  “ஏன்? “ முகத்தில் எதையும் வெளிக் காட்டாமல் கேட்டாள்.

“ உன் மேல எனக்கு நல்ல ஒபினியன் இருக்கு. சேறுன்னு தெரிஞ்சே மலர்ந்த செந்தாமரை நீ. உன் சுய கவுரவம் எனக்கு ரொம்ப புடிக்கும். தனியா ஒரு படத்துக்கு வொர்க் பண்ண சான்சு வாங்கித் தரேன்னு மாஸ்டர் சொல்லியிருக்கார். பெரிய படம். அப்படியே புடிச்சிட்டு மேல வந்திரலாம்னு பார்க்கறேன். உன் மேல எனக்கு இன்னா சொல்லுவாங்க நம்ம ஹீரோக்களெல்லாம் ஹீரோயினைப் பார்த்து… ஐ லவ் யூ  அதான் அந்த லவ்வு . அது வந்திருச்சு. நிஜமா கட்டிக்கிட்டா உன்னைத்தான் கட்டிகிறதுன்னு முடிவு பண்ணிட்டேன். குத்து விளக்கு வெளிச்சத்திலே மின்ன வேண்டிய முகம் உன்னுது. ஆயிரம் வாட்ஸ் ஆர்க்   வெளிச்சத்தில் எதுக்கு வாடணும்னு. தோணிச்சு இங்க வெளிச்சம் போட்டு வெச்சிருக்கிற உருவத்தை எல்லாரும் பார்க்கிறா மாதிரி ஸ்க்ரீனில் போகஸ் பண்ண புடிக்கலை.” என்று நெஞ்சை தொட்டு காட்டியவன் “ உனக்கு . வருத்தம் இல்லியே? .”

ஒரு நிமிடம் அவனை பார்த்தாள்.

 

“ இது விஷயமா நாம நிறைய பேசியிருக்கோம்னு நினைக்கிறேன் சிவா.. அன்னிக்கு நந்தினி விஷயமா பேசினப்போ கூட நீங்களும் இருந்தீங்க. நான் அன்னிக்கு ஆவேசமாயிட்டேன். பரிமளா அக்கா கூட எதுக்கு நீ இப்படி கூச்சல் போடறே பொம்பிளைங்களுக்கு  உடல் ரீதியா நடக்கிற வன்முறை எங்கதான் இல்லேன்னு கேட்டாங்க. கார்பொரேட் நிறுவனங்களில் இல்லியா? அரசியலில் இல்லையா? பிச்சைக்காரிங்களுக்கு இல்லியா? இவ்வளவு ஏன் வீட்டுக்குள்ள இருந்த ஊர்மிளாவுக்கு பிரச்சினை கிடையாது. வெளிய  வந்த சீதைக்குதான் பிரச்சினைனு சொன்னாங்க ஞாபகம் இருக்கா?. அப்படி பட்ட ஆண் சிந்தனைக்கு மத்தியில் உங்க சிந்தனை ரைட்டுன்னு நினைச்சுட்டீங்க போல. அதாங்க நெஞ்சுல வெளிச்சம் போட்டதை வெளியில் வெளிச்சம் போட பிடிக்கலைன்னு சொன்ன உங்க சிந்தனை. மத்த ஆண்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை சிவா. உங்க சிந்தனையும் பெண் என்பவள் உடல் சார்ந்தே சிந்திக்க பட வேண்டியவள் என்பதை தாண்டி வரலை. மன்னிக்கணும் உங்க ஐ லவ் யூவை ஏத்துக்கிட்டா என் சிந்தனைகளுக்கு துரோகம் பண்ணினா மாதிரி ஆயிடும். சாரி “

சொல்லிக் கொண்டு அவள் அவனிடமிருந்து விலகினாள். எத்தனை யுகம் ஆகுமோ அவள் ஒரு நிஜ ஆண்மகனை சந்திக்க?

Series NavigationWriting Competition on Tamil History, Arts and Culture (Organized by Ilankai Thamil Sangam) on Saturday November 2ndடௌரி தராத கௌரி கல்யாணம் – 23
author

சாம்பவி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *