க லு பெ (தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி , தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்)

This entry is part 4 of 34 in the series 10 நவம்பர் 2013

க லு பெ

 

தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி

gorthib@yahoo.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

யுசெமிடி பிக்னிக் பயணத்திற்காக கென்னடி நடுநிலைப் பள்ளியின் பேருந்துகள் தயாராக இருந்தன. பெற்றோர்கள் எல்லோரும் தம் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட பஸ் அருகில் நின்றபடி விடை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் லக்கேஜ்களை பஸ்ஸில் ஏற்றுவதற்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள். அங்கே ஒரே சந்தடியாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் எட்டாவது வகுப்பு படிக்கும் மாணவர்கள் எல்லோரையும் ஒரு வாரம் வெளியூர்களுக்கு அழைத்துச் செல்வது கலிபோர்னியாவில் இருக்கும் பள்ளிகளின் வழக்கம். பெரும்பாலான மாணவர்கள் அதில் கலந்து கொள்வார்கள்.

“சித்தூ! ஜாக்கிரதை. உனக்குத் தேவைப்பட்ட வெப்ஸ்டார் அகராதி, ஸ்பெல் இட் போன்ற புத்தகங்களை எல்லாம் அப்பா உன்னுடைய ஐ பேடில் டவுன்லோட் செய்திருக்கிறார். பிரேக் கிடைக்கும் நேரத்தில் ரெவ்யூ பண்ணு. இரவு டின்னர் முடிந்த பிறகு மற்றொரு முறை படி. சொல்ல மறந்துவிட்டேன். ஹைக்கிங் போகும் போது நீ படிப்பதற்காக பிளாஷ் கார்டுகள் கூட உன் பேக்கில் வைத்திருக்கிறேன்.” சித்துவின் தாய் சொல்லிக்கொண்டே போனாள். சித்தூ எரிச்சலடைந்தவனாய் நெற்றியைச் சுருக்கி தாயின் பக்கம் பார்த்தான்.

அதைக் கவனித்த சித்துவின் தந்தை “போதுமே! ஏற்கனவே காரில் வரும் போது சொல்லிவிட்டாய் இல்லையா. அவன் நிச்சியமாக படிப்பான். அவனை அவன் போக்கில் விடேன்” என்றவர், தாயின் பேச்சைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பதுபோல் சித்தூவின் பக்கம் பார்த்தார்.

“இப்படியே சொல்லி அவனைக் குட்டிச்சுவராக்கி விடுங்கள். வந்ததும் வராததுமாய் கலிபோர்னியா ஸ்பெல்லிங் பி ஃபைனல்ஸ் இருக்கிறது. கேதரின் அனுப்பவே வேண்டாம் என்றுதான் சொன்னாள். கலிபோர்னியா இறுதிச் சுற்றில் முதலிடம் கிடைக்கவில்லை என்றால், இத்தனை வருடங்களாக பட்ட பாடு வீணாகிவிடும். போய்த்தான் தீருவேன் என்று அவன் அடம் பிடித்து அழுததால் அனுப்புகிறேன். இதில் எனக்குக் கொஞ்சம்கூட விருப்பம் இல்லை. இருந்தாலும் நாம் யுசெமிடிக்கு போன கொடையில்தானே போய் வந்தோம்? அத்தனை முறை பார்ப்பதற்கு அது என்ன டிஸ்னி லேண்டா?” கோபமாக கணவரின் பக்கம் பார்த்தாள். இது எல்லாம் பழக்கப்பட்ட சமாச்சாரம்தான் என்பது போல் சித்தூவின் தந்தை வேறு எங்கேயோ பார்த்தார்.

சித்தூ எட்டாவது வகுப்பு படிக்கும் மாணவன். கேதரின் என்ற டீச்சரிடம் ஸ்பெல்லிங் பி கோச்சிங் எடுத்துக் கொள்கிறான். பிக்னிக் முடிந்து வந்ததுமே ஸ்பெல்லிங் பி இறுதி சுற்று இருக்கிறது. வெற்றி பெறுவோம் என்ற தைரியம்  சித்தூவுக்கு இருந்தாலும் தாய்க்கு ரொம்ப கவலை. கேதரினுக்கு நம்பிக்கை இருந்தாலும் வெற்றியைச் சாதிக்கும் வரையில் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லுவாள். சித்தூவுக்கு இவையெல்லாம் பழக்கப்பட்டவைதான்.

மாணவர்கள் எல்லோரும் ஏறிக் கொண்டு விட்டார்கள் என்று உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு பேருந்துகள் வரிசையாய் புறப்பட்டன. சித்தூ நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டான். பஸ் புறப்படும் நேரம் கருப்பு இனத்தைச் சேர்ந்த ஒரு பையன் சித்தூவின் அருகில் வந்து நின்றான்.

“ஹாய்! ஐ யாம் எரிக்! கேன் ஐ சிட் ஹியர்?” என்று கேட்டான். உட்கார் என்பது போல் தலையை அசைத்துக் கொண்டே சித்தூ தன்னுடைய பெயரைச் சொன்னான். எரிக்குடன் அதிகமாக பழக்கம் இல்லை. ஆனால் லஞ்ச் பிரேக்கில் பாஸ்கெட்பால் விளையாடும் போது இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறான். அதைவிட பெரிய அறிமுகம் இருக்கவில்லை.

“உன்னுடையது எந்த வில்லேஜ்? என்னுடையது எல்.” எரிக் திரும்பவும் கேட்டான். சித்தூ தன்னுடைய வில்லேஜ் பற்றிச் சொன்னான். (வகுப்பு அறைகளை வில்லேஜ் என்று குறிப்பிடுவார்கள்)

சித்தூவுக்கு கூச்சம் அதிகம். நண்பர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் யாருமே இல்லை. யாருடனும் அதிகமாக பழகமாட்டான். இருக்கும் நேரம் ஸ்பெல்லிங் பி க்கும், வீட்டுப் பாடம் செய்வதற்கும் சரியாக இருக்கும்.

கொஞ்ச நேரம் கழித்து எரிக் பேக்கிலிருந்து கேம்பாய் எடுத்தான். சித்தூ அதை கண்ணிமைக்காமல் பார்க்கத் தொடங்கினான். பிறகு எரிக் ஏதாவது நினைத்துக் கொள்ளக் கூடும் என்று  ஐ பேடை எடுத்து ஸ்பெல் இட் படிக்க ஆரம்பித்தான்.

சித்தூவும் கேம் ஆடுவதற்காக ஐ பேடை எடுத்திருப்பான் என்று நினைத்த எரிக், அவன் அகராதியைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து வியப்படைந்தான்.

“என்ன அது? புதிய கேமா?” கேட்டான்.

“இல்லை, ஸ்பெல்லிங் பி க்கு சம்பந்தப்பட்டது.” சித்தூ மெதுவாகச் சொன்னான்.

எரிக் சித்தூவை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு தன்னுடைய கேமில் மூழ்கிவிட்டான். சித்தூவால் மேற்கொண்டு படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆர்வத்துடன் கேம்பாய் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் கழித்து “உனக்கும் விளையாடணும் போல் இருக்கா?” என்று எரிக் சித்தூவிடம் கேட்டான். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழப்பத்துடன் பார்த்தான் சித்தூ. எத்தனையோ முறை அம்மாவிடம் வீடியோ கேம்ஸ் பற்றி கேட்டிருக்கிறான். பலன்தான் இருக்கவில்லை. அம்மாவுக்கு எப்போதும் படிப்பு… படிப்புதான். வேறு எந்த நினைப்பும் இருக்காது.

எரிக் சித்துவின் கையில் கேம்பாயைக் கொடுத்து விளையாடச் சொன்னான்.

சித்தூ தயங்கிக் கொண்டே வாங்கிக் கொண்டான்.

****

யுசெமிடி போய்ச் சேரும்போது மதியம் மூன்று மணி ஆகிவிட்டது. மாணவர்கள் எல்லோருக்கும் நிகழ்ச்சி நிரல், மற்றும் கடை பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை பற்றி விளக்கமாக சொன்னார்கள். இந்த ஒரு வாரத்தில் என்னென்ன செய்யப் போகிறார்கள் என்று திட்டமிட்ட பிரோகிராம் சார்ட் கொடுத்தார்கள். தினமும் காலையிலேயே ஒவ்வொரு இடத்திற்கு ஹைக்கிங் போக வேண்டியிருக்கும். மதியம் மூன்று முதல் நான்கு வரை மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிய விளக்குவார்கள். பிறகு டின்னர் இருக்கும் என்று சொன்னார்கள்.

யுசெமிடி ரொம்ப அழகான இடம். வசந்தம் நெருங்கிக் கொண்டிருந்தாலும் அங்கே பனி இன்னும் மலைகளிடமிருந்து விலகவில்லை. சித்தூ இதற்கு முன்பே இவற்றையெல்லாம் பார்த்திருக்கிறான். ஆனால் இந்த அளவுக்கு உறைந்துவிட்ட பனியை இதற்குமுன் கண்டதில்லை. எரிக் யுசெமிடி வருவது இதுதான் முதல் முறை. இயற்கையின் அழகைப் பார்த்ததும் பிரமித்துப் போனவனாய் “வாவ்!” என்றான்.

மாணவர்களை அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட கேபின்களுக்கு அழைத்துப் போனார்கள். யதேச்சையாக சித்தூவுக்கும், எரிக்கிற்கும் அடுத்தடுத்த படுக்கைகள் அமைந்தன.

அன்று இரவு படுத்துக் கொள்ளும் முன் சித்தூ ஸ்பெல்லிங் பி படிப்பதற்காக ஐ பேடை எடுத்தான்.

“வாட் ஈஸ் திஸ் டூட்? ஏதாவது எக்ஸாமா?”

“இது ஸ்பெல்லிங் பி க்கு ப்ரிபரேஷன். உனக்குத் தெரியாதா?” பதில் சொல்லிக் கொண்டே எதிர்க்கேள்வி கேட்டான் சித்தூ.

“ஸ்கூலில் அது எப்போதோ முடிந்து விட்டது இல்லையா?” எரிக்கிற்கு படிப்பில் அவ்வளவாக சிரத்தை இல்லை. அவனுக்கு பாஸ்கெட்பால் விளையாடுவதில் மட்டும்தான் விருப்பம். அதுதான் அவன் உலகம்.

“இது நேஷனல் ஸ்பெல்லிங் பி. அடுத்த வாரம் பைனல்ஸில் வெற்றி பெற்றால் நேஷனல் போட்டியில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கும்.”

“கமான் டூட்! நாம் இங்கே என்ஜாய் செய்வதற்கு வந்திருக்கிறோம். நாட் ஃபர் ஸ்டடீஸ்.” தூண்டிவிடுவதுபோல் சொல்லிக் கொண்டே கேம்பாயை சித்துவின் கையில் வைத்தான் எரிக்.

காலையில் பஸ்ஸில் மூன்று மணி நேரம் விளையாடிய போதே அதில் இருந்த ருசி அவனுக்குத் தெரிந்து விட்டது. சித்தூ மறுக்கவில்லை.

****

“பாஸ்கெட் பால் விளையாடுவோமா? நம் கேபின் அருகில் ஒரு ஹூப் பார்த்தேன்.” எரிக் சித்தூவிடம் கேட்டான். அன்று பனி அதிகமாக பெய்து இருந்ததால் ஹைக்கிங் ப்ரோக்ராமை கேன்சல் செய்து விட்டார்கள். மாணவர்களுக்கு பிரேக் தருவதாகவும், அங்கேயே அவரவர்களுக்குப் பிடித்த விதமாக இருந்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள்.

சித்தூ என்றுமே பாஸ்கெட்பால் விளையாடியது இல்லை. சொல்லப் போனால் எந்த விளையாட்டும் விளையாடுவதற்கு அவனுக்கு வாய்ப்பே கிடைத்தது இல்லை. படிப்பும், ஸ்பெல்லிங் பி கொச்சிங்கும் இவற்றுடன் நேரம் சரியாக இருக்கும். எப்போதாவது வீட்டில் யூனோ கேம் விளையாடுவதுடன் சரி.

“விளையாடணும் என்றால் பந்து வேண்டும் இல்லையா? எனக்கு விளையாடவும் தெரியாது.” சித்தூ சொன்னான்.

“பக்கத்திலேயே ஸ்டோர் இருக்கிறது. நான் வாங்கி வருகிறேன்” என்று ஓட்டமேடுத்தான் எரிக். சித்தூ அவனைப் பின்பற்றினான்.

சித்தூ முதல்முறையாக பாஸ்கெட்பால் விளையாடினான். எப்படி விளையாட வேண்டும் என்று எரிக் அவனுக்கு சொல்லிக் கொடுத்தான். தொடக்கத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் ஒரு மணி நேரம் போனதும் சித்தூவுக்கு அதனுடைய நெளிவு சுளிவுகள் புரிந்துவிட்டன. எத்தனை நேரம் விளையாடினார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

“எனக்குத் தெரியாமல்தான் கேட்கிறேன். பாஸ்கெட்பால் உங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக விளையாடுவானேன்?” சித்தூவுக்கு சந்தேகம் வந்து கேட்டான்.

“உங்க ஏஷியன்ஸ், ஸ்கூலில் டாப் ரேங்குகளை எல்லாம் எப்படி அள்ளிக் கொண்டு போகிறார்கள்? இதுவும் அப்படித்தான்.”  எரிகின் பதிலில் கேள்வியும் கலந்து இருந்தது..

சித்தூவிடம் பதில் இருக்கவில்லை. அவனுக்கு அம்மாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

“நீ மட்டும் இந்த தடவை ஸ்பெல்லிங் பி ஃபைனல்ஸுக்கு போகவில்லை என்றால் சும்மாயிருக்க மாட்டேன்.”

நினைத்துப் பார்க்கும்போதே சித்தூவுக்கு பயமாக இருந்தது. போன முறை ஏழாவது இடம் கிடைத்தது என்று அம்மா வீட்டில் பெரிய ரகளை செய்தாள். தான் அழ வேண்டியது போய் ஒரு வாரம் வரையில் அம்மா அழுது கொண்டே இருந்தது நினைவுக்கு வந்தது.

“டூட்! பாஸ்கெட்பால் ஈஸ் ஃபன் கேம். நாளை கூட பிரேக் நேரத்தில் விளையாடுவோம். நான் மற்றவர்களிடமும் சொல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு மறுநாள் விளையாட்டுத் திடலைத் தயார் செய்து விட்டான்.

அன்று இரவும் சித்தூவின் கையில் கேம்பாய் பிசியாக செயல் பட்டுக் கொண்டிருந்தது.

****

யுசெமிடியில் இருந்த ஒரு வாரமும் நிமிடங்களாய் கழிந்துவிட்டன. சித்தூ ஒருநாளும் ஸ்பெல்லிங் பி படித்த பாவத்தைச் செய்யவில்லை. அம்மா திட்டுவாள் என்று தெரியும். ஆனாலும் அவனுக்கு அங்கே இருந்த அருவிகள், பனிமலைகள், சூழ்நிலை ரொம்பபி பிடித்துவிட்டன. இதற்கு முன் பலமுறை பார்த்த இடம்தான் என்றாலும் இந்த முறை இன்னும் புதிதாக, அழகாக இருப்பது போல் தோன்றியது. முக்கியமாக எரிக்குடன் பாஸ்கெட்பால் விளையாடுவதும், இரவில் கேம் பாய்  விளையாடுவதும்.

“இந்த ஒரு வாரமும் ரொம்ப ஃபன்! நன்றாக கழிந்துவிட்டது இல்லையா?” சித்தூ பஸ்ஸில் ஏறும்போது சொன்னான். இந்த முறையும் அவ்விருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டார்கள்.

“ஆமாம். ஸ்கூலில் லஞ்ச் நேரத்தில் விளையாடுவோம். நீயும் வா. இந்த ஒரு வாரத்திலேயே விளையாட்டை நன்றாக பிடித்துக் கொண்டுவிட்டாய். உன் த்ரீ பாயிண்டர்ஸ் சூப்பர்ப்!” சித்தூவைப் பாராட்டிக்கொண்டே சொன்னான்.

ஸ்கூலில் விளையாட வேண்டும் என்றுதான் இருந்தது சித்தூவுக்கு. ஆனால் அம்மாவுக்குத் தெரிந்தால் சும்மாருக்க மாட்டாள். கொன்றுப் போட்டுவிடுவாள். மேலும் கடந்த ஏழு நாட்களில் ஒரு தடவைகூட ஸ்பெல் இட் புத்தகத்தைத் திறந்து பார்க்கவில்லை.

“எங்க அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. இருந்தாலும் நான் விளையாடுவதற்கு முயற்சி செய்கிறேன். பாஸ்கெட்பால் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. இட்ஸ் ஃபன்!” சித்தூ சந்தோஷமாகச் சொன்னான்.

****

சித்தூ கலிபோர்னியா ஸ்பெல்லிங் பி யில் வெற்றி பெற்று நேஷனல்ஸ்க்குப் போனான. யுசெமிடி பயணத்திலிருந்து வந்த பிறகு சித்தூவின் தாய் அவனை மூச்சு விடவும் அனுமதிக்கவில்லை.

சித்தூவுக்கு எரிக்குடன் நட்பு மேலும் அதிகரித்தது. தினமும் லஞ்ச் நேரத்தில் சந்தித்துக் கொள்வதும், பாஸ்கெட்பால் விளையாடுவது நித்தியபடியில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

ஒருநாள் எரிக் பிறந்தநாள் விழாவுக்கு சித்தூவை அழைத்தான். அப்படியே ஸ்லீப் ஓவருக்கு வரச் சொன்னான்.. ஸ்லீப் ஓவர் என்றால் இரவு முழுவதும் எரிக் வீட்டில் தங்கி இருப்பது. அம்மா சம்மதிக்க மாட்டாள் என்று சித்தூவுக்குத் தெரியும். இருந்தாலும் கேட்டான். எரிக் பெயரைச் சொன்னதும் “யார் இந்த புதுப்பையன்?” என்று கேட்டாள். யுசெமிடி போன போது அறிமுகம் ஆனான் என்று சொன்னான்.

“வேண்டுமானால் இரண்டு மணி நேரம் பார்ட்டிக்குப் போய்வா. நோ ஸ்லீப் ஓவர்!” சித்துவின் தாய் கண்டிப்பாக சொல்லிவிட்டாள்.

பார்ட்டிக்குப் போக அனுமதிக் கொடுத்ததே பெரிசு என்ற சந்தோஷத்தில் ஸ்லீப் ஓவர்க்காக சித்தூ பிடிவாதம் பிடிக்கவில்லை.

பிறந்தநாள் விழாவில் கேக் கட்டிங் முடிந்த பிறகு எரிக்கின் தந்தை வித்தியாசமான் ஒரு வாத்தியத்தில் பாட்டு வாசித்தார். இறுதியாக ஹாப்பி பர்த்டே பாட்டும் வாசித்தார். சித்தூவுக்கு அந்த வாத்தியம் பிடித்துவிட்டது. பார்ப்பதற்கு புல்லாங்குழல் போல் இருந்தாலும், அது புல்லாங்குழல் இல்லை. எரிக்கும் அதை வாசித்தான். சித்தூவுக்கு அந்த வாத்தியம் பிடித்திருப்பது தெரிந்த போது அதை அவனிடம் கொடுக்க முன் வந்தான்.

“எடுத்துக் கொள். இது என்னுடைய பரிசு. இதன் பெயர் கலுபெ. இந்த வாத்தியத்தை எங்கள் குடும்பத்தில் எல்லோரும், அதாவது எங்கள் தாத்தா, அவருடைய அப்பா அது போல் எல்லோரும் வாசிப்பார்கள். என் பெயர் எரிக் ஜி. வில்லியம். இதில் ஜி என்றால் கலுபெ. அது இந்த வாத்தியத்தின் பெயர்தான். எங்க வீட்டில் என் செல்லப் பெயர் கலுப. உணமையில் கலுபெ என்று அழைக்க வேண்டும். ஆனால் எல்லோரும் கலுப என்றுதான் அழைப்பார்கள்.” எரிக் சொன்னான்.

கலுபெ என்பது பிரெஞ்சு வார்த்தை இல்லையா என்று சித்தூ சொன்ன போது, ஆமாம் என்று சொன்ன எரிக் அவர்கள் பிரான்ஸ்லிருந்து அமெரிக்காவுக்கு வந்திருப்பதாகச் சொன்னான்.

சரியாக இரண்டு மணிநேரம் ஆனதும் சித்தூவின் தாய் வந்து அவனை அழைத்துக் கொண்டு போனாள். சித்தூவுக்கு மட்டும் இன்னும் கொஞ்ச நேரம்   இருக்க வேண்டும்போல் இருந்தது. ஆனால் தாய் தன் வார்த்தையைப் பொருட்படுத்த மாட்டாள் என்று தெரிந்திருப்பதால் மௌனமாக  பின்பற்றினான்.

பள்ளியில் சித்தூவுக்கு இருக்கும் ஒரே  நண்பன் எரிக்! சித்தூவுக்கு தினமும் எரிக்குடன் பள்ளியில் பாஸ்கெட்பால் விளையாடுவது விடமுடியாத பழக்கமாகிவிட்டது.

ஒருநாள் தாய்க்கு இந்த விஷயம் தெரிந்து விட்டது. ரொம்ப ரகளை செய்து விட்டாள். அதைப் பார்த்து சித்தூ மிரண்டு போய்விட்டான். மறுநாள் எரிக்கிடம் சொல்லுவோம் என்று பள்ளியில் அவனுக்காக தேடினான்.

எரிக் கண்ணில் படவில்லை. பள்ளிக்கு வரவில்லை போலும் என்று நினைத்தான். மறுநாளும் தென்படவில்லை. பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு வாரம் கழிந்துவிட்டது. எரிக் திரும்பவும் பள்ளியில் தென்படவே இல்லை. எரிக்கின் விலேஜ் மாணவர்களை விசாரித்தான். எரிக் பள்ளிக்கு வருவதை நிறுத்தி விட்டான் என்று மட்டும் தெரிந்தது சொல்லாமல் கொள்ளாமல் எரிக் எங்கே போயிருப்பான் என்று சித்தூவுக்குப் புரியவில்லை. அவனுடைய நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தான். யாருக்குமே தெரியவில்லை  ப்ரின்சிபால் உள்பட.

சாதாரணமாக ஸ்கூல் முடிந்த பிறகு மாணவர்கள் கூகிள் சாட்டில் இருப்பார்கள். அதற்குப் பிறகு ஒருநாளும் கூகிள் சாட்டில் எரிக் பெயருக்குப் பக்கத்தில் பச்சை நிற அடையாளம் தென்படவில்லை.

அம்மா கடிந்து கொள்வாள் என்று தெரிந்தாலும் தினமும் லஞ்ச் நேரத்தில் பாஸ்கெட்பால் ஹூப் அருகில் நின்று கொண்டு விளையாட்டை பார்த்துக் கொண்டு இருந்தான். எரிக் இல்லாமல் விளையாடுவதற்கு அவன் மனம் ஒப்பவில்லை.

பார்த்துக் கொண்டிருந்த போதே இரண்டு மாதங்கள் கழிந்து விட்டன. சித்தூவுக்கு எரிக்கின் ஜாடை மட்டும் தெரியவில்லை.

****

சித்தூ நேஷனல் ஸ்பெல்லிங் பி ஃபைனல்சுக்கு போனான். போட்டியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

செமி ஃபைனலில் வடிகட்டிய பிறகு லீஸா என்ற அமெரிக்கன் சிறுமியும், சித்தூவும் பைனலுக்கு வந்தார்கள்.

முதலில் இரண்டு பேரையும் ஆளுக்கொரு வார்த்தையைக் கேட்டார்கள். இருவரும் சரியாகத்தான் சொன்னார்கள். இதில் ஒருவர் தவறாகச் சொல்லி அடுத்தவர் சரியாகச் சொன்னால் அவர்களைத்தான் வெற்றி பெற்றவர்களாக அறிவிப்பார்கள். அங்கே சூழ்நிலை ரொம்ப பரபரப்பாக இருந்தது. சித்தூவின் அம்மாவுக்குத் தாங்க முடியாத உத்வேகம் நிரம்பி இருந்தது.

சித்தூ ரொம்ப  நெர்வஸாய் இருந்தான். இந்த முறை வெற்றி பெறவில்லை என்றால் அம்மா சும்மாயிருக்கமாட்டாள். போன தடவை அம்மாவின் கோபம் இன்னும் பசுமையாக அவன் மனதில் இருந்தது.

ஹால் முழுவதும் ஒரே எதிர்பார்ப்பு. யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எல்லோரும் மூச்சுகூட விடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

முதல் வார்த்தையை லீஸாவிடம் கேட்டார்கள். அவள் சரியாகச் சொன்னாள். பிறகு சித்தூவின் முறை வந்தது. சித்தூவும் சரியாகச் சொன்னான். இது போல் மூன்று முறை நடந்த பிறகு லீஸா ஒரு வார்த்தையைத் தவறாகச் சொன்னாள். இனி சித்தூவின் முறை.

அவனிடம் கேட்கப்பட்ட வார்த்தையின் ஸ்பெல்லிங் சரியாகச் சொல்லிவிட்டால் அவன்தான் அந்த வருடத்தின் ஸ்பெல்லிங் பி சாம்பியன். ஏறத்தாழ ஐம்பது லட்சம் ரொக்கப் பரிசு.

லீஸா தவறாக சொல்லிவிட்டாள் என்று தெரிந்ததும். சித்தூவின் உடலில் நடுக்கம் பரவியது. இதுதான் கடைசி வாய்ப்பு. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. திடீரென்று மூளை மரத்து விட்டாற்போல் இருந்தது.

அங்கே இருந்த நீதிபதி கடைசியாக ஒரு வார்த்தையைக் கேட்டார். அந்த வார்த்தையை எங்கேயோ கேட்டாற்போல் இருந்தது.

ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு நிசப்தம். எல்லோர் முகத்திலும் உத்வேகம்!

சாதாரணமாக ஒவ்வொரு வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சொல்வதற்கு கொஞ்சம் சமயம் தருவார்கள். அதோடு அந்த வார்த்தையின் பிறப்பிடம், அதன் மூல மொழி இவையெல்லாம் கேட்ட பிறகு, எல்லாவற்றையும் உறுதிப் படுத்திக் கொண்டு கடைசியில் ஸ்பெல்லிங் சொல்லுவார்கள். ஜட்ஜ் வார்த்தையைச் சொல்லி முடித்தாரோ இல்லையோ ஒரு வினாடி கூட தாமதம் செய்யாமல்  பதில் சொல்லிவிட்டான் சித்தூ.

அங்கே இருந்த எல்லோரும் திகைத்துப் போனாற்போல், முகம் வெளிரப்  பார்த்தார்கள்.

ஜட்ஜ் சித்தூ சொன்னது சரிதான் என்று சொன்னதும் அந்த ஹால் முழுவதும் கைத்தட்டல்களால் அதிர்ந்துவிட்டது.

சித்துவின் அம்மா அதைத் தாங்கமுடியாமல் அழுதுகொண்டே கீழே சரிந்துவிட்டாள்.

சித்தூவின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் துளிகள் உதிர்ந்தன.

ஸ்பெல்லிங் பி யில் வெற்றி பெற்றதற்கு என்று எல்லோரும் நினைத்தார்கள். எரிக்கின் நினைவு வந்தது சித்தூவுக்கு.

சித்தூவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த அந்த வார்த்தை.. கலுபெ!

G-A-L-0-U-B-E-T.

****

சித்தூவின் பெயர் டி..வி.யிலும், நாளேடுகளிலும் பிரபலமாகிவிட்டது. திடீரென்று குபர்டினோ பள்ளியில் ஹீரோவாகி விட்டான். அவனுடைய அம்மா வான்மேகத்தில் மிதந்துக்  கொண்டிருந்தாள்.

எத்தனையோ பேர் சித்தூவைப் பாராட்டினாலும் எரிக் இல்லாத குறை பளிச்சென்று தெரிந்தது. எரிக் நினைவுக்கு வரும் போதெல்லாம் வீட்டில் கலுபெ வாத்தியத்தை வாசிக்க முயற்சி செய்வான் சித்தூ.

தினமும் லஞ்ச் பிரேக்கில் பாஸ்கெட்பால் ஹூப் அருகில் சென்று அங்கே மற்ற குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பானே தவிர ஒருநாளும் விளையாடியதில்லை. எரிக் என்றாவது ஒருநாள் வருவான் என்ற எதிர்ப்பார்ப்பு அவனுக்கு..

மூன்று வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் திடீரென்று கூகிள் சாட்டில் எரிக்கின் பெயருக்குப் பக்கத்தில் பச்சை நிற அடையாளம் தென்பட்டதும் சித்தூ துள்ளிக் குதித்தான்.

சித்தூ: ஓ மை காட்! ஹாய் எரிக்! ஐ கான்ட் பிலீவ் இட். எப்படி இருக்கிறாய்?

எரிக்: ஏய் சித்தூ! நன்றாகத்தான் இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்?

சித்தூ: நன்றாக இருக்கிறேன். என்னவாகிவிட்டாய் இத்தனை நாளும்?  உனக்காக எவ்வளவு தேடினேன் தெரியுமா?

எரிக்: சாரி. எதிர்பாராமல் நாங்கள் அமெரிக்காவை விட்டுப் போக        வேண்டியிருந்தது. எங்க அப்பா எங்கள் வீட்டாரைப் பார்த்துவிட்டு  வருவதற்காக பிரான்ஸ் போயிருந்தார். அங்கே கார் விபத்து நடந்தது தெரிந்து நாங்களும் போக வேண்டி வந்தது. இதற்கு இடையில் ஒருநாள் நான் பாஸ்கெட்பால் விளையாடும் போது தலையில் பெரிய காயம் ஏற்பட்டு இரண்டு மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியதாகி விட்டது. எப்படியோ உயிர் பிழைத்துக் கொண்டு விட்டேன்.  இது நடந்த ஒரு மாதம் கழித்து என் அப்பா இறந்து போய் விட்டார். நானும், என் அம்மாவும் இங்கேயே இருக்க வேண்டியதாகி விட்டது.

சித்தூ: ஐ யாம் சாரி.  இப்போ தேவலையா? இன்னும் பிரான்சில் தான் இருக்கிறாயா? ஐ ரியல்லி மிஸ் யூ!

எரிக்: மீ டூ! யா.. பிரான்சில்தான் இருக்கிறேன்.

சித்தூ: ஐ யாம் ரியல்லி ஹாப்பி டு ஸீ யூ.

எரிக்: மீ டூ. உன் ஸ்பெல்லிங் பி. என்னவாச்சு? நீ ஜெயித்தாயா?

சித்தூ: நான்தான் ஜெயித்தேன்.

எரிக்: ஒஹ்! கிரேட்! யுஆர் ரியல்லி ஜீனியஸ்!

சித்தூ: நோ. ஐ யாம் லக்கி!

எரிக்: கமான்! யு காட் டாலென்ட்  யு ஆர் மை ஹீரோ டூ!

சித்தூ: நானா?

எரிக்: ஆமாம். ஆஸ்பத்திரியில் இருக்கும்போது போர் அடித்து நிறைய புத்தகங்கள் படித்தேன். தெரியாத வார்த்தையைப் படிக்கும் போதெல்லாம் நீதான் நினைவிற்கு வந்தாய். கொஞ்ச நாள் கழித்து என்னை அறியாமலேயே ஸ்பெல்லிங் மீது ஆர்வம் ஏற்பட்டது. படிப்பு என்றால் சிரத்தை இல்லாத எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய் விருப்பம் ஏற்பட்டது.. இப்போ உன்னைப் போல் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சித்தூ: கிரேட்! உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?

எரிக்: என்ன அது?

சித்தூ: ஒரு நிமிஷம், அம்மா என்னைக் கூப்பிடுகிறாள்.

எரிக்: நோ பிராப்ளம்.

இரண்டு நிமிடங்கள் கழித்து..

சித்தூ: சாரி. அம்மா கூப்பிட்டாள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் டி.வி.யில் எனக்கு இன்டர்வ்யூ இருக்கு. நான் போக வேண்டும்.

எரிக்: யு ஆர் எ பிக் ஹீரோ நவ். ஏதோ சொல்ல வந்து பாதியில் நிறுத்திவிட்டாய்.

சித்தூ: ஒஹ் டூட்! டு யு நோ தி  ஃ பைனல் வர்ட் ஐ வன் இன் ஸ்பெல்லிங் பி?

எரிக்: நோ..

சித்தூ: இட் எஸ் கலுபெ

எரிக்: யு ஆர் கிட்டிங்!

சித்தூ: நோ ஐயாம் நாட் கிட்டிங். சீரியஸ்! இட் ஈஸ் ஆல் பிகாஸ் ஆஃப் யூ!

எரிக்: கமான்! யு காட் டாலென்ட்! நீதான் வெற்றி பெற்றவன். இதைச் சாதிப்பதற்கு நீ எத்தனை ஆண்டுகளாய் உழைத்து வந்தாய் என்று எனக்குத் தெரியும்.

சித்தூ: ஜெயித்தது நான் இல்லை. எங்க அம்மா. ஐ லாஸ்ட்!

எரிக்: கிவ் மி எ பிரேக்! யூ லாஸ்ட்?

சித்தூ: ஆமாம். இழந்துவிட்டேன். ஐ லாஸ்ட் ஆல் தி ஃபன் யாஸ் எ சைல்ட்!

எரிக்:

சித்தூ: சரி.. அம்மா அழைக்கிறாள். ஐ காட் டு கோ.

எரிக்: பை! லெட் அஸ் கீப் இன் டச்.

சித்தூ: யா! ஸீ யூ.. பை

 

 

 

Series NavigationBISHAN-TOA PAYOH DEEPAVALI FIESTA 2013 Date: 24 November 2013, Sunday – Singaporeநான் யாரு?
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *