தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 செப்டம்பர் 2020

அம்மா என்றொரு ஆயிரம் கவிதை

ருத்ரா

Spread the love
==ருத்ரா
வாந்தியெடுக்கும் போதே
எனக்கு தூளி மாட்ட‌
உத்திரம் தேடுகிறாய்.
கற்பனை என்றாலும்
கருச்சிலை என்றாலும்
உன் உயிரே நான்.
தன் நிழல் வேண்டாம் என்று
கள்ளிப்பால்
ஏன் தேடினாய்?
நீ வேண்டாம்
உன் கருப்பை மட்டுமே போதும்
எனும் அரக்கர்கள் இவர்கள்.
பிறவிப்பெருங்கடல் நீந்தும்போது
அவன் எழுதினான் உன்னை.
சௌந்தர்ய லகரி.
“ஆதி” எனும் தாயே
அடையாளம் நீ கொடுத்தால் தானே
“பகவனும்” இங்கு புரியும்.
த்ரேதா யுகம் துவாபரா யுகம் கலியுகம்
எல்லாம் தோப்புக்கரணம் போட்டது
உன் பத்து மாதத்தின் முன்.
சிசுவுக்கு நல்லது.வைத்தியர் சொன்னார்.
உனக்கு கொஞ்சமும் பிடிக்காத‌
பாவைக்காயில் ஊறினேன் நான்.
உன்னைக் கண்ணாடியாய் மாட்டிக்கொண்டு
பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
இந்த அரக்கனா என் அப்பன் ?
அப்பன் வயிற்றில் உதைத்தான்.
உன் வலியால்
என் வலியைத் தாங்கினாய்.
கடை கடையாய் ஏறினாய் எனக்கு.
கஸ்தூரி மான்கள் வாங்குவதைப்போல்.
“டையாபர்” வாங்குவதற்கு!
குங்குமப்பூ உனக்கல்ல எனக்கென்றார்கள்.
என்னே அறியாமை? உன் குங்குமத்து
நிலவுப்பூ அல்லவா நான்.
மசக்கைக்காரி.என்ன பிடிக்குமென கேட்டார்கள்.
பேருக்கு “ஜாங்கிரி” என்றாய்.
நான் தானே உனக்கு பிடித்த ஜாங்கிரி.

 

Series Navigation

One Comment for “அம்மா என்றொரு ஆயிரம் கவிதை”

 • ஜெயஸ்ரீ ஷங்கர் says:

  மதிப்பிற்குரிய திரு. ருத்ரா அவர்களுக்கு,

  கவிதையின் ஒவ்வொரு வரியும்
  வலியையும் சேர்த்து வாசிக்க வைத்தது.

  கற்பூரத்தின் வேகம்..என் மனத்துள்
  தங்களின் கவிதை வரிகளைப் படித்ததும்..!

  கண்ணாடி போட்டுப் பார்க்கும் வளரும் சிசு..!
  இனி அங்கிருந்தே கத்தியையும் ஏந்துமோ…?

  இது கலியுகம்….தெரிகிறதா..?

  கருவாகி உருவாகி காக்கும் அருளாகி
  பொதுவாகி நலமாகி போற்றும் பொருளாகி

  மலைகண்ட இடமெல்லாம் குடிகொள்ளும்
  வேலவனின் தந்தை அருள் உங்களுக்குள்

  ஆன்மாவாக அமர்ந்த போது …!
  ஆயிரமாயிரம் கவிதையாய்
  அள்ளித் தரும் விந்தை அவன்…!

  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்


Leave a Comment

Archives