மருமகளின் மர்மம் – 4

This entry is part 2 of 24 in the series 24 நவம்பர் 2013

திடீரென்று தோன்றிய  அந்த யோசனையின் மலர்ச்சியுடன் சகுந்தலா கருணாகரனை ஏறிட்டாள்.
‘கருணா! நம்ம ஸ்டெல்லா டீச்சர்கிட்ட பேசினா என்ன? அவங்க கட்டாயம் நமக்கு உதவுவாங்க.  அவங்க அக்கா குடும்பம் மெட்ராஸ்லதான் இருக்கு.’ –  அப்போது கருணாகரனின் முகமும் மலர்ந்தது.

‘ரொம்ப நல்ல யோசனை, சகுந்தலா! மத வித்தியாசத்தால தாமோதரன் சாரைக் கட்ட முடியாம கன்னியாவே இருந்துட்டவங்க.  நம்ம விஷயத்தில அவங்க அனுதாபம் காட்டல்லேன்னா வேற யார் காட்டுவாங்க? வருஷா வருஷம் பெரிய லீவுக்கு மெட்ராஸ¤க்குப் போயிடுவாங்களே? இப்ப கூட  ஊர்ல இருக்காங்களோ, இல்லையோ? எதுக்கும் நாம இப்பவே போய்ப் பாக்கலாம். அப்ப, . நீ முதல்ல நட. நான் ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு அப்புறமாக் கிளம்பி வர்றேன்.’

“அப்பா பண்ணையார் வீட்டு விசேஷத்துக்குப் போயிருக்காரு.  திரும்ப லேட்டாகும்.. கடவுள் நம்ம பக்கம் இருக்காரு. அதான் எல்லாமே தோதா நடக்குது.’

தன்னைக் கண்டதும் வியப்பான மகிழ்ச்சியில் ஸ்டெல்லா டீச்சரின் முகத்தில் தோன்றிய மாற்றம் இப்போதும் சகுந்தலாவுக்கு நினைவில் இருந்தது. சகுந்தலா எல்லாவற்றையும் ஸ்டெல்லாவிடம் பளிச்சென்று சொல்லிவிட்டாள். அவள் சொல்லி முடித்ததும் ஸ்டெல்லா பாய்ந்து அவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள். அவள் ஓர் இந்துவைக் காதலித்துத் தோற்ற செய்தி ஊரறிந்த ஒன்று. எனவே, காதலில் தோற்றவர்களின் இதயங்களில்தான் பிற காதலர்கள் பால் இரக்கம் சுரக்கும் என்பதை நம்பித் தன் மாணவி தன்னிடம் வந்திருந்தது ஸ்டெல்லாவை மிகவும் நெகிழ்த்திவிட்டது.

‘சக்கு! உங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்க நானாச்சு.  கருணா ரொம்ப நல்ல பையன். வயசுக்கு மீறின பக்குவம் உள்ளவன். அவன் ஒரு நாளும் உன்னைக் கைவிட மாட்டான்.  கருணாவுக்கு இருக்கிற துணிச்சல் தாமோதரன் சாருக்கு இல்லே. அவங்க வீட்டுச் சம்மதமும் வேணும்னு காத்துக்கிட்டே இருந்தாரு. வருஷங்கள் ஓடிப் போனதுதான் மிச்சம்.  இதுக்கு இடையிலே ரோட்  ஆக்சிடெண்ட்ல   போயிட்டாரு.    உனக்குத்தான் தெரியுமே?’

‘அழாதீங்க, டீச்சர்!’ –   ஸ்டெல்லா கண்களைத் துடைத்துக் கொள்ளுவதற்காகத் தன் கையை விலக்கிக்கொண்ட கணத்தில் கருணாகரன் வந்தான்.

‘வாப்பா, கருணா! சகுந்தலா எல்லாம் சொல்லிச்சு. என்னை உதவி கேக்கணும்னு உங்களுக்குத் தோணிச்சே. அதிலேர்ந்தே கர்த்தர் உங்க பக்கம் இருக்காருன்னு தெரியுது. நானே இன்னும் ரெண்டு நாள்லே மெட்ராஸ் புறப்பட இருந்தேன். நல்ல வேளை.  இப்பவே வந்துட்டீங்க. அதுவும் கர்த்தரோட ஆசீர்வாதம்தான்.’’

‘உங்களைப் பாக்கணும்குற எண்ணம் சகுந்தலாவுக்குத்தான் தோணிச்சு, டீச்சர்.’

‘அப்ப, சக்கு உன்னை விட அதிக ஆர்வமா யிருக்கான்னு தெரியுது!. . .  மெட்ராஸ்ல எங்க அக்கா தேனாம்பேட்டைன்ற பகுதியில இருக்காங்க. செய்ண்ட் ஜோசப் ஹை ஸ்கூல்ல தலைமை ஆசிரியையா இருக்காங்க. அவங்க புருஷன் பாதிரியாரா யிருக்காரு. தங்கமானவரு. குழந்தைங்க இல்லே.  ரெண்டு பேருக்கும். என் மேல ரொம்பப் பிரியம். அதனால என் வேண்டுகோளை நிராகரிக்க மாட்டாங்க. நிறைய பணங்காசு உள்ளவங்க. நீங்க ரெண்டு பேரும் செட்டில் ஆகிற வரையில சாப்பாட்டைப் பத்திக் கூடக் கவலயே பட வேணாம்.. அவங்க செலவில இருக்கிறதுக்குக் கஷ்டமா யிருந்தா, அந்தச் செலவை நீங்க செட்டில் ஆகிற வரையில் நான் ஏத்துக்குறேன்..  ..  ’

‘டீச்சர்! நாங்க எப்படி இந்த நன்றிக் கடனைத் தீர்க்கப் போறோம்?’ என்ற கருணாகரன் கண் சிவந்து போனான். சகுந்தலாவோ அழுதே விட்டாள்.

‘நாங்க செட்டில் ஆனதும் சாப்பாட்டுக்கு ஆன செலவைத் திருப்பிடுவோம், டீச்சர்!’

‘அது உங்க இஷ்டம், கருணா! நீங்க கட்டாய படுத்தினா மட்டும் வாங்கிக்குவேன். மத்தப்படி, எனக்கும்தான் என்ன? குழந்தையா, குட்டியா? பணத்தை வெச்சுக்கிட்டு நானும்தான் என்ன பண்ணப் போறேனாம்?’

‘அப்ப உங்க அக்காவுக்கு லெட்டர் தருவீங்களா, டீச்சர்?’

‘இல்லே, சக்கு. நானே உங்களோட கிளம்பறேன். நேர்ல சந்திச்சுப் பேசுற மாதிரி ஆகாது..  .  .  ஏம்ப்பா, கருணா!  சக்குவுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பாடு பண்றதுக்காகத்தானே நீ ரெண்டு நாள் முன்னதா – அதாவது இன்னைக்கு ராத்திரியே – கிளம்பறதா இருக்கே? இப்பதான் அந்தப் பிரச்சனை இல்லியே? அதனால நாம மூணு பேருமா ரெண்டு நாள் கழிச்சே கிளம்பலாம்.’

‘அப்ப, ஞாயித்துக்கிழமை கிளம்பலாமா, டீச்சர்?’

‘சரி. ராத்திரி நேரம்தான் சரி..  யார் கண்ணுலேயும் படாம போக முடியும்.’

‘சரி, டீச்சர். ஞாயித்துக் கிழமை ராத்திரி பதினொரு மணிக்கு நான் சகுந்தலா வீட்டுக் கொல்லைப் புறத் தெரு முக்குல நிக்கிறேன். சகுந்தலா வந்ததும் ரெண்டு பேருமா உங்க வீட்டுக்கு வர்றோம். உடனே ஸ்டேஷனுக்குப் போயிடலாம். பக்கந்தானே?’

‘ஸ்டேஷனுக்குப் போய் வண்டி ஏறிப் புறப்படுற வரைக்கும் எந்தத் தடையும் வராம கர்த்தர்தான் காப்பாத்தணும். ஏதாவது பாஸஞ்சர் வண்டியிலதான் போகணும். எது முதல்ல வருதோ அதுல போய் வழியில் இறங்கி வேற வண்டி பிடிச்சு மெட்ராஸ் போகணும்.’

திட்டம் பற்றி விரிவாகப் பேசியபின் இருவரும் கிளம்ப எழுந்தார்கள்.

‘கருணா! நீ நல்ல பையந்தான். இல்லாட்டி நான் இதிலே ஒத்துழைக்க மாட்டேன். ஆனா, உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.’

‘சொல்லுங்க, டீச்சர்!’

‘மெட்ராஸ்லே நீங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியா ஊரறிய வாழத் தொடங்குற வரையிலே நீ சகுந்தலா கிட்ட கட்டுப்பாட்டோட நடந்துக்கணும்.’

கருணாகரன் தலையைத் தாழ்த்திக்கொண்டுவிட்டான். முகம் சிவந்துவிட்டது. ‘என்னோட விரல் கூட அவ மேல படாது, டீச்சர்! ப்ராமிஸ்! சத்தியமா, டீச்சர்.’

‘ரைட், கருணா. உன்னை நம்பறேன். என்னோட கடமை. அதான் சொன்னேன். தப்பா எடுத்துக்காதேப்பா. . . சக்கு! உனக்கும்தான். . . ஆம்பளைங்க கெட்டுப் போகாம இருக்கிறது நம்ம கையிலதான் இருக்கு.’

‘சரி, டீச்சர்.’

சகுந்தலா தன் வீட்டை யடைந்த போது லோகேசன் வந்திருக்கவில்லை. வீடு பூட்டித்தான் இருந்தது. அவள் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனாள்.

ஞாயிறன்று தலை கொள்ளாத பரபரப்புடன் சகுந்தலா அதிகாலையில் கண் விழித்தாள். அப்பாவுக்கு எந்த ஐயமும் ஏற்படாதபடி இயல்பாக இருந்தாள். லோகேசன் ஆழ்ந்து உறங்குபவர் தானெனும், இன்று பார்த்து உறங்காவிட்டால் என்ன செய்வது எனும் திடீர்க் கவலையால் அவள் மனம் அலை பாய்ந்தது. லோகேசன் வழக்கம் போல் ஒன்பதரைக் கெல்லாம் படுத்துவிட்டார். பத்துமணி யளவில் அவரது இரைச்சலான குறட்டை யொலி கேட்கத் தொடங்கியது. இரண்டு நிமிடங்களுக்கு ஒரு தடவை கெடியாரத்தைப் பார்த்தபடி இருந்தாள். ஒரு துணிப்பையில்  மூன்று புடைவை, துணிமணிகளை அடைத்துக் கட்டிலுக்கு அடியில் தயாராக வைத்திருந்தாள். அவள் கலியாணத்துக்கென்று செய்திருந்த நகைகள் யாவும் அவள் வசந்தான் இருந்தன.    அவற்றையும், வீட்டு நிர்வாகம் அவள் வசம் இருந்ததால்,  சேமித்து வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாய்ப் பணத்தையும் பையின் அடியில் வைத்துக்கொண்டாள்.

சரியாகப் பத்து ஐம்பத்தைந்துக்குக் கொல்லைக் கதவைத் திறந்து, சுற்றுமுற்றும் பார்தத பிறகு, சகுந்தலா தெருவுக்கு வந்தாள். தெருக்கோடியில் கருணாகரன் தன் பெட்டி, பையுடன் நின்றிருந்தது தெரிந்தது. அவள் பரபரப்புடனும், படபடப்புடனும் கால்களை எட்டிப் போட்டாள். அவன் அங்கிருந்தபடியே கையசைத்தான். மூன்றே நிமிடங்களில் அவள் அவனைச் சென்றடைந்தாள். இரவின் அந்தக் குளிரிலும் அவளுக்கு வேர்த்துக் கொட்டியது.

‘வா, சகுந்தலா!’  – அடுத்த விநாடி இருவரும் ஸ்டெல்லா டீச்சரின் வீடு நோக்கி மூச்சிரைக்க விரைந்தார்கள்.

..  ..  .. ஸ்டெல்லாவின் வீடு இருளில் மூழ்கி இருந்தது.  வீட்டினுள்ளும் முணுக்கென்று சின்ன வெளிச்சம் கூட இல்லை. தங்களை எதிர்நோக்கி அவர் காத்துக் கொண்டிருந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியாததால், இருவரும் சற்றே திகிலுடன் பார்த்துக்கொண்டார்கள்.

‘மெதுவாக் கூப்பிட்டுப் பாக்கலாமா? முதல்ல ஜன்னல் ஏதாச்சும் திறந்திருக்குதான்னு பாக்கலாம், வா.’ – எல்லாமே உட்புறம் கொக்கி போடப்பட்டு மூடிக்கிடந்தன. வீட்டைச் சுற்றிகொண்டு பின் புறம் போனார்கள். பின் கதவு திறந்திருந்தது. ஆனால் வீடே இருளில் அமிழ்ந்திருந்தது. திக் திக்கென்று இதயங்கள் துடிக்க, இருவரும் உள்ளே மெதுவாகப் போனார்கள். கருணாகரன் டார்ச் விளக்கைப் பொருத்தினான். வீட்டுக்குள் இருவரும் புகுந்தார்கள்.

‘டீச்சர்!’

‘ஸ்டெல்லா டீச்சர்!’  –  பதிலே இல்லை. குட்டை மேசை மீது அரிக்கேன் விளக்குக் கவிழ்ந்து கிடந்தது. பதைபதைப்புடன் இருவரும் கூடத்து அறைக்கு விரைந்தார்கள். அங்கே ஸ்டெல்லா வயிற்றில் நீண்ட கத்தி செருகப்பட்ட நிலையில் மல்லாந்து கிடந்தார். பக்கத்தில் இரத்தம் நிறம் மாறி உறைந்திருந்தது. சகுந்தலாவுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது. குரல் கூட எழும்பவில்லை.
கருணாகரனுக்கும்  முகம் பேயடித்தது போலாயிற்று. ‘சகுந்தலா! அப்படி உக்காரு. எதையும் தொடாதே. முதல்ல உசிரு இருக்கான்னு பாக்கலாம்,’ என்று கூறிப் பெட்டியையும்  பையையும் தரையில் வைத்துவிட்டு, குனிந்து மூக்கின் அருகே விரல் வைத்துப் பார்த்தான். மூச்சு நின்றிருந்தது. நெஞ்சின் இடப் புறத்திலும் ஸ்டெல்லா குத்தப்பட்டிருந்தாள்  ..  ..

சகுந்தலாவின் சிந்தனை, “அம்மா! அம்மா! கதவைத் திறங்கம்மா!” என்ற பலத்த குரலால் கலைய, அவள் எழுந்து போய்க் கதவைத் திறந்தாள். வேலைக்காரி நின்றிருந்தாள்.

“ஏம்மா, உங்க மொகமெல்லாம் பேயடிச்ச மாதிரி வெளுத்திருக்குது?.”

“பேயையும் அது அடிக்கிறதையும் நீ பாத்திருக்கியா, வள்ளி?”

“போங்கம்மா! வெளையாடாதீங்க. உங்க மொகமே சரியா இல்லே. உடம்பை கவனிங்கம்மா. உதவி பண்றதுக்கும் யாரும் உறவுக்காரங்க இல்லேன்றீங்க. இந்த எடத்துக்கும் நீங்க புதுசு வேற.”

சகுந்தலா பதில் சொல்லாது கதவைச் சாத்தித் தாழிட்டாள். பிறகு வள்ளி பின் தொடர உள்ளே போனாள்.

..  ..  .. கழிவறையிலிருந்து வெளிப்பட்ட சோமசேகரன், “என்னம்மா! பேசி முடிச்சாச்சா?” என்று சிரிக்க, நிர்மலா வெட்கத்துடன், சமையல்கட்டுக்குப் போனாள்.

“என்ன அத்தை பண்ணிட்டிருக்கீங்க?”

“இன்னும் ஒண்ணும் பண்ணலை. என்ன டி•பன் பண்ணலாம்னு யோசிச்சிட்டிருக்கேன்.”

அப்போது அங்கு வந்த சோமசேகரன், “பஜ்ஜி பண்ணேன், சாரதா. உருளைக்கிழங்கு, வெங்காயம், ஆப்பிள் எல்லாமே இருக்கு,” என்றார்.

“சரிங்க.”

நிர்மலா குடத்திலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்தாள்.

“இத பாரும்மா. நின்னுக் கிட்டே எதையும் குடிக்கக் கூடாது. குடல் இறங்கிடும்னு சொல்லுவாங்க. உக்காந்து குடி.”

“உங்க மாமாவுக்கு இதே வேலை. எதையாச்சும் படிக்க வேண்டியது. அப்படிப் பண்ணாதே, இப்படிப் பண்ணுன்னு உபதேசம் பண்ண வேண்டியது. முன்ன ஒருதரம் இப்படித்தான் திடீர்னு பச்சைக்காய்தான் சாப்பிடணும்னு கொஞ்ச நாள் கூத்தடிச்சாரு. அப்புறம் சரிப்படல்லே. விட்டுட்டாரு.”

“என்னமோ அரிசி, பருப்பு இதுகளையெல்லாம் கூடப் பச்சையாச் சாப்பிடணும்னு நான் சொன்ன மாதிரி நீயும் ரமேஷ¤ம்தான்  கூத்தடிச்சீங்க. நானா கூத்தடிச்சேன்?”

“ரமேஷ¤க்குச் சின்ன வயசு.  வயசான காலத்துலே ஜீரண சக்தி கெட்டுப் போய் எத்தைத் தின்னா பித்தம் தெளியும்னு நீங்களும் நானும் வேணுமின்னா அலையணும். அவன் என்னத்துக்கு அலையணும்? கொஞ்ச நாள் முந்தி இப்படித்தான். இனிமே சோயா பீன்ஸ் காப்பிதான்னு சொல்லிட்டாரு.. அப்புறம் அது பிடிக்காம, காப்பிக்கொட்டைக்கே திரும்பிட்டோம். செய்து பாக்கிறதுக்கு ஒரு கால் கிலோ வாங்கினாப் பத்தாதோ?  ரெண்டு கிலோ  வாங்கிட்டு வந்துட்டாரு. அப்புறம் என்ன பண்றது? எல்லாத்தையும் சுண்டல் பண்ணிச் சாப்பிட்டுத் தீர்த்தோம்!. சரி. நீங்க ரெண்டு பேரும் இடத்தைக் காலி பண்ணுங்க. நான் பஜ்ஜி ரெடி பண்ணிட்டு எடுத்துக்கிட்டு வர்றேன்.”
“நான் பண்றேன், அத்தை.”

“வேணாம். நீ காலையிலே சமையல் பண்ணியாச்சு. இப்ப நாந்தான் பண்ணுவேன்.”

“நான் காயாச்சும் வெட்றேன் அத்தை. நீங்க மாவு கரைங்க அதுக்குள்ள.”

“நான் வேணுமின்னா எண்ணெய்யில போட்டு எடுக்கறேன். உங்க ரெண்டு பேருக்கும் உதவியா,” என்று சோமசேகரன் சொல்ல, சாரதா, “நீங்க உங்க நாற்காலிக்குப் போங்க. நீங்க போட்டு எடுக்க வந்தா, அப்புறம் எங்களுக்கு எதுவும் மிஞ்சாது,” என்றாள்.

‘கடவுளே! எவ்வளவு நல்ல மனிதர்கள்! எவ்வளவு சகஜமாய்ப் பழகுகிறார்கள்! என்னைப் பற்றிய பின்னணி தெரிய வந்தால். . .’

“என்ன யோசிக்கிறே, நிர்மலா, திடீர்னு?”

“ஒண்ணுமில்லே, அத்தை!”

“ஏங்க! டாக்டரை வரச் சொல்றேன்னீங்களே?”

“அய்யோ! வேணாம், அத்தை! சொன்னா கேளுங்க. எனக்கு இப்ப ஒண்ணுமே இல்லே. அப்ப ஏதோ அலுப்பாயிருந்திச்சு.. சரி. நான் காய் மட்டுமாவது வெட்றேன்.”

“விட மாட்டியே?” –  மனைவியும் மருமகளும் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த சோமசேகரனுக்குப் பெருமை பிடிபடவில்லை. முகம் முழுவதும் சிரிப்பானார்.

சிற்றுண்டி-காப்பி முடிந்ததும், “இன்னைக்குக் கோவிலுக்குப் போலாம், நிர்மலா!” என்று சாரதா சொல்ல, நிர்மலா நவனீதகிருஷ்ணனின் ஞாபகத்தில் திடுக்கிட்டுப் போனாள். ‘வீட்டுக்கு வெளியே சுற்றிக்கொண்டிடிருக்கிறானோ என்னவோ? கடவுளே!” – அவளது இதயம் தாறுமாறாய்த் துடிக்கத் தொடங்கியது.

(தொடரும்)

Series Navigationபுதிய கோடாங்கிச் சிற்றிதழ்களில் சமூக மாற்றுச் சிந்தனைகள்வெள்ளையானை நாவல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *