டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 24

This entry is part 26 of 34 in the series 10 நவம்பர் 2013

 

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் 

 

 

இதென்ன பச்சகுழந்தையின் அழுகுரல்…..? புருவங்களை உயர்த்தியபடியே சித்ரா, கௌரியைப் பார்க்கிறாள்.

அதொண்ணணுமில்லை….என்னோட பேத்தியாக்கும் அது. ஆறு மாசந்தானாறது.…தூளில தூங்கிண்டு இருக்கா….எழுந்துட்டா போல இருக்கு…அதான் அழறா…இருங்கோ வரேன்..காவேரி மாமி சொல்லிக் கொண்டே டீ…..மங்களம்……குழந்தையை தூளீலேர்ந்து எடு….பசிக்கறதோ….என்னவோ…..பாலைக் கொடுத்துட்டு வா….அப்பறமா வந்து வடையைத் தட்டி எடுக்கலாம். மத்தவா வரதுக்கு இன்னும் சித்த  லேட்டாகும்போல இருக்கு.

காவேரி குரல் கொடுத்து, சில நிமிடங்களில் குழந்தையின் அழுகுரல் நின்றது..

அது ஹாலுமில்லை …வராண்டாவுமில்லை... என்பது போல நீளமான இரண்டு அறைகள். பக்கத்தில் புறாக் கூடு போல இருட்டுக் கும்பாக இன்னும் இரண்டு சிறிய அறைகள். இங்க இவாள்ளாம் எப்படித் தான் இத்தனை காரியங்கள் பண்ணீண்டு  இருக்காளோ. இவாளுக்கு கோயில் கட்டித் தான் கும்பிடணும். யாராக்கும் இத்தனை ருசியா சமைச்சது…அந்தப் பொண்ணைப் பார்த்து சொல்லிட்டு போகணம், சித்ரா கௌரியிடம் சொல்லிக் கொண்டே கண்களை  அங்குமிங்கும் அலைய விட்டு அறையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்.
அந்தப் பொண்ணா இருக்குமோடி….? சுவரில் மாட்டியிருந்த ஒரு இளம் ஜோடியின் மாலையும் கழுத்துமாக இருந்த கல்யாண போட்டோவைப் பார்த்து கண்ணைக் காட்டிக் கேட்கவும்,
ஐயோ…அம்மா…நீ சும்மா இரேன்….வந்த இடத்தில் இப்படியெல்லாம் பிகேவ் பண்ணக் கூடாதுன்னு தெரியாதா…? சட்டுன்னு சாப்ட்டுட்டு எழுந்திரும்மா…..வந்த இடத்தில் கதை கேட்காதே….கௌரி மெல்லிய குரலில் எச்சரித்துவிட்டு, எனக்குப் போதும்….கையலம்பிக்கறேன் என்று சொல்லி  எழுந்து சென்றதும்.,.

உங்களுக்கு எந்த ஊராக்கும் சொந்த ஊர்…..? சித்ரா ரசம் சாதத்தைப் பிசைந்தபடியே காவேரியைப் பார்த்து கேட்கிறாள்.

“சாலக்குடி”…..ஆனா நாங்க அங்கேர்ந்து இங்க வந்து ஐம்பது வருஷங்களாயாச்சு.

ஓ..உங்களைப் பார்த்தால் அத்தரை வயசானதாத் தோணவேயில்லையாக்கும்..

அதைக் கேட்டதும் காவேரி மாமியின் முகத்தில் மின்னல் வெட்டி மறைந்தது..பெருமை பொங்கும் புன்னகையோடு…ம்ம்..என்னோட மாமனாரின் கர்ம காரியங்களுக்காக வாரணாசிக்கு வந்தோம். அப்படியே இங்கயே இருந்தாச்சு. ஊர்ல இருந்த நில புலன் எல்லாத்தையும் வித்துட்டு இந்த வீட்டை சொந்தமா வாங்கிண்டு இங்கயே சமையல் காண்ட்ராக்ட் எடுத்துண்டு செட்டில் ஆயாச்சு. என்னோட தம்பி நாகராஜன் கூட இங்க தான் டிராவல்ஸ் வெச்சுண்டு இருந்தான்..உங்களுக்கு எந்த ஊர்….பாலக்காடா,,,?
அதே,,,,அதே…. மெட்ராஸுக்கு வந்து எங்களுக்கு முப்பது கொல்லமாயாச்சு. (வருஷமாயாச்சு). அவர் போய் இது ரெண்டாவது வருஷம். அதான் இங்க வந்து ‘கயால’ காரியம் கழிக்கலாம்னு வந்திருக்கோம் .. இவள்  நேக்கு ஒரே பொண்ணாக்கும் …பேரு கௌரி…..விப்ரோவில் வேலையாயிருக்கா.  அந்த கல்யாண கோலத்துல இருக்கறது தான் உங்க பொண்ணு மங்களமா ..?
ம்ம்ம்…அந்த போட்டோவா…அது தான் என்னோட தம்பி நாகராஜன், ப்ரியா. ரெண்டு பேருமே இப்போ உயிரோட இல்லை. பெரிய உயிர் போயிடும்…மறுபடியும் சின்ன உயிர் பொறக்கும் …அதையே பார்த்துண்டு காலம் ஓடும் வேகத்தில் நாமளும் ஓடிண்டு இருக்கோம்.
இவர் உங்காத்து ..மாப்பிள்ளையா…? தயிரை விட்ட படியே காவேரி கேட்டதும்,
பிரசாத் சங்கோஜத்தில் நெளிந்ததைப் பார்த்த கௌரி, தூக்கிவாரிப் போட்டவளாக, இல்லையைல்லை…..இவர் என்னோட ஃப்ரெண்ட்…அவரோட அப்பா, அம்மாவுக்கு காரியம் பண்ண வந்திருக்காராக்கும். கௌரி குழந்தைகளை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டே சொல்லிவிட்டு நகர்கிறாள்.
ஓ…..சாரி…..ரொம்ப சாரி…உங்க கூட வந்ததும்  நான் தப்பா கேட்டுட்டேன்….மன்னிச்சுக்கோங்கோ
ம்ம்ம்….பரவாயில்லை….அதனால் என்ன….? தெரியாமல் தானே கேட்டேள்…இட்ஸ் ஆல் ரைட்….கௌரி சிரித்தபடியே சாப்பிடும் இடத்தை விட்டு வெளியேறுகிறாள்.

 

எனக்கும் ஒரே பெண்….தான்…! காவேரி சொல்லிக் கொண்டிருக்கையில், வாசலில் நிழலாட…..ப்ரோஹித சிரார்த்த காரியங்களை முடித்து விட்டு அடுத்த பாட்ச் விடு விடென்று சாப்பிட உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் கையில் குழந்தைகளை எடுத்துக் கொண்டு….மாமி…கொஞ்சம் ரசம் சாதமும், தயிர் சாதம் கொஞ்சமும் பிசைந்து தாங்கோளேன். குழந்தைகளுக்கு .ரூம்ல போய் கொடுக்கணம். அவா ரெண்டு பேரும் எழுந்துண்டா பசி தாங்கமாட்டா. அழ ஆரம்பிச்சுடுவா. என்று சித்ரா கெளரியிடம் ‘நீ சும்மாயிரு’ என்பது போல ஜாடை காட்டிவிட்டு…ஓரமாக ஒதுங்கி நின்றாள் .

 

அம்மா….நீ நின்னு சாதத்தை எடுத்துண்டு வா…நாங்க மெதுவா.நடந்துண்டு இருக்கோம்…ஜாஸ்தி பேசாதே…எல்லாரும் இருக்கா…கண்ணால கண்டித்து விட்டு கௌரி மெல்ல வெளியேறுகிறாள்.

 

அவளும் பிரசாத்தும் அந்த வராண்டாவை விட்டு வெளியேறும் போது,

 

நல்ல நெடு நெடுன்னு உயரம், பளீரென்ற எலுமிச்சம் பழ நிறம்,  முதுகில் பாதி மறைத்த கட்டைப் பின்னல். அதில் கருநீலத்தில் புடவை. முதுகைப் பார்த்ததும் முகத்தைப் பார்க்கத் தவித்தது மனது. கொடி போல இத்தனை அழகா ஒரு பெண் இந்த வீட்டிலா…? அதுவும் சமையல் செய்து கொண்டு….!கௌரிக்கு மனது என்னவோ செய்தது. அந்த அரை இருட்டறையின் மங்கிய ஒளியில் மின்னலாக மங்களத்தின் பின்புறம் நொடிப் பொழுதின் தர்ம தரிசனம்.

 

பிரசாத் கவனித்தானா என்று அவனையும் ஓரக் கண்ணால் ஒரு முறை பார்க்கிறாள்…அவனது கண்களும் லேசாகத் தடுமாறியது கண்டு கௌரிக்கு சிரிப்பு வந்தது. ம்ம்ம்….எனக்கே அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்கணும்னு தொணித்தே…என்று சமாதனப் படுத்திக் கொண்டாள் .அதே சமயம்….இந்தப் பிரசாத் யாரை எப்படிப் பார்த்தால் எனக்கென்ன…வந்தது? அது அவன் சுதந்திரம்..என்றும் மனதோடு பேசிக் கொண்டாள் .

 

பிரசாத்…இந்த ஸ்ட்ரீட்ஸை எப்பவுமே பெரிசாக்க முடியாது இல்லையா….? நீ என்ன சொல்றே..?

 

நோ…வே கௌரி….! ஹேய்….ஐ கேன் ஸீ ஸம் சேஞ்சஸ்…..லேசாக சிரித்தபடி…..கௌரி..ப்ளீஸ் நீ அப்டியே கூப்பிடேன்.

 

ஹோ….ஃபோ…! வாய் தவறி….!

 

பரவாயில்லை…கௌரி…நல்லவேளையா வாய் தவறித்து..! பிரசாத் சொல்லும்போது அவன் கண்கள் சிரித்ததை கௌரியும் கவனிக்கத் தவறவில்லை.

 

கௌரி……!

 

என்ன பிரசாத்..?

 

நாளைக்குத் தானே நாம கயா போகணும்..?

 

ஆமாம்…ரூமுக்குப் போனதும் .டிராவல்ஸ் புக் பண்ணிடனும். வி வில் ஷேர் தி காஸ்ட்…ரைட்.

 

அஸ் யூ விஷ்….கௌரி. நான் வேண்டாம்னு சொன்னால் நீ என்ன கேட்கவா போறே.?

 

அது….!

 

என்ன பிரசாத்…உங்க முகம் ரொம்ப சோர்வா இருக்கு….அம்மாவை ரொம்ப நினைச்சுண்டு இருக்கேளா?

 

நீங்க எப்போ ரிடர்ன் போறேள் ?

 

அதுவா…..இன்னும் த்ரீ டேஸ்..இங்க இருக்கு..அப்பறம் டெல்லில டே .தங்கறோம்…எதுக்கு தெரியுமா?

 

எனக்கு அஸ்ட்ரோலோஜி  தெரியாது.

 

நல்லதாப் போச்சு..! நாங்க டெல்லில  ‘அக்ஷர்தாம்’ பார்க்கப் போறோம்.

 

ஹேய்…கமான்…..சச் எ வொண்டெர் ஃபுல்  ப்ளேஸ் யா…. நான் அடிக்கடி அங்க போய்டுவேன்…வீக் எண்ட்ஸுக்கு. ஐ லவ் …..!

வாட் எ ப்ளேஸ்மா….!  ஐ டூ வான்ட் டு ஜாயின்….நானும் வரட்டுமா?

 

ஷ்யூர்…ப்ளெஷர் இஸ் மைன் .

 

இந்த ட்ரிப்ல, நான் என்னிக்கோ மறந்து போனது இன்னிக்கு ஞாபகப் படுத்திட்டாங்க அந்தக் காவேரி மாமி..அதான் நான் கொஞ்சம் அப்செட்.

 

வாட்….? நீ தான் மாப்பிள்ளையான்னு கேட்டாளே …அதுவா? ஆர்…..சமையல்…உங்கம்மாவை ஞாபகப்படுத்தி விட்டதா?

 

இதெல்லாம் இல்லை…!

 

ஈவன் ஐம் நாட் அன் அஸ்ட்ரோலெஜர் . நீங்களே சொல்லலாமே பிரசாத்.

 

பிரசாத் சொல்ல ஆரம்பிப்பதற்குள்…..தூரத்தில் வந்து கொண்டிருந்த சித்ரா, கௌரி…நில்லு…நானும் வந்துட்டேன்…என்று குரல் கொடுக்கவும்,

 

வாம்மா…..என்ற கௌரி  குழந்தைகளை சரி செய்து தூக்கியபடி நிழல் தேடி நின்று கொள்கிறாள். அவளையடுத்து பிரசாத்தும் சேர்ந்து கொள்ள, சித்ரா மனம் கொள்ளாத மகிழ்ச்சியில் அவர்கள் அருகில் வந்தவள்…எனக்கு இப்பத் தான் ரொம்ப நிம்மதியா இருக்கு..என்கிறாள்.

 

ரெண்டு வேளை நல்ல சாப்பாடு கிடைக்கலைன்னா உனக்கு உன் நிம்மதி உன்னை விட்டுப் போய்டுமே….கௌரி கேலி செய்கிறாள்.

 

ஒரு வழியா சாதத்தை பிசைந்து வாங்கிண்டு வந்தேன்…இல்லாட்டா இந்த இடத்துல நாம குழந்தைகளுக்கு பசிக்கு என்னத்த வாங்கிக் கொடுப்போம்….?

 

ஆமாமா…நீ நல்லவேளையா அவாகிட்ட கேட்டே..இது எனக்குத் தோணவே இல்லை பார்த்தியா.

 

ரெண்டு நாளா நானும் உன்னை பார்த்துண்டு வரேன்…நீ ஒரு நிலையில் இல்லை….சதா எதையோ யோசிச்சிண்டு இருக்கே. அப்படி என்ன உன் மனசுக்குள்ளே ரகசியம்?

 

அப்பா இப்ப உசுரோட இருந்திருந்தார்னா நாம இந்தப் பக்கம் வருவோமா? அதான் அப்பாவை நினைச்சுண்டேன்….!

 

போறவா ஈஸியா போய்ச் சேர்ந்துடறா…இருக்கறவா….இன்னும் இந்த பூமில இன்னும் உழன்றுண்டு கஷ்டப்படறா.நானும் அப்பாவும் உனக்குப் பத்து வயசா இருக்கச்சே உன்னை என் அம்மாகிட்ட விட்டுட்டு என் மாமியார், மாமனாருக்கு சிரார்த்தம் பண்ண இங்க வந்தோம். அப்போ ‘கேதார்கட்’டுல தங்கினதா ஞாபகம். அன்னிக்கும், இன்னிக்கும் காசி ஒரே மாதிரி தான் இருக்கு. சொல்லப் போனால் இப்போ தான் எக்கச்சக்க கூட்டம். சொல்லப்போனா நேக்கும் வயசாயாச்சு..இனிமேல் இப்படியெல்லாம் வர முடியுமா தெரியலை.

 

அந்தக் காவேரி மாமியைப் பார்த்துமா நீ உனக்கு வயசாச்சுன்னு அலுத்துக்கறே? அவாளே இன்னும் ஜம்முன்னு துரு துருன்னு நடந்துண்டு இருக்கா…எல்லாத்துக்கும் மனசு தான் காரணம். மனசு இளமையா இருந்தாப் போதும் உடம்பு வயசை மறைச்சுடும். அந்த மாமியாத்தில் அந்தப் பொண்ணு மங்களம் திரும்பி முதுகைக் காமிச்சுண்டு நின்னுண்டு இருந்ததால எங்களால முகத்தைத் தான் பார்க்க முடியலை. நல்ல அழகா இருப்பாள்னு தோணித்து .

 

அழகா….! அப்படியே துடைச்சு வெச்ச ஐம்பொன் சிலையாட்டமா இருக்கா. என்ன பிரயோஜனம்….? பகவான் அவள் தலையெழுத்தை

கிறுக்கி எழுதிட்டார்…மாமி சொல்லறச்சே எனக்கு ‘திக்’குன்னு ஆச்சு..ரகசியமா சொன்னா, நீங்க ஊருக்கு போறதுக்கு முன்னாடி உங்களண்ட கொஞ்சம் பேசணம் , உங்காத்து அட்ரஸ், ஃபோன் நம்பர் வாங்கிக்கணம்னு .

 

ஒ….அப்டியா….கொடுத்துட்டு போலாம்….அப்படி என்னாச்சும்மா…?

 

அந்தப் பொண்ணுக்குப் பேருல தான் இன்னும் மங்களம். கல்யாணம் பண்ணிக் கொடுத்து ஒரே வாரத்துல, ஹரித்துவார்ல வந்த வெள்ளம் அவ ஆம்படையானை  அப்படியே காரோட அடிச்சுண்டு போயிடுத்தாம். .அப்படியே இவளோட மங்கலத்தையும் சேர்த்து.!. ரெண்டு நாள் கழிச்சு தான் இவாளுக்கே விஷயம் தெரியுமாம்..இவாளோட டிராவல்ஸ் காரை வெச்சுக் கண்டு பிடிச்சுக் கொண்டு வந்தாளாம். எத்தனை கொடுமை பார்த்துக்கோ. இதையெல்லாம் கேட்டால் கடவுளுக்குக் காருண்யமே இல்லையோன்னு தோணறது.

 

அச்சச்சோ…..இத்தனை நேரம் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த கௌரி, பிரசாத்  இருவரின் முகத்திலும் இருள் கவ்வியது.

 

அதற்குள் இவர்கள் தங்கும்  இடம் அருகில் வந்துவிட்டதை உணர்ந்த கௌரி, பிரசாத் நீங்க என்னமோ சொல்லணும்னு சொன்னேளே…!

 

பரவாயில்லை கௌரி…..மெதுவா சொல்றேன். இப்ப வேண்டாம். மனசு சரியில்லை.

 

கூல் …ஒரு ஹின்ட் ….அட்லீஸ்ட்…!

 

சஸ்பென்ஸ்….ப்ளீஸ் வெய்ட்…என்ற பிரசாத்…தனது தோளில் உறங்கிக் கொண்டிருந்த கௌதமை மெல்ல சித்ராவின் தோளுக்கு மாற்றிவிட்டு, முடிஞ்சா ஈவ்னிங் கங்கைக் கரைக்கு போலாமா? என்று கேள்வியோடு கௌரியைப் பார்க்க.

 

கௌரி, சித்ராவைப் பார்க்க.

 

தாராளமா போய்ட்டு வாங்கோ…நானும் குழந்தைகளோட காவேரி மாமியாத்துல கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன். அந்த மாமி என்னமோ என்கிட்டே கேட்கத் தயங்கினா, அப்ப சாப்பிட வரவா போறவா இருந்ததால ஒண்ணும் சரியா பேசலை. நீங்க என்னை அவாத்தில் விட்டுட்டு ரெண்டு பேருமா போய்ட்டு வாங்கோ. இங்கிதம் புரிந்தவளாக சித்ரா சொன்னதும் கௌரிக்கு நிம்மதியாச்சு.

 

தாங்க்ஸ்மா….என்றவள். பிரசாத்..அப்போ ஷார்ப் பை ஃபைவ்…வந்துடுங்கோ….சரியா.

 

டபிள் ஓகே…என்ற பிரசாத் மாடிப்படி ஏறுகையில், இத்தனை நேரம் அவன் மனத்துக்குள்ளிருந்து  வெளி வரத் துடித்துக் கொண்டிருந்த

‘மங்கா’…அவன் கண் மாயப் பிம்பமாகத் தோன்றி மறைந்தாள்.

 

 

எல்லோருக்கும் அவள் ‘மங்கா’……எனக்கு மட்டும் ‘மேங்கோ’. அவள் கடைசியாகக் கோபத்தோடு என்னைப் பார்த்து முகத்தை ஒரு வெட்டு வெட்டித் திருப்பியபடி சொன்ன வாக்கியம்…ஆறு ஆண்டுகள் கழிந்தும் மீண்டும் காதில் சத்தமாகக் கேட்டது.

 

“ஐ டோன்ட் ஈவன் லைக் யூ …ஐ மீன் இட்…..ஐ’ம் இன் லவ் வித் ராஜேஷ்,  டோன்ட் ஃபாலோ மீ….குட் பை’

 

“மேங்கோ…’ என்று திரும்பியவனின் முகத்தில் எதிர்பாராமல் ஓங்கி விழுந்தது வேகமாக குத்து. தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று சுத்த….கண்ணுக்குள் ராஜேஷ் கசங்கிக் கசங்கித் கரைந்து காணாமல் போனான். அவர்கள் சென்ற பைக்கின் சப்தம் காதுக்குள் நுழைந்து தலைக்குள் ஓடிச் சென்றது போலிருந்தது.

 

 

(தொடரும்)

Series Navigationஎன்னுலகம்விளம்பரக் கவிதை
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *