ஜோதிர்லதா கிரிஜா
3.
சுவரில் சாய்ந்தவறு தளர்வாக உட்கார்ந்திருந்த லோகேசன் அவள் வீசிய குண்டுகளால் தாக்குண்டு நிமிர்ந்தார்.
‘ஏ, களுத! வாய மூடு. நீ உன் அத்தானைத்தான் கட்டணும். இல்லாட்டி, கொலை விழும்,’ என்றார் காட்டமாக. அத்தை பாக்கியமோ முகம் சிறுத்து உட்கார்ந்திருந்தாள்.
‘என்னால முடியாதுப்பா.’
‘ஏன் முடியாது?’ – லோகேசன் கையை ஓங்கிக்கொண்டு எழுந்தார்.
‘எனக்குப் பிடிக்கலைப்பா. ஆசைப் படுறதுக்கும் ஒரு அளவு வேணுமில்ல?’ – இவ்வளவு அப்பட்டமாய்ப் பேச அவள் விரும்ப வில்லை யானாலும், அத்தைக்கு ரோசம் உண்டாகி, அதன் விளைவாகக் கோபித்துக்கொண்டு அவள் தன் ஊருக்குப் புறப்பட்டுவிடவேண்டும் என்பது அவளது நோக்கமாக இருந்தது.
ஆனால், அவள் அத்தையோ, யமகாதகத்தனத்துடன், ‘உங்க அப்பா என்ன ரொம்ப அளகா? உங்கம்மா கட்டலை? அவ எப்பேர்க்கொந்த அளகு! கலியாணம் ஆனா எல்லாம் சரியாப் போயிறும். லோகு! நீ கையைக் கிய்யை ஓங்கிக்கிட்டுப் பாயாதே. உக்காரு, சொல்றேன். சின்ன வயசிலேர்ந்து பேசின பேச்சு. இப்ப பேச்சு மாறி அவன் மனசை முறிக்க என்னால முடியாது,’ என்றாள்.
‘என்னயக் கேட்டுக்கிட்டா பேசினீங்க? நீங்களா ஆயிரம் பேசுவிங்க. அதுக்கு நானா பிணை?’
‘ஏ, களுத! சும்மாரு. தவடையில ரெண்டு போட்டேன்னா, பல்லு கில்லெல்லாம் எகிறிடும்!’
‘நீ முதக்கா உக்காரு, லோகு. கலியாணம் ஆயிடிச்சுன்னா, எல்லாமே சரியாயிறும். இத பாருடி, சகுந்தலா! எம் மவனைப் பத்தி நானே பீத்திக்கப் படாது. ரொம்ப நல்லவன். உன்னய உள்ளங்கையில வெச்சுத் தாங்குவான். உன் பேர்ல எம்மாம் பிரியம் வச்சிருக்குறான், தெரியுமா? உனக்காக எதுவும் செய்வான்!’
‘அப்ப, பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுதிப் பாஸ் பண்ணச் சொல்லுங்க. அப்புறம், என்னய விட்றச் சொல்லுங்க. அதுதான் பிரியத்துக்கு அடையாளம்.’
‘லோகு! பேசுறதக் கேட்டியா? இதுக்குத்தான் பொட்டப் பிள்ளங்களப் படிக்க வெக்கக்கூடாதுங்கிறது! . . . ஒருக்கா, வேற எவனையாச்சும் கட்ட ஆசைப் படுறாளோ என்னமோ!’ என்று பாக்கியம் முனகியதும், லோகேசன் எழுந்து வந்து அவளை நெருங்கினார்.
‘இத பாரு, களுத! உங்க அத்தை நினைக்கிறது சரிதானா? உண்மையைச் சொல்லிறு. யாரு அவன்? சொல்லு. அவன் கையைக் காலை முறிச்சிட்றேன்!’
சகுந்தலா ஜாக்கிரதை யானாள். லோகேசன் அடியாள் வைத்து அப்படி யெல்லாம் செய்யக் கூடியவர்தான் என்பதால் தனக்கு ஒரு காதலன் இருக்கும் உண்மையை மறுக்கத் தீர்மானித்தாள்.
‘அப்படி யெல்லாம் எதுவும் கிடையாது. எனக்கு அத்தானைப் பிடிக்கலை. அத்தானைத் தவிர நீங்க பாத்து ஏற்பாடு செய்யிற வேற எந்தாளையும் நான் கட்டத் தயார்! ஆனா, பார்க்க சுமாராவாச்சும் இருக்க்ணும்!’ என்று ஒரு போடு போட்டாள்..
லோகேசன் திகைத்து நின்றார். மகளின் நியாயம் புரிந்தாலும், திருச்சியின் அருகே ஒரு கிராமத்தில் இரண்டு பெரிய வீடுகள், ஒரு பலசரக்குக் கடை, நாலு ஏகரா நஞ்செய் நிலம் என்று சொத்துகள் உள்ள அவர்களின் சம்பந்தத்தை இழக்க அவர் தயாராக இல்லை.
‘இத பாரு, களுத! நீ உன் அத்தானைத்தான் கட்றே. மேல ஏதாச்சும் பேசினே, மூக்கு மொகரையெல்லாம் பேத்துறுவேன், பேத்து! . . . அக்கா! நீ எதையும் மனசில வச்சுக்காதே. நாலு எளுத்துப் படிச்சுட்டு எகிறுது. இவதான் உன் மருமக. அதுக்கு நான் உத்தரவாதம். அடுத்த முகூர்த்தத்துலயே நிச்சயதார்த்தம், கலியாணம் ரெண்டையுமே அடுத்தடுத்து நடத்திறலாம். நீ நிம்மதியா ஊருக்குப் போ. நான் கடுதாசு போடுறேன்.’
பாக்கியம் அத்தை அதன் பிறகு அவளுடன் எந்தப் பேச்சும் வைத்துக்கொள்ளவில்லை. மறு நாளே கிளம்பிவிட்டாள். பாக்கியத்தை வண்டி யேற்றிவிட்டுவிட்டு வந்ததும் லோகேசன் அவளைப் பிடிபிடியென்று பிடித்துக்கொண்டார்.
‘ஏ, களுத. இங்கிட்டு வா. நீ என்ன நெனைச்சுக்கிட்டு இருக்குறே உம் மனசில? சோடிப் பொருத்தம் மட்டும் இருந்துட்டாப்ல ஆச்சுதா? தெரிஞ்ச இடம்.. சொந்த அத்தை. மாமியார் கொடுமை யெல்லாம் இருக்காது. காசு பணம் பிடுங்கிட்டு வான்னு உன்னய அடிக்கடி இங்கிட்டு அனுப்ப மாட்டா. அல்லு அசல்ல மாப்பிள்ளை தேடினா இந்த லாபமெல்லாம் உண்டா?’ என்று லோகேசன் அவளுக்கு முன்னால் வந்து நின்று இரைந்தார்.
சகுந்தலா அப்போதைக்கு வாயை மூடிக்கொண்டாள். எனினும் தன் அப்பாவின் உள்ளுணர்வின் மீது அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. வேறு எவனோ இருப்பதாக அத்தையால் தூண்டப்பட்டு அப்பா எழுப்பிய கேள்விக்கு அப்படி எல்லாம் ஏதுமில்லை என்று அவள் பதில் சொல்லிவிட்டலும், அவரது சந்தேகம் அறவே நீங்கி இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை. அதற்கான ஆதாரங்களைத் தேடும் முயற்சியில் அவர் இறங்கினால் அவள் அம்பேல்தான். அது மட்டுமன்று. கண்டுபிடித்து விட்டாரானால், கருணகரனுக்கு ஆபத்து ஏற்படும். எனவே, அவள் தன் பெட்டியின் அடியில் மறைத்து வைத்திருந்த கருணாகரனின் கடிதங்களை யெல்லாம் ஒரு வாய்ப்பான நேரத்தில் எரித்துவிட்டாள். அவற்றை எரிப்பது அவளுக்குச் சங்கடமான காரியமாக இருந்தாலும், அவள் அப்படிச் செய்ததே சரி என்பதை உணர்த்தும் வண்ணம் லோகேசன் மறு நாளே நடந்து கொண்டார்.
அவளது பெட்டியை அவர் குடைந்தார். புத்தகங்களை யெல்லாம் பிரித்து உதறினார். துணிமணிகளையும்தான். கடைசியில் தோற்றுப் போய் மவுனமானார்.
ஒரு வாரம் கழித்து லோகேசன் திருமண உறுதி விழாவுக்கும் திருமணத்துக்கும் நாள் குறிக்கச் சோதிடர் வீட்டுக்குப் புறப்பட்டுப் போனார்.
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சகுந்தலா கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்தாள். தினமும் செல்லும் வழக்கம் இல்லாததால், திடீரென்று அப்படி ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு அப்பாவின் புருவங்களை உயர்த்த அவள் விரும்பவில்லை. மேலும் அவள் சென்றால், கருணாகரனும் தினமும் வரத் தொடங்குவான் என்பதாலும், பேச வேண்டி வந்தால் வம்பும் வதந்தியும் பரவும் என்பதாலும் கூட அவள் பழைய வழக்கப்படியே வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே கோவிலுக்குப் போனாள்.
அந்த வெள்ளிக்கிழமையன்று அவனும் ஒரு புதிய செய்தியுடன் வந்திருந்தான். சென்னையில், அவன் முன்பு குறிப்பிட்ட நண்பனின் உதவியால், ஒரு கம்பெனியில் தனக்குப் பியூன் வேலை கிடைக்க இருந்த செய்தி! தன் வீட்டுச் சங்கதியைக் கருணாகரனுக்கு அவள் சொல்லுவதகு முன்னால், அவன் முந்திக்கொண்டான்: ‘சகுந்தலா! ரொம்ப சந்தோஷமான சேதியோட இன்னைக்கு வந்திருக்கேன். எனக்கு வேலை கிடைச்சிருச்சு. 2000 ரூவா சம்பளம். சமாளிக்கலாம்னு தோணுது. நீயும் மெட்ராஸ்ல ஒரு வேலை தேடிக்கிட்டா பிரச்சனையே இருக்காது,’ எனான் உற்சாகமாக.
‘குரலைத் தணிச்சு மெதுவாப் பேசுங்க,’ என்று அவனை எச்சரித்த அவள், தன் அப்பா சோதிடர் வீட்டுக்குப் போய் வந்த சேதியை அவனுக்குச் சொன்னாள்.
‘நம்ம திட்டம் கைகூடிவரப் போகுதுன்னு சொல்லு,’ என அவன் உற்சாகமாய்ச் சிரித்தான். பின்னர், ‘அப்ப, நாம நாளைக்கே கிளம்பிடணும். இல்லாட்டி ஆபத்து.’ என்று அவன் தொடர்ந்த போது அவளுகுத் திக்கெனது. ஏற்கெனவே திட்டமிட்டதுதான் என்றாலும், அது நிகழும் நேரம் நெருங்கிவிட்டது என்னும் நிதரிசனம் அவளது முதுகைச் சில்லிடச் செய்தது. நெஞ்சுக் கூட்டினுள் படபடவென்றது.
‘நாளைக்கேயா?’
‘ஆமா. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு நான் கிளம்புறதா யிருந்கேன். நான் போயிட்டா, அப்பால, நமக்குள்ள தொடர்பு வச்சுக்க முடியாதில்ல? மாட்டிக்காம எதையும் செய்ய முடியாது. தவிர நமக்கு வசதியா, இப்ப எங்கப்பாவும் அம்மாவும் ஊர்ல இல்லே. ஒரு கலியாணத்துக்காகப் பாகநேரிக்குப் போயிருக்காங்க. வர்றதுக்கு மூணு நாள் ஆகும். நம்ம காதலைக் கடவுளே அங்கீகரிச்சுட்டாருன்னு தோணுது. இல்லாட்டி, இப்படி ஒரு வசதி ஏபட்டிருக்காது. நாளைக்கே நாம கிளம்பினாத்தான், மெட்ராஸ்ல நாம தங்குறதுக்கான ஏற்பாட்டையெல்லாம் செய்ய வசதியா யிருக்கும். இல்லையா?’
‘ஆமா? உங்க ஒரிஜினல் ப்ளான்படி ரெண்டு நாள் கழிச்சுத்தானே கிளம்புறதா இருந்தீங்க? அப்ப எங்கே தங்குறதா யிருந்தீங்க?’
‘அந்த •ப்ரண்டோட ரூம்லதான். நான் உன்னோட அங்க எப்படித் தங்க முடியும்? அதனால ரெண்டு நாள் முன்னாடி புறப்பட்டுப் போனா அவன் மூலமா நாம தங்கிக்கிறதுக்கு ஒரு சின்ன இடமா ஏற்பாடு செஞ்சுக்க முடியுமில்ல?’
‘நீங்க சொல்றது சரிதான். அப்ப, நாம நாளைக்கே கிளம்புறோம்?’
‘ஆமா.’
‘ராத்திரிதான் சரியான நேரம். எங்கப்பா ஒம்பதரை மணிக்கெல்லாம் குறட்டை விடத் தொடங்கிடுவாரு. ஒரு பதினொரு மணிக்கா, நான் எங்க வீட்டுக் கொல்லைப் பக்கத்தால, வெளியே வர்றேன். நீங்க கொல்லைப் புறத் தெரு முக்குல நில்லுங்க.’
‘சரி. ஆனா, நீ எதுவும் பணம், நகை இது மாதிரி எடுத்துக்கிட்டு வராதே. மூணு நாலு செட்டு துணைமணி மட்டும் எடுத்துக்க,’ என்று கருணாகரன் தொடர்ந்த போது அவன் பால் அவளது மரியாதை அதிகரித்தது.
‘சகுந்தலா, உனக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆகல்லே. அதனால, எப்படியோ விஷயத்தை ஊகிச்சு நம்மைக் கண்டும் பிடிச்சுட்டாங்கன்னா, கடத்தல் கேஸ்னு என்னய புக் பண்ணிறுவாங்க. அதை எப்படிச் சமாளிக்கிறதுன்னு யோசிக்கவே இல்லியே நாம?’
‘ஆமா. அப்பப்ப நாம கோவில்ல பேசிக்கிறதை யாராச்சும் கண்டிப்பா கவனிச்சுத்தான் இருப்பாங்க. அதனால விஷயத்தை ஊகிச்சுடுவாங்கதான்.. ஆனா அதுக்கும் ஒரு வழி இருக்கு, கருணா.’
‘என்ன வழி?’
‘மெட்ராஸ்ல நாம ரெண்டு பேரும் கொஞ்ச நாள் ஒரே ரூம்லயோ போர்ஷன்லயோ சேர்ந்து வாழக்கூடாது.’
‘அதெப்படி முடியும்?’
‘முடிஞ்சுதான் ஆகணும். நாம தனித் தனியாத்தான் இருந்தாகணும். போலீசுக்கு உங்க வீட்டிலேருந்து உங்க கம்பெனி விலாசத்தை வாங்குறது ஒண்ணும் பெரிய விஷயமில்லே. அப்ப என்னவாகும்? சொல்லுங்க.’
‘நீ சொல்றது சரிதான். நிறையவே சிக்கல் வரும்னு தோணுது.’
‘ஆனா, அதுக்கும் ஒரு வழி இருக்கு, கருணா.’
‘சொல்லு.’
‘நீங்க சொன்னீங்களே, நான் நகை, பணமெல்லாம் எடுத்துக்கிட்டு வரக்கூடாதுன்னு. அதெல்லாம் நடக்காது. நான் எடுத்துக்கிட்டுத்தான் வந்தாகணும். கையில பணம் இருந்தாத்தான் நான் ஒரு பெண்கள் விடுதியில தங்க முடியும்.’
‘நல்ல யோசனைதான். ஆனா, விடுதியில இல்லாத பொல்லாத கேள்வியெல்லாம் கேப்பாங்களே? கார்டியன் யாருன்னு கண்டிப்பாக் கேப்பாங்க.’
‘வேலை தேடி மெட்ராஸ்க்கு வந்ததாச் சொல்லணும். பொய்யான ஊர் விலாசம்தான் குடுக்கணும்.’
‘இல்லே, என் •ப்ரண்ட் மூலமா யாராச்சும் மெட்ராஸ்காரங்களையே கார்டியனாக் காட்டலாம்.’
‘ஆனா இதெல்லாம் சரியா வரணுமே?’ என்ற சகுந்தலா கீழுதட்டை மேற் பற்களால் கடித்தபடி யோசித்தாள். அவளது மூளை நரம்பொனு சட்டென அசைந்து கொடுக்க, அது ஒரு யோசனை கூறியது. அவளது முகம் உடனே ஒளிர்ந்தது.
.. .. .. நிர்மலா படுக்கையை விட்டு எழுந்த போது மணி மூன்று. சரியாக அந்த நேரத்தில் தொலைபேசி ஒலித்தது. ஓடிப்போய் எடுத்தாள்.
“யாரு? நிம்மியா?”
“ஆமாங்க. சவுக்கியமாப் போய்ச் சேந்துட்டீங்களா?”
“ஓ! கம்பெனிக்காரங்களே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டதால எந்தப் பிரச்சனையும் இல்லே. எல்லா வசதியும் இருக்கு. நீ பக்கத்துல இல்லைன்ற ஒண்ணைத் தவிர!”
“ஆறு மாசத்துல வந்திடுவீங்கதானே? நீட்டிக்க மட்டாங்களே?”
“மாட்டாங்க. எப்பவும் உன்னோட நெனப்பாவே இருக்கு, நிம்மி. இந்த ஆறு மாசத்தையும் எப்படித்தான் தள்ளப் போறேனோ, தெரியல்லே.”
“அது உங்களுக்கு மட்டுந்தானா?”
இதற்குள் சோமசேகரனும் சாரதாவும் எழுந்து வந்தனர். முதலில் சாரதா பேசினாள்:. சம்பிரதாய விசாரித்தலுக்குப் பின், “வாராவாரம் எண்ணெய் தேச்சுக் குளி!” என்று அவள் சொன்னதும், “அவன் போயிருக்கிறது அமெரிக்காவுக்கும்மா, அறந்தாங்கிக்கு இல்லே!” என்ற சோமசேகரன் ஒலிவாங்கியைப் பிடுங்கித் தாம் பேசலானார். வழக்காமான கேள்விகளுக்குப் பின்னர், “யாரோ நவனீதகிருஷ்ணன்னு சொல்லிக்கிட்டு ஒரு ஆளு •போன் பண்ணினான்ப்பா உனக்கு,” என்றார்.
“அப்படி யாரையும் எனக்குத் தெரியாதேப்பா?” என்று ரமேஷ் பதில் சொன்னான்.
“சரி. நீ நிர்மலாவோட பேசு,” என்றபின், அவரும் சாரதாவும் நகர்ந்தார்கள்.
நிர்மலா மறுபடியும் மந்தமாகிப் போனாள். ரமேஷ் உற்சாகமாகப் பேசியவற்றுக்கெல்லாம் ‘உம்’ கொட்டிக்கொண்டிருந்தாள். “என்ன, நிம்மி? ஒரு மாதிரி டல் ஆயிட்டே? மனசெல்லாம் வேற எங்கேயோ இருக்காப்ல தெரியுது?”
“இல்லீங்க. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்.”
“நீ பொய் சொல்றே. எங்க அம்மா அப்பாவால ஏதாச்சும் .. .. ..”
“சேச்சே! தங்கம்னா சொக்கத் தங்கம் ரெண்டு பேரும்.”
மறுமுனையில் ரமேஷ் நிம்மதியற்றுப் போனான். ‘இவ பொய்தான் சொல்றா. என்னோட கோத்ரெஜ் அலமாரியைத் திறந்து லாக்கரைக் குடைஞ்சிருக்கா. நான் ஒரு மடையன். “அதை” எடுத்தப் பாதுகாப்பா வேற எங்கேயாச்சும் வெச்சிருந்திருக்கணும்.’. என்று அவன் எண்ணம் ஓடியது.
(தொடரும்
- நெல்லுக்குப் பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்!
- தெற்காலை போற ஒழுங்கை
- In the mood for love (ஹாங்காங், இயக்குநர் – வொங் கர் வாய்)
- 2013 ஆண்டு முடிவுக்குள் பரிதியிலே துருவ மாற்றம் நிகழ்ந்து விடலாம் .. !
- ஒரு பேய் நிழல்.
- மெய்த்திரு, பொய்த்திரு
- அருளிச்செயல்களில்வாலியும்சுக்ரீவனும்
- திண்ணையின் இலக்கியத் தடம் -9
- புகழ் பெற்ற ஏழைகள் 33.உலகின் ஒப்பற்ற ஓவியக் கலைஞனாகத் திகழ்ந்த ஏழை…
- மொழி வெறி
- இலக்கியச்சோலை நிகழ்ச்சி எண்: 143 நாள் :24-11-2013 இடம்: ஆர்.கே.வி.தட்டச்சகம் கூத்தப்பாக்கம்,கடலூர்.
- தாகூரின் கீதப் பாமாலை – 89 கண்ணீர்ப் பூமாலை .. !
- ஓட்டை
- அடைக்கலம்
- துண்டுத்துணி
- NJTamilEvents – Kuchipudi Dance Drama
- கம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வரங்கம் – 15 & 16 மார்ச், 2014
- சீதாயணம் படக்கதை -7 சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் தொடர்ச்சி]
- இரு ஓவியர்களின் உரையாடல்கள்
- தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! -25
- அம்மா என்றொரு ஆயிரம் கவிதை
- மருமகளின் மர்மம் 3
- ஜாக்கி சான் 16. தத்துப் பிள்ளையாய்
- அத்தியாயம்-9 பகுதி-4 இந்திரபிரஸ்தம் திரௌபதியின் சுயம்வரம்
- நீங்காத நினைவுகள் -23
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 49 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) முழுமை பெற்ற மாதர் .. !
- வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 2