டௌரி தராத கௌரி கல்யாணம் – 23

This entry is part 24 of 26 in the series 27 அக்டோபர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர்,புதுவை

ம்ம்ம்ம்ம்….நல்ல தூக்கமா ஆன்ட்டி…குழந்தைகள் இன்னும் தூங்கறா போல…!.இதோ… நான் மேல ரூமுக்கு போய்ட்டு இப்ப வந்துடறேன். சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடியேறினான் பிரசாத்..

இதோ….இங்க தான் பக்கத்துல கங்கை ஒடறா…முடிஞ்சாப் போய்ப் பாரேன்னு புரோஹிதர் சொன்னார் . அதான் பார்த்துட்டு வந்துடலாம்னு போனேன். அங்கே போனால் இவரும் அங்க இருந்தாரா…அப்படியே பேசிண்டே திரும்பி வந்துட்டோம்.

ஓஹோ……கங்கைல ஜலம் நிறைய இருக்கோ…?

அவ்வளவு கவலையா உனக்கு…? ம்ம்ம்ம்….நானும் கங்கை தான்னு தெரியற அளவுக்கு இருக்கு. அமைதியா எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பரந்து விரிந்து இருக்கு கங்கை நதி. இந்தக் குட்டியூண்டு ஊருக்கு இந்த கங்கை தான் ராணியா..? சின்னச் சின்ன படகுகள்..போயிண்டே இருக்கு…கரையோரமா படிக்கட்டுகள்….குட்டி குட்டியா…நெருக்கம் நெருக்கமா கட்டிடங்கள்…கோயில்கள்…எங்க பார்த்தாலும் யாராவது முங்கிக் முங்கி குளிச்சுண்டே இருக்கா…பாவம்மா கங்கா தேவி.

ஏன்….கங்கை பாவம்…? அவள் தான் மனுஷா பண்ற பாவத்தையே கரைக்கிறவளாச்சே…!

அதான்…சொன்னேன்…..எல்லாரும் குளிச்சுட்டு தன்னோட பாவமெல்லாத்தையும் கங்கையோட தலையில் ஏத்திட்டு போறாளே….நானும் தான்….என்னையும் சேர்த்துத் தான் சொல்லிக்கறேன்.

இதைக் கேட்டதும் சித்ரா மௌனமானாள். உன் விதி இப்படி வீதி சிரிக்கும் படியாவா ஆகணம். கல்யாணமே ஆகாமே…ரெண்டு குழந்தைகள்…..1 நாளைக்கு அந்த சாஸ்த்திரி பாட்டுக்கு ஏதாவது கேட்டுத் தொலைச்சால் என்ன சொல்வேன்….?

ஒண்ணுமே …சொல்லாதே….தேவையில்லாத எந்தக் கேள்விக்கும் பதிலே சொல்லாதே..இன்னைக்கு நான் அதைத் தான் பண்ணேன்.

ஓ …இன்னைக்கே கேட்டாச்சா..? அப்ப சரி………கௌரி…குழந்தை அழற சத்தம் கேட்குது பார்….!

அவசரமாக இருவரும்….வரேன்…….வரேன்…..என்று குரல் கொடுத்தபடியே அறைக்குள் போகிறார்கள்.

ஆளுக்கொரு குழந்தையாக தூக்கி கொண்டு….இவாளை முதல்ல ரெடி பண்ணு கௌரி….இன்னைக்கே கிளம்பி விஸ்வநாதரைப் பார்த்துட்டு வந்துடலாம். காசி விஸ்வநாதர் தான்…இங்க…எல்லாம்…..நாளையிலேர்ந்து காரியங்கள்…நேரம் சரியா இருக்கும். ஆமா….கௌரி, நானும் கவனிச்சேன்…ரொம்ப நாட்கள் கழிச்சு உன் முகத்தில் ஒரு சந்தோஷம் . பார்க்க எனக்கு மனசுக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா? அந்த பிரசாத் உங்கிட்ட எதாவது கேட்டாரோ..?

ஒண்ணும் கேட்கலை..நீ எந்த உளவும் பார்க்காதே. நீ நினைக்கறது எதுவும் எந்தக் காலத்துலயும் நடக்காது. ஏதோ…நமக்கு முன்னாள் பழக்கம். நம்ப அப்பாவும் ரொம்ப வருத்தப் பட்டு அவருக்குக் கடைசியா கடிதமெல்லாம் எழுதியிருக்கார். லெட்டரைப் படிச்சியே…..அதான்….பிரசாத்தை ஒரு நல்ல ஃப்ரெண்டா என்னால நினைச்சுண்டு என்னால பேச முடியறது.

நடக்குமா கௌரி….? பிரசாத்தின் குரல் கௌரிக்கு காதில் எதிரொலித்தது…!

நடக்கும்…பிரசாத்…..! என் அப்பாவின் ஆசீர்வாதம்….என்னோட வேண்டுதல்…உங்கம்மாவோட ஆசை..இதெல்லாம் இந்த காசி விஸ்வநாதர் நிறைவேற்றி வைக்கணும்ன்னு இன்னைக்கு ப்ரே பண்ணிக்கறேன்.

மனத்தில் எழுந்த எண்ணங்களோடு குழந்தைகளைக் கிளப்பிக் கொண்டிருந்தாள்.

அறையைப் பூட்டி விட்டு வெளியே வரும்போது, வாசலில் இவர்களுக்காகவே காத்திருந்த பிரசாத்தைப் பார்த்து…..கோவிலுக்கு…..எங்கிறாள் கௌரி.

யெஸ்….நானும் உங்களுக்காகத் தான் வெய்டிங்….கௌசிக்கைக் கொடுங்கோ….நான் தூக்கீண்டு வரேன் என்று கை நீட்டி குழந்தையை வாங்கிக் கொண்டவன், மெதுவா நடங்கோ……தெரு வழுக்கும்….ஒரே சேறும் சகதியுமா இருக்கு..என்று சொல்லியபடி காலைத் தூக்கி எட்டி எட்டி வைத்து நடக்கிறான்.

அம்மா…..பிரசாத்தைப் பாரேன்….எப்படி நடக்கிறான்னு….!

ஆம்மாம்….கல்லா…..மண்ணா…விளையாடறான்…பாவம்…இந்தா கௌரி என் கையையும் .பிடிச்சுக்கோ….என்று சின்னச் சின்ன சந்துகளை மெல்ல மெல்ல நடந்து அங்கங்கே தெரியும் குட்டி குட்டி விநாயகர் சிலைக்கு கன்னத்தில் போட்டுக் கொண்டு, ரோட்டோரம் இருக்கும் டீக் கடையிலிருந்து கம கம வென்று வரும் இஞ்சி டீயின் வாசனையைப் புகழ்ந்து, இந்த உலகத்துல யார் கஷ்டப் பட்டாலும் காசிக்கு வந்து இப்படி ஒரு டீக்கடை போட்டால் போதும்….அவா கஷ்டமெல்லாம் தீரும். ஒவ்வொரு கடையிலும் கூட்டத்தைப் பாரேன்…
ஆச்சரியத்துடன் சித்ரா நடந்தவள்….அவ்ளோதான்….இனிமேல் என் கால்கள் நடக்காது…..ஆட்டோவைக் கூப்பிடு…! என்று நின்று விடுகிறாள்.

அம்மா….இன்னும் கொஞ்ச தூரம் தான்….வா…மெல்ல வா….வேடிக்கை பார்த்துண்டே போய்டலாம்..கௌரி கெஞ்சுகிறாள்.

எங்கு பார்த்தாலும் தலைகள்……மக்கள் வெள்ளம் அலையடிக்க, கூட்டத்தில் கரைந்து போனவர்களாக ஒரு வழியாக காசி கோவிலுக்குள் நுழைந்து ஒவ்வொரு காவல் தடுப்பையும் தாண்டிக் கடந்து நெரிசலில் குழந்தைகளை வைத்துக் கொண்டு பயந்து…பயந்து…இறுதியில் ஒரு நிமிட தரிசனத்திற்கு இவர்களை இரண்டு காவலர்கள் தள்ளிவிட..அவர்களைத் திட்டிக் கொண்டே…
அங்கதான்….ஜருகண்டி….ஜருகண்டின்னு நெட்டித் தள்ளுவான்னா…..இங்கயும்…..ஜாவ்…ஜாவ்….ன்னு சாவடிக்கிறா….அலுத்துக் கொண்டே வெளியே வருகிறாள் கௌரி.

அரியும் சிவனும் ஒண்ணு …அறியாதவர் வாயில மண்ணுன்னு தெரியாமலா சொல்லிருக்கா…சித்ரா மூச்சு வாங்கச் சொல்கிறாள்.

நீங்க நன்னா தரிசனம் பண்ணேளா …பிரசாத்..?

ஒரே கூட்டம்…..உள்ளுக்குள்ள பூவா தான் தெரிஞ்சுது…அதான் சாமியா….? எனக்கொண்ணும் அவ்ளோ தெரியலையாக்கும்.

பட்….நான் நன்னாயிட்டு.வேண்டீண்டேனாக்கும்…!

என்னன்னுட்டு….! சித்ராவும், பிரசாத்தும் ஒரே குரலில் கேட்கவும்.

நான் செஞ்ச பாவங்கள் கரையணம்….! உங்களுக்குக் கல்யாணம் ஆகணம் ..!

ரெண்டையும் நடத்தித் தருவார்..! பார்த்துண்டே இரு…! சித்ரா சொல்லும்போது பிரசாத்தின் முகம் மலர்ந்தது.

அங்கங்கே தமிழ் குரல்கள், தெலுங்கு பேசும் குரல்கள், ஹிந்தி குரல்கள்…என்று கலந்து காதில் விழுந்து கொண்டே இருந்தது…புதிய அனுபவத்தில் திளைத்த கௌரி..எப்டியோ..நல்ல படியா வெளியே வந்தாச்சு… என்கிறாள்.

சீக்கிரமா ரூமுக்குப் போயாகணம் . நடக்க முடியாது ஏதாவது வண்டியைப் பிடியுங்கோ..!சித்ரா குரல் கொடுக்கவும்.

அந்த இரவு நேரத்திலும் தெருக்களில் வியாபாரக் கூச்சலும், மக்கள் நெரிசலும் ஜே…ஜே….என்று விளக்கொளியில் பிரகாசிக்க ஒரு ஆட்டோவில் ஏறியதும்…..அவன் ஆட்டோ ஓட்டும் திறமையைப் பார்த்து இவர்களின் வயிற்றுக்குள் லாரியே ஓடியது. குலுங்கிக் குலுங்கி இவர்களைச் சத்திரத்தில் கொண்டு வந்து விட்ட ஆட்டோகாரனைக் கையெடுத்து கும்பிட்டாள் சித்ரா.

காசில ஆட்டோ ஓட்டினா..உலகத்துல எந்த மூலைல போனாலும் பொழைச்சுக்குவான், இல்லையா கௌரி.

நான் குழந்தைகளை வெச்சுண்டு பயந்தே போயிட்டேன். சூப்பர் ஸ்பீட்..! சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தவள்..,

குட் நைட் பிரசாத்….சொல்லிக் கொண்டே கதவைச் சாத்துகிறாள் கௌரி.

ஜிர்ங் …ஜிர்ங் …ஜிர்ங் ….ஜிர்ங் …..மின்விசிறியின் சத்தம் பின்னணி பாட, உறங்கிப் போனார்கள்.

0 0 0 0 0 0 0 0

“சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்
பிரசன்னா வதனம் த்யாயேத்
சர்வ விக்னோப சாந்தயே…..!”

எம்.எஸ் எஸ்ஸின் வெண்கலக் குரலுக்குக் கண்விழித்த சித்ரா….மெல்ல “கௌரி……எழுந்திரு…பொழுது விடிஞ்சாச்சு “கெளரியைத் தட்டி எழுப்புகிறாள்.

சோம்பலுடன் நெளிந்தாலும், கண்களைக் கசக்கிக் கொண்டு விழித்தவள்…பெரிய கொட்டாவி விட்டபடியே…..”மணியாச்சா’…!

எல்லாம் ஆச்சு…சீக்கிரமாக் குளிச்சுட்டு கிளம்பு.

சித்ரா, மடிசார் புடவையில் அதீதப் பணிவோட சாஸ்த்திரி வீட்டக்குள் நுழைகிறாள். கௌரியும் இரண்டு குழந்தைகளையும் கைகளுக்குள் இடுக்கியபடி தலை இடித்து விடாமல் உள்ளே நுழைந்து…நேரே நடக்கிறாள்.

என்ன…..வந்தாச்சா…? சித்த நாழி உட்காருங்கோ…கணபதி ஹோமம் முடியட்டும். நாம ஆரம்பிச்சுடலாம். என்றவர் ,”ஹரே….சோட்டு …இதர் ஆவ் ….ஸாமான் ஸப் லேகே ரக் ”

டீ …..சாந்தி…..!

என்னன்னா….?

ஒரு மூணு காப்பி….ரெண்டு பால்..கொழந்தைகளுக்கு……சொல்லிவிட்டு…அந்தப் பிரசாத் இன்னும் வரலையா..?

எங்களுக்குத் தெரியாது …மாமா..! கௌரி சொல்லிக் கொண்டே, குழந்தைகளை தரை விரிப்பில் படுக்க வைத்து போர்த்தி விடுகிறாள்.

என்ன….மூணு ..காப்பியா.? ரெண்டு பேர் தானே வருவான்னு சொன்னேள்..? சாந்தி மாமியின் குரல் மட்டும் வீச்சருவாள் வேகத்தில் வந்து தாக்கியது,

சொன்னதைச் செய்யேன்….என்ன கேள்வி….? கேடயமாய்த் தடுத்தார் சாஸ்த்திரி.

காப்பியோட நிறுத்திக்கணம் …மத்தியானச் சாப்பாட்டுக்கு காவேரி மாமிட்ட தானே ஆர்டர் சொல்லிருக்கேள்…இன்னைக்கு மொத்தம் எத்தனை பார்ட்டி வரா…? கறாரான குரல் மீண்டும் எட்டிப் பார்த்தது.

ஆறு பார்டி….டி…! மொத்தம் இருபத்தஞ்சு பேர் வருவா…அந்த கும்பகோணப் பார்ட்டி கிட்ட தான் நான் காப்பி பவுடர் ஒரு நாலு கிலோ வாங்கீண்டு வரச் சொல்லியிருக்கேன். ஸ்பெஷல் காப்பிப் பொடி .

…ம்ம்ம்ம்ம்….! நாலு டம்பளருடன் ஒரு ட்ரே சமையல் உள்ளிருந்து ‘சர்’ என்ற சத்தத்துடன் எட்டிப் பார்த்தது.

ஹேய்….சோட்டு ….காப்பிக்கோ லேக்கே ஜாவ்..!

முப்பது வயதில் அந்தச் சோட்டு…காப்பியை எடுத்து இவர்களிடம் நீட்டியபடி….இந்தக் காப்பி…யாருக்கு.? என்று திரும்புகிறான்.

தோ ….அவருக்குத் தான் கொடு…சாஸ்த்திரி சொன்னதும்…..பிரசாத் உள்ளே வரவும், காப்பியை நீட்டுகிறான் சோட்டு.

பித்தளைத் தாம்பாளம், கிண்ணங்கள், பஞ்ச பாத்திரம், உத்தரணி, தண்ணீர், கருப்பு எள்ளு…அரிசி…அவுசு.. தர்ப்பை …!

இதையெல்லாம் பார்த்ததும் பேசும் உள்ளம் மௌனமானது. அமைதியாக ஒவ்வொன்றாக வேடிக்கை பார்த்தது.

ம்ம்ம்ம்…மாமி….பொம்மனாட்டியா, தைரியமா இத்தனை தூரம் வந்து செய்யறேள்…எல்லாம் நன்னா நடக்கும்..எல்லாத் தடையும் விலகும்…குடும்பத்துல சுபிட்சம் .உண்டாகும்….காசில வந்து சிரார்த்தம் செய்ஞ்சா, கயால பிண்டம் போட்டா, திரிவேணில வேணி தானம் பண்ணினா…..இதெல்லாம் கொடுத்து வேச்சிருந்தாத் தான் நடக்கும். போனவாளுக்கும் புண்ணியம்…பண்றவாளுக்கும் புண்ணியம்..!
சாஸ்த்திரி சொல்லிக் கொண்டே போகிறார்.

அதற்குள் அடுத்தடுத்து ஆட்களின் சலசலப்பு….!

காரியங்கள் மந்திரத்துடன் ஆரம்பிக்கப் படுகிறது…சோட்டு குமிட்டி அடுப்பை ஊதியப்படியே வீசிக் கொண்டு, அரிசியை தண்ணீரில் போட்டுக் கிளறிக் கொண்டிருந்தான்.

கிளம்பிய புகையில் கண்களைக் கசக்கிக் கொண்டு குனிந்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தாள் கௌரி.

அப்பா……உனக்காக நாங்க பண்ற சிரார்த்தம்…நீ கண்டிப்பா இதை ஏத்துண்டு ஆசீர்வாதம் பண்ணுப்பா….அப்டியே, இந்த பிரசாத்துக்கு கண்டிப்பா கல்யாணம் பண்ணி வைப்பா….உன்னோட லெட்டரை நான் படிச்சேன்பா. கௌரியின் ஆழ்மனசு அவளது அப்பாவிடம் பேசிக் கொண்டே இருந்தது.

ஏன்னா…..நம்ம கௌரிக்கு ஏன் வாழ்க்கை இப்படியாகணம் ..? எப்படியாவது நீங்க தான் அந்த பிரசாத்துக்கு கௌரியைக் கல்யாணம் பண்ணி வைக்கணம் . இது என்னோட மானசீக பிரார்த்தனையாக்கும். நிறைவேத்தி வைப்பேள் தானே…? சித்ராவும் பெட்டிஷன் போட்டாள் .
சிரார்த்த காரியங்களை முடித்தவர் ,

இதுக்கு பிறகு நீங்க கங்கைல குளிச்சுட்டு அங்கேர்ந்து ‘போட்’ எடுத்துண்டு ஒவ்வொரு கட்டமா சாதம் வடிச்சு, பிண்டம் உருட்டி கரைக்கணம். ஹனுமான் கட்டத்துல தொடங்கி ஒவ்வொரு கட்டமா போங்கோ…கடைசியா மணிகர்ணிகா கட்டத்துல முடிச்சுட்டு கங்கைல ஒரு முழுக்கு போட்டுட்டு வந்து சேருங்கோ…எல்லாம் முடிச்சுட்டு வந்த பிறகு காவேரி மாமியாத்தை நம்ப சோட்டு காண்பிப்பான், அங்க தான் உங்க எல்லாருக்கும் சாப்பாடு. இத்தோட இன்னிக்கு காரியங்கள் முடியறது..நாளைக்கு கயா போயாகணம். சாயந்தரமா நீங்க எங்க வேணா சைட் சீயிங் பாருங்கோ. சத்தமாகச் சொல்லிவிட்டு சாஸ்த்திரி அடுத்த பாட்சுக்கு தயார் பண்ணிக் கொண்டிருந்தார்.

டீ …சாந்தி….ஒரு ஆறு…காப்பி…போடு..!

சித்ரா பயத்துடன் எட்டிப் பார்க்கிறாள்….கிட்சனிலிருந்து அடுத்து என்ன வந்து விழப்போகிறதோ…?

அடுத்த ஆறு பேர்கள் கொண்ட குழு , இவர்களின் இடத்தை நிரப்பிக் கொண்டதும். இவர்கள் குழந்தைகளோடு வெளியேறி காத்திருந்தார்கள்.

ஒவ்வொரு கட்டமாய் உருட்டிய பிண்டன்களைக் கரைத்து விட்டு, ஒவ்வொரு கட்டத்திலும் முங்கிக் குளித்து விட்டு…..குழந்தைகள் தலையில் கங்கை நீரை எடுத்து சொம்பால் விட்டுக் குளிப்பாட்டும் போது..சித்ராவை அர்த்தமுள்ள பார்வை பார்த்தவளாக கௌரி தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள்….”எங்கள் பாவங்கள் கரைந்து விட்டது…கங்கையே எங்களை மன்னித்துவிடு…”

மணிகர்ணிகா கட்டத்தில் பிண்ட தானம் செய்து விட்டு, சங்கல்பம் செய்து கொண்டு கங்கையில் நீராடி எழுந்ததும்…மனத்துள் ஏற்பட்ட நிம்மதிக்கு நிகரே இல்லை…சித்ராவுக்கும் , கெளரிக்கும் .

கூடவே இன்னொரு தனி படகில் வந்து பிண்ட தானம் செய்யும் பிரசாத்தும்…சங்கல்பம் செய்துவிட்டு கங்கையில் நீராடி விட்டு ..” இந்த கங்கை நம் பாவத்தைப் போக்கி நல்ல வழி தரவேண்டும் ” மானசீகமாய் கேட்டுக் கொள்கிறான்..

பின்பு கங்கைக்கரையில் நின்றிருந்த கௌரியைப் பார்த்து,..மானசீகமாய் கேட்டுக் கொள்கிறான்…” உங்க அப்பாவின் ஆசிகள் கிடைக்குமா?”

அதைப் புரிந்து கொண்டவள் போல கௌரியும் கிடைக்கும்…..என்பது போல தலையசைக்கிறாள்.

இனி எல்லாம் ஆயாச்சு…..சாப்பிடப் போக வேண்டியது தான்…..கரையில் நின்று கொண்டிருந்த சோட்டு, இவர்களைப் பார்த்து…ஆயியே..
காவேரி மாமிக்கா கர்..! என்று காவேரி மாமி வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான்.

ஈரப்புடவை தடுக்க் சித்ராவும், கௌரியும் நடக்க, கௌசிக் வழக்கம் போல பிரசாத்திடம் ஒட்டிக் கொள்ள…குறுகலான சந்து வழியாக மூவரும் அவனைத் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

இந்த வீடு தான்…..! சோட்டு …கொச்சைத் தமிழில் சொல்லிவிட்டு, நீங்க போய் சாப்பிடுங்க…நான் போணும்…என்று திரும்புகிறான்.

வாசலில் இரண்டு எருமை மாடுகள் நின்று இவர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தது.

ம்ம்மாஆம்ம்மா…! உறுமலுடன் கனைத்த எருமையைப் பார்த்து பயந்து போன கௌரி, குழந்தையை கெட்டியாக அணைத்துக் கொண்டவள், அம்மா…பயம்மாருக்கு..என்று ஒதுங்கி நிற்கிறாள்.

இப்டி வா….ரொம்ப கஷ்டப் பட்டு உடலைக் குறுக்கி, உள்ளே கழுநீர் தொட்டியைக் கடந்து நுழைந்ததும்…..!

வாங்கோ….சமையல் ரெடி….சாப்பிடலாம்…..உள்ள வாங்கோ…!

காவேரி மாமியின் கனிவான குரல் இவர்களை வரவேற்றது.

அசந்து தூங்கிக் கொண்டிருந்த கௌசிக்கும் ,கௌதமும் தரையில் விரிப்பில் படுக்கப் போட்டுவிட்டு கௌரி அருகில் உட்கார்ந்தாள்.

தையல் இலைகள் போடப்பட்டு தண்ணீர் தெளிக்கப் பட்டதும்….பசி அரக்கனும் எழுந்து கொண்டான்.

பயங்கரப் பசியோடு வந்தவர்கள் ….இலையில் விழுந்த பதார்த்தங்களை ருசிக்க ஆரம்பித்ததும்….பிரசாத்…குனிந்து ரகசியமாக கௌரியிடம் மெல்லச் சொல்கிறான் “அப்பிடியே எங்கம்மாவோட சமையல் மாதிரி…அதே ருசி…அதே கைமணம்….என்னால நம்பவே முடியலை…..கௌரி. சேம் டேஸ்ட் ..!

அதற்குள் சித்ரா முந்திக் கொண்டு…மாமி….சமையல் அபாரம்….நல்ல ருசி என்கிறாள்.

காவேரி மாமி….சிரித்து மகிழ்ந்தபடியே….சமையலறைக்குள் ஒரு பார்வை பார்த்தபடி தலையை ஆட்டுகிறாள்.

எல்லாம்….என் பொண்ணோட கைப்பக்குவம் தான்…! அந்தக் குரலில் பெருமை பொங்கியது.

கூடவே அந்த வீட்டின் அடுத்த அறையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் மெல்ல ஆரம்பித்து தொடர்ந்து கேட்டது.

பிரசாத்தும், கௌரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கௌசிக்கும் ,கௌதமும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

(தொடரும் )

Series Navigationகருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும்சீதாயணம் முழு நாடகம் [4] (இரண்டாம் காட்சி)
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *